Tuesday 22 July 2008

புத்தகங்களின் நூலக வழியை
அடைப்பது யார்?

நூலகம் செல்வது சாலவும் நன்று என்ற பண்பாடு நம் சமூக அமைப்பில் இன்னும் ஆழமாக வேருன்ற வேண்டியிருக்கிறது. மானுட வரலாற்றில் ஈடு இணையற்ற ஒரு கண்டுபிடிப்புச் சாதனை இருக்குமென்றால் அது நிலவில் கால் வைத்தது கூட அல்ல, முதல் புத்தகத்தை உருவாக்கியதுதான். புத்தகங்கள் மனிதர்களை வாசிக்க வைப்பது மட்டுமல்ல, நல்ல புரிதலோடு புவியில் வசிக்கவும் வைக்கின்றன. அந்தப் புத்தகங்கள் குடியிருக்கும் நூலகம் சிந்தனைகளின் பயிர்நிலம்.

இன்றைக்கும் புத்தகங்கள் வாங்க வசதியற்றவர்கள், வருகிற எல்லாப் புத்தகங்களையும் வாங்க இயலாதவர்கள் - இவர்களுக்கெல்லாம் அறிவுப் பசியாற்றும் நூலகங்கள்தான் அன்ன சத்திரங்களையும் ஆலயங்களையும் விட புண்ணியத் தலங்களாய்த் திகழ்ந்துகொண்டிருக்கின்றன நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில் முடக்கம் ஏற்படுகிறபோதெல்லாம், அது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகிறது. அறிவுத்துறையினர், இலக்கியவாதிகள், பதிப்பாளர்கள், ஜனநாயக இயக்கத்தினர் என்று எல்லோருமே அந்த முடக்கத்தை உடைப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்கள். ஏதேனும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறபோதெல்லாம் அதை மனப்பூர்வமாக வரவேற்கவும் செய்கிறார்கள்.

அவ்வகையில், தமிழகத்தில் மாநில அரசின் நூலக ஆணைக் குழு நிழலில் உள்ள நூலகங்களுக்காக வாங்கப்படும் புத்தகப் படிகளின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்பட்டபோது அனைத்துத் தரப்பினரும் மனமுவந்து பாராட்டினார்கள். புத்தக நீளத்துக்கு அறிக்கைகள் வெளியிடுவதில் வல்லவராக இருந்த முந்தைய ஆட்சியின் முதல்வர், நிறையப் பேர் புத்தகம் படிப்பது சமூக அமைதிக்குக் கேடு என்று எண்ணியோ என்னவோ, அது வரை 800 படிகள் என்றிருந்த நூலக புத்தகக் கொள்முதலை 600 எனக் குறைத்து புண்ணியம் தேடிக்கொண்டார்.

இன்றைய தமிழக முதல்வர், தாமே ஒரு நல்ல புத்தகக் காதலர் என்பதால், அவரிடம் மேற்படி குறைப்பு ஆணையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும், நூலகங்களுக்காக வாங்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தலாம் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டன. அந்தக் கோரிக்கை, ஆலோசனை இரண்டுமே இந்த அரசால் ஏற்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள புத்தக அன்பர்கள் மகிழ்ந்து பாராட்டினார்கள். விரிவான பகுதி மக்களைச் சென்றடைய இந்த எண்ணிக்கை போதாது என்றாலும் இது ஒரு ஆரோக்கியமான தொடக்கமாக அமையும் என்று எதிர்பார்த்தார்கள்.

அந்த மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் அந்தக் கட்டத்திலேயே நிற்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஆம், அறிவிப்பு அறிவிப்பாகவே இருக்கிறது, செயலுக்கு வரவில்லை என்கிறார்கள் புத்தகப் பதிப்பாளர்கள். “தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு புத்தகத்திலும் ஆயிரம் படிகள் வாங்கப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு ஒரே ஒரு தடவை மட்டுமே பதிப்பகங்களுக்கு பர்ச்சேஸ் ஆர்டர் வந்தது. ஆனால் அது 2005-ஆம் ஆண்டுக்கான ஆர்டர்தான். 2006-ஆம் ஆண்டுகளுக்கான ஆர்டர் இது வரை வரவில்லை,” என்கிறார் பல சிறந்த புத்தகங்களை வெளியிட்டுள்ள ஒரு முன்னணிப் பதிப்பாளர்.

“நடைமுறைப்படி 2006-ஆம் ஆண்டுக்கான ஆர்டர்கள் வந்து, புத்தகங்கள் நூலகங்களை அடைந்து, எங்களுக்கு இந்நேரம் பேமென்ட்டும் வந்திருக்க வேண்டும். ஆனால் என்ன காரணம் என்றே தெரியவில்லை, இது வரை நூலக ஆணைக் குழுவிடமிருந்து அதற்கான ஆணை வரவில்லை,” என்கிறார் அவர்.

புதிய புத்தகங்கள் தயாராவது - அதிலும் குறிப்பாக முற்போக்கான, சமூக சீர்திருத்த உள்ளடக்கங்கள் கொண்ட புத்தகங்கள் தயாராவது - ஆதார விற்பனையாக நூலகங்களுக்கு அனுப்பமுடியும் என்ற நம்பிக்கையில் தான். அதன் பிறகுதான் புத்தகக் கடைகள் மூலம் விற்பனையாவது. எனவே நல்ல புத்தகங்கள் தடையின்றி வந்து கொண்டிருக்க, நூலக ஆணைக் குழுவின் கொள்முதல் ஆணை தடையின்றி வந்துகொண்டிருக்க வேண்டும். இப்போது காரணமே இல்லாமல் கொள்முதல் ஆணை வராமலிருப்பதால், ஆயிரம் படிகளாக உயர்த்திக் கிடைத்த நற்பெயரை அரசு இழக்க நேரிடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. சில நிகழ்வுகள் இதில் சில சுயநல சக்திகளின் திருவிளையாடல் இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.

அண்மையில் முதலமைச்சர் கருணாநிதியின் 85வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி 85 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தமிழ்ப் பதிப்பாளர் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் முதல மைச்சரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, அந்த 85 புத்தகங்கள் வெளியிடப்படுவது பற்றியும் தெரி வித்துவிட்டு வந்தார்கள். பல்வேறு தலைப்புகளில் பல் வேறு பதிப்பகங்கள் வெளியிட்ட அந்த 85 “புதிய” புத்த கங்களுக்கு மட்டும் சிறப்பு ஆணை அனுப்பப்பட்டிருக் கிறது.

“2006ம் ஆண்டு வெளியான புத்தகங்களுக்கே இன் னும் கொள்முதல் ஆணை தரப்படவில்லை என்றாலும் கூட, ஒரு சிறப்பு நிகழ்ச்சியையொட்டி இப்படி சிறப்புக் கொள்முதல் செய்யப்படுவதில் எங்களுக்கு மாறுபாடு ஒன்றும் கிடையாது. ஆனால், அந்த ஆணைகளில் பெரும்பாலானவை அந்த ஒரு குறிப்பிட்ட குழுவோடு தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே போயிருக்கிறது,” என்கிறார் மற்றொரு பதிப்பாளர். புத்தகத் திருவிழா போன்ற முயற்சிகளை மேற்கொண்ட தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் கூட்டமைப்போடு எந்தத் தொடர்பும் இல்லாமல் இப்படி நடந்திருக்கிறது என்றும் பலர் வருத்தத்தோடு கூறினார்கள்.

“அது மட்டுமல்ல, அந்த 85 புத்தகங்களில் சில, முன்பே வெளியானவை. இந்த நிகழ்ச்சிக்காக மறு பதிப்புச் செய்து புதிய புத்தகம் போல் காட்டி விற்றிருக் கிறார்கள். நூலகக் குழுவை மட்டுமல்ல, முதலமைச்சரையே கூட ஏமாற்றியிருக்கிறார்கள். இதை எங்கே போய் சொல்வது,” என்று நம்மிடம் சொன்னார்கள்.

இப்படிப்பட்ட போக்குகளால் முதல் அடி விழுவது சமூக அக்கறை சார்ந்த, அரசியல் விழிப்புணர்வை ஏற் படுத்தக்கூடிய, சமுதாய அறிவியல் கண்ணோட்டம் கொண்ட புத்தகங்கள்தான். காகித விலை கற்பனைக் கெட்டாத உயரத்திற்குப் போய்க்கொண்டிருக்கிற நிலை யில், உத்தரவாதமான நூலக ஆணை வருமா வராதா என்ற ஐயப்பாட்டால், பல பதிப்பாளர்கள் இப்படிப்பட்ட புத்தகங்களைத் தயாரிப்பதை தள்ளிவைக்கிறார்கள். இது, முற்போக்கான படைப்பாளிகளின் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போடுவதாகிவிடுகிறது.

நூலக வளர்ச்சிக்கென்றே செஸ் வரி வசூலிக்கப் படுகிறது. ஆகவே, அரசின் நிதி ஒதுக்கீடாக மட்டுமல் லாமல், சமுதாயத்தின் நேரடி நிதியாகவே நூலக நிதி அமைந்திருக்கிறது. எனவே, ஆண்டுதோறும் வாங்கு கிற புத்தகங்கள் பற்றிய தகவலை அரசு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்கிற ஆலோசனை, எதிர்காலத்தில் புத்தகத் தேர்வுகள் இருட்டில் நடப்பதைத் தவிர்க்க உதவும்.

இதை அரசு ஆராய்வதும் ஆவன செய்வதும் முக்கியம். ஏனென்றால் இது ஏதோ புத்தகம் தயாரிக்கிறவர்களுக்கும் நூலகத் துறையினருக்கும் இடையிலான பிரச்சனை அல்ல. அடிப்படையில் இது நூலக வாசகர்களுக்கு அவர்கள் தேர்வு செய்து படிக்கக் கூடிய புத்தகங்களின் பரப்பையும், சமூக அக்கறையாளர்களுக்கு தங்களுடைய சிந்தனைகளை புத்தகமாக வெளிப்படுத்தி மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பையும் சுருக்குகிற பிரச்சனை.

