Wednesday 5 March 2008

ninaivu

இயற்கைக்குள் ஒரு தூரிகைப் பயணம்

லகத்தை அதிரவைத்த, நாட்டைக் கலங்கவைத்த அந்தச் செய்தி அந்தக் கிராமத்தையும் வியர்க்க வைத்தது. பெரியவர்கள் நம்ப முடியாதவர்களாக கண்ணீரில் உருகி நின்றதைக் கண்ட பத்து வயதுச் சிறுவனின் மனம் நாட்டில் நடப்பது என்னவென்று புரியாவிட்டாலும் ஏதாவது செய்யத் துடித்தது. நண்பர்கள் வட்டாரத்தில் பெயர் வாங்கிக் கொடுத்திருந்த தனது ஓவியத் திறமையால் அதைச் செய்ய முடிவு செய்தது. கிராமத்துச் சுவர்களில் கரித் துண்டுகளால் அந்த வயதில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குமட்டுமே வரைந்தாலும், துப்பாக்கியிலிருந்து பாய்ந்த மதவெறித் தோட்டாக்களுக்கு பலியான மகாத்மா காந்திக்கு அதன் மூலம் உணர்வஞ்சலி செலுத்தினான் ஆதிமூலம். அதற்குப் பிறகு அடிக்கடி அவன் வரைந்த பல ஓவியங்களில் காந்தியின் உருவம் பதிந்தது. ஓவிய உலகில் அறிமுகமானபின் ஆதிமூலத்தின் பென்சிலும் தூரிகையும் உருவாக்கிய காந்தி படங்கள் தனிக் கண்காட்சியே நடத்தும் அளவுக்குப் புகழ்பெற்றன. பொதுவாக ஓவியர்களை வரையத் தூண்டும் உருவ அமைப்பு காந்தியினுடையது. கார்ட்டூன்கள் முதல், திரை ஓவியங்கள், சிற்பங்கள் என காந்தியின் உருவம் எண்ணற்ற வகைகளில் கலைப் படைப்பாகியுள்ளது. ஆனால் ஆதிமூலம் பெரும்பாலும் கறுப்பு-வெள்ளையில் படைத்த காந்தியில் ஒரு தனி ஆழம் இருந்தது என்பது சக ஓவியர்களும் ரசிகர்களும் விமர்சகர்களும் ஒப்புக்கொண்ட உண்மை. அதற்குக் காரணம், ஓவியத்துக்கான உடல் அமைப்பு கொண்டவராக மட்டும் காணாமல், உள்ளத்தின் அமைப்பிலும் காந்தியை அவர் நேசித்தார்.

“தத்துவப்பார்வை, அரசியல் இவற்றில் பல மாறுபாடுகள் இருப்பவர்கள் கூட, விடுதலைப் போராட்டத்திற்காகவும் மத-சாதி வேறுபாடுகளைத் தாண்டிய ஒற்றுமைக்காகவும் அத்தனை கோடி மக்களை திரட்ட முடிந்த காந்தியின் ஆளுமையை மறுக்கமாட்டார்கள். எங்கோ ஒரு மூலையில் இருந்த எங்கள் கீரம்பூர் கிராமத்து மக்கள் குலுங்கிக் குலுங்கி அழுதார்கள் என்றால் அந்த மாமனிதனின் ஆளுமை எப்பேற்பட்டது! அவரது வாழ்க்கை வரலாறு, சிந்தனைகள் போன்றவற்றைப் பின்னர்தான் படித்துத் தெரிந்துகொண்டேன். அன்று முதல் இன்று வரை எனக்கு காந்தியின் வாழ்வு ஒரு ஈர்ப்பாகவே இருந்துவந்திருக்கிறது. அவரது மரணம் எதற்காக என்று தெரிந்துகொண்ட போது மேலும் அதிகமான ஈடுபாhட்டோடு காந்தியின் உருவங்களைக் கோடுகளில் கொண்டுவந்தேன்,” என்று சொன்னார் ஆதிமூலம். மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் உள்பட பல இடங்களில் அவர் படைத்த காந்தி ஓவியங்கள் அந்த ஈடுபாட்டைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. காந்தியின் வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்களையும், அவரது போராட்டங்களையும், மக்களோடு அவர் கலந்திருந்ததையும் நினைவுபடுத்திக்கொண்டிருக்கின்றன.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகில் கீரம்பூர் கிராமத்தில் 1938ம் ஆண்டு பிறந்தவர் ஆதி. ஓவியக் கிறுக்கல்களுக்கு பள்ளி ஆசிரியர்களும் நண்பர்களும் அளித்த ஊக்கம், அதிலேயே ஈடுபடும் முனைப்பை முடுக்கிவிட்டது. 1959ம் ஆண்டு சென்னை வந்த அவர், ஓவியம் மற்றும் கைவினைக் கலைப் பள்ளியில் சேர்ந்தார். 1966ல் நுண்கலையில் பட்டயம் பெற்றார். “ஓவியப் பள்ளியில் உலக அளவிலான ஓவிய முயற்சிகள், கோட்பாடுகள் பற்றிய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கத்தால் உருவான உணர்வுப் பதிவு ஓவியக்கோட்பாடு என்னுள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்று கோபுரமாய் உயர்ந்த தமது ஓவியத் திறனுக்கான அடித்தளம் அமைந்த பின்னணியை நண்பர்களோடு பகிர்ந்துகொண்டார்.

