Sunday, 11 January 2015

வேத கால விமானத்தில் கடத்தப்படும் அறிவியல்

ந்தக் கால பெருமை பேசுவதில் சுகம் காணுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். தங்களது பரம்பரையின் முன்னோடித் தலைமுறையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக யாரோ ஒருவர் ஏதோவொரு சிற்றரசின் மன்னராக சில காலம் இருந்ததாகச் சொல்லி “நாங்க ஆண்ட பரம்பரை,” என்பதாக நெஞ்சு நிமிர்த்திக்கொள்வார்கள். அந்த சிற்றரசின் பரப்பு இன்றைய ஒரு ஊராட்சி ஒன்றிய அளவுக்காவது இருந்திருக்குமோ என்னவோ. பற்பல தலைமுறைகளுக்கு முந்தைய ஒருவர் மக்களை அடிமைப்படுத்திய மன்னனாக இருந்ததில் இன்று பெருமைப்பட என்ன இருக்கிறது என்று கேட்கலாம்தான்.

ஆனால் இவர்களிடமாவது என்றோ, யாரோ சிறியதொரு அரியாசனத்திலாவது இருந்தார்கள் என்ற சிறு உண்மை இருக்கிறது. வரலாற்று ஆதாரம் இருக்கிறது. தர்க்க நியாயம் இருக்கிறது. அப்படிப்பட்ட உண்மையோ, வரலாற்று ஆதாரமோ, தர்க்க நியாயமோ இல்லாமல் சிலர் பாரம்பரியப் பெருமைவாதங்களைக்  கட்டவிழ்த்துவிடுகிறார்கள். அறிவியல் கண்ணோட்டமற்ற அப்படிப்பட்ட வாதங்கள் அறிவியலின் பெயராலேயே செய்யப்படுவது காலக்கொடுமை. அதுவும், அறிவியலாளர்களது சபையிலேயே அந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டு அவர்களது அறிவியல் தெளிவு பரிகாசத்துக்கு உள்ளாக்கப்படுவது பெருங்கொடுமை. அதிகார பீடத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், அறிவியலாளர் என்ற அங்கிகளைப் போர்த்தியிருப்போரும் அந்த வாதங்களைப் புகட்ட முயல்வது இன்னும் பெரிய கொடுமை.

இப்படியான கொடுமைகளோடுதான் இந்திய அறிவியல் மாநாடு மும்பையில் ஜனவரி 3 முதல் 7 வரையில் நடந்து முடிந்திருக்கிறது. அறிவியலை வளர்ப்பது, அறிவியலாளர்களை ஊக்குவிப்பது, உலக அறிவியல வளர்ச்சிகளை இந்தியா உள்வாங்கிக்கொள்வது, உள்நாட்டு அறிவியல் புரிதல்களை உலகத்திற்குப் பகிர்வது என்ற நோக்கங்களுடன்தான் அறிவியல் மாநாடுகள் நடததப்படுவது தொடங்கியது. அந்த நோக்கங்கள் எந்த அளவுக்கு நிறைவேறும் என்ற கேள்வியை எழுப்புவதாக இவ்வாண்டு மாநாட்டின் சில நிகழ்வுகள் அமைந்தன.

“அறிவியல் மர்மங்களை அவிழ்த்திடுவீர்!” -மாநாட்டைத் தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடிவிடுத்த வேண்டுகோள் இது. தனக்கே உரிய சொல்லாற்றலோடு, அந்த அறிவியிலாளர்களின் முன்னே தன்னை மிக எளிய மனிதனாக உணர்வதாகவெல்லாம் பேசினார். இதனால் அவர்களின் அவர்களின் மனங்களை வென்றிருப்பாரா?
முதலில் அறிவியலில் மர்மம் இருக்க முடியுமா? இயற்கையின் உண்மைகளைக் கண்டறிவதுதான் அறிவியல். அப்படிக் கண்டறிந்த உண்மைகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்குத்தான் தொழில்நுட்பங்கள். ஆனால், அறிவியலையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, அழிவுப் பள்ளத்தில் தள்ளிவிடும் ஆயுதங்கள் - அம்புகள் முதல் அணுகுண்டுகள் வரையில் - தயாரிக்கப்படுவது போலவே, அதே அறிவியலையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி அறியாமைக் குழியில் தள்ளிவிடும் விவாதங்கள் - வேத கால விமானங்கள் முதல் புராணத்து பிளாஸ்டிக் சர்ஜரிகள் வரையில் - தலையிலேற்றப்படுகின்றன.
அறிவியல் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்த சிலர் சுயநல நோக்கங்களுக்காக அவற்றை வெளியிடாமல் வைத்திருக்கக்கூடும். முன் காலத்தில் சில மூலிகைகளின் மருத்துவ குணங்களைக் கண்டறிந்த சிலர், வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தாமல் தங்களது வாரிசுகளுக்கு மட்டும் சொல்லி பரம்பரை ரகசியமாகப் பாதுகாத்து வந்ததுண்டு. ஆயினும் அறிவியல் தேடல் உள்ளவர்கள் முயன்றால் அப்படிப்பட்ட பயன்பாடுகளைக் கண்டுபிடித்துவிட முடியும்.