Thursday 22 May 2008

தர்மத்தை நிலை நாட்ட தலைமுறைக் கடத்தல்

தர்மத்தை நிலை நாட்ட

தலைமுறைக் கடத்தல்

சாமியார் தொழில் என்றால் ரொம்ப லேசு என்று ஆளுக்காள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு காவித் துணி, கொஞ்சம் தாடி, ஐந்தாறு புராணக் கதை அறிவு... இப்படி இருந் தால் போதும், யார் வேண்டுமானாலும் சாமியாராகிவிடலாம் என்று மனத் தீர்த்தம் குடித்துக்கொண்டிருக்கிறீர்கள். நாலு தெரு சுற்றி யார் எப்போது வீட்டைப் பூட்டிக்கொண்டு போகப் போகிறார்கள் என்பதை உளவறிந்து, அடுத்த வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் வராமல் புகுந்து லவட்டிக்கொண்டு வருகிறவனுக்குத்தான் தெரியும் அந்தத் தொழில் எவ்வளவு ரிஷ்க் மிகுந்தது என்று. அதே போலத்தான் எங்கள் தொழிலில் இருக்கிற கஷ்ட நஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும்.

முதலில் முகத்தில் ஒரு அருள் மிகு தோற்றத்தைக் கொண்டுவர வேண்டும். எந்த நிலையிலும் கண்களை சாந்தமாக வைத்துக்கொண்டு, உதடுகளில் தெய்வீகப் புன்னகையைத் தவளவிட்டுக்கொண்டு, குரலில் ஒரு மென்மையைப் பரா மரித்துக்கொண்டு... எங்கே கொஞ்ச நாள் இப்படி இருந்துதான் பாருங்களேன். அப்போது தெரியும் இதற்கு எவ்வளவு பயிற்சி தேவை என்று. சினிமாவில் வருவது மாதிரியா? அதிலே சாமியார் மேக்கப் போட்டால், மூடு இருக்கிற நேரம் பார்த்து கேமரா முன்னால நடிக்கலாம், நம்ம வாய்ஸ் சரியில்லை என்றால் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து பின்னணிக்குரல் பதிவுசெய்து கொள்ளலாம். ஆனால் நிஜத்தில், பொது இடத்தில், சொந்த மடத்தில் அருள் ஒளி மாறாமல் ஷ்லோ மோஷன் தேவதை போல் நடப்பதும் நடிப்பதும் ரொம்ப ரொம்ப கஷ்டம்.

இதிலேதான், ரொம்ப ஈசி என்று எண்ணி போட்டிக் கோவில், மடம் என்று ஆரம்பித்து, அதை சரியாகச் செய்ய முடியாமல் சில போலிச் சாமியார்கள் மாட்டிக்கொள்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள், சாமியாராய் இருப்பதே போலிதான் என்றா? அதெல்லாம் ஆழமான சித்தாந்த வியவகாரம், அதைப் பற்றி இன்னொரு தடவை பேசலாம், இப்போது எங்கள் தொழில் பற்றிதான் பேச்சு.

நிறைய படிக்க வேண்டும். புராணம், வேதம், இலக்கியம் என்று படிக்கப் படிக்கத்தான் சாதாரணர்களிடமிருந்து மாறுபட்டுப் பேச முடியும். ஷ்வாமி எவ்வளவு ஆழமா தெரிஞ்சு வெச்சிருக்கார் என்று அந்த சாதாரணர்களிடம் பிரமிப்பு ஏற்படுத்த முடியும். அப்புறம் நன்றாகப் பேசுவதற்குப் பயிற்சி எடுக்க வேண்டும். முன் போல மகாபாரதம், ராமாயணம், பகவத் கீதை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. லோகப் பெரியவர் ஜார்ஜ் புஷ் ஈராக்கில் துஷ்டர்களை சம்ஹாரம் செய்தது முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் நயன்தாரா தூக்கப்பட்டது வரையில் தகவல்களில் அப்டுடேட்டாக இருக்க வேண் டும். பேச்சில் அதையெல்லாம் ஆங் காங்கே தேங்காய்த்துருவல் மாதிரி தூவ வேண்டும். நிறைய ஜோக்குகள் படித்து வைத்துக்கொண்டு அவைகளையும் ஆங்காங்கே உதிர்க்க வேண்டும். பல ஜோக்குகள் மக்கள் ஏற்கெனவே படித் திருப்பார்கள், ஆகவே புதுசு புதுசாக ஜோக்குகளும் குட்டிக் கதைகளும் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்தரத்திலிருந்து விபூதி, குங்குமம், லிங்கம், மோதிரம் என்று வரவழைப்பது, அதிர்ஷ்டசாலி பக்தர்களுக்குக் கொடுப்பது, அவர்கள் மெய்சிலிர்த்திருக்க ஆசிர்வதித்துக்கொண்டே நடப்பது - இதெல்லாம் எந்தக் காலத்திலும் ஒர்க் அவுட் ஆகும்தான். ஆனால், சில பேரு ‘மந்திரமா தந்திரமா‘ என்றெல்லாம் நிகழ்ச்சி நடத்தி இது வெறும் மேஜிக் பயிற்சிதான் என்று காட்டிக்கொடுத்துவிடுகிறார்கள். உங்களையெல்லாம் பகவான் தண்டிப்பார் என்று சொன்னாலும் அவர்கள் பயப்படுவதில்லை, அவர்கள்தான் சாமியே இல்லை என்று தெளிவுபெற்ற ஆசாமிகளாக இருக்கிறார்களே!

முன்னேறுவதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது நம்முடைய மகிமையைப் பற்றி ஜனங்களிடம் பரப்புரை செய்வதற்கு ஏற்பாடு செய் வதுதான். இவர் சொன்னால் பலிக்கிறது, இவர் பேச்சைக் கேட்டால் மனம் ஆறுதல் பெறுகிறது, இவர் முகத்தைப் பார்த்தாலே நிம்மதி கிடைக்கிறது, இவர் முகத்திலேதான் என்னவொரு தேஜஸ், கண்களில் என்னவொரு கருணை, நாக் கிலே என்னவொரு அருள்... இப்படியாக வெளியே எடுத்துவிடச் செய்ய வேண்டும். இதிலே மவுத் பப்ளிசிட்டி ரொம்பவும் எஃபெக்டிவ். அதற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் இன்வெஷ்ட்மென்ட் செய்யவேண்டியிருக்கும்.

மீடியாக்காரர்களை கொஞ்சம் வசப்படுத்திக்கொள்ளத் தெரிய வேண்டும். முதலில் சின்னச் சின்னதாக நம்மைப்பற்றி செய்திகள் வரச் செய்ய வேண்டும். நம் பேச்சிலிருந்து சுவையான கதைகளையும் உதாரணங்களையும் பத்திரி கைகளில் நம் படத்தோடு துணுக்குகளாக எழுதவைக்க வேண்டும். பேட்டிகள் வரவைக்க வேண்டும். அப்புறம் படிப்படியாக சில பெரிய பத்திரிகைகளில் நம்முடைய தொடர் கட்டுரைகள் வரவைக்க வேண்டும். சுவையாக எழுதினால்தான் அவர்கள் தொடர்ந்து வெளியிடுவார்கள். ஆகவே நல்ல எழுத்தாளர்களாகவும் பயிற்சி பெற வேண்டும். இதிலே வாராவாரம் நமக்கு சன்மானமும் கிடைக்கும், விளம்பரமும் கிடைக்கும், வாழும் கலை, ஆன்மீக மனவளம் அது இது என்று கேம்ப் நடத்துகிறபோது கூட்டமும் சேரும்.

சில விஷமக்கார ஜர்னலிஷ்ட்டுகள் இருக்கிறார்கள். பேட்டி என்று தோண்டித் துருவி கேள்விகள் கேட்பார்கள். ஆசிரமத்துக்குள்ளே என்ன நடக்கிறது என்று துப்பறிவார்கள். மடத்துக்கு சில பக்தர்கள் நேரில் வரும்போது அவர்களை முன்னே பின்னே பார்க்காமலே அவர்களுடைய பெயர், பிரச்சனை போன்ற தகவல்களைச் சொல்லி அசத்துகிற சாமியார்கள் உண்டு, அது எப்படி நடக்கிறது என்பதை இந்த நிருபர்கள் கண்டுபிடித்து எழுதிவிடுவார்கள். எனவே மீடியாக்காரர்களை ஜாக்கிரதையாக ஹேண்டில் செய்யவேண்டும்.

ஆனால் பொதுவாக, இன்றைக்கு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் புரட்சி கிரட்சி, போராட்டம் கீராட்டம் என்று வேறு பக்கம் போய்விடாமல் அணை போடுகிற கடமை தங்களுக்கும் இருக்கிறது என்பது பல மீடியா ஜாம் பவான்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், அவர்கள் நமக்கு ஒத்துழைப்பார்கள். ஏனென்றால் அவர்களும் பெரிய கார்ப்பரேட்டுகள் தானே? ஆகையால் காம்ரேடுகள் நடத்துகிற பேரணிக்குக் குழந்தைகள் வந்தால் இப்படிக் குழந்தைகளை வதக்குகிறார்களே என்று புழுங்கியும், நம் தியான முகாம்களுக்கு பச்சைப்பிள்ளைகள் வந்தால் ஆகா இந்த வயதிலேயே என்ன பக்தி என்று எழுதி சிலாகித்தும் எழுதுவார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்கு எங்களுடைய தயவும் எங்களுக்கு கார்ப்பரேட் டுகளுடைய தயவும் தேவைப்படுகிற காலம் இது. ஐடி செக்டார் உள்பட எல்லா இண்டஷஸ்ட்ரிகளிலும் தொழிலாளர்களுக்கு ஷ்பெஷல் கேம்ப் நடத்துகிறார்கள். ஆட்குறைப்பு நடந்தாலும் எஞ்சியிருக்கிற ஆட்கள் எப்படி உலகத் தரத் தில் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்று அந்த கேம்ப்புகளில் போதிக்கிறார்கள். கேம்ப்பில் கலந்து கொள்கிறவர்களுக்குப் பரிசு. இந்தக் கூட்டத்தை விட்டு விட்டு, ஃபாரின் கம்பெனிகள் நம்ம ஊரின் தொழிலாளர் சட்டங் களை மீறுவது பற்றி எச்சரிக்கும் யூனியன் கூட்டங் களுக்குப் போனால் விஆர்எ° மிரட்டல். இப்படியெல்லாம் ஒர்க்கர்° எங்களுடைய முகாம் களுக்கு வருவதை உத்தரவாதப் படுத்துகிறார் கள்.கள் நம்ம ஊரின் தொழிலாளர் சட்டங் களை மீறுவது பற்றி எச்சரிக்கும் யூனியன் கூட்டங் களுக்குப் போனால் விஆர்எ° மிரட்டல். இப் படியெல்லாம் ஒர்க்கர்° எங்களுடைய முகாம் களுக்கு வருவதை உத்தரவாதப் படுத்துகிறார் கள்.யூனியன் கூட்டங்களுக்குப் களுக்கு வருவதை உத்தரவாதப் படுத்துகிறார் கள்.

