Sunday, 20 June 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடும் உள்ளூர் பெட்டிக்கடையும்


செம்மொழியான தமிழ் மொழிக்கு உலக மாநாடு தொடங்க இருக்கிறது. கோவை நகரம் மாநகராட்சியான பின்னரும் இதுவரை காணாத அளவிலும் வேகத்திலும் பல உள் கட்டுமான வசதிகளை இந்த மாநாட்டிற்காகப் பெற்றிருக்கிறது. வானொலியில் தொலைக் காட்சியில் ஊர் ஊராய்ச் சுற்றிவரும் கருத்துப் பரப்பு வாகனங்களில் கணினி வழி இணையத் தொடர்புகளில் செம்மொழியான தமிழ் மொழியாம் பாடல் ஒலிக்கிறது. மாநாட்டுத் தேதிகளில் நடைபெற இருந்த ஒரு பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக் கப்பட்டிருக்கிறது. எல்லாமாகச் சேர்ந்து, மாநாடு பற்றிய ஒரு எதிர்பார்ப்பு, முன்னெப் போதையும் விட கூடுதலாக ஏற்பட்டிருக்கிறது.

அந்த எதிர்பார்ப்பு சார்ந்த உரையாடல் களில் மாநாட்டை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.
தேர்தல் நெருங்கும் காலத்தில் ஆளுங்கட்சிக்கு மற்றொரு பிரச்சார ஏற்பாடுதான் இது, இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனைகள் தீர்க் கப்படாத நிலையில் இப்படியொரு மாநாடு தேவையில்லை என்றும் எதிர்மறை எண்ணங் கள் சற்று அழுத்தமாகவே ஒலிக்கின்றன. அலங்கார ஊர்திகள், நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகள் என ஒரு திருவிழாவாக நடந்து முடிவதில் என்ன பயன் என்பது போன்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.

அறிஞர்கள், ஆய்வாளர்கள், படைப்பாளி கள் ஆகியோர் மட்டும் அரங்குகளில் கூடி விவாதித்துக் கலைவதாக இல்லாமல், பொதுமக்களும் உற்சாகமாகப் பங்கேற்கிற ஏற்பாடு என்ற வகையில் திருவிழாக் கொண் டாட்டமாக நடப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. எந்த மக்கள் தொடர்பாகப் பேசப்படுகிறதோ அந்த மக்கள் பார் வையாளர்களாகக் கூட அவற்றில் பங்கேற்க முடிவதில்லை என்பதுதான் பொதுவாக இப்படிப்பட்ட மாநாடு களின் அனுபவம். மக்களின் பணத்தில் நடத்தப்படுகிற இந்த மாநாட்டில், அணிவகுப்புகளையும் கலை நிகழ்ச்சி களையும் காண்பதற்காகவேனும் பொது மக்களில் ஒரு பகுதியினர் வருகிறார்கள் என்றால் அது வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால், ஆய்வுரைகளின் ஒட்டுமொத்த பலன்களை தமிழ் மக்கள் வருங்காலத் தில் அறுவடை செய்ய முடியும் என் றால்தான் இது ஒரு வெற்றிகரமான மாநாடாக வரலாற்றில் பதிவாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
அறுவடை மக்களுக்குச் சொந்த மாக வேண்டும் என்ற அக்கறையோடுதான், மாநாட்டைப் புறக்கணிக்காமல், அதே வேளையில் விளம்பரச் சோதியில் ஐக்கியமாகி விடாமல் கலந்துகொள்கிற அணுகுமுறை தேவைப்படுகிறது. இது மேலும் ஒரு பட்டம் சூட்டுவிழாவாகவே முடிந்துவிடக்கூடாது என்ற அக்கறையோடு மார்க்சிய இயக்கம் பங்கேற்கிறது. தீக்கதிர் நாளேட்டின் சார்பில் மாநாட்டுக்கான சிறப்பு மலர் வெளியிடப் பட்டிருப்பது அப்படிப்பட்ட பங்கேற்புதான். செம்மொழித் தமிழுக்குச் செய்ய வேண்டி யது என்ன கேள்வியை முன்வைக்கும் சிறு புத்தகத்தை விநியோகித்த தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன் சக்திக்கு உட்பட்டு மக்களிடையே மாற்றுச் சிந்தனைகளை எடுத்துச் சென்றது. இதற் கென்றே சென்னையில் மாநிலக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.

மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட கோவைப் பயணம் மேற்கொண்ட முதல மைச்சர் கலைஞர், இது ஆளுங்கட்சியின் விழா என்ற குற்றச்சாட்டு எழுந்துவிடக் கூடாது என்று கூறி, அந்த எண்ணத்தை ஏற் படுத்தும் வகையில் இருந்த விளம்பரங்களை அகற்றப் பணித்தார்; மாநாட்டுக் கருத்துக்களே விளம்பரங்களில் இடம்பெற வேண்டும் என்று அறிவித்தார். சென்னையில் அரசின் தலைமைச் செயலகத்திலிருந்து தமுஎகச வெளியிட்ட புத்தகம் தேவை என்று தேடி வந்து வாங்கிச் சென்றனர். இவையெல்லாம் மேற்கூறிய மாற்றுச் சிந்தனை முயற்சிகளுக்குக் கிடைத்த சிறு வெற்றிதான்.

இதற்காகப் பெருமைப்பட்டுக்கொண்டு இனி எல்லாம் தானாய் நடந்துவிடும் என்று ஓய்ந்திருப்ப தற்கில்லை. அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் அரசின், சமுதாயத்தின் செயலாகவும் மாறி யாக வேண்டும். அதற்கான இயக்கங்கள் தொடர வேண்டும். தொடரும்.

செம்மொழியான தமிழ்மொழியாம் பாடலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழிசை இல்லை, தமிழின் நாட்டுப்புற இசை இல்லை, மேற்கத்திய பாணியில் இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண் ணோட்டம் (காதோட்டம்?) இருக்கும்தான். ஆனால், தமிழின் இலக்கிய மரபுப் பெருமை யோடும் உலகளாவிய உறவை வலியுறுத்தும் வரிகளோடும், முதலமைச்சர் கோர்த்திருக்கும் இந்தப் பாடலை மூத்த பாடகர் டி.எம். சவுந் தரராஜன் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தொடங்க இன்றைய இளம் பாடகர் கள், நாட்டுப்புற பாடல்களில் புகழ்பெற்ற சிலர் வரையில் பங்கேற்று நிறைவு செய் துள்ளனர். அடுத்த தலைமுறையினரின் நவீன இசை நாட்டம், தமிழிசை, நாட்டுப்புற கருவி கள் என பன்முகக் கலவையோடு ஏ.ஆர். ரஹ் மான் இசையமைத்திருப்பதாகவே தோன்று கிறது.

