Thursday, 10 October 2019

தமிழ் சினிமா அசுரனோடு...




தமிழ் சினிமா சாதிய அரசியல் நுட்பங்களைப் பேசத் தொடங்கியிருப்பதில் மேலும் ஒரு திடமான அடியெடுப்பு.
கதையாக்கம், காட்சிப்படுத்துதல், உயிர்ப்பான உரையாடல், உணர்வு வெளிப்பாடு, இசைக் கருவிகளோடு மௌனமும் இணைகிற கலை, பெண்ணுக்குத் தரப்பட்டுள்ள கூடுதல் முக்கியத்துவம்... என படப்படைப்பில் ஈடுபட விரும்புவோருடன், நல்ல சினிமா பார்க்க விரும்புவோருக்கும் பாடங்கள் பிரித்தளிக்கப்பட்ட ஒரு புத்தகம்.
தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தனுஷ் என்ற நடிப்புக் கலைஞருக்கும் ஒரு முக்கியத் திருப்பம். இதுபோல் சமூக உண்மைகளைச் சொல்வதற்கு உதவுமானால், நடிகர்களின் நட்சத்திர மதிப்பைக் கொண்டாட நானும் தயார்.
படத்தின் பல்வேறு சிறப்புகளைப் பலரும் அழகாக, சொல்நேர்த்தி தாங்கி, விமர்சனக் கூர்மையோடும் எழுதிவிட்டார்கள். அவற்றை அப்படியே வழிமொழிகிறேன் என்பதால் தனித்தனியே அவை குறித்து நானும் எழுதுவதைத் தவிர்க்கிறேன்.
ஆனால், செருப்பு அணியத் தடை விதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் செருப்போடு நடந்ததால் அடித்து அவமதிக்கப்பட, அவளோடு மற்ற சிறுமிகளையும் காலனியிலிருந்து காலணியணிந்து பள்ளிக்குப் போக வைக்கும் காட்சியில் ஒரு பெருமித நெகிழ்வு கவ்வியதைத் தவிர்க்காமல் வெளிப்படுத்துகிறேன். செங்கொடி இயக்கம் உட்பட, அவ்வாறு செருப்பணிந்து நடக்க வைத்ததில் உள்ள நெடிய வரலாற்றுப் பங்களிப்புகளை நினைவுகூர்கிறேன்.
"நிலம் இருந்தா வாங்கிடுவாங்க, காசு இருந்தால் புடுங்கிடுவாங்க, படிப்பு இருந்தா பறிக்க முடியாது. அதனால படி," என்று சிவசாமி தன் மகனிடம் சொல்வதில், அண்ணலின் பாதி அறிவுரை பதியப்பட்டுவிடுகிறது. (கல்வி நிறுவன சுவர்களுக்கு அப்பால்) படிக்கப் படிக்க மீதிப்பாதி அறிவுரை நிகழ்வுக்கு வந்துவிடாதா என்ன?
ஆனால், ஒரு கேள்வி இருக்கிறது. அது இந்தப் படத்தின் மீதான கேள்வி அல்ல. படம் கிளறிவிடுகிற சிந்தனையிலிருந்து புறப்படுகிற கேள்வி. கேள்விகள் புறப்பட வைப்பது நேர்மையான கலையின் வெற்றி(மாறன்).
“இரண்டு வீடுகளுக்கு இடையேயான சண்டையை ஊர்ச் சண்டையாக மாற்றி விடாதீர்கள்” என்ற செய்தி முன்மொழியப்படுகிறது. கதைத் தளம் என்ற அளவில் அந்த முன்மொழிவு சரியானது, ஏற்கத்தக்கது. ஆயினும்...
சாதியம் ஒரு மையமான ஊர்ப் பிரச்சினை, நாட்டுப் பிரச்சினை. அதை வீட்டுப் பிரச்சனையாக மாற்றுவதில் ஆதிக்கவாதிகள் சாதித்து வருகிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களிடம் இருக்கும் சிறு பகுதி நிலத்தையும் கைப்பற்ற நினைப்பதில் இருப்பது சுயநலன் மட்டுமல்ல. கை கட்டி நிற்க வேண்டியவர்கள் கால் ஊன்றி நிற்க ஒரு அடித்தளம் இருப்பதா என்ற சமூக வன்மமும்தான்.
இனிவரும் கலை ஆக்கங்கள் இந்த உண்மையையும் பேசும், பேசட்டும்.
-குமரேசாசுரன்

Wednesday, 10 July 2019

69க்கு பாதிப்பில்லாமல்?

தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்குப் பாதிப்பு இல்லாமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் ஏற்கத்தக்கதொரு நியாயம் இருப்பதுபோல் ஒலிக்கிறது. ஆனால் சற்றே ஆழ்ந்து யோசிக்கிறபோது அது ஒரு சமாளிப்புக் கோரிக்கையாக இருக்கிறதேயன்றி சாத்தியக் கோரிக்கையாக இல்லை.

69 சதவீதம் என்றால் நூற்றுக்கு 69 என்பதே கணித அறிவு. அந்த நூறு இடங்களில் 10 பங்கு ஏழைகளான, தங்களைத் தாங்களே உயர் சாதியினர் என்று வைத்துக்கொண்ட பிரிவினருக்குப் போய்ச் சேரும் என்றால்‌, மீதியுள்ள 90 இடங்களுக்குத்தான் போட்டி. அந்த 90 இடங்களில் 69 சதவீதம் என்றால், உண்மையில் நூற்றுக்கு 62.1 இடங்கள்தான். அதாவது 62.1 சதவீதம்தான்.

பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்குப் பாதகமில்லாமல் மேற்படி பிற சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது என்றால், எஸ்சி-எஸ்டி-பிசி மக்களுக்கான 69 சதவீதம் என்பது 76 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும். அது நடக்குமா?

ஆக, நடைமுறையில் இந்த 10 சதவீதத் திணிப்பின் மூலம் எஸ்சி-எஸ்டி-பிசி மக்களுக்குத் தமிழகத்தில் இருந்துவரும்‌ 69 சதவீத இட ஒதுக்கீடு 62.1 சதவீதமாக வெட்டப்படுகிறது.

ஏற்கெனவே இந்த மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒவ்வொரு மாநிலமும், தன்னகத்தில் உள்ள இவர்களின் மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப, தானே முடிவு செய்துகொள்ள அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகளாக அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டும் வருகிறது.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்கிறது என்றாலும் அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த 69 சதவீதத்திற்குப் பாதிப்பு இல்லாமல் 10 சதவீதத்தைச் செயல்படுத்தலாம் எனக் கோருவது, 62.1 சதவீதமாகக் குறைக்கப்படுவதை ஒப்புக்கொள்வதேயாகும்.

இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டு விட்டால், மத்திய அரசின் சட்டத் திருத்தத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியோர் என்ற பதத்திற்கு தரப்பட்டுள்ள வரையறைகள் எவ்வளவு மோசடியானவை,‌ அரசுத்துறை வேலைகளே இல்லை என்கிறபோது யாருக்கு எத்தனை சதவீதம் ஒதுக்கீடு செய்தால்தான் என்ன பயன் என்பன உள்ளிட்ட வாதங்கள் வலுவானவை போல் தோன்றுகிற நீர்க்குமிழிகளே என்பதும் தெளிவாகும்.

Thursday, 21 March 2019

கவித்துவத்தின் இரட்டை மகத்துவம்



டந்ததை நினைவூட்டிக் களிப்பூட்டுதல், நடக்க வேண்டியதை உணர்த்திக் கிளச்சியூட்டுதல் – இவ்விரு பணிகளையும் செய்கிறது கலை. பரிணாம வளர்ச்சியில் மற்றொரு விலங்காக வந்த மனித இனம், மானுடச் சமுதாயமாய் மறுபரிணாம வளர்ச்சியை அடைந்ததில் கலை ஒரு மையமான பாத்திரம் வகித்து வந்திருக்கிறது. ஆதித் தாத்திகளும் தாத்தன்களும் தங்களது உணவுத் தேடல் வெற்றியை,  காட்டு நெருப்பிலிருந்தும் ஆற்று வெள்ளத்திலிருந்தும் தப்பிய சாகசத்தை, சக விலங்குகளோடும் தாக்க வந்த இன்னொரு மனிதக் கூட்டத்தோடும் நடத்திய போராட்டத்தை, அனுபவமாய் உணர்ந்ததை, ஆசையாய்ப் புணர்ந்ததை, அறிவாய் வளர்ந்ததை கூடியாடிப் பகிர்ந்துகொண்டதில் முகிழ்த்தது கலை. சொல்லும் எழுத்தும் பிறந்து, மொழி உருக்கொண்டபோது கலை வெளிப்பாடுகள் இலக்கிய வெளிப்பாடுகளாகவும் பரிணமித்தன. வரலாற்றுப் பயணத்தில் ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு இலக்கியமும் தனித்துவ அடையாளம் பெற்றன.

