Tuesday 22 May 2012

பாடப்புத்தக கார்ட்டூனும் எதிர்ப்புக்கு எதிர்ப்பும்

டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் அரசமைப்புச் சட்ட சாசனத்தை உருவாக்கித் தந்த மேதை.”
-இந்த அளவோடுதான் நம் பள்ளிப்பாடங்கள் நிற்கின்றன. அவர் காலமெல்லாம் எதற்காகப் போராடினார் என்ற உண்மை மாணவர்களுக்குத் தெரியாமலே மறைக்கப்பட்டு வந்திருக்கிறது. கல்வி வளாகங்களுக்கு வெளியே நடைபெறும் இயக்கங்கள்தான் உண்மையான பாடப் புத்தகங்களாக, அம்பேதகர் பற்றியும் இந்தியாவின் ஈடு இணையற்ற இழிவாகிய சாதியக் கட்டமைப்பு பற்றியும் கற்பிக்கின்றன. அரசமைப்புச் சட்ட சாசனத்தை உருவாக்கியவர் என்பதைத்தாண்டி மற்ற உண்மைகளைப் பாடப்புத்தகங்கள் பேச வேண்டாமா என்ற கேள்வி அவ்வப்போது எழுவதுண்டு. சிலர், அரசமைப்புச் சட்ட சாசனத்தைத் தயாரிப்பதற்கென்றே ஒரு சபை ஏற்படுத்தப்பட்டது என்கிறபோது அது ஒரு கூட்டு முயற்சிதானே, அம்பேத்கர் அதற்குத் தலைமை தாங்கியவர்தானே,  அப்படியிருக்க அதற்கான பெருமையை அவருக்கு மட்டும் தூக்கிக் கொடுப்பது என்ன நியாயம் என்று கேட்பதுண்டு.

அம்பேத்கர் பற்றி “விரிவாக” பேசவைப்பதற்காக என மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 11ம் வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் ஒரு நையாண்டிச் சித்திரம் (கார்ட்டூன்) சேர்க்கப்பட்டிருக்கிறது. 1949ல் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கார்ட்டூன் அது. ஒரு நத்தையின் மீது அம்பேத்கர் கையில் சவுக்குடன் அமர்ந்து அதை ஓட்டுகிறார், நத்தையையும் அம்பேத்கரோடு சேர்த்து நத்தையை வேகமாக ஓட்ட சவுக்கை வீசுகிறார் பிரதமர் நேரு.

நாடாளுமன்றத்திற்கு வெளியே பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சென்னையில் கண்டன இயக்கம் நடத்தியது. நாடாளுமன்றத்திற்கு உள்ளே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் பிரச்சனை கிளப்பினார்கள். குறிப்பிட்ட கார்ட்டூனையும், அதே போல் அரசியல் தலைவர்களை இழிவு படுத்தும் இதர கார்ட்டூன்களையும் அந்தப் பாடநூலிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்றத்தில் அரசு உறுதியளித்தது.

அதைத் தொடர்ந்து, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தில் (என்சிஇஆர்டி) இருந்து இரண்டு இயக்குநர்கள் விலகினார்கள். இந்திய குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர், பதவி விலகிய ஒருவரது அலுவலகத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில ஈடுபட்டதை ஒரு அரசியல் நாடகம் என்று தள்ளுபடி செய்துவிட முடியும். ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சி, சிவசேனா ஆகிய இரண்டு இந்துத்துவ சக்திகளுடன் கூச்சமே இல்லாமல் அரசியல் உறவு கொண்டிருக்கிற கட்சி அது.

