Monday 3 July 2017

‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா?

னதில் ஒரு வடுவையே ஏற்படுத்தியிருக்கிறது ‘மஞ்சள்’ நாடகம். நீலம் புரொடக்ஷன்ஸ், ஜெய் பீம் மன்றம்  இணைந்து தயாரித்த, கட்டியக்காரி குழுவினர் வழங்கிய அந்த நாடகத்தின் கலைஞர்கள் அத்தனை பேரையும் ஒரே அணைப்பாக அணைத்துக்கொள்ள ஆசை. நாடகம் குறித்து எனக்கு சில விமர்சனங்களும் உண்டு. உடன்பட்டு மனம் உருகுகிற, மாறுபட்டு எதிர்க்கருத்து சொல்ல விரும்புகிற இடங்கள் நாடகத்தில் இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

இப்போது நாடகத்தில் இடம் பெற்ற ஒரு கருத்து பற்றி உடனடியாக உரையாட விரும்புகிறேன். அது, அநேகமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இலக்குவைத்து திட்டமிட்டே இடம்பெறச் செய்யப்பட்ட கருத்து என்றே நான் கருதுகிறேன். நாடகம் முடிந்த பிறகு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அக்கருத்தை வைத்து அழுத்தமாகப் பேசினார் (தன் நிலைபாட்டை வலியுறுத்தக் கிடைக்கிற மேடையைச் சரியாகப் பயன்படுத்துவது அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய கலை). அரங்கிற்கு வெளியே பலரும் என்னோடு அது பற்றிப் பேசினார்கள். ஆகவே அதையே இங்கு விவாதிக்க எடுத்துக்கொள்கிறேன். இதற்கு முன்பும் அடிக்கடி இந்த விமர்சனம் வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது என் மனதில் தோன்றிய சிந்தனையை வெளிப்படுத்த நினைத்தாலும், அதற்கான சூழல் அமையாமல் இருந்தது. தற்போது இந்த நாடகத்தாலும் அதைத் தொடர்ந்து நடக்கும் விவாதங்களாலும் அந்தச் சூழல் அமைகிறது.

தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்றால் சாதியை ஒழித்தால்தான் முடியும். சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கக் கிளம்புவது சாதியைக் காப்பாற்றுகிற வேலைதான், சாதி இருக்கிற வரையில் தீண்டாமை இருந்துகொண்டேதான் இருக்கும் என்ற ஒரு கருத்து நாடகத்தில் வருகிறது. பல்வேறு தளங்களில், நிகழ்வுகளில் நடக்கிற சாதியம் தொடர்பான விவாதங்களில் இக்கருத்து சொல்லப்படுகிறது. சில நேரங்களில், நேரடியாக ‘தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ அமைப்பைக் குறிவைத்தே விமர்சனங்களாகவும் தாக்குதலாகவும்  இக்கருத்து முன்வைக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த முன்னணி இதுவரை செய்துள்ளவற்றைப் புறக்கணித்துவிட்டு இப்படிச் சொல்லப்படுகிறது. அல்லது “நீங்கள் நேர்மையாகத்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறீர்கள், ஆனாலும்...” என்ற இழுவையோடும் பகுதி அங்கீகாரத்தோடும் சொல்லப்படுவதுண்டு. சிலர், சாதி ஒழிப்பு என்பதையே இயக்கம் முன்வைத்தால் சரியாக இருக்குமே என்ற அக்கறையோடும், சிலர் மார்க்சிஸ்ட்டுகள் மீது வலிந்து சாதிய அடையாளத்தைப் பூசுகிற வன்மத்தோடும் இக்கருத்தைக் கூறுகிறார்கள்.

தோழர் திவ்யா பாரதி தயாரித்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தில் கூட, சில அமைப்புகளின் தலைவர்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணி குறித்த இந்த விமர்சனக் கருத்தைக் கூறுகிறார்கள், அதற்கு முன்னணியின் பதில் கருத்து அல்லது  விளக்கம் என்ன என்று கேட்டுப்பெற்று சேர்க்கவில்லை. ஆயினும் மனித மலத்தை மனிதர்கள் கையால் அள்ளவைக்கும் மிகப்பெரும் சமூக அநீதிக்கு எதிரான போரில் ‘கக்கூஸ்’ ஒரு முக்கிய ஆயுதமாக உருவாகியிருக்கிறது. பல இடங்களில் சாதிய ஆதிக்கவாதிகளின் தலையீட்டால் காவல்துறையினர் அரங்கக் கூட்டங்களில் கூட அதைத் திரையிட விடாமல் தடுக்கிறார்கள் என்பதே அது எவ்வளவு கூர்மையான ஆக்கம் என்பதைக் காட்டுகிறது.

எனது வாதத்திற்கு ஆதாரமாகப் புத்தகங்கள் எதையும் மேற்கோள் காட்டப்போவதில்லை. கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரையோ, சாதியம் குறித்து ஆய்வு செய்துள்ள மற்றவர்களையோ எடுத்துக்கூறப்போவதில்லை. அந்தப் புத்தகப் பெருங்கடலில் நீந்தி வந்த நுண்மான் நுழைபுலம் எனக்கில்லை என்பது ஒரு காரணம். எனது சிந்தனையும் புரிதலும் ஈடுபாடுமே எனக்கு ஆதாரம் என்பது இன்னொரு காரணம். அடுத்து, தங்களோடு அறிவு முற்றுப்பெற்றுவிட்டதாக மார்க்ஸோ எங்கெல்ஸோ அம்பேத்கரோ பெரியாரோ சொன்னதில்லை என்பதால் ஏற்பட்ட துணிவு மற்றொரு முக்கியமான காரணம்.

இங்கு நான் முன்வைப்பது எனது கேள்விதான். இதுவே இறுதிக் கருத்தல்ல. இதை மாற்றிக்கொள்வதே சாதிய ஒழிப்பை நோக்கிச் செல்வதற்கு ஏற்றது என்ற புரிதலுக்கு வருவேனானால் தற்போதைய என் கருத்தை மாற்றிக்கொள்வதற்கு நான் கூச்சப்படப் போவதில்லை. அதே போன்ற மன நிலையோடு, இதைப் படிக்கிற தோழமைகள் எதிர்வாதத்தை முன்வைக்கக் கேட்டுக்கொள்கிறேன். கட்சியையோ கட்சித் தலைவர்களையோ தாக்குவதும் வலிந்து பூணூல் மாட்டிவிடுகிற கைங்கர்யமும் வேண்டாம்.

பொதுவெளியில் விவாதிக்கும் விருப்போடு இப்போது நான் பதிவிடுவது கலப்படமில்லாத சொந்தக் கருத்தே.

தீண்டாமை ஒழிப்பு சாதியத் தகர்ப்பே. இதில் காந்தியார் அன்று தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று சொன்ன தொணிக்கும், கம்யூனிஸ்ட்டுகள் இன்று இந்தியாவில் வர்க்கப் போராட்டத்தின் பிரிக்க முடியாத கூறு சாதிய ஒழிப்பு, அதற்காகவே தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்கிற தொணிக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. சாதியப் பிரிவினை ஒரு சமூக வேலைப் பிரிவினையே எனக்கூறி சாதிகளையும் சாதிப் பாகுபாடுகளையும் அப்படியே வைத்துக்கொள்வது காந்தியம். உழைப்புச் சுரண்டலுக்கும் வர்க்க ஒடுக்குமுறைக்கும் சமூகத் தளத்தை ஏற்படுத்திக்கொடுத்திருப்பது சாதிப் பிரிவினை, அதைத் தகர்க்கிற லட்சியம் சமத்துவ சமுதாயத்திற்கான நெடும் போராட்டத்துடன் இரண்டறக் கலந்திருக்கிறது எனக்கூறி களமிறங்கியிருப்பது இன்றைய கம்யூனிஸ்ட் இயக்கம்.

சரி, தீண்டாமை ஒழிப்பு சாதியத் தகர்ப்பே என்று ஏன் கூறுகிறேன்?

இந்தியச் சமுதாய அமைப்பின் தனித்துவமான ஏற்பாடாக இருக்கிற சாதி எப்படி உருவாகியிருந்தாலும் சரி - சமூகக் குழுக்களின் தொடர்ச்சியாக, அகமண முறையின் வளர்ச்சியாக, இயற்கை வளத்தை அல்லது சொத்தைக் கைப்பற்றித் தலைமுறை தலைமுறையாக வைத்துக்கொள்வதற்கான தொடர்ச்சியாக அல்லது ஆரிய வருகைக்குப் பின்னர் திணிக்கப்பட்ட வர்ணப் பிரிவினையாக, அல்லது எளிமையாகச் சொல்வதெனின் ஆட்சியதிகாரத் துணையுடன் சமூக விதியாக்கப்பட்ட பிராமணிய மேலாதிக்கத்தின் வகைமுறையாக - எப்படி உருவாகியிருந்தாலும் சாதியின் அடித்தளமே தீண்டாமைதான். ஆம் சாதியால் தீண்டாமை வரவில்லை,  தீண்டாமைக்காகவே சாதி வந்தது என்று நான் கருதுகிறேன்.

