உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் செய்தியாளராகவும் ஈடுபாட்டாளராகவும் பங்கேற்ற அனுபவங்களும் உணர்வுகளும் முக்கியமானவை. இந்த மாநாட்டை உலகத் தமிழ் மாநாட்டு நிறுவனம் அங்கீகரிக்கவில்லை என்றாலும், இப்படியொரு மாநாடு தேவையா என்ற எதிர்ப்புகள் கிளம்பின என்றாலும் பெரும்பகுதி மக்கள் இந்த மாநாட்டை அங்கீகரித்தார்கள், இதன் தேவையை உணர்ந்து வரவேற்றார்கள் என்ற உண்மை ஓங்கி நிற்கிறது.
எங்கும் ஒரே உருவம்
இந்த மாநாடு ஆளுங்கட்சியினரின் கொண்டாட்டமாகவோ, தலைவர்களுக்குப் பட்டம் சூட்டுகிற விழாவாகவோ முடிந்துவிடக்கூடாது என்று தொடக்கத்திலிருந்தே, தமிழ்-தமிழர் வளர்ச்சியில் அக்கறையுள்ளவர்கள் வலியுறுத்திவந்தார்கள். மார்க்சிஸ்ட் கட்சி போன்ற அரசியல் இயக்கங்களும், தமுஎகச போன்ற பண்பாட்டு அமைப்புகளும் தனிப்பட்ட ஆர்வலர்களும் இதை வலியுறுத்தினார்கள். மாநாடு நடைபெற்ற கோவை நகரைப் பொறுத்தவரையில் கட்சிக்கொடிகளோ கட்டவுட்டுகளோ கண்ணை உறுத்தவில்லை, எங்கும் திருவள்ளுவர் உருவமே உயர்ந்து நின்றது.
மாநாட்டு நிகழ்வுகளுக்கு நாள்தோறும் வந்து நீண்ட வரிசைகளில் பொறுமையாகக் காத்திருந்தவர்களில் 80 விழுக்காட்டினர் கட்சி சாராதவர்கள். அவர்களில் பலர் கணினி இயக்கம் தொடர்பான தமிழ்ச்சொற்கள் முதல், சிந்து வெளி நாகரிகம் வரை உள்ளிட்ட கண்காட்சிகளில் வைக்கப்பட்டிருந்த தகவல்களை மாணவர்களும் மற்றவர்களும் ஆர்வத்துடன் குறிப்பெடுத்தார்கள். அவர்களுடன் பேசியபோது, தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசியதிலிருந்து விலகி தமிழிலேயே உரையாடுவதை இதுவரை கேலியாக நினைத்தது குறித்த வெட்க உணர்வை வெளிப்படுத்தினார்கள். தமிழில் பேசுவதிலும் எழுதுவதிலும் உள்ள ஒரு இன்பத்தை உணர முடிவதாகவும் இனி இதையே தொடர விரும்புவதாகவும் கூறினார்கள். குறிப்பாகக் குழந்தைகள் அப்படிக் கூறியது மாநாட்டின் ஒரு முக்கியமான வெற்றி என்றுதான் கூறவேண்டும். இந்த உணர்வு வளருமானால் இன்னும் பலகோடி செலவிட்டாலும் தகும்.
மாநாடு இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், கண்காட்சிகள், கலைநிகழ்ச்சிகள் என பொது அரங்குகளாக நடந்தது ஒரு பிரிவு. ஆய்வு அமர்வுகள், பொழிவரங்குகள் என ஆய்வாளர்களுக்காக நடைபெற்றது இன்னொரு பிரிவு. பொது நிகழ்வுக் கருத்தரங்குகளிலும் கவியரங்குகளிலும் பட்டிமன்றங்களிலும் குவிக்கப்பட்ட புகழ்ச்சி மாலைகள், வெளியே கட்சிக்கொடிகளும் கட்டவுட்டுகளும் இல்லாததை ஈடு செய்வதாக இருந்தன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கருத்தரங்கிலும் இது வெளிப்பட்டபோது அதற்குத் தலைமை தாங்கிய முதலமைச்சர் குறுக்கிட்டு "எனக்கான பாராட்டரங்கமாக இதை மாற்றிவிடவேண்டாம். தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு உங்கள் மேலான ஆலோசனைகளைக் கூறுங்கள்," என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகும் பாராட்டுப் போட்டி தொடர்ந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் து. ராஜா இருவரது உரைகள் மட்டுமே தனிமனித வழிபாட்டைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளைச் சொல்வதாக இருந்தன.
