Tuesday 6 August 2013

மணமக்கள் தேவை... சாதிச் சுவருக்குள்!

ணமக்கள் தேவை’ விளம்பரங் களில் படிப்பு, வேலை, ஊதியம் போன்ற எதிர்பார்ப்புகளைத் தெரிவித்துவிட்டு “சாதி தடையல்ல” என்றும் சில நேரங்களில் அறி விக்கப்படுவதைக் கண்டு மனம் துள்ளும். சாதி அடையாளத்தைத் துறக்கிற திருமண உறவுகள் இயல்பானதாக சமுதாயத்தில் வளர்வதற்கு இவர்கள் துணை செய்கிறார்கள் என்ற எண்ணம் மகிழ்ச்சியைக் கொண்டு வரும். சாதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, அந்தச் சாதிகளுக்குள்ளேயே பெண்ணோ பிள்ளையோ மு(பி)டித்துத்தரப்படுவார்கள் என்று விளம்பரம் செய்யும் சில பெரிய கல் யாணத்தரகு நிறுவனங்களும் சேர்ந்து வலுப்படுத்த முயலும் சாதியச் சுவரில் இவர்கள் விரிசல் ஏற்படுத்துகிறார்கள் என்ற நம்பிக்கை கூட ஏற்படும்.

ஆனால், இப்படி விளம்பரம் செய்கிற அளவுக்குத் துணிகிற குடும்பங்கள் இறுதியாக அப்படி சாதி கடந்துதான் தங்கள் பிள்ளைகளுக்கான துணைகளை முடிவு செய்கின்றனவா? அப்படி விளம்பரம் செய்கிற தனிமனிதர்கள் சாதி வேலிகளை உடைத்துக் கொண்டுதான் தங்கள் இணைகளைத் தேர்வு செய்கிறார்களா? "இல்லை இல்லை" என்ற உண்மையை உரக்கச் சொல்வதாக வந்திருக்கிறது ஒரு ஆய்வு முடிவு. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை ஆய்வாளர்கள் அமித் அஹூஜா, சான்டா பார்பரா, சூசன் ஓஸ்டர் மான் ஆகியோர் இந்தியாவில் இணையத் தளங்கள் மூலமாக ‘மணமக்கள் தேவை’ விளம்பரம் கொடுப்பவர்களிடையே அந்த ஆய்வை நடத்தியிருக்கிறார்கள்.

“சாதி தடையில்லை” என்று விளம்பரம் செய்கிறவர்கள், தங்களுக்கு வரக்கூடிய தகவல்களிலிருந்து தேர்ந்தெடுக்கிற இணை கள் ஆகப்பெரும்பாலும் தங்களது சாதி களைச் சேர்ந்தவர்களைத்தான். ஒரு சிலர் வேறு சாதிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தா லும், சமூகக் கட்டமைப்பில் சமமானவர் களாகவும் ஒரே மாதிரியான சடங்குகளைக் கடைப்பிடிக்கிறவர்களாகவும் இருக்கிற சாதிகளைச் சேர்ந்தவர்களையே முடிவு செய்கிறார்கள்.ஒரே வகையான தொழில், பொருளாதார நிலை, பதவி உள்ள ஒரு “மேல்” சாதி, ஒரு பிற்படுத்தப்பட்ட சாதி, ஒரு தாழ்த்தப்பட்ட சாதி என மூன்று பிரிவுகளைச் சேர்ந்த மூன்று ஆண்களின் சார்பில் கொடுக்கப் பட்ட மணமகள் தேவை விளம்பரங்கள் ஆய்வின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளப் பட்டன.
அந்த விளம்பரங்களுக்கு வந்த பதில்களில் “மேல்” சாதிகளைச் சேர்ந்த பெண்களில் 54 விழுக்காட்டினரும், தாழ்த் தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த 72 விழுக் காடு பெண்களும் சாதி வரப்பைத் தாண்டி மணமகன்களைத் தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார்கள். ஆனால், இறுதி முடிவு என்று வருகிறபோது அநேகமாக அவர்கள் எல்லோருமே தங்களது சாதிகளி லேயே தேர்வு செய்தார்கள்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங் களில் பலரும், தங்களது சமூக நிலையை யும் சமூகப் பொருளாதார மதிப்பையும் உயர்த்திக்கொள்ள உதவுமானால் சாதி விட்டு சாதி உறவு ஏற்படுத்திக்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்கள். குறிப்பாக “மேல்” சாதிகளைச் சேர்ந்த பெண்களிடையே பொருளாதாரத்தில் அடி நிலையில் இருப்பவர்களும், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களிடையே வசதியான நிலைக்கு வந்தவர்களும் இப்படி வேறு சாதி ஆண்களைத் தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவித்தார்கள்.ஒரு இணையவழி திருமண நிறுவனத் தின் “மணமக்கள் தேவை” விளம்பரப் படிவத்தில், தங்களது சொந்தச் சாதியைக் குறிப்பிட விரும்பாதவர்கள், அதைத் தெரிவிப்பதற்கென்றே, அதாவது சாதி குறிப்பிட விரும்பவில்லை என்று பதிவு செய்வதற்கென்றே ஒரு கட்டம் இருக்கிறது. ஆனால் அந்தக் கட்டத்தைப் பயன்படுத்துகிறவர்கள் சுமார் 10 விழுக்காட்டினர்தான்.