வலைத்தளங்களில், தமிழ் இனி அழி வதைத் தடுக்க முடியாது என்றும், தமிழை யாராலும் அழிக்க முடியாது என்றும் வாத-எதிர்வாதங்கள் பதிவாகின்றன. சந்து பொந்துகள் முதல் பெரும் வளாகங்கள் வரை யில் எனப் பரவியிள்ள தனியார் ஆங்கில வழிப் பள்ளிகள் (அரசு நிர்ணயித்த கட்டணங் களையே வசூலிக்க ஒப்புக்கொண்டாலும் கூட) தமிழை அழித்துவிடும்... அம்மா அப் பாவை மறைத்து மம்மி டாடி என அழைக்கு மாறு குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் பெற் றோர்கள் அழித்துவிடுவார்கள்... மிச்சத்தை இந்த மாநாடு கவனித்துக்கொள்ளும்... இப் படியான கருத்துக்கள் உலாவருகின்றன. பல சுனாமிகளைத் தாங்கி, தாண்டி வாழ்ந்துவரும் தமிழ் இன்று மின்னணு ஊடகத்திலும் ஏறிக்கொண்டுவிட்டதால் அது ஒருபோதும் அழியாது என்ற நம்பிக்கைகளும் வெளிப்படு கின்றன.

தானாய் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பது பழையபொய். அரசு நிர்ணய கட் டணத்திலோ, அல்லது கல்வியிலேயும் சுதந் திரச் சந்தை திறந்துவிடப்பட்டோ ஆங்கில வழிக் கல்வி நிலையங்கள் தொடருமானால், அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் தரமான கல்வி கிடைக்கிறது என்ற நம்பிக்கைக்கு இட மில்லாமல் போகுமானால் என்ன ஆகும் என்ற கேள்வியைக் கேட்காமல் இருப்பதற்கில்லை.

கல்வி அப்பட்டமான வர்த்தகமாக்கப் பட்டுவிட்டது என்பது ஒருபுறம். வர்த்தகம் என்பது திறந்த சந்தையாகவே இருக்க வேண்டும் - பெட்ரோலியப் பொருள்களானா லும் பங்குச் சந்தையானாலும் சரக்குகளின் விலையை அரசாங்கம் நிர்ணயிப்பது என்பதே இருக்கக்கூடாது, உலகச் சந்தை நிலவரங் களுக்கு ஏற்ப அது தானாகவே செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்ற மன்மோ கனப் பொருளாதாரக் கொள்கை நாளை கல்வி வர்த்தகத்திலும் ஆக்கிரமிக்கத்தானே செய் யும்? அதை எதிர்க்காமல் சமச்சீர் கல்வி யையோ தமிழ்வழி கல்வியையோ எப்படி வேரூன்றச் செய்ய முடியும்? மற்ற துறைகளில் உலகமய வேட்டைக்கு ஒப்புதல் தெரிவித்து விட்டு கல்வியில் தமிழைக் காப்பாற்றி விடலாம் என்று நினைப்பது ஏமாற்றுவேலை யாகிவிடாதா? மக்களை ஏமாற்றுகிற வேலை மட்டுமல்ல, தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிற வேலையுமல்லவா இது? சுற்றிலும் நெருப்பு பற்ற வைக்க அனுமதித்துவிட்டு, அதற்குத் தானும் சேர்ந்து கொள்ளிக்கட்டை எடுத்துக்கொடுத்துவிட்டு, அந்த நெருப்பு தனது குடிசையை மட்டும் விட்டுவைக்கும் என்று எதிர்பார்ப்பது பகுத்தறிவுக்கும் ஒவ்வாத செயலாயிற்றே?

விஷயம், பிரச்சனை, ஆட்சேபனை போன்ற சில சொற்கள் இன்னும் விடமாட் டேன் என்று தொற்றிக்கொண்டிருந்தாலும், சமஸ்கிருதச் சொற்களின் ஆதிக்கத்திலிருந்து தமிழைப் பெரிதும் மீட்க முடிந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், இன்றைய உலக மயச் சுரண்டல் ஏற்பாட்டில், அடிப்படை யான சமூகச் சிந்தனை கூட இல்லாதவர்களாக இளைஞர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள
். அவர்களது மூளைகளில் ஆங்கில மோகக் கறை ஏற்றப்படுகிறது (ஆம், இது மூளைச் சலவை அல்ல, மூளைக் கறைதான்). அது முன்பு படை பலத்தால் நாடுகளை வளைத்த பிரிட்டிஷ் ஆங்கிலம் அல்ல, இன்று பொரு ளாதாரக் கெடுபிடி பலத்தால் நாடுகளை வளைய வைக்கிற அமெரிக்க ஆங்கிலம். இதையெல்லாம் வளர்ச்சியின் விலை என்று இறும்பூது எய்திக்கொண்டு, அப்புறம் எப்படி தமிழைக் காப்பாற்றுவது?

இன வேறுபாடுகளைக் களைவதற்கு மாறாக, இன அடையாளங்களையே அழித்து ஒழிப்பதில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆதிக்க இனங்களின் அடக்குமுறைகளை விடவும் கொடூரமாக இன்றைய உலமயப் பொருளாதாரம் கரசேவை செய்துகொண் டிருக்கிறது. அதன் சரக்குகள் தங்குதடையில் லாமல் எல்லா நாடுகளின் நுகர்வோரையும் சென்றடைய வேண்டும் என்பதற்கேற்ற வகையில், வாழ்க்கை முறை உள்ளிட்ட பண் பாட்டுத் திணிப்புகள் அரங்கேற்றப்படு கின்றன. இந்திய/தமிழக குக்கிராமங்களின் பெட்டிக்கடைகளிலும் கோக், பெப்சி, லேய்ஸ் வகையறாக்கள்தான் ஆக்கிரமித்துள் ளன. கோக், பெப்சி, கூல்டிரிங்க் என்ற சொற் களின் மேலாண்மையில் கருப்பட்டி பானகம் போன்ற உள்ளூர்ச் சொற்களும் காணாமல் போய்விட்டனவே! லேய்ஸ் ஆதிக்கத்தில் வறுவல் என்ற சொல்லே மறைந்துவிட்டதே! இது அப்படியே அரசு நிர்வாகம், நாடாளு மன்றம், நீதித்துறை என்று பரவிக் கால் பரப்புவதைத் தடுக்க வழி என்ன? தமிழிலேயே சிந்தித்து, தமிழிலேயே கண்டுபிடித்து, தமிழிலேயே செயல்படுத்தி உலகத்திற்கு வழங்க முடியும் என்று அறிவியல் தமிழை வளர்க்காமல் மாநாட்டுக் கொண்டாட்டத் தால் மட்டும் செம்மொழியைப் பாதுகாக்க முடியுமா? வர்த்தக உலகத்தினர், தங்களது பெயர்ப்பலகைகளைத் தமிழில் வைப்பதற்குத் தயங்குவது கூட இந்த உலகமய அடையாள அரசியலோடு பின்னிப் பிணைந்ததே அல்லவா?