தலித் பிரிவுகள், தலித் அல்லாத இதர சாதிகள் என்று கூட நான் எடுத்துக்கொள்ளவில்லை. அதில் தெரிகிற பாகுபாடும் தீண்டாமையும் அப்பட்டமானவை, உலகின் படு மோசமான மனித உரிமை அவமதிப்புகளிலேயே மிக இழிவானவை. நான் எடுத்துக்கொள்வது தலித் அல்லாத இதர சாதிகளுக்கிடையேயான உயர்வு-தாழ்வு விவகாரம். சூத்திரர், வைஸ்யர், சத்திரியர், பிராமணர் என்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இடையே நிலவும் தீண்டாமை பற்றிக் குறிப்பிடுகிறேன் தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் மேம்பட்டவர்கள் என அவர்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிற மற்ற பிரிவுகளுக்கு இடையேயும் அந்தந்தப் பிரிவுகளுக்கு உள்ளேயும் அடிப்படையாக நிலவுகிற தீண்டாமை பற்றிக் குறிப்பிடுகிறேன்.

எங்கள் சாதி வேறு, உங்கள் சாதி வேறு என்று பிரிப்பதிலேயே, உங்களை விட நாங்கள் மேலானவர்கள் என்ற பெருமிதம் இருக்கிறது. அந்தப் பெருமிதத்தின் அடியிழையாக இருப்பது தீண்டாமைதான்.

சாதிக் கோபுர அமைப்பில் உச்சியில் உட்கார்ந்துகொண்டிருக்கிற பிராமணர் சமூகத்தில் எல்லோரும் சமமா? அதிலே உள்ள பிரிவுகளுக்கிடையே மண உறவுகள் எளிதாக சாத்தியமாகிறதா?

பிராமணர்களுக்கு நிகரானவர்கள் அல்லது பிராமணர்களை விடவும் உயர்ந்தவர்கள் தாங்கள் என்று சொல்லிக்கொள்கிற ஒரு சாதியைச் சேர்ந்த குடும்பம். அவர்களது மகன் ஒரு பெண்ணைக் காதலித்தான். அந்தப் பெண்ணின் குடும்பமும் இதே சாதிதான். பொருளாதார நிலையிலும் இரு குடும்பங்களும் சமமானவர்கள்தான். ஆனாலும் ஆண் குடும்பத்தார் மிகவும் தயங்கினார்கள். காரணம், ஒரே சாதிப்பெயர் என்றாலும், பெண் குடும்பத்தாரின் உட்பிரிவு இவர்களுடையதை விடவும் ஒரு படி கீழானதாம். பசங்கள் உறுதியாக இருந்ததாலும், மணவிழாச் சடங்குகளை அவனுடைய குடும்ப வழக்கப்படி (அதாவது அவர்களது உட்பிரிவின் மரபுப்படி), நடத்திக்கொள்வதற்கு அவளுடைய குடும்பத்தார் சம்மதித்தாலும் திருமணம் நடந்தது.

பிரம்மனின் தலைவழிப் பிறப்பெடுத்ததாகக் கூறிக்கொள்ளும் வர்ணத்திலேலேயே, பொதுவாக அய்யர் அல்லது அய்யங்கார் என்று மட்டுமே குறிப்பிடப்படுகிற பிராமணர்களிலேயே எத்தனை பிரிவுகள். அந்தப் பிரிவுகளுக்கிடையேயே நுட்பமான உயர்வு-தாழ்வு. தோள்வழிப் பிறப்பெடுத்த இடமளிக்கப்பட்டிருக்கும் சத்திரிய அடுக்கில் எத்தனை சாதிகள், அவற்றுள் எத்தனை உட்பிரிவுகள். தொடைவழிப் பிறப்பெடுத்தவர்கள் என்று வைக்கப்பட்டிருக்கும் வைஸ்யர் அடுக்கில் எத்தனை சாதிகள், எத்தனை உட்பிரிவுகள். கால்வழிப் பிறப்பெடுத்ததாகத் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் சூத்திர அடுக்கில் எத்தனை சாதிகள், எத்தனை உட்பிரிவுகள். இந்த அடுக்குகளோடு சேர்க்கப்படாத, மனிதப் பிறவிகளாகவே பார்க்கப்படாத, இடையறாப் போராட்டங்களாலும், அந்தப் போராட்டங்களின் பலனாகக் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசாங்க ஏற்பாடுகளாலும் தங்களைப் பார்க்க வைத்த பட்டியல் பிரிவுகளில் எத்தனை சாதிகள், எத்தனை உட்பிரிவுகள்.

ஒரே வர்ணத்தைச் சேர்ந்த ஒரு சாதி இன்னொரு சாதியை விடத் தன்னை உயர்வானதாகச் சொல்லி, என்னோடு நீ உறவுகொள்ள முடியாதெனத் தள்ளிவைக்கிறது என்றால் அது தீண்டாமை இல்லையா? அந்தச் சாதிக்குள்ளேயே ஒரு உட்பிரிவு இன்னொரு உட்பிரிவை விடத் தன்னை உயர்வானமாகச் சொல்லி, உன்னோடு நான் உறவுகொள்ள மாட்டேனெனத் தள்ளி நிற்கிறது என்றால் அது தீண்டாமை இல்லையா?

ஏதோவொரு வகையில் உன்னை விட நான் உயர்ந்த இடத்தில் இருக்கிறேன் என்பது தீண்டாமைதான். துப்புரவு வேலைகள், வயலில் இறங்கிச் செய்யும் வேலைகள், அலுவலகத்தில் மேசை மணியைத் தட்டியதும் ஓடிவந்து கைகட்டி நிற்கிற வேலைகள் என்ற தொழில்களில் தள்ளிவிடப்பட்ட மக்களை அருவருப்புக்குரியவர்களாக நடத்துவதும், பொது இடத்தில் ஒதுக்கிவைப்பதும், குறிப்பாக அந்தச் சமூகங்களின் ஆண்கள் பிற சமூகங்களின் பெண்களோடு கலந்துவிடக்கூடாதென அரிவாள் தூக்குவதும் தீண்டாமையின் மிகக் கோரமான, மிகக் கேவலமான வன்மங்கள். ஆனால்,  அவை மட்டுமே தீண்டாமை அல்ல. முதலிலேயே நான் குறிப்பிட்டது போல, ஒரு பிரிவு இன்னொரு பிரிவை விடத் தன்னை உயர்ந்த இடத்தில் வைத்துக்கொள்வதும், அந்த இடத்தில் நீ காலை வைக்காதே என்று நெருக்கித் தள்ளுவதும் கூட தீண்டாமைதான். இதை அப்படியே பராமரிப்பதற்காகத்தான் ஒவ்வொரு சமூகத்திற்கு உள்ளேயும் பரம்பரைப் பெருமை பேசும் கதைகள்.

ஆம், சாதியிலிருந்து தீண்டாமை வரவில்லை; தீண்டாமை அல்லது பாகுபாட்டிலிருந்துதான் சாதி வருகிறது.  இனி யாரையும் யாரும் இப்படியெல்லாம் தள்ளிவைக்க முடியாது, தன்னை உயர்வான இடத்தில் வைத்துக்கொள்ள முடியாது என்ற நிலை வருமானால், பிறகு அங்கே சாதிப் பெருமைக்கும் இடமில்லை, அதன் பிறகு அங்கே சாதியும் இல்லை. தீண்டாமை இல்லாத, அல்லது ஏற்றத்தாழ்வு இல்லாத சாதி அமைப்பு, செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டு போன்றதுதான்.

இதை முன்வைக்கிறபோது, சாதிய அடுக்கின் தட்டுகளைப் பிடித்துக்கொண்ட சாதிகள் எல்லாமாகச் சேர்ந்து அடித்தட்டுக்கும் கீழே தள்ளப்பட்ட தலித் மக்களை மிதித்துக்கொண்டிருப்பதை, அவர்களுக்குள் பல வேறுபாடுகள் இருப்பினும் தலித்துகளை அவமதிப்பதில் ஒற்றுமையாக இருப்பதை எள்முனையளவும் நான் மறுக்கவில்லை. தலித்துகளுக்கு எதிரான தீண்டாமையையும் மற்ற சாதிகளுக்கிடையேயான உயர்வு-தாழ்வு பாகுபாட்டையும் ஒருபோதும் சமமாகப் பார்க்கவே முடியாது.

சாதியை ஒழித்தால்தான் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்றால், சாதியை எப்படி ஒழிப்பது? சட்டம் போட்டா? அது வரையில் தீண்டாமை அவமதிப்புகள் தொடரலாமா? இந்த இந்த வேலைகளுக்கெனப் பிறப்பெடுத்தவர்கள் என்ற வக்கிரமான விதியைத் தகர்க்கும் சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு நியாயங்கள் தொடர்கிற வரையில், கல்வியிலும் வேலைகளிலும் இட ஒதுக்கீட்டிற்கான தேவைகள் நீடிக்கிற வரையில், அந்தச் சட்ட வாய்ப்புகள் உரியவர்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக சாதிப் பெயர்கள் கேட்கப்படுவதும் இருக்குமல்லவா?  பள்ளிகளிலேயே சாதிப்பெயர் கேட்கிறார்களே என்று வசனம் பேசுகிற பலரது உள்நோக்கம் இந்த இட ஒதுக்கீட்டுக் கதவை மூடுவதே அல்லவா?

