Thursday, 21 January 2016

லெஸ்பியன், கேய் சமூகம்: உளவியல் அறிவுரை யாருக்குத் தேவை?

அரசியலில் பெரும்பான்மை முடிவுப்படி ஆட்சியமைக்கப்படுவது ஜனநாயகம். வாழ்வியலில் பெரும்பான்மையினரின் முறைகளை சிறுபான்மையினரும் பின்பற்றக் கட்டாயப்படுத்துவது அராஜகம். லெஸ்பியன், கேய், திருநங்கையர், திருநம்பியர் ஆகிய மிக மிகச் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மைச் சமூகம் தன் வாழ்க்கை முறைகளை அராஜகமாகத்தான் திணிக்கிறது.

லெஸ்பியன், கேய் என்ற ஆங்கிலச் சொற்களுக்கு நேரடி ஒற்றைச் சொற்கள் தமிழில் இல்லை அல்லது முன்பு தமிழ்ச்சொற்கள் இருந்திருக்குமானால் தற்போது புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டன என்பதே, இவர்களைச் சமுதாயம் அங்கீகரிக்கவில்லை என்பதற்கான சான்றுதான்.

அங்கீகாரம் மறுக்கப்பட்டதன் அடிப்படை என்னவென்றால் பெண்ணும் பெண்ணுமாய் இணைந்து வாழ்கிற லெஸ்பியன் உறவும், ஆணும் ஆணுமாய் சேர்ந்து வாழ்கிற கேய் உறவும் ஒழுக்கக்கேடு என்ற கருத்துதான். ஆனால் இது ஒழுக்கப் பிரச்சனை அல்ல, விருப்பப் பிரச்சனை.

ஓர்பாலின ஈர்ப்பு அல்லது தற்பாலின உறவு என்று குறிப்பிடாமல் ஓரினச் சேர்க்கை என்று இவ்வகை உறவைப் பலரும் குறிப்பிடப்படுகிறார்கள். அந்தச் சொல்லாடல் வெறும் உடலுறவுப் புணர்ச்சி என்ற கோணத்தில் மட்டுமே இவர்களைச் சித்தரிக்கிற கொச்சையான பார்வையிலிருந்தே வருகிறது. இவர்கள் இணைந்து வாழ்கிறவர்கள், பிரச்சனைகளையும் தீர்வுகளையும் பகிர்ந்துகொள்கிறவர்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

இவர்களில் சிறந்த கல்வியாளர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், அறிவியல் வல்லுநர்கள், பொருளாதார அறிஞர்கள், தொழில் திறமையாளர்கள் இருக்கிறார்கள். சமுதாயம் அங்கீகரிக்க மறுப்பதால், மறைந்து வாழக் கட்டாயப்படுத்தப்படுகிற இவர்களில் பெரும்பாலோர் அந்த மன உளைச்சலின் காரணமாகத் தங்களது திறன்களை வெளிப்படுத்த முடியாதவர்களாக, அதன் மூலம் சமுதாயத்திற்குப் பங்களிக்க முடியாதவர்களாக ஒடுங்கிப்போகிறார்கள்.

இரு பாலினத்தையும் சேர்ந்தவர்கள் இணைந்து குடும்பம் நடத்துவதுதான் இயல்பான வாழ்க்கை என்று கூறுவதும் தவறு. அப்படிக் கூறினால் தற்பாலின உறவாளர்கள் இயல்பற்றவர்கள் என்றாகிறது. அது எப்படி இயல்பான வாழ்க்கையோ அது போல் இதுவும் இயல்பான வாழ்க்கைதான். ஆணை மணந்துகொண்டு வாழ விரும்புகிற பெண்ணை இன்னொரு பெண்ணோடு வாழுமாறு கட்டாயப்படுத்துவதும், அதே போல் பெண்ணை மணந்துகொண்டு வாழ விரும்புகிற ஆணை இன்னொரு ஆணோடு வாழ நிர்ப்பந்திப்பதும் எப்படி வன்மமான செயலோ, அவர்களால் எப்படி இந்த நிர்ப்பந்தங்களை ஏற்க முடியாதோ அப்படித்தான், பெண்ணோடு வாழ விரும்புகிற பெண்ணை ஒரு ஆணோடு வாழவும், ஆணோடு வாழ விரும்புகிற ஆணை ஒரு பெண்ணோடு வாழவும் கட்டாயப்படுத்துவது ஒரு வன்முறைதான், இவர்களால் அப்படி வாழ முடியாது.