சுற்றிவளைத்து, இன்றைய உலகமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத் தோடும் இணைந்ததே மொழி, இன அடை யாளப் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக் கான போராட்டமும். உலகத் தமிழ் செம் மொழி மாநாடு இதையெல்லாம் நேரடியாக விவாதிக்கும் என்று விளையாட்டாகக் கூட கற்பனை செய்வதற்கில்லை. ஆனால், அரங்க ஆய்வுரைகளில் இது பற்றிய சிந்தனை களாவது வெளிப்பட வேண்டும். அந்தச் சிந்தனைகள், செம்மொழித் தமிழுக்குச் செய்ய வேண்டியது என்ற கேள்விக்கான விடைகளுக்கு வீரியம் ஊட்டுவதாக அமைய வேண்டும்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுச் சின் னங்களில் உயர்ந்துநிற்கிறார் வள்ளுவர். மாநாட்டின் உரைகளும், கருத்துப் பரிமாற் றங்களும் இறுதிப் பயனாளிகளான மக்களைச் சென்றடைகிறபோது உண்மை வாழ்க்கையில் செம்மொழித் தமிழ் நிமிர்ந்து நிற்கும்.

Friday, 18 June 2010

இந்தியாவில் கம்யூனிசம் வளராதது ஏன்?


கம்யூனிசம் என்றால்... 4

இந்தத் தலைப்பில் அடுத்த கட்டுரை எழுதப்போவதாக சென்ற கட்டுரையின் முடிவில் குறிப்பிட்டிருந்தேன். அதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகப் பல நண்பர்களும் தெரிவித்திருக்கிறார்கள். இவர்களில் மார்க்சிய இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உண்டு, இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களும் உண்டு. அனைவரது எதிர்பார்ப்பிலும் இவ்வளவு முற்போக்கான, அறிவியல்பூர்வமான, நேர்மையான, உண்மையிலேயே சமத்துவ லட்சியம் கொண்ட இயக்கம் இங்கே ஏன் வலுவாக வேர்பிடிக்கவில்லை என்ற ஆதங்கமே வெளிப்பட்டது. அரசியல் கட்சி என்ற முறையில் கம்யூனிஸ்ட் கட்சியோடு மாறுபடுகிறவர்களும் ஒரு சமுதாய மாற்றத்துக்கான இயக்கம் என்ற முறையில் மார்க்சியம் இங்கே பெரிய சக்தியாக வளராதது பற்றி கவலைகொள்கிறார்கள்.

மார்க்சியத்தின் எளிய அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாதவர்கள், முதலாளித்துவ அமைப்பே இறுதியானது, இதிலேயே படிப்படியாக ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சம நீதி நிலைநாட்டப்பட்டுவிடும் என்றெல்லாம் நம்புகிறார்கள். தனி மனிதத் தவறுகளால்தான் முதலாளித்துவ அமைப்பில் சுரண்டல், கொள்ளை லாபம், வறுமை, பொறாமை, அடக்குமுறை போன்ற தீமைகள் நடக்கின்றன என்று கருதுகிறார்கள். அதையெல்லாம் சரிசெய்துவிட்டாலே போதும் என்று நினைப்போரும் உண்டு.

ஆகவே இங்கே கம்யூனிசம் வராது வளராது என்று வாதிடுகிறார்கள். முதலாளித்துவம் என்பதன் அடிப்படையே லாப வேட்டை, அதற்கான உழைப்புச் சுரண்டல், இயற்கை வளக் கொள்ளை ஆகியவைதான். அவரை விதைத்தால் அவரைதான் முளைக்கும். சுரண்டல் அமைப்பு நீடிக்கிற வரையில் ஏழை-பணக்காரர் முரண்பாடுகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் கூடவே இருக்கும்.

ஒரு வாதத்துக்காக, முதலாளித்துவ அமைப்பில் லாப வேட்டைச் சுரண்டலுக்கு முடிவு கட்டப்படுவதாக வைத்துக்கொள்வோம், அப்போது அது முதலாளித்துவ சமுதாயம் அல்ல, அதற்கு வேறு பெயர் சூட்ட வேண்டும் என்றுதான் பொருள். அதுதான் அடுத்த கட்டத்திற்கான சமூக உடைமை அமைப்பாகிய சோசலிசம். அதை உருவாக்குவதற்கும் அதை உருவாக விடாமல் தடுப்பதற்கும்தான் மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

அந்த மோதலின் விளைவாகத்தான், முதலாளித்துவம் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, சோசலிச அமைப்பின் சில நடைமுறைகளை மேலோட்டமாகத் தானும் செயல்படுத்த முன்வருகிறது. எட்டு மணி நேர உழைப்பு, மனித உரிமைச் சட்டங்கள், மக்களுக்கு சில சலுகைகள் என்று செயல்படுத்துகிறது. ஒரு நாட்டின் முதலாளித்துவ சமுதாய அமைப்பைச் சார்ந்த அரசாங்கம் தொழிலாளர் நலச் சட்டங்களைக் கொண்டுவருகிறது என்றால் அது கருணையால் அல்ல, தொழிலாளர்கள் கொந்தளித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

இப்படி பல்வேறு நடவடிக்கைகளையும் குறிப்பிடலாம். இதுவே கம்யூனிச இயக்கம் அந்த நாட்டில் வளர்ந்திருக்கிறதா இல்லையா என்பதற்கு ஒரு அறிகுறிதான்.

இந்தியாவில் கம்யூனிச இயக்கம் வளராதது ஏன் என்ற கேள்விக்கே இடமில்லை. பெரிய அளவுக்கு வளராதது ஏன், ஒரு தீர்மான சக்தியாக வளராதது ஏன், நாடு முழுவதும் சீராக வளராதது ஏன் என்று நம் கேள்விகளை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

கம்யூனிஸ்ட்டுகளின் கதைகளைக் கேட்கிற ஒவ்வொருவருக்கும், இவ்வளவு தியாகமும் வீரமும் மிகுந்த போராட்ட வரலாறு இருந்தும் ஏன் இங்கே இந்த இயக்கம் பெரியதொரு ஆற்றலாக அடியூன்றவில்லை என்ற வினா எழுகிறது. அரசியல் இயக்கம் என்றால் அதன் தலைவர்கள் ஊழல் கறைபடியாதவர்களாக இருக்க வேண்டும், தொண்டர்கள் தன்னலமற்றவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அந்தத் தகுதிகள் இருந்தும் கம்யூனிச இயக்கம் இங்கே பெரும் மாற்று சக்தியாகத் தழைத்தோங்கவில்லையே ஏன் என்ற புதிர் மனதைக் குடைகிறது.

