Sunday, 30 December 2007

புத்தாண்டு வாழ்த்துதான்...

எல்லா வளமும் பெற்று
இன்புற்று வாழ்ந்திட
கடக்கும் ஆண்டின்
தொடக்கத்தில் வாழ்த்தியது
நினைவுக்கு வருகிறது.
கணக்கெடுப்பில் மனம்
கசந்து தொய்கிறது.
உன் கர்ப்பத்தில் நீ
என்ன வைத்திருக்கிறாய்
புத்தாண்டே?
புதிர்கள் நிமிடங்களுக்கு
புத்துணர்ச்சியூட்ட
உன் ஒரு வல்லமையை
மறுப்பதற்கில்லை.
நம்பிக்கையை விதைக்கும்
அந்த வல்லமை.
வாழ்த்துவோருக்கும்
வாழ்த்தப்படுவோருக்கும்
நம்பிக்கை.

-அ.குமரேசன்

Sunday, 23 December 2007







கலைகளோடு கேள்விகளும் சங்கமம்






ந்த ஆண்டின் துவக்கத்தில் நடந்த ‘சென்னை சங்கமம்’ பற்றி பல வாதப்பிரதிவாதங்கள் உண்டு என்ற போதிலும் அது எதிர்பார்க்கப் படுகிற ஒரு வருடாந்திர கலை விழாவாகியிருக்கிறது என்பதை மறுப் பதற்கில்லை. அந்த நிகழ்வு பற்றிய பல விமர்சனங்கள், அது முழுமை யாகத் தமிழ் நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவித்து வளர்ப்பதாக அமைய வேண்டும் என்ற விருப்பத்திலிருந்தே வந்தன. சிலர், அவர்களைத் தவிர வேறு யார் எதைச் செய்தாலும் அதெல்லாம் போலியானது என்று முகம் திருப்பிக் கொண்டேதான் இருப்பார்கள். சென்னை சங்கமத்தைப் பொறுத்தவரையில் அதனை நடத்துவது தமிழ் மையம் அமைப்புதான் என்றபோதிலும், அரசாங்கத்தின் நிதி மற்றும் நிர்வாகப் பங்களிப்பும் ஓரளவு இருப்பதால், மக்கள் பணம் கொஞ்சம் அதற்காகத் திருப்பி விடப்படுகிறது என்பதால், கூடுதல் கண்காணிப்புக்கும் கேள்விகளுக் கும் உட்படுத்தப்படுவது இயல்பே.






அந்த இயல்பிலிருந்தே, ‘சென்னை சங்கமம் 2008’ அறி விக்கப் பட்டபோது வரவேற்பு, எதிர்பார்ப்பு, ஐயப்பாடு, மதிப்பீடு என எல்லா உணர்வுகளும் சேர்ந்து மேலெழுகின்றன. தமிழ் மையம் இயக்குனர் களில் ஒருவரும் சங்கமம் ஒருங்கிணைப்பாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டிச.7 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஜனவரி 10 முதல் 17 வரை `சென்னை சங்கமம் 2008’ நடைபெற இருப் பதை அறிவித்தார். இயற்கைக்கு நன்றி தெரிவிப்பதோடும் இணைந்த பொங்கல் விழாவை யொட்டி இந்தப் பண்பாட்டுச் சங்கமம் நடைபெற உள்ளது என்றார் அவர்.






அடிப்படையில் பிழைப்புக்காகவும், புதிய வாய்ப்புகளுக்காகவும் தலைநகர் வந்து சேர்ந்தவர்கள்தான் சென்னையின் பெரும்பாலான மக்கள். நகரத்தின் ஓட்டத்தில் பொங்கு நுரை போல் வாழ்க்கை மிதக் கிறது. எனவே, தங்களது வேர்களோடு அடையாளப்படுத்திடும் தேடலும் ஏக்கமும் அடியுணர்வாய் இருக்கிறது. விழாக்கால விடு முறைகள் வருகிற போது, சிறப்பு ரயில்கள், கூடுதல் பேருந்துகள் என்று இயக்கினாலும் போதவில்லை என்கிற அளவுக்கு குடும்பம் குடும்பமாகச் சொந்த ஊர்ப் பயணம் மேற்கொள்ளப்படுவதன் அடிப்படை இதுதான். இன்னொரு பக்கம், அப்படியெல்லாம் பயணம் மேற்கொள்வது மிகப் பெரிய, தாங்கமுடியாத பணச் செலவு என்பதாக, ஆகப் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். வேலை நிலைமை உள்ளிட்ட வேறு பல கார ணங்களாலும் இங்கேயே இருக்க வேண்டியவர்கள் நிறையப்பேர். கிராமங்களில் வாழ்வாதாரத்தைப் போலவே வாய்ப்பாதாரமும் நசிந்து போன வர்களாக சலங்கை கட்டிய கால்களின் பழைய நினைவு உறுத் தல்களோடு ஏங்கிக் கிடக்கும் நாட்டுப்புறக் கலை ஞர்களும் ஏராளமாக உள்ளனர். நகர மக்களின் வேர்த் தேடலும், கிராமத்துக் கலைஞர்களின் வெளிச்ச ஏக்கமும் சங்கமிக்கிற ஒரு நிகழ்வாக சென்னை சங்கமம் உருவாகிறது எனலாம்.






முதல் சங்கமத்தைப்போலவே 2008ம் ஆண்டிற்கான சங்கமமும் பூங்காக்கள், வெளி யரங்குகள் போன்ற இடங்களில் நிகழவிருக்கிறது. அதில் சுமார் 725 கலைஞர்கள் பங்கேற் றார்கள். இப்போது 1600 கலைஞர்கள் பங்கேற்கிற சுமார் 60 கலை வடிவங்கள் இடம் பெறுகின் றன. பறையாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கரகாட்டம், களிய லாட்டம், கொக்கிலிக்கட்டை, மான் கொம்பாட்டம், வில்லுப்பாட்டு, நையாண்டிமேளம், மாடாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கணியான் கூத்து, செண்டை, பாவைக்கூத்து, தேவராட்டம், கடவு மாத்தாட்டம், பொம்மலாட்டம், களரி, சிலம்பம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மெரினா கடற் கரைச் சாலை, பெரம்பூர், தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் சங்கமப் பெரு வளா கங்களும் அமைக்கப்படுகின்றன.சென்ற முறை கிடைத்த அனுபவங்கள் அடிப் படையில், குறைபாடுகளை தவிர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் கனிமொழி. புதிதாக என்ன செய்யப்படு கிறது? இம்முறை நாட்டுப்புற கலைகளில் பயிற்சி பெற்ற நகர்ப்புற பள்ளி - கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இத்துடன் இணை கின்றன. இதுவும் ஒரு ஆக்கப்பூர்வமான சங்கமம் என்றுதான் சொல்ல வேண்டும்.






செய்தியாளர்கள் முன்னிலையில் கல்லூரி மாணவிகள், பள்ளிக் குழந்தைகளும் தங்களது பயிற்சியை உற்சாகம் பொங்க வெளிப்படுத் தியபோது, நாட்டுப்புற கலை வளர்ச்சிக்கான இன்னொரு முனைப்பின் அடையாளங்கள் தெரிந்தன. தமிழ் மையத்தின் 15 பயிற்சியாளர்கள் கடந்த 6 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களுக்குச் சென்று 10 விதமான நாட்டுப்புற கலை வடிவங்களை கற்பித்திருக்கிறார்கள் என்று மையத்தின் மற்றொரு இயக்குநர் ஜெகத் கஸ்பார் தெரிவித்தார்.






இப்போதும் முன்னணி கர்நாடக இசைக்கலைஞர்கள் சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ, சஞ்சய் சுப்ரமண்யன், டி.வி.சந்தான கோபாலன், டி.எம். கிருஷ்ணா, சௌம்யா, ரஞ்சனி - காயத்ரி போன்றோரும் `அவிக்னா’ போன்ற பரத நாட்டியக் குழுக்களும் வெளியரங்குகளில் தமது கலைகளை மக்கள் முன் வழங்க இருக்கிறார்கள்.






சங்கமத்தில் பங்கேற்க விரும்பும் புதிய கலைஞர்கள் இம்மாதம் 26, 27 நாட்களில் பிற்பகல் வரையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய பள்ளி அரங்கில் நடைபெறவுள்ள நேரடி தேர்வு முகாமில் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் சங்கம நிகழ்ச்சிகளில் பங் கேற்கலாம் என்றும் அமைப் பாளர்கள் கூறினார்கள்.மாணவர்கள், இளையவர்களுக்கான நடனப் போட்டி ஒன்றும் முக்கிய அம்சமாக இடம் பெறுகிறது. ஜனவரி 11 அன்று இந்தப் போட்டி உயர் நிலைப் பள்ளி, மேநிலைப் பள்ளி, இளநிலைக் கல்லூரி என பிரிவு களாக நடத்தப்படும். ஜனவரி 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டிகள் பங்கேற்பவர்கள் திரைப்படப் பாடல்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாட்டுப்புற பாடல்கள் தேவை எனில் தமிழ் மையம் அலுவல கத்தை ( 68, லஸ் கோவில் சாலை, மயிலாப்பூர்) தொடர்பு கொள்ளலாம்.






சென்ற முறை போலவே தமிழ்நாடு இயல் - இசை - நாடக மன்றத்தின் சார்பில் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவியரங்குகள், பட்டிமன்றங் கள், இலக்கிய உரைகள், கலை விவாதங்கள் ஆகியன நிகழும் களமாக தமிழ்ச் சங்கமம் அமையும் என்றார் மன்றத் தின் செயலர் கவிஞர் இளையபாரதி.






கேரளத்தின் மாப்ளா இசை, ராஜஸ்தானி நடனம், சூஃபி இசை, கர்நாடகத்தின் நித்யகிரம் போன்ற சில வெளிமாநில கலை நிகழ்ச்சிகளும் இம்முறை சங்கமிக்கின்றன.






சென்றமுறை நிகழ்ச்சிகள் நடந்த இடங்களில் பார்வை யாளர்களுக்கு உணவு கிடைப்பது ஒரு பிரச்சனை யானது. அதை மனதில் கொண்டு இம்முறை உணவு விழா என்பதும் இந்த சங்கமத்தில் இணைகிறது. நெல்லையின் இருட்டுக் கடை அல்வா, மணப்பாறை முறுக்கு, தலப்பாகட்டி பிரி யாணி, மதுரையின் ஜில் ஜில் ஜிகர்தண்டா, நாட்டுக் கோட்டை பலகாரங்கள் போன்ற வட்டார உணவுகள் அந்தந்தப் பகுதிகளிலிருந்தே வரவழைக்கப்படுகின்றன. சென் னையின் முன்னணி சமையல் வல்லுநர்கள் அவற்றை ஆரோக்கியமான முறையில், எளிய தள்ளுவண்டிகளிலேயே விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள் என்று ஹாட் பிரட்ஸ் நிறுவனத்தின் மகாதேவன் தெரிவித்தார்.






நாட்டுப்புற கலைகள் பாதுகாப்பு என்பதில் அவற்றை எந்த மாற்றமுமின்றி அப்படியே வைத்திருப்பது, காலத்திற்கேற்ற மாற்றங்களைச் செய்வது என்ற இரண்டு அணுகு முறைகள் உண்டு. சமூக நீதி, சமூக சீர்த்திருத்தம் போன்ற தமிழக அரசின் கொள்கைகள் சங்கமத்தின் செய்தியாக ஏன் அமையக் கூடாது?






``கலைகளில் மாற்றமே கூடாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆயினும் கலைஞர்கள் அவர்களது விருப்பப்படி நிகழ்த்துவதற்கு சுதந்திரம் உண்டு. அதில் நாங்கள் குறுக்கிடவில்லை சென்ற முறை கூட பல கலைஞர்கள் முற்போக்கான செய்திகளைப் பாடல்கள் மூலம் சொல்லவே செய்தனர்.’’ என்றார் கனிமொழி.






கலைஞர்களின் பொருளாதாரம், மக்களின் ஈடுபாடு ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட இந்த மாபெரும் நிகழ்வை, அரசுத்துறைகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களைத் தாண்டி, மக்களுக்கான கலை இலக்கியத்தை அக்கறையும், ஈடுபாடும் உள்ள அமைப்புகளோடும் இணைந்து நடத்தினால் என்ன? இதைப்பற்றி கேட்டபோது, மற்ற கலை அமைப்புகள் தாங்களாக முன் வருவார்களானால் தாராளமாகப் பங்கேற்கலாம் என்று பொதுவாகச் சொல்லப் பட்டது. அத்தகைய அமைப்புகளை இவர்களாக அணுகுகிற விருப்பம் இல்லை போலும். ஏனிந்தத் தயக்கமோ? எனினும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்ச்சங் கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று இளைய பாரதி கூறினார். பங்கேற்பாளராக அழைக்கப்படுவதற்கும், அமைப் பாகவே இணைந்து செயல்படுவதற்கும் வேறுபாடு இருக்கவே செய்கிறது.






இதேபோன்ற கலை இலக்கிய முயற்சிகளை மற்ற அமைப்புகள் மேற்கொண்டால் அதற்கும் அரசுத் துறை களில் ஆதரவு இதேபோல் கிடைக்குமா என்ற கேள்வி இப்போதும் தொடர்கிறது. சென்ற சங்கமத்திற்குப் பிறகு, நாட்டுப்புற கலைஞர்களின் உண்மையான ஆதங்கம் வெளிப்படுத்தப்படவில்லை என்ற உணர்வோடு சென்னையில் தமுஎச நடத்திய பேரணியும், அதன் தொடர் விளை வாக தமிழக அரசு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தை அமைத்ததும் நினைவுக்கு வருகிறது. அத்தோடு இன்னும் அந்த வாரியத்தின் முதல் கூட்டம் கூட கூட்டப்படவில்லை என்பதும் நினைவுக்கு வருகிறது!






அடுத்தடுத்த நிகழ்வுகளின் அனுபவ சங்கமத்தில் புதிய அணுகுமுறைகள் உருவாகட்டும் கலையும் இலக்கிய மும் மக்களுக்கே என மறுபடி மறுபடி உறுதியாகட்டும்.

