Friday 23 November 2007

விவாதம்

உண்மை வெளியாகும், உள்ளம் தெளிவாகும்
உரிமைகள் ஆணைய தலைவருக்கும்...

மார்க்சிஸ்ட் கட்சியையும் அதன் தலைமையிலான இடது முன்னணியையும் தாக்குவதற்கு அறிவு ஜீவி வட்டாரத்தில் ஒரு படையே கிளம்பியிருக்கிறது. மேலோட்டமான சில சிந்தனைகளை வைத்துக்கொண்டு மார்க்சிஸ்ட்டுகள் குறித்து அவநம்பிக்கை பிரச்சாரம் செய்ய முயன்ற இவர்கள், இப்போது மேற்கு வங்கத்தின் நந்திகிராமம் பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள். வன்முறை மட்டுமே ஒட்டுமொத்த அரசியல் இலக்காகக் கொண்ட நக்சலைட்டுகளின் பிடியில் ஒரு வட்டாரமே சிக்கிக்கொண்டாலும் பரவாயில்லை, இடதுமுன்னணியின் செல்வாக்கை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டதுபோல் இவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட்டுகள் சொல்கிற எந்த விளக்கத்தையும் கேட்க மாட்டோம் என்ற, "கொள்கை" உறுதியோடு இவர்கள் தங்களுடைய பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

இந்தப் படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும் இணைந்துவிட்டாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏற்கெனவே நந்தி கிராமத்தில் என்ன நடந்தது என்பதை ஆராய்வதற்கான நடவடிக்கைகளை ஆணையம் துவங்கியிருக்கிறது. புத்ததேவ் அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.இந்நிலையில் ஆணையத்தின் தலைவர் எஸ்.ராஜேந்திர பாபு, நந்தி கிராமத்தையும் குஜராத்தையும் ஒப்பிட்டு, கருத்துக் கூறியிருக்கிறார். குஜராத்தில் சட்டம் ஒழுங்கை மீறி மாநில அரசின் ஆசீர்வாதத்தோடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மதவெறிக் கலவரத்தையும், நந்தி கிராமத்தில் மக்களை வன்முறையாளர்கள் பிடியிலிருந்து மீட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையையும் ஒப்பிடுவதற்கு இவருக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?

குஜராத்தில் நடந்தது இந்துத்துவா கூட்டத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை அரசியல். சிறுபான்மை மக்கள் - குறிப்பாக இஸ்லாமிய மக்கள் - பெரும்பான்மையினருக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற "பாடத்தை" போதிப்பதற்காக அந்த அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்கள் கொலை செய்யப்பட்டனர். அந்தக் கொலைகளுக்கு அரசாங்கப் பதவிகளில் இருந்தவர்களே கூட எப்படியெல்லாம் வழிகாட்டினார்கள், எப்படியெல்லாம் காவல்துறை கைகட்டிக்கொண்டு இருந்தது என்பது குறித்து ஏராளமான செய்திகள் வந்துள்ளன. ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து நெருப்பில் வீசுகிற அளவிற்கு மதவெறி போதை தலைக்கேறிய அந்தக் கூட்டம் கொலைவெறியாட்டம் நடத்தியது.

2002ம் ஆண்டு அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகள் தங்களுடைய இடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் அகதிகள்போல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். நந்தி கிராமத்திலோ மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒரு ஆபாசக் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு அந்த வட்டாரத்தைக் கைப்பற்றுவதற்கு சதி செய்தன. அந்தச் சதியின் ஒரு கூறாகவே அப்பட்டமான வலதுசாரிக் கட்சிகளான பாஜக, மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றோடு அதிதீவிர மாவோயிஸ்டுகளும் சேர்ந்துகொண்டார்கள். தீவிரவாதம் குறித்து மேலும் கீழும் குதிக்கும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் வகையறாக்கள் கொஞ்சமும் கூச்சமின்றி இந்த அதிதீவிரவாதிகளின் ஒத்துழைப்பை நாடினர். அதேபோல், கம்யூனிஸ்ட்டுகளையும் மற்ற இடதுசாரிகளையும் ஒட்டுக்காகக் கையேந்துபவர்கள் என்று ஓயாமல் கூறிக்கொண்டிருக்கும் நக்சலைட்டுகள் இந்தக் கும்பலோடு உறவு வைத்துக்கொள்ள தயங்கவில்லை. அறம் வழுவிய இக்கூட்டணியால் சுமார் நான்காயிரம் மக்கள் அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நில உரிமை பாதுகாப்புக்குழு என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட அந்தக் கூட்டணி, இந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடித்தது. அவ்வாறு விரட்டப்பட்டவர்களில் தலித்துகள், முஸ்லிம்கள், விவசாயத் தொழிலாளர்கள், கைவினைத் தொழிலாளர்கள் என அனைத்துப் பிரிவினரும் இருக்கிறார்கள்.இந்த ஆண்டில் மட்டும் இக்கூட்டத்தால் சுமார் 30 இடது முன்னணி ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இக்கூட்டத்தினரிடமிருந்து எண்ணற்ற துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை - மாநில காவல்துறை அல்ல - மத்திய ரிசர்வ் காவல்படை கைப்பற்றியிருக்கிறது.

வெளியேற்றப்பட்ட அந்த மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவம், தங்களது தொழில்களில் அமைதியாக ஈடுபடவும் இடது முன்னணி அரசு தன்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறது. அந்த முயற்சிகளுக்கு துணையாக இருப்பதற்கு மாறாக, சில தொண்டு நிறுவனங்களும் - தங்களுக்கு வருகிற அந்நிய நிதிகளுக்கு விசுவாசமாக - நந்தி கிராமம் பிரச்சனை குறித்து நாடு முழுக்க திசைதிருப்பும் பிரச்சாரங்களை செய்து வருகின்றன. இப்படிப்பட்ட பிரச்சாரங்களுக்கு சிலர் இரையாவது இயற்கைதான். ஆனால் பகுத்தறிவோடு பிரச்சனைகளை அணுக வேண்டிய மனித உரிமைகள் ஆணையம் இரையாகலாமா? நந்தி கிராமம் பிரச்சனை குறித்து ஆணையத்தின் விசாரணை முழுமையாக முடிந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாவதற்கு முன்பே அதன் தலைவர் இப்படி குஜராத்தையும் நந்தி கிராமத்தையும் ஒப்பிட்டது என்ன நியாயம்?

மேலோட்டமான தனிமனித உரிமை பேசிக்கொண்டு ஒட்டுமொத்தமான ஜனநாயக உரிமைகளை புதைகுழிக்கு அனுப்ப முயல்கிறவர்களின் குரலை ராஜேந்திர பாபுவும் எதிரொலித்திருப்பது வேதனையானது மட்டுமல்ல, விபரீதமானதும் கூட.

