சசிகுமார்
(விருதுநகரில் செப்.16 முதல் 18 வரை நடைபெற்ற தமுஎகச 12வது மாநில மாநாட்டுக் கருத்தரங்கில் ஆசியா ஊடகவியல் கல்லூரி இயக்குநர் சசிகுமார் ஊடக அரசியலைப் புரிந்துகொள்வது குறித்து நிகழ்த்திய உரை இது. தமிழில்: அ. குமரேசன்)
நாட்டிற்கு உள்ளேயும் நாடு கடந்தும் ஊடகங்களின் நிலை குறித்த ஒரு புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது. இந்தியாவில் ஊடகச் சுதந்திரம், நாட்டின் சுதந்திரப்போராட்ட வெற்றியோடு இணைந்தே நிலைநாட்டப்பட்டது. விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற தலைவர்களில் பெரும்பாலோர் வழக்கறிஞர்களாகவோ, பத்திரிகையாளர்களாகவோ, இரண்டுமேயாகவோ இருந்தவர்கள்தான். காந்தி தனித்திறமை வாய்ந்த ஒரு பத்திரிகையாளர். அவர் ஒரே நேரத்தில் இண்டியன் ஒப்பீனியன், ஹரிஜன், நவஜீவன் என பல பத்திரிகைகளுக்கு அவர் ஆசிரியராகப் பணியாற்றியவர் அவர். அவரது சத்தியாக்கிரகம் என்ற கோட்பாடு அவருக்குத் திடுதிப்பென ஒரு நாள் உதித்துவிடவில்லை. பத்திரிகையாளராகத் தொடர்ந்து எழுதிவந்த பின்னணியில், படிப்படியாகவே அந்தக் கோட்பாடு உருவானது என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஒரு வலிமை வாய்ந்த ஆயுதமாகச் சுழன்ற அந்தக் கோட்பாடு நாட்டின் சுதந்திரத்தை ஈட்டித்தந்தது.
இவ்வாறு அரும்பாடுபட்டு வென்றெடுத்த ஊடகச் சுதந்திரம் சுதந்திர இந்தியாவில் பல சோதனைகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வந்திருக்கிறது. பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் பெரும் தாக்குதல் என்றால் அவசரநிலை ஆட்சியைத்தான் சொல்ல வேண்டும். மத்திய அரசு, மாநிலம் இரண்டிலுமே ஆட்சி நிர்வாகமும், சட்டமியற்றும் மன்றமும் பத்திரிகைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் விதிகளைக் கொண்டுவர முயன்றதுண்டு. அப்போதெல்லாம் இந்திய மக்கள்தான் ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் நடத்திய போராட்டத்தில் தோளோடு தோள் நின்று ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாத்தார்கள். ஆம், இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் கடுமையான போராட்டங்களின் பலனாகவே வென்றெடுக்கப்பட்டது.
யாரிடமிருந்து சுதந்திரம்?
இன்று நடப்பதென்ன? ஊடகச் சுதந்திரத்திற்காகப் போராடுவதா அல்லது ஊடகங்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடுவதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஊடகங்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு என்பது இன்று தலைகீழாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம். ஜனநாயகத்தின் காவலர்களாக, மாற்றத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று சுரண்டலின் காவலர்களாக, லாப வேட்டையின் தூதுவர்களாக மாறிப்போயிருப்பதைப் பார்க்கிறோம். நிதி மூலதனச் சூழலில் ஊடகங்கள் அப்பட்டமாக, லாபத்தை அதிகரிக்கும் வர்த்தக எந்திரங்களாக மாறிவிட்டன.
ஊடகங்களின் பணி, குறிப்பாகச் செய்தி ஊடகங்களின் பணி தலைகீழாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். ஜனநாயகத்தின் காவலர்களாக, மாற்றத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று வெறும் விற்பனைச் சரக்கு உற்பத்திக் கூடங்களாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். நிதி மூலதன காலகட்டத்தில் ஊடகங்கள், அதிகபட்ச லாபம் மட்டுமே குறியாகக் கொண்ட வர்த்தக நிறுவனங்களாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். கார்ல் மார்க்ஸ் கூறியதைப் போல, உழைப்பு என்பது அந்நியப்படுத்தப்படுகிற, வளர்ச்சிப்போக்குகளில் உழைப்பாளிகளுக்குப் பங்கில்லாமல் போகிற விற்பனைச் சரக்காக ஊடகம் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் ஒரு பெரிய கேள்வி எழுகிறது: ஊடகங்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடுவதா வேண்டாமா?
இந்த நிலை ஏற்பட்டதன் பின்னணியில் திட்டவட்டமான சூழல்களும் நிகழ்ச்சிப் போக்குகளும் உள்ளன. தொழிற்புரட்சிக் காலகட்டத்தைக் கண்ட உலகம், தகவல்தொழில்நுட்பப் புரட்சிக் காலகட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. தொழிற்புரட்சியின் ஒரு முக்கிய வடிவமாக அமெரிக்காவின் டெட்ராயிட் நகரில் அமைந்த ஃபோர்டு கார் தொழிற்சாலையில் கொண்டுவரப்பட்ட தயாரிப்பு நடைமுறையைக் கூறுவார்கள். தொழிற்சாலையின் அசெம்பிளி லைன் எனப்படும் எந்திர வரிசைப் பிரிவுகளில், காரின் பாகங்கள் ஒவ்வொன்றாகப் பொருத்தப்பட்டு இறுதியில் முழு கார் வெளியே வரும். இதை அன்று சோவியத் யூனியனில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த ஸ்டாலின், சோசலிச தொழில் வளர்ச்சிக்கேற்ப திட்டமிட்ட உற்பத்தி முறை என்ற வடிவில் பின்பற்ற நடவடிக்கை எடுத்தார். இந்தியாவிலும் இந்த உற்பத்திமுறை கொண்டுவரப்பட்டது. முதலாளித்துவ சரக்கு உற்பத்தியைப் பொறுத்தவரையில், அசெம்பிளி லைன் எந்திர வரிசையில் இந்த இந்த வேலைகளுக்கு இந்த இந்தத் தொழிலாளர்கள் என்று பிரிக்கப்பட்டுவிடுகிறார்கள்; தொழிலாளிகள் உயிரும் உணர்வுமற்ற கருவிகளாக மாற்றப்படுகிறார்கள். தொழிலாளி இப்படி எந்திரத்தோடு எந்திரமாய், இறுதியில் என்ன பொருள் உருவாகிறது என்பதைக் கூட அறியாதவராய், மறையாணிகளை முடுக்கிக்கொண்டிருப்பதே வாழ்க்கையாய் வார்க்கப்படுவதை, உலகம் போற்றும் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் தமது புகழ்பெற்ற மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தில் தமக்கே உரிய நையாண்டியோடு சித்தரித்திருப்பார்.