இது பற்றிய ஒரு விவாதத்தின்போது ஒரு சிந்தனையாளர், “இட ஒதுக்கீடு தொடரத்தான் வேண்டும். ஆனால் அதைச் சாதியின் பெயரால் வழங்காமல், இட ஒதுக்கீட்டிற்கு உரிய அத்தனை சமூகங்களையும் ஒரே அடையாளத்திற்குள் கொண்டுவரலாம். உதாரணமாக, எஸ்சி என்ற ஒரு அடையாளம் மட்டும் போதும். அவர்களது சாதிப் பெயர் வேண்டாம். எஸ்டி என்ற அடையாளம் மட்டும் போதும். அதே போல் பீ.சி. என்ற அடையாளம் மட்டும் போதும்,” என்றார். அவருடைய நோக்கம் நல்லதுதான் என்று பாராட்டிவிட்டு, “ஆனால், குறிப்பிட்ட சாதியின் பெயரால் அல்லாமல் ஒட்டுமொத்தத்தில் எஸ்சி சமூகங்களை மற்றவர்கள் இழிவாக பார்ப்பது, எஸ்டி சமூகங்களை மற்றவர்கள் ஒதுக்கிவைப்பது, பீ.சி. மக்களைப் பின்னுக்குத் தள்ளுவது ஆகியவை தொடரத்தானே செய்யும்? இதுவே ஒரு சாதி அடையாளமாக மாறிவிடுமே,” என்று கேட்டேன். அவருடைய மௌனத்தில் தொடர்ந்து விவாதிக்க வேண்டியதன் தேவையை உணர்ந்துகொண்ட  புரிதல் வெளிப்பட்டது.

ஆகவே, தீண்டாமை ஒழிப்புக்காகக் களமிறங்கி, கழிவுக் குழியில் இனி கால்வைக்க மாட்டோம் என மறுக்க வைப்பதும், ஊருக்குள் பிரித்துக்காட்டும் சாதிச்சுவர்களை உடைக்க வைப்பதும், கோவில் கதவுகளைத் திறக்க வைப்பதும், தேர் வடங்களைப் பிடிக்க வைப்பதும், டீ கடைகளில் இரண்டாவது டம்ளர்களை வீசியெறிய வைப்பதும், வாடகை வீடுகள் கிடைக்க வைப்பதும், காதல் தடையைத் தகர்க்க வைப்பதும், கலப்புத் திருமணம் செய்ய வைப்பதும், ஆணவக் கொலைகளைத் தடுக்க வைப்பதும் சாதியை ஒழிக்க வைப்பதற்கான செயல்பாடுகளே.

சாதி ஒழிப்பு முன்னணி என்று பெயர் வைக்காததை ஏதோ சாதி ஆணவத்துடனான சமரசம் என்பது போல் சாடவும் வேண்டாம்; அப்படித்தானோ என்று தீண்டாமை ஒழிப்பு இயக்கத்துக்கென முன்னிறங்கியவர்கள் மனத்தடை கொள்ளவும் வேண்டாம். இது குறித்த விவாதங்களை நடத்திக்கொண்டே தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பயணத்தில் தோள் சேர்ந்து வருகிற விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இயக்கங்கள் நம்பிக்கை தருகின்றன. இன்னொரு பக்கம், சாதி ஒழிப்பு முன்னணி என்று பெயர் சூட்டாததால் இணைந்து வரமாட்டோம் என்று விலகி நிற்கிற அமைப்புகள், சாதிக் கட்டமைப்பைத் தக்கவைக்க (அப்படியொரு உள்நோக்கம் அவர்களுக்கு இல்லை என்ற போதிலும்) உதவுகின்றனவோ என்ற ஐயத்தைத் தருகின்றன.


மறுபடி சொல்கிறேன், இதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட மாட்டாது என்ற நம்பிக்கையோடு சொல்கிறேன், இது ஒரு உரத்த சிந்தனைதான். மாற்றுச் சிந்தனைகளை வரவேற்கிறேன். வசவுகளால் அல்ல, விவாதங்களால்தான் சமுதாய மாற்றங்களுக்கான போராட்டங்கள் உருப்பெற்று வெற்றிகளையும் ஈட்டியுள்ளன. விவாதிக்கலாம் வாருங்கள்.

Sunday 16 April 2017

காதலாகவும் கடமையாகவும் மொழி அக்கறை


(ஏப்ரல் 14 அன்று சென்னையில் நடைபெற்ற ‘தீக்கதிர்’ பதிப்புகளின் ஆசிரியர் குழு தோழர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் நான் அளித்த கட்டுரை)

ப்ரல் 13ம் தேதிய ‘தினத்தந்தி’ எண்மப் பதிப்பில் வந்துள்ள செய்தியில் இந்த வரிகள் உள்ளன: “...இந்தப் புத்தகத்தை ஒரு தனியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது....” “இந்தப் புத்தகத்தைப் பல பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது...”

“இந்தப் புத்தகத்தைத் தனியார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது,” என்றோ, “இந்தப் புத்தகம் தனியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது,” என்றோதான் இருக்க வேண்டும். அதே போல், “இந்தப் புத்தகம் பல பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது...” என்றோ, “இந்தப் புத்தகத்தைப் பல பள்ளிகள் பாடமாக வைத்துள்ளன...” என்றோதான் இருக்க வேண்டும். (‘தினத்தந்தி’ அச்சுப் பதிப்பில் இந்தப் பத்தியே இல்லை, ஆகவே பிழையும் இல்லை!)

பொதுவாகத் தமிழில் செயப்பாட்டுவினை பெரிய அளவுக்குப் புழக்கத்தில் இல்லை, செய்வினைதான் இருக்கிறது. ஆகவே, “அவரால் அந்த உரை நிகழ்த்தப்பட்டது,” என்பதற்கு மாறாக, “அவர் அந்த உரையை நிகழ்த்தினார்,” என்று எழுதுவது அழகு. “காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரால் ஈஸ்வரி கன்னத்தில் அறைந்து தாக்கப்பட்டார்,” என்று குறிப்பான சூழல்களில் செயற்பாட்டு வினையைப் பயன்படுத்துவது வாக்கியத்திற்குக் கனம் சேர்க்கும்.

ஒருமையில் தொடங்கி, பன்மையில் முடிப்பது பரவலாகச் செய்யப்படுகிற ஒரு பிழை.
“பல மருத்துவமனைகள் இந்தக் கருவியை வைத்துள்ளது,” என்று எழுதுகிறார்கள். நாமும் அதைத் திருத்தாமல் வெளியிடுகிறோம். “பல மருத்துவமனைகள் இந்தக் கருவியை வைத்துள்ளன,” என்று எழுத வேண்டும். கருவி    ஒருமை என்பதால் “வைத்துள்ளது” என்று எழுதுவதே சரி என்று நினைத்துக்கொள்கிறார்கள். இங்கே “மருத்துவமனைகள்” என்ற சொல்தான் எழுவாய். அந்த எழுவாய் பன்மையாக இருக்கிறபோது, வினைச்சொல்லும் பன்மையில்தான் இருக்க வேண்டும்.

“பல மருத்துவமனைகளில் இந்தக் கருவி இருக்கிறது,” என்று எழுதலாம். இங்கே “இந்தக் கருவி” என்பதே எழுவாய். ஒருவேளை “இந்தக் கருவிகள்” என்று இருக்குமானால், “பல மருத்துவமனைகளில் இந்தக் கருவிகள் இருக்கின்றன,” என்று எழுத வேண்டும். ஒரே ஒரு மருத்துவமனை குறித்துதான் எழுதுகிறோம் என்றால், “அந்த மருத்துவமனை இந்தக் கருவியை/கருவிகளை வைத்துள்ளது,” என்று எழுத வேண்டும்.

“மற்றும்” என்ற சொல்லைப் பயன்படுத்துவது மிக அதிகமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் யனே என்ற சொல் தாராளமாக வரும். தமிழ் நடையில் அவ்வாறு இல்லை. “வண்ணக்கதிரில் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் இடம்பெறுகின்றன,” என்று வராது. தமிழில் “உம்” என்ற இணைப்புச் சொல்லே வரும். “வண்ணக்கதிரில் கட்டுரைகளும் கவிதைகளும் இடம் பெறுகின்றன,” என்றே வர வேண்டும். “வண்ணக்கதிரில் கட்டுரைகள், கதைகள் இடம்பெறுகின்றன,” என்றும் நடுவில் காற்புள்ளியிட்டு எழுதலாம்.