இயக்கத்தின் வரலாறு, இந்தியாவின் சமுதாய அமைப்பு, அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் என்று பன்முகக் காரணங்கள் உள்ளன. எந்த ஒரு விளைவுக்கும் புறக்காரணங்கள், அகக்காரணங்கள் இரண்டும் இருக்கும்.
அந்தக் காரணங்களைத் தேடுவது, கேள்விகளுக்கு சரியான பதில் கிடைத்தது என்று மன நிறைவு அடைவதற்காக அல்ல. நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்வதற்காகத்தான். கேள்விகளுக்கு ஆயத்த பதில்கள் என்னிடம் இல்லை. இந்த விவாதத்தின் தூண்டுதலால் நானும் சரியான விடைகளைத் தேடுகிறேன்.

தேடலைத் தொடங்குவோம்.

Sunday, 13 June 2010

தமிழ் இனி மெல்லச்சாகும்?


தமிழ் இனி மெல்லச் சாகும் என்று பாரதி உரைத்தது உண்மைதானா? இப்படியொரு கேள்வியை முன்பு குமுதம் பத்திரிகையின் அரசு பதில்கள் பகுதிக்கு ஒரு வாசகர் அனுப்பியிருந்தார். அதற்கு குமுதத்தின் அன்றைய ஆசிரியர் அண்ணாமலை அளித்திருந்த பதில்: மென்மையாக அச்சிடும் ஆப்செட் போன்ற எந்திரங்களின் வருகையால் தமிழ் இனி மெல்ல அச்சாகும்.

சுவைக்கத்தக்கது இந்தச் சொல்நயம். கணினித் தட்டச்சு, ஒளிக்கதிர் அச்சு என்றெல்லாம் வந்துள்ள இன்றைய சூழலில் இந்தச் சொல்நயம் பொருத்தமாகவும் இருக்கிறது.

அண்மையில் வெளியான ஒரு செய்தி: ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) உலகில் வேகமாக அழிந்துவரும் மொழிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. தற்போதைய நிலைமை நீடிக்குமானால் அடுத்த ஐம்பதாண்டுகளில் தமிழும் இப்பட்டியலில் இடம்பெறும் என்றும் யுனெஸ்கோ கூறியுள்ளது.
இந்தச் செய்தி ஏற்படுத்துகிற ஆழ்ந்த தாக்கத்தில் மேற்படி சொல்நயத்தைச் சுவைக்க முடியவில்லை. தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற ஓலம் உண்மைதானோ என்ற கவலை சூழ்கிறது.

தமிழ் மக்களின் ஆங்கில மோகம்; சந்துக்குச் சந்து ஆங்கிலப் பள்ளிகள் திறப்பு; ஊடகங்களின் அலட்சியம்; அரசாங்கத்தின் அக்கறையின்மை... என்றெல்லாம் காரணங்கள் கூறப்படுகின்றன. கவிதைக்கும் காதல் கற்பனைக்கும் ஏற்ற தமிழ் இன்றைய கணினிக்கும் நவீன தொழில் வளர்ச்சிக்கும் ஈடுகொடுப்பதாய் இல்லை என்று கூறுவாரும் உண்டு. மாறிய சூழல்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாத எந்தவொரு மொழியும் அழிந்து வரும் அரிய மொழிகள் பட்டியலில் இடம்பெறுவது தவிர்க்க இயலாதது என்ற ஒரு வாதமும் வைக்கப்படுகிறது.

தமிழ் குறித்து உணர்ச்சிவசப்பட வைக்கும் எண்ணங்கள் ஊட்டப்பட்ட அளவுக்கு, அதன் வளர்ச்சிக்கான சிந்தனைகள் வளர்க்கப்படவில்லை, செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, என்பன போன்ற வீர முழக்கங்கள் எந்த அளவுக்கு மொழியின் மேம்பாட்டிற்கு வழி வகுத்தன என்ற கேள்வியை இப்போதாவது எழுப்ப வேண்டியிருக்கிறது. இப்படியெல்லாம் முழங்காமலே தமிழின் பாதையைச் செப்பனிட முன்வந்தவர்கள் மொழிப்பற்றில்லாதவர்கள் என்று முத்திரையிடப்பட்டார்கள். இன்று கணினி மெல்லியத்திலும் இணையத்தளத்திலும் தமிழை உலாவரச் செய்தவர்களில் பலர் இப்படியான முழக்கங்களை எழுப்பாதவர்கள்தான்.

மக்களிடையே ஆங்கில மோகம் வளர்ந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லைதான். பல இனங்களைச் சேர்ந்த மக்களும் ஒரு இடத்தில் கூடியிருப்பார்களானால் எல்லோரும் இயல்பாக அவரவர் தாய்மொழியில்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அங்கே ஆங்கிலம் தாய்மொழியல்லாத ஒரு இனத்தைச் சேர்ந்த இருவர் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருப்பார்களானால் அவர்கள் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். மற்றவர்களுக்குத் தெரியக்கூடாத ரகசியத்தை அவ்வாறு வேறு மொழியில் பேசிக்கொள்கிறார்கள் என்றாலாவது புரிந்துகொள்ளலாம். ஆனால் காலையில் என்ன சாப்பிட்டாய் என்பது போன்ற பேச்சுக்களைக் கூட ஆங்கிலத்தில் நிகழ்த்துகிறார்கள்!

இந்த மோகத்தை முதலீடாக்கித்தான் சிகரெட் கடைகள் போல் ஆங்கில வழிப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வீட்டிலும் வீதியிலும் பேசுகிற மொழி ஒன்றாக இருக்க இப்படி மூளையில் திணிக்கப்படுகிற இன்னொரு மொழியால் உண்மையான முன்னேற்றம் காண முடியுமா? தமிழர்கள் எத்தனை பேர் நவீன அடிமைகளாக எத்தனை வெளிநாட்டு நிறுவனங்களில் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் அலுவலர்களாகவும் வேலைசெய்கிறார்கள் என்பது தமிழ்ச்சமுதாயம் முன்னேறியதன் அடையாளமாகுமா?