அந்த முகாம்களில் எங் களுடைய வேலை சுலபமானது என்றா நினைத்தீர் கள்? அதுதான் இல்லை. ரொம்ப ரொம்ப ஸ்கில்டு ஆக இருந்தால்தான் அந்த கேம்ப்புகளை சக்ஸஸ்புல்லாக நடத்த முடியும். யோசித்துப் பாருங்கள், இந்த உலகம் எப்படி மாயையானது என்றும் காட்ட வேண்டும்; ஆனால் மேற்படி கார்ப்பரேட் புரவலர்கள் காட்டுகிற உலகம் மெய்யானது என்றும் நாட்ட வேண்டும். போராட்டப்பாதை வன்முறையானது என்று போதிக்க வேண்டும். குஜராத் கலவரங்கள் பற்றி எது வும் தெரியாது என்று சாதிக்க வேண்டும். அரசியல் பற்றி அலட்டிக்கொள்ளாமல் கடமையைச் செய்வதே ஆண்டவனுக்குப் பிடித்த செயல் என்று ஓதிட வேண்டும். பகுத்தறிவாளர்கள் - குறிப்பாக இந்த கம்யூனிஸ்ட்டுகள் - சொல்கிற மாற்று உலகம் கானல் நீர் தான் என்று வாதிட வேண்டும்.

தொழில் நெருக்கடி என்று மற்ற துறைகளில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் எங்கள் தொழிலுக்கு இதுதான் நல்ல சீசன். சந்தை நெருக்கடியால் தாக் குப்பிடிக்க முடியாத கம் பெனிகள் மூடப்படுவது ஒரு விளைவு என்றால், தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவது இன்னொரு விளைவு. குறிப்பாக ஐடி செக்டார், பெரிய பெரிய தொழிற் சாலைகள் இங்கேயெல்லாம் பல பத்தாயிரக்கரக்கணக்கில், லட்சக் கில் சம்பளம் கொடுக்கப்பட்டாலும், அவர்கள் அடிக்கிற மொத்தக்கொள்ளையோடு ஒப்பிட்டால் அது அற்பச் சம்பளம்தான். போதாதற்கு எந்த நிமிடமும் வெளியேற்றிவிடுவார்கள், அடுத்த நிமிடத்திலிருந்தே வாழ்க்கைவசதிகள் காணாமல் போய்விடும் என்று அஞ்சியஞ்சிச் சாகிற நிலைமை. எந்த சட்டப்பாதுகாப்பும், சங்கப்பாதுகாப்பும் இல்லை என்பதால் இவர் அஞ்சாத பொருள் இல்லையே என்ற நிலைமை.

இவர்களை மூளைச்சலவை செய்து வலி தெரியாமல் அறுவை சிகிச்சை நடத்த லோக்கல் அனிஸ்தீசியா ஊசி போடுவது போல் வளா கங்களுக்குள்ளேயே மாதாமாதம் பார்ட்டி, சோமபானம், டான்ஸ், கடற்கரை ஓய்வு விடுதிகளில் வருடாந்திர மெகா கேம்ப்... என்றெல்லாம் அவர்களால் முடிந்த அளவுக்குச் செய்கிறார்கள். அந்த ஆபரேஷனை முழுசாக முடித்துத் தருகிற வேலை எங்களுடையது. ஆன்மீக சேவை செய்ததாகவும் ஆச்சு, அதிருப்திகள் அலையாக எழவிடாமல் அடக்கியதாகவும் ஆச்சு.

என்ன கேட்டீர்கள்? தலைமுறைகளை இப்படிக் கடத்துகிற எங்களுடைய சேவை மதவாத சக்திகளுக்கும் கட்சிகளுக்கும் உதவுவதாக இருக்கிறதே என்றா? இதற்குத்தான் இப்படியெல்லாம் கேட்கிறவர்களை உள்ளே விடக் கூடாது என்பது. சரி, கேட்டதற்காகச் சொல்றோம், சாதிப்பிரச்சனை இல்லாத (அதாவது கீழ்ச்சாதிக்காரர்கள் ஆவேசக் குரல் எழுப்பாத), பண்பாடு குலை யாத (அதாவது பெண்கள் உரிமை பேசாத), பொருளியல் மயக்கம் இல்லாத (அதாவது சுரண்டல் பற்றி அலட்டிக்கொள்ளாத) ஒரு ஆன்ம நேய சமூ கத்தை உருவாக்க அந்த சக்திகள்தான் துணை செய்கின்றன. அவர்களுக்கு நாங்கள் இந்த உதவி கூட செய்யக்கூடாதா?

எங்களுக்கு இருக்கிற ஒரே தலைவலி சில நல்ல சாமியார்கள்தான். மடத்திலிருந்து பூசை செய்தோமா, கதாகாலட்சேபம் செய்தோமா என்று இருக்காமல், மோதல்கள் நடக்கிறபோது மக்களைச் சந்தித்து பகைமை வேண்டாம் என்று அறிவுரை சொல்கிறவர்கள் அவர்கள். உலகமயமும் தனியார்மயமும்தான் மனிதர்களின் சிக்கல்களுக்குக் காரணம் என்றும் பேசுகிறவர்கள் அவர்கள். என்ன பண்றது, தொழில் என்று வந்துவிட்டால் இப்படிப்பட்ட சவால்களையும் சந்தித்துதானே ஆக வேண்டும்.

எப்படியோ, சிக்கல்களை தாராளமயமாக்குகிற அரசுகள் இருக்கிற வரை, மக்களின் குழப்பங்கள் நீடிக்கிற வரையில், தெளிவானவர்கள் செல்வாக்குப் பெறுகிற வரையில் எங்கள் பிசினெஸ் தங்கு தடையில்லாமல் நடந்துகொண்டிருக்கும்.

Wednesday 5 March 2008

ninaivu

இயற்கைக்குள் ஒரு தூரிகைப் பயணம்

லகத்தை அதிரவைத்த, நாட்டைக் கலங்கவைத்த அந்தச் செய்தி அந்தக் கிராமத்தையும் வியர்க்க வைத்தது. பெரியவர்கள் நம்ப முடியாதவர்களாக கண்ணீரில் உருகி நின்றதைக் கண்ட பத்து வயதுச் சிறுவனின் மனம் நாட்டில் நடப்பது என்னவென்று புரியாவிட்டாலும் ஏதாவது செய்யத் துடித்தது. நண்பர்கள் வட்டாரத்தில் பெயர் வாங்கிக் கொடுத்திருந்த தனது ஓவியத் திறமையால் அதைச் செய்ய முடிவு செய்தது. கிராமத்துச் சுவர்களில் கரித் துண்டுகளால் அந்த வயதில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குமட்டுமே வரைந்தாலும், துப்பாக்கியிலிருந்து பாய்ந்த மதவெறித் தோட்டாக்களுக்கு பலியான மகாத்மா காந்திக்கு அதன் மூலம் உணர்வஞ்சலி செலுத்தினான் ஆதிமூலம். அதற்குப் பிறகு அடிக்கடி அவன் வரைந்த பல ஓவியங்களில் காந்தியின் உருவம் பதிந்தது. ஓவிய உலகில் அறிமுகமானபின் ஆதிமூலத்தின் பென்சிலும் தூரிகையும் உருவாக்கிய காந்தி படங்கள் தனிக் கண்காட்சியே நடத்தும் அளவுக்குப் புகழ்பெற்றன. பொதுவாக ஓவியர்களை வரையத் தூண்டும் உருவ அமைப்பு காந்தியினுடையது. கார்ட்டூன்கள் முதல், திரை ஓவியங்கள், சிற்பங்கள் என காந்தியின் உருவம் எண்ணற்ற வகைகளில் கலைப் படைப்பாகியுள்ளது. ஆனால் ஆதிமூலம் பெரும்பாலும் கறுப்பு-வெள்ளையில் படைத்த காந்தியில் ஒரு தனி ஆழம் இருந்தது என்பது சக ஓவியர்களும் ரசிகர்களும் விமர்சகர்களும் ஒப்புக்கொண்ட உண்மை. அதற்குக் காரணம், ஓவியத்துக்கான உடல் அமைப்பு கொண்டவராக மட்டும் காணாமல், உள்ளத்தின் அமைப்பிலும் காந்தியை அவர் நேசித்தார்.