கலை இலக்கியம் யாவுமே நடந்ததை நினைவூட்டிக் களிப்பூட்டுகிற, நடக்க வேண்டியதை உணர்த்திக் கிளர்ச்சியூட்டுகிற அடிப்படைப் பணிகளைச் செய்கின்றன என்றாலும், தனக்கென ஒரு ஆளுமையை நிறுவிக்கொண்டது கவிதை. இதழ் பதிந்த ஒரு காதல் முத்தம், இதயம் குவிந்த ஒரு மழலைச் சிரிப்பு உள்பட மனம் கவர்ந்த வாழ்க்கை நிகழ்வுகளைச் சித்தரிக்கையில் “கவிதையாய் இருக்கிறதுஎன்று சொல்வது உயர்நிலை உருவகப் பகிர்வாக இருக்கிறது.

சித்தாள் கவிதை
குடியிருப்புப் பகுதியில் ஒரு புதிய வீடு கட்டுமான வேலை நடந்துகொண்டிருந்தது. மரக்கிளையில் கட்டப்பட்டிருந்த சேலைத் தொட்டிலை, குழந்தை உறங்கினால்தான் வேலையைத் தொடர முடியும் என்ற பரபரப்போடு ஆட்டிக்கொண்டிருந்தார் சித்தாள் தொழிலாளியான தாய். அப்போது தொட்டிலில் குழந்தை இவர் முகம் பார்த்துச் சிரித்தது. “அய்யய்யோ, எப்புடிப் பூவா சிரிக்குது பாரேன்,என்று ஏதோ தன் குழந்தை சிரிப்பதை முதல் முறையாகப் பார்த்தது போலச் சொல்லிக் குதூகலிக்கிறார் தாய். எப்போதும் பார்க்கிற காட்சிதான் என்றாலும் பெண்களும் ஆண்களுமாய் மற்ற தொழிலாளிகள் “நிலா மாதிரில்ல சிரிக்குது,என்று சொல்லி அந்தக் குதூகலத்தில் இணைகிறார்கள். “பாப்பா சிரிக்கிறதப் பத்தி நீ சொல்றதே ஒரு கவிதையாட்டம் இருக்குதே புள்ள,என்கிறார்  ஒருவர். எல்லோரும் புத்துணர்ச்சியோடு வேலையில் ஈடுபடுகிறார்கள்.

அவர்கள் பேசிக்கொண்டது கவிதையே அல்லவா? அவர்களுக்குக் கவிதை பற்றித் தெரிந்திருக்குமா? சொல்வதற்கில்லை. ஆனால், நிச்சயமாகக் கவிதையை உணர்கிறார்கள் என்று சொல்லலாம். கலை ஆக்கத்தின் உயர்நிலையாகக் கவிதை இருப்பது போலவே, கலையை ரசிப்பதன் உயர்நிலையாகவும் கவிதை இருக்கிறது. கவியாக்க முனைப்பையும் கவிநுகர் ரசனையையும் மென்மேலும் வளர்த்தெடுக்க, மனதின் கொண்டாட்டமாகிய கவிதையை, மக்களின் கொண்டாட்டமாக்குவதுதான் ‘உலகக் கவிதை தினம்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் நாள் உலகக் கவிதை தினம் கொண்டாடப்படுகிறது. ‘ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து 1999ம் ஆண்டிலிருந்து இந்நாள் கொண்டாடப்படுகிறது. அந்த ஆண்டில் பாரிஸ் நகரில் நடந்த யுனெஸ்கோ 30வது கூட்டத்தில் கவிதை குறித்தே விவாதிக்கப்பட்டு இந்தத் தினத்தைக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.