தொழிற்புரட்சிக் காலகட்டத்தில், முதலாளித்துவ அமைப்பின் மிகச்சிறந்த அடையாளமாகக் கருதப்பட்டவரான ஹென்ரி ஃபோர்டு, எந்த ஒரு வாடிக்கையாளரும் தான் வாங்குகிற கார் கறுப்பு வண்ணத்தில் இருக்கிற வரையில் அதை தான் விரும்புகிற எந்த ஒரு வண்ணத்திற்கும் மாற்றிக்கொள்ள முடியும், என்று கூறியதாகச் சொல்லப்படுவதுண்டு. ஏனென்றால் அப்போது அவருடைய தொழிற்சாலையில் உருவான கார்கள் எல்லாமே கறுப்பு வண்ணத்தில் மட்டுமே இருந்தன. தொழிற்புரட்சிக் காலகட்டத்திலிருந்து தகவல் தொழில்நுட்பப் புரட்சிக் காலகட்டத்திற்கு வந்திருக்கிறோம். ஹென்ரி ஃபோர்டு அறிமுகப்படுத்திய ஒரே வகையான கார் உற்பத்தி முறையின் இடத்தை, இன்று உலகந்தழுவிய அளவில் ரூபர்ட் முர்டோச் நிறுவியுள்ள ஊடக பேராளுமை பிடித்திருப்பதைக் காண்கிறோம்.
இந்தியாவானாலும் சரி, உலகின் வேறு எந்த நாடானாலும் சரி, ஊடகம் ஒரே வகையான சரக்கை உற்பத்தி செய்யும் எந்திரமாக்கப்பட்டிருக்கிறது. செய்திகள், தகவல்கள் அனைத்தும் பொறுப்புணர்வற்ற பொழுபோக்குச் சரக்குகளாக்கப்படுகின்றன. அந்தச் சரக்கு உற்பத்தியின் நோக்கம், மாற்றங்களை ஏற்படுத்துவதல்ல, லாபத்தை அதிகரிப்பது மட்டுமே.
நிதி மூலதன காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கிற ஒரே மாற்றம், அன்றைக்கு ஃபோர்டியம் என்பதாக இருந்தது இன்றைக்கு முர்டோக்சியம் என மாறியிருப்பது மட்டும்தான். இது ஊடகம் குறித்த மதிப்பீட்டிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியா போன்ற நாடுகளில் அரசு அதிகாரத்தின் மூன்று தூண்களாக ஆட்சிமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் ஆகிய மூன்று கட்டமைப்புகளும் இருக்க, ஊடகம் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது. இவற்றில் முதல் மூன்று தூண்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவை. ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்திற்கு பதிலளித்தாக வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் மக்களைச் சந்தித்தாக வேண்டியர்கள். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் உச்சநீதிமன்ற நீதிபதியைக் குற்றவாளியாக அறிவிக்க முடியும். அண்மையில் கூட, கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவரை நாடாளுமன்ற மாநிலங்களவை குற்றவாளியாக அறிவித்தது; அவர் பதவி விலகியதால் மக்களவையின் விசாரணைக்குத் தேவையில்லாமல் போனது.
நான்காவது தூணின் மவுனம்
இந்த மூன்றையும் கேள்வி கேட்கக்கூடிய நான்காவது தூணாகிய சுதந்திர ஊடகம், எந்தவகையிலும் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கவில்லை என்பதுதான் வேடிக்கை! சட்டப்பூர்வமாக ஊடகம் பதிலளிக்கக்கடமைப்பட்டிருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஏனென்றால் அது சட்டப்பூர்வமானதாக இருக்குமானால், அதிகாரத்தின் மற்ற மூன்று கட்டமைப்புகள்தான் ஊடகத்தை விசாரணை செய்யும். ஆட்சியாளர்களுக்கு ஊடகம் கட்டுப்படுமானால் அங்கே ஊடகச்சுதந்திரம் பறிபோய்விடுகிறது எனக்கூறுவோம். நாடாளுமன்றம் கட்டுப்படுத்துமானால் அது ஊடகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்போம். நீதிமன்றம் கட்டுப்படுத்துமானால் அது நீதித்துறையின் தலையீடு என்று விமர்சிக்கப்படும்.
ஆனால், ஊடகம் தன் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டதாக இருக்க வேண்டாமா? அந்தப் பொறுப்பை ஊடகங்கள் தாங்களாகவே உருவாக்கிக்கொள்ள வேண்டாமா?
அந்த ஜனநாயகக் கடமையை மிகப் பெரும்பாலான ஊடகங்கள் தட்டிக்கழிக்கின்றன என்பதே என் குற்றச்சாட்டு. மக்கள் உரிமைகளின் காவலராய் இருப்பதற்கு மாறாக, முதலாளித்துவ சமுதாய அமைப்பில் ஆளும் வர்க்கத்தின் - சமுதாயத்தில் மிகச் சிறியதொரு பகுதியினரின் - நலன்களைப் பாதுகாக்கிற வேலையைத்தான் இந்த ஊடகங்கள் செய்கின்றன. நாட்டு மக்கள் மேலும் மேலும் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டவர்களாக இருப்பதை விட, அவர்களை வெறும் வணிகச் சரக்கு நுகர்வோராக மாற்றுவதற்குத்தான் ஊடகங்கள் உதவுகின்றன. வணிக ஏடுகளுக்கு நாம் வாசகர்களல்ல, தொலைக்காட்சிகளுக்கு நாம் பார்வையாளர்கள் அல்ல, வானொலிகளுக்கு நாம் நேயர்களல்ல. மாறாக, நாம் வெறும் வாடிக்கையாளர்கள்தான், நுகர்வோர்தான். அப்படித்தான் ஊடகங்கள் நம்மை நடத்துகின்றன. இப்படிப்பட்ட ஊடகங்களை ஜனநாயகக் காவலர்களாக உயர்த்திப் பிடிக்கத்தான் வேண்டுமா?
வரையறுக்காத சட்டம்
ஊடகங்களின் சட்டப்பூர்வ உரிமைகள் என்பவை விளக்கத்தின் அடிப்படையில் அமைந்தவையேயன்றி, சட்டப்படி வரையறுக்கப்பட்டவை அல்ல. இந்திய அரசமைப்பு சாசனத்தில் எங்கேயும் ஊடகங்களின் உரிமைகள் இவை என திட்டவட்டமாக சொல்லப்படவில்லை. அமெரிக்காவில் அப்படிப்பட்ட சட்டம் இருக்கிறது. அமெரிக்க அரசமைப்பு சாசனத்தில் நாடாளுமன்றம் ஒருபோதும் ஊடகங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் எதையும் நிறைவேற்றாது என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அரசமைப்பு சாசனத்தில் அவ்வாறு நேரடியாக இல்லை. அதன் அடிப்படை உரிமைகள் பிரிவில், 19 - 1 ஏ, ஜி ஆகிய உட்பிரிவுகளில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என கூறப்பட்டுள்ளது. அந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில்தான் ஊடகச் சுதந்திரம் விளக்கப்படுகிறது. இந்திய குடிமக்கள் எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடுவதற்கு, குறிப்பிட்ட கட்டுப்பாடுகளோடு சுதந்திரம் அளிக்கும் பிரிவுகளில் ஒன்றாகவே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் இருக்கிறது.