“தத்துவப்பார்வை, அரசியல் இவற்றில் பல மாறுபாடுகள் இருப்பவர்கள் கூட, விடுதலைப் போராட்டத்திற்காகவும் மத-சாதி வேறுபாடுகளைத் தாண்டிய ஒற்றுமைக்காகவும் அத்தனை கோடி மக்களை திரட்ட முடிந்த காந்தியின் ஆளுமையை மறுக்கமாட்டார்கள். எங்கோ ஒரு மூலையில் இருந்த எங்கள் கீரம்பூர் கிராமத்து மக்கள் குலுங்கிக் குலுங்கி அழுதார்கள் என்றால் அந்த மாமனிதனின் ஆளுமை எப்பேற்பட்டது! அவரது வாழ்க்கை வரலாறு, சிந்தனைகள் போன்றவற்றைப் பின்னர்தான் படித்துத் தெரிந்துகொண்டேன். அன்று முதல் இன்று வரை எனக்கு காந்தியின் வாழ்வு ஒரு ஈர்ப்பாகவே இருந்துவந்திருக்கிறது. அவரது மரணம் எதற்காக என்று தெரிந்துகொண்ட போது மேலும் அதிகமான ஈடுபாhட்டோடு காந்தியின் உருவங்களைக் கோடுகளில் கொண்டுவந்தேன்,” என்று சொன்னார் ஆதிமூலம். மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் உள்பட பல இடங்களில் அவர் படைத்த காந்தி ஓவியங்கள் அந்த ஈடுபாட்டைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. காந்தியின் வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்களையும், அவரது போராட்டங்களையும், மக்களோடு அவர் கலந்திருந்ததையும் நினைவுபடுத்திக்கொண்டிருக்கின்றன.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகில் கீரம்பூர் கிராமத்தில் 1938ம் ஆண்டு பிறந்தவர் ஆதி. ஓவியக் கிறுக்கல்களுக்கு பள்ளி ஆசிரியர்களும் நண்பர்களும் அளித்த ஊக்கம், அதிலேயே ஈடுபடும் முனைப்பை முடுக்கிவிட்டது. 1959ம் ஆண்டு சென்னை வந்த அவர், ஓவியம் மற்றும் கைவினைக் கலைப் பள்ளியில் சேர்ந்தார். 1966ல் நுண்கலையில் பட்டயம் பெற்றார். “ஓவியப் பள்ளியில் உலக அளவிலான ஓவிய முயற்சிகள், கோட்பாடுகள் பற்றிய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கத்தால் உருவான உணர்வுப் பதிவு ஓவியக்கோட்பாடு என்னுள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்று கோபுரமாய் உயர்ந்த தமது ஓவியத் திறனுக்கான அடித்தளம் அமைந்த பின்னணியை நண்பர்களோடு பகிர்ந்துகொண்டார்.

சென்னை நெசவுக் கலைப் பயிற்சி மையத்தில் ஒரு வடிவமைப்பாளராகப் பணியில் சேர்ந்த ஆதிமூலத்தின் அடங்காத கலைத்தாகம் அவரைப் புதிய முயற்சிகளுக்குத் தூண்டியது. நேரடித் தோற்றங்களாக இல்லாமல், எழுத்திலும பேச்சிலும் உள்ள உவமை நடையை ஓவியத்திலும் கையாண்டுபார்த்தால் என்ன என்ற முயற்சி அது. கறுப்பு-வெள்ளையிலேயே துவங்கிய அந்த முயற்சியில் உருவான படைப்புகள் பின்னர் “வெளி” என்ற பெயரில் பலரையும் ஈர்த்தன. அதன் தொடர்ச்சியாகவே அவர் உருவப் படங்கள், இயற்கைக் காட்சிகள் ஆகியவற்றோடு மட்டும் சுருங்கிக்கொண்டுவிடாமல், பார்வையாளர்களையும் கற்பனைகளுக்குள் இட்டுச் செல்லும் அருவபாணி (அப்°ட்ராக்ட்) ஓவியங்களிலும் தனி முத்திரை பதித்தார். வண்ணங்களின் உலகமாகிய அந்த அருவபாணி ஓவியங்களை ஒரு சாரார் கடுமையாகச் சாடிக்கொண்டிருந்தபோது, எதுவும் புரியவில்லை என்று எளிதாகத் தள்ளிக்கொண்டிருந்தபோது, குறிப்பாக அன்றைய பத்திரிகைகள் நவீன ஓவியங்களையே எள்ளி நகையாடிக்கொண்டிருந்தபோது, அசராமல் அவர் தமது திரைச்சீலைகளில் நடத்தியது ஒரு போராட்டம் என்றே சொல்லலாம். இன்று எங்கும் அவ்வகை ஓவியங்களைக் காணமுடிகிறது, அதில் தமிழகத்தின் பல இளைஞர்கள் புகழ் பெற்றார்கள், தொடர்ந்து சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதில் அன்று அவர் நடத்திய போராட்டத்திற்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.

அதே நேரத்தில், அருவபாணி என்ற பெயரில் எப்படி வேண்டுமானாலும் திரையில் தீட்டலாம், புரிந்துகொள்வதும் புரியாமல் போவதும் பார்வையாளரைப் பொறுத்தது என்று கூறி நழுவ முயன்றவர்களுடனும் தமது தூரிகையைச் சுழற்றியே போராடினார் ஆதிமூலம். “ஓவியம் ஒரு காட்சியின்பம் மட்டுமல்ல. கருத்தியல் உள்ளடக்கமும் அதற்கு உண்டு. காந்தி உருவங்களை நான் வரைந்த போது அதில் அவரது வாழ்க்கையின் செய்தியைச் சொல்லும் நோக்கம் எனக்கு இருந்தது. அதே போல், வண்ணங்களின் தொகுப்பில் மனதைப் பரவசப்படுத்துவது, ஆழமான சிந்தனைவசப்படுத்துவது, ஒரு தேடல் இன்பத்தைத் தருவது என்பது போன்ற நோக்கங்களும் இருக்கின்றன. சமூக அக்கiறை கொண்ட ஒரு ஓவியர் அதனை வெளிப்படுத்துவதற்கும் வண்ணங்களின் சேர்க்கையைப் பயன்படுத்த முடியும்,” என்று தமது ஓவியக் கோட்பாடு பற்றிக் கூறினார் அவர்.

இந்தக் கண்ணோட்டம் இருந்ததால்தான் இலக்கியப் படைப்பாளிகளோடு மிகுந்த இணக்கமான நட்பு கொண்டிருந்தார். ஏற்கெனவே இலக்கிய ஏடுகளில் எழுத்தாளர்களின் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் புத்தக அட்டைகளுக்கும் மாறுபட்ட ஓவியங்களைத் தந்ததன் மூலம் வளர்ந்திருந்த நட்பு அது. அந்த நட்பு எழுத்தாளர்-ஓவியர் என்ற இருவகைப் படைப்பாளிகளிடையே கருத்தியல் தோழமையை ஏற்படுத்தும் செயல்பாடாகவும் இருந்தது.
சென்னையில் எழுத்தாளர்கள்-ஓவியர்கள், கவிஞர்கள்-ஓவியர்கள், நிருபர்கள்-ஓவியர்கள் என்று சந்திப்புகளும் விவாதங்களும் நடத்தப்பட்டதற்குத் தூண்டுதலாக அமைந்தது.அப்படியொரு சந்திப்பின்போது ஓவியத்தின் அழகு பற்றிய விவாதம் வந்தது. எல்லாவற்றிலும் அழகு பொதிந்திருக்கிறது என்று அந்த விவாதம் பொத்தாம் பொதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.

“வெளியே நாம் காணும் காட்சிகளில் இருக்கும் அழகு நமக்குத் தெரிவதில்லை. ஆனால், புகைப்படமாகவோ ஓவியமாகவோ ஒரு சதுரம் அல்லது செவ்வகச் சட்டத்திற்குள் ஒரு இடத்தின் குறிப்பிட்ட பகுதியைக் காணுகிறபோதுதானே அந்த அழகு புலப்படுகிறது,” என்று நான் கேட்டேன்.

“இந்த பூமியும் வானமும் ஒரு சட்டம்தான். அதற்குள் இருக்கிற எல்லாமே அழகுதான். செவ்வகச் சட்டத்தைத் தாண்டி நம் பார்வை விசாலடைகிறபோது அந்தப் பேரழகைக் காணமுடியும். அழகு என்றால் மலைகளும் மரங்களும் வானமும் பறவைகளும் மட்டுமல்ல. மனிதர்களும் அழகுதான்.” -இப்படியோர் விளக்கத்தை ஆதிமூலம் அளித்தார்.

ஓவியங்களின் கட்டு மீறல் வடிவம் பற்றி விவாதம் திரும்பியது. ஓவியர் வி°வம், ஒரு சட்டத்திற்குள் நிற்க மறுத்து அதை மீறுகிற படைப்பு தனி அழகைப் பெறுகிறது என்றார். கவிதைகள் பழைய இலக்கணங்களை மீறியது பற்றிக் கவிஞர்கள் பேசினார்கள். நாவல்கள், சிறுகதைகளிலும் அந்தக் கட்டுமீறல் உத்திகளுக்கு நடக்கும் முயற்சிகள் பற்றிய தகவல்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. “பூமியும் வானமும் கூட சட்டங்கள்தான் என்று சொன்னீர்களே? அதிலே கட்டு மீறல் நடக்க முடியுமா,” என்று நான் கேட்டதில், ஆதிமூலம் என்ன சொல்கிறார் என்று அறிகிற நோக்கம் இருந்தது.

“ஏன் இல்லாமல்? பூமியை மீறிக்கொண்டு முளைவிடும் தளிர், மேகங்களைத் தாண்டும் பறவை, நிலப் பரப்பை உடைக்க முயலும் கடல் அலை, விண்ணை முட்டப் பார்க்கும் மலை இதுவெல்லாம் அப்படிப்பட்ட கட்டு மீறல்கள்தானே? இதுவெல்லாம் அழகுதானே?” கேள்விக் குறிகளிலேயே விடையளித்தார் ஆதிமூலம்.

அவர் அளித்த விளக்கங்களில் கண்ணுக்கு அழகு என்பதோடு மட்டுமல்ல, கண்ணோட்டத்திற்கு அழகு என்ற விரிந்த உள்ளடக்கமும் இருக்கின்றது. அவருடைய இந்தக் கண்ணோட்டம், மரபு ஓவியர்கள் என்றும் நவீன ஓவியர்கள் என்றும் வேறுபட்ட முகாம்களாய் இருந்த தமிழக ஓவியர்களை ஒரு பரந்த வெளிக்குக் கொண்டுவர உதவியது. அந்த இரு சாராருமே ஆதிமூலத்தை நேசித்தனர். சொந்தம் கொண்டாடினர்.

1960ம் ஆண்டில் சென்னையில் ஓவியங்களின் இந்தியத் தன்மை என்பது குறித்த ஒரு கலந்துரையாடல் நடந்தது. அதில் பங்கேற்ற அவர், இந்திய ஓவிய மரபின் அடிப்படையாகக் கோடுகள் இருக்கின்றன என்ற ஒரு கருத்தை முன்வைத்தார். பழங்குடி மக்கள் படங்கள், பண்டைய இலக்கியங்களைத் தாங்கிய பனை ஓலை ஏடுகள், கல்வெட்டுகள், வீட்டு வாசல்களில் மலரும் கோலங்கள், கோயில்களிலும குகைகளிலும் உள்ள சுவரோவியங்கள் என அனைத்திலும் அந்தக் கோட்டோவிய மரபு இருக்கிறது என்றார். அவருடைய படைப்புகளும் அந்த மரபை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆனால், தமக்கென ஒரு சுதந்திரமும் சமகாலத் தன்மையையும் கொண்டிருந்தன என்று ஓவியர்கள் எல்லோருமே குறிப்பிடுகிறார்கள்.