அறிவியலின் பெயரால் சில அபத்தங்களைப் பரப்புவதுதான் மர்மமானது. அதன் உள்நோக்கம் வெளிநோக்கம் என்ன என்பது ஆராய்ந்து உரைக்கப்பட வேண்டியது. அது ஏதோ அரசியல் விவகாரம் என்றோ, அறிவியலுக்குத் தொடர்பற்ற விவாதம் என்றோ கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடாது. அறிவியல் என்பதே ஏதோ சோதனைக் குடுவைகளும் மின்னணுச் சீவல்களும் மட்டுமல்ல. அரசியல் உண்மைகளைக் கண்டறிவது அரசியல்-அறிவியல், சமூக உண்மைகளை ஆராய்வது சமூக-அறிவியல். இயற்கை  அறிவியல், அரசியல் அறிவியல், சமூக அறிவியல் ஆகியவை ஒன்றுக்கொன்று இணைப்பற்றவையாகத் தனித்துப் பிரித்து வைக்கப்பட்டிருப்பதிலேயே கூட ஒரு அரசியல் இருக்கிறது!

அந்த அரசியல் காரணமாகத்தான், தொண்மைக்கால இந்திய மண்ணில் உண்மையான வேட்கையோடு தொடங்கிய அறிவியல் தேடல்கள் முடக்கப்பட்டன. எல்லாம் வேதத்தில் சொல்லப்பட்டுவிட்டது, அதைத் தாண்டிய உண்மைகள் எதுவுமில்லை, அனைத்தும் இறைவனின் தீர்மானப்படி இயங்குகிறவையே, அதை ஆராய முயல்வது இறைவனுக்கு விடுக்கப்படும் சவால்தான் என்ற கற்பிதங்கள் கட்டப்பட்டன. விண்ணில் வலம் வரும் நட்சத்திரங்களின் சுழற்சிக்கும், புவியில் ஏற்படும் பருவகால மாற்றங்களுக்கும் கால அளவிலான தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த முன்னோர்களின் அருமையான அஸ்ட்ரானமி என்ற வானியல் அறிவியலாகத் தொடங்கியது, பின்னர் நட்சத்திர அசைவுகளுக்கும் தனி மனித வாழ்க்கை மாற்றங்களுக்கும் தொடர்பிருக்கிறது எனக்கூறும் அஸ்ட்ராலஜி என்ற சோதிட ஏமாற்றுவேலையாக மாற்றப்பட்டது.

அறிவியல் வளர்ச்சியை அடக்கியதன் இன்றைய பதிப்பாகத்தான், அந்த அறிவியல் மாநாட்டிலேயே ஒருவர், 7,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஆகாய விமான தொழில்நுட்பம் இருந்தது என்ற “ஆய்வுரை” வாசித்திருக்கிறார். அதுவும் அந்த விமானங்கள் வானத்தில் முன்னோக்கிப் பறப்பவையாக மட்டும் இருக்கவில்லை, பக்கவாட்டில் கூட பறக்கத்தக்கதாக இருந்தன என்றார். நாடு விட்டு நாடு மட்டுமல்ல, கண்டம் விட்டு கண்டம் மட்டுமல்ல, வேறு கிரகத்திற்குக் கூட செல்லக்கூடியவை என்றும் சொல்லியிருக்கிறார். அவர் பெயர் கேப்டன் ஆனந்த் ஜே. போடாஸ். விமானிகள் பயிற்சி நிறுவனத்தில் முதல்வராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்றால், வேதங்கள் என்கிறார்.
“அதிகாரப்பூர்வ வரலாறு உண்டு, அதிகாரப்பூர்வமற்ற வரலாறும் உண்டு. அதிகாரப்பூர்வ வரலாறு 1903ல் ரைட் சகோதரர்கள்தான் விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் என்று சொல்கிறது. ஆனால் முதல் விமானத்தைக் கண்டுபிடித்தவர் இந்து துறவி மகரிஷி பரத்வாஜ்.  அந்த விமானத்திற்கு 40 இன்ஜின்கள் இருந்தன. நவீன விமானங்களில் செய்ய முடியாத, எப்படி வேண்டுமானாலும் இயக்கக்கூடிய உந்துவிசை முறை இருந்தது...” என்று அவர் தொடர்ந்து பேசியிருக்கிறார்.