அரசமைப்பு சாசனத்தில் குறிப்பாக வரையறுக்கப்படாத ஒரு சுதந்திரத்தை ஊடகங்கள் அனுபவித்துக் கொண்டிருப்பது எப்படி? நாம் வழங்கிய - இந்திய மக்கள் வழங்கிய - சுதந்திரம் அது. ஊடகங்களுக்கு அப்படி ஒரு அறம் சார்ந்த உயர்ந்த இடத்தை வழங்கியவர்கள் நாம்தான். சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும், சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தை மேம்படுத்தும், சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தின் ரத்தமும் உயிர்த்துடிப்புமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையில் நாம் அந்த உயர்ந்த இடத்தை ஊடகங்களுக்கு வழங்கியிருக்கிறோம். ஆனால் ஊடகங்கள் வெறும் லாப வேட்டை வர்த்தக நிறுவனங்களாக, விற்பனைச் சரக்கு உற்பத்திக் கூடங்களாக மாறியிருக்கிறபோது, இப்படிப்பட்ட உயர்ந்த இடத்தை வழங்கியது சரிதானா என்று நாம் கேட்டாக வேண்டியிருக்கிறது.
ஹசாரே சித்திரம்
ஊடகங்கள் எவ்வாறு வர்க்க நலன்களோடு செயல்படுகின்றன என்பதைப் பார்ப்போம். எடுத்துக்காட்டாக, அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தையும், அதை இந்த ஊடகங்கள் எப்படி பெரிதுபடுத்தின என்பதையும் ஆய்வு செய்வோம். தலைநகர் தில்லியின் ராம்லீலா மைதானத்தில் அவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் கூடினார்கள் என்பது உண்மைதான். ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில் ஊடகங்கள், இன்னும் குறிப்பாக ஆங்கில தொலைக்காட்சிகள் அந்தச் செய்தியை எப்படி வெளியிட்டன? ஏதோ அந்த மைதானத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின. தில்லி தெருக்களில் பல மக்கள் இயக்கங்கள் லட்சக்கணக்கானோரைத் திரட்டியிருக்கின்றன. அண்மையில் கூட தொழிற்சங்க இயக்கங்கள் நடத்திய பேரணியில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றார்கள். ஆனால் அன்னா ஹசாரே இயக்கத்திற்குக் கொடுத்த முக்கியத்துவம் போல இந்த நிகழ்வுகளை ஊடகங்கள் வெளிப்படுத்தியது உண்டா? ஏன்?
ஏனென்றால் இது அதிகாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு ஏற்பாடுதான். அன்னா ஹசாரே இயக்கத்தை ஊடகங்கள் குடிமைச் சமூகத்தின் இயக்கமாக சித்தரித்தன. குடிமைச் சமூகம் என்பது அதிகார அமைப்புக்கு அப்பாற்பட்டதல்ல, அதற்கு எதிரானதுமல்ல. அண்டோனியோ கிராம்ஷி கூறுவது போல அதிகாரக் கட்டமைப்பின் ஒரு அங்கம்தான் குடிமைச் சமூகம். ஒரே அமைப்பின் இரண்டு அங்கங்களில் ஏற்பட்ட பதற்றத்தைத்தான் நாம் கண்டோம். ஒரே குடும்பத்தில் நடக்கிற சண்டையைப் போன்றதுதான் அரசுக்கும் குடிமைச் சமூகத்துக்கும் இடையே நடக்கிற மோதல். இரண்டுக்கும் ஒரே வர்க்க நலன்தான். இரண்டுக்கும் ஒரே குறுகிய சுயநல நோக்கம்தான்.
ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரண்டிருந்தவர்கள் யார்? அவரைப் பொறுத்தவரையில் ஒரு காந்தியவாதிதான், அவரது போராட்டத்துக்கு உள்நோக்கம் கற்பிக்க நான் விரும்பவில்லை. ஆனால் அவர் குறுகிய நோக்கமுள்ள சக்திகளால் கடத்தப்பட்டதாகவே நான் பார்க்கிறேன். அவருக்கு ஆதரவாகக் கூடியவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவருக்கு நெருக்கமாக நின்றவர்கள் சாமியார்கள். பாபா ராம்தேவ்கள், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீக்கள். ஒரு சுவாமியாக பார்க்கப்படாத சுவாமி அக்னிவேஷ் அங்கே இருந்தார். மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த வேறு பல சாமியார்களும் மடாதிபதிகளும் அங்கே இருந்தார்கள். தங்களுக்கென்று சொந்தமாகத் தீவுகளையே வைத்திருப்பவர்கள், தங்களுடைய கணக்குவழக்குகளை ஒருபோதும் தணிக்கைக்கு உட்படுத்தாதவர்கள் இவர்கள். அடுத்து அங்கே தெரிந்த முகங்கள் திரைப்பட நட்சத்திரங்களுக்குச் சொந்தமானவை. கறுப்புப் பணம் தொடங்குவதே அவர்களிடத்தில் இருந்துதான். கறுப்புப் பணம் என்றாலே பொதுமக்கள் மனதில் திரைப்பட நட்சத்திரங்கள்தான் நினைவுக்கு வருவார்கள். திரைப்படத் துறையே கறுப்புப் பணத்தில்தான் இயங்குகிறது என்பது மக்களுக்குத் தெரியும். இப்படிப்பட்ட சாமியார்களும் நட்சத்திரங்களும்தான் ஊழலை எதிர்ப்பதாக, கறுப்புப் பணத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு அங்கே கூடியிருந்தார்கள். அது உண்மையென நம்மை நம்பவைப்பதற்கு இந்த ஊடகங்கள் முயன்றன. எந்த அளவுக்கு மிகைப்படுத்தப்பட்ட, பொய்மையான செய்திகளை அவை வெளியிட்டன என்பதைப் பார்த்தோம்.
இவை பெரிய ஊடகங்களா?