அவரது கோடுகள் சில இடங்களில் உடைந்திருக்கும். அந்த உடைப்புகள், ஓவியத் திரையைத் தாண்டி ‘வெளி’ என்பதற்குள் பார்வையாளர்களைக் கொண்டுசெல்வதற்குத் திறந்துவிடப்பட்ட கதவுகளாக இருந்தன என்கிறார் ஒரு ஓவியத் திறனாய்வாளர். சில ஓவியர்கள் பரந்த வெளியைப் படைப்பதாகச் சொல்லிக்கொண்டாலும் உண்மையில் தமது மனதுக்குள்ளேயே அல்லது ஒரு சிறு வட்டத்திற்குள்ளேயே நின்று விடுவது உண்டு. அவர்களிலிருந்து மாறுபட்டார் ஆதிமூலம். ஓவியப் படைப்புகள் என்னதான் உலகப் புகழ் பெற்றாலும், நல்ல பொருளாதாரத்தைத் தந்தாலும் தாம் நேசித்த எளிய மக்களிடமிருந்து விலகியேதானே இருக்கின்றன என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சைதை கலை இரவில் முதன் முதலாய் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஊர் கூடி ஓவியம் வரைவோம்’ நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டபோது தமது ஏக்கத்திற்கு ஒரு வடிகால் கிடைத்ததாய் உணர்ந்தார் போலும். உடனே ஒப்புக் கொண்டதுடன், குறித்த நேரத்திற்கு வெகுநேரம் முன்னதாகவே வந்து, பெரிய திரை அமைக்கப்படும் வரை காத்திருந்தார். சேரிக் குழந்தைகளும் எளிய மனிதர்களும் தயங்கி நின்றபோது, அவர்களிடம் தாமே சென்று வண்ணங்களையும் தூரிகைகளையும் எடுத்துக்கொடுத்தார். அவர்களை ஈடுபடுத்தும் வகையில் எளிமையான சித்திரம் ஒன்றைத் திரையில் கொண்டுவந்தார். மற்ற ஓவியர்களும் அதேபோல் இறங்க, அவர்களையெல்லாம் பார்த்து வியப்போடு நின்ற அந்த மக்கள் பின்னர் தாங்களும் திரையைத் தூரிகையால் தொட்டபோது கண்கலங்கப் பார்த்துக்கொண்டிருந்தார் ஆதிமூலம்.

“புகழ்பெற்ற கண்காட்சிக் கூடங்களில், சிறந்த திறனாய்வாளர்கள் முன்னிலையில் நான் என் ஓவியங்களைப் படைத்ததுண்டு. ஆனால் இன்று இங்கே இந்த எளிய மக்களோடு சேர்ந்து வரைந்த அனுபவம் என்றென்றும் என்னால் மறக்கமுடியாதது,” என்று கூறிய அவரது குரலில் உண்மையான நெகிழ்ச்சி இருந்தது. சில நாட்கள் கடந்தபின் லலித் கலா அகடமி வளாகத்தில் நடந்த ஒரு கண்காட்சிக்கு வந்த அவர் சக ஓவியர்களிடம், “வண்ணங்களின் முழுமையை நாம் எங்கெங்கோ தேடிக்கொண்டிருக்கிறோம். சமூகத்தை, எளிய மக்களை நாம் நெருங்குகிற இடத்தில்தான் அது இருக்கிறது,” என்று சொன்னார்.

மக்களுக்காக இயங்குவோர் மீதான இந்த மரியாதையின் காரணமாவும், மானுடப் பார்வை காரணமாகவும்தான், இந்த அழகிய பரந்த உலகத்தைத் தனது கல்லாப் பெட்டியாகச் சுருக்க முயலும் ஏகாதிபத்தியத்தின் மீது அவருக்குக் கோபமும் இருந்தது. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைக்கு எதிராக, செவ்வானத்தின் கீழ், ஃபிடல் தலைமையில் போராடும் கியூபா மக்களுக்கு உதவுவதற்காக இந்தியாவில் முயற்சி மேற்கொண்டபோது, விலை மதிப்பற்ற தமது ஓவியப்படைப்பு ஒன்றை வழங்கினார் ஆதிமூலம். அவரது இரங்கல் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார் தெரிவித்தார் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.ரா.வரதராசன். சென்னையில் நடந்த அந்த இரங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிற்பி தட்சிணாமூர்த்தி, ஓவியர்கள் ட்ராட்°கி மருது, வீரசந்தனம் உள்ளிட்ட ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அவர் தமக்குச் செய்த உதவிகளைக் குறிப்பிட்டார்கள். கலைஞர்கள் காழ்ப்புணர்ச்சிக்குள் சிக்கியவர்கள் என்ற பொதுவான நினைப்பை உடைத்தெறிந்தவர் அவர். சிக்கலான நாட்களில் பணஉதவி செய்ததோடு, வளரும் படைப்பாளிகள் உரிய அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளின் மூலமாகவும் உதவினார். ஆனால், மற்றவர்களின் வலிபொறுக்க முடியாத அந்த மூத்த படைப்பாளி பிற்காலத்தில் புற்று நோயின் வலியால் துடித்தபோது சக ஓவியர்களும் இலக்கியவாதிகளும் மற்ற கலைஞர்களும் செய்வதறியாது துடித்தனர். அந்த வலி, இந்தத் தமிழ் ஆண்டின் துவக்கமாகிய பொங்கல் நாளில் முடிவுக்கு வந்தது.

அந்த வலியோடும் அவர் இளம் ஓவியர்களின் கண்காட்சிகளுக்கு நேரில் வருவது, கலை தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்பது என்று இயங்கிவந்தார். அப்படிப்பட்ட சில நிகழ்ச்சிகளிலும் தொலைபேசி மூலமுhகவும் அவரோடு பேசியிருக்கிற எனக்கு அவரோடு ஒரு நேர்காணல் நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. தாம் குடியிருந்த சோழமண்டல ஓவிய கிராமத்திற்கு நேரில் வரவும், தம்முடைய படைப்புகளையும் மற்ற ஓவியர்களின் ஆக்கங்களையும் பார்க்கவும் அழைப்பு விடுத்தார். அந்த அருமையான அனுபவத்தின் பின்னணியோடு அவருடன் பேசுகிற வாய்ப்பை என்னால் ஏற்படுத்திக்கொள்ள முடியாமலே போனது ஒரு தனிப்பட்ட சோகம்.“குழந்தையாக இருந்தபோதும் சரி, வளர்ந்த பின்னரும் சரி, என் மனதில் எப்போதும் இயற்கை நிரம்பியிருக்கிறது. இயற்கையின் அழகையும் எல்லையற்ற பரப்பையும் நான் நேசிக்கிறேன், ஒரு பிரமிப்பில் மூழ்குகிறேன். அந்த நேசமும் பிரமிப்பும் நம் பார்வையெல்லைக்கு அப்பால் இருக்கிற உண்மையைத் தேடி என் படைப்பாக்க மனதைத் தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான் என் திரைச்சீலைகள் இயற்கைக்குள் என் முடிவடையாத பயணத்தைப் பிரதிபலிக்கின்றன. அந்தப் பயணம் சில நிலப்பரப்புகளையும் கடல்பரப்புகளையும் கண்டு நின்றுவிடுவதல்ல. வெளியின் பரப்பை மனதின் ஆழத்தில் தேடுகிற வண்ணமயமான பயணம் அது,” என்றார் அவர்.ஆதிமூலத்தின் அந்தப் பயண அனுபவம் இயற்கையின் படைப்புகளாகிய சக மனிதர்களை நேசிக்கிற கலைஞர்களுக்கு ஒரு தூரிகைக் கையேடாகத் துணைவரும்.

Friday 15 February 2008

ஏ.கே.வீ.

ஏ.கே.வீ.

ஏ.கே. வீரராகவன் என்பதால் அல்ல

ஏறுநடைபோட்டு எவரையும்

கேள்வி கேட்கத் தயங்காத

வீரன் என்பதால் ஏ.கே.வீ.

எனப் பெயர் பெற்றவனே

இன்று உனக்கு

இரங்கல் கூட்டம் என்றார்கள்.
இரங்கல் கூட்டங்கள்

இறந்து போனவர்களுக்குத்தானே?

உனக்கெதற்கு இங்கே இரங்கல் கூட்டம்?

எப்போது நீ இறந்துபோனாய்?

மனிதர் மனங்களில் மட்டுமல்ல

பூமியிலேயே ஈரம் உள்ளமட்டும்

நீ வாழ்ந்துகொண்டிருக்கிறாய்

என்றுதானே அர்த்தம்?

சமூகத்தில் அநீதிகள் நடப்பதை

கண்டும் காணாமல் இருந்துவிடாமல்

தட்டிக் கேட்கிற புத்தி

ஒரே ஒருவருக்காவது இருக்கிற வரையில்

உயிரோடு நீ வாழ்ந்து எல்லாவற்றையும்

உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்

என்பதல்லவா உண்மை?

அதற்காகத்தானே உன் உடலை

எரியக் கொடுத்தாலும்

உன் விழிகளை மட்டும் யாருக்கோ கண்

தெரியக் கொடுத்துவிட்டுப் போனாய்?
பிறகெதற்கு இரங்கல் கூட்டம்?

இல்லை, இது உன் பெயரால் கூடுவதற்கு

நாங்கள் கொண்ட நாட்டம்.

ஏதாவதொரு சாக்குச் சொல்லி

எங்களையெல்லாம் ஒன்றாய்ச் சந்திக்க

நீ ஏற்பாடு செய்தாய்

சர்க்கரைப் பொங்கல் புளியோதரையோடு

எத்தனையோ கூட்டம்.

பொங்கலிலும் புளியோதரையிலும்

பொங்கி வழிந்தது நெய் அல்ல

அவ்வளவும் உன் பாசத்தின் ஊட்டம்.