Sunday, 16 December 2007

மசியல்

நலம் தரும் போக்குவரத்து மசியல்

போக்குவரத்து மசியல் - அதுதாங்க டிராபிக் ஜாம் - இப் போதெல்லாம் ரொம்பவும் சர்வ சாதாரணமாகிவிட்டது. சென்னை போன்ற நகரங்களில், சாலைகள் சந்திக்கும் இடங்களில் கண்டிப் பாக அந்த மசியலைச் சந்திக்க வேண் டியிருக்கிறது. அந்த இடங்களில் எல்லாம் புலம்பல்களும் வசவுகளும் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர, ஆறு சக்கர, பல சக்கர வாக னங்களோடு சேர்ந்து உறுமலாய் வெளியாகிக் கொண்டே இருக்கின் றன.
“ஒவ்வொரு சிக்னல்லயும் இப்படி நிக்க வேண்டியதாப் போச்சே,” என் கிறார் ஒருவர். “அந்த சிக்னல்ல தப்பிச்சு இங்கே வந்து மாட்டிக் கிட்டேன்,” என்கிறார் இன்னொருவர். இந்த வசனங்களை முன்னால் நிற் கும் ஒரு வண்டி, அதன் புட்டத்தில் முத் தமிடுவது போல் நிற்கும் அடுத்த வண்டி, அடுத்தடுத்த வண்டி என எல்லா வண்டிகளின் ஓட்டிகள், பயணிகளும் நீக்கமற உச்சரிக்கிறார்கள்.
“பாலங்கள் நிறைஞ்ச ஊர், பூங்காக்கள் நிறைஞ்ச ஊர், யுனிவர்சிட்டி நிறைஞ்ச ஊர், கோயில் நிறைஞ்ச ஊர் ... இப்படி மற்ற மாநிலங்கள்ல இருக் கிறவங்க பெருமைப்பட்டுக்கிடுறாங்க. நம்ம சென்னை என்னடான்னா சிக்னல்கள் நிறைஞ்ச ஊரா இருக்கு,” என்று அந்த இடுக்கண் நேரத்தில் நகு வதன் மூலம் ஒருவர் தன் துயரம் மறக் கப் பார்க்கிறார்.
“என்னப்பா இது, ஓடுற நேரத்தை விட நிக்கிற நேரம்தான் அதிகமா இருக்கு.” ... “என்னை என்ன சார் செய் யச் சொல்றீங்க?” ... “உன்னை ஒண் ணும் சொல்லலப்பா, இப்படி நிக்கிற நேரத்துக்கும் சேர்த்து உனக்கு நான் காசு கொடுக்கும்படியா ஆக்கிட்டாங் களே, அதை நெனைச்சுப் பார்த்தேன்.” ... “உங்ககிட்ட வாங்குற காசு இப்படி நிக்கிற நேரத்தில வே°ட்டாகிற பெட் ரோலுக்கே சரியாப் போயிடுதே, அதைத்தான் சார் நான் நெனைச்சுப் பார்க்கிறேன்.”- இது ஒரு ஆட்டோ பய ணிக்கும் அதன் ஓட்டுனருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை என விளக்க வேண்டியதில்லை.
“யாருதான் கார் வாங்குறதுன்னு ஒரு தராதரமே இல்லாமப் போச்சு. டிபார்ட்மென்ட் லோன், பேங்க் கிரெடிட், ஃபைனான்° எல்லாம் கிடைக்குதுன்னு அவனவனும் கார் வாங்குறான்.” -ஒரு காரோட்டி தன் பக்கத்தில் அமர்ந் திருப்பவரிடம் இப்படிச் சொல்கிறார். ‘இவரே லோன் மேளாவில் கார் வாங் கினவர்தானே... ஒரு ஓசி டிரிப் அடிக்கலாம்னு இவர் வண்டியில வந்தா, அடுத்த மாசம் நாமளும் லோன் போடலாம்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறப்ப இப்படிப் பேசுறாரே.’ -பக்கத்து சீட் பயணியின் மனதில் இவ்வாறாக ஓடுகிறது.
நீண்ட நேரம் காத்திருந்த கடுப்பில் ஒருவர் தனது வண்டியை சற்றே கிடைத்த இடைவெளியில் புகுத்த, “அவ னுக்கு ஏதாவது அறிவிருக்கா பாரு” என்கிறார், சில நிமிடங் களுக்கு முன் இதே போன்ற பாராட்டுக்கு இலக்கான இன்னொருவர்.
ஒருவர் கொஞ்சம் அத்துமீறி, “பொம்பளைங்க எல்லாம் பைக் ஓட்ட வந்துட்டாங்க, அப்புறம் ஏன் டிராபிக் ஜாம் ஏற்படாது,” என்று மொழிகிறார். அவருடைய பார்வையின் திசையில் தன் சினேகிதியுடன் இரு சக்கர வண்டியில் நின்று கொண் டிருக்கும் ஒரு சுடிதார் பெண் திரும்பிப் பார்த்து முறைக்க இவர் கப்பென்று வாயை மூடிக்கொள்கிறார்.
சாலைச் சந்திப்பின் குறுக்கே சென்ற வாகனங்கள் ஒரு வழியாகக் குறைய, அனுபவஸ்தர்கள் உடனே தமது வண்டிகளைக் கிளப்புவதற்குத் தயாராக சீற்ற நிலைக்குக் கொண் டுவருகின்றனர். சிவப்பு விளக்கு அணைவதற்கு முன்பே, குறுக்குச் சாலையில் கடைசி வாகனங்கள் கடந்து முடிவதற்கு முன்பே கிளம்புகின்றனர். அனுபவமற்றவர்கள், பச்சை விளக் குக்காகக் காத்திருந்து, பின்னால் இருப்பவர்களின் ஆரன் எரிச்சலுக்கு உள்ளாகிறார்கள். அது வரையிலான புலம்பல்கள் முடிந்து வண்டிகள் பாய்ந்து பறக்கின்றன. சொற்ப நேரத்தில் சிவப்பு சிக்னல் விழ, மறுபடி வண்டிகள் தேக்கம். மறுபடி புலம் பல்கள். சலிப்புகள். மறுபடி கிண்டல்கள். மறுபடி வசவுகள்.
ஆனால், சாலைச் சந்திப்புகளின் போக்குவரத்துத் தேக்கம் குறித்து கவலைப்படவோ, இப்படிப் புலம்பித் தீர்க்கவோ தேவை யில்லை என்றே தோன்றுகிறது. யோசித்துப் பார்த்தால், வண் டிகள் இப்படித் தேங்கி நிற்பதால் நன்மைகளே அதிகம்! மிகை நாடி மிக்க கொளலே சாலவும் நன்று என்பதால், கஷ்டங் களையும் நஷ்டங்களையும் விட, ஆதாயங்களே மிகுதி என்ற நிலையில் டிராபிக் ஜாம் வரவேற்கத்தக்கதே.
முதலில், நீங்கள் என்னதான் முண்டினாலும், ஊர்ந்திடும் அவ்வளவு வாகனங்களின் இடுக்குகளில் உங்களால் வேகமாக உங்கள் வண்டியைச் செலுத்த முடியாது. சாலைச் சந் திப்புகளில்தான் சிக்னல் விழுவதற்குள் கடந்துவிட வேண்டும் என்ற வேகம் பிறக்கிறது. ஆகவே, சிவப்பு சிக்னலால் ஏற் கெனவே நின்று கொண்டிருக்கிற ஏகப்பட்ட வண்டிகளின் புறத்தே உங்கள் வண்டி நிற்கிற போது, வேகமாகக் கடக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களைக் கடந்து சென்றுவிடும். ஆகவே உங்கள் வண்டியோ நீங்களோ விபத்துக்கு உள் ளாகிற வாய்ப்பு குறைகிறது.
இந்த செல்போன் யுகத்தில், உங்கள் வண்டி வேகமாகச் செல்லும்போது சரியாக டவர் சிக்னல் கிடைப்பதில்லை. இதனால் சரியாகப் பேச முடிவதில்லை. இப்போது வாகனங் களின் நெருக்கடி காரணமாக நீங்கள் வெகுநேரம் நிற்க வேண் டியவதால், அந்நேரத்தில் செல்போன் வழியாக பேச வேண்டியதைப் பேசிவிடலாம். இதை மனதில் வைத்துதானோ என்னவோ எல்லா சாலைச் சந்திப்புகளிலும் டவர் சிக்னல் கிடைக்க தொலைபேசிக் கம்பெனிகள் ஏற்பாடு செய் திருக்கின்றன.
காத்திருக்கும் நேரத்தில், பக்கத்து வண்டிக்காரரிடம் “எந்தப் பக்கம் போனாலும் இதே ரோதனையாப் போச்சு,” என்று கூறுகிறீர்கள். “அதை ஏன் கேட்கிறீங்க, இப்ப எல்லாம் லீவு நாள்ல கூட கூட்டம் ஓய மாட்டேங்குது,” என்று அவர் பதிலளிக்கிறார். அவர் எந்த ஏரியா என்று விசாரிக்கிறீர்கள். உங்கள் ஏரியாதான் என்று தெரிய வருகிறது. உங் களுக்கிடையே ஒரு புதிய நட்பு மலர்கிறது. வண்டியை நிறுத்தாமல் போய்க்கொண்டே இருந்திருந்தால் இது நடந்திருக்ககுமா?
என்னதான் நீங்கள் வேலை முடிந்து ஆவலாக வீட்டுக்குப் போனாலும், அங்கே போய் சிறிது நேரத்தில் ஏதாவது அற்பப் பிரச்சனையில் சண்டை வரத்தான் போகிறது. டிராபிக் ஜாம் காரணமாக வீட்டிற்கு லேட்டாகப் போகும்போது, சாப்பிட்டோமா, கொஞ்சம் டிவி பார்த்தோமா, கண் செருகத் துவங்கியதும் படுக்கையில் சாய்ந்தோமா என்றுதான் உங்கள் “மூட்” அமையும். சண்டைக்கான காரணத்தைத் தேடுவதற்குக் கூட நேரம் கிடைக்காது.
வீட்டை விடுங்கள். வேறு யாருடனாவது சண்டை போடுவதற்குக் கூட நீங்கள் கோபமாகப் போய்க் கொண்டிருக்கலாம். டிராபிக்கில் நிற்கிற போது, அந்த எரிச் சலில் உங்கள் மன எரிச்சல் வடிகட்டப்பட்டுவிடும். இரண்டு நெகட்டிவ் சேர்கிற போது ஒரு பாசிட்டிவ் ஆகிவிடும் என்ற கணித சாஸ்திரப்படி இரண்டு கோபங்கள் சேர்ந்து சமன மாகும் போது உங்களுக்கு ஒரு பரிபக்குவ மனம் கிடைக் கிறது. கோபத்தால் ஏற்படும் உடல் உபாதையும் கரைந் துவிடுகிறது.
அதே போல், ஏதோ ஒரு ஏமாற்றத்தில், அல்லது யார் மீதோ உள்ள ஆத்திரத்தில் உங்களை நீங்களே கொலை செய்வது என்ற முடிவுடன் அதற்கு வசதியான இடம் தேடித் தான் புறப்பட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது போக்குவரத்து நெரிசலும் தேக்கமும் உங்களை மறு சிந்தனைக்குத் தூண்டும். நீங்கள் தற்கொலை முடிவைக் கைவிடுவீர்கள்.
காலையில் புறப்படும் போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கினால், உரிய நேரத்திற்குள் உங்கள் அலு வலகத்திற்கோ, வேறு இடங்களுக்கோ போய்ச்சேர முடியாது என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருப்பீர்கள். ஆகவே வழக்கமான நேரத்தை விட முன்னதாகப் புறப்படுகிற பழக்கமும், அதற்காகப் படுக்கையில் இருந்து சீக்கிரம் எழுகிற பழக்கமும் உங்களைத் தொற்றிக் கொள்ளும். பாருங்கள், உங் கள் அம்மா அப்பா எப்படியெப்படியோ சொல்லியும் பாடமாகாத ஒரு பழக்கம் இப்போது உங்கள் நடைமுறையோடு படிந்தேவிடுகிறதே!
பச்சை சிக்னல் கிடைக்க நேரம் ஆகும் என்ற பட்டறிவால் உங்கள் வண்டியின் இயக்கத்தை நிறுத்தி வைப்பீர்கள். இத னால் உங்கள் பெட்ரோல் செலவு வெகுவாகக் குறையும். எரி பொருள் சிக்கனம் தேவை இக்கணம் என்பதால், நீங்கள் இன்ஜினை நிறுத்துவதன் மூலம் ஒரு தேசபக்தக் கடமையை நிறைவேற்றிய பெருமை உங்களைச் சேரும். உங்களைப் பார்த்து மற்றவர்களும் தங்களுடைய வண்டிகளை ஆஃப் செய்வார்கள். இதனால், தேசபக்தியைப் பரப்பிய புண்ணியம் உங்களை வந்து சேரும்.
சாலைச் சந்திப்பில் நிற்கும் வண்டி, பச்சை சிக்னல் விழுந்ததும் உடனே புறப்பட ஏதுவாக ட்யூன் செய் யப்பட்டிருக்க வேண்டும். அதற்காக நீங்கள் கண்டிப்பாக ஒரு மெக்கானிக்கிடம் வண்டியைக் கொடுப்பீர்கள். அவர் தம்மிடம் பணியாற்றும் இளம் மெக்கானிக்குகளிடம் வேலையைக் கொடுப்பார். பார்த்தீர்களா. டிராபிக் ஜாம் இப்படி பலரது வேலையின்மைப் பிரச்சனைக்குத் தீர்வாகிறது!
இப்படியாக இன்னும் பல நற்பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, இனி போக்குவரத்து நெருக்கடி நேரங்களில் இறும்பூதெய்துங்கள். முடிந்தால் நீங்களே கூட டிராபிக் ஜாம் ஏற்படுத்த முயன்று, பலரது மனம் பக்குவம் அடைய வழி கோலுங்கள்.
அரசாங்கத்துக்குக் கூட நன்மை இருக்கிறது. வண்டிகள் நகர முடியாமல் ஊர்ந்து கொண்டிருக்கும்போது, சந்திப்புகளில் நின்றுகொண்டிருக்கும் போது, பலர் எதிர்காலத்தில் இப்படி ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம் என்ற ஆலோசனைகளை வழங்குவார்கள். எங்கே பாலம் கட்டலாம், எந்தப் பாலத்தை இடித்துவிடலாம், எந்தச் சாலையை ஒருவழிப் பாதையாக்கலாம், எத்தனை வண்டிகளுக்கு லைசென்ஸ் ரத்துச் செய்யலாம் (அவர்களது வண்டிகள் தவிர்த்து), எந்த அதிகாரியை மாற்றலாம், யார் யாரை எல்லாம் நிற்க வைத்துச் சுடலாம் .......... என்று எத் தனையோ யோசனைகளை அள்ளி வீசுவார்கள். உலகத்தில் எங்கெங்கே பக்காவான சாலைப் போக்குவரத்து மேலாண்மை இருக்கிறது என்ற பொது அறிவுத் தகவல்களையும் குவிப்பார்கள். அரசாங்கம் இந்த யோசனைகளை எல்லாம் திரட்டினால், உண்மையாகவே போக்குவரத்து நெருக்கடிச் சிக்கலைத் தீர்க்கக் கூடிய ஒரு உருப்படியான திட்டத்திற்கு வழி பிறக்கக்கூடும்.
சில பேர் ரொம்ப சீரியஸாக, பொதுத்துறைப் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்தி, மேம்படுத்துவதுதான் சரியான தீர்வு என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படுவது ஏசி பஸ்களும் டீலக்ஸ் பஸ்களும் அல்ல, கூட்ட நெருக்கடிக்கும் பிக்பாக்கெட்காரர்களின் கைங்கர்யத்திற்கும் இடமில்லாமல் சாதாரண பஸ்களையே போதுமான அளவுக்கு விட்டாலே போதும் என்பார்கள். பணிமனைகளில் முடங்கிக் கிடக்கும் பேருந்துக ளுக்குப் புத்துயிரூட்ட வேண்டும் என்று சொல்வார்கள். போதுமான தொழிலாளர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். இதுவரை போக்குவரத்துத் துறை பின்னுக்குப் போனது ஏன், முறைகேடுகள் ஏதேனும் உண்டா என்று ஆராய அறிவுறுத்துவார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே குடியிருப்புகள் அமைக்கப்படுவது, எல்லாப் பகுதிகளிலும் சீரான தரமான அரசுப்பள்ளிகளை அமைப்பது ... போன்ற மாற்றுத் திட்டங்களையும் கூட முன் மொழிவார்கள்.
அவர்கள் வேண்டுமானால் சீரியஸாக இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கட்டும். அரசாங்கமோ, அமைச்சகமோ, அதிகாரிகளோ இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் இப்படிப்பட்ட மாற்றுக் கொள்கையைச் சொல்வது, மக்கள் காதுகளில் கேட்காமல் இரைச் சல்கள் எழுப்புவதற்குத்தான் பூசைகள், மதவாதக் கூச்சல்கள், யாராவது நடிகை ஏதாவது செய்ய அதற்கு எதிராகக் கிளப்பப்படும் கூப்பாடுகள், அவற்றையெல்லாம் பெரிதுபடுத்துகிற ஊடகங்கள் என்று என்னென்னவோ இருக்கின்றனவே.

Sunday, 9 December 2007

விவாதம்

கால்மேல் கால் போட்டால்
கடவுளுக்கு அவமதிப்பா?

லத்தையே காப்பாற்றும் கடவுளுக்கு இப்போதெல்லாம் ரொம்பவும்தான் பாதுகாப்பில்லாமல் போய்விட்டது போலிருக்கிறது. ஆளுக்காள் கடவுளைக் காப்பாற்ற அவதாரம் எடுப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. பாவம் கடவுள், அவர் படைத்த அற்ப மானிடர்களின் தயவால்தான் அவரே மண்ணில் இடர் நீங்கி நிம்மதி பெற வேண்டியிருக்கிறது. கடவுளுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்காமல் விட மாட்டேன் என்று சிலர் கிளம்புவதைப் பார்க்கும் போது, தாங்கள் கடவுளை விட சக்தி வாய்ந்தவர்கள் என்று உலகத்தார்க்குத் தெரிவிக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. தப்பித் தவறி கடவுள் என்றொரு சக்தி எல்லாவற்றிற்கும் மேம்பட்டதாக இருப்பதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அந்தக் கடவுளின் கவுரவத்தைக் காப்பாற்றுவதாய் மனிதப் பதர்கள் தொடை தட்டுவது, அந்தக் கடவுளின் சுயமரியாதைக்கு எவ்வளவு பெரிய அவமானம்!

ஆனால், திரைப்பட நடிகை குஷ்பு கடவுளை அவமதித்துவிட்டாராம். எப்படி அவமதித்தாராம்? அலங்கரிக்கப்பட்ட ஒரு அம்மன் சிலை. அதன் முன்பாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார் குஷ்பு. செய்யலாமோ? அதுவும் எப்படி? அம்மனுக்கு முதுகு காட்டிக் கொண்டு! அதுவும் எப்படி? கால் மேல் கால் போட்டுக் கொண்டு! அதுவும் எப்படி? செருப்புக்காலோடு! - இப்படியொரு புகைப்படம் பத்திரிகைகளில் வந்தது. அவ்வளவுதான் வந்தது ஆவேசம் ஆன்மீகக் காவலர்களுக்கு.

அய்யய்யோ கடவுளுக்கு அவமதிப்பு என்று கூச்சலிட்டார்கள். குஷ்பு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அறிக்கைகள் விடுத்தார்கள். அவரை அலைக்கழிக்கும் நோக்கத்தோடு ஆங்காங்கே நீதிமன்றங்களில் அவர் மீது வழக்கு கள் தாக்கல் செய் திருக் கிறார்கள். கரு ணையே வடி வானவர் கடவுள் என்று என்றும் இவர் கள் தான் கதாகாலட்சேபங்களில் உபந் நியாசம் செய் கிறார்கள்!

இத்தனைக்கும் அது “நிஜமான” கடவுள் சிலை அல்ல. அது, கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும், தினமும் பூசைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சாமி அல்ல. ஏதோ ஒரு திரைப்படத்தில் இடம் பெறுகிற தற்காலிக சிலை அது. அதன் முன்னால் குஷ்பு உட்கார்ந்து பேசுவது அந்தப் படத்தில் இடம் பெறுகிற காட்சி.

ஆக, சினிமாவில் தோன்ற சான்ஸ் கிடைத்த சாமிக்கு முன் நடிகை இப்படி செருப்போடு கால் மேல் கால் போட்டுப் பேசியதால், கடவுள் பாதுகாப்புப் படையினர் இப்படி வெறுப்போடு வழக்கு மேல் வழக்குப் போடுகிறார்கள். அந்தப் படத்தை வெளியிட்ட பத்திரிகை மீதும் வழக்குப் போட்டிருக்கிறார்கள். முன்பு கற்புக் காவலர்கள் வழக்குகளால் குஷ்புவை அலைக்கழிக்க முயன்றார்கள். இப்போது கடவுட் காவலர்கள். இவர்களைப் பொறுத்த வரையில், சிலையின் முன் செருப்புக் காலோடு உட்கார்ந்தவர் குஷ்பு என்பதைத்தான் முக்கிய விவகாரம். ஒரு இஸ்லாமியப் பெண் இப்படி இந்துச் சாமியை அவமதிப்பதாவது...

யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்ற மன உளைச்சலுக்கு ஆளாகிற பேர்வழிகள், யாராவது பிரபல புள்ளி மீது வழக்குத் தொடுத்து விளம்பரம் தேடுவது அடிக்கடி நடப்பதுதான். தமிழ்நாட்டில் ராமன் பெயரைச் சொல்லியும் போணியாகாத மதவெறிக் கலாச்சாரத்தை, இந்த விளம்பரத்தின் மூலமாகவாவது மக்கள் தலையில் கட்ட முடியுமா என்று முயன்று பார்க்கிறார்கள்.

கால் மேல் கால் போட்டு உட்கார்வது என்பது உடல் சார்ந்த வசதி சம்பந்தப்பட்ட பழக்கம். அவ்வாறு உட்கார்வது அதிகாரத்தின் வெளிப்பாடாக, அந்த°தின் அடையாளமாகச் சித்தரிப்பது பண்பாட்டு அபத்தம். பெரியவர்கள் முன் சிறியவர்களும் ஆண்களின் முன் பெண்களும் கால் மேல் கால் போட்டு உட்கார்வதை ஆணவச் செயலாகக் கூறுவது ஒரு பண்பாட்டு அடக்குமுறை. உடலின் இயல்பான தேவையைப் பண்பாட்டின் பெயரால் சிறுமைப்படுத்துவது அநாகரிகம்.

செருப்புக் காலோடு அமர்வது என்பதும் அந்தந்த இடம் சார்ந்த தேவையைப் பொறுத்தது. கோயில் வாசலில் செருப்பைக் கழற்றிவைத்து உள்ளே சென்று, பூசையின் போது கடவுளை நினைக்க மாட்டாமல் செருப்புக்கு என்ன ஆனதோ என்று கவலைப்படுகிறவர்கள் உண்டு. இவர்களது மற்ற கோரிக்கைகளோடு அந்தச் செருப்பைப் பாதுகாக்கிற வேலையும் கடவுளுக்கு வந்து சேர்கிறது பாருங்கள். உடல் நலம் கருதி வீட்டுக்கு உள்ளேயே செருப்புப் போட்டுக் கொண்டு நடமாட மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்தக் காலத்தில் போய் திரைப்படக் காட்சிக்காக ஒரு கலைஞர் இப்படி உட்கார்ந்ததைப் பிரச்சனையாக்குகிறவர்களின் மன நலம் விசாரணைக்கு உரியது.

ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பாஜக வகையறாக்கள் நடத்துகிற கூட்டங்களின் மேடைகளின் பின்னணியில் கடவுள் உருவங்கள் வைக்கப்பட்டிருப்பதையும், தலைவர்கள் அந்தக் கடவுள்களுக்கு முதுகு காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். அந்தத் தலைவர்களில் வசதியாகக் கால் மேல் கால் போட்டுத்தான் உட்கார்கிறார்கள், அந்தக் கால்களில் செருப்பு அணிந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும், கோயில் வாசலை விட, கூட்ட மேடை அருகில் செருப்பைக் கழற்றிப் போடுவது கொஞ்சமும் பாதுகாப்பில்லை (செருப்புக்கு) என்பது. அவர்களெல்லாம் கடவுளை அவமதிப்பவர்கள்தானா?

கோட்பாட்டுப்படி பார்த்தால் கடவுள் எங்கேயும் நீக்கமற நிறைந்திருப்பவராயிற்றே... அப்படியானால் எங்கேயுமே செருப்புப் போட்டு நடமாடக் கூடாதே! இதோ இந்தக் கட்டுரைக்கும் இதைப் படிக்கிற உங்கள் கண்களுக்கும் நடுவே கூட கடவுள் இருக்கிறார். எதற்கும், காலில் செருப்பு அணிந்திருந்தால் கழற்றி வைத்துவிட்டு தொடர்ந்து படியுங்கள்.

செருப்பு அணிந்தவர்கள், கழற்றி வைத்தவர்கள், நடைபாதைக் கடையில் கூட செருப்பு வாங்க இயலாதவர்கள், வார் அறுந்ததால் கைவிடப்பட்ட (கால்விடப்பட்ட?) ரப்பர் செருப்பை எடுத்து ஊக்கு குத்தி இணைத்துப் பயன்படுத்துகிறவர்கள் எல்லோரையும் தாங்குவது நம் பூமி. நம்பிக்கையாளர்கள் பூமியை பூமாதேவி என்றே வணங்குகிறார்கள். இனி இந்த பூமியின் மேல், அந்த ஊக்குப் போட்ட செருப்பைக் கூட அணிந்து நடக்கக் கூடாது என்பார்களா?

இவர்களுக்கு உண்மையாகவே கடவுளின் கண்ணியத்தைக் காப்பாற்றுவதில் அக்கறை இருக்கிறதா? அப்படியானால், கடவுளை அரசியலுக்கு இழுத்து தேர்தல் பிரச்சார வஸ்துவாகப் பயன்படுத்துவோர் மீதல்லவா கோபம் வரவேண்டும்? அவர்கள் பல மாநிலங்களிலும் இருக்கிறார்கள் என்பதால், எல்லா மாநிலங்களின் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடரலாம்.