அலசிய ஆய்வறிக்கைகள்
இதற்கு நேர்மாறாக ஆய்வரங்குகள் நடந்தன. கோவை சிறு தொழில்கள் மேம்பாட்டு சங்க (கொடீசியா) வளாகத்தில் குளிரூட்டப்பட்ட சிறு சிறு அரங்குகள் இதற்காகவே உருவாக்கப்பட்டிருந்தன. ஆய்வாளர்களின் உரைகளையும் நோக்கர்களின் வினாக்களையும் விளக்கங்களையும் ஒளி/ஒலிப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் இந்த உரைகள் அப்படியே காணாமல் போய்விடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தின. இந்த அரங்குகளிலும் ஒரு சிலர் எதற்கும் இருக்கட்டும் என்று முதல்வருக்குப் பாராட்டு மாலை சூட்டினார்கள் என்றாலும் பொது அரங்குகளோடு ஒப்பிடுகையில் ஆய்வுப் பொருண்மைகளே மிகுதியாக படைத்தளிக்கப்பட்டன.
ஒரு அரங்கத்தில் நோக்கர்களில் ஒருவராகப் பங்கேற்ற ஒருவர், ஆய்வுரையின் மீது வினா எழுப்புகையில் தானும் முதலமைச்சரின் சாதியைச் சேர்ந்தவர்தான் என்று கூற முற்பட்டபோது அரங்கத் தலைவர் முதல் மற்ற நோக்கர்கள் வரையில் இப்படி சாதியால் அடையாளப்படுத்த முயல வேண்டாம் என்று அவரைத் தடுத்தனர்.
கல்வெட்டு ஆராய்ச்சிகளிலிருந்து தெரியவரும் உண்மைகள், பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து கிடைக்கும் வரலாறுகள், மற்ற மொழிகளோடு தமிழுக்கு உள்ள உறவுகள், பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழாக்கம் செய்வதில் உள்ள மொழிக்கட்டமைப்பு சார்ந்த சிக்கல்கள், சமயம் சார்ந்த படைப்புகளில் தமிழின் இடம், அறிவியல் துறையில் தொன்மைக்காலம் முதல் இன்று வரையில் தமிழின் பங்களிப்பு, பண்பாட்டுத் தளத்தில் தமிழர் வாழ்க்கை முறை மாற்றங்கள், ஊடகங்களின் பங்களிப்பு, நாடகம் திரைப்படம் உள்ளிட்ட கலைத்துறை நிகழ்வுகள் என பல்வேறு கோணங்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன.
இன்றைய திரைப்படப் பாடல்களைப் பற்றிய கட்டுரையை முன்வைத்த ஒருவர், பெண்கள் கணவன்மார்களின் பெயர்களைச் சொல்லக்கூடாது என தொல்காப்பியம் இலக்கணம் வகுத்திருப்பதையும் இன்றைய பாடல்கள் காதலனை அல்லது கணவனைப் பெண்கள் நீ, வா, போ என்றும் வாடா, போடா என்றும் சொல்வதாக அமைகின்றனவே என்று கூறி அதை ஒரு பண்பாட்டுச் சிதைவாக சித்ததிரித்தார். பார்வையாளர்கள் தரப்பிலிருந்து பெண்கள் இன்று பொது இடங்களுக்கு வருவதும் கணவனுடன் இவ்வாறு இயல்பாகக் கலந்துரையாடுவதும் ஜனநாயக வளர்ச்சிதானே என்று ஒருவர் கேட்க அவையினர் கரவொலி எழுப்பி அதை அங்கீகரித்தனர்.
உலக மயமாக்கல் சூழலில் தமிழ் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த பொழிவரங்கம் புதிய சிந்தனைகளைக் கிளறக்கூடியதாக அமைந்தது. சமயத் தமிழ் குறித்த ஒரு அரங்கு ஆன்மீகப் பணியாற்றிக்கொண்டே சாதி ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடியவர்கள் பற்றிய தகவல்களைப் பதிவு செய்தது. இன்னொரு அரங்கில், தமிழகத்தில் சாதிப் பிரிவுகள் உருவானதன் பின்னணியையும், ஆரிய வருகைக்கும் முன்பே வர்ணப்பிரிவுக்கான கூறுகள் இருந்ததையும் ஒரு ஆய்வுரை சுட்டிக்காட்டியது.
