வீட்டிற்கும் பணித்தலத்திற்கும் இடையேயான ரயில் பயணத்தில் நிகழ்ந்த உரையாடல் இது. பேச்சு ‘விஸ்வரூபம்’ திரைப்படம் பற்றியதாகத் தாவியது. படத்திற்குத் தடைவிதித்த அரசின் செயலை ஒரு பயணி விமர்சித்தார். படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்லாமிய அமைப்புகளை இன்னொருவர் குறைகூறினார்.
“எங்களையெல்லாம் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களைப் போலக் காட்டுறது சரியில்லைன்னு முஸ்லிம்ஸ் சொல்றாங்க... ஆனா அவங்க அப்படித்தானே இருக்காங்க,” என்றார் அந்த இன்னொருவர்.
“எப்படிச் சொல்றீங்க,” என்று கேட்டேன் நான்.
“அதான் எல்லா டிவியிலயும் காட்டுறாங்களே சார், எல்லாப் பேப்பர்லயும் போடுறாங்களே...” என்றார் அவர். அவர் கையில் வைத்திருந்த ஒரு பத்திரிகையில் ஏதோ ஒரு நாட்டின் ஏதோ ஒரு தீவிரவாத அமைப்பின் சார்பில் யாரோ ஒரு நபருக்குக் கொடுமையன தண்டனை தரப்பட்ட செய்தி படத்தோடு இடம் பெற்றிருந்தது.
அரசுப் பணிகளில், கல்வி வாய்ப்புகளில், தொழில் துறையில் முஸ்லிம் மக்களின் அடையாளம் சுருங்கிப் போயிருப்பது பற்றி சச்சார் குழு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களில் இந்த மக்களுக்கு தாராளமான அடையாளம் தரப்பட்டிருக்கிறது - பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற அடையாளம்! பயங்கரவாதி என்ற சொல்லைச் சொன்னால் உடனே, மீசையில்லாத, தாடி வைத்த, நீண்ட அங்கி அணிந்த, கையில் ஏ.கே.-47 துப்பாக்கியோடு இருக்கிற உருவம் பலருக்கும் நினைவு வருகிறது என்றால், அப்படியொரு உருவத்தை மனங்களில் உருவேற்றியதில் நிச்சயமாக ஊடகங்களுக்குப் பங்கிருக்கிறது. அதிலும் வர்த்தக அடிப்படையிலான பெரு நிறுவன ஊடகங்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.
அதே போல் முஸ்லிம்கள் எல்லோருமே கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகள், நவீனமாகாதவர்கள், மாற்றுக் கருத்துகளை சகித்துக்கொள்ளாதவர்கள், கலை-இலக்கிய வெளிப்பாடுகளை ஏற்காதவர்கள் என்பன போன்ற மதிப்பீடுகள் பொதுவெளியில் உருவாகியிருக்கியிருப்பதிலும் இந்தப் பெரு ஊடகங்களின் பங்கு பெரியதுதான்.
ஆகவேதான், விஸ்வரூபம் விவகாரத்தில் கூட நடிகர் - இயக்குநர் - தயாரிப்பாளர் கமல்ஹாசனின் இழப்பு, உணர்ச்சிகரமான பேட்டி ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், முஸ்லிம் அமைப்புகளுடைய விசனத்துக்கு அளிக்கப்படவில்லை. படத்திற்குத் தடை விதிக்கப்பட்டதை ஏற்காத, ஆனால் அந்தப் படம் எந்த வகையில் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்பதைச் சொல்லத் தயாராக இருந்த முஸ்லிம் சிந்தனையாளர்களது கருத்துகளை வாங்கி வெளியிடவும் ஊடகங்கள் முன்வரவில்லை.
இதற்கு நீண்டதொரு பின்னணி இருக்கிறது என்றாலும் உடனடியாக நினைவுக்கு வருவது 1992 டிசம்பர் 6 அன்று அரங்கேற்றப்பட்ட பாபர் மசூதி இடிப்பு அக்கிரமம். அதை ஒரு பிரபல தமிழ் ‘நடுநிலை’ நாளேடு “பாபர் மசூதி தகர்ப்பு - ராம பக்தர்கள் ஆவேசம்” என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டது. நியாயக் கோபத்திற்கான “ஆவேசம்” என்ற சொல்லாடலை பெரிய பத்திரிகைகள் அவ்வளவு எளிதாகப் பயன்படுத்துவதில்லை. இந்தச் செய்தியில் அந்தச் சொல்லைப் புகுத்தியதன் மூலம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது நியாயம்தான் என்ற கருத்தை மட்டுமல்ல, இத்தனை காலமாக முஸ்லிம்கள் அந்த இடத்தை அநியாயமாக ஆக்கிரமித்து வைத்திருந்தார்கள் என்ற எண்ணத்தையும் அந்த ஏடு நுட்பமாக ஊன்றியது.
