“வளர்ந்துக்கிட்டு இருக்கிற ஸ்டேஜ் இது. இப்பவே இந்த மாதிரிப் பேசுறான்னா இண்டஸ்ட்ரீல ஒழிச்சுக் கட்டிடுவாங்க.”
“மூணு படம்தான் வந்திருக்கு. மூணும் நல்லாப் போச்சுன்னாலும்
டைரக்டர்களோட ட்ரீட்மென்ட்தான் காரணம். இவன்
என்னமோ தன்னோட முகத்துக்காகத்தான் ஓடிச்சுங்கிற மாதிரிப் பேசுறான்.”
“இவம் முகத்துக்காகத்தான் ஓடிச்சுன்னே இருக்கட்டுமே…
ஆனா ஒரு பணிவு, தன்னடக்கம் வேணும்ல? அதுலேயும் முக்கியமா சீனியர் ஆர்ட்டிஸ்ட், லீடிங்
ஸ்டார் பத்திப் பேசுறப்ப ஒரு மரியாதை இருக்கணும்ல? அவங்கெல்லாம் ஆரம்பத்துல எப்படி
இருந்தாங்க, எப்படி வளர்ந்தாங்கன்னு தெரிஞ்சிக்கிடணும்.”
“இந்தக் கால தலைமுறை வெளியேதான் இப்படி இருக்காங்கன்னு
பார்த்தா உள்ள வந்ததுக்கப்புறமாவது மாற வேண்டாமா?”
வளசரவாக்கம், ஜானகி நகரில் சினிமா, டிவி சீரியல், வெப்
சீரிஸ் படப்பிடிப்புகளுக்கு மட்டுமே வாடகைக்கு விடப்படுகிற பெரிய வீடு அது. குடியிருக்க
விட்டிருந்தால் எவ்வளவு வசதியானவர்களானாலும்
கால்வாசித் தொகை கூட வாடகையாக வராது. தயாரிப்பாளருக்கோ, ஸ்டூடியோ செட்டுகளுக்குக்
கொடுப்பதில் கால்வாசியை இந்த வீடுகளுக்குக் கொடுத்தால் போதும். மற்ற நாட்களில் மூடியே இருக்கும், செக்யூரிட்டி மட்டும்
தனியாக வந்து போவார்.
அன்றைக்கு ஷூட்டிங் வேலைகள் நடந்துகொண்டிருந்த அந்தப் பெரிய வீட்டுக்கு
உள்ளே ஹாலில் சூரியனையும் மிஞ்சும் ஒளி பாய்ந்திருந்தது. தரையில் நீண்டு நெளிந்து கிடந்த
கேபிள்கள். கேமரா ட்ராலியும் விளக்குகளும் அடுத்த ஷாட்டுக்குத் தயாராக நின்றுகொண்டிருந்தன.
வெளியே தெருவின் அகலமான பகுதியின் ஓரத்தில் ஜெனரேட்டர் வேன் இரைந்துகொண்டிருந்தது.
அதன் பின்னால் பிராப்பர்ட்டீஸ் வேன் அமைதியாகத் திறந்திருந்தது.
அதை இடைஞ்சலாகப் பார்க்காமலிருக்க மற்ற வீடுகளில் வசிக்கிறவர்களும்
(எல்லாமே இரைச்சல்கள் ஊடுறுவ முடியாத வீடுகள்), தெருவில் நடமாடுகிறவர்களும் பழகிவிட்டிருக்கிறார்கள்.
என்ன படம், நடிகர் நடிகை யார் என்று ஆர்வத்துடன் நின்று பார்க்கிறவர்கள் கூட மிகக்குறைவுதான்.