பல தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களில் சாமிப் படங்களைப் பயன்படுத்துகின்றன. லட்சுமியைச் சிதறடிக்கிற லட்சுமி வெடி சிவகாசி பட்டாசுத் தயாரிப்பில் முக்கிய இடம் பெறுவது. அதெல்லாம் கூடாது என்று சொல்வார்களா?

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அண்மையில், மலம் அள்ளுவது போன்ற இழிவான தொழில்களில் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்கள் தள்ளிவிடப்படுவது பற்றிக் குறிப்பிடும்போது, அது ஒரு புனிதமான செயல் என்றாராம். அவர் மீதல்லவா வழக்குப் போட்டிருக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் சரியாகத்தான் கேட்டிருக்கிறார். அது ஒரு புனிதமான செயல் என்பதால்தான் வாழை இலையைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தச் சொல்வதாக லோக குருக்கள் சொல்லக்கூடும். மோடி இதை இன்னும் அழுத்தமாகச் சொல்லட்டும், அந்தப் புனிதமான செயலைச் செய்ய நான் நீ என்று சங் பரிவார தலைவர்கள் முன் வருகிறார்களா என்று பார்ப்போம்.

கண்முன் வாழ்கிற மனிதர்கள் அவமதிக்கப்படுவதை விட, கற்பனைக் கடவுள்கள் அவமதிக்கப்படுவதைத்தான் மதவாதிகள் பெரிய பிரச்சனையாக்குகிறார்கள். தமிழக முதலமைச்சர் கடவுள் நம்பிக்கை தொடர்பான தமது சிந்தனையை வெளிப்படுத்தினால் அதற்காக தலையும் நாக்கும் பலி கேட்கிறார்கள். வெளி மாநிலங்களில் இருந்து வழக்குப் பதிவு செய்கிறார்கள். கருத்துச் சுதந்திரத்தைத் திரிசூலத்தால் குத்திக் குதறிப்போட முயல்கிறார்கள். ஓவியரை நாட்டை விட்டே விரட்டுகிறார்கள். எழுத்தாளர் பேசும் கூட்டங்களில் கலவரம் செய்கிறார்கள். இதில் மத வேறுபாடே கிடையாது.

உண்மையில், செருப்போடு கால் மேல் போட்டு உட்கார்வது கடவுளுக்கு அவமதிப்பு அல்ல. இருபத்தோராம் நூற்றாண்டு நவீன காலத்தில் இதையெல்லாம் கூட விவகாரமாக்குவது, பன்முகப் பண்பாட்டின் விளை நிலமாகப் புகழப்படும் இந்த நாட்டிற்குத்தான் பெரும் அவமானம்.

Friday, 23 November 2007

விவாதம்

உண்மை வெளியாகும், உள்ளம் தெளிவாகும்
உரிமைகள் ஆணைய தலைவருக்கும்...

மார்க்சிஸ்ட் கட்சியையும் அதன் தலைமையிலான இடது முன்னணியையும் தாக்குவதற்கு அறிவு ஜீவி வட்டாரத்தில் ஒரு படையே கிளம்பியிருக்கிறது. மேலோட்டமான சில சிந்தனைகளை வைத்துக்கொண்டு மார்க்சிஸ்ட்டுகள் குறித்து அவநம்பிக்கை பிரச்சாரம் செய்ய முயன்ற இவர்கள், இப்போது மேற்கு வங்கத்தின் நந்திகிராமம் பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள். வன்முறை மட்டுமே ஒட்டுமொத்த அரசியல் இலக்காகக் கொண்ட நக்சலைட்டுகளின் பிடியில் ஒரு வட்டாரமே சிக்கிக்கொண்டாலும் பரவாயில்லை, இடதுமுன்னணியின் செல்வாக்கை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டதுபோல் இவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட்டுகள் சொல்கிற எந்த விளக்கத்தையும் கேட்க மாட்டோம் என்ற, "கொள்கை" உறுதியோடு இவர்கள் தங்களுடைய பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

இந்தப் படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும் இணைந்துவிட்டாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏற்கெனவே நந்தி கிராமத்தில் என்ன நடந்தது என்பதை ஆராய்வதற்கான நடவடிக்கைகளை ஆணையம் துவங்கியிருக்கிறது. புத்ததேவ் அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.இந்நிலையில் ஆணையத்தின் தலைவர் எஸ்.ராஜேந்திர பாபு, நந்தி கிராமத்தையும் குஜராத்தையும் ஒப்பிட்டு, கருத்துக் கூறியிருக்கிறார். குஜராத்தில் சட்டம் ஒழுங்கை மீறி மாநில அரசின் ஆசீர்வாதத்தோடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மதவெறிக் கலவரத்தையும், நந்தி கிராமத்தில் மக்களை வன்முறையாளர்கள் பிடியிலிருந்து மீட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையையும் ஒப்பிடுவதற்கு இவருக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?

குஜராத்தில் நடந்தது இந்துத்துவா கூட்டத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை அரசியல். சிறுபான்மை மக்கள் - குறிப்பாக இஸ்லாமிய மக்கள் - பெரும்பான்மையினருக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற "பாடத்தை" போதிப்பதற்காக அந்த அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்கள் கொலை செய்யப்பட்டனர். அந்தக் கொலைகளுக்கு அரசாங்கப் பதவிகளில் இருந்தவர்களே கூட எப்படியெல்லாம் வழிகாட்டினார்கள், எப்படியெல்லாம் காவல்துறை கைகட்டிக்கொண்டு இருந்தது என்பது குறித்து ஏராளமான செய்திகள் வந்துள்ளன. ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து நெருப்பில் வீசுகிற அளவிற்கு மதவெறி போதை தலைக்கேறிய அந்தக் கூட்டம் கொலைவெறியாட்டம் நடத்தியது.

2002ம் ஆண்டு அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகள் தங்களுடைய இடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் அகதிகள்போல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். நந்தி கிராமத்திலோ மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒரு ஆபாசக் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு அந்த வட்டாரத்தைக் கைப்பற்றுவதற்கு சதி செய்தன. அந்தச் சதியின் ஒரு கூறாகவே அப்பட்டமான வலதுசாரிக் கட்சிகளான பாஜக, மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றோடு அதிதீவிர மாவோயிஸ்டுகளும் சேர்ந்துகொண்டார்கள். தீவிரவாதம் குறித்து மேலும் கீழும் குதிக்கும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் வகையறாக்கள் கொஞ்சமும் கூச்சமின்றி இந்த அதிதீவிரவாதிகளின் ஒத்துழைப்பை நாடினர். அதேபோல், கம்யூனிஸ்ட்டுகளையும் மற்ற இடதுசாரிகளையும் ஒட்டுக்காகக் கையேந்துபவர்கள் என்று ஓயாமல் கூறிக்கொண்டிருக்கும் நக்சலைட்டுகள் இந்தக் கும்பலோடு உறவு வைத்துக்கொள்ள தயங்கவில்லை. அறம் வழுவிய இக்கூட்டணியால் சுமார் நான்காயிரம் மக்கள் அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நில உரிமை பாதுகாப்புக்குழு என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட அந்தக் கூட்டணி, இந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடித்தது. அவ்வாறு விரட்டப்பட்டவர்களில் தலித்துகள், முஸ்லிம்கள், விவசாயத் தொழிலாளர்கள், கைவினைத் தொழிலாளர்கள் என அனைத்துப் பிரிவினரும் இருக்கிறார்கள்.இந்த ஆண்டில் மட்டும் இக்கூட்டத்தால் சுமார் 30 இடது முன்னணி ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இக்கூட்டத்தினரிடமிருந்து எண்ணற்ற துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை - மாநில காவல்துறை அல்ல - மத்திய ரிசர்வ் காவல்படை கைப்பற்றியிருக்கிறது.

வெளியேற்றப்பட்ட அந்த மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவம், தங்களது தொழில்களில் அமைதியாக ஈடுபடவும் இடது முன்னணி அரசு தன்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறது. அந்த முயற்சிகளுக்கு துணையாக இருப்பதற்கு மாறாக, சில தொண்டு நிறுவனங்களும் - தங்களுக்கு வருகிற அந்நிய நிதிகளுக்கு விசுவாசமாக - நந்தி கிராமம் பிரச்சனை குறித்து நாடு முழுக்க திசைதிருப்பும் பிரச்சாரங்களை செய்து வருகின்றன. இப்படிப்பட்ட பிரச்சாரங்களுக்கு சிலர் இரையாவது இயற்கைதான். ஆனால் பகுத்தறிவோடு பிரச்சனைகளை அணுக வேண்டிய மனித உரிமைகள் ஆணையம் இரையாகலாமா? நந்தி கிராமம் பிரச்சனை குறித்து ஆணையத்தின் விசாரணை முழுமையாக முடிந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாவதற்கு முன்பே அதன் தலைவர் இப்படி குஜராத்தையும் நந்தி கிராமத்தையும் ஒப்பிட்டது என்ன நியாயம்?

மேலோட்டமான தனிமனித உரிமை பேசிக்கொண்டு ஒட்டுமொத்தமான ஜனநாயக உரிமைகளை புதைகுழிக்கு அனுப்ப முயல்கிறவர்களின் குரலை ராஜேந்திர பாபுவும் எதிரொலித்திருப்பது வேதனையானது மட்டுமல்ல, விபரீதமானதும் கூட.

விரைவில் உண்மைகள் வெளியாகும். உள்ளங்கள் அதில் தெளிவாகும் - தேசிய மனித உரிமை ஆணையத் தலைவருக்கும்.- அ.குமரேசன்
இடதுசாரிகளோடு இணைந்து நிற்பீர்

மேற்கு வங்க மக்களுக்கு உலக அறிஞர்களின் பகிரங்க கடிதம்

ந்திகிராமம் பிரச்சனை தொடர்பாக மேற்கு வங்க மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயல்வோர் குறித்து கவலை தெரிவித்தும், அதை முறியடிக்க வேண்டுகோள் விடுத்தும் நோம் சோம்ஸ்கி உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற சிந்தனையாளர்கள் கூட்டாக ஒரு பகிரங்கக் கடிதம் வெளியிட்டுள்ளனர். அக்கடிதம் வருமாறு:

மது வங்காள நண்பர்களுக்கு,மேற்கு வங்க நிகழ்வுகள் குறித்து எங்களை வந்தடையும் செய்திகள், அந்த மாநிலத்தில் எங்களில் சிலர் மேற்கொண்ட பயணங்களின்போது ஏற்பட்ட நம்பிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளுவதாக உள்ளன. ஒரே விதமான மாண்புகளைக் கொண்டுள்ள மக்களிடையே, இணைக்க முடியாத இடைவெளிகளை ஏற்படுத்தும் வகையில், பொது வெளியைப் பிளவுபடுத்தியுள்ள வெறுப்புணர்வு எங்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. அதுதான் எங்களுக்கு வேதனையைத் தருகிறது. இந்த இடைவெளியின் இரு மருங்கிலும் உள்ளவர்கள் சொல்வது எங்கள் காதில் விழுகிறது; அதிலிருந்து நிகழ்வுகள் குறித்தும் அவற்றின் இயக்குவிசைகள் குறித்தும் ஓரளவு புரிந்து கொள்ள முயல்கிறோம். நம்மிடையே உள்ள தொலைவு, எதையும் திட்டவட்டமாக கூறவியலாமல் எங்களைத் தடுக்கிறது.

மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட (நிலச் சீர்திருத்தம், உள்ளாட்சி போன்ற) சில முக்கியமான பரிசோதனைகளை, சில பிரச்சனைகள் மீதான கருத்து வேறுபாடுகள் கிழித்துப் போட்டுவிட வங்காள மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம்.

வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட விவசாயிகளோடு எங்களது முழுமையான ஒருமைப்பாட்டை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். நந்திராமத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ரசாயனத் தொழில் வளாகம் அமைக்கப்பட மாட்டாது என்று மேற்கு வங்க அரசு உறுதி அளித்திருப்பதாக நாங்கள் அறிகிறோம். வன்முறையால் வெளியேற்றப்பட்டவர்கள் இப்போது பழிவாங்கல் ஏதுமின்றித் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடிகிறது என்பதும் எங்களுக்குத் தெரியவருகிறது. நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் நடப்பதையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். நாங்கள் விரும்புவதும் அதுதான்.

உலக சக்திகளின் இன்றைய வலிமை நிலைகள் காரணமாக, இடதுசாரி சக்திகளைத் துண்டாடுவது ஒரு மூர்க்கத்தனமான பாதிப்புகளுக்கு இட்டுச் சென்றுவிடக்கூடும். ஒரு நாட்டின் (இராக்) அரசைத் தகர்த்த ஒரு உலகமகா ஆதிக்க சக்தி, இப்போது இன்னொரு நாட்டையும் (ஈரான்) தகர்ப்பதற்குத் தயாராகி வருவதைப் பார்க்கிறோம். எனவே, வேறுபாட்டிற்கான அடிப்படைகள் இனியும் இல்லை என்ற நிலையில், இது பிரிந்து நிற்பதற்கான தருணம் அல்ல.

- இக்கடிதத்தில் கையெழுத்திட்டிருப்போர்:

நோம் சோம்ஸ்கி
(நூலாசிரியர்: `தோல்வியடைந்த அரசுகள்- தவறான அதிகாரமும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும்')தாரிக் அலி(நூலாசிரியர்: `கரீபிய கொள்ளைக்காரர்கள்', ஆசிரியர்: `நியூ லெஃப்ட் ரிவ்யூ')

ஹோவர்ட் ஜின்
(நூலாசிரியர்: `அரசாங்களால் அடக்க முடியாத சக்தி')

சூசன் ஜார்ஜ்
(நூலாசிரியர்: `மற்றொரு உலகம் சாத்தியமே', இணையாசிரியர்: `எதிரியுடன் யுத்தம்- குவாண்டா நாமோவுக்கு ஒரு பிரிட்டிஷ் முஸ்லிமின் பயணம்', முன்னாள் ஆசிரியர்: `கார்டியன்')

வால்டன் பெல்லோ
(நூலாசிரியர்: `ஆதிக்கக் குழப்பங்கள் - அமெரிக்க சாம்ராஜ்யத்தின் தகர்வு')

மகமூத் மம்தானி
(நூலாசிரியர்: `குட் முஸ்லிம், பேட் முஸ்லிம்: அமெரிக்கா', `பனிப் போரும் பயங்கரவாத வேர்களும்')

அகீல் பில்கிரானி
(நூலாசிரியர்: `அரசியலும் அடையாளத்தின் தார்மீக மனநிலையும்')

ரிச்சர்ட் ஃபால்க்
(நூலாசிரியர்: `யுத்தத்தின் விலை - சர்வதேச சட்டமும் ஐ.நா. அமைப்பும்', `இராக்குப்பின் உலகம்')

ஜீன் ப்ரிக்மான்ட்
(நூலாசிரியர்: `மானுட ஏகாதிபத்தியம் - யுத்த விற்பனைக்காக மனித உரிமைகளை பயன்படுத்துதல்')

மைக்கேல் ஆல்பர்ட்
(நூலாசிரியர்: `பாரகான்- முதலாளித்துவத்திற்கு பின் வாழ்க்கை', ஆசிரியர்: `இசட்-நெட்'

ஸ்டீபன் ஷாலோம்
(நூலாசிரியர்: `ஏகாதிபத்திய புளுகுகள் - பனிப்போருக்குப் பிந்தைய அமெரிக்கத் தலையீடுகளை நியாயப்படுத்துதல்')

சார்லஸ் டெர்பர்
(நூலாசிரியர்: `லாபத்திற்கு முன் மக்கள் - பயங்கரவாத யுகத்தில் புதிய உலகமயமாக்கல்')

விஜய் பிரசாத்
(நூலாசிரியர்: `இருளடைந்த நாடுகள் - மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் வரலாறு')

தமிழில்: அ.குமரேசன்

Sunday, 18 November 2007

விவாதமின்றி ஒரு இலக்கிய விருது விழா!

“மொழி என்பது அடிப்படையிலேயே தொடர்பு சாதனம்தான். அது மக்கiளை இணைக்க வேண்டுமேயல்லாமல் பிரிக்கக் கூடாது.” - எழுத்தாளர் சிவசங்கரி சொன்ன அருமையான கருத்து இது. சென்னையில் நவ.9 அன்று நடந்த ‘நல்லி - திசை எட்டும்’ மொழிபெயர்ப்பு விருது வழங்கு விழாவில் வாழ்த்திப் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளுக்குக் கொண்டுசென்ற ஐந்து பேர், பிற மொழிப் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவந்த ஐந்து பேர் என பத்து மொழிபெயர்ப்பாளர்களுக்கு ரூ.10,000 வீதம் பணமும், பேனா முனையும் பாரதி முகமும் இணைந்த நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன. படைப்பாளிகளே கூடப் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாத சூழலில் மொழிபெயர்ப்பாளர்கள் இவ்வாறு கவுரவிக்கப்பட்டது நிச்சயமாக மாறுபட்ட நிகழ்ச்சிதான். சிவசங்கரி கூறியது போல், இந்தியாவிலேயே ஒரு அரிதான நிகழ்வுதான்.

பிற மொழி இலக்கியங்களைத் தமிழில் கொண்டுவருவதற்கென்றே ஒரு காலாண்டிதழ் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதுதான் ‘திசை எட்டும்.’ மொழிபெயர்ப்புப்பணிக்காக சாகித்ய அகடமி விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவரான குறிஞ்சி வேலன் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள ஏடு அது. பட்டாடைகளுக்கான ‘நல்லி’ நிறுவனமும் ‘திசை எட்டும்’ ஏடும் இணைந்து இந்த விருதுகளை வழங்குகின்றன.

“இந்த விருதுகள் துவங்கி நான்காண்டுகள் ஆகின்றன. முதலில் ஒருவருக்குத்தான் விருது வழங்கப்பட்டது. இப்போது பத்துப் பேருக்கு வழங்க நல்லி குப்புசாமி செட்டியார் முன்வந்திருக்கிறார்,” எனத் தெரிவித்தார் குறிஞ்சி வேலன்

குப்புசாமி செட்டியார் பேசுகையில், “விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் மக்கள் ஆர்வமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிற பொறுப்பு நம்மிடம் இருக்கிறது,” என்றார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழகக் காவல் துறைத் தலைவர் பொ. இராஜேந்திரன் கொஞ்சம் நகைச்சுவையாகப் பேசிவிட்டுப் போனார். ஆர். நடராஜன் தமிழில் எழுதி, ஸ்டான்லி மலையாளத்தில் மொழிபெயர்த்த ‘வன நாயகம்’ நூல் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த மூல ஆசிரியர்களும், வெளியீட்டாளர்களும் கவுரவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் வேறு சில மாறுபட்ட அனுபவங்களும் கிடைத்தன. பங்கேற்ற அனைவருக்கும் அருமையான சாப்பாடு வழங்கப்பட்டது! ‘உறவுப் பாலம்’ இலக்கியமும் இலக்கியவாதிகளும் சம்பந்தப்பட்ட இவ்விழாவில், சென்னையில் வழக்கமாக இலக்கிய நிகழ்ச்சிகள் என்றால் கண்டிப்பாகக் காணக்கூடிய படைப்பாளிகளையோ, வாசகர்களையோ காண முடியவில்லை. இலக்கிய விவாதங்களையும் கேட்க முடியவில்லை. மாறாக, சபாக்களில் கர்னாடக சங்கீத நிகழ்ச்சிகளுக்கு வரும் கூட்டமாகவே பெரும்பாலும் காணப்பட்டது. விருது நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் பாடகர் சுதா ரகுநாதன் குழுவினரின் கச்சேரி நடைபெற்றது ஒரு காரணமாக இருக்குமோ?

தேர்வு பெற்ற நூல்கள் பற்றி ஒரு வரிக் குறிப்பு மட்டுமே சொல்லப்பட, புரவலர் புகழ்பாடுதல் சற்று அதிகமாக இருந்தது. அன்றைக்கு நல்லியாரின் பிறந்த நாளாகவும் அமைந்துவிட, நியூ-உட்லேண்ட்ஸ் ஓட்டல் நிர்வாகம் வழங்கிய பெரிய கேக் ஒன்றை அவர் வெட்ட, புகழ்ச்சி மேலும் தூக்கலாகியது. இனி ஆண்டுதோறும் செட்டியாரின் பிறந்த நாளை மொழிபெயர்ப்பு இலக்கிய நாளாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் சிவசங்கரி.