கவிதை எழுதுவதையும் வாசிப்பதையும் கற்பிப்பதையும் வெளியிடுவதையும் ஊக்குவிப்பது இக்கொண்டாட்டத்தின் நோக்கம். இது, உலக அளவிலும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு மொழியிலும் நடைபெறுகிற கவிதை இயக்கங்களை அங்கீகரிக்கிற இயக்கமும் கூட. உள்ளூர்க் கவிதைகளை உலக அரங்கில் கொண்டுசெல்லவும், உலக மேடையேறிய கவிதைகளை உள்ளூருக்குக் கொண்டுவரவும் இக்கொண்டாட்டத்தின்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

“உலகில் எங்கும் உள்ள தனி மனிதர்கள் ஒரே மாதிரியான கேள்விகளையும் உணர்வுகளையும்தான் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதை நமக்கு வெளிப்படுத்துவதன் மூலம் கவிதை நமது பொதுவான மனிதத்தை மீளுறுதி செய்கிறது. வாய்மொழி மரபின் மையத்தளமாக உள்ள கவிதையால் பல நூற்றாண்டுகளாகப் பன்முகப் பண்பாடுகளின் உள்ளார்ந்த மாண்புகளைச் சொல்ல முடிகிறது,என்கிறது யுனெஸ்கோ அறிக்கை. “மனித மனதின் படைப்பாக்க உணர்வுத் துடிப்பைக் கையகப்படுத்துவதில் கவிதைக்கே உரிய தனித்துவமான ஆற்றல் இக்கொண்டாட்டத்தால் ஏற்கப்படுகிறது, என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கவிதை தினம் கடைப்பிடிக்கப்படுவதன் தலையாய நோக்கங்களில் ஒன்று, கவித்துவ வெளிப்பாட்டின் மூலம் மொழி சார்ந்த பன்முகத் தன்மைக்கு ஆதரவாக இருப்பதும், அழிவின் விளிம்பில் உள்ள மொழிகள் அந்தச் சமூகங்களுக்குள்ளேயே கேட்கப்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதுமாகும்.

“கவிதை வாசித்தல், கவிதை கற்பிக்கப்படுவதை வளர்த்தெடுத்தல், கவிதைக்கும் நாடகம், நடனம், இசை, ஓவியம் போன்ற இதர கலைகளுக்கும் இடையான உரையாடலை மீட்டெடுத்தல் ஆகிய நோக்கங்களும் கவிதை தினத்திற்கு உண்டு. கவிதை இனியும் காலாவதியாகிப் போனதொரு வடிவம் அல்ல, மாறாக ஒட்டுமொத்த சமுதாயமும் தனது அடையாளத்தைக் கையகப்படுத்தி உறுதிப்படுத்திக்கொள்ள வைக்கிற கலையே என்று கருதப்படும் வகையில், சிறிய வெளியீட்டாளர்களை ஆதரிப்பதற்காகவும்,  ஊடக உலகில் கவிதை பற்றிய ஈர்க்கத்தக்கதொரு தோற்றத்தை உருவாக்குவதற்காகவும் உலகக் கவிதை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, என்று யுனெஸ்கோ தெரிவிக்கிறது.

கவிதை நீர்த்துவிட்டதா?
ஒரு பக்கம் கவிஞர்கள் நிறையப்பேர் புறப்பட்டிருக்கிறார்கள். நிறையப்பேர் எழுதுவதாலேயே கவிதை நீர்த்துவிட்டது என்று கூறி, அதனை பரிவட்டம் சூட்டிக்கொண்ட சிலருக்கே உரிய களமாகத் தூக்கிக் கொடுக்கிற முயற்சியும் நடக்கிறது. ஒரு காலகட்டத்தில் இலக்கணத்தில் ஊறிய செய்யுள்களே ஆளுமை செலுத்தின. அப்போது செய்யுள் யாத்தவர்களும் குறைவு, அதைப் படித்தவர்களும் குறைவு, பதவுரை பொழிப்புரை புரிந்து ரசித்தவர்கள் இன்னும் குறைவு. பள்ளிப் புத்தகங்களில் மதிப்பெண்களுக்கான வினாக்களுக்குரிய பாடங்களாகச் செய்யுளும் இலக்கணமும் வைக்கப்பட்டதன் விளைவாக, கவிதை ரசனையிலிருந்து மாணவர்கள் விலக்கிவைக்கப்பட்ட சோகம் நடந்தது.