புதிய பெயர்கள், வழக்கமாகக் கையாளப்படாத சொற்கள் வருகிறபோது “ஆகியோர்” அல்லது “ஆகிய” என்று சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, “செச்சன்யா அதிபர் ரம்ஜான் கெடிரோவும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டினும்” என்று வெளிநாட்டுப் பெயர்களை எழுதுகிறபோது “ரம்ஜான் கெடிரோவ், விளாதிமிர் புட்டின் ஆகியோர்...,” என்று எழுதுவது நல்லது. குறிப்பிட்ட செய்தி அல்லது கட்டுரையில் இப்பெயர்கள் ஒரு முறை குறிப்பிட்ட பிறகு மறுபடியும் வருமானால், “புட்டினும் கெடிரோவும்” என்று குறிப்பிடலாம்.

ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள பொருட்கள் அல்லது ஒருவரோடு ஒருவர் தொடர்புள்ள ஆட்கள் பற்றி எழுதிவிட்டு, முற்றிலும் புதிய ஒரு பொருள் அல்லது ஆளையும் சேர்த்துச் சொல்கிற இடத்தில் ‘மற்றும்’ பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக “அங்கே மருத்துவர்கள் முத்துக்குமரன், இளையபாரதி, பிரமிளா, மணியரசி, செவிலியர்கள் லட்சுமி, வினாயகம், பிலோமினா மற்றும் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஜேக்கப் லாரன்ஸ் ஆகியோர் வந்திருந்தனர்,” எனலாம். ஒரு நிறுவனத்தின் பெயரில் ‘அண்ட்’ என்ற ஆங்கிலச் சொல் வரக்கூடும். அப்போது அதை ‘மற்றும்’ என மொழியாக்கம் செய்வதில் தவறில்லை.

சில பேர் “உம்” என்றும் போட்டுவிட்டு, “மற்றும்” என்றும் சேர்த்து எழுதுகிறார்கள். “பிரதமர் மோடியும் மற்றும் முதலமைச்சர் பழனிசாமியும்” என்று எழுதுவது அபத்தம்.

இதே போல் ‘அல்லது’ என்ற சொற்பயன்பாடும், அதற்கு மாற்றாக ‘...ஓ’ என ஓகாரம் போட்டு முடிப்பதும் சரியாகப் கையாளப்படுவதில்லை. தமிழில் ‘அல்லது’ என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவதில்லை. “மாலதி அல்லது மேரி பங்கேற்கக்கூடும்” என்று எழுதுவதற்கு மாறாக, “மாலதியோ, மேரியோ பங்கேற்கக்கூடும்” என்று எழுதுவது நன்றாக இருக்கும்.
சிலர் “மாலதியோ அல்லது மேரியோ” என்று எழுதுவதும் தேவையற்றது.

இன்னமும் பலர் புரிந்துகொள்ளாமலிருப்பது மேற்கோள் குறிகளைக் கையாளுவது குறித்தானதாகும்.

சங்கத் தலைவர் இது பற்றிக் கூறுகையில், நாங்கள் இந்தப் பிரச்சனையில் தொடர்ந்து தலையிட்டு வருகிறோம். அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்திருக்கிறோம். ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார் -என்று செய்தியாளர்களிடமிருந்து வருகிறது என்றால், அதைத் திருத்தாமல் அப்படியே வெளியிடுகிறோம்.

சங்கத் தலைவர் இது பற்றிக் கூறுகையில், “நாங்கள் இந்தப் பிரச்சனையில் தொடர்ந்து தலையிட்டு வருகிறோம். அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்திருக்கிறோம். ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என்று தெரிவித்தார் என மேற்கோள் குறிகளிட்டுத் திருத்தியே வெளியிட வேண்டும்.

மேற்கோள் குறிகள் இடுகிறபோது கவனிக்க வேண்டியது: சங்கத் தலைவர் இது பற்றிக் கூறுகையில் என்று எழுதிய பிறகு காற்புள்ளி (கமா) இட வேண்டும். அதற்குப் பிறகுதான் தொடக்க மேற்கோள் குறி இட வேண்டும். அதே போல், ...இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று எழுதிய பின் காற்புள்ளி இட்டு, அதன் பிறகே முடிப்பு மேற்கோள் குறி இட வேண்டும்.
எடுத்துக்காட்டு: சங்கத் தலைவர் இது பற்றிக் கூறுகையில், “நாங்கள் இந்தப் பிரச்சனையில் தொடர்ந்து தலையிட்டு வருகிறோம். அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்திருக்கிறோம். ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என்று தெரிவித்தார்.

அடுத்து பெருமளவுக்கு நிகழ்கிற பிழை, கேள்விக்குறி அல்லது வியப்புக்குறியோடு வாக்கியம் முடிந்துவிடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல், அந்தக் குறிகளுக்குப் பிறகும் அதே வாக்கியத்தைத் தொடர்வதாகும்.
எடுத்துக்காட்டு:
அவர்கள் ஒப்புக்கொண்டுவிட்டார்களா? என்று கேட்ட தலைவர் அப்படி ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர்களை வழிக்குக் கொண்டுவாருங்கள்! என்று சொல்லிவிட்டுப் போனார்.

ஒரு கேள்விக்குறி அல்லது வியப்புக்குறி வருகிறது என்றால் அத்துடன் அந்த வாக்கியம் முடிந்துவிடுகிறது. அதன் பிறகு ‘என்று’ என வரக்கூடாது. அவர்கள் ஒப்புக்கொண்டுவிட்டார்களா என்று தலைவர் கேட்டார். அப்படி ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர்களை வழிக்குக் கொண்டுவாருங்கள் என்று சொல்லிவிட்டுப் போனார்.
-இப்படி எழுதுவதே சரி.

“அவர்கள் ஒப்புக்கொண்டுவிட்டார்களா,” என்று தலைவர் கேட்டார். “அப்படி ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர்களை வழிக்குக் கொண்டுவாருங்கள்,” என்று சொல்லிவிட்டுப் போனார்.
-இப்படி மேற்கோள் குறியிட்டு எழுதினால் இன்னும் சிறப்பு.

எங்கே ஒற்றை மேற்கோள் குறி, எங்கே இரட்டை மேற்கோள் குறி இட வேண்டும்? பத்திரிகைப் பெயர், புத்தகப் பெயர், நிறுவனப் பெயர், குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய பொருள் ஆகியவற்றுக்கு ஒற்றை மேற்கோள் குறி இட வேண்டும்.  எடுத்துக்காட்டு: ‘தீக்கதிர்’,  ‘தி இந்து’, ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, ‘இந்தியாவில் சாதிகள்’, ‘பெண் ஏன் அடிமையானாள்’, ‘காலந்தோறும் பிராமணியம்’.

ஒருவரது பேச்சைக் குறிப்பிடுகிறபோது இரட்டை மேற்கோள் குறி பயன்படுத்த வேண்டும். “எங்கள் மாநிலத்தில்  தொடக்கப்பள்ளி முதல்  இளநிலைப் பட்டப்படிப்பு வரையில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது,” என்று திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தெரிவித்தார்.

கட்டுரைக்குள் ஒருவரது மனதில் என்ன நினைத்தார் என்பதைக் குறிப்பிட வேண்டியிருக்கும். அப்போது அந்த நினைப்பை, ஒற்றை மேற்கோள் குறிகளுக்கிடையே எழுத வேண்டும்: மாணிக் சர்க்கார் இப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது, ‘நமது மாநிலத்தில் இந்த நிலைமை வராதா’ என்ற எண்ணம் அவையோருக்கு ஏற்பட்டது.

வாக்கியங்களில் அறிவித்தார், தெரிவித்தார், கூறினார், சொன்னார், பேசினார் என்ற சொற்களைப் பயன்படுத்துவதிலும் புரிதல் தேவை. ஒரு அறிவிப்பை அறிவிக்கலாம் (புதிய திட்டத்தை அறிவித்தார்), ஒரு தகவலைத் தெரிவிக்கலாம் (திட்டம் நாளை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்), ஒரு கருத்தைக் கூறலாம் (அரசின் பாராமுகத்தால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்), ஒன்றை உறுதிபடச் சொல்லலாம் (நான் வருவது நிச்சயம் என்று சொன்னார்), ஒரு உரையாகப் பேசலாம் (“...இல்லையேல் இது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று பேசினார்.)

கால நிலைக் குழப்பம் எழுத்தின் தரத்தைக் கீழிறக்கக்கூடியது. எடுத்துக்காட்டாக “பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 தொழிலாளிகள் இறந்துள்ளனர்...” என்று எழுதப்படுகிறது. “உள்ளனர்” என்றால் உயிரோடு இருக்கிறார்கள் என்றுதானே பொருள்? இறந்த பிறகு எப்படி “இருக்க” முடியும்? ஆகவே, “...விபத்தில் 6 தொழிலாளிகள் இறந்தனர்,” என்றே எழுத வேண்டும்.
அதே போல், இறந்துவிட்ட ஒருவரைப் பற்றிய செய்தியில் நிகழ்காலக் குறிப்பு வருவது தவறு. “மர்மமான முறையில் இறந்த பெண் கல்குவாரியில் வேலை செய்து வருகிறார்,” என்று எழுதுகிறார்கள். இறந்த பிறகு எப்படி ஏதோவொரு இடத்தில் வேலை செய்து வர முடியும் என்பது மர்மமாகிவிடும். ஆகவே, “மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் கல்குவாரியில் வேலை செய்து வந்தவர்,” என்றே எழுதுதல் வேண்டும்.

