Friday 15 February 2008

ஏ.கே.வீ.

ஏ.கே.வீ.

ஏ.கே. வீரராகவன் என்பதால் அல்ல

ஏறுநடைபோட்டு எவரையும்

கேள்வி கேட்கத் தயங்காத

வீரன் என்பதால் ஏ.கே.வீ.

எனப் பெயர் பெற்றவனே

இன்று உனக்கு

இரங்கல் கூட்டம் என்றார்கள்.
இரங்கல் கூட்டங்கள்

இறந்து போனவர்களுக்குத்தானே?

உனக்கெதற்கு இங்கே இரங்கல் கூட்டம்?

எப்போது நீ இறந்துபோனாய்?

மனிதர் மனங்களில் மட்டுமல்ல

பூமியிலேயே ஈரம் உள்ளமட்டும்

நீ வாழ்ந்துகொண்டிருக்கிறாய்

என்றுதானே அர்த்தம்?

சமூகத்தில் அநீதிகள் நடப்பதை

கண்டும் காணாமல் இருந்துவிடாமல்

தட்டிக் கேட்கிற புத்தி

ஒரே ஒருவருக்காவது இருக்கிற வரையில்

உயிரோடு நீ வாழ்ந்து எல்லாவற்றையும்

உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்

என்பதல்லவா உண்மை?

அதற்காகத்தானே உன் உடலை

எரியக் கொடுத்தாலும்

உன் விழிகளை மட்டும் யாருக்கோ கண்

தெரியக் கொடுத்துவிட்டுப் போனாய்?
பிறகெதற்கு இரங்கல் கூட்டம்?

இல்லை, இது உன் பெயரால் கூடுவதற்கு

நாங்கள் கொண்ட நாட்டம்.

ஏதாவதொரு சாக்குச் சொல்லி

எங்களையெல்லாம் ஒன்றாய்ச் சந்திக்க

நீ ஏற்பாடு செய்தாய்

சர்க்கரைப் பொங்கல் புளியோதரையோடு

எத்தனையோ கூட்டம்.

பொங்கலிலும் புளியோதரையிலும்

பொங்கி வழிந்தது நெய் அல்ல

அவ்வளவும் உன் பாசத்தின் ஊட்டம்.

உன் நினைவால் கூடுகிறபோது

கலைந்து கரைந்து போகும்

லட்சியப் பாதையில் கண்ணை மறைத்த

சுயநலப் பனி மூட்டம்.
உன் இளமைக் காலத்தில்

விரதங்களின் சடங்குகளால் அல்ல

வறுமையின் கொடுமைகளால்

பட்டினி கிடப்பது உனக்குப்

பழகிப் போன ஒன்றாமே...

அதனால்தான் சமுதாயத்திலேயே

வறுமையை ஒழிக்கப் புறப்பட்ட

இயக்கத்தின் தோழர்கள் எவரும்

பட்டினி கிடக்க நீஅனுமதித்ததில்லை...
பக்தியால் அன்னதானம் வழங்குவோருக்கும்

பரம்பொருளின் கடாட்சம் பெறும் நோக்கமிருக்கும்

தொண்டர்களுக்கு சோறு போடுவோருக்கும்

தொடர்ந்து பதவியின் மேல் ஒரு கண்ணிருக்கும்

பாசத்தோடு ஒட்டிக்கொண்டு

பரிவைப் பொழிந்த உனக்குள் துளி கூட

பதவி பிடிக்க ஆள் பிடிக்கும்

பாசாங்கு அரசியல் ஒட்டியதில்லை.

ஆனால் ஏ.கே.வீ.,

தோழர்களுக்கு உரிமையோடு

தோள் கொடுத்தாயே அதில்

ஒரு உள்நோக்கம் இருந்தது-

அதுபாவகரமான உள்நோக்கமல்ல-

ஒருபாவத்துக்குப் பரிகாரம் தேடுவது;

உன் மூத்தோருக்கும் முன்னோர்

இழைத்த பாவம் அது.
பிறப்பால் தாழ்ந்தவர்கள்- பிரம்மனின்

படைப்பால் உயர்ந்தவர்கள் என்றெல்லாம்

அக்கிரமக்கார விதிகளை- திணித்த

அக்கிரகார நீதிகளை

அடியோடு வெறுத்தது உன் சித்தம்

அதற்காக நீ செய்தாய் பிராயச்சித்தம்.

வர்க்கமாய் உழைக்கும் மனிதர்களைச் சேர்க்கும்

மார்க்சிய நூல் படித்தாய்

வர்ணமாய்ப் பிரித்து மானுடம் சிதைக்கும்

மார்பு நூல் அறுத்தாய்.

நீ பணியாற்றிய தொலைபேசித்துறை

தொலைந்து போகாமல் இன்னும்

மக்கள் சொத்தாகவே ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றால்

உன் போராட்ட வியர்வையும்பசையாய் இருப்பதால்தான்.
செல்போன் வாங்கிய பின் அதில்

மெஸேஜ் அனுப்புவது எப்படியென

உனக்குத் தெரிந்ததில்லை- ஆனால்

நீ வாழ்ந்த வாழ்க்கையில் எமக்கெல்லாம்

மெஸேஜ் இருக்கிறது-

சக மனிதர்களை நேசி.

எங்களையும் குடும்பமாக நினைத்தாய்

உன் குடும்பத்தை எங்களோடு இணைத்தாய்.

நீ அமைத்த அறக்கட்டளையால்

விதியின் கட்டளையை உடைத்து

கல்வி பெற்றவர்கள் இருக்கும்போது...

சிந்தனைகள் தொடரும்போது...

நீ நடந்த வழியின் வெளிச்சம் படரும்போது...

நீ இறந்துபோனதாய் எப்படிக் கொள்ளமுடியும்?

உனக்கு நான் செலுத்த மாட்டேன்

இறுதி அஞ்சலி.

இறுதியாய் அஞ்சலி செலுத்திவிட்டு

கணக்கு முடிக்க நீ ஒன்றும்

கடந்த காலமாகிவிடவில்லை...

நிகழ் காலமாய் நீயும் உன் நேர்மையும்

நீடித்திருக்கும்போது

தவறுசெய்யும் போதெல்லாம்

டேய் எனும் உன் குரல்

திருத்திடும்போது
இறுதி வணக்கம் அல்ல

இறுதிவரையில் உனக்கு என் வணக்கம்.

(எமக்கெல்லாம் ஒரு ஊக்கமருந்தாய் விளங்கிய அருமைத்தோழர் ஏ.கே.வீ. மறைவையொட்டி தீக்கதிர் அலுவலகத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் வாசித்தது)