கோவையில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கோட்டைமேடு பகுதியில் காவல்துறையினர் நடத்திய சோதனைகள் பற்றிய செய்தியை வெளியிட்ட ஒரு பிரபல புலனாய்வு வார ஏடு, “கோட்டைமேடு பகுதி முழுக்க சோதனைகள் நடத்தப்பட்டுவிட்டதாக போலிஸ் சொல்கிறது. ஆனால் ..... .... ..... ..... ..... ஆகிய வட்டங்களிலும் .... ..... ..... ..... .... ஆகிய தெருக்களிலும் போலீ;!காரர்கள் நுழையவே இல்லை,” என்று விவரித்து எழுதியது. அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாகக் காவல்துறையினால் தூக்கிச் செல்லப்பட்ட நடவடிக்கை அது. ஒரு ஊடகமாக அந்த நடவடிக்கையை விமர்சிக்காமல், எந்தெந்தத் தெருக்களுக்குள் காவலர்கள் நுழைய வேண்டும் என்று பட்டியல் போட்டுக்கொடுத்தது அந்த புலனாய்வு இதழ்.
பொதுவாகவே மதவெறி மோதல்களில் பெரிதும் பாதிக்கப்படுகிறவர்கள் முஸ்லிம் மக்கள்தான். மிகப்பரபரப்பு கிளப்பக்கூடிய சில நிகழ்வுகளை மட்டும் அந்த நேரத்து முக்கியச் செய்தியாக்கிவிட்டு, பின்னர் அந்தப் பரபரப்பு வடிய வடிய அதை அப்படியே விட்டுவிடுவார்கள். எங்கிருந்தோ வருகிற பயங்கரவாதிகளின் தாக்குதலில் பொதுமக்கள் பலியாவது, சிதறிக்கிடக்கும் உடல்கள். நொறுங்கிப்போன வாகனங்கள், உற்றவரை இழந்து தவிக்கும் முகங்கள் என்ற உண்மைகளையெல்லாம் பரவலாக வெளியிடுகிறவர்கள், இன்னொரு உண்மையாகிய, எளிய முஸ்லிம் மக்களின் பரிதவிப்பு பற்றி எதுவும் பதிவு செய்வதில்லை. பயங்கரவாதிகளுக்கு மதமில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்களைத் தேர்ந்தெடுத்துக் குறிவைத்துத் தாக்குவதில்லை. அதனால்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் பல இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த உண்மையை மட்டுமல்ல, முஸ்லிம் மக்களின் சமூகப் பொருளாதார நிலைமைகள் பற்றிய உண்மைகளையும் ஊடகங்கள் வெளிப்படுத்துவதில்லை. ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் எழுதிய ‘குற்றமும் தண்டனையும்’ குறுநாவல் நினைவுக்கு வருகிறது. அதில் காவல்துறையினரால், கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைக்காகக் கைதுசெய்யப்படும் ஒரு முஸ்லிம் இளைஞன் பற்றிய சித்தரிப்பு மறக்க முடியாதது. சிவந்த உடல், நல்ல உயரம், நீண்ட ஜிப்பா. இளம் தாடி என பார்ப்பதற்கு நல்ல வசதிக்காரன் போன்ற தோற்றத்துடன் இருக்கிற அந்த இளைஞன் உண்மையில் கடைத்தெரு நடைமேடையில் ஜட்டி, பனியன் விற்கிற சாலையோர வியாபாரி. “இந்தப் பணக்காரத் தோற்றம்தான் இவர்களுடைய பலவீனமே” என்று கூறுவார் எழுத்தாளர்.
இந்தியா முழுவதுமே முஸ்லிம் மக்களில் பெரும்பகுதியினர் வசதிகள் இல்லாதவர்களாக, சலுகைகளும் கிடைக்காதவர்களாக, ஒதுக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பல ஆய்வுகள் இதை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் அந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்ட ஊடகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பல ஊடகங்கள் ஏன் இதை வெளியிடவில்லை என்பதன் பின்னணியில், அதைச் செய்தியாக்குவதில் சுவாரசியமிருக்காது என்ற தொழில் சார்ந்த ஒதுக்கல் மட்டுமல்ல, பல ஊடக நிறுவனங்களின் தலைமைப் பீடங்களில் இருப்பவர்களது இந்துத்துவப் பார்வையும்தான். ஊடக நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர்கள் உள்ளிட்ட இந்துத்துவ ஆட்கள் புகுந்திருப்பது பற்றி முன்பொரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் இன்றைய ‘தி ஹிண்டு’ நாளேட்டின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன்.