இணைந்துகொண்ட இணைய மாநாடு
இந்த மாநாட்டோடு உலகத் தமிழ் இணைய ஒன்பதாவது மாநாட்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு அது வளாகத்தின் இன்னொரு அரங்கில் நடைபெற்றது. கணினித் தொழில்நுட்பத்தில் தமிழ் பயன்பாடு, தமிழுக்கேற்ப கணினிச் செயல்பாடு என பல்வேறு கோணங்களில் ஆய்வறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கணினி வழி மொழிபெயர்ப்பு எந்திரம், செல்பேசியில் தமிழ் எழுத்துரு இல்லாமலே திருக்குறளைத் தமிழில் அனுப்புதல், தற்போதுள்ள மாறுபட்ட எழுத்துருக் குறியீடுகளுக்கு மாறாக ஆங்கிலம் போல் எங்கும் எவரும் பயன்படுத்தத்தக்க ஒருகுறி (யூனிகோட்) முறை என ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன.
இந்த இணைய மாநாட்டின் நிறைவுவிழா நிகழ்வில் தமிழ்நாடு அரசின் தகவல்தொழில்நுட்பத் துறைச் செயலர் ஒரு தகவலைத் தெரிவித்தார். அரசு அலுவலகங்கள் அனைத்திலும் இனி ஒருகுறி எழுத்துருக் குறியீட்டை மட்டுமே பயன்படுத்துவதற்கான ஆணையில் முதலமைச்சர் கையெழுத்திட்டுவிட்டார் என்ற தகவல்தான் அது. மாறுபட்ட குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு வந்ததால் ஒரு அலுவலகத்தின் ஆவணத்தை இன்னொரு அலுவலகத்தில் பெற முடியாத நிலை இருக்கிறது. பொதுமக்களும் அந்த ஆவணங்களைப் பயன்படுத்த இயலாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிற இந்த வரவேற்கத்தக்க அறிவிப்பு பின்னர் முறைப்படி அரசாணையாகவே வெளியானது.
விருந்தோம்பல்
ஆய்வாளர்கள், நோக்கர்கள் முதலியோருக்கான தங்கும் வசதி, உணவு ஏற்பாடு உள்ளிட்ட ஏற்பாடுகள் தமிழர் விருந்தோம்பல் மரபை உயர்த்திப் பிடிப்பதாக இருந்தன. பொதுமக்களுக்கும் மானிய விலையில் தரமான உணவு பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டன. நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களும் சங்க இலக்கிய நூல்களும் மலிவு விலையில் இந்த மாநாட்டையொட்டியேனும் மக்களுக்குக் கிடைக்கச் செய்திருக்கலாமே என்ற எண்ணமும் ஏற்பட்டது. லட்சக்கணக்கானோர் வந்து சென்ற இடமானாலும் தூய்மையாகப் பராமரித்த துப்புரவுப் பணி, அவ்வளவு பெரிய கூட்டத்தில் போக்குவரத்து நெருக்கடியோ வேறு பிரச்சனைகளோ ஏற்படாமல் கவனித்துக்கொண்ட காவல்துறையின் பணி என ஒவ்வொன்றும் பாராட்டத்தக்கதாக இருந்தது. சரியான வழிகாட்டலுடன் அரசு எந்திரம் முடுக்கப்படுமானால் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியும் என்று எடுத்துக்காட்டுவதாக இருந்தது.
ஊடகங்களின் செய்தியாளர்களும் ஒளிப்பதிவுக் குழுவினரும் எந்த அரங்கிற்கும் சென்று வருவதற்கான அனுமதி அட்டைகள், உடனுக்குடன் செய்திகளை அனுப்புவதற்குத் தகுந்தாற்போல மாநாட்டு அரங்கிற்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த ஊடக மையம், அங்கே நிறுவப்பட்டிருந்த சுமார் 150 கணினிகள், அனைத்துக் கணினிகளுக்கும் இணையத் தொடர்பு, அந்தத் தொடர்புகளில் சிறு சிக்கலும் வராமலிருப்பதை உறுதிப்படுத்திய பிஎஸ்என்எல் ஊழியர் குழு, கணினிகளில் ஏற்படக்கூடிய எதிர்பாராத தொழில்நுட்பக் குறைபாடுகளை உடனுக்குடன் சீர்ப்படுத்திய பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர் குழு, செய்தியாளர்கள் தங்கியிருந்த பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி விடுதியிலும் கணினி ஏற்பாடுகள், உணவு தயாரித்து வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண் கல்லூரியின் சமையல் கலைப் பயிற்சி மாணவர்கள் என முணுமுணுப்புக்கே இடமில்லாமல் ஆக்கியிருந்தார்கள். கருத்து சார்ந்த, அவரவர் கொள்கை நிலைபாடு சார்ந்த விமர்சனக் குரல்கள் அவ்வப்போது எழுந்தனவேயன்றி ஏற்பாடுகள் பற்றிய புகார்கள் ஊடகக்காரர்களிடமிருந்து வந்ததாகத் தெரியவில்லை.