உன் நினைவால் கூடுகிறபோது

கலைந்து கரைந்து போகும்

லட்சியப் பாதையில் கண்ணை மறைத்த

சுயநலப் பனி மூட்டம்.
உன் இளமைக் காலத்தில்

விரதங்களின் சடங்குகளால் அல்ல

வறுமையின் கொடுமைகளால்

பட்டினி கிடப்பது உனக்குப்

பழகிப் போன ஒன்றாமே...

அதனால்தான் சமுதாயத்திலேயே

வறுமையை ஒழிக்கப் புறப்பட்ட

இயக்கத்தின் தோழர்கள் எவரும்

பட்டினி கிடக்க நீஅனுமதித்ததில்லை...
பக்தியால் அன்னதானம் வழங்குவோருக்கும்

பரம்பொருளின் கடாட்சம் பெறும் நோக்கமிருக்கும்

தொண்டர்களுக்கு சோறு போடுவோருக்கும்

தொடர்ந்து பதவியின் மேல் ஒரு கண்ணிருக்கும்

பாசத்தோடு ஒட்டிக்கொண்டு

பரிவைப் பொழிந்த உனக்குள் துளி கூட

பதவி பிடிக்க ஆள் பிடிக்கும்

பாசாங்கு அரசியல் ஒட்டியதில்லை.

ஆனால் ஏ.கே.வீ.,

தோழர்களுக்கு உரிமையோடு

தோள் கொடுத்தாயே அதில்

ஒரு உள்நோக்கம் இருந்தது-

அதுபாவகரமான உள்நோக்கமல்ல-

ஒருபாவத்துக்குப் பரிகாரம் தேடுவது;

உன் மூத்தோருக்கும் முன்னோர்

இழைத்த பாவம் அது.
பிறப்பால் தாழ்ந்தவர்கள்- பிரம்மனின்

படைப்பால் உயர்ந்தவர்கள் என்றெல்லாம்

அக்கிரமக்கார விதிகளை- திணித்த

அக்கிரகார நீதிகளை

அடியோடு வெறுத்தது உன் சித்தம்

அதற்காக நீ செய்தாய் பிராயச்சித்தம்.

வர்க்கமாய் உழைக்கும் மனிதர்களைச் சேர்க்கும்

மார்க்சிய நூல் படித்தாய்

வர்ணமாய்ப் பிரித்து மானுடம் சிதைக்கும்

மார்பு நூல் அறுத்தாய்.

நீ பணியாற்றிய தொலைபேசித்துறை

தொலைந்து போகாமல் இன்னும்

மக்கள் சொத்தாகவே ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றால்

உன் போராட்ட வியர்வையும்பசையாய் இருப்பதால்தான்.
செல்போன் வாங்கிய பின் அதில்

மெஸேஜ் அனுப்புவது எப்படியென

உனக்குத் தெரிந்ததில்லை- ஆனால்

நீ வாழ்ந்த வாழ்க்கையில் எமக்கெல்லாம்

மெஸேஜ் இருக்கிறது-

சக மனிதர்களை நேசி.

எங்களையும் குடும்பமாக நினைத்தாய்

உன் குடும்பத்தை எங்களோடு இணைத்தாய்.

நீ அமைத்த அறக்கட்டளையால்

விதியின் கட்டளையை உடைத்து

கல்வி பெற்றவர்கள் இருக்கும்போது...

சிந்தனைகள் தொடரும்போது...

நீ நடந்த வழியின் வெளிச்சம் படரும்போது...

நீ இறந்துபோனதாய் எப்படிக் கொள்ளமுடியும்?

உனக்கு நான் செலுத்த மாட்டேன்

இறுதி அஞ்சலி.

இறுதியாய் அஞ்சலி செலுத்திவிட்டு

கணக்கு முடிக்க நீ ஒன்றும்

கடந்த காலமாகிவிடவில்லை...

நிகழ் காலமாய் நீயும் உன் நேர்மையும்

நீடித்திருக்கும்போது

தவறுசெய்யும் போதெல்லாம்

டேய் எனும் உன் குரல்

திருத்திடும்போது
இறுதி வணக்கம் அல்ல

இறுதிவரையில் உனக்கு என் வணக்கம்.

(எமக்கெல்லாம் ஒரு ஊக்கமருந்தாய் விளங்கிய அருமைத்தோழர் ஏ.கே.வீ. மறைவையொட்டி தீக்கதிர் அலுவலகத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் வாசித்தது)

Friday 25 January 2008

விவாதம்

தாய்மொழி வழி பொதுக் கல்வி:
ஊடகங்களுக்கு உண்டா
உண்மை அக்கறை?

“தாய்மொழி வழி பொதுக் கல்வியும் சமுக மாற்றமும்” என்ற ஆய்வுத் தலைப்பே ஒன்றை உணர்த்துகிறது. இது, சமுக மாற்றத்தை விரும்புகிற முற்போக்கு சக்திகளுக்கும் சமுகம் மாறாமல் அப்படியே தேங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிற பிற்போக்குவாதிகளுக்கும் இடையேயான நெடுங்காலப் போராட்டத்தின் ஒரு அங்கம்தான்.சமுகம் பலப்பல மாற்றங்களை அடைந்து வந்திருப்பதைத்தான் நெடுங்கால வரலாறு காட்டுகிறது. இந்தப் போராட்டத்திலும் இறுதி வெற்றி முற்போக்காளர்களையே வந்து சேரும். ஆனால், தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய் என்பதால், தாய்மொழி வழி பொதுக் கல்வி, அதன் வழியில் சமுக மாற்றம் என்பதும் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள் போன்றோரின் நல்ல நினைப்பால் மட்டும் நிகழ்ந்துவிட முடியாது. மக்கள் திரள் பங்கேற்கிற, விரிவான, இடையறாத போராட்டம்தான் அதனை நிகழ்த்தும். மக்கள் திரளுக்கு இந்தச் சிந்தனைகளை எடுத்துச் செல்லக் கூடியவை ஊடகங்கள். ஆகவே, இதில் ஊடகங்கள் என்ன செய்தன, என்ன செய்கின்றன, என்ன செய்ய வேண்டும் என்ற விவாதமும் முக்கியத்துவம் பெறுகிறது.

வேறுபடும் நிலைப்பாடுகள்
முதலில் தாய்மொழி வழிக் கல்வி குறித்த எனது கருத்தினைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். பொதுவாக இரண்டு விதமான அணுகு முறைகள் உள்ளன. ஒன்று, உணர்ச்சிவசப்பட்ட நிலை. மொழியைத் தெய்வ நிலைக்கு உயர்த்தித் தொழுகிற நிலை. “மொழியே எனது மூச்சு,” “எனது உயிரையே அதற்குத் தரத் தயார்,” “மொழியைக் குறை கூறுபவர்கள் இனப் பகைவர்கள்” என்றெல்லாம் மனதில் வரித்துக் கொள்ளும் நிலை. இந்நிலைப்பாடு உடையோரின் உணர்வையோ உண்மைத் தன்மையையோ ஐயங்கொள்வதற்கில்லை.

இன்னொரு நிலை, அறிவியல் கண்ணோட்டம். மொழி ஒரு வெளிப்பாட்டுக் கருவி, மக்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகவும் வினையாற்றுகிற கருவி என்ற சமுக அறிவியல் பார்வை. இந்த இரண்டாவது அணுகுமுறைதான் என்னுடைய நிலைப்பாடு. அதே நேரத்தில் மொழி உரிமை, மொழிக்கான இடம், சம வாய்ப்புகள் ஆகியவற்றுக்காகப் போராடுவதில், சற்றும் குறையாத உணர்வுள்ள நிலைப்பாடு இது.

மொழிப் புலமையைத் தமது சொந்த வாய்ப்புகளுக்கும் ஆதாயங்களுக்கும் புகழுக்கும் பயன்படுத்திக் கொள்கிற இன்னொரு வகையினரின் நிலை ஒன்றும் இருக்கிறது. எந்த அளவுக்கு வெளியே மொழிக்காக வீராவேசமாகக் குரல் எழுப்புகிறார்களோ அந்த அளவுக்குத் திரை மறைவில் பல சமரசங்களுக்குத் தயாராக இருப்பார்கள் இவர்கள். இத்தகையோரின் பொய்மையால், தாய் மொழி குறித்த சிந்தனைகள் மீதே பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாமல் போய்விடுகிறது. ஏற்கெனவே ஆங்கில வழிக் கல்வியின் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டாயமான மனநிலைகள், அரசியல் - பொருளாதாரம் சார்ந்த கட்டுமானங்கள், மறுக்கப்படும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றால் சமுதாயத்தில் தாய்மொழி வழி கல்வி தொடர்பாக எதிர்மறையான எண்ணங்களே நிலவுவதைப் பார்க்கிறோம். இந்த சமுகச் சூழலோடு, மேற்படி பொய்மைவாதிகள் ஏற்படுத்தியிருக்கும் எண்ணங்களையும் எதிர்த்தே சரியான தாய் மொழி வழிக் கல்வி பற்றிய சிந்தனைகளை மக்கள் திரளிடையே கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.

அறிவியல் கண்ணோட்டம்
அதென்ன அறிவியல் கண்ணோட்டம்? இதைப் புரிந்து கொள்ள அறிவியல் மேதையாக இருக்க வேண்டியதில்லை. ஒருவர் தமது தாய் மொழியில் - குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றோரிடமும் மற்றோரிடமும் எந்த மொழியைக் கேட்டும் பேசியும் வளர்ந்தாரோ அந்த மொழியில் - கல்வி பயில்கிற போது, ஒரு தகவலைக் கேட்கிற போது, படிக்கிற போது அவரது மூளை எவ்வித சிரமமும் இல்லாமல் புரிந்து கொள்கிறது. மாறாக, வேறொரு மொழியின் வழியாக - அதில் அவர் எவ்வளவுதான் ஆற்றலும் திறமையும் புலமையும் பெற்றிருந்தாலும் - பயில்கிற போது, தகவல் கேட்கிற போது அவரது மூளை கடினமான பணியினைச் செய்கிறது. கேட்ட தகவலை தாய்மொழியில் மாற்றியே மூளை புரிந்து கொள்கிறது.அதே போல், வேறு மொழியில் ஒன்றைச் சொல்கிற போதும், எழுதுகிற போதும் மூளை நேரடியாக அந்த மொழியில் யோசிப்பதில்லை. தாய் மொழியில்தான் யோசிக்கிறது. அதன் பின் அந்த வேறொரு மொழிக்குப் பெயர்த்துத் தருகிறது. இப்படி மொழிபெயர்ப்பு மூலமாகவே எதையும் புரிந்துகொள்ள முடியும், சொல்ல முடியும் என்பது மூளைக்கு இரட்டை வேலை அல்லவா?