அறிவியல் உண்மைகளைப் பயன்படுத்தி சாதனைகள் செய்கிற தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் அறிவியல் உண்மைகளைக் கண்டுபிடிக்கிற தமிழர்கள் இல்லை அல்லது மிகமிகக் குறைவாகவே இருக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் அவர்கள் அறிவியலைத் தாய்மொழியில் கற்கவில்லை, மொழிபெயர்ப்பின் மூலமாகவே கற்றார்கள் என்பதுதான். ஆங்கிலத்தில் ஒன்றைச் சொல்கிறபோது மூளை நேரடியாக அதை ஆங்கிலத்தில் யோசித்துச் சொல்வதில்லை, தமிழில் யோசித்துப் பிறகு மொழிபெயர்த்தே சொல்கிறோம். அதே போல் ஆங்கிலத்தில் ஒன்றைக் கேட்கிறபோது தமிழில் மொழிபெயர்த்தே புரிந்துகொள்கிறோம். எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக இந்த மொழிபெயர்ப்பை ஒருவரது மூளை செய்கிறது என்பது அவரவருக்குக் கிடைக்கிற பயிற்சியையும் வாய்ப்பையும் பொறுத்தது. இவ்வாறு மூளை இரட்டை வேலை செய்வது தேவையற்ற சுமை. அதனால்தான் தமிழர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகமாக இல்லை. இத்தகைய நிலைமை உள்ள எல்லா இன மக்களுக்கும் இது பொருந்தும். இவ்வாறு மூளைக்கு இரட்டை வேலை கொடுப்பது தமிழ் மக்கள் தாங்களாகவே ஏற்றுக்கொண்டதா அல்லது ஏற்றப்பட்டதா?

ஆங்கிலத்தில் படித்தால்தான் நல்ல வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தை ஏற்றியதில் அரசாங்கத்திற்குப் பங்கில்லையா? வேலைவாய்ப்புகளை உருவாக்காத தொழிற்கொள்கைக்கும் இதற்கும் தொடர்பில்லையா?
தமிழக அரசின் சட்டங்களும் ஆணைகளும் இப்போதும் ஆங்கிலத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன. பின்னர்தான் தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்றெல்லாம் மைக் தெறிக்கப் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் இந்திய மொழிகளில் ஒன்றாகிய இந்தி திணிக்கப்படுவதைத் தடுத்தார்கள். ஆனால் அங்கே தமிழ் ஆள்வதற்கு வழிசெய்யவில்லையே! ஆங்கிலத்தின் ஆதிக்கத்திற்குத்தானே ரத்தினக் கம்பளம் விரித்தார்கள்! இன்றோ எங்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் பாடங்களும், இந்தி வகுப்புகளும் அமோகமாக நடக்கின்றன.

இதில் இந்தியாவின் மைய ஆட்சியாளர்களது பங்கு குறைந்ததல்ல. சொல்லப்போனால் அதுதான் மையமானது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிற சட்டங்கள், தீர்மானங்கள் யாவும் முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதப்படுகின்றன. பின்னர்தான் இந்தியில் - இந்தியில் மட்டும் - மொழிபெயர்க்கப்படுகின்றன. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகிற மக்கள் பிரதிநிதிகள் ஆங்கிலம் அல்லது இந்தி தெரிந்திருந்தால் மட்டுமே விவாதங்களில் பங்கேற்க முடியும். இந்தி மாநிலங்கள் அல்லாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் பேச முன்னனுமதி பெற வேண்டும். அமைச்சர்களுக்கோ அந்த அனுமதியும் கிடையாது.
யாரும் அவரவர் மொழியில் பேசலாம், அதை மற்றவர்கள் அவரவர் மொழியில் கேட்கலாம் என்ற மொழிபெயர்ப்பு வசதியை நாடாளுமன்றத்தில் நிறுவுவது குறித்து மைய ஆட்சியாளர்களும் கவலைப்படவில்லை; மாநிலங்களில் மொழி உரிமை குறித்து நரம்பு தெரிக்கப் பேசி வந்தவர்களும் அலட்டிக்கொள்ளவில்லை. இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், நாடாளுமன்றத்தில் இவ்வாறு நொடிப்பொழுதிலேயே மொழிபெயர்க்கும் ஏற்பாட்டைச் செய்வது கடினமல்ல. வேடிக்கை என்னவென்றால், இந்த அடிப்படை மாற்றத்திற்கான கோரிக்கையை வலியுறுத்துகிறவர்கள், மொழிப்பற்று இல்லாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட மார்க்கியவாதிகள்தான்!

மைய அரசு மாநிலங்களுக்கு அந்தந்த மொழியிலேயே அறிக்கைகளையும் கடிதங்களையும் அனுப்ப வேண்டும்; மாநில அரசுகள் தத்தம் மொழியிலேயே மையத்திற்கு அறிக்கைகளையும் கடிதங்களையும் அனுப்ப வேண்டும். அந்தந்த மட்டத்தில் இவற்றை உடனுக்குடன் மொழிபெயர்த்துக்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதுவே தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை மைய அரசு சமமாக மதிக்கிறது என்பதற்கான உறுதிப்பாடாக இருக்க முடியும்.
இதையும் மார்க்சியவாதிகளன்றி வேறு யாரும் வலியுறுத்துவதில்லை. சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றின் உண்மைகள் மக்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதில் ஆள்வோரும், அதிகார வர்க்கமும், இவர்களை ஆட்டுவிக்கும் சக்திகளும் கவனமாக இருக்கிறார்கள் என்பதுதானே இதன் பொருள்?

நீதிமன்றத்தில் தமிழ், நிர்வாகத்தில் தமிழ், உயர் கல்வியில் தமிழ் என்ற கோரிக்கைகள் இதுவரை மைய அரசாலும் மாநில அரசாலும் குப்பைத் தொட்டிக்குத்தான் அனுப்பப்பட்டு வருகின்றன. மாநில அரசைப் பொறுத்தவரை வர்த்தக நிறுவனங்கள் பெயர்ப் பலகைகளைத் தமிழில் அமைக்க வேண்டும், அலுவலர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்பன போன்ற மேம்போக்கான ஆணைகளை அவ்வப்போது வெளியிடுவதோடு சரி. மேற்கூறிய அடிப்படை நடவடிக்கைகளுக்குத் தயாராக இல்லை.

இப்படியாகத்தான், தமிழிலேயே பயின்றால் உள்ளூரிலேயே முடங்கிவிடவேண்டியிருக்கும் என்ற அச்சம் மக்கள் மனங்களில் குடியேற்றப்பட்டது. அவையத்தில் தம் மக்கள் முந்தியிருக்கச் செய்ய வேண்டும் என்ற நியாயமான ஆசை உள்ள பெற்றோர், அவரவர் பொருளாதார வசதிக்குத் தக்கபடி ஆங்கில வழிப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துக் குழந்தைகளை அனுப்புகிறார்கள். ஆம், இந்த ஆங்கில மோகம் என்பதே கூட வலுக்கட்டாயமாக ரத்தக்குழாயில் ஏற்றப்பட்ட போதை மருந்து போன்றதுதான்.

தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற அச்சத்திற்கு இதையெல்லாம் தாண்டிய வேறொரு காரணம் இருக்கிறது. அதுதான் இன்றைய உலகமய சந்தைப் பொருளாதாரம். சமூக அக்கறையோ, உரிமைகள் குறித்த விழிப்போ இல்லாத நவீன அடிமைகள்தான் தேவை என்கிறது இந்தச் சந்தை. அதற்கேற்ப இந்திய அரசு மண்டியிட்டு, நாட்டின் தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்கிறது. நிதிச் சட்டங்களை வளைத்துக்கொடுக்கிறது. அணு மின்சார உற்பத்திக்கான உடன்பாடுகளில், விபத்து ஏற்படுமானால் அதற்கான இழப்பீடு பொறுப்புகளிலிருந்து அமெரிக்க நிறுவனங்களை விடுவிக்கும் விதிகளுக்கு உடன்படுகிறது. இதன் இன்னொரு பகுதியாகத்தான் ஆங்கில ஆதிக்கத்திற்குக் கோட்டைக் கதவுகள் திறந்துவிடப்படுகின்றன.

எனது அன்றாட ரயில் பயணத்தில் ஐ.டி. செக்டார் எனப்படும் தகவல்தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்கள் பலரையும் காண்கிறேன். மடிக்கணினிகளை விரித்து வைத்துக்கொண்டு அவர்கள் உரையாடுவதைக் கவனிக்கிறேன். அந்தப் பேச்சில் ஜி.பி., பைட், மெகாபைட், ரெசல்யூசன், டிஜிட்டல்... என்ற அவர்களது தொழில்சார்ந்த சொற்களைத் தவிர வேறு எதையும் கேட்க முடிவதில்லை. ஒப்பீட்டளவில் உயர்ந்த ஊதியம் பெறுகிற அவர்கள் நாட்டின் அரசியல், சமூக நிலைமைகள் குறித்தெல்லாம் விவாதிப்பதையோ விமர்சிப்பதையோ கேட்க முடியவில்லை. சமுதாயத்தை விடுங்கள், இளைஞர்களுக்கே உரிய பாலின ஈர்ப்பு (அதாவது அவர்கள் சைட் அடித்த விவகாரங்கள்) சார்ந்த தகவல்களைக் கூட பரிமாறிக்கொள்வதில்லை! இப்படி வாழ்வியல் இயல்புகளிலிருந்தே துண்டிக்கப்பட்டுள்ள இவர்கள் தங்களது நிறுவனத்தில் நடக்கிற உழைப்புச் சுரண்டல் பற்றியோ, தொழிற்சங்க உரிமைகள் பற்றியோ பேசுவார்கள் என்று கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஒரு மெல்லிய வல்லுநர்களை வன்மையாய் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது உலகமயச் சுரண்டல்.

அரசியல் அதிகாரத்துடனோ, ராணுவ பலத்துடனோ அல்லாமல் இவ்வாறு அடிமைப்படுத்துவதற்கான நிதி முதலீடு, தொழில்நுட்பங்கள், எந்திரங்கள், வர்த்தக உடன்பாடுகள் போன்ற கருவிகளில் ஒன்றுதான் ஆங்கிலமும். அதுவும், முன்பு உலகத்தை அடக்கியாண்ட பிரிட்டிஷ் ஆங்கிலம் அல்ல; இன்று உலகத்தை ஆளாமலே அடக்க முயல்கிற அமெரிக்க ஆங்கிலம். இந்தியாவைப் பொறுத்தவரையில் இதன் தனித்தன்மையான சாதியப் படிநிலை ஏற்பாடு கூட நவீன உழைப்புச் சுரண்டலுக்கும், நவீன மூளைச்சலவைக்கும் உதவியாக இருக்கிறது. ஆகவேதான் சமூக நீதியை நோக்கிச் செல்வதற்கான இட ஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை பிரம்மனின் தலையில் இருந்து பிறந்த வர்ணத்தவர் அல்லாத மற்ற மூன்று வர்ணத்தவர்களும் கூட எதிர்க்கிறார்கள். ஏன், வர்ண அடுக்கிற்குள்ளேயே சேர்க்கப்படாமல் வெளியே நிறுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளின் படித்த இளைஞர்களிடையே கூட, பள்ளிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்தினால்தான் சாதியை ஒழிக்க முடியும் என்பது போன்ற நுனிப்புல் சிந்தனைகள் பரவியுள்ளன. இப்படிப்பட்ட உலக - உள்நாட்டு நிலைமைகளிலிருந்து மொழி என்பதைப் பிரித்துக் கையாள முடியாது. யுனெஸ்கோ அமைப்பின் அறிக்கையில், தற்போதைய நிலைமைகள் நீடிக்குமானால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் உலகில் அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம்பெற்றுவிடும் என்ற குறிப்பை, இந்த நிலைமைகளோடு இணைத்தே பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழ் இனி மெல்லச்சாகும் ஒரு பேதை உரைத்ததாக பாரதி பாடினான். உண்மையிலேயே அது பேதைமையான புலம்பலாகவே போய்விட வேண்டும், அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? உலக - உள்நாட்டுச் சுரண்டல் எதிர்ப்பு, சாதிய ஒழிப்பு போன்ற போராட்டங்களோடு இணைந்ததே மொழிப் பாதுகாப்புக்கான போராட்டமும். அடக்குமுறைகளுக்கும் துரோகங்களுக்கும் எதிராக ஆங்காங்கே ஒலிக்கும் குமுறல் ஒலிகள் இந்தப் போராட்டங்கள் பற்றிய நம்பிக்கையை விதைக்கின்றன. வர்க்கப் பிரச்சனை வேறு, வர்ணப் பிரச்சனை வேறு என்று பிரித்துவைத்து, ஒருங்கிணைந்த இயக்கத்தைத் தடம் மாற்ற முயல்வோர் குறித்த எச்சரிக்கையோடு மக்களை அணிதிரட்டினால் போராட்டம் வெற்றிபெறும். அந்த வெற்றியின் பலன்களில் ஒன்றாக தமிழ் இனி மெல்ல அச்சாகும் என்பது மட்டுமே நடப்பாகும்.

Friday, 4 June 2010

கம்யூனிசம் என்றால் 3


கம்யூனிசம் ஈவிரக்கமற்ற ஒரு கொடுங்கோண்மை என்று நம்பவைக்க முயல்வோர் தங்களது வாதத்துக்கு ஆதரவாக மேற்கோள் காட்டுவது தியானென்மென் சதுக்கத்தில் நடந்த நிகழ்வு. கம்யூனிச ஆதரவாளர்களுக்கும் கூட சற்று சங்கடத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவது அந்த நிகழ்வு. சைனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள அந்தப் பெரிய திடலில் 1989-ம் ஆண்டு நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல் நிகழ்வு அது. தாக்கியவர்கள் அந்நாட்டு ராணுவமாகிய மக்கள் விடுதலைப் படையினர். தாக்கப்பட்டவர்கள் மாணவர்கள்.