ஐந்து பெரிய ஆங்கில தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த செய்திகளை வெளியிட்ட விதத்தைப் பார்த்தால், நாட்டில் மிகப் பெரும்பாலான மக்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சிகள் இவைதான் என்ற எண்ணம்தான் ஏற்படும். உண்மையில் இந்த ஐந்து பெரிய ஆங்கில செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் உள்ள மொத்த பார்வையாளர்கள் எவ்வளவு தெரியுமா? வெறும் 12 விழுக்காடுதான். இவற்றில் எந்தவொரு நிறுவனத்திற்குமே ஒற்றை இலக்க விழுக்காட்டிற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் கிடையாது. மூன்று விழுக்காடு முதல் அதிக அளவாக ஐந்து விழுக்காடு வரைதான் சி.என்.என்., ஐ.பி.என்., டைம்ஸ் நவ், என்.டீ டி.வி, என எந்த ஆங்கில தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டாலும் இதற்குமேல் அவர்களுக்குப் பார்வையாளர்கள் கிடையாது. ஆனால் தேசத்திற்கு நாங்கள்தான் இந்த செய்தியைக் கொண்டுவருகிறோம் என்பதாக அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டார்கள். இதுதான் இந்த வர்த்தக ஊடகங்களுடைய, நிதிமூலதனத்தினுடைய அராஜகம். இப்படிப்பட்ட ஊடகங்களின் சுதந்திரத்திற்காக இனி மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்களா? தங்களுடைய லாப அறுவடையை அதிகப்படுத்திக் கொள்வதற்காக இந்த ஊடகங்கள் இவ்வாறு செயல்படுவதை ஆதரித்து மக்கள் எதற்காக போராட வேண்டும்?
பெருகும் வதந்தி
தொலைக்காட்சி நிறுவனங்களின் இந்தப் பாதையை அச்சு ஊடகங்களாகிய பத்திரிகைகளும் பின்பற்றுகின்றன. இந்திய பத்திரிகைகளுக்கு நுறாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. ஆனால் தொலைக்காட்சி நிறுவனங்களின் வர்த்தக வெற்றியைக் கண்டு தங்களின் வழிமுறைகளை மாற்றிக் கொள்கின்றன. ஆகவேதான் பத்திரிகைகளில் வதந்திகளை அதிகமாகவும், செய்திகள் குறைவாகவும் வருகின்றன. எந்த நட்சத்திரம் எந்த நட்சத்திரத்தோடு போகிறார், மேலிடத்தில் நடப்பதென்ன, மது விருந்துக் கூடங்களில் என்ன நடக்கிறது, என்ற வகையிலான வதந்திகள் அதிக இடத்தைப் பிடிக்கின்றன. நாட்டு மக்களின் வாழ்க்கையை பாதிக்கிற பொருளாதாரக் கொள்கைள், மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் விளைவுகள் போன்றவை குறித்து பத்திரிகைகள் விவாதிப்பதில்லை.
எப்போதாவது, பட்டினிச் சாவு போன்ற பரபரப்பான நிகழ்வுகள் வருகிற போது மட்டுமே இதைப் பற்றி ஓரளவு எழுதப்படும். ஒரு பெரிய இயற்கைச் சீற்றம், தீ விபத்து, ரயில் விபத்து என நிகழ்கிற போது இந்தப் பிரச்சினைகள் குறித்தும் எழுதப்படும். ஆனால் வறுமையின் கதையை, பட்டினியின் வரலாற்றை, சாதியக் கொடுமைகளை, வர்க்க ஒடுக்குமுறைகளை, பாலினப் பாகுபாடுகளை, குழந்தை உழைப்பு அவலங்களை, விவசாயிகளிக் வீழ்ச்சியை, நிலமற்ற உழவர்களின் ஆதரவற்ற நிலையை, அன்றாடக் கூலிக்காக நடக்கும் போராட்டங்களை இந்த தொலைக்காட்சி ஊடகங்களும் பிரதிபலிப்பதில்லை, பத்திரிகை ஊடகங்களும் வெளிப்படுத்துவதில்லை.
காலப் பெட்டகம்
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அறிவுக்குப் பொருத்தமற்ற ஒரு செயலில் இறங்கினார். பல்வேறு செய்திகள், தகவல்கள், இலக்கியப் பதிவுகள், வரலாற்றுக் குறிப்புகள் கொண்ட காலப்பெட்டகம் ஒன்றை மண்ணில் புதைத்தார். பல ஆண்டுகள் கழித்து, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களால் சமுதாயம் அழியக்கூடுமானால், அதன்பின் வரக்கூடிய தலைமுறையினர் அந்தக் காலப்பெட்டகத்தை திறந்து பார்த்தால் நாடு எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதே அந்த நடவடிக்கையின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. இந்திய விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் நேரு குடும்பம் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தது என்று வருங்காலத் தலைமுறைக்கு சொல்கிற நோக்கம் அதற்குள் இருந்தது.
அதே போன்றதொரு காலப்பெட்டகம் இப்போது புதைக்கப்படுவதாக, இன்றைய தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் செய்திகளும் சித்தரிப்புகளும் அதற்குள் வைக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். ஐம்பது, நுறு ஆண்டுகளுக்குப் பிறகு வரக்கூடியவர்கள் அந்தப் பெட்டகத்தைத் திறந்து பார்த்தால் என்ன நினைப்பார்கள்? 21 ஆம் நுற்றாண்டின் தொடக்க கட்டத்தில் இந்தியாவில் பெரிய பெரிய நகரங்கள் மட்டுமே, உயரமான கட்டடங்கள் மட்டுமே இருந்ததாகத்தானே நினைப்பார்கள்? கிராமப்புற இந்தியா என ஒன்று இருந்ததாகவே தெரியாமல் போகும். கார்கள், இருசக்கர வாகனங்கள், சாப்பிட்ட உணவு செரிப்பதற்கான மருந்துகள்... என இந்திய மக்கள் வாழ்ந்ததாகத்தான் நினைப்பார்கள். இவையெல்லாம் நடுத்தரவர்க்க மக்களின் வாழ்க்கை. 70 முதல் 75 விழுக்காடு வரையிலான மக்கள் இந்த வட்டத்திற்கு வெளியேதான் வாழ்கிறார்கள் என்பது காலப்பெட்டகத்தை பார்க்கிற எதிர்காலத் தலைமுறையினருக்கு இது தெரியாமலே போகும். இது அவர்களுடைய குற்றமா, இன்றைய ஊடகங்களின் குற்றமா?
இப்படிப்பட்ட ஊடகங்களின் சுதந்திரத்திற்காக நாம் போராட வேண்டுமா, அல்லது இப்படிப்பட்ட ஊடகங்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட வேண்டுமா?
அரசியல் முதலாளித்துவம்
இது ஒருபுறம் இருக்க, உலக அளவிலும் இந்தியாவிற்கு உள்ளேயும இன்னொரு அபாயகரமான நிகழ்ச்சிப்போக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் அரசியல் முதலாளித்துவம். இத்தாலியில் நடந்தது என்ன? அந்த நாட்டின் பிரதமர் குரோனி...... தனது சொந்த ஊடக நிறுவனங்களின் பலத்தின் பின்னணியில்தான் ஆட்சிக்கு வந்தார். அங்கே அவர் ஒரு பெரிய ஊடகப் பேரரசையே நடத்திக்கொண்டிருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் அதிபர் சர்க்கோஸி, நேரடியாக ஊடகங்களை நடத்தவில்லை என்றாலும், ஊடக முதலாளிகளில் 85 விழுக்காட்டினர் வரையில் நெருக்கமான தொடர்பு உள்ளவர். அண்டை நாடான தாய்லாந்தில் தக்ஷின் சினாவாத்ரா தனது சொந்த ஊடக நிறுவனங்களின் பலத்தில் ஆட்சிக்கு வந்தவர்தான். இப்போது அவருடைய சகோதரி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.