சந்திப் பிழைகள், ஒற்றுப் பிழைகள் அடிக்கடி நேர்பவை. “அவரை வர சொன்னார்கள்,” “வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டது,” “பட்ட படிப்பு” என்றெல்லாம் வருவதை, “அவரை வரச் சொன்னார்கள்,” “வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்பட்டது,” “பட்டப் படிப்பு” என்றெல்லாம் திருத்துவதற்கே மெய்ப்புத் திருத்துவதில் பாதி நேரம் போய்விடுகிது.

சிலர், வம்பே வேண்டாம் என்று அநியாயத்துக்கு, “...என்றுச் சொன்னார்கள்,” “நிலைமைச் சீர்குலைந்துவிடுமே என்றுப் பார்க்கிறேன்,” என்று எழுதுகிறார்கள். “...என்று சொன்னார்கள்,” “நிலைமை சீர்குலைந்துவிடுமே என்று பார்க்கிறேன்” என்றுதான் எழுத வேண்டும்.

பொருள் மயக்கம் தருகிற வாக்கியங்கள் இப்போதும் எழுதப்படுகின்றன. “வாலிபர் சங்கத்தின் தலைமையில் போராடிய மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி அருகில் திறக்கப்பட்ட மதுக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உறுதியளித்தார்,” என்பது அப்படியான ஒரு வாக்கியம்தான். போராடிய மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி அருகில் மதுக்கடை திறக்கப்பட்டதா அல்லது கடையை மூடுவது குறித்து உறுதியளிக்கப்பட்டதா? குழப்பத்திற்கிடமில்லாமல், “பள்ளி அருகில் திறக்கப்பட்ட மதுக்கடையை, வாலிபர் சங்கத்தின் தலைமையில் போராடிய மக்களின் கோரிக்கையை ஏற்று மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உறுதியளித்தார்,” என எழுதுகிறபோது, சொல்ல வருகிற செய்தி சரியாகப் போய்ச்சேரும்.

வினியோகம், நேரிடை என்றெல்லாம் எழுதப்படுவதை நிறுத்தி விநியோகம், நேரடி என்று எழுதுதல் எழுத்தை நேர்த்தியாக்கும்.

“கருணை கொலை” என்று எழுதுவதற்கும் “கருணைக் கொலை” என்று எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. கருணை கொலை என்றால் மனதில் இருந்த கருணையைக் கொன்றுவிட்டதாகப் பொருள். கருணைக் கொலை என்றால், ‘மெர்சி கில்லிங்’ என்று குறிப்பிடப்படுகிற, நோயாளி துடிப்பதை சகித்துக்கொள்ள முடியாததால் அவரைச் சாக விடுவது என்று பொருள்.

“அரசு கல்லூரி தொடங்க வேண்டும்,” என்றால், குறிப்பிட்ட பகுதியில் அரசாங்கம் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருவதாகும். அது தனியார் கல்லூரியாகவும் இருக்கலாம். ஆனால், “அரசுக் கல்லூரி” தொடங்க வேண்டும் என்றால், அது அரசாங்கம் நடத்துகிற கல்லூரியாகவே இருக்க வேண்டும் என்ற பொருள் தரும்.

ஒரு மாநாடு நடக்கிறது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிக் குறிப்பிடுகிறபோது ஒரு முக்கியமான பொருள் மயக்கம் ஏற்படுகிறது. “மாவட்டத்தில் அரசுக் கல்லூரி திறக்கப்பட வேண்டும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சித் திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும். விளையாட்டு மைதானங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன,” என்று எழுதப்படுகிறது. இதன் பொருள், அந்த மாநாடே இந்தக் கோரிக்கைகளைச் செயல்படுத்திவிட்டது என்பதாகிறதல்லவா?

மாவட்டத்தில் அரசுக் கல்லூரி திறக்கப்பட வேண்டும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சித் திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும், விளையாட்டு மைதானங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. -இவ்வாறு எழுதுவதே சரியான பொருள் தரும்.

இதிலேயும் சுட, அந்த “வேண்டும்” என்ற சொல் மீண்டும் மீண்டும் வருவதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? மாவட்டத்தில் அரசுக் கல்லூரி திறக்கப்படுதல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சித் திட்டங்கள் தொடங்கப்படுதல், விளையாட்டு மைதானங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தும் தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. -இப்படி எழுதினால் அது நேர்த்தியாகவும் இருக்கும். ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்களின்
கோரிக்கைகள் பற்றி எழுதும்போதும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஊடகத்துறையில் என்னென்ன வளர்ச்சிகள், மாற்றங்கள் ஏற்பட்டாலும், செய்தி வெளியீட்டிற்கும் கருத்து வெளிப்பாட்டிற்கும் மொழி இன்றியமையாதது, சொல்லாட்சி அடிப்படையானது. “உயிர் தமிழுக்கு,” என்பதான,  உணர்ச்சிப்பூர்வமான மொழிவெறியோ பக்தியோ தேவையில்லை. ஆனால் அறிவுப்பூர்வமான பற்றும் காதலும் தேவை. அன்றாடம் சொற்களோடும் வாக்கியங்களோடும்தான் நம் பயணம் என்பதால் அவற்றை நேசத்தோடு நாடுவோமானால், மொழி நம்மைப் பாசத்தோடு அணைத்துக்கொள்ளும். அந்த அரவணைப்பின் சுகமே தனி!

“வரப்புயர நீருயரும்” என்பது போல் வாசிப்பு உயர உயர சொற்களைக் கையாளுகிற திறன் உயரும். மக்களிடையே மாற்று அரசியல் சிந்தனைகளைக் கொண்டுசெல்வதில், பத்திரிகைக் களத்தில் செயல்படுவோராக நாம் அந்தத் திறனை, ஒரு இயக்கக் கடமையாகவும் வளர்த்துக்கொள்வோமாக.

Friday 27 January 2017

எங்கே அந்த அறச்சீற்றம்?


“நூறாண்டு காலம் வாழ்க” என்று நம் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்களின் பிறந்தநாளில் வாழ்த்துகிறோம். அதற்கு மேல் அவர்களும் நாமும் வாழ்ந்திருக்க விரும்புகிறோம் என்றாலும் “நூறாயுசு” என்பதே மிக மிக அரியதொரு வாய்ப்பாகவே அமைகிறது. அவ்வாறு நூறாண்டு தொடுகிறவர்களை அருஞ்சாதனை புரிந்தவர்களாகப் போற்றுகிறோம். நோய்நொடியின்றி  இருக்கிறார்கள், செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றால் வியப்பும் பெருமையுமாய்த் தகவலைப் பகிர்ந்துகொள்கிறோம். அவ்வாறு நூறைப் பிடித்தவர்கள் தலைமைத் தகுதிகளோடு இருப்பவர்களென்றால் அதை ஒரு விழாவாகவே கொண்டாடுகிறோம்.
பூமியின் வயதோடு, பேரண்டத்தின் ஆயுளோடு ஒப்பிட்டால் நூறாண்டு என்பதே, சன்னல் வழி பாயும் ஒளிக் கீற்றில் தென்படும் துகள் போன்றதுதான். அந்தத் துகளளவு வாழ்க்கையைக்கூட முழுமையாக வாழ முடியாமல் போகிறவர்களின் கதைகளே உலகில் நிரம்பியிருக்கின்றன. “ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்ற பழமொழி அந்தத் துகள் வாழ்வும் முழுதாய்க் கிடைத்துவிடுவதில்லை என்பதை ஏற்கும் மனத்துணிவை வளர்த்துக்கொள்வதற்காக மட்டும் சொல்லப்படுவதல்ல. கிடைத்த இந்த வாழ்க்கையைப் பொருளுள்ளதாக அமைத்துக்கொள்வதற்காகவும் சொல்லப்படுகிறது. வாழ்வின் பொருள் செல்வமாகிய பொருளைக் குவிப்பதில் இல்லை. பிறந்ததன் நோக்கம் வாழ்வது. வாழ்வதன் முழுமை பிறர்க்கென இயங்குவது. அப்படி “பிறர்க்கென” இயங்குவதைத் தன் வீட்டாரைத் தாண்டி, தன் குழுவினரைத் தாண்டி, ஊராருக்காக, நாட்டோருக்காக, உலக மாந்தருக்காக என்று விரித்துக்கொள்கிறவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். பின்பற்றப்பட வேண்டியவர்களாகிறார்கள்.