அந்த 30 நிமிட பேச்சில் அங்கே கூடியிருந்த அறிவியலாளர்கள் விமானம் விபத்துக்குள்ளானது போன்ற அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்க, விமானத்தை உருவாக்கிய ரைட் சகோதரர்கள் முதல், ராக்கெட்டுகள் வேறு கோள்களுக்குப் பயணிக்க ஆதாரமான புவியூயீர்ப்பு விசையைக் கண்டறிந்த நியூட்டன் வரையில் எவ்வளவு எளிதாக அவமதிக்க முடிகிறது! இதைப் பற்றிக் கேள்வி கேட்டால் இருக்கவே இருக்கிறது “நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக்கூடாது,” என்ற விளக்கம்! இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமன் சேதுப் பாலத்தைக் கட்டினான் என்று சொல்வதை அறிவியல் கண்ணோட்டத்தின்படி ஏற்க முடியுமா என்று கேட்டதற்கு, இதே போல் நம்பிக்கைகள் விசாரணைக்கு அப்பாற்பட்டவை என்று பதிலளித்தவர்கள்தானே?

ஒரு வாதத்திற்கு அப்படி 7,000 ஆண்டுகளுக்கு முன் மிக நவீனமான விமானம் இருந்ததாக வைத்துக்கொள்வோம். அதன் மிச்ச சொச்சங்கள் எங்காவது இருக்கிறதா? பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்த டைனசோர்களின் எலும்புக்கூடுகள் கூட இன்று அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கின்றன. மசூதிகளுக்கு அடியில் இருந்த இந்துக்கோயில் தூண்கள் இவைதான் என்று காட்சிப்படுத்துகிறார்கள். ஏன் அப்படியொரு விமானத்தின் ஏதாவது ஒரு பாகத்தை தோண்டியெடுத்து வைக்கக்கூடாது? ஒரு வேளை அந்த விமானங்கள் வேறு கிரகங்களுக்குச் சென்றிருந்தபோது அங்கேயே விழுந்து அங்கேயே புதைந்துவிட்டனவோ? அட கிரகமே!

அனைத்தும் கடவுளின் திட்டப்படியே நடக்கின்றன என்று உறுதியாக வலியுறுத்தப்பட்ட காலத்தில், கடவுளின் ஏற்பாட்டை மீறி கிரக விமானம் தயாரிக்கப்பட்டிருக்க முடியுமா? வெளிநாடுகளுக்குப் போவதே கூட பாவம் என்று போதிக்கப்பட்ட சமூக அமைப்பில் அந்த விமானத்தில் ஏறி வேறு கிரகங்களுக்குச் சென்றவர்கள் யாரோ?
அதுவும், முதல் விமானத்தைக் கண்டுபிடித்தவர் மகரிஷி பரத்வாஜ் என்று போடாஸ் சொல்லவில்லை. “இந்துத் துறவி மகரிஷி பரத்வாஜ்,” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதெல்லாம் மதவாதம் என்றால் மறுப்பார்கள், மற்றவர்கள் மவுனமாக ஏற்க வேண்டும்.
நாட்டின் அரசமைப்பு சாசனம், சமுதாயத்தில் அறிவியல் மனநிலையை வளர்ப்பது அரசின் கடமை என்று கூறுகிறது. அறிவியல் மனநிலையை வளர்ப்பதற்காகத்தான் மாநாட்டிற்கு வருவதற்கு முன் வேறொரு நிகழ்ச்சியில், புராணத்தில் வரும் பிள்ளையார் கதை அந்தக் காலத்திலேயே இங்கே பிளாஸ்டிக் சர்ஜரி முறை இருந்ததற்கான ஆதாரம் என்று பிரதமர் பேசினார் போலும்! காந்தாரிக்குக் குழந்தைகள் பிறந்தது அன்றைக்கே ஸ்டெம் செல் சிகிச்சை இருந்ததைக் காட்டுகிறது என்று கூறினார் போலும்! கழுத்து வெட்டப்பட்ட ஒரு மனித உடலில் இன்னொரு மனிதத் தலையையே கூட ஒட்ட முடியாது, யானைத் தலையை ஒட்ட முடியுமா, அதன் மூளையை மாற்ற முடியுமா என்றெல்லாம் கேட்டால் நீங்கள் நம்பிக்கைகளை இழிவுபடுத்துகிறவராகிவிடுவீர்கள்.