இவ்வாறு ஊடகங்களின் உடைமையாளர்களாக இருந்து அல்லது ஊடகங்களைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவது என்பது பல நாடுகளில் நடந்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் நாடுகளில், முதலில் கைப்பற்றப்படுவது எது என்றால் ஊடக நிறுவனங்கள் தான். வானொலி நிலையங்களையும் தொலைக்காட்சி நிறுவனங்களையும் கைப்பற்றிய பிறகுதான் நாடாளுமன்றத்தையோ, அதிபர் மாளிகையையோ ராணுவம் கைப்பற்றுகிறது. ஊடகத்தின் பலம் என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். முதலாளித்துவ சமுதாய அமைப்பில் அரசியல்வாதிகள் ஊடகங்களை உடைமையாக்கிக் கொள்கிறபோது எப்படிப்பட்ட பன்பாட்டுத் தாக்கங்களை அது ஏற்படுத்தும் என்று விளக்க வேண்டியதில்லை.
குழப்பும் தொலைக்காட்சிகள்
இந்தியாவிலும் - தமிழகத்திலும் - இதே போன்று நிகழ்வதைப் பார்க்கிறோம். தமிழகத்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான திமுக, அஇஅதிமுக இரண்டுமே தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்துகின்றன. இந்த இரு நிறுவனங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. சில நேரங்களில் இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் பார்வையாளர்களோடு பேசுவதைவிட தங்களுக்கிடையேயே பேசிக்கொள்வது போலத்தான் இருக்கிறது. வெளியே இருந்து வருகிற ஒருவர் இந்த இரு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை மாறி மாறிப் பார்ப்பார் என்றால் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது என்ற குழப்பம்தான் அவருக்கு மிஞ்சும்.
திமுக ஆட்சியில் இருக்கும்போது எல்லாமே நன்றாக நடந்து கொண்டிருப்பது போல் கலைஞர் தொலைக்காட்சியும், சன் குழுமத்தின் தொலைக்காட்சியும் சித்தரிக்கும். மழை வெள்ளம் ஏற்பட்டால் அரசு எப்படி அக்கறையோடும் விரைவாகவும் செயல்பட்டு மக்களை பாதுகாக்கிறது என்று இந்தத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டேயிருக்கும். ஜெயா தொலைக்காட்சி அரசாங்கத்தின் அலட்சியத்தால் எங்கும் சீரழிவுகளே நிகழ்வதாகக் கூறும். அதிமுக ஆட்சிக்கு வருகிறபோது இது அப்படியே இடம் மாறிவிடும். ஊடக உலகத்தைப் பொறுத்தவரையில் அரசியல் முதலாளித்துவம் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது. ஒவ்வொரு ஊடகமும் என்ன சொல்கிறது என்பதை நம்ப வேண்டியவர்களாகத்தான் நாம் இருக்கிறோமேயன்றி, எது உண்மை என்பது நமக்குத் தெரியப்போவதில்லை. ஏனெனில் வர்த்தக நோக்கமும் அரசியல் நோக்கமும்தான் அந்தச் செய்திகளைத் தீர்மானிக்கின்றன. வர்த்தக நோக்கம் என்பது மிக வலிமையானதாக இருக்கிறது.
பெரும்பாலான ஊடகங்கள் வர்த்தக ரீதியாக விளம்பர வருவாயைச் சார்ந்தே இயங்குகின்றன. ஆங்கில ஊடகங்களைப் பொறுத்தவரையில் அவற்றின் வருவாயில் 80 முதல் 85 விழுக்காடு வரை வர்த்தக விளம்பரங்களில் இருந்துதான் கிடைக்கிறது. பத்திரிகைகளுக்கு நீங்கள் தருகிற விலையில் இருந்தோ, தொலைக்காட்சிகளுக்கு செலுத்தும் சந்தாத் தொகையிலிருந்தோ கிடைப்பது 15 விழுக்காடுதான். யாருக்கு முக்கியத்துவம்?
ஆகவே ஊடக நிறுவனத்தைப் பொறுத்தவரையில் - அல்லது ஊடக முதலாளியைப் பொறுத்தவரையில் - யார் முக்கியமானவர்? சந்தா கொடுக்கிற வாசகரா அல்லது விளம்பரதாரரா என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. உங்களுடைய தேவைகள், உங்களுடைய பிரச்சனைகள், உங்களுடைய கோரிக்கைள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா அல்லது விளம்பரதாரர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா?
விளம்பரங்களைத் தருகிற உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் வர்த்தக நிறுவனங்கள், இந்திய மக்களின் வறுமை செய்தியாவதை விரும்புவதில்லை. வறிய நிலையில் மக்கள் வாடுகிறார்கள் என்ற செய்தியை வெளியிடாதீர்கள், எல்லாம் சுமூகமாக, சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற தோற்றத்தையே ஏற்படுத்துங்கள் என்றுதான் அவர்கள் வற்புறுத்துவார்கள். எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்ற கருத்தாக்கத்தை உருவாக்குவதே ஊடகங்களின் பணியாகிவிட்டது. இவ்வாறாக முன்பு ஊடகங்கள் எந்த நோக்கங்களுக்காக குரல் கொடுத்தனவோ அந்த நோக்கங்களில் இருந்து திசைமாற்றப்பட்டுவிட்டது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் அரசியல் முதலாளித்துவம்.
அரசியல் இயக்கங்கள் ஊடகங்களை நடத்தக் கூடாது என்பதல்ல எனது வாதம். ஆனால், வர்த்தகம், அரசியல் பின்னிப் பிணைந்த நோக்கத்தோடு, ஊடகத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிற சக்திகளாக அந்த நிறுவனங்கள் உருவெடுக்கிற போது செய்திகள் எப்படியெல்லாம் திரிக்கப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டுவதே என் நோக்கம். வர்த்தக நோக்கம், அரசியல் முதலாளித்துவம் ஆகிய இரண்டு தீங்குகளுக்கும் இடையே நாம் மாட்டிக்கொள்கிறோம். அந்த நிகழ்ச்சிப்போக்கில் உண்மைத் தகவல்களிலிருந்து நாம் வெகுதொலைவுக்குக் கடத்தப்பட்டுவிடுகிறோம்.
