குழந்தைகளுக்கு எழுத குழந்தை மனம் வேண்டும்
“குழந்தைகளுக்காக என்று வரும் புத்தகங்களில் வரலாறு, அறிவியல், கதை, அறிவுரை என்று எல்லாம் இருக்கிறது. குழந்தையின் வியப்பு மட்டும் இல்லை... மன்னர்களின் சாகசங்களைச் சொல்லும் புத்தகங்களில் அவர்கள் மக்களின் உழைப்பை உறிஞ்சியவர்கள்தான் என்ற உண்மையையும் சொல்ல வேண்டாமா? ஆகப்பெரும்பாலான புத்தகங்கள் மிடில் கிளாஸ் குழந்தைகளைத்தான் மனதில்கொண்டதாக எழுதப்படுகின்றன... புத்தகம் யாருக்காக எழுதப்படுகிறதோ அவர்களைச் சென்றடையும் வரையில் ஓய முடியாது. குழந்தைகளுக்குப் புத்தகங்கள் கிடைக்கும் வாய்ப்பு என்பது ஒரு முக்கியமான பிரச்சனை. நான் பார்த்த அளவில் மிகக் குறைவாகப் புத்தகம் வாங்குகிறவர்கள் ஆசிரியர்கள்தான்...
எதை எழுதுவது என்பதில் அவரவர் சார்பு வெளிப்படத்தான் செய்யும். நான் ஒருபோதும் ஆன்மிகப் புத்தகம் போட மாட்டேன். அதற்கு வெளியே ஆயிரம் இருக்கிறது. அதையெல்லாம் எப்படிச் சொல்வது என்பதுதான் என் கவலை. நீதிக்கதை எழுதக்கூடாது. கடந்த கால நீதிக்கதைகள் குழந்தைகளை ஷேப் பண்ணவில்லை. குழந்தைகள் பார்க்கும் டிவி வேகமாகவும், புத்தகம் மிக மெதுவாகவும் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டு எழுத வேண்டும். குழந்தை மொழி என்றால் என்னவென்று என்சைக்ளோபீடியாவில் இல்லை. ஆனால் குழந்தைகளிடம் இருக்கிறது. எழுதிவிட்டு அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் அதை உருமாற்றம் செய்வார்கள், சரியான குழந்தை மொழி நடை கிடைக்கும்.”
-இவை தமுஎகச பொதுச் செயலாளர் ச. தமிழ்ச்செல்வன் கூறியவை. சென்ற மாதம் சென்னையில் கிழக்கு பதிப்பகம் குழந்தைகள் புத்தகங்களுக்கான பட்டறை ஒன்றை நடத்தியது. அதைத் தொடங்கிவைத்துப் பேசிய தமிழ்ச்செல்வன் இவ்வாறு கூறினார். குழந்தைகளுக்குக் கதைசொல்வதில் பிரியம் உள்ள எழுத்தாளர்கள் பலரும் பங்கேற்றார்கள். சம்பிரதாய நடைமுறைகள் இல்லாமல், ஒரு சிறப்பு அழைப்பாளரின் அறிமுகம், அதன் மீது பங்கேற்பாளர்களின் வெளிப்படையான விவாதம் என்ற வடிவில் ஆரோக்கியமான ஒரு முகாமாகவே அது நடந்தது.
தொடக்க உரையின் மீது ஒரு கேள்வி எழ அதற்கு தமிழ் அளித்த பதில்: “பெரியவங்க செருப்பை போட்டுக்கிட்டு நடக்க குழந்தைகள் விரும்புவது போல பெரியவங்க புத்தகத்தையும் குழந்தைகள் படிப்பார்கள்.”
எழுத்தாளர் இரா. நடராசன், “மனப்பாட மெஷின்களாக்கப்பட்டிருக்கிற நம் குழந்தைகளைப் பாடப்புத்தகங்களிலிருந்து மீட்கிற, உலகத்தை கதையை நேரடியாகக் காட்டுகிற புத்தகங்கள் குழந்தைகளுக்குத் தேவை. ஆங்கிலப் புத்தகங்களில் குழந்தைகள் நாவல், பெரியோர் நாவல் என்றெல்லாம் கிடையாது. குழந்தைகள் எதை அதிகமாக வாங்குகிறார்களோ அதை வகைப்படுத்திக் கொள்கிறார்கள். ஹாரி பாட்டரின் வெற்றி அதன் பள்ளிக்கூட எதிர் நிலையில் இருக்கிறது என்று நினைக்கிறேன்,” என்றார்.
