மீதிக் கிணறை தாண்டவிடாமல்
தடுப்பதற்கு ஒரு (பக்க)வாதம்
பாதிக்கிணறுதான் தாண்டியிருக்கிறது மகளிர் இட ஒதுக்கீடு சட்ட முன்வரைவு. மீதிக் கிணறைத் தாண்டவிடக்கூடாது என்று சிலர் வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்.
உலக மகளிர் தினத்தன்றே மாநிலங்களவையில் நிறைவேறியிருக்க வேண்டியது ஒரு நாள் தாமதமானது. இதற்கு எதிர்ப்பாளர்களின் குறுக்கீடு மட்டுமல்லாமல், அவை நடைமுறைகளைக் கையாள்வதில் ஆளுங்கட்சியினர் பக்குவ முதிர்ச்சியுடன் நடந்துகொள்ளாததும் ஒரு காரணம் என்று, இந்தச் சட்ட முன்வரைவை ஆதரிக்கிற எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. எதிர்ப்பு சக்திகளுக்கு வாய்ப்பளிக்காமல் அரசு சூட்டோடு சூடாக இதனை மக்களவையில் நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், “இது நிறைவேறாமல் போனால் நல்லது.... மகளிருக்கு மட்டுமல்லல, நாட்டுக்கும்,” என்று தலையங்கம் தீட்டியிருக்கிறது ‘தினமணி’ நாளேடு. தினமணி குடும்பத்தின் ‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை, மகளிர் தின சிறப்புத் தொகுப்பாக பெண் தாதாக்களைப் பற்றி எழுதி, அந்த நாளின் முக்கியத்துவத்தை சிறுமைப்படுத்தியது. தினமணியோ நேரடியாக மகளிர் இட ஒதுக்கீட்டையே எதிர்த்திருக்கிறது.
“கண்துடைப்பு மசோதா” என்று தலைப்பிலேயே இதனைச் சாடுகிறது அந்தத் தலையங்கம், இதை அரைவேக்காட்டுத்தனமானது என்றும் வார்த்தைகளை வீசியிருக்கிறது. “அடிப்படையிலேயே அரைவேக்காட்டுத்தனமானதும் உண்மையில் மகளிர் நலத்திலோ, மக்களாட்சி தத்துவத்துக்கு மகத்துவம் சேர்க்கும் விதத்திலோ அமையாததுமான இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்பது சாதகங்களை விட பாதகங்களை அதிகமாக உள்ளடக்கிய ஒன்று என்பதுதான் உண்மை,” என்று தாக்கியிருக்கிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று முற்போக்கு சக்திகள் பாராட்டுகிற இந்த மசோதா குறித்து தினமணி முன்வைக்கும் வாதங்களின் சாராம்சம் இவைதாம்: நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் சுழற்சி முறையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால், அனுபவமிக்கவர்களாக, ஏற்கெனவே பல முறை குறிப்பிட்ட தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கிற ஆண்கள், அந்தத் தொகுதி பெண்களுக்காக என ஒதுக்கப்பட்டால் மறுபடியும் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும் என்பது ஒரு வாதம்; அந்தத் தொகுதி மக்களாலும் தாங்கள் இதுவரை தேர்ந்தெடுத்து அனுப்பி வந்தவர்களை மீண்டும் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும் என்பது ஒரு வாதம்.
அரசியல்வாதிகளின் பினாமிகள் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்படும் அபாயம் இருக்கிறது என்பதும் ஒரு வாதம்.
சமுதாயத்தில் சரிபாதியாக இருக்கிற பெண்களின் அதிகாரமற்ற நிலை, குடும்பம் முதல் அரசியல் வரையில் எல்லா மட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் ஆணாதிக்கம், பண்பாட்டுப் பெருமையின் பெயரால் தொடரும் பெண்ணடிமைத்தனம்... இவை பற்றியெல்லாம் தினமணியிலேயே நிறைய கட்டுரைகளும் செய்திகளும் வந்துள்ளன. இட ஒதுக்கீட்டால் இந்த நிலைமை உடனடியாக அடியோடு மாறிவிடும் என்று யாரும் கற்பனையில் மூழ்கவில்லை. ஆனால், இந்த நிலைமையை மாற்றுவதற்கான ஒரு பெரிய அடியெடுத்துவைக்கிற நடவடிக்கைதான் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களின் குரல் வலுவாக ஒலிக்கச் செய்வதற்கான இந்த ஏற்பாடு.
புதிதாக ஒன்று வருகிறபோது பழைய ஏற்பாடுகளில் சிறு பாதிப்புகள் ஏற்படவே செய்யும். அப்படிப்பட்ட ஒரு பாதிப்புதான், ஏற்கெனவே பல முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆண் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட முடியாமல் போகும் என்பது. ஆனால் கட்சியின் சார்பில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கிற நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில், புதிய புதிய திறமையாளர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட திறமையாளர்கள் பெண்களாகவும் இருப்பார்கள் என்பது நாட்டின் ஜனநாயகத்தையும், சமூக சமநிலையையும் வலுப்படுத்துதற்கான பயணமாகவே இருக்கும். ஆகவேதான், அந்தத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் இந்த மசோதாவை ஆதரித்திருக்கிறார்கள்.
பினாமிகள் வந்துவிடுவார்கள் என்பதெல்லாம் வெறும் பூச்சாண்டி வார்த்தைகள். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்ட நேரத்திலும் இதே போன்றுதான் கூறப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களில் மக்களின் பிரதிநிதிகளாகவும் ஊராட்சிகளின் தலைவர்களாகவும் வந்த பெண்கள் தங்கள் தலைமைத் தகுதியையும், தங்களது சொந்த அறிவாற்றலின் அடிப்படையில் முடிவெடுக்கும் வல்லமையையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி, அந்தப் பூச்சாண்டியை விரட்டியடித்திருக்கிறார்கள். உள்ளாட்சிகளின் பெண் உறுப்பினர்கள் பற்றிய ஆய்வுகள் இதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. மற்றபடி, ஒரு ஆண் அரசியல்வாதியின் குடும்பத்துப் பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதா என்ன? அவர்கள் எப்படிப்பட்ட அரசியலை, எத்தகைய கொள்கையை ஏற்றுச் செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம்.
ஆக, தினமணி எதிர்ப்பின் ஆழத்தில் தேர்தல்களில் மட்டுமல்ல எந்தத் துறையிலுமே, எந்தப் பிரிவினருக்குமே இட ஒதுக்கீடு என்கிற ஏற்பாடே கூடாது என்கிற வறட்டுவாதம்தான் ஊடுறுவியிருக்கிறது. அரசியல் செயல்பாடுகளில் இத்தனை காலமாய்ப் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிற சமுதாயத்தின் சரி பாதி மூளைக்கு இப்படி மூன்றில் ஒரு பங்கு இடமாவது அளிக்கிற இந்த 108-வது சட்டத்திருத்தம், நடைமுறைக்கு வந்தபின் இப்படிப்பட்ட குதர்க்க வாதங்களின் பொய்மையைக் கிழித்துக கீழே போடும். மானுட பக்கவாதம் முற்றிலுமாக நீங்குவதை நோக்கி சமுதாயம் மேலும் நடைபோடும்.
-அ. குமரேசன்