நிறைவாய் நடந்த விழா...
எதிர்பார்ப்புகளோடு ஜூன் 27 அன்று மாநாட்டு நிறைவுவிழா நடைபெற்றது. நிறைவுரையாற்றிய முதலமைச்சர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சில முக்கியத் தீர்மானங்களையும் முன்மொழிந்தார். இலங்கைத் தமிழர்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டுமென ஒரு தீர்மானம் கேட்டுக்கொண்டது. மைய ஆட்சியில் அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்குவதற்குத் தாமதம் ஏற்படுமேயானால், முதல்கட்டமாக செம்மொழியான தமிழை மைய ஆட்சிமொழியாக்க வேண்டுமென்பது மற்றொரு தீர்மானம். உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்க ஒரு தீர்மானம் கோருகிறது. தமிழகத்தின் ஆட்சி மொழியாக-நிர்வாக மொழியாகத் தமிழை ஆக்குவதற்கு அலுவலர்களும் பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பு வழங்கக் கோரியது மாநாடு. தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்க உரிய சட்டம் இயற்றப்படும் என்பது ஒரு முக்கியமான அறிவிப்பு. சிதறிக்கிடக்கும் தமிழ் ஆராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைத்தல், திராவிடர் மொழி - பண்பாடு - வாழ்வியல் ஆகியவற்றைத் தொகுத்து நிரந்தரக் கண்காட்சி அமைத்தல், தமிழ் மொழியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஆவணக்காப்பகம் ஏற்படுத்துதல் ஆகிய அறிவுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. தமிழின் சிறந்த படைப்புகளைப் பிற இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்ப்பதற்கும், அறிவியல் திறனை வளர்க்கத் தேவையான புத்தகங்களைப் பிற மொழிகளிலிருந்து தமிழுக்குக் கொண்டுவருவதற்கும் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பும் சிறப்புக்குரியது. தமிழ் வளர்ச்சிக்கென 100 கோடி ரூபாயில் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும் என்பதும் தலையாயது.
மார்க்சிஸ்ட் கட்சியும், தமுஎகச போன்ற பண்பாட்டு அமைப்புகளும் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த கோரிக்கைகளில் சில இவ்வாறு அறிவிப்புகளாகியிருப்பது தொடர்ச்சியான போராட்ட இயக்கங்களுக்குக் கிடைத்த ஒரு வெற்றி என்றே கூறலாம். மாநாட்டைப் புறக்கணிக்காமல் விமர்சனத்தோடும் மாற்று ஆலோசனைகளோடும் பங்கேற்பது என்ற அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றி என்றும் கூறலாம்.
தொடரவேண்டிய போராட்டம்
நிறைவுவிழாவுக்கு மறுநாள் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மாநாட்டு வெற்றிக்கு உதவிய அமைச்சர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். உயர்கல்வியில் தமிழ் வழிப் பயிற்சிகள் தொடங்கப்படுவது பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லையே என்ற என் கேள்விக்கு அவர், நடப்பு ஆண்டில் பொறியியல் கல்லூரிகளிலும், எதிர்காலத்தில் மற்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றார். தமிழில் படித்தால் வேலை வாய்ப்பு என்ற சட்டம் அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப்படுமா என்று கேட்டபோது, அதற்கு வாய்ப்பு இருப்பதாகக்கூறினார். மைய ஆட்சியில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை ஆட்சிமொழியாக்க திமுக சார்பிலேயே நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்று கேட்டதற்கு, உங்கள் கருத்து ஏற்கப்படும், என்றார்.