இப்படிப் பணம் படைத்த புரவலர்களைச் சார்ந்தே புலவர் கூட்டம் இருக்க வேண்டும் என்பதே தலையெழுத்தா என்ற கேள்வியும், இன்றைய சூழலில் இந்த வகையிலாவது இலக்கிய வாதிகளுக்கு கவுரவமும் நிதியும் கிடைக்கிறதே என்ற எண்ணமும் சேர்ந்து எழுந்தன.


விருது பெற்றவர்கள்:

தமிழிலிருந்து: டி.டி.இராமகிருஷ்ணன் (மலையாளத்தில், ஷோபா சக்தியின் `ம்’), மந்திரிப்ரகட சேஷாபாய் ( தெலுங்கில், சிவசங்கரியின் `நான் நானாக’), நவநீத் மத்ராசி (குஜராத்தியில், கு.சின்னப்ப பாரதியின் `சங்கம்’), வெ.பத்மாவதி (இந்தியில், `தமிழ்ச் சிறுகதைகள் நூறு’), பி.ராஜ்ஜா (ஆங்கிலத்தில், சுப்ரபாரதி மணியனின் `சாயத்திரை’). பிறமொழிகளிலிருந்து தமிழில்: ச.சரவணன் (ஆங்கிலம், டயன்அக்கர்மெனின் `காதல் வரலாறு’), நிர்மால்யா (மலையாளம், கோவிலனின் `தட்டகம்’), இறையடியான் (கன்னடம், `வியாசரராயபல்லாள போராட்டம்’), சாந்தாதத் (தெலுங்கு, மாலதி செந்தூரின் `இதய விழிகள்’), புவனாநடராஜன் (வங்காளி, ஆஷாபூர்ணா தேவியின் `முதல் சபதம்’).
உண்மையை மறைக்கும் ஊடக நந்திகள்

அது ஒரு சிறிய அரங்கம். மேடையில் நிறுத்தப்பட்டுள்ளது ஒரு சிறிய வெண்திரை. அன்றைய விவாதப் பொருள்களுக்கான இரண்டு மூன்று ஆவணக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. அவற்றில் ஒரு படம் இவ்வாண்டு மார்ச் மாதம் மேற்கு வங்கத்தின் நந்திகிராமத்தில் நடந்த சம்பவங்கள் பற்றியது. முழுக்க முழுக்க ஒரு மனிதநேய விரோதச் செயல் நிகழ்த்தப்பட்டது போலவும், தங்களது நிலங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போராடிய அப்பாவி கிராம மக்கள் மீது கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது போலவும், மற்ற இடங்களில் அப்படி நடந்தால் கொந்தளிக்கிற மார்க்சிஸ்ட்டுகள் தாங்கள் ஆளும் மாநிலத்தில் மட்டும் அப்பட்டமாக அதே செயலைச் செய்வது போலவும் சித்தரித்த அந்தக் குறும்படத்தைத் தயாரித்தது (வேறு யார்) ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சித் தோழர் ஒருவர், திரையிடல் முடிந்ததும் நடந்த விவாதத்தில் பங்கேற்று, உண்மையில் நடந்தது என்ன என்று விளக்குகிறார். இடது முன்னணி அரசின் விளக்கத்தையோ, கம்யூனிஸ்ட்டுகளின் நிலைபாட்டையோ கேட்காமல் ஒரு தரப்பாக மட்டும் பதிவு செய்திருப்பது நடுநிலையானதுதானா என்று கேள்வி எழுப்புகிறார். அரசாங்கத்தின் கண்காணிப்பையும் இடது சாரிக் கட்சிகளின் அடிமட்டத் தொடர்புளையும் மீறி, மம்தா பானர்ஜி கட்சி, வலதுகோடி பாஜக, இடது கோடி மாவோயிஸ்ட்டுகள் முதலியோர் அங்கே அவ்வளவு விரிவாகக் களம் அமைக்க முடிந்தது எப்படி, அரசு நிர்வாகத்தையே அப்பகுதியில் முடக்குகிற அளவுக்கு அவர்கள் சேர்ந்தது எப்படி, ஜனநாயகத்தைப் புதைக்கிற வகையில் மறைந்திருந்து தாக்குவதற்கான பதுங்கு குழிகள் தோண்டப்பட்டது எப்படி, தேசத்தோடு அந்த மக்களைத் தொடர்பறுக்கும் விதத்தில் சாலைகளும் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது எப்படி - என்பதையெல்லாம் கட்சி முனைப்புடன் ஆராய்கிறது என்றும் அவர் சொன்னார். பார்வையாளர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டார்களோ, இல்லையோ அமைதியாகக் கேட்டுக் கொண்டார்கள்.அந்த இடத்தில் அப்படியொரு தோழர் இருந்ததால், அவரைப்போன்றவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிற ஒரு அமைப்பு அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்ததால், திரை ஊடகத்தின் ஊடாக ஒரு “தொண்டு” நிறுவனம் செய்ய முயன்ற மார்க்சிய எதிர்ப்புக் கருத்து ஊடுருவல் அங்கே அந்த அளவுக்குத் தடுக்கப்பட்டது. அந்தப்படம் திரையிடப்படக்கூடிய வேறு இடங்களில்? அப்படி வேறு இடங்களுக்குச் செல்கையில் அங்கே மார்க்சிஸ்ட்டுகள் வராமல் பார்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இதுவாவது இப்படிப்பட்ட குறும்படங்களில் ஆர்வமுள்ள ஒரு குறுங்கூட்டம் கலந்து கொண்ட நிகழ்ச்சி. பெரும்பகுதி மக்களைச் சென்றடையும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்ற பெரும் ஊடகங்கள் என்ன செய்கின்றன? அவைகளுக்குள் கடுமையான வர்த்தகப் மோதல்கள். ஒன்றையொன்று போட்டியில் விஞ்சுவதற்காக விலைக் குறைப்பு, கவர்ச்சிப்படங்கள், இலவசங்கள் என என்னென்னவோ உத்திகள். பொதுவாக ஊடகச் சுதந்திரம் பற்றிப் பேசினாலும் எதிராளி ஊடகம் தாக்குப் பிடிக்காமல் உதிர்ந்து போகாதா என்ற ஏக்கங்கள். இவ்வளவு போட்டி இருந்தாலும் ஒரு அம்சத்தில் அவைகளுக்குள் ஒற்றுமை. இடதுசாரிகளை - குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியை - மக்களிடமிருந்து தனிமைப்படுத்த முயல்வதில் ஒற்றுமை. பேசி வைத்துக் கொண்டு ஏற்படுத்திக் கொண்டது அல்ல என்றாலும், சிந்தனை அடிப்படையில், கோட்பாடு அடிப்படையில் - பச்சையாகச் சொல்வதானால் வர்க்க அடிப்படையில் - ஏற்பட்ட ஒற்றுமை அது.

நந்திகிராம் பிரச்சனை இவர்களது நோக்கத்திற்குத் தோதாகக் கிடைத்தது - வெறும் வாயை மென்றவர்களுக்கு பான்பராக் கிடைத்தது போல. மார்ச் மாதத்திலிருந்து எப்படியெல்லாம் அந்தப் பிரச்சனையை வெளிப்படுத்தி வருகிறார்கள் சொல்ல ஆரம்பித்தால் அவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியாது. இத்தகைய வெளிப்பாடுகளில், நந்திகிராம் மக்களின் வாழ்க்கை, வெளியேறியவர்கள் மீண்டும் ஊர் திரும்புதல் என்ற அக்கறையை விட, பிரச்சனையைக் கையாள்வதில் இடது முன்னணி அரசு தோல்வியடைந்துவிட்டது என்று வாசகர்கள்/நேயர்கள் மனங்களில் வார்க்க வேண்டும் என்ற ஆசையே விஞ்சி நிற்கிறது. மார்க்சிஸ்ட்டுகள்தான் தொடரும் வன்முறைக்குக் காரணம் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்ற வக்கிரமும், அதன் மூலம் கட்சியை பலவீனப்படுத்துகிற குரூர இச்சையும் அந்த ஆசையில் கலந்திருக்கின்றன.

அதனால்தான், மேதா பட்கர்களையும், அபர்ணா சென்களையும் பெரிதாக முன்னிலைப்படுத்துகிற இவ்வூடகங்கள் புத்ததேவ், பிமன்பாசு விளக்கங்களை இருட்டடிக்கின்றன. மேற்கு வங்க ஆளுநர் கோபால் காந்தியின் அத்து மீறலை, நியாய ஆவேசம் போல் காட்டுகின்றன. பிரகாஷ் காரத் சொல்வதை முக்கியத்துவமின்றி வெளியிடுகின்றன.

ஆங்கில ஊடகங்களும் வட மாநில ஊடகங்களும் மட்டுமல்ல, தமிழ்கூறு நல்லுலக ஊடகங்களும் இதில் விதிவிலக்கல்ல. சம்பந்தமே இல்லாமல் டாட்டா கார் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து கிராம மக்கள் போராடி வருவதாக, சிங்கூருக்கும் நந்திகிராமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது சூரியச் செய்தி நிறுவனம். (இடது சாரிகள் ஆதரவோடுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமையப் போகிறது என்பது தெரிய வந்த போது கம்யூனிஸ்ட்டுகள் இந்த அரசை “பிளாக் மெயில்” செய்வார்களா என்று திரும்பத்திரும்ப ஒளிபரப்பி தொலைக்காட்சி நிறுவனம் இது.)

தலைவர்கள் கருத்துக் கூறாவிட்டாலும் அவர்களால் நடத்தப்படுகிற ஒரு நாளேட்டின் "தலையங்க எழுத்தாளர்" இடது சாரிகளுக்கு எதிரான பகைமைக் கருத்தைப் பரப்பிடத் தமிழில் ஓசை எழுப்புகிறார். பாஜக, திரிணமூல் காங்கிரஸ், நக்சலைட் கூட்டணியின் சூழ்ச்சியை அடையாளம் காட்ட மறுத்துவிட்டு, புத்ததேவின் பிடிவாதத்தால்தான் நந்திகிராம் விவகாரம் தொடர்கிறது என்று மணியடிக்கிறது ஒரு தினசரி. அறிவுஜீவிகளால் அறிவுஜீவிகளுக்காக நடத்தப்படுகிற அறிவுஜீவி இதழ்களும் தம் பங்கிற்கு நந்திகிராம் நடப்புகள் குறித்துத் தமது வாசகர்களைக் குழப்புகின்றன.

இப்படியாகப்பட்ட ஊடகப் பெருவல்லாளர்களின் திட்டமிட்ட மறதிக்கு ஒரு எடுத்துக்காட்டுதான், “நந்திகிராம வன்முறைகளில் மாவோயிஸ்ட்டுகளுக்குப் பங்கிருக்கிறது,” என்று - ஒரு மார்க்சிஸ்ட் தலைவர் அல்ல - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. சீனிவாசன் சொல்லியிருப்பதை சொல்லாமல் மறைத்தது. எனக்குத் தெரிந்து ஒரே ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சிதான் அதை ஒரு வரியளவாவது சொன்னது. மேற்கு வங்கம் சென்றுள் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரி “நக்சலைட்டுகளின் பிடியில் நந்திகிராம் வட்டாரம் சிக்கியிருக்கிறது,” என்று கூறியிருப்பதையும் பெரும்பாலான ஊடகங்கள் பின்பக்கங்களுக்கும், தொலைக்காட்சிச் செய்தியின் அடிவரி ஓட்டத்திற்கும் தள்ளிவிட்டன.

அப்பாவி மக்களை அச்சுறுத்தும் அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் அதிரடிப் புரட்சிக்காரர்கள் கால் ஊன்ற உதவுவது தங்களுடைய பதவி தாக அரசியலுக்கு பயன்படும் என்று மம்தா வகையறாக்கள் கருதக்கூடும். ஆனால் அரசியல் புற்றுநோயை வளர விடுவதற்கான விலையை அவர்களே கூட கொடுக்க நேரிடும். அதன் சுமையும் வலியும் மக்கள் மீது தான் வந்து விழும். அப்போது - அந்தச் செய்தியையும் இதே ஊடகங்கள்தான் சொல்ல வேண்டியிருக்கும். அப்போதாவது உண்மையை சொல்வார்களா அல்லது, இந்த நிலைமை வந்ததற்கு சிபிஎம்-தான் காரணம் என்று கதைகட்டிக் கொண்டிருப்பார்களா?

Tuesday, 13 November 2007

பலம் பெறட்டும் பர்மா தேக்கு
அ. குமரேசன்

காவிக் கூட்டம் என்றால் நம் நாட்டில் மதவெறி சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கடலுக்கடியில் பாலம் என்றெல்லாம் கடவுளின் பெயரால் கலவரம் செய்துகொண்டிருக்கிற கும்பல் நினைவுக்கு வருகிறது. பக்கத்து நாடான பர்மாவில் ஜனநாயகக் காற்று வீசச் செய்வதற்காகவும் அதற்குத் தடையாக இருக்கும் ராணுவ ஆட்சியை அகற்றுவதற்காகவும் காவியங்கித் துறவிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே காவிக் கலவரம், அங்கே காவிக் கிளர்ச்சி!

புத்த துறவிகளுக்கு அன்னம் படைப்பது என்பது பர்மாவில் பெரியதொரு கவுரவம், மன நிம்மதி. அந்த கவுரவத்தையும் நிம்மதியையும் ராணுவத்தினருக்கோ அவர்களது குடும்பத்தினருக்கோ வழங்க மறுக்கிறார்கள் பர்மா துறவிகள். சமுதாயத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு போராட்ட வடிவம் இது. கடந்த செப்டம்பரில் மற்றவர்களோடு சேர்ந்து துறவிகளும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என்று அணிவகுத்தனர்; மற்றவர்களோடு சேர்த்து துறவிகள் மீதும் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது; இது உலகத்தின் கவனத்தை பர்மாவின் மீது திருப்பியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் மிகச் சிலர்தான் உயிரிழந்ததாக ராணுவ அரசு கூறுகிறது. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டதாகவும், அதில் பாதிப்பேர் துறவிகள் என்றும் மக்கள் கூறுகிறார்கள்.ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ள அந்த நாட்டில், கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை உலகம் தெரிந்து கொள்வதே ஒரு போராட்டம்தான். தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் நாம் காணும் போராட்டக் காட்சிகள், அங்கு செயல்படும் இளம் மின்னணு ஊடக ஆர்வலர்கள் அரசின் கெடுபிடிகளை மீறி தங்களது கேமரா மொபைல் போன், ஹேண்டிகேம் போன்றவற்றில் பதிவு செய்து இணையத் தளம் வழியாகப் போட்டுவிடுகிற படங்கள்தான். நவீன தொழில்நுட்ப வழி சாத்தியங்களை ராணுவ அரசால் தடுக்க முடியவில்லை.

‘பர்மா’ என்ற பெயரையே இன்று பொது அறிவுப் புத்தகங்களில் ‘மியான்மர்’ என்ற சொல்லையடுத்து அடைப்புக் குறிகளுக்குள்தான் காண முடியும். பெரும்பகுதி மக்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல் நாட்டின் பெயரை மாற்றியது ‘ஜூன்டா’ எனப்படும் ராணுவக் கும்பல் சர்வாதிகார அரசு. பெயர் மாற்றுவதிலேயே இந்தச் சர்வாதிகாரம் என்றால், ஆட்சி முறையையே மாற்றுவதற்கான போராட்டத்தை அங்கீகரித்துவிடுவார்களா என்ன? அதற்காக அயராமல் போராடுகிற வீரப் பெண்மணி ஆங் சான் சூ குயி விடுதலைசெய்யப்பட வேண்டும் என்ற உலக சமுதாயத்தின் வேண்டுகோளை, துப்பாக்கி முனையிலிருந்து நாட்டையே விடுதலை செய்ய மறுக்கிற கும்பல் ஏற்றுக் கொண்டுவிடுமா என்ன?

வெள்ளை ஏகாதிபத்தியத்தால் அதன் காலனி நாடாக அடிமைப்படுத்தப்பட்டு, இந்தியாவின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டிருந்தது பர்மா. அதன் வற்றாத இயற்கை வளங்களை பிரிட்டிஷ் முதலாளிகள் வாரிச் சுருட்டினார்கள். விடுதலைப் போராட்ட இயக்கம் எரிமலையாய்க் கிளம்பியது. அதற்குத் தலைமை தாங்கி, முதலில் ஜப்பான் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் பின்னர் வஞ்சகமாக ஏமாற்றிய பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தும் போராடியவர் ஆங் சான். நேதாஜி போல், பர்மா விடுதலைப் படையை 1942ல் உருவாக்கியவர். பிரிட்டிஷ் அரசு அவரோடு விடுதலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் அது ஈடேறுவதைக் கண்ணாரக் காண்பதற்கு முன் அவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்ட 6 மாதங்கள் கழித்து, 1948 ஜனவரி 4ல் பர்மா விடுதலை பெற்றது. ஆனால் பர்மிய மக்களால் சுதந்திரக் காற்றை முழுமையாக சுவாசிக்க முடியவில்லை. ஒரு சுதந்திர நாட்டின் அரசுக்குக் கட்டுப்பட்ட பாதுகாப்புக் கருவியாக இருப்பதற்கு மாறாக, நாட்டையே தனக்குக் கட்டுப்பட்டதாக மாற்றியது பிரிட்டிஷ் வழி வந்த ராணுவம். அதிகார ருசி கண்டவராக 1962ல் பர்மா மக்களை சொந்த நாட்டு அடிமையாக்கினார் ஜெனரல் நே வின்.

ஆங் சானின் புதல்வியான சூ குயி மக்களைத் திரட்டி ஜனநாயகப் போராட்டத்தில் குதித்தார். அன்றைக்கும் அந்த எழுச்சிக்கு புத்த துறவிகள், ஆதரவாய் நின்றார்கள். துறவறம் என்பது “என்ன நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது” என கண்டுகொள்ளாமல் இருப்பதல்ல என்ற உணர்வுடன், போராட்டத்தில் பங்கேற்றார்கள். ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஜனநாயக மீட்புப் போராளிகளில், 600க்கும் மேற்பட்டோர் துறவிகள்.

1988ல் வங்கக் கடல் சுனாமி போல் தாக்கிய அந்தப் பேரெழுச்சியை எதிர்கொள்ள முடியாமல், ஆட்சியை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்திடம் ஒப்படைப்பதாக ராணுவ அரசு அறிவித்தது. 1990ல் பொதுத் தேர்தல் என்பதாக நடத்தப்பட்டது. ராணுவத்தின் திடீர்ச் சலுகைகள், மிரட்டல்கள் அத்தனையையும் மீறி மக்கள் சூ குயியின் தேசிய ஜனநாயக முன்னணி (என்.எல்.டி.) கட்சிக்கு மிகப் பெரும் வெற்றிவாகை சூட்டினர். அதிகாரப் பசி கொண்ட ஜெனரல் தான் வே தலைமையிலான ஜூன்டா குண்டாட்சி அந்தத் தேர்தல் செல்லாது என்று அறிவித்தது. நாடெங்கும் ஜனநாயக இயக்கச் செயல்வீரர்கள் கைது செய்யப்பட்டனர். சூ குயி சிறையிலடைக்கப்பட்டார். உலகத்தின் கடும் கண்டனங்கள் எழுந்த சூழலில் 1995ல் அவரை வெளியே விட்ட ஜூன்டா, அவர் ஆட்சிக்கு எதிராகக் கலகத்தைத் தூண்டுவதாகக் கூறி, வீட்டுக் காவலில் வைத்தது.