தகவல் உரிமை
உண்மைத் தகவல்களைப் பெறுவது மக்களின் உரிமை. அவ்வகையில் நமது நாட்டில் நீண்டநெடும் போராட்டத்திற்கு பிறகு கொண்டுவரப்பட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த சட்டத்தைப் பயன்படுத்தி அரசுத் துறைகளிடம் இருந்து, பொதுவாக எளிதில் கிடைக்காத பல தகவல்களைப் பெற முடிகிறது என்பது உண்மை. சிலர் இதைப் பயன்படுத்தி சில நல்ல திட்டங்களைக் கூட முடக்க முயல்கிறார்கள் என்பதும் நடக்கிறது. ஆயினும் இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. அதே நேரத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் போலவே மக்களுக்கு இன்று மிகவும் தேவைப்படுவது என்னவென்றால் ஊடகங்களிடமிருந்து உண்மைத் தகவலை பெறுவதற்கான உரிமைதான். ஊடகங்கள் உண்மைத் தகவல்களைத் தரத் தவறுகின்றன என்றால், அவற்றை ஜனநாயகத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் செயல்படுகிற ஊடகங்கள் என்று இனியும் நாம் சொல்லிக்கொண்டிருக்க முடியாயாது.
விலகியது ஏன்?
ஊடகங்கள் தங்களது லட்சியப் பாதையிலிருந்து விலகியது ஏன்? காலையில் எந்தவொரு தொலைக்காட்சியைப் பார்த்தாலும், எந்தவொரு பெரிய பத்திரிகையைப் புரட்டினாலும் ஒரே மாதிரியான செய்திகளே ஆக்கிரமிப்பது எப்படி? அதுவும் ஒரே ஒழுங்குவரிசையில் தரப்படுவது எப்படி? இது ஒன்றும் தற்செயலானது அல்ல. அதற்காக ஊடக நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று கலந்தாலோசித்து ஒரே மாதிரியான செய்திகளைக் கொடுக்கின்றன என்றெல்லாம் நான் சொல்லவில்லை. விவிலியத்தில் மோசஸ் கடவுளின் பத்துக் கட்டளைகளோடு வந்தது போல, இன்றைக்கு இதுதான் தலைப்புச் செய்தி, இதுதான் அடுத்த செய்தி என்றெல்லாம் யாரும் தீர்மானித்துச் சொல்வதில்லை. ஆனால் ஊடகங்களுக்கிடேயே ஒருவகையான ஒருங்கிணைப்பு இருக்கிறது. நீ எந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாயோ அதற்கு நானும் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பதுபோன்ற ஏற்பாடு இருக்கிறது. பத்திரிகையாளர் மன்றம் போன்ற இடங்களில் இயல்பாக அந்தக் கலந்துரையாடல் நடக்கும். அதைச் செய்யவில்லை என்றால், ஒரு செய்தியை ஒரு நிறுவனம் வெளியிடத் தவறினால் அந்தச் செய்தியை இன்னொரு நிறுவனம் வெளியிட்டுவிடும்.
தொலைக்காட்சியோ, பத்திரிகையோ அதன் ஆசிரியர் குழு கூட்டங்களில், தலைமையாசிரியர், விட்டுப்போன முக்கியமான செய்தியைக் குறிப்பிடும்போது நாம் இந்தக் கதையை தவற விட்டுவிட்டோம் என்று சொல்வதைக் கேட்கலாம். அவர்களுக்கு செய்திகள் வெறும் கதைகள்தான் - அதாவது ஸ்டோரிகள்தான். அப்படி அவர்கள் சொல்லிக்காட்டுகிற தவறிப்போன செய்தி என்பது, உலகத்தில் அல்லது உள்நாட்டில் எங்கெங்கோ நடந்திருக்கக் கூடிய முக்கியமான நிகழ்வுகளை அல்ல. எங்கும் எப்போதும் ஏதாவது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அவை அனைத்தையும் செய்தியாக்கிவிட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். நாம் தவற விட்டுவிட்டோம் என்று அவர்கள் சொல்வது, வேறொரு ஊடகத்தில் இடம்பெற்ற செய்தியைத்தான். ஒரு ஊடகத்தில் வருகிற செய்தியை இன்னொரு ஊடகம் விட்டுவிடக் கூடாது என்ற நிலைபாட்டில் இருந்துதான் ஒரே மாதிரியான செய்திகள் வெளியாகின்றன. இந்த நிகழ்ச்சிப்போக்கில் பார்வையாளர்களாகிய நாம்தான் ஏமாளிகளாக ஒரே செய்தியை வெவ்வேறு அலைவரிசைகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தனியார் வருகையால் மாற்றம் உண்டா?
ஒரு காலகட்டம் வரையில் இங்கு அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. அதில் அரசாங்கத்திற்குச் சாதகமான, ஆட்சியாளர்களுக்குச் சாதகமான செய்திகள் மட்டுமே ஒளிபரப்பாகின என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்படி ஊடகத்தில் அரசின் ஏகபோக ஆதிக்கம் என்பதை ஏற்க முடியாதுதான். ஆனால், இப்போது சுமார் 300 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வந்துவிட்டன. அவையெல்லாம் ஒன்றுக்கொன்று மாறுபட்ட செய்திகளைத்தான் தருகின்றனவா? ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிகழ்ச்சிகளைத்தான் வெளியிடுகின்றனவா? அனைத்து தனியார் ஊடகங்களும் சேர்ந்து, ஒரு ஒப்பந்தக்கூட்டு போல அமைத்துக்கொண்டு செயல்படுவதுபோல இருக்கிறது. அதனால்தான் ஒரே மாதிரியான செய்திகள், ஒரே ஒழுங்குமுறையில் வருகின்றன. நாம் அந்தச் செய்திகளையெல்லாம் ஏற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது. அவையெல்லாம் உண்மையான செய்திகள்தான் என்று நம்பவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம் என்பதுதான் உண்மை. ஊடகங்களின் இந்தப் போக்கு இன்றைய நிதிமூலதனச் சூழலில் மேலும் மேலும் முற்றுகிறது. ஏனென்றால் ஊடகங்களும் வர்த்தகமயமாக்கப்பட்டு, நல்ல லாபம் ஈட்டியாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதான் நிலைமை என்பதை நாம் புரிந்துகொள்வதும் முக்கியம்; அதே வேளையில் இந்த நிலைமையை மாற்றுவதற்கு என்ன செய்யப்போகிறோம் என்பதும் முக்கியம். நிலைமையை ஆராய்கிற கட்டம் முடிந்துவிட்டது, அதை மாற்றுவதற்கான கட்டம் வந்துவிட்டது என்றார் கார்ல் மார்க்ஸ்.
மார்க்சியம் ஊடகச்சுதந்திரத்தை மறுக்கிறதா?