கல்லூரி மாணவர்களிடையே கவிதை குறித்து உரையாடுகிற வாய்ப்பொன்று கிடைத்தது. தொடக்கத்தில், அவர்கள் அறிந்த கவிதை வடிவங்களைப் பற்றிச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டேன். மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ என்றெல்லாம் சொன்னார்கள். “பள்ளியில் நீங்கள் படித்த செய்யுள்கள் கவிதைகள்தான் என்பது தெரியவில்லையா,என்று கேட்டபோது, ‘அப்படியாஎன்று திகைத்தார்கள். “நீங்கள் கேட்கிற சினிமாப்பாட்டுகளும் கவிதைகள்தான்,என்றபோது ‘அடஎன்று வியந்து சிலிர்த்தார்கள்.

இதையெல்லாம் மீறி நிறையப் பேர் கவிதை எழுதுகிறார்கள். அது காதல் வெளிப்பாடாக இருக்கலாம், இயற்கை ரசனையாக இருக்கலாம், சமூக அவலங்கள் மீதான கோபமாக இருக்கலாம், அரசியல் துரோகங்களால் எழுந்த ஆவேசமாக இருக்கலாம்.

இப்படி எழுதினாலும் அவையனைத்தும் புத்தகப் பரிமானம் கொள்வதில்லை. எந்த அளவுக்குப் புதிய கவிஞர்களின் புத்தகங்கள் விற்பனையாகும் என்ற வெளியீட்டாளர்களின் கவலையைக் குறைத்து மதிப்பிடுவதற்குமில்லை. விதிவிலக்குகளாக உள்ள சிலரைத் தவிர்த்து, மற்ற கவிஞர்கள் பெரும்பாலும் தங்கள் கவித்துளிகளைத் சொந்தச் செலவிலேயேதான், நேரடியாகவோ பதிப்பகங்கள் மூலமாகவோ புத்தகமாக அச்சிடுகிறார்கள். அப்படி வருகிற கவிதைகள் அனைத்தும் நம் மனங்களுக்கு வலை வீசிவிடுவதில்லைதான். வைகை வெள்ளத்தில் ஏடுகளைத் தூக்கிப்போடாமலே இவற்றில் சிறந்த படைப்புகள் மட்டுமே நிலைக்கும்.

மக்களை அடைகிறதா கவிதை?
கவிஞர்களுக்கு ஒரு ஐயப்பாடு எழும்: சமூகத்தையே புரட்டிப் போடுகிற கவிதையை எழுதியிருக்கிறோமே, அந்தச் சமூகத்தில் எத்தனை பேரை நம் கவிதை போய்ச் சேர்ந்திருக்கிறது? இக் கேள்வி ஒரு சோர்வைக் கூட ஏற்படுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறியதொரு சபை, அங்கே கவிதை ரசனையுள்ள சிலர். அவர்கள் முன் கவிதையை வாசிக்க, அவர்கள் கைதட்டி வரவேற்க அந்த நேரத்து உற்சாகத்தோடு முடிந்துவிடுகிற நிலைமை இருக்கிறதா? ஆம், இருக்கிறதுதான். ஆனால், அவர்களுடைய கவிதைகள் நேராக மக்களை அடையாவிட்டாலும், அந்த அவையில் இருக்கக்கூடிய ஒரு களச்செயல்பாட்டாளர் மனதில் ஒரு சிந்தனையை விதைப்பதன் மூலம், தான் மேற்கொண்ட பணியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம், அவரைத் தொடர்ந்து உற்சாகமாக இயங்க வைக்க முடியும். அதன் வழியாகப் படைப்பின் நோக்கம் நிறைவேற முடியும்.