விரைவில் உண்மைகள் வெளியாகும். உள்ளங்கள் அதில் தெளிவாகும் - தேசிய மனித உரிமை ஆணையத் தலைவருக்கும்.- அ.குமரேசன்
இடதுசாரிகளோடு இணைந்து நிற்பீர்

மேற்கு வங்க மக்களுக்கு உலக அறிஞர்களின் பகிரங்க கடிதம்

ந்திகிராமம் பிரச்சனை தொடர்பாக மேற்கு வங்க மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயல்வோர் குறித்து கவலை தெரிவித்தும், அதை முறியடிக்க வேண்டுகோள் விடுத்தும் நோம் சோம்ஸ்கி உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற சிந்தனையாளர்கள் கூட்டாக ஒரு பகிரங்கக் கடிதம் வெளியிட்டுள்ளனர். அக்கடிதம் வருமாறு:

மது வங்காள நண்பர்களுக்கு,மேற்கு வங்க நிகழ்வுகள் குறித்து எங்களை வந்தடையும் செய்திகள், அந்த மாநிலத்தில் எங்களில் சிலர் மேற்கொண்ட பயணங்களின்போது ஏற்பட்ட நம்பிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளுவதாக உள்ளன. ஒரே விதமான மாண்புகளைக் கொண்டுள்ள மக்களிடையே, இணைக்க முடியாத இடைவெளிகளை ஏற்படுத்தும் வகையில், பொது வெளியைப் பிளவுபடுத்தியுள்ள வெறுப்புணர்வு எங்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. அதுதான் எங்களுக்கு வேதனையைத் தருகிறது. இந்த இடைவெளியின் இரு மருங்கிலும் உள்ளவர்கள் சொல்வது எங்கள் காதில் விழுகிறது; அதிலிருந்து நிகழ்வுகள் குறித்தும் அவற்றின் இயக்குவிசைகள் குறித்தும் ஓரளவு புரிந்து கொள்ள முயல்கிறோம். நம்மிடையே உள்ள தொலைவு, எதையும் திட்டவட்டமாக கூறவியலாமல் எங்களைத் தடுக்கிறது.

மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட (நிலச் சீர்திருத்தம், உள்ளாட்சி போன்ற) சில முக்கியமான பரிசோதனைகளை, சில பிரச்சனைகள் மீதான கருத்து வேறுபாடுகள் கிழித்துப் போட்டுவிட வங்காள மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம்.

வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட விவசாயிகளோடு எங்களது முழுமையான ஒருமைப்பாட்டை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். நந்திராமத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ரசாயனத் தொழில் வளாகம் அமைக்கப்பட மாட்டாது என்று மேற்கு வங்க அரசு உறுதி அளித்திருப்பதாக நாங்கள் அறிகிறோம். வன்முறையால் வெளியேற்றப்பட்டவர்கள் இப்போது பழிவாங்கல் ஏதுமின்றித் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடிகிறது என்பதும் எங்களுக்குத் தெரியவருகிறது. நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் நடப்பதையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். நாங்கள் விரும்புவதும் அதுதான்.

உலக சக்திகளின் இன்றைய வலிமை நிலைகள் காரணமாக, இடதுசாரி சக்திகளைத் துண்டாடுவது ஒரு மூர்க்கத்தனமான பாதிப்புகளுக்கு இட்டுச் சென்றுவிடக்கூடும். ஒரு நாட்டின் (இராக்) அரசைத் தகர்த்த ஒரு உலகமகா ஆதிக்க சக்தி, இப்போது இன்னொரு நாட்டையும் (ஈரான்) தகர்ப்பதற்குத் தயாராகி வருவதைப் பார்க்கிறோம். எனவே, வேறுபாட்டிற்கான அடிப்படைகள் இனியும் இல்லை என்ற நிலையில், இது பிரிந்து நிற்பதற்கான தருணம் அல்ல.

- இக்கடிதத்தில் கையெழுத்திட்டிருப்போர்:

நோம் சோம்ஸ்கி
(நூலாசிரியர்: `தோல்வியடைந்த அரசுகள்- தவறான அதிகாரமும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும்')தாரிக் அலி(நூலாசிரியர்: `கரீபிய கொள்ளைக்காரர்கள்', ஆசிரியர்: `நியூ லெஃப்ட் ரிவ்யூ')

ஹோவர்ட் ஜின்
(நூலாசிரியர்: `அரசாங்களால் அடக்க முடியாத சக்தி')

சூசன் ஜார்ஜ்
(நூலாசிரியர்: `மற்றொரு உலகம் சாத்தியமே', இணையாசிரியர்: `எதிரியுடன் யுத்தம்- குவாண்டா நாமோவுக்கு ஒரு பிரிட்டிஷ் முஸ்லிமின் பயணம்', முன்னாள் ஆசிரியர்: `கார்டியன்')

வால்டன் பெல்லோ
(நூலாசிரியர்: `ஆதிக்கக் குழப்பங்கள் - அமெரிக்க சாம்ராஜ்யத்தின் தகர்வு')

மகமூத் மம்தானி
(நூலாசிரியர்: `குட் முஸ்லிம், பேட் முஸ்லிம்: அமெரிக்கா', `பனிப் போரும் பயங்கரவாத வேர்களும்')

அகீல் பில்கிரானி
(நூலாசிரியர்: `அரசியலும் அடையாளத்தின் தார்மீக மனநிலையும்')

ரிச்சர்ட் ஃபால்க்
(நூலாசிரியர்: `யுத்தத்தின் விலை - சர்வதேச சட்டமும் ஐ.நா. அமைப்பும்', `இராக்குப்பின் உலகம்')

ஜீன் ப்ரிக்மான்ட்
(நூலாசிரியர்: `மானுட ஏகாதிபத்தியம் - யுத்த விற்பனைக்காக மனித உரிமைகளை பயன்படுத்துதல்')

மைக்கேல் ஆல்பர்ட்
(நூலாசிரியர்: `பாரகான்- முதலாளித்துவத்திற்கு பின் வாழ்க்கை', ஆசிரியர்: `இசட்-நெட்'

ஸ்டீபன் ஷாலோம்
(நூலாசிரியர்: `ஏகாதிபத்திய புளுகுகள் - பனிப்போருக்குப் பிந்தைய அமெரிக்கத் தலையீடுகளை நியாயப்படுத்துதல்')

சார்லஸ் டெர்பர்
(நூலாசிரியர்: `லாபத்திற்கு முன் மக்கள் - பயங்கரவாத யுகத்தில் புதிய உலகமயமாக்கல்')

விஜய் பிரசாத்
(நூலாசிரியர்: `இருளடைந்த நாடுகள் - மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் வரலாறு')

தமிழில்: அ.குமரேசன்

Sunday 18 November 2007

விவாதமின்றி ஒரு இலக்கிய விருது விழா!

“மொழி என்பது அடிப்படையிலேயே தொடர்பு சாதனம்தான். அது மக்கiளை இணைக்க வேண்டுமேயல்லாமல் பிரிக்கக் கூடாது.” - எழுத்தாளர் சிவசங்கரி சொன்ன அருமையான கருத்து இது. சென்னையில் நவ.9 அன்று நடந்த ‘நல்லி - திசை எட்டும்’ மொழிபெயர்ப்பு விருது வழங்கு விழாவில் வாழ்த்திப் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளுக்குக் கொண்டுசென்ற ஐந்து பேர், பிற மொழிப் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவந்த ஐந்து பேர் என பத்து மொழிபெயர்ப்பாளர்களுக்கு ரூ.10,000 வீதம் பணமும், பேனா முனையும் பாரதி முகமும் இணைந்த நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன. படைப்பாளிகளே கூடப் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாத சூழலில் மொழிபெயர்ப்பாளர்கள் இவ்வாறு கவுரவிக்கப்பட்டது நிச்சயமாக மாறுபட்ட நிகழ்ச்சிதான். சிவசங்கரி கூறியது போல், இந்தியாவிலேயே ஒரு அரிதான நிகழ்வுதான்.