காதலர் தினம் உள்பட மனித உரிமைகள் தொடர்பான எதை எடுத்துக்கொண்டாலும் உடனே அது மேற்கத்திய கலாச்சாரம் என்று கூறி நிராகரிக்கிறார்கள். சிவனும் மோகினியாக அவதாரமெடுத்து வந்த கிருஷ்ணனும் இணைந்து வாழ்ந்ததாகப் புராணக்கதையில் படிக்கிறோம். புராண இலக்கியங்கள் புணையப்பட்ட காலத்திலேயே இப்படியான வாழ்க்கை முறை இருந்ததற்கான தடயம்தான் இது
. ஆய்வாளர்கள் முயன்றால் வரலாற்று ஆதாரங்களையும், இலக்கியப் பதிவுகளையும் ஆராய்ந்து கொடுக்க முடியும். அது இவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

விலங்குகள் இப்படியெல்லாம் வாழ்வதில்லை, மனிதர்களில்தான் சிலர் இப்படித் தடம்புரண்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள் -என்னவோ விலங்குகளின் வாழ்க்கை முறைகளை கூடவே இருந்து பார்த்துக் கண்டுபிடித்தது போல! அப்படி கவனித்துப் பார்த்தால் விலங்குகளிலும் இந்த உறவு இருப்பதைக் காணக்கூடும். மனிதர்களின் விருப்ப வாழ்க்கையையே ஏற்காத சமுதாயம் விலங்குகளிலும் இப்படி வாழக்கூடியவை இருக்கும் என்பதை அவ்வளவு எளிதில் ஏற்குமா என்ன?

தில்லி உயர்நீதிமன்றம், இந்த வாழ்க்கையைக் குற்றமெனக்கூறும் 377வது சட்டப்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறவர்களில் எல்லா மதங்களைச் சேர்ந்த அமைப்புகளும் இருக்கின்றன. எல்லா மதவாதங்களும் மனித உரிமைகளுக்கு எதிரானவைதான் என்பதற்கு இதுவொரு சாட்சி.

இவர்கள் தங்களை சமூகம் (லெஸ்பியன் கம்யூனிட்டி, கேய் கம்யூனிட்டி...) என்று குறிப்பிடுகிறார்கள். பிறப்பின் அடிப்படையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக - அதாவது சாதியைச் சேர்ந்தவர்களாக - அடையாளம் பெறுவதை விட, கூட்டாக வாழ்வதன் அடிப்படையில் சமூகமாக அடையாளத்திக்கொள்வது அழகாகவே இருக்கிறது. சாதி, மத வரப்புகளை உடைக்க உதவுகிற எதுவும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அண்மையில் ஒரு பெண் தன் மகனுக்கு வாழ்க்கைத்துணையாக இன்னொரு ஆண் தேவை என்று விளம்பரம் கொடுத்திருந்ததைப் பாராட்டலாம் என்று நினைப்பதற்குள் விளம்பரத்தின் அடுத்த வரியில், தங்களுடைய சாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்! சாதிய அழுக்கு எவ்வளவு அழுத்தமாகப் படிந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

காதலையே இன்னும் அங்கீகரிக்காத சமுதாயம், சேர்ந்து வாழ்தலை இன்னும் ஏற்காத சமுதாயம் அவ்வளவு எளிதில் லெஸ்பியன், கேய் வாழ்க்கையை ஒப்புக்கொள்ளாதுதான். பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படும் சமுதாய நிர்ப்பந்தத் திருமண உறவில் கலக்க முடியாதவர்களாக, தங்களது தேர்வை வெளிப்படுத்தவும் முடியாதவர்களாக மனம் நொறுங்கி இவர்களில் பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். குடும்ப கௌரவம் குலைந்ததாய் பெற்றோர் வெறுப்பதிலிருந்தே இந்த தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு வகையில் கௌரவக் கொலை எனப்படும் சாதி ஆணவக்கொலை போல, இதுவும் சமுதாயம் செய்கிற கொலைதான்.