இதற்குக் கைகொடுப்பதாகக் கவிதை தினக் கொண்டாட்டத்தை அமைக்கலாம். கொண்டாட்டத்தின் அடிப்படைகளாகக் கவிதை குறித்த பின்வரும் முடிவுகள் தற்போது முன்வைக்கப்படுகின்றன: 1) சமுதாயத்தில் முன்னர் நிறைவேறாதிருக்கிற அழகியல் தேவைகளை நிறைவேற்றக் கூடியது கவிதை. 2) கடந்த 20 ஆண்டுகளில், கவிதை ஒரு புதுப்பிறப்பு எடுத்துள்ளது. கவிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 3) இது ஒரு சமூகத் தேவையும் கூட. இளைய தலைமுறைகளைத் தங்களது வேர்களைத் தேடிச் செல்ல வைப்பது கவிதை. 4) சமுதாயத்தில் கவிஞர்கள் புதிய பங்காற்றுகிறார்கள். 5) தொண்மை மாண்புகளை அங்கீகரிப்பதன் ஒரு பகுதியாக இருக்கிற கவிதை, தனி மனிதரைச் சமூகப்படுத்துகிற வேலையைச் செய்கிறது, அதற்கான ஒரு வழிமுறையாக உரையாடலுக்குத் திரும்பவும் இட்டுச்செல்கிறது.

இந்த 5 அடிப்படைகளைச் சொல்கிற உலகக் கவிதை தின ஆர்வலர்கள், இன்றைய ஊடகங்கள் கவிதைக்கு ஆழ்ந்த முக்கியத்துவம் அளிக்கத் தவறுகின்றன, ஆகவே சமுதாயத்தில் கவிதைக்குப் பாத்தியப்பட்ட இடத்தை அளிப்பதற்கான செயல்பாடுகள் தேவை என்றும் கூறுகிறார்கள்.

அந்தக் கேள்வி
இலக்கிய உலகில் காலம் காலமாய் கேட்கப்படுகிற, இன்று வரையில் இறுதி விடை காணப்படாத ஒரு கேள்வி உண்டு. எது கவிதை? ஆழமான கருத்து கவிதையா? அழகிய கற்பனை கவிதையா? அருமையான சொற்கோர்ப்பு கவிதையா? இம்மூன்றும் இணைந்தது கவிதை என்று எளிதாகச் சொல்லிவிட்டு நகரலாம்தான். ஆனால் ஆழமான கருத்தும் அழகிய கற்பனையும் அருமையான சொற்கோப்பும் சிறுகதை, நாவல், காவியம், காப்பியம், நாடகம் உள்ளிட்ட எல்லா இலக்கியப் படைப்புகளுக்கும் தேவையாயிற்றே! சொல்லப்போனால் சிறப்பான இலக்கியத் திறனாய்வுக்கே கூட இவை தேவையாயிற்றே!

“உணர்வு தனக்கான எண்ணத்தைத் தேடியடைந்து, எண்ணம் தனக்கான சொற்களைத் தேடிஅடைவதே கவிதை,என்றார் அமெரிக்கக் கவிஞர் ராபார்ட் ஃபிராஸ்ட். கவித்துவமான விளக்கம்தான் என்றாலும் இது கட்டுரையாக்கத்திற்கும் கூடப் பொருந்தும். “கவிதை எழுதுபவன் கவியன்று, கவிதையாய் வாழ்கிறவன், கவிதையே வாழ்க்கையாகக் கொண்டவன் கவி. நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்,என்றுரைத்தார் தமிழின் பாரதி.
இவ்வாறு நிறைய மேற்கோள்கள் கிடைத்தாலும், எவ்வளவு தேடியும் இதுதான் கவிதை என்று குறிப்பான, திட்டவட்டமான விளக்கத்தை அடைய முடியவில்லை. ஒருவேளை அதுதான் கவிதையின் தனித்துவமோ என்னவோ! நிச்சயமாகக் கவிதையில் உணர்வுக்குக் கூடுதல் பங்கிருக்கிறது. படைத்தவர் உணர்வும் படிக்கிறவர் உணர்வும் சங்கமிக்கிற இடமாக அது அமைகிறது.

ஆக, இப்போதைக்குப் பாதுகாப்பான, வசதியான விளக்கமாக இருப்பது: கவிதையை உணரலாம், உரித்துக்காட்ட முடியாது. கவித்துவத்தை அனுபவிக்கலாம், ஆராய முடியாது. உள்ளடக்கத்தை விமர்சிக்கலாம், உள்ளுரையும் உயிர்ப்பை விவரிக்க முடியாது. எதுவானாலும், கவிதையாக இருக்க வேண்டும் என்பதன்றி வேறு முன் நிபந்தனை இல்லை!