அந்தப் பார்வையுடன்தான் செய்திகள் தரப்படுகின்றன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு: மஹாராஷ்டிரா மாநிலம் மாலேகாவுன் நகரில், சில முஸ்லிம் இளைஞர்கள் பின் லேடனை ஆதரித்து பேரணி நடத்தியதாகவும், அது வன்முறையாக மாறியதால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பல பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் செய்தி வந்தது. உண்மையில் என்ன நடந்தது என்றால், அந்த இளைஞர்கள் பின் லேடனுக்கு ஆதரவு தெரிவிக்கும் துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாகக் கூறிய, காவல்துறையினர் அதை விநியோகிக்கத் தடை விதித்தனர். உருது மொழியில் இருந்த அந்தத் துண்டுப் பிரசுரத்தில், “இந்தியராக இருப்போம், இந்தியப் பொருள்களையே வாங்குவோம்; ஆப்கன் மக்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்காவின் பொருள்களைப் புறக்கணிப்போம்” என்றுதான் இருந்தது. மஹாராஷ்டிரா மாநில காவல்துறையில் உருது தெரிந்தவர்கள் இல்லையா அல்லது வேண்டுமென்றே உண்மையை மறைத்துச் செய்தி தரப்பட்டதா? இதை விசாரிக்காமல் காவல்துறையின் செய்தியை அப்படியே வெளியிட்ட ஊடகங்களின் தொழில்நெறியை என்னவென்று சொல்வது?
ஊடகங்களின் இந்த நிலைமைக்கான காரணங்கள் இரண்டு: ஒன்று, அமெரிக்க ஏகாதிபத்தியம் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில், தனது ஊடக வல்லரசுகளின் துணையோடு உலகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிற முஸ்லிம்கள் பற்றிய கருத்தாக்கம்; அதையொட்டி உள்நாட்டில் ஆர்எஸ்எஸ் வகையறாக்கள் ஏற்படுத்த விரும்புகிற முஸ்லிம் எதிர்ப்பு வன்மம். இந்த வன்மத்தின் பிடியில் ஊடகங்களும் சிக்கியுள்ளன. இரண்டு, பெரு நிறுவனங்களாக உள்ள ஊடகங்களின் செய்திகளை இறுதிப்படுத்தும் மையமான இடங்களில் முஸ்லிம்கள் இல்லை, அல்லது மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். எம்.ஜே. அக்பர் போன்ற சிலர்தான் விதிவிலக்கு.
சிறப்பாக எழுதக்கூடிய முஸ்லிம்கள், தாங்கள் பணபுரியும் நிறுவனத்தின் நிலைபாட்டிற்கு ஏற்பவே செய்திகளையும் கட்டுரைகளையும் வடிவமைக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்று சித்தார்த் வரதராஜன் குறிப்பிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் ஒரு கட்டுரையில், “நான் பணியாற்றிய பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்த முஸ்லிம் நண்பர்கள் என்னை ஏதோ சிறப்புரிமை பெற்ற குடிமக்களில் ஒருவனாகப் பார்த்தார்கள்,” என்கிறார். அவர் குறிப்பிடுவது முஸ்லிம் சமயத்தைச் சேர்ந்த ஒருவரால் நடத்தப்பட்ட ‘அஞ்ஜாம்’ என்ற பத்திரிகை!
“1947 நாட்டுப்பிரிவினையின்போது இந்தியாவிலேயே தங்கிவிடுவது என்று முடிவு செய்த முஸ்லிம்கள், பின்னர் இங்கே இந்து மதவாதிகளால் சிறுமைப்படுத்தப்படுவதாக உணர்ந்தார்கள். அப்போது, பிரச்சனையை எபபடி அணுகுவது என்று வழிகாட்டக் கூடியவர்களாக முஸ்லிம் பத்திரிகையாளர்கள் இல்லை,” என்றும் நய்யார் குறிப்பிடுகிறார்.
யோசித்துப் பார்த்தால், முஸ்லிம் மக்கள் பற்றிய எதிர்மறைக் கண்ணோட்டம் பரவலாக இருப்பதில் முஸ்லிம்களால் நடத்தப்படுகிற ஊடகங்களுக்கும் ஓரளவு பங்கிருக்கிறது எனலாம். அந்தப் பத்திரிகைகளிலும், முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார நிலைமைகள் குறித்த முழுமையான விவரங்கள் கண்ணில் படுவதில்லை. மாறாக எங்காவது நடந்திருக்கக்கூடிய சில பழமைவாதச் செயல்களை நியாயப்படுத்துகிற வாதங்களைத்தான் அவை முன்வைக்கின்றன.