தன்னையும் தன் வட்டத்தையும் கடந்து பிறர்க்கென வாழ்ந்தவர்களில் மிகப் பலரும் நூறாயுசு காணாதவர்களே. அவர்கள் காலமான பின்பும், தொடரும் ஆண்டுகளில், அவர்களது பிறந்தநாளின் நூற்றாண்டு வருகிறபோது எழுச்சி உணர்வோடு கொண்டாடப்படுகிறது. ஒருவர் இறக்கிறபோது “காலமானார்” என்ற சொல்லால் பொதுவாகக் குறிப்பிடுகிறோம் என்றாலும், இந்தச் சொல் எல்லோருக்கும் பொருந்தாது. தான் வாழ்ந்த காலத்தை ஒரு அடையாளமாக்கி மறைகிறவர்களுக்குத்தான் இந்தச் சொல் பொருந்தும். கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டு, எதிர்கால மாற்றங்களுக்கான லட்சியத்தை மனதில் நிரப்பிக்கொண்டு நிகழ்காலத்தை அமைத்துக்கொண்டவர்கள்தான் தங்கள் காலத்தை அடையாளமாக்குகிறவர்கள். அப்படிப்பட்டவர்களின் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது ஒரு பெருமையாக இருக்கலாம். அதை விடவும் பெருமைக்குரியது, அவர்கள் எந்த லட்சியங்களுக்காகத் தங்களது காலத்தை அர்ப்பணித்துக்கொண்டார்களோ அந்த லட்சியங்கள் ஈடேற நம் காலத்தை ஒப்படைத்துக்கொள்வதே. அப்படி ஒப்படைத்துக்கொள்வதன் மூலம் நம் காலத்தையும் அடையாளமாக்குகிறோம். இது ஒரு தொடர் பயணம்.

மானுட வரலாற்றில் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை ஒரு கால அடையாளமாக்கியவர்களின் கதைகளைப் பார்த்தால் ஒரு ஒற்றுமை இருப்பதைக் காணலாம். தங்களுடைய காலத்தில் சமுதாயத்தின் நிலைமை எப்படி இருந்தது என்தைக் கண்டு அவர்களுக்கு ஏற்பட்ட வேதனை, அதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு ஏற்பட்ட அறச்சீற்றம், அதை மாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு ஏற்பட்ட போராட்ட முனைப்பு -இவற்றில்தான் அந்த ஒற்றுமை. ஒவ்வொருவரும் சிந்தித்த மாற்று வழி மாறுபட்டதாக இருக்கலாம். ஒவ்வொருவரும் நடத்திய போராட்ட வழி வேறுபட்டதாக இருக்கலாம். அம்பேத்கர் முன்வைத்த மாற்றும் பெரியார் முன்வைத்த மாற்றும் வேறு வேறு. காந்தியின் போராட்டமும் பகத்சிங்கின் போராட்டமும் வேறு வேறு. தங்களுடைய மதத்தின் பிற்போக்குப் போதனைகளில் சினம் கொண்டு, ஆனால்  மதத்தின் எல்லைகளுக்குள் நின்றுகொண்டே சீர்திருத்தங்களுக்காகப் போராடுகிறவர்கள் இருக்கிறார்கள். தங்களை மதத்தின் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு, மக்களை விடுவிக்கப் போராடுகிறவர்கள் இருக்கிறார்கள். பொதுவான மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் உடனடித் தீர்வுகளுக்காகப் போராடுகிறார்கள். மார்க்சிய அறிவியலை உள்வாங்கிக்கொண்ட போராளிகள் அடிப்படை மாற்றங்களுக்காகக் களமிறங்கியிருக்கிறார்கள்.

வட்டாரத்திற்கு வட்டாரம், நாட்டுக்கு நாடு, சமூகத்திற்கு சமூகம் இந்த வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திற்குமான முன்னுரிமைத் தேவைகளில் மாறுபாடுகள் இருந்து வந்துள்ளன. இந்திய எடுத்துக்காட்டையே பார்த்தோமானால், பொதுவான அரசியல் விடுதலைப் போராட்டம் வேறு, தலித் மக்களின் விடுதலைப் போராட்டம் வேறு. எந்தச் சமூகமானாலும் பாலின சமத்துவத்திற்காகப் பெண்கள் நடத்துகிற போராட்டம் தனித்துவமானது.

போராட்டங்கள் மாறுபட்டாலும் அவற்றின் அடிப்படையான அறச்சீற்றம் மாறுபடவில்லை. இன்று நாம் காண்கிற, அனுபவித்துக்கொண்டிருக்கிற பல மாற்றங்களுக்குக் காரணம் அந்த முன்னோடிகளின் அறச்சீற்றங்களும் போராட்டங்களும்தான். இதைச் சொல்கிறபோதுதான், நிகழ வேண்டிய பல மாற்றங்கள் இன்னும் நிகழவில்லையே, ஏன் என்ற கேள்வி எழுகிறது. இக்கேள்விக்கு ஒரு பதில் - மாற்றங்களை விரும்பாத, சமுதாயம் இப்படியே உழைப்புச் சுரண்டல்களோடும், ஏற்றத்தாழ்வுளோடும், பாகுபாடுகளோடும், அறியாமைகளோடும், மூட நம்பிக்கைகளோடும், பிற்போக்குத்தனங்களோடும் மாறாமல் நீடித்திருக்க வேண்டும் என விரும்புகிற சக்திகள் தடைச்சுவர்களை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு பதில் முக்கியமானது. மாற்றங்களுக்கான போராட்ட வரலாறுகளின் முன்னுரைகளாக அமைந்தவர்களின் பொதுத்தன்மை என்று பார்த்தோமே, அந்த அறச்சீற்றம் இன்று இல்லை அல்லது மிகக் குறைவாக இருக்கிறது.

அண்மையில் சென்னையைத் தாக்கிய வர்தா புயலின் பாதிப்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பல பகுதிகளில் ஒன்று. ஒரு நாளில் மின் விநியோகம் சீராகிவிடும் என்று அரசு கூறுகிறது. ஆனால், நான்கு நாட்களாகியும் நிலைமை மாறவில்லை. மின்சாரம் இல்லாததால் வீடுகளில் வெளிச்சம் இல்லை, மின்விசிறிக் காற்றும் இல்லை என்பவை மட்டுமே பிரச்சனையல்ல. நீர்த்தொட்டியை நிரப்ப முடியாததால் சமையலுக்கோ குளிக்கவோ கழிப்பறைத் தேவைக்கோ தண்ணீர் இல்லை. விலைகொடுத்தே பாட்டில்களிலும் கேன்களிலும் தண்ணீர் வாங்கிவைக்க வேண்டியிருக்கிறது. சமையலுக்கு மிக்ஸி இயக்க முடியவில்லை. பாதுகாப்பாக மருந்துகளை வைப்பதற்கு ஃபிரிட்ஜ் பயன்படுத்த முடியவில்லை. உறவினர்களுக்குத் தகவல் சொல்லவும் முடியாமல் மொபைல் போன்களை சார்ஜ் பண்ணமுடியவில்லை... ஐந்தாம் நாளில் பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் இறங்குகிறார்கள்... அதிகாரிகள் வந்தார்களா, வாக்குறுதி அளித்தார்களா, வாக்குறுதிப்படி மின்னிணைப்பு வழங்கினார்களா என்பதெல்லாம் வேறு விவகாரம்.

தங்களுடைய அன்றாடக் கட்டாயத் தேவைகளில் ஒன்று மறுக்கப்படுகிறபோது இப்படி ஆவேசத்தோடு குடும்பம் குடும்பமாகவே கூட போராட்டக் களத்திற்கு வருகிற மக்கள், எல்லோரையுமே கைவிடுகிற, பல சொந்த வேலைகளை விட்டுவிட்டு மணிக்கணக்கில் ஏடிஎம் கூண்டுகள் முன்பாக நின்று புலம்ப வைத்துவிட்ட மோடி அரசின் பணப்பறிமுதல் நடவடிக்கையை எதிர்த்து, அதே பகுதியில் நடைபெறுகிற போராட்டத்திற்கு வரவில்லை. ஏன்? முதலில் குறிப்பிட்ட மின் தடை எதிர்ப்புப் போராட்டத்திற்குக் கூட, அந்தப் பகுதி மக்கள் எல்லோரும் வருவதாககக் கூற முடியாது, ஒரு பகுதியினர்தான் வருகிறார்கள். இந்தப் போராட்டத்திற்கோ அந்த அளவுக்குக் கூட வருவதில்லை. ஏன்?

கல்வியை வணிகச் சரக்காக மாற்றுகிற, கல்வி உரிமைச் சட்டத்தை கேலிப்பொருளாக்குகிற நடவடிக்கைகள், வாயைக் கட்டி வயிற்றைக் காட்டி சேமித்த பணத்தையெல்லாம் பறித்துக்கொள்கிற தனியார் மருத்துவமனைகளை நோக்கித் தள்ளிவிடும் ஏற்பாடுகள், நிர்வாகங்கள் தொழிலாளர்களை எந்த நேரத்திலும் வெளியேற்றுவதற்கு சாதகமாக மாற்றப்படும் கொள்கைகள், விவசாயிகளைப் பூச்சிமருந்து குடிக்கவைக்கும் புறக்கணிப்புகள், சமூக நீதியை ஒழித்துக்கட்டும் தனியார்மயமாக்கல் சூழ்ச்சிகள்... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த அநீதிகளை எதிர்த்து மக்கள் அறச்சீற்றம் கொள்கிறார்கள் என்று சொல்ல முடியவில்லையே!