நிறைவு விழாவில் பங்கேற்ற மைய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் இருவருமே தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை மைய ஆட்சி மொழிகளாக அறிவிப்பது குறித்தோ, மைய நாடாளுமன்றத்தில் பேசப்படும் மொழிகளாக்குவது குறித்தோ, மைய நிதி ஒதுக்கீடுகள் குறித்தோ ஒப்புக்குக்கூட எதுவும் சொல்லவில்லை, அது பற்றிய அரசியல் கேள்வியை நான் எழுப்பினேன். அதற்கு முதலமைச்சர், "அவர்கள் சொல்லாததற்குக் காரணம் நான்தான் கடைசியாகப் பேசினேன் என்பதால் இருக்கலாம்," என்று சொல்லிச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் மைய அரசு இதில் வார்த்தையைக் கொடுக்கத் தயாராக இல்லை என்ற விமர்சனமும் இருந்தது, அதே நேரத்தில் திமுக-வும் அங்கம் வகிக்கிற மைய ஆட்சிக் கூட்டணியின் தலைமைக்கட்சி அமைச்சர்களை எப்படிக் குறைகூறுவது என்ற நழுவலும் வெளிப்பட்டது.
இருமொழித் திட்டம், அதை மக்கள் ஏற்கும் வரையில் மும்மொழித்திட்டம் என்பது போன்ற அந்நாளைய மயக்க நிலைபாடுகளிலிருந்து மைய அரசு அவ்வளவு சீக்கிரம் தெளிந்துவிடாது என்பது தெளிவு. தமிழகப் பள்ளிகளில் இந்தித் திணிப்பைத் தடுக்க முடிந்தாலும் அதன் இடத்தில் தமிழைப் பயிற்று மொழியாக நிலைநாட்டாமல் ஆங்கிலவழிப் பள்ளிகள் வதவதவென்று பரவியதில் திமுக ஆட்சிக்கும் பங்கிருக்கிறது. ஆங்கில வழிக் கல்வியே சரியானது என்ற கோட்பாட்டு மயக்கம் திராவிட இயக்கத்திற்கே இருந்ததை மறுப்பதற்கில்லை. ஆங்கிலவழி தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்குவதில் நல்ல வசூல் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது என்கிற விவகாரமெல்லாம் கூட இருக்கின்றன. தமிழ் தொடர்பாக உணர்ச்சிகள் கிளப்பிவிடப்பட்டனவேயன்றி, அறிவியல்பூர்வ கண்ணோட்டங்கள் வளர்க்கப்படவில்லை என்ற உண்மை பெரும் பாறையாக முன்னால் நிற்கிறது. மைய ஆட்சியிலும் அமர்வதில் செய்துகொண்ட சமரசங்களுக்காக மைய ஆட்சியிலும் நாடாளுமன்றத்திலும், மத்திய-மாநில தொடர்புகளிலும், உச்சநீதிமன்றம்-உயர்நீதிமன்றங்களில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை வலியுறுத்தத் தவறிய பின்னணிகளும் உள்ளன. எல்லாவற்றையும் விட, உலகமயமாக்கல்/தனியார்மயமாக்கல்/தாராளமயமாக்கல் கொள்கைகளின் படுமோசமான விளைவாக எதிர்கால வேலைவாய்ப்பு குறித்த அச்சத்தின் காரணமாக தமிழ்வழிக்கல்வி குறித்த அவநம்பிக்கை மக்களிடையே பரவியிருக்கிறது; இந்த வர்த்தக ஆக்கிரமிப்புகள் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளுக்குமே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. இதற்கெல்லாம் உடன்பட்ட திமுக ஆட்சி இப்போது எந்த அளவுக்கு மாற்றுத் திசைக்கு மாறும் என்ற கேள்வி பெரிதாகவே இருக்கிறது. வட மாநிலங்களில் வாக்குவங்கி அரசியல் நோக்கம், நேரு மாடல் மொழிக்கொள்கையில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிற மயக்கம், இந்தப் பொருளாதாரக் கொள்கைகளைடச் செயல்படுத்துவதில் ஒரு மூர்க்கம்... இவையெல்லாம் எப்படி மாறும் என்ற கேள்வியோடும் இதை இணைத்துக்கொள்ளலாம்.
நிறைவு விழா அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும் அத்துடன் நிறைவடைந்து ஓய்வதற்கில்லை; அடிப்படையான மாற்றங்களுக்கான போராட்டங்கள் தொடரவேண்டியிருக்கிறது. மக்கள் அமைப்புகளுக்கு நிறையவே பணிகள் இருக்கின்றன.