துணைக் கலைஞர்கள் தயாராகிக்கொண்டிருந்தார்கள். உதவி
இயக்குநர்கள் அவர்களுக்கு எங்கே நிற்க வேண்டும், எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்று
விளக்கி, பேச வேண்டிய வசனத்தையும் காட்ட வேண்டிய உணர்ச்சியையும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
காம்பவுண்ட் சுவருக்கும் ஜன்னலுக்கும் இடைப்பட்ட இடத்தில் ஓங்கியிருந்த மரத்தின் நிழலில்
ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் கால்களை நீட்டி, முதுகைச் சரித்து உட்கார்ந்திருந்தான்
யுகமாறன். அவனுக்குக் காட்சி விளக்கம் கூறிக்கொண்டிருந்தாள் இணை இயக்குநர் மலர்விழி.
அவள் இப்போது சொல்வதைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். ஆனாலும், அவள் ஏற்கெனவே சொல்லியிருந்த,
அவனைப் பற்றிய சிலரது பேச்சுகள் எதிரொலித்தன.
“சாதாரணமா, இயல்பாத்தான் நான் பேசினேன். அதை வைச்சு
இப்படி பாலிடிக்ஸ் பண்ணுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை மலர்.”
அவனுடைய குரலில் தொணித்தது ஆதங்கமா, அச்சமா, இனிமேல்
கவனமாகப் பேச வேண்டுமென்ற எச்சரிக்கையா என்று மலர்விழிக்கு உடனடியாகப் புரியவில்லை.
ஊடகக் கலை பட்டதாரியான அவளுக்குத் திரைப்படங்கள் தொடர்பாக இருந்த புரிதலும், மாறுபட்ட
படங்களைப் பார்த்து உள்வாங்கிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளும் ஆர்வமும் யுக மாறனுக்குப்
பிடிக்கும். தன்னைத் தனித்து வைத்துக்கொள்ளாமல் உதவி இயக்குநர்கள், துணை ஒளிப்பதிவாளர்கள்,
லைட் பாய் உள்ளிட்ட தொழிலாளர்களுடன் இயல்பாகப் பழகுவது அவளுக்கும் பிடிக்கும்.
“அதையே நினைச்சுக்கிட்டிருக்காதீங்க சார். இப்படி முதுகுக்குப்
பின்னால பேசுறவங்க எல்லாக் காலத்திலேயும் இருப்பாங்க. எல்லா ஃபீல்டுலேயும் இருப்பாங்க.
நான் சினிமாவுக்கு வந்ததைப் பத்திக்கூட பேசியிருக்காங்க. ரிலேட்டிவ்ஸ் பேசியிருக்காங்க,
ஃபீல்டுல இருக்கிறவங்களும் பேசியிருக்காங்க. சுண்டிவிட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்க
வேண்டியதுதான். கொஞ்சம் கவனமாவும் இருங்க… மனசுல படுறதையெல்லாம் அப்படியே பேசணுங்கிறதில்லை.”
‘பல வருசம் அனுபவம் இருக்கிறவ மாதிரி பேசுறாளே’ என்று
ரசித்து மதிப்போடு எடுத்துக்கொண்டு மௌனமாகத்
தலையசைத்தான்.
‘இவரே நாளைக்குப் பெரிய ஸ்டாராயிட்டா இப்படியெல்லாம்
பேச முடியுமா’ என்று நினைத்துக்கொண்டு ஸ்கிரிப்டின் அடுத்த பக்கத்தைப் புரட்டினாள்.
••••••••••••••••
யுகமாறன் பேசியது பற்றிய பேச்சுகளுக்கு
சென்ற ஞாயிற்றுக் கிழமையின் ‘நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்’ நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிதான்
தொடக்கம். முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்துள்ள இயக்குநர் தினேஷ் நடராஜ், முதல் படத்திலேயே
பெரிய ஸ்டாருடன் இணை சேர்ந்து நடித்த இனியா இருவருக்கும் நடுவில் உட்கார வைக்கப்பட்டிருந்தான்.
மாறி மாறிப் பகிர்ந்துகொண்ட முன்கதைகளுக்குப்
பிறகு, தொகுப்பாளர் மாதேஷ் அதைக் கேட்காமல் இருந்திருக்கலாமோ என்று இப்போது
நினைக்கிற கேள்வியை அப்போது கேட்டுவிட்டான்.