ஊடகங்கள் அன்று அந்த நிகழ்வை எப்படி சித்தரித்தன? இன்றளவும் அதை எப்படி சித்தரிக்கின்றன?

சைனாவின் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டன. எங்கும் ஊழல் தாண்டவமாடியது. இதனால் மாணவர்கள் ஆவேசமடைந்தார்கள். அவர்கள் தியானென்மென் மைதானத்தில் திரண்டு, ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். போராட்டம் தொடங்கிய சில நாட்கள் கழித்து, அவர்கள் மீது சைனா அரசு ராணுவத்தை ஏவி, ஈவிரக்கமில்லாமல் அடித்து நொறுக்கியது. போராட்டத்தை ஒடுக்கியது... கம்யூனிச நாட்டில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமிருக்காது, ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு அனுமதியிருக்காது என்பதற்கு தியானென்மென் தாக்குதல் ஒரு எடுத்துக்காட்டு என்றுதான் ஆகப்பெரும்பாலான ஊடகங்கள் சொல்லிவருகின்றன. இன்று சைனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றங்களைப் பாராட்டுகிறபோது கூட, ஆனாலும் தியானென்மென் சதுக்கத்தை மறந்துவிடுவதற்கில்லை, என்று ஒரு இறுதிக்குறிப்பு சேர்க்க மறப்பதில்லை.

மாணவர்கள் தாக்கப்பட்டது உண்மைதான். சைனா அரசும் அதை மறுத்ததில்லை. ஆனால் என்ன நடந்தது? எதனால் அப்படியொரு சூழல் உருவானது? அதை மட்டும் இவர்கள் திட்டமிட்டே மறைத்துவிடுவார்கள். அல்லது ஒரு பக்கத்து உண்மையை மட்டும் சொல்லி மறுபக்கத்தை இருட்டடிப்புச் செய்துவிடுவார்கள்.

சைனாவும் ஒரு கம்யூனிச நாடு அல்ல; கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் உள்ள நாடுதான், சோசலிசத்தை நோக்கி அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிற நாடுதான். அதிலும், முன்னுதாரணமாக உருவாகி வந்த சோவியத் யூனியனும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த சோசலிச அரசுகளும் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சரியான நடைமுறைகளுக்காக மிக கவனமாக அடியெடுத்துவைத்துக்கொண்டிருக்கிற நாடு சைனா. தற்போது அந்நாட்டு கம்யூனிட் கட்சி அரசு கடைப்பிடிக்கும் வழிமுறைகள் சரிதானா, அது சோசலிச அமைப்பைக் கட்டுவதற்கு உதவுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் வரலாறுதான் பதில்சொல்லவேண்டும்.

ஜனநாயக அரசுகள் ஆள்வதாகச் சொல்லப்படுகிற அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளில் உண்மையிலேயே ஜனநாயகம் இருக்கிறதா? அமெரிக்காவில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று தற்போது அந்நாட்டின் அதிபராக இருக்கும் பாரக் ஒபாமா, அடுத்த தேர்தல் வரும் வரையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் விவாதித்து ஏற்க மறுக்கிற ஒரு நடவடிக்கையை அவர் தனது தனியதிகாரத்தால் செயல்படுத்தலாம். தேர்தலுக்கு முன் இஸ்ரேல் அரசின் ரவுடித்தனத்தைக் கட்டுப்படுத்தப்போவதாகக் கூறி ஆதரவு திரட்டிய அவர் இப்போது அமெரிக்க அரசின் பாரம்பரியப்படி இஸ்ரேலின் அத்துமீறல்களைக் கண்டிப்பதற்கு முன்வரவில்லை என்பதை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம். மக்களின் வரிப்பணத்தை எடுத்து, அங்கே நிர்வாகக் கோளாறுகளால் நொடித்துப்போன தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்குகிறாரே, அதைச் சொல்லலாம். இவருக்கு முன்பிருந்த புஷ், தன்னிச்சையாக இராக் நாட்டிற்குள் ராணுவத்தை அனுப்பி அந்நாட்டின் தலைவர் சதாம் உசேனை சிறைப்பிடித்து, தூக்கில்போட வைத்தாரே... அதையும் சொல்லலாம். இவர்களுடைய இப்படிப்பட்ட அத்துமீறல்கள்தானே உலகெங்கும் பரவிச் செயல்படுகிற பயங்கரவாதிகளுக்கு ஆகாரமாக அமைகின்றன?

இந்தியாவில் மன்மோகன் சிங் தனது ஆட்சிக்காலத்தில் யாருடனும் உடன்பாடுகள் செய்துகொள்ளலாம்; அதற்கெல்லாம் அவர் மக்களுக்கு பதில் சொல்லவேண்டியதில்லை. நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலே பல நடவடிக்கைகளை இந்திய பிரதமர்கள் தன்னிச்சையாக எடுக்க முடியும். பிரதமர் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரையில், மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க செயல்படவில்லையானால், அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களால் அவர்களைப் பதவியிலிருந்து இறக்கிவிட முடியாது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எசமானர்கள் என்று கவர்ச்சிகரமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஜனநாயக நாடுகளில் மக்களின் அதிகாரம் இவ்வளவுதான்.

சோசலிச நாடுகளில் இந்த நிலைமை இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் சரியாகச் செயல்படவில்லை என்று மக்கள் கருதுவார்களானால் அந்த உறுப்பினரை வீட்டுக்கு அனுப்புவதற்காக என்றே தேர்தல் நடத்தப்படும். இன்றைய சூழலில் இதுவே பெருமளவுக்கு உண்மையான மக்கள் அதிகாரமாக இருக்கிறது. இதிலேயும் குறைபாடுகள் இருக்கலாம்; ஆட்சியில் இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சி அது பற்றி தனது மாநாடுகளில் விவாதிக்கிறது; நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது; உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன; புதிய அணுகுமுறைகள் வகுக்கப்படுகின்றன.

முதலாளித்துவ நாடுகளில் நடக்கும் தேர்தல்களில், சுரண்டல் சக்திகளுக்கு மிக விசுவாசமாக இருக்கப்போவது யார், அதை மக்கள் உணராமல் மிக புத்திசாலித்தனத்துடன் காய் நகர்த்தப்போவது யார் என்பதுதான் முதலாளித்துவக் கட்சிகளுக்கு இடையே நடக்கும் மோதலாக இருக்கிறது. முதலாளித்துவ அமைப்பில் யாரும் என்ன குற்றமும் செய்யலாம் - ஆனால் மாட்டிக்கொள்ளக்கூடாது. அப்படி மாட்டிக்கொண்டால் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புக்கே இடைஞ்சலாகிவிடும். ஆகவே, தப்பு செய்வதற்குத் தண்டனை கிடையாது, மாட்டிக்கொள்வதற்கே தண்டனை.

