(‘அந்திமழை’ கட்டுரை)
வரலாற்றில் தேர்தல் ஒரு முக்கிய அத்தியாயம்தான் என்றாலும் தேர்தல் மட்டுமே வரலாறாகிவிடாது. கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரையில் அடிப்படையான சமுதாய மாற்றத்திற்கான புரட்சிப் பயணத்தில் தேர்தல்கள் ஒரு இடைக்கட்டப் பாதை மட்டுமே. அந்தப் புரிதல் இருப்பதால்தான் இந்தியாவின் 16வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், ஏற்பதற்குக் கடினமான பல முடிவுகள் வந்துள்ள போதிலும், மற்ற கட்சிகளில் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகல் கடிதங்கள் கொடுக்கப்படுவது, அக்கடிதங்கள் நிராகரிக்கப்படுவது போன்ற காட்சிகள் நடந்தேறிக்கொண்டிருக்கிறபோது, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏற்கெனவே நிகழ்ச்சி நிரலில் இருந்த அடுத்தடுத்த மாநாடுகள், பரப்புரை இயக்கங்கள், போராட்டங்கள் குறித்து இயல்பாகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இதன் பொருள் தேர்தல் முடிவுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்பதல்ல. மக்களவைத் தேர்தலில் அவர்கள் மூன்று முக்கியமான கோரிக்கைகளை மக்களின் முன்வைத்தார்கள். ஒன்று - காங்கிரஸ் அரசை அகற்றுவது, இரண்டு - பாஜக ஆட்சிக்கு வராமல் தடுப்பது, மூன்று - இரண்டும் அல்லாத ஒரு மாற்று அரசை ஏற்படுத்துவது.
வாக்களித்தவர்களில் பெரும்பான்மையினர் முதல் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, கிட்டத்தட்ட நாடு முழுதும் ஒரே மாதிரியாக காங்கிரசை நிராகரித்துள்ளனர். ஆனால், பாஜக-வைத் தடுப்பதற்கு மாறாக, தனிப்பெரும்பான்மையோடு அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு வாய்ப்பளித்துள்ளனர்.
மூன்றாவது கோரிக்கையைப் பொறுத்தவரையில் நம்பகமான ஒரு மாற்று சக்தி பற்றிய நம்பிக்கை மக்களுக்குக் ஏற்படவில்லை என்பது தெரிகிறது. இதை, அப்படியொரு மாற்று அணி உருவாக வேண்டும் என முயற்சி செய்த இடதுசாரிகளின் தோல்வியாக மட்டும் சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது. அந்த மாற்று பற்றிய நம்பிக்கை மலரவிடாமல் தடுத்த, கொள்கைத் தெளிவற்ற சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், உள்நோக்கத்துடன் இடதுசாரிகளுடனான உறவை முறித்துக்கொண்ட அஇஅதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் அல்லவா விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும்?
குளத்தில் கல்லைப்போட்டது போல் செயற்கையாகக் கிளப்பிவிடப்பட்ட அலையில் இடதுசாரி கட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை இரு சாரார் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற “கார்ப்பரேட்” சக்திகள். பங்குச் சந்தை சூதாட்டப்புள்ளிகள் உச்சத்திற்கு ஏறியது என்பது அந்தக் கொண்டாட்டத்தின் வெளிப்பாடுதான். மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்ற நேரங்களிலும் கார்ப்பரேட் உலகத்தினர் இப்படி பங்குச் சந்தை வாண வேடிக்கைகள் மூலமாகத்தான் வரவேற்றார்கள். அவர்கள் புகுந்து விளையாடுவதற்கான களத்தை உருவாக்கித் தருவது என்ற தனது அவதார நோக்கத்தை மன்மோகன் சிங் அரசு நிறைவேற்றிவிட்டது.
இனி, அதே பொருளாதாரக் கொள்கைகளை அப்படியே நகலெடுத்துத் தொடரப்போகிற, கூட்டணி நிர்ப்பந்தங்கள் இல்லாமல் கறாராகச் செயல்டுவார் என்ற வாய்ப்புள்ள நரேந்திர மோடி அரசு தனக்கான அவதார நோக்கத்தை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. அதாவது, கார்ப்பரேட் கொள்ளைகளுக்கான அதே பொருளாதாரக் கொள்கைகள் தொடர்கிறபோது அதே விலைவாசி, வேலையின்மை, வாழ்க்கை நெருக்கடி உள்ளிட்ட சுமைகளும் மக்கள் மீது தொடர்ந்து ஏற்றப்படும். அப்போது மக்களுக்கு ஏற்படக்கூடிய ஏமாற்றத்தையும் ஆவேசத்தையும் திசைதிருப்புவதே மோடிக்கான அவதார நோக்கம். குஜராத்தை அதற்கான உரைகல்லாக்கிக் காட்டியதால் ஆர்எஸ்எஸ் ஆசிர்வாதம் பெற்றவர் அவர்.
முன்னெப்போதையும் விட இப்போது கம்யூனிஸ்ட்டுகளின் பொறுப்பும் தேவையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஒரு பக்கம் அரசாங்க ஆதரவோடு இறுகும் நவீன சுரண்டல்களுக்கு எதிரான போராட்டம். இன்னொரு பக்கம் மதவாதம் உசுப்பிவிடப்பட்டு மக்கள் கூறுபடக்கூடும், அப்பட்டமான ஒரு வலதுசாரி ஆட்சியின் பிடியில் மதச்சார்பின்மை, சமூகநீதி உள்ளிட்ட மாண்புகளும் நியாயங்களும் நொறுக்கப்படக்கூடும் என்ற நிலைமைக்கு எதிரான போராட்டம். இந்த முழக்கங்களை முன்வைத்த பல கட்சிகள் இன்று தனிமனித ஆராதனை, தனிக்குடும்ப ஆளுமை, ஊறித்திளைத்த ஊழல் என்றெல்லாம் தடம் மாறிவிட்டன. ஆகவே, வரலாறு கம்யூனிஸ்ட்டுகளைத்தான் பெரிதும் எதிர்பார்க்கிறது.
கம்யூனிஸ்ட்டுகளுக்கு இந்தத் தேர்தலில் 12 இடங்கள்தான் கிடைத்திருக்கின்றன என்பது கவலைக்குரியதுதான் என்றாலும் முடங்கிப்போவதற்கானதல்ல - அது தற்போதைய தனிப் பெரும்பான்மை சார்ந்த தேர்தல் முறையின் குறைபாட்டோடு தொடர்புடையது. கம்யூனிஸ்ட்டுகள் முடங்கிப்போக மறுக்கிறவர்கள். இன்று தொழிலாளர்களும் விவசாயிகளும் அனுபவிக்கிற பல உரிமைகளை கம்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் கற்பனை செய்துபார்க்க முடியாது. பெண்ணுரிமை, தீண்டாமை ஒழிப்பு, தகவல் உரிமை, கல்வி உரிமை, குடும்ப வன்முறை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு களங்களில் ஓரளவுக்கேனும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு இல்லாமல் வந்துவிடவில்லை.
அத்தகைய முன்னேற்றங்கள் முடங்கிவிடாமல் பாதுகாக்கிற, மேலும் மேலும் அவற்றை முழுமைப்படுத்துகிற அடுத்தகட்ட போராட்டங்கள் காத்திருக்கின்றன. கம்யூனிஸ்ட்டுகளின் உயிர்த்துடிப்பே போராட்டங்கள்தானே!
(‘அந்திமழை’ ஜூன் 2014 இதழில் வந்துள்ள எனது கட்டுரை.)