“ஆக்‘ஷன் ஹீரோ, ரொமான்டிக் ஹீரோ, டிஃபரென்ட் கேரக்டர்ஸ்
என்று எப்பவும் எல்லாருக்கும் முன்னோடியா இருக்கிற நம்ம ஸ்டார் ஆஃப் ஸ்டார்ஸ் சாருண்
பாபு சார் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க யுவமாறன் சார்?”
“அதான் நீங்களே சொல்லிட்டீங்களே மாதேஷ். அவர் நம்ம
சினிமாவுக்குக் கிடைச்ச அருமையான வெர்ஸடைல் ஆர்ட்டிஸ்ட்.”
“சூப்பர். அவர் உங்களுக்கு எப்படி இன்ஸ்பிரேஷன்? வேற
யாரெல்லாம் உங்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்காங்க?”
“கேரக்டர்களை புரிஞ்சிக்கிட்டு நடிக்கிற எல்லாரையுமே
ஒரு ஆக்டரா எனக்குப் பிடிக்கும். ஹீரோவா, ஹீரோயினா இல்லாம மத்த கேரக்டர்கள்ல வர்றவுங்கள்லேயும்
அட்டகாசமா பண்றவங்க இருக்காங்க, அவங்களையும் எனக்குப் பிடிக்கும். மத்தபடி இன்னார்தான்
இன்ஸ்பிரேஷன்னு யாரையும் சொல்ல மாட்டேன்.”
“உங்க ரெண்டாவது படத்துல ஸ்டார் ஆஃப் ஸ்டார்ஸ் சாருண்
பாபு சாரோடு முரண்பட்டு, அப்புறம் திருந்துற தம்பியா நடிச்சீங்க. அதைப் பத்திச் சொல்லுங்க.”
“அவர் படத்துல அப்படியொரு கேரக்டர்ல வந்தது எல்லாரையும்
கவனிக்க வச்சுதுங்கிறது உண்மைதான்.”
“அது ஒரு எக்ஸைட்டிங் எக்ஸ்பீரியன்ஸா இருந்திருக்கும்.
அவர் மாதிரிச் செய்யணும்னு ஆசைப்பட்டிருப்பீங்கதானே?”
“இல்ல. அப்படியெல்லாம் ஆசைப்படல.”
“அப்படியா? அவர் மாதிரி பெர்ஃபார்ம் பண்ணனும்னு எல்லாருமே
விரும்புவாங்க…”
“மத்தவங்களப் பத்தி எனக்குத் தெரியாது. நான் ஏன் இன்னொருத்தர்
மாதிரி செய்யணும்? அவரை விடச் சிறப்பா செய்யக்கூடாதா? அவரை விட சாதாரணமாக்கூட செய்யலாம்.
எதுக்காக அவரைப் போலவே செய்யணும்.”
அன்று சாருண் பாபு பிறந்தநாள். அதையொட்டி திரும்பத்
திரும்ப இப்படிக் கேட்டுக்கொண்டிருந்த மாதேஷ் நிகழ்ச்சியின் மற்ற இரண்டு விருந்தினர்களின்
பக்கம் இதே போன்ற கேள்விகளோடு திரும்பினான். அப்போது அவனுக்கும் கூட இது பெரிய சர்ச்சையைக்
கிளப்பும் என்றோ, ஆளுக்காள் யுக மாறனைச் சாடுவார்கள் என்றோ தோன்றவில்லை. நிர்வாகத்தினர்
என்னவோ அவனைத் தட்டிக்கொடுத்தார்கள்.
