Tuesday 22 July 2008

புத்தகங்களின் நூலக வழியை
அடைப்பது யார்?

நூலகம் செல்வது சாலவும் நன்று என்ற பண்பாடு நம் சமூக அமைப்பில் இன்னும் ஆழமாக வேருன்ற வேண்டியிருக்கிறது. மானுட வரலாற்றில் ஈடு இணையற்ற ஒரு கண்டுபிடிப்புச் சாதனை இருக்குமென்றால் அது நிலவில் கால் வைத்தது கூட அல்ல, முதல் புத்தகத்தை உருவாக்கியதுதான். புத்தகங்கள் மனிதர்களை வாசிக்க வைப்பது மட்டுமல்ல, நல்ல புரிதலோடு புவியில் வசிக்கவும் வைக்கின்றன. அந்தப் புத்தகங்கள் குடியிருக்கும் நூலகம் சிந்தனைகளின் பயிர்நிலம்.

இன்றைக்கும் புத்தகங்கள் வாங்க வசதியற்றவர்கள், வருகிற எல்லாப் புத்தகங்களையும் வாங்க இயலாதவர்கள் - இவர்களுக்கெல்லாம் அறிவுப் பசியாற்றும் நூலகங்கள்தான் அன்ன சத்திரங்களையும் ஆலயங்களையும் விட புண்ணியத் தலங்களாய்த் திகழ்ந்துகொண்டிருக்கின்றன நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில் முடக்கம் ஏற்படுகிறபோதெல்லாம், அது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகிறது. அறிவுத்துறையினர், இலக்கியவாதிகள், பதிப்பாளர்கள், ஜனநாயக இயக்கத்தினர் என்று எல்லோருமே அந்த முடக்கத்தை உடைப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்கள். ஏதேனும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறபோதெல்லாம் அதை மனப்பூர்வமாக வரவேற்கவும் செய்கிறார்கள்.

அவ்வகையில், தமிழகத்தில் மாநில அரசின் நூலக ஆணைக் குழு நிழலில் உள்ள நூலகங்களுக்காக வாங்கப்படும் புத்தகப் படிகளின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்பட்டபோது அனைத்துத் தரப்பினரும் மனமுவந்து பாராட்டினார்கள். புத்தக நீளத்துக்கு அறிக்கைகள் வெளியிடுவதில் வல்லவராக இருந்த முந்தைய ஆட்சியின் முதல்வர், நிறையப் பேர் புத்தகம் படிப்பது சமூக அமைதிக்குக் கேடு என்று எண்ணியோ என்னவோ, அது வரை 800 படிகள் என்றிருந்த நூலக புத்தகக் கொள்முதலை 600 எனக் குறைத்து புண்ணியம் தேடிக்கொண்டார்.

இன்றைய தமிழக முதல்வர், தாமே ஒரு நல்ல புத்தகக் காதலர் என்பதால், அவரிடம் மேற்படி குறைப்பு ஆணையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும், நூலகங்களுக்காக வாங்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தலாம் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டன. அந்தக் கோரிக்கை, ஆலோசனை இரண்டுமே இந்த அரசால் ஏற்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள புத்தக அன்பர்கள் மகிழ்ந்து பாராட்டினார்கள். விரிவான பகுதி மக்களைச் சென்றடைய இந்த எண்ணிக்கை போதாது என்றாலும் இது ஒரு ஆரோக்கியமான தொடக்கமாக அமையும் என்று எதிர்பார்த்தார்கள்.

அந்த மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் அந்தக் கட்டத்திலேயே நிற்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஆம், அறிவிப்பு அறிவிப்பாகவே இருக்கிறது, செயலுக்கு வரவில்லை என்கிறார்கள் புத்தகப் பதிப்பாளர்கள். “தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு புத்தகத்திலும் ஆயிரம் படிகள் வாங்கப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு ஒரே ஒரு தடவை மட்டுமே பதிப்பகங்களுக்கு பர்ச்சேஸ் ஆர்டர் வந்தது. ஆனால் அது 2005-ஆம் ஆண்டுக்கான ஆர்டர்தான். 2006-ஆம் ஆண்டுகளுக்கான ஆர்டர் இது வரை வரவில்லை,” என்கிறார் பல சிறந்த புத்தகங்களை வெளியிட்டுள்ள ஒரு முன்னணிப் பதிப்பாளர்.

“நடைமுறைப்படி 2006-ஆம் ஆண்டுக்கான ஆர்டர்கள் வந்து, புத்தகங்கள் நூலகங்களை அடைந்து, எங்களுக்கு இந்நேரம் பேமென்ட்டும் வந்திருக்க வேண்டும். ஆனால் என்ன காரணம் என்றே தெரியவில்லை, இது வரை நூலக ஆணைக் குழுவிடமிருந்து அதற்கான ஆணை வரவில்லை,” என்கிறார் அவர்.