போராட்டத்திற்கு வருவதில்லை என்பது மட்டுமல்ல, அந்தப் போராட்டங்களைப் பரிகசிக்கவும் செய்கிறார்களே! பெட்ரோல் - டீசல் விலை உயர்வை எதிர்த்து ஒரு போராட்டம், அது சிறை செல்ல வாய்ப்பிருக்கிற மறியல் போராட்டம் கூட அல்ல, அனுமதி பெற்று குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் நடக்கிற கோரிக்கை முழக்கப் போராட்டம்தான் - அதற்கு, அந்த விலை உயர்வால் பாதிக்கப்படுகிற மக்கள் வருவதில்லை. “இவர்கள் போராடுவதால் மட்டும் விலை குறைந்துவிடப் போகிறதாக்கும்” என்று பேசியபடி ஒதுங்கிச் செல்கிறார்கள்.

மக்களுக்காக, சமுதாய மாற்றத்திற்காகப் போராடுவதற்கென்றே தங்களை ஒப்படைத்துக்கொண்ட கம்யூனிஸ்ட்டுகளைப் பார்த்து, “நீங்கள் சொல்கிற புரட்சி எப்போது வெடிக்கும்” என்று கேட்கிறார்கள். அப்படிக் கேட்கிறவர்கள் மேற்படி “பாதுகாப்பான” ஆர்ப்பாட்டத்திற்குக்கூட வராதவர்களாக இருக்கிறார்கள். மக்கள் மனநிலை இதுதான் என்றால் புரட்சி எப்படி வெடிக்கும்? யாருக்காகப் போராட்டங்கள் அறிவிக்கப்படுகின்றனவோ அந்த மக்கள் பங்கேற்காமல் வெற்றி எப்படிக் கிடைக்கும்?

இந்தியாவின் தனித்துவமான சமூக இழிவு சாதியம். அந்த சாதியக் கட்டமைப்பின் அடித்தட்டுக்குத் தள்ளப்பட்டு அழுத்தப்படுகிற தலித் மக்களின் உரிமைகளுக்காக ஒரு போராட்டம் நடக்கிறது. அந்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்த கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்களன்றி, தலித் சமூகத்தினரே கூடத் திரண்டு வருவதில்லை.

சாதியத்துடன் இணைகோடாக இருப்பது பெண்ணடிமைத்தனம். பெண்களின் சம உரிமைகளுக்காக ஒரு போராட்டம் நடக்கிறது. அது ஏதோ சம்பந்தப்பட்ட மாதர் அமைப்பின் தலையெழுத்து என்பது போல பெரும்பாலான பெண்கள், வீட்டிலும் பொதுவெளியிலும் அவமதிப்புகளை எதிர்கொள்ளும் பெண்கள் அந்தப் போராட்டத்தில் அணிவகுப்பதில்லை.

சாதி ஆணவக் கொலைகள் முதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் முடக்கப்படுவது வரையில், யாரால் தடுக்க முடியும் என்று சவால் விட்டு மூர்க்கத்தனமாக நிகழ்த்தப்படும் அநீதிகளைக் கண் முன்பாகக் கண்டும், பெரும்பகுதி மக்கள் ஏன் கொந்தளிக்கவில்லை? அவர்களின் அறச்சீற்றத்தை அடகு பிடித்து வைத்திருப்பது எது?

பல முனைகளிலிருந்து இக்கேள்விகளுக்கான விடைகள் வருகின்றன. ஒரு சில முக்கியமான முனைகளைப் பார்ப்போம்.
எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளியிருப்பது அதே சாதியமும் மத உணர்வும்தான். சாதி, மத வரப்புகளைத் தாண்டி வருவதற்குப் பெரும்பகுதி மக்கள் தயாராக இல்லை என்பது, மாற்றங்களுக்காகப் போராடுகிற சக்திகளுக்கு மிகப்பெரிய சவால். அடுத்து, தங்கள் சமூகத்திலிருந்தோ அல்லது தங்களது சமூகத்தின் ஆதரவுடனோ ஒரு தலைவர் அவதரித்து தங்களை நல்லபடி வைத்திருப்பார் என்ற, தனிமனித வழிபாட்டுக் கலாச்சாரம். அரசியல் அதிகாரத்திற்கு வந்துவிடுகிற அப்படிப்பட்ட தனி மனிதர்கள் வீசுகிற இலவசங்களும் சலுகைகளும் போதும், அவற்றால் தங்கள் வாழ்க்கை முன்னேறிவிடும் என்ற கனவிலேயே, வழிபாட்டுத் துதிப்பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

மதம் என்று வருகிறபோது, அது மக்களைப் பிரித்துவைக்கிறது என்பது மட்டுமல்ல, கடவுள் தீர்மானித்தபடியே நல்லது கெட்டது எல்லாம் நடக்கிறது என்ற வலுவான எண்ணத்தை மனங்களில் விதைத்து, போராட்ட இயற்கையான போராட்ட உணர்வையே மழுங்கடித்து விடுகிறது. அவர்களுடைய மதத்திற்காக - அதாவது அந்தந்த மதத்தின் கடவுளுக்காக - வீறுகொண்டு எழுந்து போராடுவார்களேயல்லாமல், வேறு பொதுப்போராட்டங்களுக்குத் திரள மாட்டார்கள். உலகத்தையே படைத்து எல்லா உயிர்களையும் உருவாக்கி எது எது எப்படி நிகழ வேண்டும என்று முன்கூட்டியே திட்டமிட்டு இயக்குகிற சக்தி என்று நம்பப்படுகிற கடவுளுக்காகக் கலவரங்களில் ஈடுபடுவதன் மூலம், அந்தக் கடவுளை விடவும் தங்களைப் பெரிய ஆளாக்கிக்கொள்கிறோம், கடவுளை மட்டம் தட்டுகிறோம் என்று யாரும் யோசிப்பதில்லை. புராணங்களிலும் வேதநூல்களிலும் மறைகளிலும் சொல்லப்படுகிற கடவுள்களும் மகிமைகளும் காலண்டரில் இடம்பெறாத ஏதோவொரு காலத்தில் நிகழ்ந்ததாகவே இருக்கின்றன, அதற்குப் பிறகு இன்று வரையில் அப்படிப்பட்ட அருளவதாரங்களோ திருவிளையாடல்களோ நிகழவில்லையே ஏன் என்று சிந்திப்பதில்லை. அப்படிச் சிந்திக்கவிடாமல் நம்பிக்கையிலும் அச்சத்திலும் மூளையைப் புதைத்துவைப்பதில் சமயக் கோட்பாடுகளும் கதைகளும் சடங்குகளும் வெற்றிபெற்றிருக்கின்றன.

அந்த வெற்றி ஆளும் வர்க்கங்களுக்குத் தோதாக இருக்கிறது. முன்பு பண்ணைச் சமுதாய அமைப்பில் ஆட்சியாளர்களான மன்னர்களுக்கும், பெரும் நிலவுடைமையாளர்களுக்கும் அவர்களுடைய சுரண்டல் தங்குதடையின்றித் தொடர்வதற்கு மக்களின் சிந்தனை இவ்வாறு முடக்கப்படுவது தேவைப்பட்டது. “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...” என்பது போன்ற தத்துவங்கள் மக்கள் கிளர்ந்தெழுவதை முளையிலேயே கிள்ளி எறிகிற வேலையைச் செய்தன. மக்கள் இவ்வாறு கொந்தளிப்பு அடங்கிப்போனவர்களாக வார்க்கப்பட்டிருப்பது இன்றைய உலகளாவிய சுரண்டல் சக்திகளாகிய, ஏகாதிபத்தியத்தின் இன்றைய பரிணாமமாகிய கார்ப்பரேட் குழுமங்கள் - அவர்களைப் பாதுகாக்கும் அரசுகள் கூட்டணிக்கு மிகமிகத் தோதாக இருக்கிறது.

மனிதகுல வளர்ச்சிக்கு அடிப்படையானது எதையும் ஏன் என்று கேள்வி கேட்கிற இயற்கையான குணம்தான். சமுதாய மாற்றத்திற்கு அடிப்படையானது, அப்படிக் கேள்வி கேட்டதைத் தொடர்ந்து தட்டிக் கேட்கிற குணம்தான். கேள்வி கேட்பதும் தட்டிக் கேட்பதுமே அரசியல் உணர்வு.  
அந்த அரசியல் உணர்வு அழிக்கப்படுவது - அதாவது கேள்வி கேட்காத, தட்டிக் கேட்காத தலைமுறைகளாக வார்க்கப்படுவது - உலகச் சந்தை தாதாக்களுக்குத் தேவைப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுவதும், அதற்கேற்ப அரசு தொழிலாளர் உரிமைச் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதும் தற்செயலானதல்ல. சங்கம் சேர்வதைத் தடுப்பதற்கென்றே இன்று  கான்டிராக்ட் தொழிலாளர்களாகவே நியமிக்கப்படுகிறார்கள். ஒரு பெரும் நிறுவனத்தில் ஒரு கான்டிராக்ட் தொழிலாளிக்கு எவ்வளவு ஊதியம் வேண்டுமானாலும் வழங்கப்படலாம்.
ஆனால் ஒப்பந்தக் காலம் முடிந்ததும் அவரது வேலை தொடருமா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இத்தகைய நிலையில் சங்கமாகச் சேர்ந்து குரல் கொடுக்க அந்தத் தொழிலாளி முன்வருவார் என்று எப்படி எதிர்பார்க்க?