பிற மொழி இலக்கியங்களைத் தமிழில் கொண்டுவருவதற்கென்றே ஒரு காலாண்டிதழ் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதுதான் ‘திசை எட்டும்.’ மொழிபெயர்ப்புப்பணிக்காக சாகித்ய அகடமி விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவரான குறிஞ்சி வேலன் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள ஏடு அது. பட்டாடைகளுக்கான ‘நல்லி’ நிறுவனமும் ‘திசை எட்டும்’ ஏடும் இணைந்து இந்த விருதுகளை வழங்குகின்றன.

“இந்த விருதுகள் துவங்கி நான்காண்டுகள் ஆகின்றன. முதலில் ஒருவருக்குத்தான் விருது வழங்கப்பட்டது. இப்போது பத்துப் பேருக்கு வழங்க நல்லி குப்புசாமி செட்டியார் முன்வந்திருக்கிறார்,” எனத் தெரிவித்தார் குறிஞ்சி வேலன்

குப்புசாமி செட்டியார் பேசுகையில், “விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் மக்கள் ஆர்வமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிற பொறுப்பு நம்மிடம் இருக்கிறது,” என்றார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழகக் காவல் துறைத் தலைவர் பொ. இராஜேந்திரன் கொஞ்சம் நகைச்சுவையாகப் பேசிவிட்டுப் போனார். ஆர். நடராஜன் தமிழில் எழுதி, ஸ்டான்லி மலையாளத்தில் மொழிபெயர்த்த ‘வன நாயகம்’ நூல் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த மூல ஆசிரியர்களும், வெளியீட்டாளர்களும் கவுரவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் வேறு சில மாறுபட்ட அனுபவங்களும் கிடைத்தன. பங்கேற்ற அனைவருக்கும் அருமையான சாப்பாடு வழங்கப்பட்டது! ‘உறவுப் பாலம்’ இலக்கியமும் இலக்கியவாதிகளும் சம்பந்தப்பட்ட இவ்விழாவில், சென்னையில் வழக்கமாக இலக்கிய நிகழ்ச்சிகள் என்றால் கண்டிப்பாகக் காணக்கூடிய படைப்பாளிகளையோ, வாசகர்களையோ காண முடியவில்லை. இலக்கிய விவாதங்களையும் கேட்க முடியவில்லை. மாறாக, சபாக்களில் கர்னாடக சங்கீத நிகழ்ச்சிகளுக்கு வரும் கூட்டமாகவே பெரும்பாலும் காணப்பட்டது. விருது நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் பாடகர் சுதா ரகுநாதன் குழுவினரின் கச்சேரி நடைபெற்றது ஒரு காரணமாக இருக்குமோ?

தேர்வு பெற்ற நூல்கள் பற்றி ஒரு வரிக் குறிப்பு மட்டுமே சொல்லப்பட, புரவலர் புகழ்பாடுதல் சற்று அதிகமாக இருந்தது. அன்றைக்கு நல்லியாரின் பிறந்த நாளாகவும் அமைந்துவிட, நியூ-உட்லேண்ட்ஸ் ஓட்டல் நிர்வாகம் வழங்கிய பெரிய கேக் ஒன்றை அவர் வெட்ட, புகழ்ச்சி மேலும் தூக்கலாகியது. இனி ஆண்டுதோறும் செட்டியாரின் பிறந்த நாளை மொழிபெயர்ப்பு இலக்கிய நாளாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் சிவசங்கரி.

இப்படிப் பணம் படைத்த புரவலர்களைச் சார்ந்தே புலவர் கூட்டம் இருக்க வேண்டும் என்பதே தலையெழுத்தா என்ற கேள்வியும், இன்றைய சூழலில் இந்த வகையிலாவது இலக்கிய வாதிகளுக்கு கவுரவமும் நிதியும் கிடைக்கிறதே என்ற எண்ணமும் சேர்ந்து எழுந்தன.


விருது பெற்றவர்கள்:

தமிழிலிருந்து: டி.டி.இராமகிருஷ்ணன் (மலையாளத்தில், ஷோபா சக்தியின் `ம்’), மந்திரிப்ரகட சேஷாபாய் ( தெலுங்கில், சிவசங்கரியின் `நான் நானாக’), நவநீத் மத்ராசி (குஜராத்தியில், கு.சின்னப்ப பாரதியின் `சங்கம்’), வெ.பத்மாவதி (இந்தியில், `தமிழ்ச் சிறுகதைகள் நூறு’), பி.ராஜ்ஜா (ஆங்கிலத்தில், சுப்ரபாரதி மணியனின் `சாயத்திரை’). பிறமொழிகளிலிருந்து தமிழில்: ச.சரவணன் (ஆங்கிலம், டயன்அக்கர்மெனின் `காதல் வரலாறு’), நிர்மால்யா (மலையாளம், கோவிலனின் `தட்டகம்’), இறையடியான் (கன்னடம், `வியாசரராயபல்லாள போராட்டம்’), சாந்தாதத் (தெலுங்கு, மாலதி செந்தூரின் `இதய விழிகள்’), புவனாநடராஜன் (வங்காளி, ஆஷாபூர்ணா தேவியின் `முதல் சபதம்’).
உண்மையை மறைக்கும் ஊடக நந்திகள்