நம் நாட்டில் அடிக்கடி தேர்தல் வரும்போது, அதனை ஜனநாயகத்தில் மக்கள் மறுதேர்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதாமல், “நிலையான ஆட்சி” என்பதைக் கவர்ச்சிகரமான மாற்றாக பாஜக வகையறாக்களும் மேம்போக்கு ஊடகங்களும் பிரச்சாரம் செய்வதைக் காண்கிறோம். பர்மாவின் 45 ஆண்டு கால நிலையான ராணுவ ஆட்சி அந்த மக்களுக்கு வழங்கியது நிலையான வறுமையைத்தான். வலிமை மிக்க “பர்மாத் தேக்கு” விளையும் நாட்டில், மக்களின் வாழ்க்கை நிலை பட்டுப் போன முருங்கை மரமாய் பலவீனமாக்கப்பட்டிருக்கிறது. “தூர கிழக்கு நாடுகளின் அரிசிக் கலயம்” என்ற பெயர் பெற்ற நாட்டில் மக்கள் சோற்றுக்குத் தவிக்கும் நிலை. கரும்பு விளைச்சல் மிகுதியாக உள்ள நாட்டில் மக்களின் அனுபவம் கசப்பு மிக்கது. பெட்ரோலிய எண்ணை, இயற்கை வாயு ஆகியவற்றோடு, மரகதம், ரத்தினம் போன்ற மதிப்புமிக்க கனிமக் கற்களும் வளமாக உள்ள பர்மாவின் மக்கள், அவற்றின் ஆதாயத்தில் எந்தப் பங்கும் இல்லாதவர்களாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பர்மா மக்களின் போராட்டக் காட்சிகளைப் பார்க்கும்போது, புத்த பிக்குகளின் கால்களிலும், மக்களின் கால்களிலும் செருப்பில்லாததைக் கவனிக்க முடிகிறது. துறவிகளின் கால்களில் செருப்பு இல்லாததற்குக் காரணம் அவர்களது கோட்பாடு. பெரும்பாலான மக்களிடம் காலணிகள் இல்லாததற்குக் காரணம் ராணுவ ஆட்சியின் கேடு. உலகின் மிக ஏழ்மையான 10 நாடுகளின் பட்டியலில் பர்மா இடம் பிடித்திருக்கிறது. அதே நேரத்தில் ராணுவ ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அவர்ளோடு கூட்டு வைத்துள்ள முதலாளிகளும் சுகபோகத்தில் திளைக்கிறார்கள். நாட்டின் பெயரை மாற்றியது போல், தலைநகரம் யாங்கூன் என்பதையும் மாற்றி, நேபிடா என்ற புதிய தலைநகரத்தை உருவாக்கி, அதனை நவீனப்படுத்த கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தட்டிக்கேட்க எவருமில்லை என்ற அகங்காரத்தோடு சில மாதங்களுக்கு முன் - உலக வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகியவற்றின் கட்டளைப்படி - பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணை ஆகியவற்றின் விலைகளைக் கடுமையாக உயர்த்தியது ஜூன்டா. அதன் தொடர் விளைவாக அடிப்படைத் தேவைப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொட்டன. மக்களின் வாழ்க்கை மேலும் மோசமானது.

இந்தப் பின்னணியில்தான், விலை உயர்வு எதிர்ப்பாகத் துவங்கிய கிளர்ச்சி, ஆள்வோரைத் தட்டிக் கேட்க உரிமையுள்ள ஜனநாயகத்திற்கான போராட்டமாகப் பரிணமித்து வருகிறது.1988ம் ஆண்டுப் போராட்டத்தில் முக்கியப்பங்காற்றிய அன்றைய மாணவர் இயக்கத்திலிருந்து வந்தவர்கள், “88 மாணவர் தலைமுறை” என்ற அமைப்பை ஏற்படுத்தி அரசியல் சீர்திருத்தங்களுக்காகவும், பொருளாதாரக் கொள்கை மாற்றங்களுக்காகவும் கருத்துப் பிரச்சாரம் செய்தனர். சிறைகளில் வாடும் சுமார் 5 லட்சம் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கையெழுத்து இயக்கம் நடத்தினர். மக்களின் பெருமூச்சைப் புயலாக மாற்றும் வல்லமை இவர்களது பிரச்சாரத்திற்கு இருப்பதை உணர்ந்த அரசு, இதை வளரவிடக்கூடாது என்ற எண்ணத்துடன், ஜனநாயக இயக்கத்தின் ஒரு முன்னணித் தலைவராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் மிங் கோ நாய்ங் உட்பட, அமைப்பின் தலைவர்கள் பலரையும் கைது செய்து சிறையில் அடைத்தது.

தற்போதைக்கு போராட்டத்தை அரசு தனது அடாவடிகளால் அடக்கிவிட்டது போல் தோன்றுகிறது. ஆயினும், அக்கினிக் குஞ்சாக ஆவேசச் சுடர் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. மக்களோடு புத்த துறவிகளும் இணைந்து நிற்பது போராட்டத்திற்குப் புதிய வலிமை சேர்க்கிறது. ராணுவத்தால் மக்களைத் தாக்க முடியாத வகையில் ஒரு கேடயமாய்த் துறவிகள் அணிவகுக்கின்றனர். ராணுவம் துறவிகளையும் தாக்கத் துணிகிறபோது, மக்கள் கேடயமாகின்றனர்.

இதனிடையே, ஐ.நா. சிறப்புத் தூதராக இப்ராஹிம் கம்பாரி பர்மாவுக்கு வந்தார். ஆங் சாங் சூ குயியை விடுதலை செய்ய வேண்டும், ஜனநாயக முறையில் மக்கள் தங்களது அரசைத் தேர்ந்தெடுக்க வழிவிட வேண்டும், ஒடுக்கு முறைகளைக் கைவிட வேண்டும் என்ற வேண்டுகோள்களை அவர் முன்வைத்தார். ஜனநாயகத் தேர்தல் பற்றி உறுதியளிக்க மறுத்துவிட்ட ஜெனரல், சூ குயியை விடுதலை செய்ய வேண்டுமானால் அவர் மக்கள் போராடத் தூண்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்! தூதருக்கு ஜெனரல் அளித்த ஒரே சலுகை, சூ குயியைச் சந்திக்க அனுமதித்ததுதான்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்களும் பர்மாவின் ஜனநாயகம் பற்றி அக்கறை காட்டி வருகின்றன. நம் ஊரில் நகரப் பேருந்துகளின் கூட்ட நெருக்கடி பற்றியும் அதனால் அவதிப்படுபவர்கள் பற்றியும் அதிகமாகக் அலட்டிக் கொள்வது யாரென்று பார்த்தால் பிக் பாக்கெட் கில்லாடியாக இருப்பான்! அதைப் போல மேற்கத்திய அரசுகளின் உண்மையான அக்கறை, பர்மா மண்ணின் மரகதங்கள், தேக்கு, எரிவாயு உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கடத்திச் செல்வதுதான்.

இந்திய அரசின் நிலை என்ன? ஈராக் நாட்டிற்குள் அமெரிக்கா செய்து வரும் அட்டூழியங்கள் குறித்து, ஜார்ஜ் புஷ்-சுக்கு வலித்துவிடாமல் மென்மையாகக் கருத்துக் கூறியது போன்ற, இந்திய மக்கள் பெருமைப்பட முடியாத வழவழப்புதான் அரசின் நிலைபாடாக இருக்கிறது. இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் இடையே சுமார் 1600 கி.மீ. நீளத்திற்குப் பொதுவான எல்லை இருக்கிறது. பர்மாவுடன் ஒரு இயற்கை எரிவாயு ஒப்பந்தம் இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களின் சில தீவிரவாதக் குழுக்கள் பர்மாவைப் பதுங்கிடமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க ராணுவ அரசு ஒத்துழைக்காமல் போனால் என்ன செய்வது என்ற கோணத்திலும் இந்தியா வாய்மூடியிருப்பதாகக் கூறப்படுகிறது. சுயமரியாதையைச் சுருட்டிக் கொண்ட இந்த இழிவான மௌனத்தைக் கலைத்து, வலுவான குரலில் இந்திய அரசு பர்மா அடக்குமுறைகளைக் கண்டிக்க வேண்டும், ஜனநாயகப் போராட்டத்திற்குத் திட்டவட்டமாகத் தோள் தர வேண்டும்.

சூ குயி பர்மாவை விட்டு வெளியேறுவது, அவருக்கு இந்தியா போன்ற நாடுகள் அடைக்கலம் தருவது என்பது போன்ற “அரிய” யோசனைகளையும் சில மேற்கத்தியத் தரகர்கள் கூறிவருகிறார்கள். தமது மண்ணையும் மக்களையும் விட்டுப் புகலிடம் தேடி எங்கேயும் போகப் போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்துவிட்டார் அந்த 60 வயது வீராங்கனை.

இப்படிப்பட்ட உறுதிப்பாடுகளின் தாக்கத்தில், உலக சமுதாயத்தின் உணர்வார்ந்த ஒருமைப்பாட்டில் --- மரகதங்களையும் ரத்தினங்களையும் விட மதிப்பு வாய்ந்த உண்மையான சுதந்திரமும் ஜனநாயமும் அங்கே நிலை பெறட்டும். தேக்கு போல் பர்மிய மக்களின் போராட்டம் வலுப்பெறட்டும். இயற்கை எரிவாயுவாய் அவர்களது ஆவேசம் ராணுவ சர்வாதிகாரத்தைச் சுட்டெரிக்கட்டும்.

(‘மக்கள் களம்’ ஏட்டிற்காக எழுதப்பட்ட கட்டுரை. அதன் நவம்பர் இதழில் வெளியாகியுள்ளது)

Sunday, 11 November 2007

மனித சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படை மூளையின் வளர்ச்சி என்றால் அந்த மூளையின் வளர்ச்சிக்கு ஆதாரம் கைகள். இது பரிணாம வரலாறு. இந்த வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்களோ? இளம் தொழிலாளர்களின் விரல்கள் வெட்டுப்பட்ட கைகளைக் காணும்போது இந்தச் சிந்தனைதான் ஏற்படுகிறது.

தமிழகத்தின் முக்கியத் தொழிற்பேட்டை நகரங்களில் ஒன்று ஹோசூர். அதன் சிறு/குறு தொழிற்சாலைகளில் எந்திர இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள் அவர்கள். உலோகப் பாளங்களையும் தகடுகளையும் பல்வேறு பயன்பாட்டுப் பொருள்களாக மாற்றிய அவர்களது கைகள், நொடிப்பொழுது விபத்தில் எந்திரங்களின் பசிக்கு விரல்களைத் தின்னக் கொடுத்துவிட்டு இப்போது இதழ்கள் பறிக்கப்பட்ட பூக்களாய்க் காட்சியளிக்கின்றன.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திரை இயக்க முயற்சியின் மற்றுமொரு படைப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டக் குழுவினரின் முனைப்பில் வந்திருக்கும் “விரல்கள்” குறும்படம், அந்தத் தொழிலாளர்களின் விரல்கள் வெட்டப்பட்ட கதையைத் தேடிச் சொல்கிறது. தனிப்பட்ட சில தொழிலாளர்களின் வேதனை, தொழிற்சாலைகளின் நிலைமை ஆகியவற்றோடு மட்டும் நிறுத்தியிருந்தால் இது சாதாரணமானதொரு தகவல் தொகுப்பாகியிருக்கும். ஆனால் இந்தப்படம், இத்தகைய நிலைமைகளின் அரசியல் - சமூக - பொருளாதாரப் பின்னணிகளையும் நம் முன் வைக்கிறது. அதனால், இது ஒரு முக்கியமான ஆவணப்பதிவாகியிருக்கிறது.

கிராமங்களில் வேலைவாய்ப்பின்றி, நகரத்தில் வேலைகள் கொட்டிக் கிடப்பதாக நினைத்துக் கொண்டு, நன்றாகச் சம்பாதிக்க லாம், வசதியாக வாழலாம் என்ற கனவுகளோடு வந்த இளைஞர்கள் இவர்கள். வந்த இடத்தில் வேலை கிடைக்கிறது - ஆபத்தான, அற்பச் சம்பளத்துக்கான வேலைகள். இரும்பென்றும் எலும்பென்றும் பார்க்காத அந்த எந்திரங்களின் வாய்களுக்குள், இத்தொழிலாளர்களின் கைகள் அந்த எந்திரங்களின் நீண்ட கரங்களுக்குப் போட்டியாகச் சென்றுவரும் வேகம், படமாகப் பார்க்கிற நமக்கே பதைப்பை ஏற்படுத்துகிறது. இன்றைய அவுட்சோர்சிங் யுகத்தில், உள்நாட்டு ஏகபோக நிறுவனங்களும் அந்நியப் பன்னாட்டு நிறுவனங்களும் இப்படிப்பட்ட வேலைகளை இப்படிப்பட்ட சிறு/குறு நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் தள்ளிவிடுகின்றன. உலகம் முழுவதும் விற்பனைச் சந்தையைப் பிடித்துவைத்துள்ள அந்த நிறுவனங்களின் நிர்வாகங்களுடன், இந்த உள்ளூர்த் தொழிலாளர்கள் எவ்விதத் தொடர்புமற்றவர்களாக இழப்பீடுகளோ, உதவிகளோ பெற முடியாது.

மேற்படி பெரிய நிறுவனங்கள் இந்த சிறு/குறு தொழிலகங்களிடமிருந்து, தாங்கள் நிர்ணயித்த தரம் வருகிறதா என்று மட்டும்தான் பார்க்கின் றனவேயன்றி, தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றி கண்டுகொள்வதில்லை என்பதை எடுத்துக் கூறுகிறது இக்குறும்படம். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகத்தானே, சொந்த ஆலைகளில் இப்பொருள்களைத் தயார் செய்யாமல் “அவுட் சோர்சிங்” விடுவதே! அந்தப் பெரிய நிறுவனங்களின் விற்றுவரவு-லாபம் குறித்துக் கூறும் கணினி வரைபடங்களின் அம்புக்குறிகள், இப்படிப் பட்ட குரல் மறுக்கப்பட்ட தொழிலாளர்களின் மார்புகளில் பாய்ந்த அம்புகளாகவே தெரிகின்றன.

சிஐடியு செயலாளர் ஜி. சேகர் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர் கள் சுரண்டல் நிலைமைகளை எடுத்துக்கூறுகிறார்கள். முற்போக்கு இலக்கிய மேடைகளில் தாமே பாடல்கள் இயற்றிப் பாடவல்லவராக அறிமுகமான வையம்பட்டி முத்துசாமி, தாம் வேலை செய்த ஏற்றுமதி நிறுவனம் மூடப்பட்டதால், தற்போது ஒரு டீ கடை நடத்துகிறார். அவரது குரலில் ஒலிக்கும் பாடல் சோகத்தை இறக்குமதி செய்கிறது.

எது நடந்தாலும் கேட்க முடியாதவர்களாக, சில தொழில் வளாகங்களில் பெண்கள் கொத்தடிமைகள் போல் வைக்கப்பட்டுள்ள கொடுமையை, ஏற்கெனவே எழுத்தில் பதிவு செய்த ‘தீக்கதிர்’ நிருபர் முருகேசன் இதில் தமது குரலில் வெளிப்படுத்துகிறார்.

சில உரையாடல்களின் நீளத்தைச் சுருக்கி, சில பேட்டிகள் திரும்பத்திரும்ப வருவதைத் தவிர்த்திருந்தால் படம் மேலும் கச்சிதமாக அமையும்.

ஹோசூர் படப்பிடிப்பு தனியொரு ஊரின் பிரச்சனை அல்ல. இப்படிப்பட்ட தொழிற்சாலைகளும், ஆபத்தான சூழல்களும் நிறைந்த எல்லாப் பகுதிகளுக்குமான பொதுச் செய்தி இப்படத்தில் இருக்கிறது. பொது இடங்களில் இவ்வாறு விரல்களற்ற கைகளோடு சிலர் நம்மருகில் அமர்ந்திருக்கக்கூடும். அவர்களின் தோற்றத்தைப் பார்த்து சிலருக்குப் பரிதாபம் ஏற்படும்; சிலருக்கு அருவருப்பும் கூட ஏற்படும். உண்மையாக ஏற்பட வேண்டியது வெஞ்சினம். மாற்றத்தை விளைவிக்கும் அந்த வெஞ்சினத்தை விதைக்கும் படைப்பை வழங்கியிருக்கிறார்கள் தயாரித்து இயக்கியுள்ள நி. கோபால், ஆ. சுபாஷ், இரா. தமிழ்ச்செல்வம் ஆகியோர். படத்தொகுப்பாளர் அ. மார்கன், சில சிறப்புக் காட்சிகளையும் இணைத்து படத்திற்கு ஒரு ஆழம் சேர்த்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் இந்த விரல்கள் விரிய வேண்டும். படத்தில் வானை நோக்கி விரியும் பட்டுப் போன ஒரு மரத்தின் கிளைகள் அதைத்தான் வேண்டுகின்றன.

Thursday, 8 November 2007

“உன் பெயரே
உலகில் இல்லாமல்
ஒழித்துவிடுவேன்.”
-கொக்கரித்தான் கிருஷ்ணன்.
“அட போடா!
இனிமேல் ஒவ்வொரு ஆண்டும்
உலகம் என்னை நினைக்கும்.
நீ என்னை
ஏன் கொன்றாய்
என்பதையும் விவாதிக்கும்.”
-சிரித்தான் நரகாசுரன்.

Sunday, 4 November 2007

கவிதை

முணகலல்ல முழக்கம்

வீணாகக் கூச்சல் போடுகிறீர்கள்
நாங்கள் நாங்களாக
எங்களின் தர்மப்படி
நடந்துகொள்கிறோம்
நீங்கள் நீங்களாக
உங்களின் தர்மப்படி
நடந்துகொள்ளத் தவறுவதால்.

உங்களின் தர்மம்
நாங்கள் அசுத்தமாகாதிருக்க
ஊர் கூட்டுவது;
நீங்களோ
நாங்கள் ஆதிக்கமாகாதிருக்க
ஊரையே கூட்டினீர்கள்.
அதர்மமில்லையா இது?

ஆதியற்ற எங்களின் வேதத்திற்கு
அந்தம் வைக்க நீங்கள் முயலும்போது
வேதாந்திகளை அனுப்புகிறோம்.
மறுபடியும் மறுபடியும் நாங்கள்
போதித்து வருகிறோம்;
மறுபடியும் மறுபடியும் நீங்கள்
போதனையை மீறி வருகிறீர்கள்.

அன்று உம் பாட்டனின்
கட்டை விரலைக் கேட்டு வாங்கினோம்
அப்புறம் உம் பூட்டனின்
கண்ணைப் பறித்துத் தர வைத்தோம்
இடையில் தில்லையில் உம் மாமனின்
உடலையே ஜோதியில் எரியச் செய்தோம்...

முணகல் என்ன அங்கே?
முணகல் அல்ல
முழக்கம் என்றா சொல்கிறீர்கள்?
மந்திரங்கள் மட்டுமே
கேட்கும் எம் செவிகளில்
முழக்கங்கள் நுழைவதில்லை.
நடப்பதெல்லாம் நன்றாகவே
நடப்பதாகச் சொன்ன
வரிகளை மட்டும் பார்த்துவிட்டு
பரவசத்தில் முழ்கிக் கிடந்தீர்கள்.
வரம்பு மீறுவோர்க்குத்
தண்டனை என்னவென்று
சொல்லிவைத்த பக்கங்களை
படிக்காமல் விட்டது உங்கள் தப்பு.
எங்கே அதையெல்லாம் படிக்கவிட்டீர்கள்
என்று மறுபடி முழங்குகிறீர்கள்.
படித்தால் உமக்குப் புரியாதென்றுதான்
செயல் முறை விளக்கமாக

கட்டை விரலை
கேட்டு வாங்கினோம்
கண்ணைப் பறித்து
அப்ப வைத்தோம்
உடலை ஜோதியில்
கலக்க விட்டோம்
இன்னும் நீங்கள்
பேசுவீர்கள் என்றால்
நாக்கும் தலையும்
கேட்க மாட்டோமா?

மறுபடியும் என்ன முணகல்...
சரி சரி மறுபடியும் என்ன முழக்கம்?

“ஏகலைவன் வாரிசுகள்
ஏகலைவனைப் போல் இருப்போம்
ஏகலைவனாகவே இருக்க மாட்டோம்
கண்ணப்பன் வாரிசுகள்
கண்ணப்பனைப் போல் இருப்போம்
கண்ணப்பனாகவே இருக்கமாட்டோம்
நந்தன் வாரிசுகள்
நந்தனைப் போல் இருப்போம்
நந்தனாகவே இருக்கமாட்டோம்...”

புரிகிறது... மெய்யான
பாரத யுத்தத்திற்கு
படை திரட்டத்
தயாராகிவிட்டீர்கள் நீங்கள்.
பகவத் கீதைக்கு
பதவுரை சொல்ல
பார்த்தசாரதியைத்
தேடுகிறோம் நாங்கள்.