இப்போது சில வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் அறிவுத்தளத்தில் செயல்படுகிறவர்களும், மேற்படி கார்ட்டூன் நீக்கப்படுவதை விமர்சித்திருக்கிறார்கள். 63 ஆண்டுகளுக்கு முன் வெளியான கார்ட்டூன் அது, அப்போது அதற்கு எவ்வித எதிர்ப்பும் வரவில்லை, இப்போது வருவது ஏன் என்று அவர்கள் கேட்கிறார்கள். பாடப்புத்தகத்தில் கார்ட்டூன் 6 ஆண்டுகளாக இருக்கிறது, இப்போது திடீரென அதை எதிர்க்க வேண்டிய தேவை என்ன என்றும் அவர்கள் கேட்கிறார்கள். ஆரோக்கியமான கல்விச் சூழலை இப்படிப்பட்ட எதிர்ப்புகள் சீர்குலைக்கின்றன, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கின்றன என்றெல்லாம் அவர்கள் வாதிடுகிறார்கள். தில்லி பல்கலைக்கழகத்தில் டாக்டர் கே. ராமானுஜத்தின் ‘300 ராமாயணங்கள்’ பாடத்திற்கு ஆர்எஸ்எஸ் சீடகோடிகள் எதிர்ப்புத் தெரிவித்து அதை நீக்க வைத்ததோடு இதை ஒப்பிடுகிறார்கள். இது ஒரு அடையாள அரசியல், அதற்கு இடதுசாரிகள் ஆதரவளிப்பது தவறு என்கிறார்கள்.

அரசமைப்பு சாசன சபையில் பலரும் இடம்பெற்றிருந்தபோதும் மற்ற உறுப்பினர்கள் யாருமே அதில் அக்கறையோ ஈடுபாடோ காட்டாத நிலையில், அம்பேத்கர் தன்னந்தனியராக உழைத்து அதைத் தயாரித்தார். நாடாளுமன்றத்தில் அது தாக்கல் செய்யப்பட்டபோது, இந்த உண்மையை அன்று டி.டி. கிருஷணமாச்சாரி அறிவிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மேசையைத் தட்டி ஆரவாரித்துத் தங்களது பாராட்டைத் தெரிவித்தார்கள். ஆகவேதான் அந்த சபைதான் பொறுப்பு என்றாலும், அதற்குத் தலைமை தாங்கிய அம்பேத்கர் தனிச்சிறப்புக்கு உரியவராகிறார். சொல்லப்போனால், சாசனத்தை இரவு பகலாக உழைத்துத் தயாரித்ததன் காரணமாகவே அவரது உடல்நலம் குன்றியது, அதன் பின் 6 ஆண்டுகளில் அவர் காலமானார். (நன்றி: தமுஎகச கவுரவத் தலைவர் பேராசிரியர் அருணன்).

63 ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிகையில் வெளியானபோது அது அன்றைய அரசியல் சூழலில் ஒரு கார்ட்டூன் அவ்வளவுதான். அன்றைக்கு அந்த ஆங்கிலப் பத்திரிகையை எத்தனை பேர் பார்த்திருக்க முடியும்? மேலும் அன்றைக்கு அதற்கு எதிர்ப்பு வரவில்லை என்பது கருத்துச சுதந்திரத்திற்கு அளிக்கப்பட்ட மரியாதை.

இன்று அது ஒன்றும் ஏதோவொரு பத்திரிகையில் மறுபதிப்புச் செய்யப்படவில்லை. ஒரு பள்ளிப் பாடத்திட்டத்தில், அதிலும் 16 வயதே நிரம்பிய 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் அந்த கார்ட்டூன் சேர்க்கப்படுகிறது, அப்படிச் சேர்க்க வேண்டிய கட்டாயம் என்ன? 6 ஆண்டுகளாக அந்தத் தவறு கவனிக்கப்படவில்லை என்பதால், இன்றைக்கு அதை சரிப்படுத்தக்கூடாது என்பது சரியான வாதம்தானா?

சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் ஆகப் பெரும்பாலும் நடுத்தர, உயர்நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் தலித் அல்லாத குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்தான். அந்தக் குழந்தைகளின் மனதில், அம்பேத்கர் பற்றிய மட்டமான சிந்தனையை இப்படிப்பட்ட கார்ட்டூன் ஊன்றி விடும். இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்டப்பூர்வ ஏற்பாடுகளை எதிர்ப்பவர்கள், சட்டத்தில் அதற்கு இடம் வகுத்தவர் என்ற முறையில் அம்பேத்கர் மீது கோபம் வளர்க்க முற்படுகின்றனர். ஒடுக்கப்பட்டவர்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களும் கல்வி உரிமை பெற்றதை சகித்துக்கொள்ள முடியாத சாதிய ஆதிக்க உணர்வோடு கலந்த இந்த கோப யாகத்துக்குத்தான் அந்த கார்ட்டூன் துணை செய்யும.