அது ஒரு சிறிய அரங்கம். மேடையில் நிறுத்தப்பட்டுள்ளது ஒரு சிறிய வெண்திரை. அன்றைய விவாதப் பொருள்களுக்கான இரண்டு மூன்று ஆவணக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. அவற்றில் ஒரு படம் இவ்வாண்டு மார்ச் மாதம் மேற்கு வங்கத்தின் நந்திகிராமத்தில் நடந்த சம்பவங்கள் பற்றியது. முழுக்க முழுக்க ஒரு மனிதநேய விரோதச் செயல் நிகழ்த்தப்பட்டது போலவும், தங்களது நிலங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போராடிய அப்பாவி கிராம மக்கள் மீது கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது போலவும், மற்ற இடங்களில் அப்படி நடந்தால் கொந்தளிக்கிற மார்க்சிஸ்ட்டுகள் தாங்கள் ஆளும் மாநிலத்தில் மட்டும் அப்பட்டமாக அதே செயலைச் செய்வது போலவும் சித்தரித்த அந்தக் குறும்படத்தைத் தயாரித்தது (வேறு யார்) ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சித் தோழர் ஒருவர், திரையிடல் முடிந்ததும் நடந்த விவாதத்தில் பங்கேற்று, உண்மையில் நடந்தது என்ன என்று விளக்குகிறார். இடது முன்னணி அரசின் விளக்கத்தையோ, கம்யூனிஸ்ட்டுகளின் நிலைபாட்டையோ கேட்காமல் ஒரு தரப்பாக மட்டும் பதிவு செய்திருப்பது நடுநிலையானதுதானா என்று கேள்வி எழுப்புகிறார். அரசாங்கத்தின் கண்காணிப்பையும் இடது சாரிக் கட்சிகளின் அடிமட்டத் தொடர்புளையும் மீறி, மம்தா பானர்ஜி கட்சி, வலதுகோடி பாஜக, இடது கோடி மாவோயிஸ்ட்டுகள் முதலியோர் அங்கே அவ்வளவு விரிவாகக் களம் அமைக்க முடிந்தது எப்படி, அரசு நிர்வாகத்தையே அப்பகுதியில் முடக்குகிற அளவுக்கு அவர்கள் சேர்ந்தது எப்படி, ஜனநாயகத்தைப் புதைக்கிற வகையில் மறைந்திருந்து தாக்குவதற்கான பதுங்கு குழிகள் தோண்டப்பட்டது எப்படி, தேசத்தோடு அந்த மக்களைத் தொடர்பறுக்கும் விதத்தில் சாலைகளும் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது எப்படி - என்பதையெல்லாம் கட்சி முனைப்புடன் ஆராய்கிறது என்றும் அவர் சொன்னார். பார்வையாளர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டார்களோ, இல்லையோ அமைதியாகக் கேட்டுக் கொண்டார்கள்.அந்த இடத்தில் அப்படியொரு தோழர் இருந்ததால், அவரைப்போன்றவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிற ஒரு அமைப்பு அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்ததால், திரை ஊடகத்தின் ஊடாக ஒரு “தொண்டு” நிறுவனம் செய்ய முயன்ற மார்க்சிய எதிர்ப்புக் கருத்து ஊடுருவல் அங்கே அந்த அளவுக்குத் தடுக்கப்பட்டது. அந்தப்படம் திரையிடப்படக்கூடிய வேறு இடங்களில்? அப்படி வேறு இடங்களுக்குச் செல்கையில் அங்கே மார்க்சிஸ்ட்டுகள் வராமல் பார்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இதுவாவது இப்படிப்பட்ட குறும்படங்களில் ஆர்வமுள்ள ஒரு குறுங்கூட்டம் கலந்து கொண்ட நிகழ்ச்சி. பெரும்பகுதி மக்களைச் சென்றடையும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்ற பெரும் ஊடகங்கள் என்ன செய்கின்றன? அவைகளுக்குள் கடுமையான வர்த்தகப் மோதல்கள். ஒன்றையொன்று போட்டியில் விஞ்சுவதற்காக விலைக் குறைப்பு, கவர்ச்சிப்படங்கள், இலவசங்கள் என என்னென்னவோ உத்திகள். பொதுவாக ஊடகச் சுதந்திரம் பற்றிப் பேசினாலும் எதிராளி ஊடகம் தாக்குப் பிடிக்காமல் உதிர்ந்து போகாதா என்ற ஏக்கங்கள். இவ்வளவு போட்டி இருந்தாலும் ஒரு அம்சத்தில் அவைகளுக்குள் ஒற்றுமை. இடதுசாரிகளை - குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியை - மக்களிடமிருந்து தனிமைப்படுத்த முயல்வதில் ஒற்றுமை. பேசி வைத்துக் கொண்டு ஏற்படுத்திக் கொண்டது அல்ல என்றாலும், சிந்தனை அடிப்படையில், கோட்பாடு அடிப்படையில் - பச்சையாகச் சொல்வதானால் வர்க்க அடிப்படையில் - ஏற்பட்ட ஒற்றுமை அது.

நந்திகிராம் பிரச்சனை இவர்களது நோக்கத்திற்குத் தோதாகக் கிடைத்தது - வெறும் வாயை மென்றவர்களுக்கு பான்பராக் கிடைத்தது போல. மார்ச் மாதத்திலிருந்து எப்படியெல்லாம் அந்தப் பிரச்சனையை வெளிப்படுத்தி வருகிறார்கள் சொல்ல ஆரம்பித்தால் அவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியாது. இத்தகைய வெளிப்பாடுகளில், நந்திகிராம் மக்களின் வாழ்க்கை, வெளியேறியவர்கள் மீண்டும் ஊர் திரும்புதல் என்ற அக்கறையை விட, பிரச்சனையைக் கையாள்வதில் இடது முன்னணி அரசு தோல்வியடைந்துவிட்டது என்று வாசகர்கள்/நேயர்கள் மனங்களில் வார்க்க வேண்டும் என்ற ஆசையே விஞ்சி நிற்கிறது. மார்க்சிஸ்ட்டுகள்தான் தொடரும் வன்முறைக்குக் காரணம் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்ற வக்கிரமும், அதன் மூலம் கட்சியை பலவீனப்படுத்துகிற குரூர இச்சையும் அந்த ஆசையில் கலந்திருக்கின்றன.

அதனால்தான், மேதா பட்கர்களையும், அபர்ணா சென்களையும் பெரிதாக முன்னிலைப்படுத்துகிற இவ்வூடகங்கள் புத்ததேவ், பிமன்பாசு விளக்கங்களை இருட்டடிக்கின்றன. மேற்கு வங்க ஆளுநர் கோபால் காந்தியின் அத்து மீறலை, நியாய ஆவேசம் போல் காட்டுகின்றன. பிரகாஷ் காரத் சொல்வதை முக்கியத்துவமின்றி வெளியிடுகின்றன.

ஆங்கில ஊடகங்களும் வட மாநில ஊடகங்களும் மட்டுமல்ல, தமிழ்கூறு நல்லுலக ஊடகங்களும் இதில் விதிவிலக்கல்ல. சம்பந்தமே இல்லாமல் டாட்டா கார் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து கிராம மக்கள் போராடி வருவதாக, சிங்கூருக்கும் நந்திகிராமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது சூரியச் செய்தி நிறுவனம். (இடது சாரிகள் ஆதரவோடுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமையப் போகிறது என்பது தெரிய வந்த போது கம்யூனிஸ்ட்டுகள் இந்த அரசை “பிளாக் மெயில்” செய்வார்களா என்று திரும்பத்திரும்ப ஒளிபரப்பி தொலைக்காட்சி நிறுவனம் இது.)

தலைவர்கள் கருத்துக் கூறாவிட்டாலும் அவர்களால் நடத்தப்படுகிற ஒரு நாளேட்டின் "தலையங்க எழுத்தாளர்" இடது சாரிகளுக்கு எதிரான பகைமைக் கருத்தைப் பரப்பிடத் தமிழில் ஓசை எழுப்புகிறார். பாஜக, திரிணமூல் காங்கிரஸ், நக்சலைட் கூட்டணியின் சூழ்ச்சியை அடையாளம் காட்ட மறுத்துவிட்டு, புத்ததேவின் பிடிவாதத்தால்தான் நந்திகிராம் விவகாரம் தொடர்கிறது என்று மணியடிக்கிறது ஒரு தினசரி. அறிவுஜீவிகளால் அறிவுஜீவிகளுக்காக நடத்தப்படுகிற அறிவுஜீவி இதழ்களும் தம் பங்கிற்கு நந்திகிராம் நடப்புகள் குறித்துத் தமது வாசகர்களைக் குழப்புகின்றன.

இப்படியாகப்பட்ட ஊடகப் பெருவல்லாளர்களின் திட்டமிட்ட மறதிக்கு ஒரு எடுத்துக்காட்டுதான், “நந்திகிராம வன்முறைகளில் மாவோயிஸ்ட்டுகளுக்குப் பங்கிருக்கிறது,” என்று - ஒரு மார்க்சிஸ்ட் தலைவர் அல்ல - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. சீனிவாசன் சொல்லியிருப்பதை சொல்லாமல் மறைத்தது. எனக்குத் தெரிந்து ஒரே ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சிதான் அதை ஒரு வரியளவாவது சொன்னது. மேற்கு வங்கம் சென்றுள் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரி “நக்சலைட்டுகளின் பிடியில் நந்திகிராம் வட்டாரம் சிக்கியிருக்கிறது,” என்று கூறியிருப்பதையும் பெரும்பாலான ஊடகங்கள் பின்பக்கங்களுக்கும், தொலைக்காட்சிச் செய்தியின் அடிவரி ஓட்டத்திற்கும் தள்ளிவிட்டன.