சோசலிச நாடுகளில் மக்கள் பிரதிநிதி தவறு செய்யமாலிருப்பதை உறுதிப்படுத்தவும், அப்படித் தவறு செய்தால் வெளியேற்றவும் சட்டங்கள் உள்ளன; அவை செயல்படுத்தப்படுகின்றன. இப்படியொரு அதிகபட்ச ஜனநாயகம் சீனாவில் இருப்பதை மேற்கத்திய சந்தை ஆதிக்கவாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அது அவர்களது தங்குதடையற்ற சுரண்டல்களுக்கும், சூறையாடல்களுக்கும், பண்பாட்டு ஆக்கிரமிப்புகளுக்கும் முட்டுக்கட்டை. ஆகவே, எப்படியாவது இதை ஒழித்துக்கட்ட எல்லாவிதமான வழிமுறைகளையும் கையாள்கிறார்கள்.

சீனாவில் அவர்கள் கையாண்ட வழிமுறை, மாணவர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது. மேற்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் - குறிப்பாக அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பயின்ற மாணவர்களிடையே, அந்த மேற்கத்திய வாழ்க்கை முறைகளின் மீது ஏற்பட்ட ஒரு ஈர்ப்பையும், சீனாவின் நிர்வாக முறைகளில் உள்ள குறைபாடுகளின் மீது ஏற்பட்ட மனக்குறையையும் பயன்படுத்தி கொம்பு சீவிவிடப்பட்டது. சீன கல்வி அமைப்புகளில் மாணவர்களின் மனக்குறைக்குக் காரணமான குறைபாடுகள் இருந்தன என்றாலும், அதை எதிர்த்து மாணவர்கள் அவ்வளவு பெருந்திரளாகக் குவிந்ததன் பின்னணியில் மேலே கூறிய கொம்பு சீவல்கள்தான் மிகுதியாக இருந்தன. மேற்கத்திய ஊடகங்கள் சீனாவில் மாணவர்கள் இப்படியொரு போராட்டத்தில் குதிக்கப்போவதை முன்கூட்டியே அறிந்து தயாராக இருந்தன என்பதிலிருந்தே இந்தக் கொம்பு சீவல் பின்னணியைப் புரிந்துகொள்ளலாம்.

கொம்பு சீவிவிட்டது யார்? வேறு யார் - நவீன முறையில் உலகை ஆக்கிரமிக்கத் துடிக்கும் அமெரிக்க அரசுதான். வெளிநாடுகளில் இப்படிப்பட்ட நாசவேலைகளைச் செய்வதற்கென்றே இருக்கும் சிஐஏ உளவு அமைப்புதான்.

மாணவர்களின் குறைகளைக் கேட்கவும், உரிய மாற்று ஏற்பாடுகளுக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி அரசு தயாராகவே இருந்தது. அழைப்பு விடுத்தது. ஆனால், மாணவர்களின் பெயரால் கிளப்பிவிடப்பட்ட போராட்டத்தின் இலக்கு சீன அரசாங்கத்தையே கவிழ்ப்பதாக இருந்தது. அதன் மூலம் உலகின் மற்ற நாடுகளில் இருப்பது போன்ற சுரண்டல் ஆதரவு முதலாளித்துவ அரசு அமைப்பை நிறுவுவதற்குக் குறிவைக்கப்பட்டது. திட்டமிட்டே வன்முறை தூண்டப்பட்டது. உணர்ச்சிவசப்பட்ட மாணவர்கள், முன்பின் யோசிக்க முடியாதவர்களாக களத்தில் இறக்கிவிடப்பட்ட நிலையில் வன்முறை என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துச் சுழற்றினார்கள். அரசுக் கட்டடங்களைத்தகர்ப்பது, ராணுவத்தினர் உள்ளிட்ட அரசு ஊழியர்களைக் கொலை செய்வது என்றெல்லாம் அந்த வன்முறை ஆட்டம் பரவியது. முன்பு மாவோ தலைமையில், ஒட்டுமொத்த சமுதாயத்தை முற்போக்கான திசையில் கொண்டுசெல்வதற்காகவும், அதிகபட்ச சமத்துவ நடைமுறைகளை நிறுவுவதற்காகவும் நடந்த புரட்சி இயக்கத்தில் வன்முறைகள் கையாளப்பட்டன. அதுவும், முளைவிட்டுக்கொண்டிருந்த சமத்துவ சமுதாய அமைப்பையே சீர்குலைப்பதற்காக அந்த மாணவர்களின் கைகளில் ஒரு வன்முறை ஆயுதம் தரப்பட்டதும் ஒன்றல்ல.

ஆகவேதான், அது வெறும் மாணவர் போராட்டமல்ல, பெரும் அரசியல் சூழ்ச்சியின் ஒரு அத்தியாயம் என்பதால்தான், சீன அரசு வேறு வழியின்றி அதனைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. வெளிநாட்டு உதவியோடு ஆட்சியமைப்பையே கைப்பற்றுவதற்கு எந்த நாட்டில் இப்படிப்பட்ட சூழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டாலும் அந்த நாட்டு அரசு இதே போன்ற நடவடிக்கையைத்தான் எடுக்கும்.

மாணவர்கள் தாக்கப்பட்டது வருத்தத்துக்கு உரியதுதான். ஆனால் அப்படியொரு மோதலுக்கு அவர்களது இளம் வயதுக்கே உரிய துடிப்பைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் அல்லவா இதற்குப் பொறுப்பு? மாணவர்கள் கலகம் வெற்றியில் முடிந்தால் சீன அரசைத் தனது கையில் போட்டுக்கொள்ளலாம், போராட்டம் அடக்கப்பட்டால் அதற்கான பழியை சீன அரசின் மீது சுமத்தலாம் என்று விளையாடிப்பார்த்தவர்கள் அல்லவா இதற்குப் பொறுப்பு? கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உள்ள சீன அரசு, அன்றைய சூழல் உருவானதற்குக் காரணமான சில பின்னணிகளை ஆராய்ந்து, பல்வேறு மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டது. உலகம் முழுவதும் ஜனநாயகக் காவலர்கள் என்ற புனைப்பெயரில் இயங்கும் கம்யூனிசப் பகைவர்களும், அவர்களது எதிரொலிகளான கார்ப்பரேட் ஊடகங்கள் இதைச் சொல்வதில்லை.

இந்தியாவில் ஏன் கம்யூனிஸ்ட் இயக்கம் வளரவில்லை? அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.