சும்மாவே நம் நடுத்தர வர்க்கம் அரசமைப்பு சாசனத்தை மதிப்பதில்லை. தேர்தலில் வாக்களிக்க வராமல் கைவிரலைக் கரைபடியாமல் வைத்திருப்பதை நாகரிகமாகக் கருதிப் பீற்றிக்கொள்வது இந்த வர்க்கம்தான். அந்த இளக்கார மனநிலையை வளரும் மாணவப்பருவத்திலேயே ஊட்டி வளர்க்கவே இந்த கார்ட்டூன் மறுபதிப்பு உதவும்.

என்சிஇஆர்டி பொறுப்பாளர்கள் இப்படிப்பட்ட உள்நோக்கங்களோடுதான் இந்த கார்ட்டூனைச் சேர்த்தார்கள் என்று சொல்வதறகில்லைதான். ஆனால், இந்தியச் சூழலின் பின்விளைவுகள் பற்றிய முன் சிந்தனையின்றி மேலோட்டமான பார்வையோடு அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியும். இன்னும் நுட்பமாகச் சொல்வதென்றால், பிராமணர் அல்லாதாரைக் கொண்டு, தனது சாதிப்பாகுபாட்டு ஆதிக்க அரசியலை நிலைநாட்டிக்கொள்வது பிராமணியத்தின் ஒரு வெற்றிகரமான உத்தி.

எதிர்ப்பில் முழு நியாயம் இருக்கிறது. அந்த எதிர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் சிறிதும் நியாயம் இல்லை.

Monday 7 May 2012

பிள்ளையார் சிலை குடித்த பாலும் ஏசு சிலை வடித்த கண்ணீரும்

சனால் எடமருகு - ஒரு பகுத்தறிவாளர். இவர் மீது மும்பை நகரின் மூன்று காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்படுமானால் இவருக்குக் குறைந்தது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும்.

இவர் செய்த குற்றம்? “மக்களின் மத நம்பிக்கையைப் புண்படுத்தினார், மதப் பகையுணர்வைக் கிளறிவிட்டார், அமைதியை சீர்குலைக்க முயன்றார்...”

என்ன நடந்தது? மும்பையின் இர்லா சாலையில் ஒரு வேளாங்கன்னி ஆலயம் இருக்கிறது, அதன் வளாகத்தில், ஏசு சிலுவையில் தொங்குகிற சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம், திடீரென ஏசு சிலையின் பாதத்திலிருந்து தானாகவே சொட்டுச் சொட்டாக நீர் சொட்டத் தொடங்கியிருக்கிறது. அது ஏசுவின் கண்ணீர் என்றும், அதற்கு நோய்களைப் போக்கி இல்லங்களைப் புனிதப்படுத்தும் சக்தி இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதை நம்பிய ஒரு பகுதி மக்கள் வரிசையில் நின்று சொட்டுவடி நீரை பாத்திரங்களிலும் பாட்டில்களிலும் பிடித்துச் சென்றிருக்கிறார்கள்.

தகவலறிந்து இரண்டு வாரங்களில் அங்கே வந்து ஆராய்ந்த எடமருகு, அரை மணி நேரத்தில் உண்மையைக் கண்டுபிடித்தார். சிலுவை ஊன்றப்பட்டுள்ள இடத்தில் தரைக்கடியில் சேர்ந்துள்ள தண்ணீர், அழுத்தம் காரணமாக சிலுவையின் மெல்லிய, முடி அளவிலான கோடுகள் போன்ற இடைவெளிகள் வழியாக மேலே எறி வழிகிறது என்பதே அந்த உண்மை. அறிவியல் பாடத்தில் இதை “தந்துகி விளைவு” என்பார்கள். தாவரங்களுக்கு இந்த இயற்கையான விளைவின் காரணமாகத்தான் வேர்களிலிருந்து நீர் கிடைக்கிறது.