அப்பாவி மக்களை அச்சுறுத்தும் அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் அதிரடிப் புரட்சிக்காரர்கள் கால் ஊன்ற உதவுவது தங்களுடைய பதவி தாக அரசியலுக்கு பயன்படும் என்று மம்தா வகையறாக்கள் கருதக்கூடும். ஆனால் அரசியல் புற்றுநோயை வளர விடுவதற்கான விலையை அவர்களே கூட கொடுக்க நேரிடும். அதன் சுமையும் வலியும் மக்கள் மீது தான் வந்து விழும். அப்போது - அந்தச் செய்தியையும் இதே ஊடகங்கள்தான் சொல்ல வேண்டியிருக்கும். அப்போதாவது உண்மையை சொல்வார்களா அல்லது, இந்த நிலைமை வந்ததற்கு சிபிஎம்-தான் காரணம் என்று கதைகட்டிக் கொண்டிருப்பார்களா?

Tuesday 13 November 2007

பலம் பெறட்டும் பர்மா தேக்கு
அ. குமரேசன்

காவிக் கூட்டம் என்றால் நம் நாட்டில் மதவெறி சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கடலுக்கடியில் பாலம் என்றெல்லாம் கடவுளின் பெயரால் கலவரம் செய்துகொண்டிருக்கிற கும்பல் நினைவுக்கு வருகிறது. பக்கத்து நாடான பர்மாவில் ஜனநாயகக் காற்று வீசச் செய்வதற்காகவும் அதற்குத் தடையாக இருக்கும் ராணுவ ஆட்சியை அகற்றுவதற்காகவும் காவியங்கித் துறவிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே காவிக் கலவரம், அங்கே காவிக் கிளர்ச்சி!

புத்த துறவிகளுக்கு அன்னம் படைப்பது என்பது பர்மாவில் பெரியதொரு கவுரவம், மன நிம்மதி. அந்த கவுரவத்தையும் நிம்மதியையும் ராணுவத்தினருக்கோ அவர்களது குடும்பத்தினருக்கோ வழங்க மறுக்கிறார்கள் பர்மா துறவிகள். சமுதாயத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு போராட்ட வடிவம் இது. கடந்த செப்டம்பரில் மற்றவர்களோடு சேர்ந்து துறவிகளும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என்று அணிவகுத்தனர்; மற்றவர்களோடு சேர்த்து துறவிகள் மீதும் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது; இது உலகத்தின் கவனத்தை பர்மாவின் மீது திருப்பியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் மிகச் சிலர்தான் உயிரிழந்ததாக ராணுவ அரசு கூறுகிறது. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டதாகவும், அதில் பாதிப்பேர் துறவிகள் என்றும் மக்கள் கூறுகிறார்கள்.ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ள அந்த நாட்டில், கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை உலகம் தெரிந்து கொள்வதே ஒரு போராட்டம்தான். தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் நாம் காணும் போராட்டக் காட்சிகள், அங்கு செயல்படும் இளம் மின்னணு ஊடக ஆர்வலர்கள் அரசின் கெடுபிடிகளை மீறி தங்களது கேமரா மொபைல் போன், ஹேண்டிகேம் போன்றவற்றில் பதிவு செய்து இணையத் தளம் வழியாகப் போட்டுவிடுகிற படங்கள்தான். நவீன தொழில்நுட்ப வழி சாத்தியங்களை ராணுவ அரசால் தடுக்க முடியவில்லை.

‘பர்மா’ என்ற பெயரையே இன்று பொது அறிவுப் புத்தகங்களில் ‘மியான்மர்’ என்ற சொல்லையடுத்து அடைப்புக் குறிகளுக்குள்தான் காண முடியும். பெரும்பகுதி மக்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல் நாட்டின் பெயரை மாற்றியது ‘ஜூன்டா’ எனப்படும் ராணுவக் கும்பல் சர்வாதிகார அரசு. பெயர் மாற்றுவதிலேயே இந்தச் சர்வாதிகாரம் என்றால், ஆட்சி முறையையே மாற்றுவதற்கான போராட்டத்தை அங்கீகரித்துவிடுவார்களா என்ன? அதற்காக அயராமல் போராடுகிற வீரப் பெண்மணி ஆங் சான் சூ குயி விடுதலைசெய்யப்பட வேண்டும் என்ற உலக சமுதாயத்தின் வேண்டுகோளை, துப்பாக்கி முனையிலிருந்து நாட்டையே விடுதலை செய்ய மறுக்கிற கும்பல் ஏற்றுக் கொண்டுவிடுமா என்ன?

வெள்ளை ஏகாதிபத்தியத்தால் அதன் காலனி நாடாக அடிமைப்படுத்தப்பட்டு, இந்தியாவின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டிருந்தது பர்மா. அதன் வற்றாத இயற்கை வளங்களை பிரிட்டிஷ் முதலாளிகள் வாரிச் சுருட்டினார்கள். விடுதலைப் போராட்ட இயக்கம் எரிமலையாய்க் கிளம்பியது. அதற்குத் தலைமை தாங்கி, முதலில் ஜப்பான் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் பின்னர் வஞ்சகமாக ஏமாற்றிய பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தும் போராடியவர் ஆங் சான். நேதாஜி போல், பர்மா விடுதலைப் படையை 1942ல் உருவாக்கியவர். பிரிட்டிஷ் அரசு அவரோடு விடுதலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் அது ஈடேறுவதைக் கண்ணாரக் காண்பதற்கு முன் அவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்ட 6 மாதங்கள் கழித்து, 1948 ஜனவரி 4ல் பர்மா விடுதலை பெற்றது. ஆனால் பர்மிய மக்களால் சுதந்திரக் காற்றை முழுமையாக சுவாசிக்க முடியவில்லை. ஒரு சுதந்திர நாட்டின் அரசுக்குக் கட்டுப்பட்ட பாதுகாப்புக் கருவியாக இருப்பதற்கு மாறாக, நாட்டையே தனக்குக் கட்டுப்பட்டதாக மாற்றியது பிரிட்டிஷ் வழி வந்த ராணுவம். அதிகார ருசி கண்டவராக 1962ல் பர்மா மக்களை சொந்த நாட்டு அடிமையாக்கினார் ஜெனரல் நே வின்.

ஆங் சானின் புதல்வியான சூ குயி மக்களைத் திரட்டி ஜனநாயகப் போராட்டத்தில் குதித்தார். அன்றைக்கும் அந்த எழுச்சிக்கு புத்த துறவிகள், ஆதரவாய் நின்றார்கள். துறவறம் என்பது “என்ன நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது” என கண்டுகொள்ளாமல் இருப்பதல்ல என்ற உணர்வுடன், போராட்டத்தில் பங்கேற்றார்கள். ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஜனநாயக மீட்புப் போராளிகளில், 600க்கும் மேற்பட்டோர் துறவிகள்.