சிறுவர் மொழி என்பது பற்றிப் பேசிய பா. ராகவன், “உலகிலேயே மிகச் சிரமமான செயல் சிறுவர்களுக்கு எழுதுவது. அதைவிடச் சிரமம் அவர்களை ரசிக்க வைப்பது. ஏதோ சொல்லவந்ததை கதை வடிவில் சொல்கிற முயற்சிதான் நடக்கிறது. கதையை கதையாகச் சொல்கிற முயற்சி இல்லை,” என்று சரியாகவே தொடங்கினார். ஆனால் அப்புறம், “எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம், குழந்தைகள் அதை ரசிப்பது போல் எழுதவேண்டும் அவ்வளவுதான்,” என்று தாராளமயமாக்கினார். பின்னர் அவரே “இதில் பொது விதி என்று எதுவும் கிடையாது. விதிகளை மீறலாம் - இலக்கணத்தை அறிந்து மீறுவது போல்,” என்றும் கூறினார்.
எளிமையான, குறைவான சொற்களில் இருக்க வேண்டும், சுவாரசியமாக இருக்க வேண்டும், தகவல்களில் பிழைகள் கூடாது, போதனை செய்யும் தொனி கூடவே கூடாது, நிறைய படங்கள் சேர்க்கலாம், ஒரு வாக்கியம் நான்கைந்து சொற்களுக்கு மேல் போகாமல் இருக்க வேணடும், ஒரு பத்தி மூன்று வாக்கியங்களுக்கு மேல் போகக்கூடாது, குழந்தைகளின் தோளில் கைபோட்டுக்கொள்வது போல் நேரடியாகப் பேசும் தொனியில் எழுதவேண்டும் என்ற ஆலோசனைகளையும் வழங்கினார் ராகவன்.
“புலி மார்க் சீயக்காய்க்கும் புலிக்கும் என்ன தொடர்பு? அதைப் போலத்தான் குழந்தை இலக்கியத்துக்கும் குழந்தைக்கும் என்ன தொடர்பு என்று கேட்கும் நிலைதான் இருக்கிறது,” என்றார் வெண்ணிலா.
“குழந்தைகளின் மன உலகம் முக்கியமானது. அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்று புரிந்துகொண்டிருக்கிறோமா. பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எல்லாமே புதுசு. அந்த வயதில் உருவாகும் கற்பனாவுலகத்தை எழுத்தாக்க முடிந்திருக்கிறதா? இந்தியச் சூழலில் குழந்தையைப் புரிதல் என்பதே பிரச்சனைதான். குழந்தை மனம்போல் இலக்கற்ற பயணம் உள்ள படைப்பு தேவை. டிவி சீரியல் பார்க்கிற குழந்தையும் வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்தால் அதைத் திரும்பிப் பார்ப்பது குழந்தைத்தனமாகவே இருக்கும்,” என்றார் கவிஞர்.
புதுவை அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஹேமாவதி, பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுகு அறிவியல் கல்வியே பகுத்தறிவுக் கல்வியாகவும் அமையும் என்றார். “இக்குழந்தைகளுக்கு புதிர் விடுவிப்புச் செயல்பாடுகள் மிகவும் பிடிக்கும். அவர்கள் அறிந்த செய்திகளிலிருந்தே தொடங்குவது பலனளிக்கும்,” என்றார் அவர். அறிவியல் செய்திகளுக்கான உரையாக இருந்தாலும் குழந்தைகளுக்கான இலக்கிய அணுகுமுறைக்கான அடிப்படைகளும் அந்த உரையில் இருந்தன.
“அப்புறம் என்னாச்சு,” என்று குழந்தை கேட்டால் அது வெற்றிகரமான கதை என்று அடையாளம் காட்டினார் குழந்தைகளுக்கு நிறைய கதைகள் எழுதியவரான ரேவதி (என்ற ஹரிஹரன்). “குழந்தைகளிடம் பேச ஆரம்பித்தால் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களே உங்களை மேலே கொண்டுபோய்விடுவார்கள்,” என்றும் குறிப்பிட்டார் ‘கோகுலம்’ ஏட்டின் முன்னாள் ஆசிரியரான ரேவதி.
அறிவியலையும் கணிதத்தையும் இனிப்பாகச் சொல்லித்தர முடியும் என்றார் பத்ரி சேஷாத்திரி. அவர் சொன்னதில் முக்கியமானது, “கேள்வி கேட்கும் மன நிலையை - அறிவியல் மனப்பான்மையை - கொண்டுவர வேண்டும். பாடப்புத்தகங்களால் அறிவியலின் சுகத்தை 90சதவீத மாணவர்கள் பெறுவதே இல்லை... அறிவியல் அறிஞர்களின் கதைகளை சுவையாகச் சொல்வதன் மூலம் அவர்களது கண்டுபிடிப்புகள் பற்றியும் சொல்லமுடியும்,” என்றார் அவர்.
நல்ல தமிழ்ச்சொற்கள் பாடப்புத்தகங்களில் கிடைக்கின்றன என்பதையும் சொல்லத் தவறவில்லை கிழக்கு நிறுவனத்தின் தலைமை இயக்குநர். அறிவு சார்ந்த விஷயங்களை சொல்லும்போதும் அதில் ஒரு திரில் இருக்க வேண்டும் என்றார் அ. வள்ளிநாயகம்.