சென்னை நெசவுக் கலைப் பயிற்சி மையத்தில் ஒரு வடிவமைப்பாளராகப் பணியில் சேர்ந்த ஆதிமூலத்தின் அடங்காத கலைத்தாகம் அவரைப் புதிய முயற்சிகளுக்குத் தூண்டியது. நேரடித் தோற்றங்களாக இல்லாமல், எழுத்திலும பேச்சிலும் உள்ள உவமை நடையை ஓவியத்திலும் கையாண்டுபார்த்தால் என்ன என்ற முயற்சி அது. கறுப்பு-வெள்ளையிலேயே துவங்கிய அந்த முயற்சியில் உருவான படைப்புகள் பின்னர் “வெளி” என்ற பெயரில் பலரையும் ஈர்த்தன. அதன் தொடர்ச்சியாகவே அவர் உருவப் படங்கள், இயற்கைக் காட்சிகள் ஆகியவற்றோடு மட்டும் சுருங்கிக்கொண்டுவிடாமல், பார்வையாளர்களையும் கற்பனைகளுக்குள் இட்டுச் செல்லும் அருவபாணி (அப்°ட்ராக்ட்) ஓவியங்களிலும் தனி முத்திரை பதித்தார். வண்ணங்களின் உலகமாகிய அந்த அருவபாணி ஓவியங்களை ஒரு சாரார் கடுமையாகச் சாடிக்கொண்டிருந்தபோது, எதுவும் புரியவில்லை என்று எளிதாகத் தள்ளிக்கொண்டிருந்தபோது, குறிப்பாக அன்றைய பத்திரிகைகள் நவீன ஓவியங்களையே எள்ளி நகையாடிக்கொண்டிருந்தபோது, அசராமல் அவர் தமது திரைச்சீலைகளில் நடத்தியது ஒரு போராட்டம் என்றே சொல்லலாம். இன்று எங்கும் அவ்வகை ஓவியங்களைக் காணமுடிகிறது, அதில் தமிழகத்தின் பல இளைஞர்கள் புகழ் பெற்றார்கள், தொடர்ந்து சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதில் அன்று அவர் நடத்திய போராட்டத்திற்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.

அதே நேரத்தில், அருவபாணி என்ற பெயரில் எப்படி வேண்டுமானாலும் திரையில் தீட்டலாம், புரிந்துகொள்வதும் புரியாமல் போவதும் பார்வையாளரைப் பொறுத்தது என்று கூறி நழுவ முயன்றவர்களுடனும் தமது தூரிகையைச் சுழற்றியே போராடினார் ஆதிமூலம். “ஓவியம் ஒரு காட்சியின்பம் மட்டுமல்ல. கருத்தியல் உள்ளடக்கமும் அதற்கு உண்டு. காந்தி உருவங்களை நான் வரைந்த போது அதில் அவரது வாழ்க்கையின் செய்தியைச் சொல்லும் நோக்கம் எனக்கு இருந்தது. அதே போல், வண்ணங்களின் தொகுப்பில் மனதைப் பரவசப்படுத்துவது, ஆழமான சிந்தனைவசப்படுத்துவது, ஒரு தேடல் இன்பத்தைத் தருவது என்பது போன்ற நோக்கங்களும் இருக்கின்றன. சமூக அக்கiறை கொண்ட ஒரு ஓவியர் அதனை வெளிப்படுத்துவதற்கும் வண்ணங்களின் சேர்க்கையைப் பயன்படுத்த முடியும்,” என்று தமது ஓவியக் கோட்பாடு பற்றிக் கூறினார் அவர்.