1988ல் வங்கக் கடல் சுனாமி போல் தாக்கிய அந்தப் பேரெழுச்சியை எதிர்கொள்ள முடியாமல், ஆட்சியை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்திடம் ஒப்படைப்பதாக ராணுவ அரசு அறிவித்தது. 1990ல் பொதுத் தேர்தல் என்பதாக நடத்தப்பட்டது. ராணுவத்தின் திடீர்ச் சலுகைகள், மிரட்டல்கள் அத்தனையையும் மீறி மக்கள் சூ குயியின் தேசிய ஜனநாயக முன்னணி (என்.எல்.டி.) கட்சிக்கு மிகப் பெரும் வெற்றிவாகை சூட்டினர். அதிகாரப் பசி கொண்ட ஜெனரல் தான் வே தலைமையிலான ஜூன்டா குண்டாட்சி அந்தத் தேர்தல் செல்லாது என்று அறிவித்தது. நாடெங்கும் ஜனநாயக இயக்கச் செயல்வீரர்கள் கைது செய்யப்பட்டனர். சூ குயி சிறையிலடைக்கப்பட்டார். உலகத்தின் கடும் கண்டனங்கள் எழுந்த சூழலில் 1995ல் அவரை வெளியே விட்ட ஜூன்டா, அவர் ஆட்சிக்கு எதிராகக் கலகத்தைத் தூண்டுவதாகக் கூறி, வீட்டுக் காவலில் வைத்தது.

நம் நாட்டில் அடிக்கடி தேர்தல் வரும்போது, அதனை ஜனநாயகத்தில் மக்கள் மறுதேர்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதாமல், “நிலையான ஆட்சி” என்பதைக் கவர்ச்சிகரமான மாற்றாக பாஜக வகையறாக்களும் மேம்போக்கு ஊடகங்களும் பிரச்சாரம் செய்வதைக் காண்கிறோம். பர்மாவின் 45 ஆண்டு கால நிலையான ராணுவ ஆட்சி அந்த மக்களுக்கு வழங்கியது நிலையான வறுமையைத்தான். வலிமை மிக்க “பர்மாத் தேக்கு” விளையும் நாட்டில், மக்களின் வாழ்க்கை நிலை பட்டுப் போன முருங்கை மரமாய் பலவீனமாக்கப்பட்டிருக்கிறது. “தூர கிழக்கு நாடுகளின் அரிசிக் கலயம்” என்ற பெயர் பெற்ற நாட்டில் மக்கள் சோற்றுக்குத் தவிக்கும் நிலை. கரும்பு விளைச்சல் மிகுதியாக உள்ள நாட்டில் மக்களின் அனுபவம் கசப்பு மிக்கது. பெட்ரோலிய எண்ணை, இயற்கை வாயு ஆகியவற்றோடு, மரகதம், ரத்தினம் போன்ற மதிப்புமிக்க கனிமக் கற்களும் வளமாக உள்ள பர்மாவின் மக்கள், அவற்றின் ஆதாயத்தில் எந்தப் பங்கும் இல்லாதவர்களாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பர்மா மக்களின் போராட்டக் காட்சிகளைப் பார்க்கும்போது, புத்த பிக்குகளின் கால்களிலும், மக்களின் கால்களிலும் செருப்பில்லாததைக் கவனிக்க முடிகிறது. துறவிகளின் கால்களில் செருப்பு இல்லாததற்குக் காரணம் அவர்களது கோட்பாடு. பெரும்பாலான மக்களிடம் காலணிகள் இல்லாததற்குக் காரணம் ராணுவ ஆட்சியின் கேடு. உலகின் மிக ஏழ்மையான 10 நாடுகளின் பட்டியலில் பர்மா இடம் பிடித்திருக்கிறது. அதே நேரத்தில் ராணுவ ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அவர்ளோடு கூட்டு வைத்துள்ள முதலாளிகளும் சுகபோகத்தில் திளைக்கிறார்கள். நாட்டின் பெயரை மாற்றியது போல், தலைநகரம் யாங்கூன் என்பதையும் மாற்றி, நேபிடா என்ற புதிய தலைநகரத்தை உருவாக்கி, அதனை நவீனப்படுத்த கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தட்டிக்கேட்க எவருமில்லை என்ற அகங்காரத்தோடு சில மாதங்களுக்கு முன் - உலக வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகியவற்றின் கட்டளைப்படி - பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணை ஆகியவற்றின் விலைகளைக் கடுமையாக உயர்த்தியது ஜூன்டா. அதன் தொடர் விளைவாக அடிப்படைத் தேவைப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொட்டன. மக்களின் வாழ்க்கை மேலும் மோசமானது.

இந்தப் பின்னணியில்தான், விலை உயர்வு எதிர்ப்பாகத் துவங்கிய கிளர்ச்சி, ஆள்வோரைத் தட்டிக் கேட்க உரிமையுள்ள ஜனநாயகத்திற்கான போராட்டமாகப் பரிணமித்து வருகிறது.1988ம் ஆண்டுப் போராட்டத்தில் முக்கியப்பங்காற்றிய அன்றைய மாணவர் இயக்கத்திலிருந்து வந்தவர்கள், “88 மாணவர் தலைமுறை” என்ற அமைப்பை ஏற்படுத்தி அரசியல் சீர்திருத்தங்களுக்காகவும், பொருளாதாரக் கொள்கை மாற்றங்களுக்காகவும் கருத்துப் பிரச்சாரம் செய்தனர். சிறைகளில் வாடும் சுமார் 5 லட்சம் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கையெழுத்து இயக்கம் நடத்தினர். மக்களின் பெருமூச்சைப் புயலாக மாற்றும் வல்லமை இவர்களது பிரச்சாரத்திற்கு இருப்பதை உணர்ந்த அரசு, இதை வளரவிடக்கூடாது என்ற எண்ணத்துடன், ஜனநாயக இயக்கத்தின் ஒரு முன்னணித் தலைவராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் மிங் கோ நாய்ங் உட்பட, அமைப்பின் தலைவர்கள் பலரையும் கைது செய்து சிறையில் அடைத்தது.

தற்போதைக்கு போராட்டத்தை அரசு தனது அடாவடிகளால் அடக்கிவிட்டது போல் தோன்றுகிறது. ஆயினும், அக்கினிக் குஞ்சாக ஆவேசச் சுடர் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. மக்களோடு புத்த துறவிகளும் இணைந்து நிற்பது போராட்டத்திற்குப் புதிய வலிமை சேர்க்கிறது. ராணுவத்தால் மக்களைத் தாக்க முடியாத வகையில் ஒரு கேடயமாய்த் துறவிகள் அணிவகுக்கின்றனர். ராணுவம் துறவிகளையும் தாக்கத் துணிகிறபோது, மக்கள் கேடயமாகின்றனர்.

இதனிடையே, ஐ.நா. சிறப்புத் தூதராக இப்ராஹிம் கம்பாரி பர்மாவுக்கு வந்தார். ஆங் சாங் சூ குயியை விடுதலை செய்ய வேண்டும், ஜனநாயக முறையில் மக்கள் தங்களது அரசைத் தேர்ந்தெடுக்க வழிவிட வேண்டும், ஒடுக்கு முறைகளைக் கைவிட வேண்டும் என்ற வேண்டுகோள்களை அவர் முன்வைத்தார். ஜனநாயகத் தேர்தல் பற்றி உறுதியளிக்க மறுத்துவிட்ட ஜெனரல், சூ குயியை விடுதலை செய்ய வேண்டுமானால் அவர் மக்கள் போராடத் தூண்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்! தூதருக்கு ஜெனரல் அளித்த ஒரே சலுகை, சூ குயியைச் சந்திக்க அனுமதித்ததுதான்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்களும் பர்மாவின் ஜனநாயகம் பற்றி அக்கறை காட்டி வருகின்றன. நம் ஊரில் நகரப் பேருந்துகளின் கூட்ட நெருக்கடி பற்றியும் அதனால் அவதிப்படுபவர்கள் பற்றியும் அதிகமாகக் அலட்டிக் கொள்வது யாரென்று பார்த்தால் பிக் பாக்கெட் கில்லாடியாக இருப்பான்! அதைப் போல மேற்கத்திய அரசுகளின் உண்மையான அக்கறை, பர்மா மண்ணின் மரகதங்கள், தேக்கு, எரிவாயு உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கடத்திச் செல்வதுதான்.