ஒரு முக்கிய விவகாரமாக உடனே இதைத் தனது இணையப் பதிப்பில்
வெளியிட்டது ஒரு பத்திரிகை. “சாருண் போல நடிக்க விரும்பவில்லை – தம்பியாக நடித்தவரின்
பரபரப்பு பேட்டி,” என்ற தலைப்பு எதிர்பார்த்த
விளைவை ஏற்படுத்தியது. “நாட்டில் எவ்வளவோ
பிரச்சினை இருக்க இதைப் போய் பெரிதுபடுத்துகிறார்களே,” என்ற எதிர்வினைகளும் பதிவு செய்யப்பட்டன
என்றாலும், அடுத்தடுத்துப் பல ஊடகங்கள் அந்தப் பேட்டியின் யூ டியூப் இணைப்போடு, தங்களுடைய
தலைப்புத் திறனையும் வெளிப்படுத்தின. ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா பதிவுகளில் மாறனைக்
கிழித்துக் காணிக்கையாக்கிக் குவித்தனர் சாருண்
பாபு ரசிகர் – கம் – நற்பணி மன்றத்தினர். அவருடைய போட்டி நட்சத்திரப் பேராண்மையின்
ரசிகர் – கம் – மக்கள் பணி மன்றத்தினர் தங்களுடைய மொபைல்களில் யுக மாறன் சொன்னதில்
என்ன தப்பு என்று தட்டிவிட்டனர்.
சினிமா வட்டாரத்தைச் சேர்ந்தவர்களே பேசியபோதுதான் அவன்
கவலைப்படத் தொடங்கினான். ஒரு திறமைசாலி வளர்ந்துவிட்டால் தங்களுடைய பாதை தடைப்பட்டுவிடும்
என்று ஆதாரமே இல்லாமல் எப்போதுமே பயந்துகொண்டிருப்பவர்கள் பேசியதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அவனுடைய நலனில் அக்கறை உள்ளவர்களும் நிதானமாகப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டாமா என்று
கேட்டார்கள். நிதானமாகப் பேசுவதன் பொருள், ஆமாம் சாருண் தனக்குப் பெரியதொரு ஈர்ப்பு
என்று பாசாங்காகவாவது ஒப்புக்கொள்வது என்று அவனுக்குப் புரியவே செய்தது.
மலர்விழியின் இதமான சொற்கள் தந்த ஊக்கத்துடன், அவனுக்கே
உரிய உற்சாகத்துடன் கேமரா முன்னால் போய் நின்றான். இயக்குநர் “பெர்ஃபெக்ட்” என்று கட்டை
விரல் காட்டியதைப் பெற்றுக்கொண்டான். பேக் அப் அறிவித்ததும் புறப்பட்டவனிடம், “சார்,
உங்களுக்கு சாருண் பாபு ஆஃபீஸ்லேயிருந்து கால் வந்தது. கான்டாக்ட் பண்ணுவீங்களாம்,”
என்று தகவல் தெரிவித்தாள். அவள் முகத்திலும் குரலிலும் சற்றே கவலையின் சாயல் படர்ந்திருந்தது.
••••••••••••••••••
மீடியாக்களுக்கு அவர்களே தகவல் சொல்லியிருப்பார்களா
அல்லது இத்தகைய நகர்வுகளை மோப்பம் பிடிப்பதில் பயிற்சி பெற்றவர்களால் பரவியதா? சாருண்
பாபு பங்களாவுக்கு யுக மாறன் போனபோது, கோட்டை நுழைவாயில் போன்ற இரும்புக் கதவுக்கு
முன்னால் கேமராக்களும் மைக்குகளும் பேனாக்களும் தயாராகக் காத்திருந்தன. முன்கதைச் சுருக்கத்துக்காக
முண்டியடித்தவர்களைத் தவிர்த்துத் தாண்டி, செக்யூரிட்டிகள் கதவைத் திறந்துவிட உள்ளே
சென்றான்.
மூத்த அனுபவசாலிகள் பொறுமையாகக் காத்திருக்க, அவன்
பின்னாலேயே சென்று தாங்களும் நுழைய முயன்ற இளைய ஊடகத்தினரைக் காவலர்கள், அவர்களுக்கு
இடப்பட்டிருக்கும் ஆணையின்படி, முரட்டுத்தனத்தைக் காட்டிவிடாமல் பக்குவமாக வெளியேற்றிக்
கதவை மூடினார்கள்.