இந்தக் கண்ணோட்டம் இருந்ததால்தான் இலக்கியப் படைப்பாளிகளோடு மிகுந்த இணக்கமான நட்பு கொண்டிருந்தார். ஏற்கெனவே இலக்கிய ஏடுகளில் எழுத்தாளர்களின் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் புத்தக அட்டைகளுக்கும் மாறுபட்ட ஓவியங்களைத் தந்ததன் மூலம் வளர்ந்திருந்த நட்பு அது. அந்த நட்பு எழுத்தாளர்-ஓவியர் என்ற இருவகைப் படைப்பாளிகளிடையே கருத்தியல் தோழமையை ஏற்படுத்தும் செயல்பாடாகவும் இருந்தது.
சென்னையில் எழுத்தாளர்கள்-ஓவியர்கள், கவிஞர்கள்-ஓவியர்கள், நிருபர்கள்-ஓவியர்கள் என்று சந்திப்புகளும் விவாதங்களும் நடத்தப்பட்டதற்குத் தூண்டுதலாக அமைந்தது.அப்படியொரு சந்திப்பின்போது ஓவியத்தின் அழகு பற்றிய விவாதம் வந்தது. எல்லாவற்றிலும் அழகு பொதிந்திருக்கிறது என்று அந்த விவாதம் பொத்தாம் பொதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.

“வெளியே நாம் காணும் காட்சிகளில் இருக்கும் அழகு நமக்குத் தெரிவதில்லை. ஆனால், புகைப்படமாகவோ ஓவியமாகவோ ஒரு சதுரம் அல்லது செவ்வகச் சட்டத்திற்குள் ஒரு இடத்தின் குறிப்பிட்ட பகுதியைக் காணுகிறபோதுதானே அந்த அழகு புலப்படுகிறது,” என்று நான் கேட்டேன்.

“இந்த பூமியும் வானமும் ஒரு சட்டம்தான். அதற்குள் இருக்கிற எல்லாமே அழகுதான். செவ்வகச் சட்டத்தைத் தாண்டி நம் பார்வை விசாலடைகிறபோது அந்தப் பேரழகைக் காணமுடியும். அழகு என்றால் மலைகளும் மரங்களும் வானமும் பறவைகளும் மட்டுமல்ல. மனிதர்களும் அழகுதான்.” -இப்படியோர் விளக்கத்தை ஆதிமூலம் அளித்தார்.

ஓவியங்களின் கட்டு மீறல் வடிவம் பற்றி விவாதம் திரும்பியது. ஓவியர் வி°வம், ஒரு சட்டத்திற்குள் நிற்க மறுத்து அதை மீறுகிற படைப்பு தனி அழகைப் பெறுகிறது என்றார். கவிதைகள் பழைய இலக்கணங்களை மீறியது பற்றிக் கவிஞர்கள் பேசினார்கள். நாவல்கள், சிறுகதைகளிலும் அந்தக் கட்டுமீறல் உத்திகளுக்கு நடக்கும் முயற்சிகள் பற்றிய தகவல்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. “பூமியும் வானமும் கூட சட்டங்கள்தான் என்று சொன்னீர்களே? அதிலே கட்டு மீறல் நடக்க முடியுமா,” என்று நான் கேட்டதில், ஆதிமூலம் என்ன சொல்கிறார் என்று அறிகிற நோக்கம் இருந்தது.

“ஏன் இல்லாமல்? பூமியை மீறிக்கொண்டு முளைவிடும் தளிர், மேகங்களைத் தாண்டும் பறவை, நிலப் பரப்பை உடைக்க முயலும் கடல் அலை, விண்ணை முட்டப் பார்க்கும் மலை இதுவெல்லாம் அப்படிப்பட்ட கட்டு மீறல்கள்தானே? இதுவெல்லாம் அழகுதானே?” கேள்விக் குறிகளிலேயே விடையளித்தார் ஆதிமூலம்.

அவர் அளித்த விளக்கங்களில் கண்ணுக்கு அழகு என்பதோடு மட்டுமல்ல, கண்ணோட்டத்திற்கு அழகு என்ற விரிந்த உள்ளடக்கமும் இருக்கின்றது. அவருடைய இந்தக் கண்ணோட்டம், மரபு ஓவியர்கள் என்றும் நவீன ஓவியர்கள் என்றும் வேறுபட்ட முகாம்களாய் இருந்த தமிழக ஓவியர்களை ஒரு பரந்த வெளிக்குக் கொண்டுவர உதவியது. அந்த இரு சாராருமே ஆதிமூலத்தை நேசித்தனர். சொந்தம் கொண்டாடினர்.