இந்த உண்மையைக் கண்டுபிடித்ததோடு நிற்காமல் இதை ஊரறிய அறிவிக்கவும் செய்தார் எடமருகு. செய்யலாமோ? புகார் பதிவு செய்திருக்கிறார்கள்.

முன்பு இப்படித்தான் பிள்ளையார் பால் குடிப்பதாகக் கிளப்பிவிட்டார்கள். அது “பரப்பு இழுவிசை” எனும் இயற்பியல் செயல்பாடே என்று அறிவியல் இயக்கத்தினரும் பகுத்தறிவாளர்களும் வெளிப்படுத்தினார்கள். அந்த இயற்பியல் செயல்பாட்டின்படி மார்க்ஸ், பெரியார் சிலைகள் கூட “பால் குடிக்கும்” என நிரூபித்துக் காட்டினார்கள்.

அறிவியல் உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதைப் பொறுத்தவரையில் மத வேறுபாடே இல்லை! இந்த உண்மையைச் சொல்வது எப்படி மத நம்பிக்கையைப் புண்படுத்துவதாகும்? மறைநூல்களில் எங்காவது இப்படி ஏசு சிலை கண்ணீர் வடிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறதா? இது எப்படி மதப் பகைமையைத் தூண்டும்? “ஏசு சாமி போலி, என் மதத்தின் சாமிதான் ஒரிஜினல்” என்று எடமருகு ஏதாவது பிரச்சாரம் செய்தாரா? இது எப்படி பொது அமைதியைக் குலைக்கும்? பொதுமக்கள் ஏசுவின் கண்ணீர் செய்தியையும் கேள்விப்பட்டார்கள், எடமருகுவின் செய்தியையும் கேள்விப்பட்டார்கள், தங்களுடைய வேலையைப் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். இதை ஒரு மதப்பிரச்சனையாக மாற்ற சிலர் முயல்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

உண்மையிலேயே ஏசு சிலை கண்ணீர் வடிக்கிறது என்றால், எட மருகு சொல்வது பொய் என்று நிரூபித்து மகிமையை நிலைநாட்ட வேண்டியதுதானே? எதற்காகக் காவல் நிலையம் செல்ல வேண்டும்? கர்த்தர் உள்ளிட்ட மகிமை மிகு கடவுளர்களால் எடமருகு போன்றோரை ஒன்றும் செய்ய முடியாது என்பதால்தானே சட்டத்தின் துணையுடன் அவர்களது வாயை அடைக்க முயல்கிறார்கள்? அறியாமல் செய்கிறார்கள், கர்த்தரே இவர்களை மன்னியும் என்று சொல்ல முடியவில்லை.

இந்தியாவின் அரசமைப்பு சாசனம், மக்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பது அரசின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகக் கூறுகிறது. அரசு அதைச் செய்யத்தவறுகிறது. சில தனி மனிதர்களும் முற்போக்கான இயக்கங்களைச் சேர்ந்தோரும் செய்கிறார்கள். அவர்களைக் கைது செய்வது நாட்டின் அரசமைப்பு சாசனத்தை அவமானப்படுத்துகிற செயல்.

மக்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்கிறவர்களாக, எதையும் ஏன் எப்படி என்று கேள்வி கேட்பவர்களாக இருக்கக்கூடாது என்பது நாட்டின் வளங்களை எல்லாம் வளைத்துக் கொழுக்கிற நவீன உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்ளையர்களின் விருப்பம். எல்லா மதங்களையும் சேர்ந்த திடீர் மகிமைக் கதைகள் அந்த விருப்பத்தைத்தான் நிறைவேற்ற முயல்கின்றன. அந்தக் கதைகளின் மூளைச்சலவை இரைச்சல்களை மீறி உண்மைகளும் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன - அடக்குமுறைகளைப் பொருட்படுத்தாமல்.

நீங்கள் கதையின் பக்கமா, உண்மையின் பக்கமா?

(தகவல் ஆதாரம்: தி ஹிண்டு நாளேட்டின் 7.5.2012 இதழில் பிரவீன் ஸ்வாமி எழுதியுள்ள கட்டுரை)