மற்றொரு ஆய்வு, பெண் எவ்வளவு படித் திருந்தாலும், அதே சாதியில் மணமகன் அமைவதற்காக, அவன் பட்டதாரியாக இருந்தாலும் சரி படிக்காதவனாகவே இருந்தாலும் சரி என்று பெண்ணின் குடும்பத்தார் விட்டுக்கொடுத்துவிடுகிறார்கள் என்று சுட்டிக் காட்டுகிறது.

வாழ்க்கையை இலகுவாக்குகிற நவீன மான கருவிகளில் நாட்டம் இருந்தாலும், சமுதாய உறவுகளை இலகுவாக்குகிற சிந் தனைகளில் நவீனம் எட்டிப்பார்க்கவிடா மல் தடுக்கப்படுகிறது. அதற்குச் சான்றாக இதோ இன்னொரு ஆய்வு: புதுதில்லியில் இயங்கும் சமூக மேம்பாட்டு ஆய்வு மையம் சுமார் 30,000 பேரைச் சந்தித்து சாதி மறுப்புத் திருமணம் பற்றிய அவர்களது கருத்தைக் கேட்டது. அதை ஆதரித்தவர்களின் எண் ணிக்கையை, அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியவர்களின் எண் ணிக்கை விஞ்சிவிட்டது!

இந்தியாவில் சாதிக் கலப்புத் திருமணங்கள்அதிகரிக்கவில்லை என்பதையே தங்களது ஆய்வு உறுதிப்படுத்துவதாகக் கூறுகிறார் பேராசிரியர் அஹூஜா. நாட்டில் தொடர்ந்து 10 விழுக்காடு அளவுக்கே சாதியக் கோடுகளை அழித்துக்கொண்டு திருமணங் கள் நடக்கின்றன என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையிலிருந்து தெரிய வருவதாக ‘தி ஹிண்டு’ நாளேட்டின் (ஆக.5) செய்தி கூறுகிறது.சாதிப் புனிதக் கோட்பாடு எந்த அளவுக்கு நம் மக்களின் மூளைகளில் அழுத்தமாகப் பதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான இந்த ஆய்வுப்பூர்வ சாட்சியம், “இப்போதெல்லாம் யாரும் சாதி பார்ப்பதில்லை, நிலைமை பெரிதும் மாறிவிட்டது,” என்று பேசுகிறவர்களுக்குத் திட்டவட்டமான பதிலாக வந்திருக்கிறது, வரப்புகளைத் தாண்ட விரும்பும் இளம் மனங்களை ஒடுக்கி, குறிப்பாகப் பெண்களின் சுயமான தேர்வு உரிமையைப் பொசுக்கித்தான் இந்தியத் தருமபுரிகளில் சாதிய யாகம் வளர்க்கப்படு கிறது.

சமத்துவத்துக்காக, ஜனநாயகத்திற்காக, உரிமைகளுக்காக, முற்போக்கான மாற்றங்
களுக்காக உறுதியெடுத்துப் போராடுகிற இயக்கங்களுக்கெல்லாம் இந்த சாதிய யாகம் ஒரு பெரும் தடை. காடுகளில் பெரும் நெருப்புப் பற்றுகிறபோது, அதை அணைப்பதற்கு எதிர் நெருப்புப் பற்றவைப்பது ஒரு நம்பகமான வழி. சாதிமறுப்புத் திருமணங்களை ஊக்குவித்து ஆதரிப்பது உள்ளிட்ட செயல்களின் மூலம் எதிர்நெருப்புப் பற்றவைத்து சாதிய நெருப்பை அணைக்கிற பொறுப்பும் அந்த இயக்கங்களின் தோள்களில்தான் விழுந்திருக்கிறது.

(‘தீக்கதிர்‘ 6-8-2013 இதழின் ‘தெருவிளக்கு’ பகுதியில் வந்துள்ள எனது கட்டுரை