-அ. குமரேசன்

Friday, 26 October 2007


நாடகக் களம்

காலக்கனவு

ரலாறு எத்தனையோ அடக்குமுறைகளைத் தன்னுள் பதிந்து வந்திருக்கிறது. அவற்றில் மிக மோசமான அடக்குமுறை பெண்களை ஆணுக்கு சுகமும் சோறும் தருகிற எந்திரங்களாக ஆக்கியதுதான். இதன் இன்னொரு பக்கமாக, பெண்களின் வரலாற்றுப் பங்களிப்பும் அடக்கப் பட்டது. வரலாற்று நாயகன்கள் மட்டுமே போற்றப்படுகிறார்கள். நாயகிகள் போற்றப்படுவதில்லை.

வரலாறு, அடக்குமுறைகளுக்கு எதிரான எழுச்சிகளை யும் தன்னுள் பதிந்து வந்திருக்கிறது. பெண்ணுரிமை இயக் கம் அப்படிப்பட்ட எழுச்சி வரலாறுதான். மறைக்கப்பட்ட அல்லது பெரிதும் நினைவுகூரப்படாத அந்த வரலாற்றின் சில பக்கங்களைப் புரட்டிப்பார்க்கிறது, ‘மரப்பாச்சி’ குழுவி னரின் புதிய “காலக்கனவு” ஆவண நாடகம். “பெண்ணிய நோக்கில் நமது நவீன கால வரலாற்றை ஆராயும் ஒரு முயற்சி. முக்கியமான வரலாற்றுத் தருணங்களையும் நிகழ்வு களையும் பெண்கள் எவ்வாறு உணர்ந்தார்கள், அத்தகைய உணர்தலானது அவர்களை எவ்விதத்தில் பாதித்தது என் பதை அவர்களின் வார்த்தைகளினூடாக அரங்கேற்றும் ஒரு நிகழ்வு இது,” என்று அறிமுகக் குறிப்பில் கூறப்பட்டிருக் கிறது. பெண்விடுதலைச் சிந்தனைகள் பளிச்செனத் தெரி யும் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான வரலாற்றுச் சங்கிலியின் கண்ணிகள் இதில் கோர்க்கப்பட்டுள்ளன.

பாரதிக்கும் முன்பே, பெண்விடுதலைக் குரல் பெண் களிடமிருந்து ஒலிக்கத் தொடங்கிவிட்டதைக் கூறுவதிலி ருந்து நாடகம் தொடங்குகிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மேல்சாதிப் பெண்களைப் போல் ஆடை அணிவதற்காக நடத்திய போராட்டம், ஒதுக்கப்பட்ட பெண் களுக்கு கிறி°துவம் தந்த தன்னம்பிக்கை, தேவதாசி முறையிலிருந்து பெண்கள் மீட்கப்பட்டது... என அன்றைய நிகழ்வுகள் நினைவூட்டப்படுகின்றன. பெண்ணின் சுய அடையாளத்திற்காக எழுந்து நின்ற மூதலூர் ராமாமிருதம் வெளிப்படுத்திய துணிச்சலான கருத்துக்கள், பெண் கல்விக்காகப் போராடிய முத்துலட்சுமி, இஸ்லாமிய மதத்திற் குள் பெண்ணின் இடத்திற்காக எழுதிய சித்தி ஜூனைதா பேகம் என்று பலப்பல தகவல்கள் வருகின்றன. பெரியாரின் இயக்கம் தொடங்கியதும் இந்தப் பெண்களுக்கு ஒரு வலுவான தளம் கிடைக்கிறது. “வைதீகமாக இருந்த திருமணத்தை சமுக ஒப்பந்தமாக்கியது சுயமரியாதை இயக்கம்,” என்ற கருத்து பதிவு செய்யப்படுகிறது.

“வரலாற்றின் தொடர்ச்சி எப்படி அறுபட்டது,” என கேள்வி எழுப்பும் இந்த நாடகம், அறுபட்ட அத்தியாயங்களை தேடிப்படிக்கத் தூண்டுவதில் பெரும் வெற்றி பெறு கிறது. பெண்ணடிமைத் தனத்தை ஏதோ ஒரு வகையில் அனுமதித்துக் கொண்டிருக்கும் ஆண்களின் மனசாட்சி யில் காத்திரமான உறுத்தலை ஏற்படுத்துகிறது. இதை மாற்றியே தீர்வது என்று களம் இறங்குவோர் நெஞ்சங்களில் மகத்தான மரபு பற்றிய பெருமிதத்தையும், அதன் தொடர்ச்சி பற்றிய நம்பிக்கையையும் விதைக்கிறது.

“இடதுசாரி செயல்பாடுகளும், சுயமரியாதை இயக்கமும் பெண்களுக்கு உருவாக்கியளித்த வெளிகள், வாய்ப்பு கள்...” என அறிமுகத்தின்போது சொல்லப்படுகிறது. ஆனால், இடதுசாரி சிந்தனைகளோடு தங்களைப் பிணைத் துக் கொண்ட பெண் போராளிகள் பற்றி மேலோட்டமாக, அவர்களது பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. விடுதலைப் போராட்ட காலத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதால் நாடக நடிகர் விஸ்வநாத தாஸ் மற்ற நடிகைகளால் புறக்கணிக்கப்பட்டபோது, ஊருக்கு அஞ்சாமல் அவரோடு சேர்ந்து மேடை ஏறி நடித்த கே.பி.ஜானகி அம்மாள் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவம் கூடவா சொல்வதற்குக் கிடைக்கவில்லை? சிறையில் அடைக்கப்பட்ட லட்சுமி அம்மாள் தன் மகளின் முகத்தை கூட காண முடியாதவராக செத்துப்போய், புதைத்தார்களா, எரித்தார்களா என்பது கூட தெரியாமல் உடல் மறைக்கப்பட்டதே - அவரது போராட்டத்திலிருந்து சின்னக் குறிப்பு கூடவா கூறமுடியவில்லை?

“இடதுசாரிகள் இதில் பெரிய அளவுக்கு எதுவும் செய்துவிட வில்லை,” என்று ஒரு விமர்சனம் வேறு போகிற போக்கில் வீசப்படுகிறது. வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும், சுதந்திர இந்தியாவின் தொடக்கக் கட்டத்திலும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமறைவு இயக்கம் நடத்த வேண்டிய கட்டாயச் சூழல் நிலவியது. வர்க்கப் போராட்டம் என்ற அடிப்படையான போராட்டத்தைக் கையில் எடுத்ததால் ஆளும் வர்க்கம் உருவாக்கிய நிலைமை அது. அந்தச் சூழலில், நாடகத்தில் குறிப்பிடப்படும் மற்ற பெண்களைப் போல் இடதுசாரி இயக்கத்தினரின் குரல் ஓங்கி ஒலிக்க முடியாமல் இருந்தது. மேலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்தவரையில் பாலின வேறுபாடின்றி தோழர்களின் கருத்துக்கள் இயக்கத்தின் நிலைபாடாகவே வெளிப்படு கின்றன. தனி நபர் சிந்தனையாக அடையாளம் பெறுவ தில்லை. அவ்வகையில் கம்யூனிஸ்ட் பெண்களின் வார்த்தைகள் இயக்கத்தின் குரலாக ஒலித்தே வந்துள்ளன. இன்று வரையில் சாதிக்க முடிந்துள்ள பெண்களின் உரிமை சார்ந்த சட்டங்களும் திட்டங்களும் இல்லாமல் வந்துவிட வில்லை. இந்த இயக்கமுறையைப் புரிந்து கொள்ளாமல் இடதுசாரிகள் பெரிதாக எதுவும் செய்துவிட வில்லை என்று எளிதாகத் தூக்கி எறிவது சில அறிவு ஜீவிகளுக்கு எளிதாகக் இருக்கிறது.

ஆயினும் இடதுசாரி இயக்கப் பெண்கள் பற்றி கவிஞர் இன்குலாப் வழங்கியுள்ள பாடல் கம்பீரமாய்க் காற்றில் பரவு கிறது.

நாடக வடிவம் குறிப்பிட வேண்டிய ஒன்று. துவக்கம், உச்சம், முடிவு என்ற கதை வடிவத்தில் அல்லாமல், நாட் குறிப்புகள், பத்திரிகைகள், புத்தகங்கள் போன்றவற்றி லிருந்து எடுத்த தகவல்களை நயம் கலந்து வழங்கியிருக் கிறார் வ.கீதா.

மேடை நிகழ்வாகவும் இல்லாமல், வட்டக் களமாகவும் இல்லாமல், தரையில் மையத்திலிருந்து மூன்று திசைகளுக்கு விரிக்கப்பட்டிருக்கும் நீளமான மூன்று பாய்கள்தான் நடிப்புக் களம்! அந்தப் பாய்களில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே நடிப்பாளர்கள் தகவல்களைப் பரிமாறியது முற்றிலும் புதிய அனுபவம். சில தகவல்களை அச்சிடப்பட்ட அட்டைகளாக அரங்கச் சுவர்களில் அவ்வப்போது நடிப்பாளர்கள் தொங்கவிட்டது ஒரு வரலாற்று வகுப்பறை உணர்வை ஏற்படுத்தியது.

பாய்களின் இடைவெளியில் பார்வையாளர்கள் அமர முடிகிறது. நாடகத்தின் செய்தி அவர்களோடு நெருக்கமாக இணைவதை உறுதிப் படுத்துகிறது பேராசிரியர் மங்கையின் நெறியாள்கை.

பொன்னி, கல்பனா, ரேவதி, கவின்மலர் ஆகிய நான்கே பேர்தான் நடிப்பாளர்கள். சரியான குரல் பயிற்சியுடன், தேவையான உடல் மொழியுடன் அவர்கள் நாடகத்தின் உள்ளடக்கத்தை உருவகப்படுத்துகிறார்கள். ஆங்காங்கே பார்வையாளர்களின் பங்கேற்புக்கும் வழியமைக்கப்பட்டிருக் கிறது.

முழுமையான பாலின சமத்துவம் என்ற கனவு நன வாகிற காலம் வரும். பெண்ணியக் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி, சமுதாயக் கண்ணோட்டத்திலும் அதனை நிறைவேற்றப் புறப்பட்டவர்களுக்குத் தோள்தரும் படைப்புகளில் ஒன்றாக இதனை வழங்கியிருக்கிற இவர்கள் வர லாற்றின் வாழ்த்துக்குரியவர்கள்.

-அ. குமரேசன்

Wednesday, 17 October 2007


வெண் திரையில் ஒரு சிவப்பு வரலாறு:

ஏ.கே.ஜி.


ஏ.கே.ஜி. -இந்தியாவின் வர்க்கப் போரில், ஜனநாயகப் போராட்டக் களத்தில், மக்களின் உரிமை இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் நரம்புகளில் முறுக்கேற்றுகிற பெயர். பொது வாழ்க்கையில் அர்ப்பணிப்பு, தன்னல மறுப்பு, தாக்குதல்களை நேருக்கு நேர் எதிர்கொண்ட வீரம், அடக்குமுறைகளுக்கு அஞ்சாத நெஞ்சுரம், சொந்தத் துயரங்களைப் பொருட்படுத்தாத தியாகம், அனைத்திற்கும் அடித்தளமாக சமுதாய விடுதலை லட்சியம் ... இவையெல்லாம் அந்த மூன்று எழுத்துக்களின் விரிவாக்கம். காக்கி அரைக்கால் சட்டை, மேல்சட்டை, தொப்பி - ஆகிய சீருடையுடன் செவ்வணக்கம் செலுத்தும் ஏ.கே. கோபாலன் திருவுருவப் படத்தை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் கண்டிருக்கக் கூடிய புதிய தலைமுறை செங்கொடி இயக்கத் தோழர்களுக்கு அவரைப் பற்றி மூத்தவர்கள் சொல்கிறபோது அவரை நேரில் காண முடியாமல் போனது பற்றிய ஏக்கம் மிஞ்சும். மூத்த தோழர்களுக்கு அந்த கடந்த கால நினைவுகளில் மனம் நிறைந்த விஞ்சும்.இளையவர்களுக்கு அவரைச் சந்திக்கவும், மூத்தவர்களுக்கு அன்றைய அனுபவங்களுக்குச் சென்றுவரவும் ஒரு வாய்ப்பாக ஒரு திரைப்படம் வந்திருக்கிறது.


திரையையும் அரங்கையும் பார்வையாளர் சிந்தையையும் செம்மயமாக்கும் “ஏ.கே.ஜி.” படத்தை கேரள முற்போக்கு கலை இலக்கிய சங்கத்தின் காசர்கோடு மாவட்டக் குழுவும் அபுதாபி சக்தி இலக்கியக் குழுவும் இணைந்து உருவாக்கி வழங்கியுள்ளன. இயக்குநர்: தேசிய விருது பெற்ற “பிறவி” படத்தை இயக்கிய ஷாஜி என். கருண். சுதந்திர இந்தியாவின் இருண்ட அத்தியாயமான அவசர நிலை ஆட்சிக்காலத்தில் ஒரு மாணவனுக்கு நேர்ந்த கொடுமையை உலகறியச் செய்த படம் அது என்பதை நினைவு கூர்ந்தால், ஷாஜியின் கலை ஈடுபாடு எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.


ஏ.கே.ஜி.யின் கதையைப் படமாக்குகையில், காலமெல்லாம் மக்களுக்காகவே உழைத்த அவரது போராட்ட வாழ்க்கையையே அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். இடுக்கி அணை கட்டுமானத்தின்போது முன்யோசனையோ மாற்று வழிகளோ இல்லாமல் வெளியேற்றப்பட்டவர்களின் வாழ்வுரிமைக்காக அவர் நடத்திய, நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த உண்ணாவிரதப் போராட்டத்திலிருந்து துவங்குகிறது படம்.அவசர நிலை ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்தை மீட்க அவர் நடத்திய போராட்டம் வரையில் முக்கியமான நிகழ்வுகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.அந்தப் போராட்டங்களில் அவர் வாங்கிய அடிகள், தாங்கிய வலிகள் ஆகியவையும் நமக்கு உணர்த்தப்படுகின்றன.


குருவாயூர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கான போராட்டத்தை நடத்துகையில், ஆதிக்கச் சாதியினரின் திட்டமிட்ட தாக்குதலுக்கு இலக்காகிறார். விடுதலைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப் பட்டிருந்தபோது கைதிகளை மனிதர்களாக நடத்த வலியுறுத்தி நடத்திய போராட்டத்தின் போதும் சிறையதிகாரிகளால் தாக்கப்படுகிறார். கடலூர் சிறையில் அவரை நோக்கி சுடப்பட்ட துப்பாக்கித் தோட்டாவை சக தோழர் நெஞ்சில் ஏற்று மடிய, கண்ணீர் வடிக்கும் ஏ.கே.ஜி.யின் போர்க்குணம் மேலும் கூர்மையாகிறது... இப்படிப்பட்ட தாக்குதல்களில் ஏற்பட்ட காயங்களும், முழுக்க முழுக்க மக்களுக்காகவே வாழ்ந்ததில் தன்னைக் கவனித்துக் கொள்ள முடியாமல் போனதுமாகச் சேர்ந்துதானே பிற்காலத்தில் அவரது உடலில் நோய்கள் சிறைபுகக் காரணமாக இருந்தன என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.


விவசாயத் தொழிலாளர்களுக்காக நில மீட்புப் போராட்டத்தை நடத்திய போது, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதாக அவர் மீது பாயும் காவல் துறையினரிடம் உபரி நிலம் பற்றிய காங்கிரஸ் அரசின் மோசடியான அறிவிப்பைக்காட்டி, “சட்டப்படி இது நோ-மேன்ஸ் லேண்ட் (யாருக்கும் உரிiயைற்ற நிலம்), இங்கே நாங்கள் வருவதை நீங்கள் எப்படித் தடுக்க முடியும்,” என்று வாதிட்டு அவர்களை அசர வைக்கிறார். அவரது இந்த வாதத் திறமைதான் கேரள சட்ட மன்றத்திலும், பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒரு வரலாறு படைத்தவராக அவருக்குப் புகழ் சேர்த்தது.


அவசர நிலை ஆட்சியை விலக்கிக் கொள்ளுமாறு பிரதமர் இந்திரா காந்தியிடம் அவர் வலியுறுத்துகிற காட்சி ஒரு அரசியல் பாடம்.


போராட்ட இயக்கத்தில் அவரோடு தோள் சேரும் தோழர் சுசிலா பின்பு அவரது இல்லற வாழ்விலும் இணை சேர்கிறார். ஒரு நாள், அவர்களது அன்பு மகள் ஒரு தங்கச் சங்கிலியை அணிந்து கொண்டு வந்து காட்ட, “உனக்கும் தங்க நகை ஆசை வந்து விட்டதா,” என்று கேட்டு, கோபாலன் அடித்து விடுகிறார். பின்னர் அது கவரிங் நகைதான் என்பதை சுசிலா எடுத்துக் கூற, மகளை அரவணைத்துக் கொள்கிறார். அந்த மாமனிதர் தமது சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடின்றி வாழ நடத்திய மனப் போராட்டத்தை வெளிப்படுத்துகிற காட்சி இது.


தோழர்கள் வழியனுப்ப கோபாலன் சுசிலாவுடன் ஒரு ரயிலில் புறப்படுகிறார். ரயில் நிலையத்திற்குள் வயது முதிர்ந்த ஒரு ஏழைத் தம்பதி கையில் ஒரு கோரிக்கை மனுவுடன் நிற்பதைப்பார்த்து, ஓடத்துவங்கிய ரயிலிலிருந்து கீழே குதித்து, அவர்களது பிரச்சனையை விசாரித்தறிகிறார். அவர்களது மனுவோடு அவர்களையும் அந்தத் தோழர்களின் பொறுப்பில் ஒப்படைத்து ஏ.கே.ஜி. விடை பெறும் காட்சியில் எவ்வளவு ஆழமான அர்த்தம்!


வழக்கமான கதைப்படமாக இல்லாமல், அவரது சுயசரிதையின் பக்கங்களிலிருந்து சில பக்கங்களை நிகழ்வாக்கி, மார்க்சிஸ்ட் கட்சியின் இன்றைய தலைவர்கள் அவரைப் பற்றிக் கூறியிருப்பதைப் பதிவாக்கி, “ஆவணக் கதைப்படம்” என்ற புதிய வடிவில் இந்த 75 நிமிடப்படம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வடிவம் உண்மை வாழ்க்கை அனுபவத்தோடு நம்மை நெருக்கமாக்குகிறது.


முகத் தோற்றம், உடல் அமைப்பு, நடமாட்டம், அந்த கம்பீரம் என ஏ.கே.ஜி.யாகவே நம் இதயத்தில் குடியேறுகிறார், நாடக - திரைப்பட இயக்குனரும் நடிகருமான பி. ஸ்ரீகுமார். சுசிலாவை நேரில் காணும் உணர்வை ஏற்படுத்தியுள்ளார் அர்ச்சனா. எம். ஆர். சசிதரன் ஒளிஓவியம், பென்னி மாத்யூ-பால முரளி கலை இயக்கம், மகேஷ் நரயா படத் தொகுப்பு என அனைத்துக் கலைஞர்களின் பங்களிப்புமாகச் சேர்ந்து படத்தை உயிரோட்டமாக்கியுள்ளன. மலையாளம் பேசினாலும் மொழி கடந்து மக்களின் மனச் சிகரத்தில் கொடி நாட்டுகிறது அந்த உயிரோட்டம்.


“புதிய வசந்தம் வரும், அப்போது நான் இல்லாவிட்டாலும் எனது தோழர்கள் இருப்பார்கள்,” என்று ஏ.கே.ஜி. கூறுகிற வரிகளோடு படம் முடிகிறது. அந்த நம்பிக்கையில் ஒரு தோழமைக் கட்டளையும் ஒலிப்பதை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது நம்மால்.

-அ. குமரேசன்

Thursday, 27 September 2007

கவிதை

நேரில் நான் வர...

எல்லாம் தலைகீழாய் நடப்பது கண்டு
எனக்கும் சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
நேரில் நான் வர வேண்டும் கொஞ்சம்.