இதை அனுமதித்தால் எதிர்காலத்தில் குழந்தைப் பிறப்பு என்பதே இல்லாமல் போய்விடும், மனித குலமே அழிந்துவிடும் என்பதாக அநியாயத்திற்குக் கற்பனையாக வாதிடுகிறார்கள். ஒரு வாதத்திற்காக அதை ஏற்பதென்றால், இரு பாலினத்தவர் இணைந்து வாழ்வது மட்டுமே தொடருமானால் எதிர்காலத்தில் பூமி முழுவதும் பல்லாயிரம் கோடி மனிதர்கள் வதவதவென்று நிரம்பியிருப்பார்கள், மற்ற உயிரினங்களும் தாவரங்களும் அழிந்துவிடும் என்று வாதிடலமா? இவர்கள் தங்களுடைய வாழ்க்கை முறையைத்தான் எல்லோரும் பின்பற்ற வேண்டுமென்று கட்டாயப்படுத்துவதில்லை, அதே போல் மற்றவர்களும் இவர்களைக் கட்டாயப்படுத்தாமலிருக்கக் கற்றுக்கொள்ளட்டும்.

இவர்களைச் சிலர் பரிவு அடிப்படையில் ஆதரிக்கிறார்கள். அப்படிப் பரிவின் அடிப்படையில் அணுகுவதே கூட உன்னை விட நான் மேலிடத்தில் இருக்கிறேன் என்பது போன்ற ஒரு ஆணவம்தான். இவர்கள் எதிர்பார்ப்பது பரிவு அல்ல. சமமாக மதிக்கப்படுகிற அங்கீகாரத்தைத்தான்.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் இப்படியான வாழ்க்கையை விரும்புகிறார்கள் என்று தெரியவருமானால் அதிர்ச்சியடையாதீர்கள், பதறாதீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு ஏதோ மனச்சிக்கல் என்று உளவியல் அறிவுரைகளுக்கு ஏற்பாடு செய்யாதீர்கள். உளவியல் அறிவுரை தேவைப்படுவது உங்களுக்குத்தான். உங்களுடைய பதற்றம்தான் உண்மையில் அவர்களுக்கு நெருக்கடியாகிறது. இது ஒரு இயற்கை என்று புரிந்துகொண்டு அங்கீகரியுங்கள், அணைத்துக்கொள்ளுங்கள், ஆதரியுங்கள். எல்லோருடைய வாழ்க்கையும் இனிமையாகும்.

லெஸ்பியன், கேய் அன்பர்களே, அங்கீகாரம் மறுக்கப்படுகிறபோது தற்கொலையைத் தேர்வு செய்யாதீர்கள். தற்கொலை ஒருபோதும் தீர்வல்ல. முதலில் தயக்கமின்றி உங்களை அறிவித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான அங்கீகாரத்திற்காகப் போராடுங்கள். உங்களின் போராட்டத்திற்கு எப்படி மற்றவர்கள் ஆதரவாக வந்து நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அதே போல் மற்றவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக நீங்களும் வந்து நின்றிடுங்கள். கூட்டுப் போராட்டத்தில் மாறாதது எதுவும் இல்லை. நிச்சயம் சமுதாயத்தின் பார்வை மாறும்.

(தயாராகி வருகிற ஒரு ஆவணப்படத்திற்காக நான் அளித்த பேட்டியின் சாரம். படத்தின் இயக்குநர்: மாலினி)