1960ம் ஆண்டில் சென்னையில் ஓவியங்களின் இந்தியத் தன்மை என்பது குறித்த ஒரு கலந்துரையாடல் நடந்தது. அதில் பங்கேற்ற அவர், இந்திய ஓவிய மரபின் அடிப்படையாகக் கோடுகள் இருக்கின்றன என்ற ஒரு கருத்தை முன்வைத்தார். பழங்குடி மக்கள் படங்கள், பண்டைய இலக்கியங்களைத் தாங்கிய பனை ஓலை ஏடுகள், கல்வெட்டுகள், வீட்டு வாசல்களில் மலரும் கோலங்கள், கோயில்களிலும குகைகளிலும் உள்ள சுவரோவியங்கள் என அனைத்திலும் அந்தக் கோட்டோவிய மரபு இருக்கிறது என்றார். அவருடைய படைப்புகளும் அந்த மரபை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆனால், தமக்கென ஒரு சுதந்திரமும் சமகாலத் தன்மையையும் கொண்டிருந்தன என்று ஓவியர்கள் எல்லோருமே குறிப்பிடுகிறார்கள்.

அவரது கோடுகள் சில இடங்களில் உடைந்திருக்கும். அந்த உடைப்புகள், ஓவியத் திரையைத் தாண்டி ‘வெளி’ என்பதற்குள் பார்வையாளர்களைக் கொண்டுசெல்வதற்குத் திறந்துவிடப்பட்ட கதவுகளாக இருந்தன என்கிறார் ஒரு ஓவியத் திறனாய்வாளர். சில ஓவியர்கள் பரந்த வெளியைப் படைப்பதாகச் சொல்லிக்கொண்டாலும் உண்மையில் தமது மனதுக்குள்ளேயே அல்லது ஒரு சிறு வட்டத்திற்குள்ளேயே நின்று விடுவது உண்டு. அவர்களிலிருந்து மாறுபட்டார் ஆதிமூலம். ஓவியப் படைப்புகள் என்னதான் உலகப் புகழ் பெற்றாலும், நல்ல பொருளாதாரத்தைத் தந்தாலும் தாம் நேசித்த எளிய மக்களிடமிருந்து விலகியேதானே இருக்கின்றன என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சைதை கலை இரவில் முதன் முதலாய் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஊர் கூடி ஓவியம் வரைவோம்’ நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டபோது தமது ஏக்கத்திற்கு ஒரு வடிகால் கிடைத்ததாய் உணர்ந்தார் போலும். உடனே ஒப்புக் கொண்டதுடன், குறித்த நேரத்திற்கு வெகுநேரம் முன்னதாகவே வந்து, பெரிய திரை அமைக்கப்படும் வரை காத்திருந்தார். சேரிக் குழந்தைகளும் எளிய மனிதர்களும் தயங்கி நின்றபோது, அவர்களிடம் தாமே சென்று வண்ணங்களையும் தூரிகைகளையும் எடுத்துக்கொடுத்தார். அவர்களை ஈடுபடுத்தும் வகையில் எளிமையான சித்திரம் ஒன்றைத் திரையில் கொண்டுவந்தார். மற்ற ஓவியர்களும் அதேபோல் இறங்க, அவர்களையெல்லாம் பார்த்து வியப்போடு நின்ற அந்த மக்கள் பின்னர் தாங்களும் திரையைத் தூரிகையால் தொட்டபோது கண்கலங்கப் பார்த்துக்கொண்டிருந்தார் ஆதிமூலம்.

“புகழ்பெற்ற கண்காட்சிக் கூடங்களில், சிறந்த திறனாய்வாளர்கள் முன்னிலையில் நான் என் ஓவியங்களைப் படைத்ததுண்டு. ஆனால் இன்று இங்கே இந்த எளிய மக்களோடு சேர்ந்து வரைந்த அனுபவம் என்றென்றும் என்னால் மறக்கமுடியாதது,” என்று கூறிய அவரது குரலில் உண்மையான நெகிழ்ச்சி இருந்தது. சில நாட்கள் கடந்தபின் லலித் கலா அகடமி வளாகத்தில் நடந்த ஒரு கண்காட்சிக்கு வந்த அவர் சக ஓவியர்களிடம், “வண்ணங்களின் முழுமையை நாம் எங்கெங்கோ தேடிக்கொண்டிருக்கிறோம். சமூகத்தை, எளிய மக்களை நாம் நெருங்குகிற இடத்தில்தான் அது இருக்கிறது,” என்று சொன்னார்.