எடுத்துக்காட்டாக ஒரு சவுதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ரிசானா மதவாத நீதிமன்றத் தீர்ப்பின்படி பொது இடத்தில் கொல்லப்பட்டதை தமிழக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் விமர்சித்தார். உடனே அவர் மீது ஒரு அமைப்பு பாய்ந்தது, மிரட்டல் விடுத்தது. இதை எந்த முஸ்லிம் ஊடகமும் கண்டிக்க முன்வரவில்லையே?
காஷ்மீரில் முதல் முறையாகப் பெண்களே கொண்ட ஒரு இசைக்குழு அமைக்கப்பட்டது. உடனே, அது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கூறி,அந்த மூன்று இளம் பெண்களுக்கும் ‘ஃபட்வா’ அறிவிக்கப்பட்டது. பெண்களுக்கான இஸ்லாமிய அமைப்பு ஒன்று அந்த மூன்று பெண்களும் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவார்கள் என்று அச்சுறுத்தி அறிக்கை விடுத்தது. மாநில முதலமைச்சரே இசைக்குழுவை ஆதரித்து, முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்தபோதிலும் கூட, அந்தப் பெண்கள் குழுவைக் கலைத்துவிட்டார்கள். அந்தப் பெண் குழந்தைகளின் பக்கம் எத்தனை முஸ்லிம் பத்திரிகைகள் நின்றன?
இது பற்றி பிப்ரவரி 8 அன்று சென்னையில் சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் ஏற்படு செய்திருந்த ‘விஸ்வரூபம் திரைப்படத்தை முன்வைத்து, ஊடகங்களில் முஸ்லிம்கள் பற்றிய சித்தரிப்பு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்ற நான் கேள்வி எழுப்பினேன். அதில் உரையாற்றிய கவிக்கோ அப்துல் ரகுமான், “இஸ்லாத்தில் அப்படிப்பட்ட தடை எதுவும் கிடையாது, யாரோ சிலர் தவறான புரிதல்களுடன் செய்கிற செயலுக்கு இஸ்லாம் சமயம் பொறுப்பேற்ற இயலாது,” என்றார். இது நல்ல விளக்கம்தான் என்றாலும், ஜனநாய உரிமைகளுக்காக வாதாடும் முஸ்லிம் பத்திரிகைகள் அந்தப் பெண்களுக்காக வெளிப்படையாக உரத்த குரல் எழுப்பியிருக்க வேண்டாமா?
இப்படிப்பட்ட மவுனங்கள் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலுக்கு சாமர்த்தியமாகப் பயன்படுத்தப்படுவதும் மனதில் கொள்ளப்பட வேண்டும். இன்றைய பொருளாதார உலகமய - தனியார்மயஆதிக்கச் சூழலில் கேள்வி கேட்காத, தட்டிக்கேட்காத தலைமுறைகள் தேவை. அப்படிப்பட்ட தலைமுறைகளை வார்க்கும் பணியை இன்றைய சுரண்டல் அமைப்பின் அங்கங்களாகிய பெரு ஊடகங்களும் செய்கின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான், சுரண்டல் உலகத்தின் தலைமைத் தலமாகிய ஏகாதிபத்தியம் உருவாக்க முயல்கிற பயங்கரவாதம் என்றால் மீசையற்ற தாடி முகங்கள் என்ற தோற்றத்திற்கு உள்ளூர் வண்ணப்பூச்சு செய்யும் கைங்கர்யத்தை உள்நாட்டுப் பெரு ஊடகங்கள் பத்திசிரத்தையோடு நிறைவேற்றுகின்றன.
இதை மாற்ற முடியுமா? முடியும். உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு, உள் நாட்டு ஏகபோக எதிர்ப்பு, ஒற்றை மதவெறி எதிர்ப்பு, ஆதிக்க சாதிய அரசியல் எதிர்ப்பு, ஆணாதிக்க அகம்பாவ எதிர்ப்பு போன்ற பொதுப் போராட்டங்களில் சிறுபான்மை மக்களையும் அணிதிரட்டிப் பங்கேற்கச் செய்கிற பொறுப்பை இஸ்லாமிய அமைப்புகளும் சேர்ந்து நிறைவேற்றினால் முடியும். பெரு ஊடகங்களின் பாகுபாட்டுப் போக்குகளை பொதுவெளியில் விவாதிக்கவும் விமர்சிக்கவும் தொடங்கிவிட்டோம் என்ற செய்தி அநத நிறுவனங்களின் செவிகளைச் சென்றடையச் செய்தால் முடியும்.
('தீக்கதிர்’
17-2-2013 ஞாயிறு இதழ் ‘வண்ணக்கதிர்’
இணைப்பில் வந்துள்ள எனது கட்டுரை)