Sunday 15 January 2012

பொங்க வேண்டிய பொங்கலுக்கு எங்கே இருக்கிறது எரிபொருள்?


விதவிதமான இனிப்புகள், பட்டாசுகள் என்று பொதுவாக தீபாவளிக்குத்தான் கிடைக்கும் என்பதால் அந்தப் பண்டிகையின் மீதுதான் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சின்னப்பையனான எனக்கு மோகம் இருந்தது. பொங்கல் விழாவைப் பொறுத்தவரையில் இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் விடுமுறை கிடைக்கிறதென்ற காரணத்தால் பிடித்திருந்தது, அவ்வளவுதான். ஆனாலும், பொங்கலைக் கொண்டாடுவதில்தான் பெற்றோருக்குக் கூடுதல் ஈடுபாடு இருந்ததாக உணர்வேன். உறவினர்கள், சுற்றத்தார் வீடுகளிலும் பொங்கலின்போது அந்தத் தனி ஈடுபாட்டைக் காண முடிந்தது. அப்போது அதன் காரணத்தை அறிகிற முனைப்பு இருந்ததில்லை. பின்னாட்களில் வரலாறு, பண்பாடு, அரசியல் என்றெல்லாம் விவாதிக்கத் தொடங்கியபோதுதான் காரணம் புரிகிறது.

மார்கழி மாதம் தொடங்கிய உடனேயே, வாசலில் பெரிய கோலம் வரைந்து அதில் தன் ஓவிய ஆர்வத்தை வெளிப்படுத்துவார் அம்மா. நம் ஊர்களில் இன்றைக்கும் பல பெண்களுக்கு அவர்களது கலைத்திறன் என்பதெல்லாம் வாசல் கோலத்தோடு நிறுத்தப்பட்டு விடுகிறது. விடிவதற்கு நேரம் இருக்கிறபோதே அவர்கள் விழித்துக்கொண்டு, பனியைத் தடுக்கக் காதுகளைப் பட்டியால் அல்லது துப்பட்டாவால் சுற்றிக்கொண்டு பலவண்ணக் கோலப் பொடிகளோடு இறங்கிவிடுகிறார்கள். புள்ளிகளும் போடுகளும் வண்ணப்பொடிகளின் பரப்பலுமாக தெருவே எழிற்கோலம் பூணுகிறது. ஒரே மாதிரியான கோலங்கள் மட்டுமல்லாமல், சில கோலங்கள் புதிய கற்பனைகளோடு உருவாகின்றன. தெருவோடு நடந்துபோகிறவர்களின் கால்களில் சிக்கி அந்தக் கோலங்கள் அழிந்துபோகும் என்று தெரிந்தும் அந்த சில மணிநேர ஓவியக்கண்காட்சியை மாதம் முழுக்க நடத்திக்கொடுக்கிறார்கள் பெண்கள்.

அம்மா அப்படிப்பட்ட புதிய படைப்பைச் செய்திருப்பார். பின்னர் நடுவில் ஒரு சாணி உருண்டையை வைப்பார். ஊர் ஊராக இடமாற்றலுக்கு உள்ளான தந்தையின் தொழில் காரணமாக, சொந்தமாக வீட்டில் மாடு கிடையாது. முதல் நாள் இரவே தெருவிலிருந்து சாணத்தைத் தேடி எடுத்துவைத்திருப்பார் அம்மா. கோலத்தின் நடுவில் வைக்கப்பட்ட சாணி உருண்டையில், ஒரு பூசணிப்பூவை செருகி வைப்பார். மாலையில் பூ வாடியிருக்கும், சாணம் முக்கால் வாசி காய்ந்திருக்கும். அதை அப்படியே எடுத்து, பூவின் இதழ்களோடு சேர்த்து வறட்டியாகத் தட்டி வைத்துவிடுவார். அடுத்த நாள் காலையில் புதிய கோலம், புதிய சாணம், புதிய பூசணிப்பூ, புதிய வறட்டி. மார்கழி முடிந்து தை முதல் நாள் காலையில் வாசலிலேயே கல் அடுப்பு வைத்து பானையில் அரிசி, பால், வெல்லம் இன்ன பிற பொருட்களைப் போட்டுப் பொங்க விடுவார். அப்போது அந்த அடுப்பின் எரிபொருளாக அந்த வறட்டிகளைத்தான் வைப்பார். பூவின் சருகுளோடு இணைந்த சாணம் நன்றாக எரியும்.