என்ன சொல்கிறாய்...
ஒருவரின் சம்பாத்தியம்
குடும்பம் நடத்தப் போதவில்லை என்பதால்
மனைவியையும் வேலைக்கு அனுப்பினாயா?
வேலைக்குப் போகும் பெண்கள்
ஒழுக்கம் இல்லாதவர்கள் எனும்
பெரியவர்(கள்) சொல் மறந்தாயா?
உன் மனைவி தன் பதி விரதக் கற்பினை
தீக்குளித்து நிரூபிக்கச் சொல்ல
உனக்குக் கற்றுத் தர வேண்டும்- அதற்கு
நேரில் நான் வர வேண்டும்.

எம்பியெம்பிப் படித்த உன் பிள்ளைக்கு
எம்பிபிஎஸ் கிடைக்கவில்லையென்று
என் சன்னதியில் வந்து புலம்புகிறாய்
காரணம் என்னவென்று அறிந்தாயா?
உனக்கும் எனக்கும் பணிந்து
பாத்திரம் தேய்க்கப் பிறந்த
சூத்திரனும் தடையின்றி
சாத்திரம் படிக்க சட்டம் வந்ததால்!
ஆத்திரம் பொங்குகிறதல்லவா?
பதினான்கு வருசம் என் பாதுகையை வைத்தே
என்பதாகையை நாட்டியதாய்க் கூறி
பாராண்ட என் தம்பி பரதன்
வேதம் பயில்வதில் இனி வர்ண
வேற்றுமை இல்லையென அறிவித்து
அன்றைக்கே துவங்கிய வினை இது.
அக்கணமே அந்த அநீதியைஅடியோடு அறுத்துவிட
சம்புகத் தலையெடுத்த என் வாளின்
அடங்காத ரத்த தாகத்தைச் சொல்ல
நேரில் நான் வர வேண்டும்.

ஊனமாய்ப் பிறப்பது முன் ஜென்மப் பாவம்
ஒதுங்கியிருந்து யாசித்திருப்பதே
ஊனமுற்றோருக்கு இடப்பட்ட சாபம்
அதை விட்டு அவர்களும் இன்று
உரிமை கோரினால் வருகிறது கோபம்
மந்தாரைக் கிழவியின் கூன் முதுகில்
வில்லால் அடித்து விளக்கினேன் ஒரு பாடம்
அதனை மறுபடியும் எடுத்துரைக்க
நேரில் நான் வர வேண்டும்.

முன்னேற்றம் எனும் கவர்ச்சி வார்த்தையின்
பின்னால் மறைந்து நின்று
நாட்டின் சுயமரியாதையை
அணுசக்தி உலையில் தள்ளுவதெப்படி?
பண்பாடெனும் பட்டுத்திரைப் பெருமையின்
பின்னால் பதுங்கிக் கொண்டு
சகோதர மக்களைப் பிளப்பதெப்படி?
மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து
வாலியைக் கொன்ற காதையை
வக்கனையாய் மறுபடி சொல்ல
நேரில் நான் வர வேண்டும்.

நான் வர வேண்டும்-
நேரில்நான் வர வேண்டும் என்றால்
நான் நடந்து வருவதற்குத்தான்
என் பெயர் சூட்டியபாலம்
அப்படியே இருக்க வேண்டும்.
தப்புத் தப்பாய் நீங்கள்
செய்து வைத்ததையெல்லாம்
நான் வந்து இடிக்கிறேன் நாளைக்கு
என் பெயர் வைத்த பாலத்தை
இடிக்காமல் பார்த்துக் கொள் இன்றைக்கு.

-அ. குமரேசன்

(சேலத்தில் செப்.23 அன்று தமுஎச நடத்திய பாரதி நாள் கவியரங்கில் வாசித்தது)

Thursday, 20 September 2007

புத்தகம்

பேரம்பலத்துக்கு வரும்
சிற்றம்பல ரகசியங்கள்

சிதம்பரம் கோயில் என்றால் ஒரு காலை உயர்த்தி நடனமாடும் நடராசர் உருவம், நந்தனார் பற்றிய பக்திக் கதை, ஆண்டுதோறும் நடைபெறும் நாட்டியாஞ்சலி... இப்படியாகப் பட்ட படிமங்கள் மட்டுமே மக்கள் மனதில் ஊன்றப் பட்டுள்ளன. “சிதம்பர ரகசியம்” என்ற பதத்தை அன்றாட வாழ்வில் பயன்படுத்தினாலும் கூட, அந்த ரகசியம் என்ன என்பதை அறிந்து கொள்வதில் பலருக்கு நாட்டம் இருப்பதில்லை. “அதெல்லாம் கடவுள் விவகாரம், நமக்குப் புரியாத தத்துவம்” என்று ஒதுக்கிவிடுவதில் ஒரு சுகம் இருக்கிறது போலும். மக்களின் அந்த எளிமையைப் பயன்படுத்திக் கொண்டு என்னென்ன அக்கிரமங்கள் அரங்கேறுகின்றன!

மற்ற இந்துக் கோயில்கள் போல் இக்கோயிலில் “மூலவிக்கிரகம்” அல்லது மற்ற சிவன் கோயில்கள் போல் கருவறையில் சிவலிங்கம் இருப்பதில்லை. மாறாக ஒரு திரைதான் இருக்கிறது. வழிபாட்டு நேரத்தில் அந்தத்திரைக்குத்தான் தீபாராதனை நடக்கும். குறிப்பிட்ட நேரத்தில் திரை விலக்கப்படும். திரைக்குப் பின்னால் ஒரு அறையோ, அதில் ஒரு சிலையோ இருக்காது. மாறாக ஒரு வெற்றுச் சுவர் மட்டுமே இருக்கும். எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன் என்ற தத்துவத்தை அது கூறுகிறதாம். கவர்ச்சிகரமான இந்தத்தத்துவத்தின் பின்னணியில், அப்படிப்பட்ட ஏன் இவ்வளவு பெரிய கோயில், ஏன் இத்தனை வழிபாட்டு விதிகள், ஏன் இப்படிப்பட்ட பாகுபாடுகள் என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகள் உண்மைலேயே ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ரகசியத்தை உடைத்துக் காட்டும் ஒரு வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதில் பங்கேற்கிறது, ‘சிகரம்’ செந்தில்நாதன் ஆய்வில் வந்துள்ள ‘சிதம்பரம் கோயில் - சிலஉண்மைகள்.’

64 பக்கங்களே கொண்ட சிறிய புத்தகம்தான். ஆனால் நீண்ட நெடும் வரலாற்று மோசடியை, அதன் அடித்தளமாக உள்ள சமூக ஒடுக்குமுறையை, ஒரு சிறிய மாத்திரைக்குள் அடங்கிய பெரும் மருத்துவ ஆற்றலோடு வெளிக் கொணர்கிறது. படிப்பவர்களுக்கு முதலில் குறிப்பிட்ட அறியாமைச் சுகம் அகன்று, மெய்ப் பொருள் அறிந்து கொண்டதன் ஆவேசம் குடியேறுகிறது.

அண்மையில், இக்கோயிலின் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடச்சென்ற ஆறுமுகசாமி ஓதுவார் தடுக்கப்பட்டார். வயதில் முதியவர் என்றும் பாராமல் தாக்கப்பட்டார். நீதிமன்றத்தின் இடைக்கால ஆணை மூலம், அவர் அங்கு தமிழில் பாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டார். அந்தச் செய்தியிலிருந்து துவங்கும் புத்தகம், பின்னோட்டமாக கோயிலின் வரலாற்றுத் தடத்தில் சென்று அத்தடத்தில் புதைக்கப்பட்டிருக்கும் சாதிய ஆதிக்கச் சதிகளை, தமிழ் பின்னுக்குத் தள்ளப்பட்ட சூழ்ச்சிகளை, கோயிலின் வற்றாத செல்வங்களைச் சுரண்டும் தந்திர ஏற்பாடுகளை ஒவ்வொன்றாக மக்களின் பேரம்பல மேடைக்குக் கொண்டுவருகிறது.

இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயில் போல் முதலிலேயே இவ்வளவு பெரிதாகக் கட்டப்பட்டதல்ல. பல்வேறு மன்னர்கள் பல்வேறு காலங்களில் கோயிலை அவரவர் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரிவுபடுத்தினார்கள். கோயில் முதன் முதலில் எப்போது யாரால் எழுப்பப்பட்டது என்பதற்கான எவ்வித ஆவண ஆதாரமும் இல்லை. உடல் குறை காரணமாக பதவியைத் துறந்து இவ்வூரின் குளத்தில் குளிக்கவந்த கவுட நாட்டு மன்னன் சிம்மவர்மன் முன் சிவபெருமான் தோன்ற, அந்த இடத்தில் அவன் கோயிலைக்கட்டினான் என்பது போன்ற புராணக்கதைகள் மட்டுமே ஆதாரமாகக் காட்டப்படுகின்றன. “புராணக்கதைகள் பக்தர்களுக்கு இனிக்கலாம். வரலாற்று மாணவனுக்கு உண்மைதான் இனிக்கும்,” என்கிறார் செந்தில். ஆதிக்கவாதிகளுக்கு உண்மைகள் கசக்கத்தானே செய்யும்!

தில்லை நடராசனை தரிசிக்க விரும்பிய தலித் உழவுத் தொழிலாளி நந்தனுக்கு நேர்ந்தது போலவே புலையர் குலத்தைச் சேர்ந்த சாம்பான் என்ற விறகுவெட்டித் தொழிலாளிக்கு “கதிமோட்சம்” தரப்பட்ட கதையும் கிடைக்கிறது. சிதம்பரம் தீட்சிதர்களோடு இணக்கமாகப் போக முடியாததால் வள்ளலார் வடலூராராகியதும் நினைவூட்டப்படுகிறது.

ஆறுமுக சாமிக்கு எதிரான வழக்கில், தமிழில் பாட வேண்டுமானால் மேடைக்குக் கீழேதான் பாட வேண்டும் என்பதுதான் வழக்காறு, வழக்காற்றில் அரசாங்கம் தலையிட முடியாது என்ற வாதத்தை தீட்சிதர்கள் முன்வைத்துள்ளனர். அப்படியே தமிழில் பாடுவதானால் கூட, மற்றவர்கள் பாட முடியாது, தீட்சிதர்கள்தான் பாடுவார்கள் என்றும் கூறியுள்ளனர். அப்படியானால் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய தேவார, திருவாசகப் படைப்பாளிகள் - அவர்களில் மூவர் இவர்களை விட ஞானமுள்ள பிராமணர்கள் - எங்கேயிருந்து பாடியிருக்க முடியும் என்ற கேள்விக்கான விடையை நீதிமன்றம் ஆய்வு செய்யத்தான் வேண்டும்.

இது ஒரு தனியார் கோயில், தீட்சிதர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் பாரம்பரிய சொத்து என்ற வாதங்களையும் தவிடு பொடியாக்கியிருக்கிறார் வழக்கறிஞர். எல்லாவற்றுக்கும் மேலாக, 1978ம் ஆண்டில், அன்றைய மத்திய ஜனதா கட்சி ஆட்சியின் போது அரசமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 44வது திருத்தத்தின் படி, சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை என்பது நீக்கப்பட்டுவிட்டது. அதனையும், கேரளக் கோயில் வழக்கொன்றில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் வலுவான ஆயுதங்களாகப் பயன்படுத்தி, சிதம்பரம் கோயிலை மீட்க தமிழக அரசு தயங்காமல் முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளோடு முடிகிறது புத்தகம்.

சிதம்பரம் கோயில் மீட்பு என்பது தமிழ்மீட்பு மட்டுமல்ல, தீட்சிதர் சமூகப் பெண்களை அடிமைத் தளையியிலிருந்து மீட்பதோடும் என்று சொல்கிற இடத்தில், புத்தகம் மேலும் ஒரு சமூக அக்கறைப் பரிமாணத்தைச் சூடிக் கொள்கிறது. “தில்லைக் கோயிலில் எழும் திருமுறைகள் பிரச்சினை வெறும் ஆத்திகர்கள் பிரச்சினை அல்ல. பண்பாட்டுப் பிரச்சினை; மொழியும் ஆன்மீகமும் பண்பாட்டில் அடங்கும்! இப்போது பந்து அரசின் கையில்! தமிழக அரசு என்ன செய்யப்போகிறது,” என வினவுகிறார் செந்தில்நாதன். அரசு மட்டுமல்ல, அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் இயங்குகிற எல்லோருக்குமான வினா இது. சரியான விடையோடு களம் காண விழைவோர் கைகளில் இருக்க வேண்டிய புத்தகம்.

“சிதம்பரம் கோயில் - சில உண்மைகள்”
-ச. செந்தில்நாதன்
பக்கங்கள்: 64 விலை: ரூ.25
வெளியீடு:
சிகரம்,
ஏ -1, அருணாச்சலம் அடுக்ககம்,
1077, முனுசாமி சாலை,கலைஞர் கருணாநிதி நகர்,
சென்னை - 600 078 தொலைபேசி: 044 / 24723269

Sunday, 16 September 2007

திரைப்பட விமர்சனம்


அம்முவாகிய நான்

பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவர்களது வாழ்க்கையைக் கூறும் திரைப்படங்கள் ஏற்கெனவே பலவகைகளில் வந்துள்ளன. அவற்றிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட படம் என்று சொல்லிவிட முடியாது என்றாலும், பத்தோடு பதினொன்றாக சேர்த்துவிடக் கூடிய படமும் அல்ல.

கதாநாயகியாகிய அம்முவை விட, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திப் பணம் ஈட்டும் ராணியம்மாவின் பாத்திரப்படைப்பு மாறுபட்டது. சம்பந்தப் பட்ட பெண்களின் மீது கனிவு, அக்கறை என அம்முவின் அந்த வளர்ப்புத் தாய் மனம் கவர்கிறாள். நிஜத்தில் இப்படிப் பார்க்க முடியுமா என்பது வேறு விவகாரம்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து கள்ளிப்பாலுக்கு பலியாவதற்கு பதிலாக தகப்பனால் அந்த இல்லத்தில் கொண்டுவந்து சேர்க்கப்படுகிறவள் அம்மு. அதே போல், கணவனாலேயே வருமானத்திற்காக அங்கே கொண்டுவந்து விடப் படுகிறாள் இன்னொரு பெண். இப்படிப் பட்ட இடங்களின் இன்னொரு பக்கத் தைக் காட்டும் காட்சிகள் இவை. வயதும், பால்வினை நோயும் முற்றிப்போக இரவோடிரவாகக் காணாமல் போய்விடுகிற பெண்கள் பற்றிய தகவலும் மனித நேய நெஞ்சங்களைத் தொடக்கூடியது.குழந்தைப் பருவத்திலிருந்தே அந்தச் சூழலில் வாழும் அம்முவுக்கு, தனது “தொழில்” தவறானது என்ற உறுத்தல் ஏற்படவில்லை என்பதிலும் ஒரு இயல்பான பதிவு.

எழுத்தாளனாகிய கௌரி சங்கர், இப்படிப் பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாவலாக்கி சமுதாயத்தில் கேள்விகளை எழுப்பும் நோக்கத்துடன் அந்த வீட்டிற்கு வருகிறான். அங்கே அம்முவின் வெகுளித்தனம் பிடித்துப் போக, அவளையே திருமணம் செய்து கொள்கிறான். சமூக நிலைமைகள் அப்படி யெல்லாம் இத்தகைய புரட்சிகர தம்பதிகளை நிம்மதியாக வாழ விட்டு விடுவ தில்லை. எதிர்பார்த்த கதைப் போக்குதான் என்றாலும், உண்மையின் பிரதிபலிப் பாய் உள்ளத்தில் குத்துகிறது.

அம்முவின் திருமண வாழ்க்கை தெரிந்ததும் அவளை முன்னாள் “வாடிக்கையாளர்” மனப்பூர்வமாக வாழ்த்துவது இப்படி பலவகைப் பட்ட மனிதர்களைக் கொண்டதுதான் சமுதாயம் எனக் காட்டுவதாக உள்ளது.

கௌரி சங்கரின் படைப்புகளுக் கான அங்கீகார விருது ஒவ்வொரு முறையும் தள்ளிப் போகிறது. அம்முவின் கதையையே சொல்லும் நாவலுக்கு எல்லாத் தகுதிகளும் இருந்தும், விரு துக்குப் பரிந்துரைக்கும் இறுதி அதிகா ரம் கொண்ட ஒரு பெரிய மனிதன் அதற்குக் கேட்கிற விலை, இப்படிப்ப பட்டவர் களும் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துவதன் சித்தரிப்பு. படத்தில் ஒரு கொலை வருகிறது. அதற்கு நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கப் போகிறது என்பது இறுதி வரையில் புதிராகவே வைக்கப்படுவது, தமிழ் சினிமாவில் அரிதாகக் கிடைக்கும் சுவாரசியம்.

இது போன்ற பாத்திரம் என்றால் ஆர். பார்த்திபன்தான் என்பது ஒரு எழுதப்படாத விதியாகிவிட்டது. அதற்கு முழு நியாயம் செய்திருக்கிறார். சவால் மிக்க அம்மு கதாபாத்திரத்தைத் துணிச் சலுடன் ஏற்று வெற்றிபெற்றிருக்கிறார் பாரதி. ராணியாக சாதனாவும் சாதித் திருக்கிறார்.

எம்.எஸ். பிரபு ஒளிப்பதிவு ஒரு ஓவியம் போல் இக்கதைக்கான சூழலை அருமையாக உருவாக்கித்தந்திருக் கிறது. சாகு கலை இயக்கமும், சபேஷ்-முரளி இசையும் அதற்கு ஒத்துழைத் திருக்கின்றன. “அதிருதில்ல” என்று மிரட்டாமலே அதிர்வுகளை ஏற்படுத்தி நம்பிக்கையூட்டும் படங்களின் வரிசை யில் கதை - திரைக்கதை எழுதி இயக்கி யுள்ள பத்மாமகன் தனது படைப்பையும் சேர்த்திருக்கிறார்.
-அ.கு.

Sunday, 9 September 2007

பள்ளிக்கூடம் திரைப்பட விமர்சனம்


பள்ளிக்கூடம்


ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சண்முகங்களையும் தனலட்சுமிகளையும் வெளிக்கொணர்வதில் ‘அழகி’ படத்தில் பெரும் வெற்றி பெற்ற தங்கர் பச்சான் சில படங்களின் இடைவெளிக்குப் பிறகு கிட்டத்தட்ட அதே போன்ற வெற்றியைச் சாதித்திருக்கிறார். அந்தப் படத்தில் அதற்கான வாகனமாக இருந்த பள்ளிக்கூடம் இந்தப்படத்தில் இலக்காகவே ஆகியிருக் கிறது. நண்பர்கள் சந்தித்துக் கொள்கிறபோது தங்களது கடந்த காலத்தைத் திரும்பிப்பார்க்கிற கதை புதிதல்ல. அதை ஒரு பொது நோக்கத்தோடு இணைத்திருப்பதில் தங்கர் வேறுபடுகிறார்.


இரவில் மாடுகள் ஒதுங்கும் இடமாக, மழைக்காலத்தில் எல்லோரையும் நனைய விடுகிற அள வுக்கு ஓடுகள் நொறுங்கிய கூரையோடு அந்தப் பள்ளிக்கூடம் பல உண்மையான கிராமத்துப் பள்ளிகளின் லட்சணத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.


ஏற்கெனவே அந்த இடத்தைப் பள்ளிக்காக வழங்கிய ஊர்ப் பெரிய மனிதரின் மகன் அந்த இடத்துக்குச் சொந்தம் கொண் டாட, அரசின் கல்வித் துறையிலிருந்தும் அந்தப் பள்ளிக்கூடத்தை மூடிவிட ஆணை வருகிறது. பள்ளியை மீட்க ஆசிரியர்களும் ஊர்ப் பொதுமக்களும் முயற்சியெடுக்கிறார்கள்....இந்தப் பொதுப் பிரச்சனையோடு, பள்ளிக்கூடத் தரைகளிலும் பெஞ்சுகளிலும் மைதானத் திலும் மரங்களிலும் கலந்திருக்கக்கூடிய காதல் கதைகளையும், அதற்கு இணையான நட்புக் கதைகளையும் கோர்த்திருக்கிறார் தங்கர். அதனால் இந்தப் பள்ளிக்கூடம் உயிர்த்துடிப்போடு இருக்கிறது.