புராணங்கள், இதிகாசங்கள் போன்ற இலக்கிய ஆக்கங்களின் கற்பனை வளத்தை மதிப்பிடுவது வேறு. அதை நம்புவது வேறு. குழந்தைகள் கதை சொன்னால் அதில் வரும் மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் மாறுவார்கள், எங்கே வேண்டுமானாலும் செல்வார்கள். அது ரசனைக்குரியது, ஊக்குவிக்கப்பட வேண்டியது. இவர்கள் செய்வதுவோ ரசனைக்குரியதுமல்ல, மதிக்கத்தக்கதுமல்ல. மக்களைக் குழப்புவதற்காக அவதாரமெடுப்பவை இவை.

கைப்பேசி முதல் கணினிகள் வரை அறிவியலைப் பயன்படுத்துகிற நாட்டில் அறிவியல் மனநிலை இன்றளவும் சவலைப்பிள்ளையாகவே விடப்பட்டிருக்கிறது. ஆகவேதானே ‘இஸ்ரோ’ வல்லுநர்கள் செவ்வாய்க்கோளுக்கான ‘மங்கள் யான்’ முயற்சியில் வெற்றிபெற்றிருப்பது பற்றி மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறபோதே, அந்த நிறுவனத்தின் தலைவர் திருப்பதிக்குப் போய் வெங்கடாஜலபதி முன்பாக மங்கள் யானின் குறுக்கப்பட்ட வடிவத்தை வைத்து வழிபட்டார் என்ற செய்தியைப் படித்து சங்கடமும் வருத்தமும் அடைய வேண்டியிருக்கிறது.
மாநாட்டில் பங்கேற்ற சுமார் 200 அறிவியல் வல்லுநர்களுக்கு இந்த உறுத்தல் இருந்திருக்கிறது. வேதகால விமானத் தொழில்நுட்பம் என்ற தலைப்பிலேயே ஒரு தனி ஆய்வு அமர்வுக்கு நிகழ்சி நிரலில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தபோது, அதைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிடுகிற துணிவு அவர்களுக்கு இருந்தது. அவர்களுடைய எதிர்ப்பின் காரணமாக அந்த அமர்வு விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால், கிடைத்த சந்தில் புகுந்து சிந்து பாடினார் மேற்படி போடாஸ்.

முன்பே இப்படி தடம்புரட்டப்பட்டதால்தான், அறிவியல் தேடலில் முன்னணியில் இருந்த இந்திய சமுதாயம், பின்னர் 2,000 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டது என்று ‘வேதங்களின் நாடு’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார் மார்க்சிய தத்துவ ஆசான் இ.எம்.எஸ்.  இயற்கையின் உண்மைகளைக் கண்டறியும் ஆய்வுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டதில், சுரண்டல் - ஆதிக்க சக்திகளின் அதிகாரத்தை நிலைநாட்டும் அரசியல் இருக்கிறது என்று ‘தத்துவம் சமுதாயம் அரசியல்’ புத்தகத்தில் கூறுகிறார் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.

அறிவியலில் மாற்றுக் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம் இல்லையா என்று சிலர் கேட்கிறார்கள். தாராளமாக இருக்கிறது. ஆனால், ஆய்வுக்கும் விவாதத்திற்கும் கதவுகளை அடைத்துவிட்டு நம்பிக்கை என்ற பூட்டுப் போடுவதில்தான் சிக்கல். அதுவும், இதையெல்லாம் தேசியப் பெருமையோடும் தேசப் பற்றோடும் முடிச்சுப் போடுகிறார்கள். அது மிக மிக சிக்கல். உண்மையான, இயற்கையான, மக்களுக்கான அறிவியல் கரங்கள் அந்த சிக்கல்களைத் தகர்க்கட்டும்.

(‘தீக்கதிர்’ 11-1-2015 ஞாயிறு இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் இடம்பெற்றுள்ள எனது கட்டுரை)