குக்கர் பொங்கல் வெகு இயல்பாகிவிட்ட இந்நாளில் சாண உருண்டையும் இல்லை, பூசணிப் பூவும் இல்லை. கல் அடுப்புக்குச் செய்யப்பட்ட சந்தனம், குங்குமம் மரியாதையில் கொஞ்சம் போல, வீட்டுச் சமையலறையின் எரிவாயு அடுப்புக்குக் கிடைக்கின்றது. சாண உருண்டை தேவையற்றதாகிவிட்டது. பூசணிக் கொடி வளர்க்க இடம் ஏது?

பொங்கல் விழாவை கிராமத்தில் உறவினர் இல்லத்தில் கொண்டாடியதும் நினைவுக்கு வருகிறது. என் பெற்றோருடன் ஒப்பிடுகையில் அவர்கள் முகங்களில் கூடுதலான மகிழ்ச்சியைக் கண்டிருக்கிறேன். அவர்கள் சொந்த நிலம், வீட்டுத் தொழுவத்தில் வளரும் சொந்த மாடுகள் என்று வாழ்ந்தார்கள். என் பெற்றோரைப் பொறுத்தவரையில், ஒரு காலத்தில் நமக்கு எவ்வளவு நிலபுலன் இருந்தது தெரியுமா பழைய தேதிகளுக்குள் பயணம் செய்கிற ஏக்க வாழ்க்கைதான். உறவினர் விட்டிற்கு அவர்களது வயலின் அறுவடையிலிருந்து வந்த நெல், தோட்டத்திலிருந்து வந்த காய்கறிகள் என்ற ஒரு பாதுகாப்பான உணர்வு அந்தக் கூடுதல் மகிழ்ச்சியின் பின்னணியில் இருந்ததை இன்று புரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் புரிதல்கள், சமூகப் பொருளாதாரம் பற்றிய ஒரு மார்க்சியக் கல்வி மனதில் படிந்ததால் ஏற்பட்டுள்ளன. இல்லையேல் மனதில் ஒரு வகைக் காழ்ப்புணர்வு படிந்திருக்கக்கூடும்.

காழ்ப்புக்கெல்லாம் தேவையின்றி இப்போது அந்தக் குடும்பத்தாரும் சென்னைவாசிகளாகிவிட்டார்கள்.  முன்பு, பொங்கல் கொண்டாட்டத்திற்கென்ற பல ஊர்களிலிருந்து நண்பர்கள் அந்த வீட்டிற்கு வந்துசேர்வார்கள். இன்றைக்கும் இவர்கள் ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு தைப்பிறப்பின்போதும் கிராமத்திற்குச் சென்று, அங்கே பொங்கல் கொண்டாடுவதை ஒரு குடும்பப்பண்பாடாக விடாமல் கடைப்பிடிக்கிறார்கள். நண்பர்கள் இப்போதும் அங்கே வருகிறார்கள். இன்று எனக்கு வேறுவகையான காழ்ப்பு ஏற்படுவதுண்டு. வேலைகளை முடித்துக்கொண்டு ஒரு ஆண்டாவது அவர்களோடு கிராமத்திற்குச் சென்று வர இயலவில்லையே என்ற ஏக்கத்திலிருந்து முளைக்கும் காழ்ப்புணர்வு அது.

பொங்கல் முடிந்து திரும்பி வந்தபின், இந்த வருசமும் நீ ஏண்டா வரலை, என்று கேட்டு அந்த அனுபங்களை பகிர்ந்துகொள்கிறபோது ஒரு ஏக்கம் வெளிப்படுவது போல் உணர்கிறேன். அதன் பின்னணியில் சொந்த நிலத்தின் பரப்பு குறைந்து போனது, விளைச்சல் மிக மிகக் குறைந்து போனது, பொங்கலுக்கான அரிசியும் காய்கறிகளும் கடைகளிலிருந்தே வாங்க வேண்டியதாகிப்போனது ஆகிய பகிர்ந்துகொள்ளப்படாத உணர்வுகள் இருக்கக்கூடும்.

நகரத்தில் வேறு தொழில்களில் நன்றாகக் காலூன்றிய நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக கிராமத்து நிலத்தை விற்றது பலருக்கு நேர்ந்திருக்கும். அவர்களை விடவும் பலமடங்குப் பேருக்கு, வேறு வழியில்லாமல் தங்கள் சொந்தக் காணி நிலத்தையும் கிராமத்து வீட்டையும் விற்று, கந்துவட்டிக் கடன்களை அடைத்துவிட்டு, நகரத்திற்கு புலம்பெயர்ந்து, கிடைத்த வேலையில் ஒட்டிக்கொண்டிருக்கிற வாழ்க்கைதானே வாய்த்திருக்கிறது? நகரத்தில் முளைத்துக்கொண்டே இருக்கும் குடிசைப்பகுதிகளில் அவர்கள் வந்து அடைகிறார்கள். இங்கே அத்தக்கூலி ஆகாத கூலி வேலைளுக்காக, கட்டுப்படியாகாத பேருந்துக் கட்டணம் செலுத்தி நாள்போறும் மணிக்கணக்கில் பயணம் செய்து திரும்புகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோராக இருப்பது எப்படி என்பது தனியொரு விசாரணைக்கு உரியது.