சட்டையில் பட்டன் இல்லாமல் முள் குத்திக் கொள்ளும் குயவர் மகன் வெற்றிவேல், வகுப்பி லேயே சிறந்த மாணவன். அவனுடன் நேசமாகப் பழகும் கோகிலா, பெரிய மனிதக் குடும்பத்தின் இன்னொரு வாரிசு. இவர்கள் பிரிய நேரிடும் சூழல் பெரும்பாலான வீடுகளில் நடப்பதுதான். பின்னர் மாவட்ட ஆட்சியராகும் வெற்றிவேல், நடந்தது என்ன என்பதை விசாரித்து அறிய முடி யாத அளவுக்கு, அன்றைய மோதலில் தனது தந்தையின் மரணத்தால் மனம் கொந்தளித்துப் போனவனாக இருக்கிறான். இதே போல் சினிமா இயக்குநராகும் முத்து, படிப்பு வராமல் கிராமத்திலேயே தேங்கிவிடும் குமாரசாமி ஆகிய நண்பர்களின் கதைகளும் சொல்லப்படுகின்றன.


குமாரசாமிக்கு படிப்பு வர வில்லை என்பதால் அவனது தகப்பன் அழுது புலம்புவதாகக் காட்டியுள்ள தங்கர், இப்படிப்பட்ட வறுமைக் குழந்தைகளின் மூளையில் ஏன் படிப்பு ஏறுவதில்லை என்ற சமூகப் பொருளாதாரப் பார்வையையும் தொட்டிருந்தால் படம் மேலும் அழுத்தம் பெற்றிருக்கும்.


பழைய மாணவர்கள் படையெடுத்து, விழா எடுத்து, நினைவுகளைப் பரிமாறிக் கொள்வ தோடு பள்ளியின் மீட்சிக்குத் தேவையான நிதியையும் வழங் குகிறார்கள். கற்பனையில் தான் இப்படி நடக்கும் என்றா லும் நல்ல நோக்கமுள்ள கற் பனை. படத்தில் கல்வி அதி காரி (இயக்குநர் வெ. சேகர் இப்பாத்திரத்தில் நடித்திருக்கி றார்), தாம் படித்த பள்ளிக் கூடத்திற்கும் இப்படி ஏதேனும் செய்ய விரும்புவதாகக் கூறு வதுபோல், படம் பார்க்கிற பல ருக்கும் இதுபோன்ற உணர்வு ஏற்படுத்தக்கூடும். அத்துடன், ஒவ்வொருவரையும் தமது பள்ளிக்காலத்திற்குப் பயணம் மேற்கொள்ள வைத்து மனதில் ஒரு பசுமையைப் பதிக்கிறார் தங்கர். அதே நேரத்தில், பள்ளியை மீட்பதில் அரசின் பொறுப்பை வலியுறுத் தும் போராட்ட உணர்வுக்கு மாறாக, இப்படிப் பழைய மாண வர்களின் நன்கொடையால் பள்ளி பிழைப்பதாகக் காட்டு வது சரியான இலக்கிலிருந்து தடம் புரள்வதாகிவிடுகிறது.


பள்ளியை மீட்க முயலும் படிக்காத குமாரசாமியாக தங்கர் பச்சான் தமது நடிப்பில் அந்த அப்பாவித்தனத்தை அழகாக வெளிப்படுத்தியிருக் கிறார்.


திரைப்பட இயக்குந ராக, இயக்குநர் சீமான் நண்ப னின் வறுமை கண்டு உருகும் போது உருக்குகிறார். மாவட்ட ஆட்சியராகிவிடும் வெற்றி வேலாக நரேன் சீரான நடிப்பை வழங்கியிருக்கிறார்.


தனது வாரிசுரிமைச் சொத்தை மட்டு மல்லாமல், காதலை மீட்பதிலும் கையறு நிலையில் நிற்கும் கோகிலாவாக சினேகா. அந்தப் பாத்திரத்தை இன்னும் முழுமைப்படுத்த இயக்குனர் முயன்றிருக்கலாம்.


“பள்ளிக்கூடம் போய்ப் பாரு” பாட்டு நீண்ட நாட்கள் மனதில் ஒலிக்கும். பரபரப்பான திடீர்த் திருப்பங்கள் இல்லா மலே படத்தின் உச்சகட்டக் காட்சி சுவாரசியமாக அமைந் திருக்கிறது. கிராம வாழ்க்கை சார்ந்த ஆழமான சமூக அல சல்கள் இல்லாவிட்டாலும் பள் ளிக்கூடத்தின் படிப்பினை யைப் புறக்கணிப்பதற்கில்லை.


-அ.குமரேசன்

Monday, 3 September 2007

அறிவியல் மேதைகளோடு ஒரு மல்லுக்கட்டு


விஞ்ஞானிகளா, விபரீத ஞானிகளா?

மெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதற்கு இடதுசாரிக் கட்சிகள் தேசபக்த நேர்மையோடு முயன்று வருகின்றன. இந்தியாவின் கைகளிலும் கால்களிலும் கயிறுகட்டி பொம்மலாட்டம்போல் இயக்கக்கூடிய அந்த உடன்பாட்டை எப்படியாவது இந்தியர்களின் தலையில் கட்டுவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஏஜெண்டுகளும் செய்து வருகிற முயற்சிகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த முயற்சிகள் நேரடியாகவும் இருக்கும், சில நேரங்களில், தாங்கள் செய்வதன் ஆழ - அகலங்களை உணர முடியாத மேதாதி மேதைகளின் மூலமாகச் செய்யப்படும் மறைமுக முயற்சிகளாகவும் இருக்கும்.


இந்திய விஞ்ஞானிகள் குழு ஒன்று அந்த உடன்பாட்டிற்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை இந்த சிந்தனையைத்தான் ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட ஒரு பிரச்சனையில் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ நிலை எடுப்பதும் அதை பகிரங்கமாக வெளிப்படுத்துவதும் ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படை உரிமை. அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த விஞ்ஞானிகள் ஒருபடி மேலேபோய் அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். “அரசியல்வாதிகள் மேற்படி உடன்பாட்டை கடத்திச் செல்லவிடக் கூடாது,” என்பதாக எச்சரித்திருக்கிறார்கள். உடன்பாட்டிற்குத் தெரிவிக்கப்படும் எதிர்ப்பிற்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். “பிரதமர் மன்மோகன் சிங்கின் நேர்மையை சந்தேகிப்பதா,” என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.


“அரசை ஆதரிப்பவர்கள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் பிரதமரின் நேர்மையை சந்தேகிப்பது ஒரு தேசிய அவமானம்,” என்று அணு உலைகள் திட்டக் குழுவின் முன்னாள் இயக்குநர் ஏ.கே.ஆனந்த் உள்ளிட்ட சில விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது இடதுசாரிக் கட்சிகளைத்தான் குறிப்பிடுகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


உடன்பாட்டின் சாதகமான அம்சங்கள் என்று சிலவற்றை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் ஆயுதத் திட்டங்கள் தொடரும் என்றும், நமது அணுசக்தித் திட்டங்களின் வளர்ச்சியை எவ்விதத்திலும் இந்த உடன்பாடு பாதிக்காது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தற்போது இந்த உடன்பாடு குறித்து ஒரு முடிவெடுக்க என உயர்மட்ட அரசியல் குழு ஒன்றை அமைக்க மத்திய அரசே ஒப்புக் கொண்டுவிட்டப்பிறகு, இப்படிப்பட்ட கருத்துக்களை சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளின் சொந்தக்கருத்து என தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை.


பிரதமரின் நேர்மை பற்றி யாரும் கேள்வி எழுப்பவுமில்லை, சந்தேகம் தெரிவிக்கவுமில்லை. இந்த உடன்பாட்டைச் செயல்படுத்துவதில் அவர் பிடிவாதமாக இருப்பது நாட்டின் நலனைக் காவுகொடுத்துவிடும் என்று அச்சம் தெரிவிப்பது பிரதமரின் நேர்மையை சந்தேகப்படுத்துவதாகாது. மாறாக, தேவையின்றி பிரதமரின் நேர்மை குறித்த விவகாரமாக இதை மாற்ற முயல்வதுதான். இடதுசாரிகளின் நேர்மையைக் கொச்சைப்படுத்துகிற செயல். இவ்வாறு திடீரென உடன்பாட்டை நியாயப்படுத்திக் கூட்டறிக்கை விடுகிற விஞ்ஞானிகளின் உள்நோக்கம் என்ன, “எதிர்பார்ப்பு” என்ன என்ற சந்தேகம்தான் எழுகிறது.


இதே உடன்பாட்டின் பாதகங்கள் குறித்து, அது வளர்ச்சியை மட்டுமல்லாமல், ஒரு நாட்டின் மிக உயர்ந்த சுயமரியாதையாகிய இறையாண்மை எனப்படும் உயர் தன்னாளுமை உரிமை என்பதையே கேலிக்குள்ளாக்குகிறது என்பது பற்றி இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, பல விஞ்ஞானிகளே கூட சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார்கள். அணு சக்தி ஒழுங்கமைப்பு வாரிய முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.கோபாலகிருஷ்ணன், மும்பையின் பாபா அணு ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் டாக்டர் ஏ.என்.பிரசாத், அணு சக்தி ஆணைய முன்னாள் தலைவர் டாக்டர் பி.கே.ஐயங்கார் போன்றோர் மிகுந்த கவலையோடு இந்த உடன்பாட்டை எதிர்த்திருக்கிறார்கள். இந்தியாவின் ஒவ்வொரு கட்ட அணு சக்தி வளர்ச்சியையும் அமெரிக்காவின் ஆணைக்கு உட்படுத்திவிடும் உடன்பாடு இது என்று அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். அவர்களும் விஞ்ஞானிகள்தான்.


இந்த 123 உடன்பாடு வெறும் தொழில்நுட்பப் பரிமாற்றப் பிரச்சனையல்ல. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் நாட்டின் இறையாண்மையோடு சம்பந்தப்பட்ட அரசியல் நுட்பப் பிரச்சனை. உலக அளவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுக்கக்கூடிய நாசகர நடவடிக்கைகளுக்கு இந்தியாவையும் உடன்பட வைக்கிற அரசியல் நுட்பம் இதில் பொதிந்திருக்கிறது. ஆகவேதான் இதனை வெறுமனே அறிவியல் ஆராய்ச்சிப் பட்டங்கள் பெற்றவர்களிடம் விட்டுவிடாமல், மக்களோடு மக்களாய் கலந்து செயல்படுகிற அரசியல் தலைவர்களின் பொறுப்பில் விடவேண்டும் என, மக்கள் நலம் சார்ந்து சிந்திக்கக்கூடிய எல்லோரும் சொல்கிறார்கள்.


அதைச் செவிமடுக்காதவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஒலிக்கும் குரல், அறிவியல் ஆய்வாளர்களின் குரலாகத் தெரியவில்லை. அமெரிக்காவின் குரலாகத்தான் ஒலிக்கிறது

Sunday, 2 September 2007

விவாதம்


இணைப்பதற்கா,உடைப்பதற்கா பாலம்?



அ.குமரேசன்


றிவியலுக்கும் இலக்கியத்துக்கும் ஒரு அடிப்படை உண்டு. அதுதான் உண்மை. அதே போல் இரண்டுக்கும் ஒரு தேவையும் உண்டு. அதுதான் கற்பனை. உண்மையைத் தேடுகிற அறிவியலில் கற்பனைக்கு என்ன வேலை? கற்பனையான இலக்கியத்தில் உண்மைக்கு என்ன இடம்? பறக்க வேண்டும் என்ற கற்பனைதான் அறிவியல் ஆய்வு முனைப்புகளைத் தூண்டிவிட்டு ஆகாய விமானங்களைக் கொண்டுவந்தது. வாழ்க்கையின் உண்மைகள்தான் இலக்கியப் படைப்புகளைக் கொண்டுவந்தன. கற்பனை கை கொடுக்காமல் அறிவியல் வளர்ச்சி இல்லை. உண்மையின் சாறு இல்லாமல் இலக்கிய வளர்ச்சியும் இல்லை.


அறிவியல், இலக்கியம் ஆகிய இரண்டுக்குமே மிக அடிப்படையான ஒரு இலக்கு உண்டு: சமுதாயம் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதே அது.இப்போது ஒரு இலக்கியம் அறிவியலுக்கு எதிராக நிறுத்தப்படுகிறது - ராமாயணம் என்ற இலக்கியம்.


ஒரு இலக்கியம் என்ற அடிப்படையில் ராமாயணத்தில் அள்ளியள்ளிப் பருகுவதற்கு எவ்வளவோ வாழ்க்கை உண்மைகளும் கற்பனைகளும் இருக்கின்றன. ஆனால் இன்று ராமாயணத்தின் ஒரு கற்பனை வாழ்க்கை உண்மைக்கு எதிராக, சமுதாயத்தின் தேவைக்கு முட்டுக்கட்டையாக வைக்கப்படுகிறது. ஆமாம், ராமர் பாலம் என்ற கற்பனைதான்.


முதலில் எது உண்மையான மூல ராமாயணம் என்பதிலேயே நிறைய சிக்கல் இருக்கிறது. மாநிலத்துக்கு மாநிலம் அந்தந்த மொழியில் ராமாயண மூலக்கதை எடுத்துக் கொள்ளப்பட்ட போது அந்தந்த வட்டார அரசியல் தேவைகளுக்கு ஏற்பப் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. அதனால்தான் சிறப்புகளும் குறைபாடுகளும் உள்ள சராசரி மனிதனாக வால்மீகி ராமாயணத்தில் சித்தரிக்கப்படும் ராமன், பிற்காலத்தில் கம்ப ராமாயணத்தில் அப்பழுக்கற்ற கடவுளின் அவதாரமாகக் காட்டப்படுகிறான்.


தமிழக மக்களின் ஒன்றரை நூற்றாண்டுக் கனவு சேது சமுத்திரத் திட்டம். சுற்றுச் சூழல், இயற்கைச் சமநிலை ஆகிய கவலைகளைக் கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் ஒருபுறம். அவர்களுக்கு அறிவியல் விளக்கம் அளிக்க முடியும். மீனவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் எனக் கூறி எதிர்ப்பவர்கள் இன்னொரு புறம். அவர்களுக்குப் பொருளாதாரம் சார்ந்த விளக்கங்கள் உள்ளன.


ஆனால் ஆதாரமெல்லாம் கேட்காதீர்கள், நம்பிக்கைக்கு ஆதாரம் தேவையில்லை என்று கூறி இதை எதிர்ப்பவர்களுக்கு என்ன விளக்கம் தர முடியும்? அறிவியலும் இலக்கியமும் கேள்வி கேட்கத் தூண்டுகின்றன. ஆனால் மதமும் மதம் சார்ந்த நம்பிக்கைகளும் மனிதர்களுடைய கேள்வி கேட்கும் உரிமையை மறுக்கின்றன. கேள்விகள் எழுப்பாத சமுதாயம் முன்னேறியதில்லை. இந்திய சமுதாயம் ஏன் இந்த 21ம் நூற்றாண்டில் இவ்வளவு பின்தங்கிக்கிடக்கிறது என்பதற்கான பதில் இத்தனை நூற்றாண்டுகளாக கேள்வி கேட்கும் உரிமையை மறுத்து வெறும் நம்பிக்கையை மட்டுமே சார்ந்திருக்கும்படி முடக்கப்பட்டதிலும் இருக்கிறது.


எந்த ராமேஸ்வரத்திலிருந்து மேற்படி பாலத்தை ராமன் கட்டியதாகச் சொல்கிறார்களோ, அந்த ராமேஸ்வரத்தின் உள்ளூர் வரலாறு முதல் தமிழகத்தின் எந்தவொரு வரலாற்றிலும் அந்தப் பாலம் பற்றிய குறிப்பு எந்த வடிவத்திலும் இல்லை. மூல ராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்தியது, ராமன் போய் மீட்டுவந்தது உள்பட எல்லாச் சம்பவங்களும் மத்திய இந்தியப் பகுதியைத் தாண்டவில்லை. விந்திய மலையோடு ராமாயணக்கதை முடிந்துவிடுகிறது.


ஆயினும் ராமன் கதையை விரிவுபடுத்தித் தமிழக எல்லையைத் தாண்ட வைத்ததில் அன்றைய அரசியல் நோக்கங்கள் இருந்தன. அதை விட முக்கியமாக, பகவத் கீதையின் மூலம் கெட்டிப்படுத்தப்பட்ட சாதியக் கட்டமைப்புக்கு தெய்வாம்ச முலாம் பூசிவிடுகிற நோக்கம் இருந்தது. பிறப்பால் மனிதர்களைப் பாகுபடுத்திய வர்ண அடுக்குக்கு கடவுளின் சித்தம் அது என்று நம்பவைக்கிற நோக்கம் இருந்தது. பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டவள்தான் என்ற ஆணாதிக்கச் சிந்தனையை உறுதிப்படுத்துகிற நோக்கம் இருந்தது. அரசன் தெய்வத்தின் பிரதி நிதி, அவன் சொல்வதெல்லாம் தெய்வ வாக்கு என்பதாக மனங்களில் உருவேற்றுகிற நோக்கம் இருந்தது.


இருக்கிற கடவுள்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் ஏன் ராமனை மட்டும் பிடித்துக் கொள்கிறார்கள்? அதற்கும் ஒரு ஆழ்ந்த நோக்கம் உண்டு. கம்பன் மறைத்த ராமன் ராமன் அவன்.


பதிநான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து திரும்பி வரும் ராமனிடம் பரதன் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கிறான். சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்த பின், தம்பியின் ஆட்சி எப்படியிருந்தது என வினவுகிறான். மற்றவர்கள் நல்லபடியாகக்கூற, வசிஷ்டர் மட்டும் கோபத்துடன், "செய்யக் கூடாததைச் செய்துவிட்டான் உன் தம்பி," என்கிறார். என்ன நடந்தது எனக் கேட்கும் அண்ணனிடம் ராஜகுரு, "சூத்திரன் வேதம் படிக்கலாம் என ஆணையிட்டான் பரதன்," என்கிறார். "வேண்டுமானால், ஊர்க்கோடிக்குச் சென்று பார்," என்றும் கூறுகிறார். சினம் தலைக்கேறப் புறப்படும் ராமன் அங்கே சம்புகன் என்பவன் தலைகீழாகத் தொங்கியபடி தவம் இருப்பதைப் பார்த்து, "என்ன செய்கிறாய்," என்று கேட்கிறான். "உனக்குத் தெரியாமலா இங்கே வந்திருப்பாய் மன்னா? வேதம் படிக்க விரும்பினேன். பிராமணர்கள் போல நேரடியாக வேதம் படிக்க எமக்கு அனுமதி இல்லை என்பதால், இப்படித் தலைகீழாகத் தொங்கி என் தகுதியை வளர்த்துக் கொண்டு வேதம் கற்க எண்ணினேன்," என்கிறான் சம்புகன். அதைக் கேட்டு ஆத்திரவசப்படும் அந்த சத்திரிய மன்னன் வாளை உருவி அந்தச் சூத்திர ஞானியின் கழுத்தை ஒரே வீச்சில் துண்டாக வெட்டினான். "தர்மத்தை" மீறுகிறவர்களுக்கு உரிய தண்டனையை நிறைவேற்றிய திருப்தியோடு பாவம் தொலைக்க சரயு நதியில் தலை முழுகுகிறான்.இப்போது உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்க்கும் கும்பல்களுடைய கூச்சல்களோடு இந்த சம்புகன் கதையை ஒப்பிட்டுப் பார்த்தால் ராமனை ஏன் பாலத்துக்கு இழுக்கிறார்கள் என்கிற நுட்பத்தையும் புரிந்து கொள்ளலாம்.


அறிவியலை அசிங்கப்படுத்தி, பலர் உண்மையாக நம்புகிற ஆத்திகத்தையும் அசிங்கப்படுத்தி இவர்கள் கட்ட விரும்புகிற பாலம் - மக்களிடையே உறவை வளர்ப்பதற்கு அல்ல. மாறாக ஒற்றுமையைப் பிளப்பதற்கு. பாலம் என்பதே இணைப்பதற்காகத்தான் என்ற இயற்கையையே சிதைக்க முயலும் இந்தக் குறுமதியினர் குறித்து எச்சரிக்கை தேவை.