ஒரு ஊழியர் நிர்வாகத்திடம் சென்று, “எனக்கு வேலைச்சூழல் சரியில்லை... எனக்கு இந்த வசதி இல்லை... எனக்கு இந்தத் தேவை நிறைவேறவில்லை...” என்று புகார் செய்ய அனுமதிக்கப்படுவார். அவருடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதே தொழிலாளி நிர்வாகத்திடம் சென்று, “எங்களுக்கு வேலைச்சூழல் சரியில்லை... எங்களுக்கு இந்த வசதி இல்லை... எங்களுக்கு இந்தத் தேவை நிறைவேறவில்லை...” என்று புகார் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார். “எனக்கு” என்று கோருகிற தனித் தொழிலாளி, “எங்களுக்கு” என்று பேசுவாரானால் அவர் சங்க உணர்வு பெறுகிறார் என்று பொருள். அந்த உணர்வு துளிர்க்கிற விடுகிறபோதே நிர்வாகத்தின் பூட்ஸ் கால்கள் அதை நசுக்கிவிடும். நிர்வாகத்தால் முடியவில்லை என்றால் அரசாங்கத்தின் பூட்ஸ் கால் படைகள் அனுப்பி வைக்கப்படும். இன்றைய உலகமய, தனியார்மய, தாராளமய காலகட்டத்தில் இதுவே எங்கும் நீக்கமற நிகழ்கிறது.

ஒரு மதத்தின் பெயரால் வன்முறைகளில் ஈடுபடுவோரும் சரி, இன்னொரு மதத்தின் பெயரால் எதிர் வன்முறைகளில் ஈடுபடுவோரும் சரி, இந்த சுரண்டல் அநீதிகளைத் தட்டிக்கேட்பதில்லை. ஒரு சாதியின் பெயரால் வன்முறைகளில் ஈடுபடுவோர்,  இன்னொரு சாதியின் பெயரால் எதிர் வன்முறைகளில் ஈடுபடுவோர் ஆகியோரும் இந்த அரசியல் உணர்வை அழிப்பதில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். மதத்திற்காக, சாதிக்காக என வாதாடுகிறவர்கள் அடிப்படை மனித உரிமைகளை, பாலின சமத்துவத்தை, கருத்துச் சுதந்திரத்தை மதிக்காதவர்களாக இருப்பது தற்செயலானதல்ல.

மக்கள் சிந்தனைகளில் தாக்கம் செலுத்தும் வல்லமை வாய்ந்த ஊடகங்களும் இக்கைங்கரியத்தில் பங்களிக்கின்றன. ஒரு காலகட்டத்தில் ஊடகங்கள் விடுதலைப் போராட்டங்களின் அங்கமாகத் திகழ்ந்த வரலாறு உண்டு. விடுதலை இயக்கத் தலைவர்கள் பத்திரிகை நடத்துகிறவர்களாக, பத்திரிகைகளில் எழுதுகிறவர்களாக இருந்தார்கள். இன்றோ, ஊடக நிர்வாகங்கள் கார்ப்பரேட் கட்டமைப்பின் அங்கமாகிவிட்டன. கார்ப்பரேட் தாதாக்களின் நவீன சுரண்டல்களை நியாயப்படுத்துகிற வாதங்களும் எழுத்துகளுமே பெரும்பாலான ஊடகங்களில் ஆக்கிரமிக்கின்றன. நடுநிலை ஒப்பனை கலைந்துவிடலாகாது    என்பதற்காக சில மாற்றுச் சிந்தனைகளுக்குப் போனால் போகிறதென்று அளவோடு இடமளிப்பார்கள் - அவ்வளவுதான். அந்த ஒப்பனைக்காகச் செய்கிற வேலைகளில் ஒன்றுதான் இடதுசாரி தலைவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவது. அது எப்படி இருக்கும் என்றால், கம்யூனிஸ்ட் தலைவர்கள் எளிமையாக இருப்பது, பேருந்துகளில் பயணிப்பது, தெருவோரக்கடையில் இயல்பாகத் தேநீர் பருகுவது, சாதாரண இருசக்கர வண்டியில் செல்வது, வாடகை வீட்டில் குடியிருப்பது போன்ற “சுவையான” தகவல்களைப் படத்துடன் வெளியிடுவார்கள். அவர்களது எளிமை, நேர்மை, தியாகம் பற்றியெல்லாம் கூடச் சொல்வார்கள். ஆனால், மறந்தும் அவர்கள் மக்களுக்கு என்ன சொல்கிறார்கள், குறிப்பிட்ட நடவடிக்கையை எதிர்ப்பதற்கு அவர்கள் என்ன காரணங்களைக் கூறுகிறார்கள் என்பதையெல்லாம் வெளியிடுவதில்லை. அல்லது மேலோட்டமாகவே வெளியிடுவார்கள். போராட்டங்களுக்குப் பொதுமக்கள் திரண்டு வராமல் போவதற்கு இது மட்டுமே காரணமல்ல என்றாலும், ஊடகங்களின் இந்த உத்தியும் முக்கியமான காரணம்தான்.

பணம் மட்டுமே (அது ரொக்க உருவமாக வந்தாலும் சரி, அருவமான டிஜிட்டல் பணமாக இருந்தாலும் சரி) வாழ்க்கையின் ஒரே லட்சியமாக மாற்றப்பட்டிருக்கிறது. பணம் இருந்தால் மட்டுமே வயிறாரச் சாப்பிட முடியும், மழை-வெயிலில் பாதுகாப்பான கூரையின் கீழ் வசிக்க முடியும், குழந்தைகளைப் படிக்க வைக்க முடியும், பெரியவர்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க முடியும் என்ற கட்டாய வாழ்க்கை திணிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்  என்ற சுயநலம் மனங்களுக்குள் புகுத்தப்படுகிறது. அடிமைத்தனமாக அடங்கிப்போவது முதல், சட்டப்படி செய்ய வேண்டிய கடமைக்குக் கூட லஞ்சம் பெறுவது வரையில் மனசாட்சியை மறைப்பது  அந்தப் புகுத்தப்பட்ட சுயநலம்தான். போராட்டம் அது இது என்று போனால், கிடைத்திருக்கிற வாய்ப்புகளும் பறிக்கப்பட்டுவிடலாம் என்ற அச்சத்தில் ஒதுங்கிப்போகிற போக்கு இப்படித்தான் பரவியிருக்கிறது.

சுதந்திரச் சந்தை என்ற போர்வையில் சுதந்திரத்தை ஒடுக்குகிற உலகமயச் சுரண்டல்கள், அதற்கு விசுவாசமாகத் தொண்டாற்றுகிற கடவுள் கதைகள், விசிறிவிடப்படும் மதவாதங்கள், விரிசல் விழாமல் பாதுகாக்கப்படும் சாதிய உணர்வுகள், நவீன வேடம் தரிக்கும் சோதிடப் பொய்கள், வளைக்கப்படும் சட்டங்கள்... இப்படி எல்லாவற்றின் கலவையில்தான் மக்களின் அறச்சீற்றம் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. கான்கிரீட் கலவையில் சிக்கிய செடியைப் போல் மக்களின் கொந்தளிப்பு உணர்வு சிறையிடப்பட்டிருக்கிறது.

விதையிலிருந்து தலைநீட்டும் துளிருக்கு சற்றே இடம் கிடைத்தால் அதன் வேர்கள் கான்கிரீட் சுவர்களிலும் விரிசலை ஏற்படுத்தும். மக்களின் அறச்சீற்றம், கொந்தளிப்பு உணர்வு வேர் விடுவதற்கு இடம் ஏற்படுத்தித் தருகிற வரலாற்றுப் பொறுப்பு மாற்றங்களுக்கான இயக்கங்களின் தோள்களில் ஏற்றப்பட்டிருக்கிறது. அந்த வரலாறு நிகழும் என்ற நம்பிக்கைச் செய்தியை உள்ளூரில், நாட்டில், உலகின் பல்வேறு பகுதிகளிலும் வேர்விட்டுக்கொண்டிருக்கிற சிறு சிறு மக்கள் போராட்டங்கள் உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. முன்னத்தி ஏர்களின் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடுகையில் இந்தச் செய்தியை சமுதாய வயலில் ஊன்றுவோம்.

(‘வீதி’ ஜனவரி 2017 இதழில் வந்துள்ள எனது கட்டுரை, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன் எழுதப்பட்டது)