ஏற்கெனவே நகரத்தில் நிலைத்துவிட்டவர்களின் வாரிசுகள் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கல்வியோடு தொடர்பு கிடைத்து நவீன வேலைகளில் உட்கார்ந்துவிட்டார்கள். கிராமத்தோடு தொடர்போ இல்லாத தலைமுறைகளான இவர்களது பொங்கல் கொண்டாட்டமும் நகரத்தோடு மட்டுமே நின்று விட்டது. மடிக்கணினியை விரித்து இணையத்தின் சமூகவலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துச்சொல்வதாகவே அமைந்துவிட்டது.

ஆனால், முன்பு நெருங்கிய சொந்தக்காரர்கள், தெருக்காரர்கள் (வேறு சொற்களில் சொல்வதானால் சொந்த சாதிக்காரர்கள்) இவர்களோடு மட்டுமே பரிமாறப்பட்ட பொங்கல் வாழ்த்து, இப்போது உலகம் முழுவதும் எல்லாத் தெருக்காரர்களோடும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இந்த வாழ்த்துத் தொடர்புகள் எதிர்காலத்தில், நாட்டின் அரசியல் - பொருளாதாரம் - சமூகக் கொடுமைகள் தொடர்பான கோபத்தைப் பகிர்ந்துகொள்ளும் தொடர்புகளாகவும் பரிணமிக்கும், பரிணமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது. கடந்த ஆண்டில் பல நாடுகளில் ஏற்பட்ட கொந்தளிப்புகளின் பின்னணியில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பும் செயல்பட்டிருக்கிறது. இங்கேயும் அந்த நற்செயல் விளைய வேண்டும் என்ற விருப்பம், இதே அக்கறைகொண்டோரின் தொடர்ச்சியான சமூகவலைத்தளச் செயல்பாட்டால் நிறைவேறும், நிறைவேற வேண்டும். களத்தில் இறங்கிச் செயல்படுகிற போராளிகளுக்கு அது துணையாகும், துணையாக வேண்டும்.

மக்களின் ஆவேச எழுச்சிப் பொங்கலுக்கான எரிபொருள்கள் நிறைய இருக்கின்றன. புதிய பொருளாதாரக் கொள்கைகள் என்ற பெயரில், பழைய சுரண்டலைக் கெட்டிப்படுத்தும் வஞ்சகங்கள்; இயல்பான நாகரிக வளர்ச்சி என்ற போர்வையில் திணிக்கப்படும் பண்பாட்டுச் சிதைவுகள்; உலகச் சூழலின் மேல் பழிபோட்டு நியாயப்படுத்தப்படும் உள்நாட்டு துரோகங்கள்; இவற்றின் மீதான ஆத்திரங்களை உள்ளூர் வன்முறை மோதல்களாக மடைமாற்றம் செய்யும் சாதிய வன்மங்கள்; நவீன உடைகளையும் நவீன நகைகளையும் கொஞ்சம் நவீன வேலைகளையும் பெண்களுக்குக் கொடுத்துவிட்டுப் புராதன ஒடுக்குமுறைகளுக்குள் நவீன முறையில் சிக்கவைக்கும் ஆணாதிக்க வக்கிரங்கள்; இவை குறித்த மக்களின் நியாயமான ஆதங்கங்கள் போராட்டமாக எழுவதைத் தடுக்க, பழைய மரபுகளை மீட்பது என்ற போர்வையில் பகைமையிலும் சோதிடம் உள்ளிட்ட மூடத்தனங்களிலும் மூழ்கடிக்கும் மதவெறிக் கயமைகள்... எரிக்கப்பட வேண்டிய போகிப்பொருள்களுக்கா பஞ்சம்?