“ஸ்டார் ஆஃப் ஸ்டார்ஸ் அழைத்ததால் வந்த யுக மாறன் இப்போது
பங்களாவுக்குள் போயிருக்கிறார். என்ன நடந்ததென்று அறிய தொடர்ந்து கவனிப்போம் நேயர்களே.
ஸ்டே டியூன்ட்,” என்று சிலர் அப்போதே நேரடி ஒளிபரப்பைத் தொடங்கிவிட்டார்கள். பங்களாவின்
வளாகச் சுவரையும் மரங்களையும் தெருவையும் மற்ற ஊடகங்களின் கேமராக்களையும் காட்டிக்கொண்டிருந்தார்கள்.
•••••••••••••••••••
பெரிய தடபுடல்களோ கெடுபிடிகளோ இல்லை.
ஒரு செயலாளர் அவனை ஹாலுக்கு அழைத்துச் சென்றார். சாருண் வரும் வரையில் சிறிது நேரம்
காத்திருக்க வேண்டியிருக்கும் என்று நினைத்ததற்கு மாறாக அவர் மையமான சோஃபாவில் உட்கார்ந்திருந்தார்.
அவர் சொல்லாமலே செயலாளர் பக்கவாட்டில் இருந்த மற்றொரு சோஃபாவில் உட்கார வைத்தார்.
“கோயில் மண்டபத்திலே ஃபைனல் டே ஷூட்டிங் வச்சிருந்தாங்களே, அதுக்கப்புறம் இப்பதான்
மீட் பண்றோம் இல்லையா?” அவரே பேச்சைத் தொடங்கினார்.
“யெஸ் சார்.” குரலில் கொஞ்சம் படபடப்பு, நிறைய எதிர்பார்ப்பு.
“நல்லா சாய்ஞ்சு உட்கார்ந்துக்குங்க மாறன்.” அவர் இப்படிச்
சொன்னபோதுதான் சோஃபா விளிம்பில் உட்கார்ந்திருப்பதை அவன் உணர்ந்தான். வழக்கமான நாளாக,
இயல்பான சந்திப்பாக இருந்திருந்தால் அவனே வசதியாகச் சாய்ந்துதான் உட்கார்ந்திருப்பான்.
காஃபி வந்தது. அவருடைய மனைவியின் நேரடிப் பார்வையில்
தயாரித்து வழங்கப்படும் காஃபியின் மணம், சுவை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். அவரைச்
சந்தித்துவிட்டுத் திரும்பிய பிரமுகர்கள் அது பற்றி வியந்து கூறிய துணுக்குச் செய்திகளைப்
படித்திருக்கிறான். அதெல்லாம் உண்மைதான் என்று நாக்கின் சுவை மொட்டுகள் உறுதிப்படுத்தின.
கொஞ்சமாக இருந்த படபடப்பு தணிந்தது.
“எல்லா மீடியாவுலேயும் உங்க ரியால்டி ஷோ இன்டர்வியூதான்
வைரலா போய்க்கிட்டிருக்கு போல.”
“சார், அது வந்து… நான் கேஸ்யுவலா அப்ப மனசுல தோணினதைத்தான்
சொன்னேன். இன்டென்ஷன் எதுவும் கிடையாது.”
“ஐ அண்டர்ஸ்டேண்ட். நீங்க அப்படிச் சொன்னதில எனக்கு
எந்த வருத்தமும் இல்லை. என்னை நீங்க இன்சல்ட் பண்ணிட்டதா நான் நினைக்கவும் இல்லை.”
“தேங்க் யூ, தேங்க் யூ வெரி மச் சார்.”
“ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு இந்தத் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும்
ரொம்ப அவசியம்னுதான் நான் நினைக்கிறேன். மத்தவங்க
என்ன சொல்றாங்க, எப்படி கிரிட்டிசைஸ் பண்றாங்கன்னு யோசிக்காதீங்க. உங்க வயசுல
நானும் அப்படித்தான் இருந்தேன். தைரியமா பேசினேன். இந்த இடத்துக்கு வர்றதுக்கு அது
ஒண்ணும் தடையா இல்லை.”
“தேங்க் யூ, தேங்க் யூ வெரி மச் சார்.”
“பல மாதிரி கிரிட்சிசம் வந்துக்கிட்டு இருக்கு. அதுக்கும்
எனக்கும் சம்பந்தம் கிடையாது. இதை கிளியர் பண்றதுக்குத்தான் உங்களை வரச்சொன்னேன்.”
செயலாளர் ஒரு கறுப்பு பிளாஸ்டிக் உறையிலிருந்து எடுத்த
கையடக்கமான பெட்டியை சாருணிடம் கொடுத்தார். அதிலிருந்து ஒரு பொருளை எடுத்த சாருண் அதை மாறனின் வலது கை மணிக்கட்டில்
மாட்டிவிட்டார். அது ஒரு ஒல்லியான தங்கச் சங்கிலி.
“ஓகே, இன்னிக்கு ஷெட்யூலுக்கு நான் ரெடியாகுறேன்,”
என்று கூறிவிட்டு, அவனுடைய தோளில் தட்டியவாறு எழுந்தார் சாருண்.
•••••••••••••••••
திகைப்பு கலந்த அதிர்ச்சி முகத்தோடு
வெளியே வந்தவனை கேமராக்களும் மைக்குகளும் பேனாக்களும் சூழ்ந்துகொண்டன. “ஸ்டார் ஆஃப்
ஸ்டார்ஸ் சாருண் பாபுவை பார்த்தீங்களா? என்ன நடந்துச்சு? சார் என்ன சொன்னார்?”
மணிக்கட்டுச் சங்கிலியை உயர்த்திக் காட்டினான். அப்படியே
ஒன்றுவிடாமல் சொன்னான்.
“நம்பர் ஒன் நட்சத்திரத்தின் பெருந்தன்மை. வளரும் கலைஞரை
ஊக்குவித்த பேரன்பு. பேட்டிக்குப் பரிசாகக் கொடுத்த பிரேஸ்லெட். யுக மாறன் நெகிழ்ச்சி…”
அங்கேயிருந்தே வீடியோ பதிவுகளும், மாறனின் பேட்டியும் செய்திகளாக இணையத்தில் ஏறின.
“இதுதான் சாருண் பாபு. தங்கக் கையால் குட்டு அல்ல,
தங்கச் சங்கிலியே வாங்கியிருக்கிறார் யுக மாறன்….” பல பத்திரிகைகளின் டிஜிட்டல் பதிப்புகளிலும்,
யூ டியூப், இன்ஸ்டா, எக்ஸ், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், டெலிகிராம் தொடர்பிகளிலும் எதிர்வினைகள்
இன்றும் தொடர்கின்றன.
•••••••••••••••••••
“நல்லா சொல்லியிருக்கீங்க சார்,” என்றாள் மலர்விழி.
“அப்படித்தான சொல்லச் சொன்னாங்க,” என்றான் யுக மாறன்.
காயம் எதுவும் வெளியே தெரியாமல் விழுந்த அடிகளும்,
குத்திக் கிழித்துக் காயப்படுத்திய வார்த்தைகளும் அவள் எடுத்துக்கூறிய அடுத்த வசனத்தைக்
கேட்டு மனதில் வாங்கிக்கொள்வதற்கு இடையூறு செய்துகொண்டுதான் இருந்தன.
[0][0][0]
இலங்கையிலிருந்து சிறுகதைகளுக்கென்றே மாதந்தோறும் வெளியாவது ‘சிறுகதை மஞ்சரி’. அதன் 56ஆவது (ஏப்ரல் 2025) இதழில் வந்துள்ள எனது கதை இது.