Thursday 10 October 2019

தமிழ் சினிமா அசுரனோடு...
தமிழ் சினிமா சாதிய அரசியல் நுட்பங்களைப் பேசத் தொடங்கியிருப்பதில் மேலும் ஒரு திடமான அடியெடுப்பு.
கதையாக்கம், காட்சிப்படுத்துதல், உயிர்ப்பான உரையாடல், உணர்வு வெளிப்பாடு, இசைக் கருவிகளோடு மௌனமும் இணைகிற கலை, பெண்ணுக்குத் தரப்பட்டுள்ள கூடுதல் முக்கியத்துவம்... என படப்படைப்பில் ஈடுபட விரும்புவோருடன், நல்ல சினிமா பார்க்க விரும்புவோருக்கும் பாடங்கள் பிரித்தளிக்கப்பட்ட ஒரு புத்தகம்.
தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தனுஷ் என்ற நடிப்புக் கலைஞருக்கும் ஒரு முக்கியத் திருப்பம். இதுபோல் சமூக உண்மைகளைச் சொல்வதற்கு உதவுமானால், நடிகர்களின் நட்சத்திர மதிப்பைக் கொண்டாட நானும் தயார்.
படத்தின் பல்வேறு சிறப்புகளைப் பலரும் அழகாக, சொல்நேர்த்தி தாங்கி, விமர்சனக் கூர்மையோடும் எழுதிவிட்டார்கள். அவற்றை அப்படியே வழிமொழிகிறேன் என்பதால் தனித்தனியே அவை குறித்து நானும் எழுதுவதைத் தவிர்க்கிறேன்.
ஆனால், செருப்பு அணியத் தடை விதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் செருப்போடு நடந்ததால் அடித்து அவமதிக்கப்பட, அவளோடு மற்ற சிறுமிகளையும் காலனியிலிருந்து காலணியணிந்து பள்ளிக்குப் போக வைக்கும் காட்சியில் ஒரு பெருமித நெகிழ்வு கவ்வியதைத் தவிர்க்காமல் வெளிப்படுத்துகிறேன். செங்கொடி இயக்கம் உட்பட, அவ்வாறு செருப்பணிந்து நடக்க வைத்ததில் உள்ள நெடிய வரலாற்றுப் பங்களிப்புகளை நினைவுகூர்கிறேன்.
"நிலம் இருந்தா வாங்கிடுவாங்க, காசு இருந்தால் புடுங்கிடுவாங்க, படிப்பு இருந்தா பறிக்க முடியாது. அதனால படி," என்று சிவசாமி தன் மகனிடம் சொல்வதில், அண்ணலின் பாதி அறிவுரை பதியப்பட்டுவிடுகிறது. (கல்வி நிறுவன சுவர்களுக்கு அப்பால்) படிக்கப் படிக்க மீதிப்பாதி அறிவுரை நிகழ்வுக்கு வந்துவிடாதா என்ன?
ஆனால், ஒரு கேள்வி இருக்கிறது. அது இந்தப் படத்தின் மீதான கேள்வி அல்ல. படம் கிளறிவிடுகிற சிந்தனையிலிருந்து புறப்படுகிற கேள்வி. கேள்விகள் புறப்பட வைப்பது நேர்மையான கலையின் வெற்றி(மாறன்).
“இரண்டு வீடுகளுக்கு இடையேயான சண்டையை ஊர்ச் சண்டையாக மாற்றி விடாதீர்கள்” என்ற செய்தி முன்மொழியப்படுகிறது. கதைத் தளம் என்ற அளவில் அந்த முன்மொழிவு சரியானது, ஏற்கத்தக்கது. ஆயினும்...
சாதியம் ஒரு மையமான ஊர்ப் பிரச்சினை, நாட்டுப் பிரச்சினை. அதை வீட்டுப் பிரச்சனையாக மாற்றுவதில் ஆதிக்கவாதிகள் சாதித்து வருகிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களிடம் இருக்கும் சிறு பகுதி நிலத்தையும் கைப்பற்ற நினைப்பதில் இருப்பது சுயநலன் மட்டுமல்ல. கை கட்டி நிற்க வேண்டியவர்கள் கால் ஊன்றி நிற்க ஒரு அடித்தளம் இருப்பதா என்ற சமூக வன்மமும்தான்.
இனிவரும் கலை ஆக்கங்கள் இந்த உண்மையையும் பேசும், பேசட்டும்.
-குமரேசாசுரன்