ஐபிஎல் குடும்பம்
புராண தெய்வங்கள் நடப்புக்கால பூலோகத்துக்கு வந்து சிக்கல்களில் மாட்டுகிற கற் பனைகள் அவ்வப்போது மேடையேறி யிருக்கின்றன. மனிதர்கள் மேலோகம் சென்று அங்கே சிக்கல்களை உண்டுபண்ணுகிற கதை களும் புதிதல்ல. யுனைட்டட் விசுவல்° குழுவினரின் இந்த நாடகத்தில் ஒரு மானுடன் தவறாக எமனின் தர்பாருக்குக் கொண்டு வரப்படுவது பழசு; அவன் தனது மனிதநேயக் கேள்வி களால் தெய்வத்தையே திணறவைப்பது புதுசு. ரயில் பயணத்தில் சுந்தரமூர்த்தி என்ற ஒரு ஊனமுற்ற பயணிக்காக தனது கீழ்ப்படுக்கையை விட்டுக்கொடுத்து மேல்படுக்கைக்கு மாறுகிறான் கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுந்தர மூர்த்தி. “விதிப்படி” நடக்கும் விபத்தில் அந்த ஊனமுற்றவர் “மேலே” வர வேண்டும். பெயர்க் குழப்பத்தில் இவனைக் கொண்டுவந்துவிடுகிறான் சித்ரகுப்தன். பூமியில் இருக்கிற ஒவ்வொருவரின் விதியும் எப்படி நடக்க வேண்டும், எப்போது முடியவேண்டும் என்பதையெல்லாம் ஒவ்வொருவரும் பிறக்கும்போதே பகவான் தீர்மானித்து அழுத்தமாக எழுதி விடுகிறான் என்ற போதனையையே இந்தக் கற்பனை விசாரணைக்கு உட்படுத்துகிறது.
தவறுக்கு வருந்தும் கடவுள்களோடு பேசி, இனி தவறில்லாமல் நடக்க தேவலோகத்தையே கணினிமயமாக்குகிறான் சுந்தரமூர்த்தி. ‘காலன் சென்டர்’ என்று பெயரையே மாற்றி விட்டு, எமனை அதற்கு டம்மி தலைவராக்கு கிறான். தானே தலைமைச் செயல் அலுவலராகிறான். பதவிப் பங்கீடு வருகிறபோது தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முக்கியப் பொறுப்புகளை வழங்குகிறான். இது அளவுக்கு மேல் போக பிரச்சனை நீதிமன்றம் செல்கிறது, தர்மன் நீதிபதியாக அமர்கிறான். தர்மனின் முன்னிலையில் மானுடப் பிரதிநிதி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தெய்வம் வாயடைத்துப் போவது உச்சம்.
“எல்லோரையும் ஒரே மாதிரியாகப் படைக்க வேண்டிய நீங்கள் ஏன் சிலரை ஊனமுற்றவர்களாகப் படைக்கிறீர்கள்?”
“பெற்றோர் செய்த பாவத்திற்கு பிள்ளை கள் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்.”
“மனிதர்கள் எல்லோருமே தெய்வத்தின் பிள்ளைகள்தானே? அப்படியானால் உங்கள் பாவத்திற்காகத்தான் எங்களுக்குத் தண்ட னையா?”
இப்படியாகப்பட்ட கேள்விகளுக்கு இறு தியாக தெய்வம் சொல்லும் நழுவல் பதில்: “இதெல்லாம் மனிதர்கள் நீங்களாக உருவாக்கிக்கொண்டதுதான்.” அப்படியானால் தெய்வத்திற்கு என்ன வேலை என்ற கேள்வியை சுந்தரமூர்த்தி எழுப்பவில்லை!
“கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, நாத்திகம் பேசவில்லை,” என்று சமரசம் செய்து கொள்வதால் மேம்போக்கான நேயம் என்பதைத் தாண்டி ஆழ்ந்த பகுத்தறிவு வெளிப்படாமல் போகிறது. தெய்வக் கற்பனைகளே கூட மனிதர்கள் உருவாக்கியதுதான் என்பதைப் புரிந்துகொண்டால் பல குழப்பங் களுக்கு முடிவு கிடைத்துவிடும்.
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்காதது ஏன்? கல்வி உட்பட எதையும் விலைக்கு வாங்கக்கூடியவர்களாகவும், உணவு உட்பட எதையுமே வாங்க முடியாதவர்களுமாய் சமுதாயம் பிளவுபட்டிருப்பது ஏன்? ஆலயத்தில் ஆண்டவன் சிலையை நெருங்கக்கூடியவர்களாகவும், ஆலய வாயிலுக்குள் கூட நுழைய முடியாத வர்களாகவும் மக்கள் பாகுபடுத்தப்பட்டிருப்பது ஏன்? வாழ்க்கை எவ்வளவு நவீனமானாலும் பெண்ணடிமைத்தனங்கள் தொடர்வது ஏன்? கடவுளின் பெயரால் கலவரங்கள் ஏன்?... இப்படியாகப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அந்தப் புரிதலிலிருந்து பதில் சொல்லமுடியும்; மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க முடியும்.
அந்தத் தெளிவு இல்லாததால் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடியவர்களையும் அதையெல்லாம் நியாயப்படுத்தியவர்களையும் சொர்க்கத்தில் வாழ்கிற நல்லவர்களாக ஒரே தட்டில் வைக்கிறது நாடகம். ஆனாலும், எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளக் கட்டாயப்படுத்தும் மதவாதத்திலிருந்து சற்றே விலகிக் கேள்விகள் கேட்பது பாராட்ட வேண்டியதே.
குடும்ப அரசியல் தொடர்பான நையாண்டிகள் சிரிப்பூட்டுகின்றன. “கலர் டிவி இலவசமாகக் கிடைக்கிறது, ஆனால் இயற்கையே இலவசமாக வழங்குகிற குடிநீர் விலைக்கு விற்கப்படுகிறது,” என்ற கிண்டல் கூர்மையான விமர்சனம்தான். ஆனால் இப்படிப்பட்ட விமர்சனங்கள் தமிழக எல்லையைத் தாண்டாமல் நின்றுவிடுகின்றன! தில்லி வரை சென்று இன்றைய-முந்தைய ஆட்சியாளர்களின் துரோகங்களைச் சொல்லத்துணியவில்லை. கதை, உரையாடல் எழுதிய சி.வி. சந்திரமோகன் இதற்கும் முயன்றிருந்தால் அரசியல் விமர்சனம் ஓரளவுக்கு முழுமையாகியிருக்கும்.
இக்குழுவினரின் முந்தைய நாடகங்களில் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான கட்டங்கள் இதிலே இல்லை. ஆயினும் மனிதர்கள் சார்பாக இறைவனைக் கேள்விகளால் துளைக்கிறபோது ஈடுகட்டுகிறார், நாடகத்தை இயக்கி நடித்துள்ள ‘டி.வி.’ வரதராஜன்.
கடவுள்களாக வரும் கேட்டவரம் சீனு, எமன் சுயம்பிரகாஷ், சித்ரகுப்தன் ராஜேந்திரன், சீரியல் நடிகை சீலிமாவாகத் தன் பங்கிற்கும் கடவுளைக் கேள்விகேட்கும் உஷா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.
‘யுனைட்டட் விசுவல்°’ என்ற பெயருக்கேற்ப, நேரில் வரும் எம்ஜிஆர், கட்டளையிட்டதும் முன்னால் வரும் சிம்மாசனம் என்று சேர்க்கப்பட்டுள்ள உத்திகளும் விண்ணுலகப் பயணத்தைக் காட்டும் ‘வீடியோ கிராபிக்°’ நுட்பங்களும் ரசிக்கத்தக்கவை.