தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்குப் பாதிப்பு இல்லாமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் ஏற்கத்தக்கதொரு நியாயம் இருப்பதுபோல் ஒலிக்கிறது. ஆனால் சற்றே ஆழ்ந்து யோசிக்கிறபோது அது ஒரு சமாளிப்புக் கோரிக்கையாக இருக்கிறதேயன்றி சாத்தியக் கோரிக்கையாக இல்லை.
69 சதவீதம் என்றால் நூற்றுக்கு 69 என்பதே கணித அறிவு. அந்த நூறு இடங்களில் 10 பங்கு ஏழைகளான, தங்களைத் தாங்களே உயர் சாதியினர் என்று வைத்துக்கொண்ட பிரிவினருக்குப் போய்ச் சேரும் என்றால், மீதியுள்ள 90 இடங்களுக்குத்தான் போட்டி. அந்த 90 இடங்களில் 69 சதவீதம் என்றால், உண்மையில் நூற்றுக்கு 62.1 இடங்கள்தான். அதாவது 62.1 சதவீதம்தான்.
பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்குப் பாதகமில்லாமல் மேற்படி பிற சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது என்றால், எஸ்சி-எஸ்டி-பிசி மக்களுக்கான 69 சதவீதம் என்பது 76 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும். அது நடக்குமா?
ஆக, நடைமுறையில் இந்த 10 சதவீதத் திணிப்பின் மூலம் எஸ்சி-எஸ்டி-பிசி மக்களுக்குத் தமிழகத்தில் இருந்துவரும் 69 சதவீத இட ஒதுக்கீடு 62.1 சதவீதமாக வெட்டப்படுகிறது.
ஏற்கெனவே இந்த மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒவ்வொரு மாநிலமும், தன்னகத்தில் உள்ள இவர்களின் மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப, தானே முடிவு செய்துகொள்ள அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகளாக அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டும் வருகிறது.
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்கிறது என்றாலும் அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த 69 சதவீதத்திற்குப் பாதிப்பு இல்லாமல் 10 சதவீதத்தைச் செயல்படுத்தலாம் எனக் கோருவது, 62.1 சதவீதமாகக் குறைக்கப்படுவதை ஒப்புக்கொள்வதேயாகும்.
இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டு விட்டால், மத்திய அரசின் சட்டத் திருத்தத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியோர் என்ற பதத்திற்கு தரப்பட்டுள்ள வரையறைகள் எவ்வளவு மோசடியானவை, அரசுத்துறை வேலைகளே இல்லை என்கிறபோது யாருக்கு எத்தனை சதவீதம் ஒதுக்கீடு செய்தால்தான் என்ன பயன் என்பன உள்ளிட்ட வாதங்கள் வலுவானவை போல் தோன்றுகிற நீர்க்குமிழிகளே என்பதும் தெளிவாகும்.