நாம் பிற மொழியினரோடு உரையாடுகிறோம், அவர்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றால் அங்கே நமது மூளை இந்த இரட்டை வேலையைச் செய்வது தவிர்க்க இயலாதது, தேவையானது. ஆனால், நம்முடைய மக்களுடனேயே உரையாடுவதற்கும், நமது வட்டாரத்திலேயே கல்வி பயில்வதற்கும் வேறு மொழி என்பது மூளைக்குத் தேவையற்ற அழுத்தத்தையும் சுமையையும் தருகிற வேலை. இப்படிப்பட்ட இரட்டை வேலைத் திணிப்பால் மூளையின் இயற்கையான ஆக்க ஆற்றல் மங்குகிறது. சுயமாக ஆராய்ந்து கண்டுபிடிக்கிற திறன் மட்டுப்படுகிறது.

நமது நாட்டில் அருமையான அறிவியல் - தொழில் நுட்ப வல்லுநர்கள் இருக்கிறார் கள். அவர்கள், ஏற்கெனவே வெளி நாட்டார் கண்டுபிடித்த அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத் துவதிலும் பணியாற்றுவதி லும் வல்லவர் களாக இருக்கி றார்கள். ஆனால் அறிவியல் கண் டுபிடிப்பாளர்களாக இருக்கி றார்களா? கணினியை சிறப்பாகக் கையாளக் கூடியவர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் உடனடியாகப் பணியில் நியமித்துக் கொள்கிற அளவுக்கு, இங்கே மிகுதி. ஆனால் கணினியைக் கண்டுபிடித்தவர்கள் நாம் இல்லை. இதற்கு ஒரு முக்கியமான காரணம், தாய்மொழி வழிக் கல்வி இல்லாததால், மொழிபெயர்க்கிற இரட்டைப் பணியால், மூளையின் கண்டுபிடிப்புத் திறன் கட்டுப்படுத்தப்பட்டதுதான். கணினியைக் கண்டுபிடித்தவர் தம் தாய் மொழியில் கற்று, ஆராய்ந்து கண்டுபிடித்தார். தாய் மொழியில் கல்லாததால் நம் வல்லுநர்கள் கணினியைக் கையாள்கிறவர்களாக மட்டுமே உள்ளனர்.

அறிவியல் ஞானம் நமக்கு ஒன்றும் அந்நியமானது அல்ல. வானியலில், வேளாண்மையில், கட்டடக் கலையில், நகர அமைப்பில், மருத்துவத்தில், கணிதத்தில் நம் முன்னோர்களின் சாதனைகளை வரலாற்றுப் பாடங்களில் படித்து இறும்பூதெய்துகிறோம். ஆனால், அவர்கள் அன்று தாய் மொழியிலேயே கற்றார்கள், ஆராய்ந்தார்கள், வாதிட்டார்கள், முடிவுக்கு வந்தார்கள் என்ற வரலாற்றுப் பாடத்தைப் பெற்றோமா? இக் கேள்விக்கு எதிர்மறை பதிலைத்தானே சொல்ல வேண்டியிருக்கிறது!

ஆக, மனித மூளையின் இயற்கையான செயல்பாட்டிற்கே தாய் மொழி வழிக் கல்வி தேவையாகிறது. சங்கடம் என்னவெனில், தாய் மொழி வழிக் கல்வியை வலியுறுத்துகிற தலைவர்கள், சான்றோர்கள் பலர் இந்த அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில்லை. அதே குறைபாடு காரணமாகத்தான், மக்கள் வெறும் மோக வயப்பட்டு வேற்று மொழியில் கல்வி பயில்வதற்கு ஓடுகிறார்கள் என்று மக்களின் மீதே இவர்கள் குற்றம் காண்கிறார்கள். சமுக-அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகினால், தாய்மொழி வழி கல்விக்குத் தடையாக இருக்கும் அரசியல் - பொருளாதார காரணங்கள் புலப்படும். அவற்றை மாற்றுவதற்கான போராட்டம் வலுப்படும்.

தடம் மாற்றிய தடைகள்
இந்தியாவைப் பொறுத்த வரையில் எங்கும் எதிலும் இந்தியும் ஆங்கிலமும் என்று ஆக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய பல இயக்கங்கள், இந்திக்கு மாற்றாக தமிழ் வழிக் கல்வி என்பதை முன்வைக்காமல் ஆங்கிலத்தை முன்வைத்தன. ஆங்கில வழி கல்வி நிறுவனங்களுக்கு வாய்ப்புகளும் வசதிகளும் அள்ளியள்ளித் தரப்பட்டன.

இன்னொரு பக்கம், பள்ளியிறுதி வகுப்பு வரையில் தமிழில் பயின்றாலும் உயர் கல்விப் பிரிவுகள் அனைத்தும் ஆங்கில வழியில்தான் இருக்கின்றன. அந்த உயர் கல்வி பயின்றோருக்கே மரியாதையான ஊதியத்தில் மரியாதையான வேலை நியமனங்கள் கிடைக்கும். இந்நிலையில், உயர் கல்வி நிறுவனங்களில் எளிதில் இடம் கிடைக்க வேண்டுமானால், பள்ளிக் கல்வியையும் ஆங்கிலத்தில் பெறுவதே புத்திசாலித்தனமானது என்ற முடிவுக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

வாழ்க்கையோடு தொடர்புள்ள சிக்கல் இது. இந்தக் கண்ணோட்டம் முன்வைக்கப்படாததாலும், முதலில் குறிப்பிட்ட சில பொய்மைவாதிகளின் செயலாலும், இன்று தாய் மொழி வழிக் கல்விக்கான போராட்ட அறைகூவல் முன்போல் இளைஞர்களையும் மாணவர்களையும் பொதுமக்களையும் ஈர்க்கவில்லை. மாறாக, அது ஏதோ காலத்திற்கு ஒவ்வாத பழமைவாதிகளின் கூச்சல் போல், முன்னேற்றத்தைத் தடுக்கும் முட்டுக்கட்டை போல் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அறிவியல் உண்மைகள் பழமையாகிவிடுவதில்லை. எனவே, சரியான அறிவியல் கண்ணோட்டத்தை மக்களிடையே எடுத்துச் சென்றால் நிச்சயமாக அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

ஊடகங்களின் பாத்திரம்
அப்படி எடுத்துச் செல்கிற வாய்ப்பு ஊடகங்களுக்கு நிறைய இருக்கிறது. தமிழ் மொழி வட்டாரத்துக்கு வட்டாரம் மாறுபட்ட முறையில் பேசப்படுவது தெரிந்ததுதான். நெல்லைத் தமிழ், மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், முகவைத் தமிழ், குமரித் தமிழ், வடக்கு எல்லைத் தமிழ், சென்னைத் தமிழ் என்று தமிழிலேயே எத்தனை மாறுபாடான உச்சரிப்பு முறைகள்! இதிலேயே அடித்தட்டு மக்களின் தமிழ், அக்கிரகாரத்துத் தமிழ் என்றெல்லாமும் இருக்கிறது. இத்தனை மாறுபாடுகளைத் தாண்டி செய்திகளும் கருத்துக்களும் தமிழக மக்களைச் சென்றடைவதில் ஊடகங்கள் பெரும் பணியாற்றிவருகின்றன.

“பத்திரிகைத் தமிழ்” என்றே சொல்லத்தக்க வகையில், ஒரு பொதுவான தமிழ் நடையும், சொல்லாட்சியும் பரவலாகியுள்ளன. இது எளிதில் நடந்துவிடவில்லை. தொடக்கத்தில் இதழியல் துறையில் நுழைந்தவர்கள் பிராமணர்கள் என்பதால், பல ஏடுகளை நடத்தியவர்களும் அவர்கள்தான் என்பதால், ஒரு காலகட்டம் வரையில் பத்திரிகை எழுத்துக்களிலும் அகிக்ரகார நெடி விஞ்சியிருந்தது. மற்ற பிரிவினர் இதழியல் துறையிலும் எழுத்துக் களத்திலும் காலடி வைத்த பிறகு அந்த நெடி மறையலாயிற்று. ஆனாலும் ஜலம் தண்ணீராவதற்கும், அபிப்ராயம் கருத்தாவதற்கும், அபேட்சகர் வேட்பாளராவதற்கும், அக்ராசனர் தலைவராவதற்கும் வெகுகாலம் பிடித்தது. இன்று பொதுவான ஒரு ஊடக மொழி உருவாகியிருக்கிறது. அவரவர் வட்டார மொழியிலேயே ஊறிப்போனவர்களும் இந்தப் பொது மொழியை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதே போல், கதைகளின் வாயிலாக, ஒரு வட்டாரத்தின் பேச்சுத் தமிழை மற்ற வட்டாரத்தினரும் சுவைக்க வைத்ததிலும் ஏடுகள் உள்ளிட்ட ஊடகங்கள் அரும்பங்காற்றியுள்ளன. இதில் திரைப்படத்தின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. அதே நேரத்தில், சென்னைத் தமிழ் என்பதை, ஒரு பெருநகரத்தின் அடித்தட்டு உழைக்கும் மக்களுடைய மொழியாகப் பார்க்காமல் கேலிக்கு உரியதாகச் சித்தரிக்கும் போக்கு இன்றளவும் பெரும் ஊடகங்களில் நீடிக்கிறது. திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், பத்திரிகைகளில் “இன்னாபா” என்று விளிப்போர் நையாண்டிப் பாத்திரங்கள், “ரவுடிகள்” என்ற வரிசைகளிலேயே வைக்கப்படுகிறார்கள். அவர்கள் பேசுவது தமிழ்க் கொலை என்பதாக கிண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறது.