பொதுவாக மார்க்சியம் என்றாலே அது ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற ஒரு தவறான சித்தரிப்பு பரப்பப்பட்டிருக்கிறது. உண்மை என்னவென்றால், ஊடகச் சுதந்திரத்திற்காக வாதாடியவர், போராடியவர் மார்க்ஸ். முதலில் அவரே ஒரு ஊடகவியலாளர்தான் - பத்திரிகையாளர்தான். தனது வருவாய்க்காக அவர் செய்த ஒரே தொழில் பத்திரிகையாளராகப் பணியாற்றியதுதான். அவர் ரைனிஷ்சஸ் ஸெய்டுங் என்ற ஜெர்மன் மொழிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அது பிரஷ்ய அரசின் சர்வாதிகாரம் கோலோச்சிய காலம். கடுமையான தணிக்கை விதிகள் செயல்படுத்தப்பட்ட காலம். அதை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார் மார்க்ஸ். அதனாலேயே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற அவர் அங்கேயும் ஒரு பத்திரிகையில் சிறிதுகாலம் பணியாற்றினார். லண்டனில் 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கை ஆவணத்தை வெளியிட்ட பிறகு, திரும்பி வந்து நியூ ரைனிஷ்சஸ் ஸெய்டுங் என்ற பத்திரிகையை அவரே தொடங்கி அதிலே எழுதிவந்தார். குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடியேறிய அவருக்கு, அவரது உற்ற நண்பரும் மார்க்சிய மூலவர்களில் ஒருவருமான ஃபிரடெரிக் எங்கெல்ஸ் உதவினார் என்ற அளவில்தான் நாம் தெரிந்துவைத்திருக்கிறோம். ஆனால் மார்க்ஸ் அப்போதும், அமெரிக்காவிலிருந்து வெளியான நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் என்ற பத்திரிகைக்கு ஐரோப்பிய தலைமைச் செய்தியாளராகப் பணியாற்றினார். அப்போது ஸ்பெயின் உள்நாட்டுப்போர் பற்றி, லண்டன் தொழிலாளர் பற்றி, இந்தியாவைப் பற்றி, சீனாவைப் பற்றி... என ஏராளமான கட்டுரைகளையும் அரசியல் விமர்சனங்களையும் எழுதினார். அப்போது அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் ரெவல்யூசன் அன் கவுன்ட்டர் ரெவல்யூசன் (புரட்சியும் எதிர்ப்புரட்சியும்) என்ற புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
கார்ல் மார்க்ஸ் ஊடகக்காரராகப் பணியாற்றினார் என்ற தகவலை விடவும், ஊடகவியல் குறித்து அவர் என்ன சொன்னார் என்பது முக்கியம் என்று நினைக்கிறேன். பத்திரிகைத் தணிக்கை பற்றிய ஒரு விவாதத்தின்போது அவர், தணிக்கை ஒருபோதும் ஒரு நன்னெறியாகாது, அது சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் கூட. அடிமைத்தனம் சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் அது எப்படி ஒரு நன்னெறியாகாதோ அதைப் போலத்தான் தணிக்கையும், (அப்போது பல நாடுகளில் அடிமைமுறை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது) என்று சுதந்திர எழுத்துக்காகக் குரல் கொடுத்தார் மார்க்ஸ்.
உழைப்புச் சுரண்டல் பற்றியும், அதில் தொழிலாளி ஆன்மா இல்லாத சடப்பொருளாக அந்நியமாக்கப்படுவது பற்றியும், நிறைய எழுதிய அவர், இதழியலாராகப் பணிபுரிகிறபோது இவ்வாறு அந்நியமாக்கப்படுவது நிகழ்வதில்லை. ஏனென்றால் இதழியல் ஒரு விற்பனைச் சரக்கு அல்ல; அது மாற்றத்துக்கான ஒரு பங்களிப்பைச் செய்கிறது, என்று கூறினார். ஊடகங்களின் சுதந்திரமான செயல்பாட்டை வலியுறுத்திய அவர், சுதந்திரமான இதழியலில் கிடைக்கிற சரக்கு மோசமானதாக இருந்தாலும் அது நல்லதுதான், ஆனால் தணிக்கை செய்து கிடைப்பது நல்ல சரக்கானாலும் அது மோசமானது என்றார். அதே வேளையில், மக்களுக்கான இதழியல் என்பதையே மார்க்ஸ் உயர்த்திப் பிடித்தார்.
ஊடகச் சுதந்திரத்தை அவர் இந்த அளவுக்கு வலியுறுத்தியபோதிலும் மார்க்சியம் அந்தச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற தவறான கருத்து பரவியது எப்படி? சோவியத் புரட்சி வெற்றி பெற்று, போல்ஷ்விக்குகள் ஆட்சி ஏற்பட்ட பிறகு, 1920ம் ஆண்டுகளில், மக்களின் அரசு அமைக்கப்பட்டுவிட்டதால் இனி அரசுக்கு எதிரான செய்திகள் வெளியாக வேண்டிய தேவை இல்லை என்ற கருத்து உருவானது. அதனால் ஊடகச்சுதந்திரம் என்ற கண்ணோட்டம் அங்கே ஓரங்கட்டப்பட்டது. வரலாற்றின் ஒரு சந்திப்பு முனையில் ஏற்பட்ட ஒரு சூழல் அது. அதைப் பயன்படுத்திக்கொண்டு முதலாளித்துவ ஊடகங்கள் மார்க்சியத்தைப் பற்றிய தவறான சித்திரத்தைப் பரப்பிவிட்டன. சோவியத் யூனியன் அனுபவத்திலிருந்து உலகம் வெகுதொலைவு வந்துவிட்ட இன்றைய சூழலில் ஊடகம் குறித்த அப்படிப்பட்ட கண்ணோட்டம் தேவையில்லை என்று மார்க்சிய ஆசான்களான ரோஸா லக்ஸம்பர்க், அன்டோனியோ கிராம்ஷி உள்ளிட்டவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
இந்திய ஊடகங்கள்
இந்தியாவில் ஊடக அரசியல் குறித்து விவாதிக்கிறபோது நாம் இங்குள்ள முதலாளித்துவ ஊடகங்களைத்தான் எடுத்துக்கொள்கிறோம். இவர்களுடைய வர்க்க நலனும் வர்த்தக நலனும் சார்ந்த வெளியீடுகளையும் சித்தரிப்புகளையும் திசைதிருப்பல்களையும் எதிர்கொள்ள, மார்க்ஸ் விரும்பியதைப் போல் மக்கள் ஊடகத்தை வளர்ப்பதே வழி. முதலாளித்துவ சக்திகளின் பிடியிலிருந்து ஊடகங்களை மீட்க வேண்டிய தேவை இருக்கிறது. ஊடகங்கள் மீண்டும் மக்களை பிரதிபலிப்பவையாக, மக்களின் குரலை எதிரொலிப்பவையாக மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. பாட்டாளிவர்க்கத்தின் தலைமையில் சுதந்திரமான ஊடகம் என்ற மார்க்சியக் கருத்தாக்கத்தை வலுவாக முன்வைக்கிறார் கிராம்ஷி.