புதிய புத்தகங்கள் தயாராவது - அதிலும் குறிப்பாக முற்போக்கான, சமூக சீர்திருத்த உள்ளடக்கங்கள் கொண்ட புத்தகங்கள் தயாராவது - ஆதார விற்பனையாக நூலகங்களுக்கு அனுப்பமுடியும் என்ற நம்பிக்கையில் தான். அதன் பிறகுதான் புத்தகக் கடைகள் மூலம் விற்பனையாவது. எனவே நல்ல புத்தகங்கள் தடையின்றி வந்து கொண்டிருக்க, நூலக ஆணைக் குழுவின் கொள்முதல் ஆணை தடையின்றி வந்துகொண்டிருக்க வேண்டும். இப்போது காரணமே இல்லாமல் கொள்முதல் ஆணை வராமலிருப்பதால், ஆயிரம் படிகளாக உயர்த்திக் கிடைத்த நற்பெயரை அரசு இழக்க நேரிடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. சில நிகழ்வுகள் இதில் சில சுயநல சக்திகளின் திருவிளையாடல் இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.

அண்மையில் முதலமைச்சர் கருணாநிதியின் 85வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி 85 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தமிழ்ப் பதிப்பாளர் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் முதல மைச்சரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, அந்த 85 புத்தகங்கள் வெளியிடப்படுவது பற்றியும் தெரி வித்துவிட்டு வந்தார்கள். பல்வேறு தலைப்புகளில் பல் வேறு பதிப்பகங்கள் வெளியிட்ட அந்த 85 “புதிய” புத்த கங்களுக்கு மட்டும் சிறப்பு ஆணை அனுப்பப்பட்டிருக் கிறது.

“2006ம் ஆண்டு வெளியான புத்தகங்களுக்கே இன் னும் கொள்முதல் ஆணை தரப்படவில்லை என்றாலும் கூட, ஒரு சிறப்பு நிகழ்ச்சியையொட்டி இப்படி சிறப்புக் கொள்முதல் செய்யப்படுவதில் எங்களுக்கு மாறுபாடு ஒன்றும் கிடையாது. ஆனால், அந்த ஆணைகளில் பெரும்பாலானவை அந்த ஒரு குறிப்பிட்ட குழுவோடு தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே போயிருக்கிறது,” என்கிறார் மற்றொரு பதிப்பாளர். புத்தகத் திருவிழா போன்ற முயற்சிகளை மேற்கொண்ட தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் கூட்டமைப்போடு எந்தத் தொடர்பும் இல்லாமல் இப்படி நடந்திருக்கிறது என்றும் பலர் வருத்தத்தோடு கூறினார்கள்.

“அது மட்டுமல்ல, அந்த 85 புத்தகங்களில் சில, முன்பே வெளியானவை. இந்த நிகழ்ச்சிக்காக மறு பதிப்புச் செய்து புதிய புத்தகம் போல் காட்டி விற்றிருக் கிறார்கள். நூலகக் குழுவை மட்டுமல்ல, முதலமைச்சரையே கூட ஏமாற்றியிருக்கிறார்கள். இதை எங்கே போய் சொல்வது,” என்று நம்மிடம் சொன்னார்கள்.

இப்படிப்பட்ட போக்குகளால் முதல் அடி விழுவது சமூக அக்கறை சார்ந்த, அரசியல் விழிப்புணர்வை ஏற் படுத்தக்கூடிய, சமுதாய அறிவியல் கண்ணோட்டம் கொண்ட புத்தகங்கள்தான். காகித விலை கற்பனைக் கெட்டாத உயரத்திற்குப் போய்க்கொண்டிருக்கிற நிலை யில், உத்தரவாதமான நூலக ஆணை வருமா வராதா என்ற ஐயப்பாட்டால், பல பதிப்பாளர்கள் இப்படிப்பட்ட புத்தகங்களைத் தயாரிப்பதை தள்ளிவைக்கிறார்கள். இது, முற்போக்கான படைப்பாளிகளின் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போடுவதாகிவிடுகிறது.

நூலக வளர்ச்சிக்கென்றே செஸ் வரி வசூலிக்கப் படுகிறது. ஆகவே, அரசின் நிதி ஒதுக்கீடாக மட்டுமல் லாமல், சமுதாயத்தின் நேரடி நிதியாகவே நூலக நிதி அமைந்திருக்கிறது. எனவே, ஆண்டுதோறும் வாங்கு கிற புத்தகங்கள் பற்றிய தகவலை அரசு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்கிற ஆலோசனை, எதிர்காலத்தில் புத்தகத் தேர்வுகள் இருட்டில் நடப்பதைத் தவிர்க்க உதவும்.

இதை அரசு ஆராய்வதும் ஆவன செய்வதும் முக்கியம். ஏனென்றால் இது ஏதோ புத்தகம் தயாரிக்கிறவர்களுக்கும் நூலகத் துறையினருக்கும் இடையிலான பிரச்சனை அல்ல. அடிப்படையில் இது நூலக வாசகர்களுக்கு அவர்கள் தேர்வு செய்து படிக்கக் கூடிய புத்தகங்களின் பரப்பையும், சமூக அக்கறையாளர்களுக்கு தங்களுடைய சிந்தனைகளை புத்தகமாக வெளிப்படுத்தி மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பையும் சுருக்குகிற பிரச்சனை.