குழந்தைகளுக்கான எழுத்துக்களில் பாலின பாகுபாட்டுக்கு எதிரான சிந்தனைகள், சாதி வேற்றுமைக்கு எதிர்ப்புக் கருத்துக்கள் இடம்பெற வேண்டுமா என்று பேச வந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த அ. மாதவன், “சமுதாய மாற்றத்தை விரும்புவோர் எவரும் இது வேண்டும் என்றே சொல்வார்கள்,” என்றார். பல பள்ளிகளில் இன்றைக்கும் கடினமான பணிகளை ஆண் மாணவர்களிடமும், துப்புரவுப் பணிகளை பெண் மாணவர்களிடமும் ஒப்படைப்பது நடககிறது,” என்ற ஒரு படப்பிடிப்பையும் அவர் முன்வைத்தார்.
கணித அறிவியலாளர் பேராசிரியர் ராமானுஜம், “குழந்தைகளின் மனநிலை பற்றிய ரசனைவயப்பட்ட கருத்துக்களை மட்டுமே பேசுவதால் பயனில்லை,” என்றார். “அறிவியல் கதைகளையும் அவர்களது உண்மை வாழ்க்கையிலிருந்தே தொடங்கிச் சொல்ல வேண்டும். பத்துவயது வரையில் குழந்தைக்கு ஒருவிதமான பாதுகாப்பு இருக்கிறது. அதன்பிறகு, ஒரு முதிர்ச்சி வர வர, மென்மைத்தனத்தின் மீது விழுகிற அடி குழந்தைகளை அழவைக்கவும் செய்யலாம்,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முதலையின் பிடியிலிருந்து யானை கஜேந்திரனை ஆதிநாராயணன் தனது சக்கராயுதத்தை ஏவி காப்பாற்றிய கதையைக் கேட்ட எங்கள் வீட்டுக் குழந்தை, “அந்த முதலையோட சாப்பாட்டை கடவுள் பறிச்சுக்கிட்டாரே,” என்று கேட்ட நிஜ அனுபவத்தை கதையாக மாற்றியது உள்ளிட்ட சில அனுபவங்களை நான் பகிர்ந்துகொண்டேன்.
அதிகம் பேசப்படுகிற, குறைவாகவே முயற்சிகள் நடக்கிற ஒரு முக்கியப் பொருள் குறித்த இந்தப் பட்டறை பொதுவாக பயனுள்ளதாகவே இருந்தது. அதே நேரத்தில், உள்ளடக்கப் பிரச்சனைகளில் கட்டுப்பாடு தேவையில்லை என்று சொல்லிவிட்டு, எப்படி எழுதுவது என்பதில் எழுத்தாளர்களை ஒரு வார்ப்புக்குள் கொண்டுவருகிற எத்தனிப்பும் வெளிப்பட்டது. குழந்தைகளை அப்படி ஒரே மாதிரியாக வார்ப்பது எப்படி தவறோ அப்படி குழந்தைகளுக்காக எழுதுவோரை வார்ப்பதும் தவறுதான். வர்த்தக நிறுவனத்தின் தேவைக்கு அத்தகைய வார்ப்புகள் உதவுமோ என்னவோ. ஆனால், வெற்றிகரமான புத்தகம் இயல்பாக நிற்கும். உள்ளடக்கமும் ஏற்புடையதாக இருக்கும்போது அதை மக்களுக்கான இலக்கிய இயக்கங்கள் பரவலாகக் கொண்டுசெல்லலாம்.
புத்தகங்களை “மார்க்கெட்டிங்” செய்வது குறித்த எதிர்ப்புக் கருத்தும் வெளிப்பட்டது. பரவலான குழந்தைகளைப் புத்தகம் சென்றடைவது என்ற அர்த்தத்தில் அதைப் பற்றிய அசூயை தேவையில்லை என்றே படுகிறது.
ஆயினும், தமுஎகச இதை மாநில அளவிலான முகாமாக நடத்தத்திட்டமிட்டுள்ளது. அதற்குள் ஒரு பதிப்பகம் முந்திக்கொண்டுவிட்டது! இந்தப் பட்டறை அனுபவங்கள் அந்த முகாமை செம்மையாய் நடத்த உதவும். எப்படியோ, குழந்தைகளை யோசிக்கவிடாத இறையருள் கதைகளே அவர்களை ஆக்கிரமித்துள்ள மரபிலிருந்து விலகி, அவர்களைக் கேள்வி கேட்க வைக்கிற புத்தகங்கள் பூத்துவருமானால் குழந்தை இலக்கியக் களம் பெரும் வனமாக வளம் பெறும் என எதிர்பார்க்கலாம்.