முதலாளித்துவத்தின் பண்பாட்டு ஆளுமை இன்று மக்களின் கலை, இலக்கியம் அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது. அது பற்றிப் பேசுவதாலும், கவலைப்படுவதாலும், விமர்சிப்பதாலும், விவாதிப்பதாலும் மட்டும் முதலாளித்துவத்தின் பண்பாட்டு ஆளுமையை எதிர்கொண்டுவிட முடியாது. ஒரு எதிர் ஆளுமையை - பாட்டாளி வர்க்கத்தின் பண்பாட்டு ஆளுமையை நிலைநாட்டுவதன் மூலமாக மட்டுமே முதலாளித்துவ ஆளுமையை எதிர்த்திட முடியும். இந்தியாவின் பெரும் ஊடகங்களும் மக்களிடமிருந்து விலகி, மக்களின் உண்மை வாழ்க்கையிலிருந்து தொடர்பு அறுந்து போயிருக்கிற நிலையில், ஊடகங்களின் வரலாற்று லட்சியங்களை மீண்டும் நிலைநாட்டியாக வேண்டியிருக்கிறது. முதலாளித்துவக் கட்டமைப்பிலேயே கூட அந்த லட்சியங்களை மறுபடியும் உயர்த்தியாக வேண்டியிருக்கிறது. ரோஸா லக்ஸம்பர்க் போன்றோர் முன்வைப்பது போல், ஊடகங்களின் உரிமைகளுக்காகப் போராடுவதும் மார்க்சிய மரபில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
ஆகவே, புதிய கண்ணோட்டத்தில் ஊடகச் சுதந்திரம் பற்றிய விவாதங்களை முற்போக்கு சக்திகள் நடத்தியாக வேண்டும். அந்த விவாதங்கள் நாடுதழுவிய அளவில் நடந்தாக வேண்டும். ஒரு நல்வாய்ப்பாக நாம் இன்று ஒரு கணினி சார் தொழில்நுட்ப காலகட்டத்தில் இருக்கிறோம். முதலாளித்துவ ஊடகக் கோட்டைவாசிகள் நம்மை அனுமதித்துவிட மாட்டார்கள். முதலாளித்துவ ஊடகங்களை நாம் நெருங்கிவிட முடியாது. மக்கள் கிளர்ச்சி, உள்நாட்டுப் போர் போன்ற சூழல்கள் ஏற்படுகிற இடங்களில் வேண்டுமானால் முதலாளித்துவ ஊடகங்களைக் கைப்பற்றுவதும் நடக்கும்.
டிஜிட்டல் புரட்சி
ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் முற்றிலுமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். கைப்பேசி குறுந்தகவல்களில் பரவுகிற செய்திகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும், டிஜிட்டல் புரட்சி நுட்பங்களைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரப்புவதில் முன்போல வசதி படைத்தவர்கள், வசதியற்றவர்கள் என்ற பாகுபாடு இல்லை என்பதையும் அண்மைக்கால அனுபவங்கள் காட்டுகின்றன. கணினியைக் கையாள்வது கூட அதற்கான வாய்ப்புகளைப் பொறுத்ததாக இருக்கிறது, ஆனால் கைப்பேசியை இன்று பெரும்பாலானவர்கள் கையாள முடிகிறது. ஊடகவியலின் பொருளே கூட பெருமளவுக்கு மாறியிருக்கிறது. ஊடகமொழி கூட வெகுவாக மாறியிருக்கிறது. தீக்கதிர் உள்ளிட்ட முற்போக்கான ஊடகங்கள் அந்தத் தொழில்நுட்ப வாய்ப்புகளைக் கைக்கொண்டு, வெகு வேகமாக முன்னேறிச் செல்ல முடியும். இந்தத் தொழில்நுட்பம் மலிவானது, ஜனநாயகப்பூர்வமானது, எல்லோருக்குக் கட்டுப்படியாகக்கூடியது, அனைவரும் பங்கேற்கக்கூடியது. இணைய வழி சமூகத் தொடர்புத் தளங்களில் பல தரப்பினரும் ஈடுபட முடிகிறது.
இந்த டிஜிட்டல் நுட்பங்களை உள்வாங்கிக்கொண்டு வசப்படுத்துவதன் மூலம், சுதந்திர ஊடகத்தின் மாண்புகளை மீட்டெடுக்க முடியும். எங்கெல்ஸ் கூறுவது போல், முதலாளித்துவ ஊடகங்களின் பிடியிலிருந்து விடுபட்ட, மக்களின் சுதந்திர ஊடகத்தை உயர்ந்தெழச் செய்யமுடியும். முதலாளித்துவ ஊடகங்கள் நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படும் என்ற மாயைகள் தேவையில்லை. அவர்களுக்கு அவர்களது வர்த்தகமும் லாபமும்தான் இலக்கு. மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் கவலைகளையும் குரலையும்தான் அவர்கள் எதிரொலிப்பார்கள் - அன்னா ஹசாரே செய்திகளில் நாம் இதைத்தான் பார்த்தோம். மக்களின் உண்மையான வலியை, பசியை, வேதனையை, துயரத்தை, கண்ணீரை மக்களின் ஊடகம் மட்டுமே வெளிப்படுத்தும். மக்களின் ஊடகம் விளம்பர வருவாயை நம்பியிராமல், வாசகர்களின் ஆதரவைச் சார்ந்தே தழைத்திருக்க முடியும்.
உலகம் தொழில்புரட்சிக் காலத்திலிருந்து தகவல் தொழில்நுட்பப்புரட்சிக் காலத்திற்கு மாறியிருக்கிறபோது, முற்போக்கு சக்திகளுக்கும் மாற்று வழிகள் தேவைப்படுகின்றன. மிகப்பெரும் பண்பாட்டு ஆளுமையை நிலைநாட்டுவதற்கு தொழில்நுட்பப் புரட்சியைக் கைவசப்படுத்தியாக வேண்டும் என்று கருதுகிறேன். மார்க்கியப் பார்வையில் இன்று பண்பாட்டு ஆளுமை என்பது பொருளாதார ஆளுமையைப் போலவே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
ஊடகம் உண்மையைச் சொல்லவில்லை என்றால், மக்களின் உண்மை வாழ்க்கையைச் சொல்லவில்லை என்றால் அது வெறும் பொழுதுபோக்காக, நுகர்பொருளாகவே முடிந்துவிடும். ஊடகத்தின் உண்மையான மாண்பையும் மரபையும் மீட்கிற கனவு மக்கள் ஊடக இயக்கத்தினால் மட்டுமே மெய்ப்படும்.
(
மாநாட்டில் இந்த உரையினைத் தமிழில் சுருக்கமாகச் சொல்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த முழு உரை செம்மலர்
அக்டோபர் 2011 இதழில் வெளியாகியுள்ளது,)