இந்திய அரசின் நிலை என்ன? ஈராக் நாட்டிற்குள் அமெரிக்கா செய்து வரும் அட்டூழியங்கள் குறித்து, ஜார்ஜ் புஷ்-சுக்கு வலித்துவிடாமல் மென்மையாகக் கருத்துக் கூறியது போன்ற, இந்திய மக்கள் பெருமைப்பட முடியாத வழவழப்புதான் அரசின் நிலைபாடாக இருக்கிறது. இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் இடையே சுமார் 1600 கி.மீ. நீளத்திற்குப் பொதுவான எல்லை இருக்கிறது. பர்மாவுடன் ஒரு இயற்கை எரிவாயு ஒப்பந்தம் இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களின் சில தீவிரவாதக் குழுக்கள் பர்மாவைப் பதுங்கிடமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க ராணுவ அரசு ஒத்துழைக்காமல் போனால் என்ன செய்வது என்ற கோணத்திலும் இந்தியா வாய்மூடியிருப்பதாகக் கூறப்படுகிறது. சுயமரியாதையைச் சுருட்டிக் கொண்ட இந்த இழிவான மௌனத்தைக் கலைத்து, வலுவான குரலில் இந்திய அரசு பர்மா அடக்குமுறைகளைக் கண்டிக்க வேண்டும், ஜனநாயகப் போராட்டத்திற்குத் திட்டவட்டமாகத் தோள் தர வேண்டும்.

சூ குயி பர்மாவை விட்டு வெளியேறுவது, அவருக்கு இந்தியா போன்ற நாடுகள் அடைக்கலம் தருவது என்பது போன்ற “அரிய” யோசனைகளையும் சில மேற்கத்தியத் தரகர்கள் கூறிவருகிறார்கள். தமது மண்ணையும் மக்களையும் விட்டுப் புகலிடம் தேடி எங்கேயும் போகப் போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்துவிட்டார் அந்த 60 வயது வீராங்கனை.

இப்படிப்பட்ட உறுதிப்பாடுகளின் தாக்கத்தில், உலக சமுதாயத்தின் உணர்வார்ந்த ஒருமைப்பாட்டில் --- மரகதங்களையும் ரத்தினங்களையும் விட மதிப்பு வாய்ந்த உண்மையான சுதந்திரமும் ஜனநாயமும் அங்கே நிலை பெறட்டும். தேக்கு போல் பர்மிய மக்களின் போராட்டம் வலுப்பெறட்டும். இயற்கை எரிவாயுவாய் அவர்களது ஆவேசம் ராணுவ சர்வாதிகாரத்தைச் சுட்டெரிக்கட்டும்.

(‘மக்கள் களம்’ ஏட்டிற்காக எழுதப்பட்ட கட்டுரை. அதன் நவம்பர் இதழில் வெளியாகியுள்ளது)

Sunday 11 November 2007

மனித சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படை மூளையின் வளர்ச்சி என்றால் அந்த மூளையின் வளர்ச்சிக்கு ஆதாரம் கைகள். இது பரிணாம வரலாறு. இந்த வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்களோ? இளம் தொழிலாளர்களின் விரல்கள் வெட்டுப்பட்ட கைகளைக் காணும்போது இந்தச் சிந்தனைதான் ஏற்படுகிறது.

தமிழகத்தின் முக்கியத் தொழிற்பேட்டை நகரங்களில் ஒன்று ஹோசூர். அதன் சிறு/குறு தொழிற்சாலைகளில் எந்திர இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள் அவர்கள். உலோகப் பாளங்களையும் தகடுகளையும் பல்வேறு பயன்பாட்டுப் பொருள்களாக மாற்றிய அவர்களது கைகள், நொடிப்பொழுது விபத்தில் எந்திரங்களின் பசிக்கு விரல்களைத் தின்னக் கொடுத்துவிட்டு இப்போது இதழ்கள் பறிக்கப்பட்ட பூக்களாய்க் காட்சியளிக்கின்றன.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திரை இயக்க முயற்சியின் மற்றுமொரு படைப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டக் குழுவினரின் முனைப்பில் வந்திருக்கும் “விரல்கள்” குறும்படம், அந்தத் தொழிலாளர்களின் விரல்கள் வெட்டப்பட்ட கதையைத் தேடிச் சொல்கிறது. தனிப்பட்ட சில தொழிலாளர்களின் வேதனை, தொழிற்சாலைகளின் நிலைமை ஆகியவற்றோடு மட்டும் நிறுத்தியிருந்தால் இது சாதாரணமானதொரு தகவல் தொகுப்பாகியிருக்கும். ஆனால் இந்தப்படம், இத்தகைய நிலைமைகளின் அரசியல் - சமூக - பொருளாதாரப் பின்னணிகளையும் நம் முன் வைக்கிறது. அதனால், இது ஒரு முக்கியமான ஆவணப்பதிவாகியிருக்கிறது.

கிராமங்களில் வேலைவாய்ப்பின்றி, நகரத்தில் வேலைகள் கொட்டிக் கிடப்பதாக நினைத்துக் கொண்டு, நன்றாகச் சம்பாதிக்க லாம், வசதியாக வாழலாம் என்ற கனவுகளோடு வந்த இளைஞர்கள் இவர்கள். வந்த இடத்தில் வேலை கிடைக்கிறது - ஆபத்தான, அற்பச் சம்பளத்துக்கான வேலைகள். இரும்பென்றும் எலும்பென்றும் பார்க்காத அந்த எந்திரங்களின் வாய்களுக்குள், இத்தொழிலாளர்களின் கைகள் அந்த எந்திரங்களின் நீண்ட கரங்களுக்குப் போட்டியாகச் சென்றுவரும் வேகம், படமாகப் பார்க்கிற நமக்கே பதைப்பை ஏற்படுத்துகிறது. இன்றைய அவுட்சோர்சிங் யுகத்தில், உள்நாட்டு ஏகபோக நிறுவனங்களும் அந்நியப் பன்னாட்டு நிறுவனங்களும் இப்படிப்பட்ட வேலைகளை இப்படிப்பட்ட சிறு/குறு நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் தள்ளிவிடுகின்றன. உலகம் முழுவதும் விற்பனைச் சந்தையைப் பிடித்துவைத்துள்ள அந்த நிறுவனங்களின் நிர்வாகங்களுடன், இந்த உள்ளூர்த் தொழிலாளர்கள் எவ்விதத் தொடர்புமற்றவர்களாக இழப்பீடுகளோ, உதவிகளோ பெற முடியாது.

மேற்படி பெரிய நிறுவனங்கள் இந்த சிறு/குறு தொழிலகங்களிடமிருந்து, தாங்கள் நிர்ணயித்த தரம் வருகிறதா என்று மட்டும்தான் பார்க்கின் றனவேயன்றி, தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றி கண்டுகொள்வதில்லை என்பதை எடுத்துக் கூறுகிறது இக்குறும்படம். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகத்தானே, சொந்த ஆலைகளில் இப்பொருள்களைத் தயார் செய்யாமல் “அவுட் சோர்சிங்” விடுவதே! அந்தப் பெரிய நிறுவனங்களின் விற்றுவரவு-லாபம் குறித்துக் கூறும் கணினி வரைபடங்களின் அம்புக்குறிகள், இப்படிப் பட்ட குரல் மறுக்கப்பட்ட தொழிலாளர்களின் மார்புகளில் பாய்ந்த அம்புகளாகவே தெரிகின்றன.