மக்களுக்காக இயங்குவோர் மீதான இந்த மரியாதையின் காரணமாவும், மானுடப் பார்வை காரணமாகவும்தான், இந்த அழகிய பரந்த உலகத்தைத் தனது கல்லாப் பெட்டியாகச் சுருக்க முயலும் ஏகாதிபத்தியத்தின் மீது அவருக்குக் கோபமும் இருந்தது. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைக்கு எதிராக, செவ்வானத்தின் கீழ், ஃபிடல் தலைமையில் போராடும் கியூபா மக்களுக்கு உதவுவதற்காக இந்தியாவில் முயற்சி மேற்கொண்டபோது, விலை மதிப்பற்ற தமது ஓவியப்படைப்பு ஒன்றை வழங்கினார் ஆதிமூலம். அவரது இரங்கல் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார் தெரிவித்தார் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.ரா.வரதராசன். சென்னையில் நடந்த அந்த இரங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிற்பி தட்சிணாமூர்த்தி, ஓவியர்கள் ட்ராட்°கி மருது, வீரசந்தனம் உள்ளிட்ட ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அவர் தமக்குச் செய்த உதவிகளைக் குறிப்பிட்டார்கள். கலைஞர்கள் காழ்ப்புணர்ச்சிக்குள் சிக்கியவர்கள் என்ற பொதுவான நினைப்பை உடைத்தெறிந்தவர் அவர். சிக்கலான நாட்களில் பணஉதவி செய்ததோடு, வளரும் படைப்பாளிகள் உரிய அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளின் மூலமாகவும் உதவினார். ஆனால், மற்றவர்களின் வலிபொறுக்க முடியாத அந்த மூத்த படைப்பாளி பிற்காலத்தில் புற்று நோயின் வலியால் துடித்தபோது சக ஓவியர்களும் இலக்கியவாதிகளும் மற்ற கலைஞர்களும் செய்வதறியாது துடித்தனர். அந்த வலி, இந்தத் தமிழ் ஆண்டின் துவக்கமாகிய பொங்கல் நாளில் முடிவுக்கு வந்தது.

அந்த வலியோடும் அவர் இளம் ஓவியர்களின் கண்காட்சிகளுக்கு நேரில் வருவது, கலை தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்பது என்று இயங்கிவந்தார். அப்படிப்பட்ட சில நிகழ்ச்சிகளிலும் தொலைபேசி மூலமுhகவும் அவரோடு பேசியிருக்கிற எனக்கு அவரோடு ஒரு நேர்காணல் நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. தாம் குடியிருந்த சோழமண்டல ஓவிய கிராமத்திற்கு நேரில் வரவும், தம்முடைய படைப்புகளையும் மற்ற ஓவியர்களின் ஆக்கங்களையும் பார்க்கவும் அழைப்பு விடுத்தார். அந்த அருமையான அனுபவத்தின் பின்னணியோடு அவருடன் பேசுகிற வாய்ப்பை என்னால் ஏற்படுத்திக்கொள்ள முடியாமலே போனது ஒரு தனிப்பட்ட சோகம்.“குழந்தையாக இருந்தபோதும் சரி, வளர்ந்த பின்னரும் சரி, என் மனதில் எப்போதும் இயற்கை நிரம்பியிருக்கிறது. இயற்கையின் அழகையும் எல்லையற்ற பரப்பையும் நான் நேசிக்கிறேன், ஒரு பிரமிப்பில் மூழ்குகிறேன். அந்த நேசமும் பிரமிப்பும் நம் பார்வையெல்லைக்கு அப்பால் இருக்கிற உண்மையைத் தேடி என் படைப்பாக்க மனதைத் தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான் என் திரைச்சீலைகள் இயற்கைக்குள் என் முடிவடையாத பயணத்தைப் பிரதிபலிக்கின்றன. அந்தப் பயணம் சில நிலப்பரப்புகளையும் கடல்பரப்புகளையும் கண்டு நின்றுவிடுவதல்ல. வெளியின் பரப்பை மனதின் ஆழத்தில் தேடுகிற வண்ணமயமான பயணம் அது,” என்றார் அவர்.ஆதிமூலத்தின் அந்தப் பயண அனுபவம் இயற்கையின் படைப்புகளாகிய சக மனிதர்களை நேசிக்கிற கலைஞர்களுக்கு ஒரு தூரிகைக் கையேடாகத் துணைவரும்.