கருத்தும் கவிதையும்
முற்போக்கான கருத்து மட்டுமே கவிதையாகிவிடாது. நான் முற்போக்கான, சமூக அக்கறையுள்ள சிந்தனைகளைக் கட்டுரையாக எழுதுகிறேன் என்ற மன நிறைவு எனக்கு உண்டு. ஆனால் அதே சிந்தனைகளை, என் மனதில் குடியேறியிருக்கும் கவிஞர்கள் யாரேனும் வெளிப்படுத்தினால் எவ்வளவு கவித்துவத்துடன் கம்பீரமாக நடைபோடும் என்ற ஒப்பீடும் எனக்கு உண்டு. மேலும் சொல்வதானால், மனதைப் பிழியும் ஒரு சோக நிகழ்வு பற்றிய வெளிப்பாடு கூட, படைப்புக்கான பரவசத்தை எனக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த முரண்பாட்டின் பொருத்தநிறை இணைப்பில் இருக்கிறது கவிதை.

அப்படியானால் கவிதைக்கு முற்போக்கான உள்ளடக்கம் தேவையில்லையா? நானறிந்த வரையில், கவிதை என வந்தாலே ஆகப்பெருமளவுக்கு அது முற்போக்கானதாகத்தான் வருகிறது. பிற்போக்கான சிந்தனைகள் கவிதையாய் உருக்கொள்வதில்லை போலும். சாதி ஆணவத்தைப் போற்றுகிற, மதவெறியை உயர்த்துகிற, உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்துகிற, பெண்ணடிமையைப் பேணச் சொல்கிற, குழந்தை உரிமைக்குக் குழி பறிக்கிற கவிதைகள் வந்ததாகவோ, வந்தாலும் நின்றதாகவோ தெரியவில்லை. நாட்டின் அரசியல் நிலைமையையே எடுத்துக்கொண்டால் கூட, கடந்த ஐந்தாண்டு கால மோடி ஆட்சியின் சாதனைகளைப் பாரீர் என்று கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள்தான் வந்தனவேயன்றி, கவிஞர்கள் யாரும் உளப்பூர்வமாக ஆதரித்துக் கவிதை படைத்ததில்லை. ஆனால், பண மதிப்பை ஒழித்தது, ஒரே வரி என்று திணித்தது, உணவு உரிமையைத் தடுத்தது, கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரித்தது உள்ளிட்ட அதிகார அத்துமீறல்களை அம்பலப்படுத்தி, மக்களின் எழுச்சிக்கு அறைகூவல் விடுக்கிற எத்தனை கவிதைகள் புடைத்தெழுந்தன! சென்னை மெரினா தடியடி முதல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வரையில் அரச வன்முறைகளைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிய கவிதைகள்தான் வானுயர்ந்து ஒலித்தன.

கவிதை விதைப்பால் இன்னொரு நல் விளைச்சலும் இருக்கிறது. கவித்துவ ரசனையோடு வாழ்க்கையை அனுபவிக்க முடியும்! உலகமய வன்மங்களும், கார்ப்பரேட் சூதுகளும், மனிதம் கொல்லும் மதவெறிக் கயமைகளும், ஜனநாயக வாய்ப்புகளைப் பயன்படுத்தியே நடத்தப்படும் ஜனநாயகப் படுகொலைகளும், எள்ளி நகையாடப்படும் எளிய மக்களின் அவலங்களும், கலைந்துவிடாமல் பராமரிக்கப்படும் போர் மேகங்களும் இன்ன பிற சூனியங்களும் சூழ்ந்திருக்கும் நிலையில் வாழ்க்கையைக் கவித்துவ ரசணையோடு அணுகுவதே காப்பு. சோர்ந்துவிடாமல் ஆறுதலும் அளித்து, விடுவதில்லை என ஆவேசமும் ஊட்டுகிற மகத்துவம் வாய்ந்தது அந்தக் கவித்துவம். வாருங்கள், சக மனிதர்களும் அதனை அனுபவிக்கச் செய்திட மக்களிடம் கவிதை பேசுவோம். கவிதையைப் பற்றியும் பேசுவோம்,

(‘செம்மலர்’ மாரச் 2019 இதழில் வந்துள்ள எனது கட்டுரை)