சிஐடியு செயலாளர் ஜி. சேகர் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர் கள் சுரண்டல் நிலைமைகளை எடுத்துக்கூறுகிறார்கள். முற்போக்கு இலக்கிய மேடைகளில் தாமே பாடல்கள் இயற்றிப் பாடவல்லவராக அறிமுகமான வையம்பட்டி முத்துசாமி, தாம் வேலை செய்த ஏற்றுமதி நிறுவனம் மூடப்பட்டதால், தற்போது ஒரு டீ கடை நடத்துகிறார். அவரது குரலில் ஒலிக்கும் பாடல் சோகத்தை இறக்குமதி செய்கிறது.

எது நடந்தாலும் கேட்க முடியாதவர்களாக, சில தொழில் வளாகங்களில் பெண்கள் கொத்தடிமைகள் போல் வைக்கப்பட்டுள்ள கொடுமையை, ஏற்கெனவே எழுத்தில் பதிவு செய்த ‘தீக்கதிர்’ நிருபர் முருகேசன் இதில் தமது குரலில் வெளிப்படுத்துகிறார்.

சில உரையாடல்களின் நீளத்தைச் சுருக்கி, சில பேட்டிகள் திரும்பத்திரும்ப வருவதைத் தவிர்த்திருந்தால் படம் மேலும் கச்சிதமாக அமையும்.

ஹோசூர் படப்பிடிப்பு தனியொரு ஊரின் பிரச்சனை அல்ல. இப்படிப்பட்ட தொழிற்சாலைகளும், ஆபத்தான சூழல்களும் நிறைந்த எல்லாப் பகுதிகளுக்குமான பொதுச் செய்தி இப்படத்தில் இருக்கிறது. பொது இடங்களில் இவ்வாறு விரல்களற்ற கைகளோடு சிலர் நம்மருகில் அமர்ந்திருக்கக்கூடும். அவர்களின் தோற்றத்தைப் பார்த்து சிலருக்குப் பரிதாபம் ஏற்படும்; சிலருக்கு அருவருப்பும் கூட ஏற்படும். உண்மையாக ஏற்பட வேண்டியது வெஞ்சினம். மாற்றத்தை விளைவிக்கும் அந்த வெஞ்சினத்தை விதைக்கும் படைப்பை வழங்கியிருக்கிறார்கள் தயாரித்து இயக்கியுள்ள நி. கோபால், ஆ. சுபாஷ், இரா. தமிழ்ச்செல்வம் ஆகியோர். படத்தொகுப்பாளர் அ. மார்கன், சில சிறப்புக் காட்சிகளையும் இணைத்து படத்திற்கு ஒரு ஆழம் சேர்த்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் இந்த விரல்கள் விரிய வேண்டும். படத்தில் வானை நோக்கி விரியும் பட்டுப் போன ஒரு மரத்தின் கிளைகள் அதைத்தான் வேண்டுகின்றன.

Thursday 8 November 2007

“உன் பெயரே
உலகில் இல்லாமல்
ஒழித்துவிடுவேன்.”
-கொக்கரித்தான் கிருஷ்ணன்.
“அட போடா!
இனிமேல் ஒவ்வொரு ஆண்டும்
உலகம் என்னை நினைக்கும்.
நீ என்னை
ஏன் கொன்றாய்
என்பதையும் விவாதிக்கும்.”
-சிரித்தான் நரகாசுரன்.

Sunday 4 November 2007

கவிதை

முணகலல்ல முழக்கம்

வீணாகக் கூச்சல் போடுகிறீர்கள்
நாங்கள் நாங்களாக
எங்களின் தர்மப்படி
நடந்துகொள்கிறோம்
நீங்கள் நீங்களாக
உங்களின் தர்மப்படி
நடந்துகொள்ளத் தவறுவதால்.

உங்களின் தர்மம்
நாங்கள் அசுத்தமாகாதிருக்க
ஊர் கூட்டுவது;
நீங்களோ
நாங்கள் ஆதிக்கமாகாதிருக்க
ஊரையே கூட்டினீர்கள்.
அதர்மமில்லையா இது?

ஆதியற்ற எங்களின் வேதத்திற்கு
அந்தம் வைக்க நீங்கள் முயலும்போது
வேதாந்திகளை அனுப்புகிறோம்.
மறுபடியும் மறுபடியும் நாங்கள்
போதித்து வருகிறோம்;
மறுபடியும் மறுபடியும் நீங்கள்
போதனையை மீறி வருகிறீர்கள்.

அன்று உம் பாட்டனின்
கட்டை விரலைக் கேட்டு வாங்கினோம்
அப்புறம் உம் பூட்டனின்
கண்ணைப் பறித்துத் தர வைத்தோம்
இடையில் தில்லையில் உம் மாமனின்
உடலையே ஜோதியில் எரியச் செய்தோம்...

முணகல் என்ன அங்கே?
முணகல் அல்ல
முழக்கம் என்றா சொல்கிறீர்கள்?
மந்திரங்கள் மட்டுமே
கேட்கும் எம் செவிகளில்
முழக்கங்கள் நுழைவதில்லை.
நடப்பதெல்லாம் நன்றாகவே
நடப்பதாகச் சொன்ன
வரிகளை மட்டும் பார்த்துவிட்டு
பரவசத்தில் முழ்கிக் கிடந்தீர்கள்.
வரம்பு மீறுவோர்க்குத்
தண்டனை என்னவென்று
சொல்லிவைத்த பக்கங்களை
படிக்காமல் விட்டது உங்கள் தப்பு.
எங்கே அதையெல்லாம் படிக்கவிட்டீர்கள்
என்று மறுபடி முழங்குகிறீர்கள்.
படித்தால் உமக்குப் புரியாதென்றுதான்
செயல் முறை விளக்கமாக

கட்டை விரலை
கேட்டு வாங்கினோம்
கண்ணைப் பறித்து
அப்ப வைத்தோம்
உடலை ஜோதியில்
கலக்க விட்டோம்
இன்னும் நீங்கள்
பேசுவீர்கள் என்றால்
நாக்கும் தலையும்
கேட்க மாட்டோமா?

மறுபடியும் என்ன முணகல்...
சரி சரி மறுபடியும் என்ன முழக்கம்?

“ஏகலைவன் வாரிசுகள்
ஏகலைவனைப் போல் இருப்போம்
ஏகலைவனாகவே இருக்க மாட்டோம்
கண்ணப்பன் வாரிசுகள்
கண்ணப்பனைப் போல் இருப்போம்
கண்ணப்பனாகவே இருக்கமாட்டோம்
நந்தன் வாரிசுகள்
நந்தனைப் போல் இருப்போம்
நந்தனாகவே இருக்கமாட்டோம்...”

புரிகிறது... மெய்யான
பாரத யுத்தத்திற்கு
படை திரட்டத்
தயாராகிவிட்டீர்கள் நீங்கள்.
பகவத் கீதைக்கு
பதவுரை சொல்ல
பார்த்தசாரதியைத்
தேடுகிறோம் நாங்கள்.

-அ. குமரேசன்