இன்று நடப்பது என்ன?
ஆனால், இன்று இந்த ஊடகவியலாளர்கள் எந்த அளவுக்குத் தமிழைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்? பத்திரிகைகளின் பெயர்களே “ஜூனியர் .....,” “..... ரிப்போர்ட்டர்,” “..... டுடே,” “சண்டே .....” என்றுதான் சூட்டப்பட்டுள்ளன. தொலைக்காட்சிகளோ “..... டிவி,” என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கின்றன (‘மக்கள் தொலைக்காட்சி’ மட்டும் விதிவிலக்கு). வானொலியில் பண்பலை நுட்பம் வந்து, அதில் தனியார் நுழைவுக்குக் கதவு திறக்கப்பட்டதும் அதில் நுழைந்த எல்லோரும் “..... எஃப் எம்” பெயர் சூட்டிக் கொண்டார்கள். வானொலி என்று அழகாகத் தமிழில் சொல்லி வந்த பொதுத் துறையின் அகில இந்திய வானொலி நிறுவனம் கூட தனது பண்பலைகளுக்கு “ரெயின்போ” “கோல்டு” என்றுதான் போட்டி நடத்திப் பெயர் தேர்வு செய்தது.

ஊடக நிறுவனங்களின் பெயர்களே இப்படி இருக்கிற போது, அவை வெளியிடும் செய்திகள், கட்டுரைகள் போன்றவற்றின் தலைப்புகள் அப்பட்டமான ஆங்கிலக் கலப்போடு வருவதில் வியப்பில்லை. “சைடு டிஷ்,” “மர்டர்,” “ஐட்டம்,” “அட்டாக்” என்பன போன்ற தலைப்புச் சொற்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. நுழை வாயில்களாகிய தலைப்புகளே இப்படி இருக்குமானால் உள்ளே சென்றால் எப்படி இருக்கும் என்று என்பதற்கு, கண்ணில் படுகிற எந்தவொரு பெரிய நிறுவனத்தின் பத்திரிகையையும் கையில் எடுத்து விரித்துப்பார்த்தால் ஒவ்வொரு கட்டுரையும் சாட்சியமாக இருக்கும்.

மொழிக் கலப்பே கூடாது என்று கதவடைத்துக் கொள்வதில் எனக்கும் உடன்பாடில்லை. சுவை கருதியும், சில இடங்களில் குறிப்பிட்ட உணர்வை ஏற்படுத்துவதற்காகவும் போகிற போக்கில் ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம்தான். நடைமுறை வாழ்க்கையில் நாம் நமது உரையாடல்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்கிறபோது, அதன் பிரதிபலிப்பாக எழுத்துக்கள் அமைவது தவிர்க்க இயலாதது.

ஆனால் ஆங்கிலத்தைத் தவிர வேறு வழியே இல்லை என்பது போல், நல்ல தமிழில் சொல்வது என்பது ஒரு அநாகரிகச் செயல் என்பது போல் இந்த முன்னணி ஊடகங்கள் நடந்து கொள்கின்றன. இது ஏற்கெனவே ஒரு கட்டாயச் சூழலில் தள்ளப்பட்டிருக்கும் மக்களிடையே தமிழில் எழுதுதல், படித்தல், பேசுதல், கேட்டல் என்ற செயல்களின் மீது ஒரு அசூயை உணர்வையும், அலட்சிய எண்ணத்தையும், அக்கறையற்ற போக்கையும் மேலும் கெட்டிப்படுத்துகிறது. பல உண்மைகளின் மேல் வெளிச்சம் பாய்ச்சும் அரிய பணியைச் செய்கிற ஊடகங்கள் தாய்மொழி வழி கருத்துப் பரிமாற்றம் என்பதில் உள்ள அறிவியல் உண்மையைப் புரிந்து கொண்டு இதில் ஆக்க நலமார்ந்த அணுகுமுறைகளை வகுத்துச் செயல்பட வேண்டும்.

விவாதத்தை விரிவாக்குக
அடுத்து, இந்த விவாதத்தையே வெகுமக்கள் தளத்திற்குக் கொண்டு செல்கிற பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கிறது. யாராவது ஒரு நடிகை ஏதாவது ஒரு சொந்தக் கருத்தை வெளிப்படுத்திவிட்டால் அவர் கூறியது சரிதானா என்று பட்டிமண்டபம் நடத்துகிற ஊடகங்கள் இப்படிப்பட்ட விவாதங்களை நடத்த முன்வருவதில்லை. அப்படியே முன்வந்தாலும், தாய் மொழி வழிக் கல்விக்கு ஆதரவாக ஐந்து பேர், எதிர்ப்பாக ஐந்து பேர் என்று கருத்துக்களை வாங்கித் தொகுத்துப் போடுவதோடு தமது கடமையை முடித்துக் கொள்கின்றன. இந்த “நடு நிலை” எந்த விதமான மாற்றுச் சிந்தனையையும் வளர்க்க உதவாத நழுவு நிலையே ஆகும்.

இதிலேயே இன்னொரு வகையான நடுநிலையும் இருக்கிறது. தாய் மொழிக் கல்வி குறித்த ஒரு விவாதத்தை நடத்த முடிவு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, முதலில் குறிப்பிட்டதைப் போன்ற, எல்லாம் தமிழ் மயம் என்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அணுகுகிற ஒருவரையும், எப்போதும் ஆங்கில வழிக் கல்வியே நலம் என்று மக்கள் மனங்களில் ஏற்கெனவே உருவேற்றப்பட்டுள்ள கருத்தை வலியுறுத்தக் கூடிய ஒருவரையும் வாதிட வைப்பார்கள். இவருக்கு இரண்டு பக்கம் என்றால் அவருக்கு இரண்டு பக்கம் என்று ஒதுக்கி “சமத்துவத்தோடு” நடந்து கொள்வார்கள். ஆனால், இரண்டு முனைகளில் உள்ள இவர்களன்றி, மூன்றாவதாக, சமுக-அறிவியல் கண்ணோட்டத்தோடு இதனையும் கையாளக்கூடிய முற்போக்காளர்களை இது போன்ற விவாதங்களில் சேர்த்துக் கொள்வதே இல்லை! அரசியலில் எந்த சக்தி முன்னுக்கு வரவேண் டும், பொருளாதாரத் தில் எந்தக் கொள்கை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றெல்லாம் உறுதியான கருத்துக்கள் உள்ள இந்த ஊடகங்கள் அவற்றை மக்கள் மனங்களில் பதிய வைக்கப் பல வகையான உத்திகளைக் கையாள்கின்றன. எடுத்துக்காட்டாக, இடதுசாரிகள் குறித்து எதிர்மறைக் கருத்தைப் பரப்புவதில் வணிகப் போட்டியை மீறிய ஒரு ஒற்றுமையோடு பெரும்பாலான ஊடகங்கள் செயல்படுகின்றன. உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குதற்கான சட்டம், உண்மையான “தகுதி” உடையோரது வாய்ப்புகளைப் பறித்துவிடும் என்ற உண்மைக்கு மாறான எண்ணத்தை இந்த ஊடகங்களால் பரப்ப முடிந்தது. அந்த அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, தாய் மொழி வழிக் கல்வி குறித்து இந்த ஊடக நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால்தான் அது பற்றிய ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இவர்கள் தயாராக இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியதாகிறது.

அடிப்படையான மனித உரிமைகளில் ஒன்று, ஒருவர் எதையும் தமது தாய்மொழியில் அறிவதற்கான உரிமையாகும். எனவே மனித உரிமைகள் பாதுகாப்புக்காகக் குரல் கொடுக்கும் ஊடகங்கள், முதலில் தம்மளவில் இதனைச் செயல்படுத்துகிற விசாலமான, அறிவியல்பூர்வமான கொள்கைநிலையை மேற்கொள்ள வேண்டும். ஆட்சிமொழியாக ஆளுமை செய்தல், நீதிமன்ற மொழியாக தீர்ப்பளித்தல், நாடாளுமன்ற மொழியாக மக்களின் பிரச்சனைகளை விவாதித்தல் என்று பல தளங்களில் ஒரு மொழி வேரூன்றி நிற்கும்போதுதான் சமுக மாற்றம் எனும் இலக்கை நோக்கி ஒரு பேரடி எடுத்துவைக்க இயலும். தாய்மொழி வழி பொதுக் கல்வி அந்தப் பயணத்திற்கான ஒரு தலையாய தேவை. அதைப் பற்றிய சமுக விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் பரப்புவதிலும் வலுவாக்குவதிலும் ஊடகங்கள் பெரும் பங்காற்ற முடியும். பல்வேறு கோணங்களில் இதைப்பற்றிய சிந்தனைகளைத் திரும்பத் திரும்ப மக்களிடையே கொண்டு செல்தல், இதற்கான முயற்சிகள் குறித்த செய்திகளை உரிய முக்கியத்துவத்துடன் வெளியிடுதல், அரசியல் மட்டத்திலும், அரசாங்க மட்டத்திலும், இதர மட்டங்களிலும் இதற்குத் தடைக்கற்களாக இருக்கும் கோட்பாடுகள், விதிகள், நடைமுறைகள் போன்றவை பற்றிய உண்மைகளை வெளிக் கொணர்தல் எனப் பல வடிவங்களில் அந்தப் பங்கினை நிறைவேற்றுவது ஊடகங்களின் சமுகக் கடமை.

மாற்றமில்லாத சமுகம் தேக்கமடைந்த சமுகமாகவே கிடக்கும். தேக்கமடைந்த சமுகம் பின்னர் தேய்ந்து மறைந்த சமுகமாகவும் காணாமல் போய்விடும். இயற்கை விதியும், வரலாறும் இணைந்த இந்த உண்மை இது. தேக்கத்தை உடைக்க, மாற்றத்தை முடுக்க வேண்டும். முடுக்குவதற்கான உந்து விசைதான் இயக்கம். எந்தவொரு கருத்தும் மக்கள் இயக்கமாக, போராட்டமாக உருக்கொள்ளும் போதுதான் வெற்றி பெறும். ஊடகங்களின் பார்வையை மாற்றுவதாகவும் அந்தப் போராட்டம் பல முனைகளில் வியூகம் கொள்ளும். அதற்கு இப்படிப்பட்ட விவாதங்கள் துணையாகும்.

- சென்னை லயோலா கல்லூரியில் ஜன.10,11,12 தேதிகளில் “தாய் மொழி வழிக் கல்வியும் சமுக மாற்றமும்” என்ற தலைப்பில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் நிகழ்த்திய உரை.