சிதறிக்கிடக்கும் எரிபொருள்களைத் திரட்டிக் குவிக்கிற வேலையில், சமுதாய மாற்றத்திற்காகத் தங்களை ஒப்படைத்துக்கொண்ட மக்கள் நேய இயக்கங்கள் ஈடுபட்டிருக்கின்றன. ஜல்லிக்கட்டுக் காளைகளின் கொம்புகள் போல் அந்த முனைப்பு மேலும் மேலும் கூர் தீட்டப்பட வேண்டும். கூர் மழுங்க வைப்பதற்காகப் பல்வேறு வடிவங்களில் ஏவிவிடப்படும் அடையாள அரசியல் திசைதிருப்பல்கள், கூட்டுக் கலகங்களின் வெடிப்பில் முறியடிக்கப்பட வேண்டும். தடையின்றி எரியும் போராட்டத் தீயில், சுடச்சுட மணக்க மணக்க மாற்றப் பொங்கல் விருந்தாகட்டும்.

(தீக்கதிர் 15.1.2012  இதழ் வண்ணக்கதிர் இணைப்பில் எனது கட்டுரை)

Sunday 1 January 2012

இது “நம்” புத்தாண்டு இல்லையா?


நேற்றைய இரவின் நடுப்புள்ளியாக 12 மணி முடி கிறது. இன்றைய நாளுக்கான முதல் நொடி தொடங்குகிறது. செல்லி தன் இசையொலியில் அழைக்க எடுத்தவுடன் ஒரு இளம் நண்பரின் குரல், புத்தாண்டு வாழ்த்து கூறுகிறது. இந்த நொடிக்காக விழித்துக் காத்திருந்ததாக மகிழ்ச்சி யுடன் கூறுகிறார் அவர். அடுத்தடுத்து சில அழைப்புகள் இப்படியே வர இளைஞர்களின் வாழ்த்தில், ஒரு புதிய ஆண்டின் தொடக்கத்தில் வயது குறைவது போன்றதொரு உற்சாகம் தொற்றுகிறது.

தெருவில், சாலையில் வாகனங்களில் வேக மாகச் செல்கிறவர்கள் எதிரே வருகிறவர்களுக் கெல்லாம் வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். வாழ்த் துப் பெற்றவர்கள் பதில் வாழ்த்துச் சொல்லும் போதே, வேகத்தைக் கட்டுப்படுத்திப் போவ தற்கு அறிவுரை சொல்கிறார்கள். நடந்து செல் கிறவர்கள் எதிரே வருபவர்களுக்குக் கை குலுக்க லோடு வாழ்த்துச் சொல்கிறார்கள். சில இடங் களில் சாக்லெட், கேக் ஆகியவையும் கிடைக் கின்றன. பொதுமக்கள் முன்னிலையில் நடந்து கொண்டிருக்கிற கலை இரவு. சரியாக இந்த நேரத்தில் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு, மேடையி லிருந்தும் பார்வையாளர்களிடையேயிருந்தும் புத்தாண்டு வாழ்த்துகள் உரக்கப் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. வீடுகளில் குடும்பத்தா ரின் வாழ்த்துகளோடு விடிகிறது. இன்று முழுக்க ஒரு கடமை போல வாழ்த்துவது  நடக்கிறது.

தொழில் நிமித்தம் அன்றாட ரயில் பயண வாழ்க்கை வாய்த்த நண்பர்கள், புத்தாண்டை யொட்டி ஒரே வண்டியின் ஒரே பெட்டியில் பய ணிப்பதும், வழியில் உள்ள நிலையங்களில் ஏறுகிறவர்கள் எங்களோடு இணைந்துகொள் வதும், ஆளுக்காள் பரிசுப்பொருள்களோடு  கவிதை, உரை எனப் பரிமாறிக்கொள்வதுமாய் பய னுள்ள முறையில் அந்தப் பயணம் அமைகிறது. கடந்த ஆண்டைவிட மிகுந்த மகிழ்ச்சிகர நிகழ்வுகள் கூடி வரவேண்டும், துன்ப நிகழ்வு கள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற விருப்பம் அந்த வாழ்த்துக்குள் இருக்கிறது. நல்லதே நடக்க வேண்டும் என்ற நாட்டமும், மனமுவந்து வாழ்த்துவதால் அப்படி நடக்கும் என்ற நம்பிக் கையும் அதில் பொதிந்துள்ளன. நம்பிக்கைப் படி நடக்குமோ நடக்காதோ, வாழ்த்தப்படுகிறவர்கள் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான ஒரு ஊக்குவிப் பாக அந்த வாழ்த்துகள் அமைவது உண்மை.

புத்தாண்டுக்காக வாங்கிய புதிய டயரியின் அட்டையைப் பிரியத்தோடு தடவிக்கொடுத்த படி இன்றைய அனுபவத்தையும் உணர்வையும் எழுதுகிறவர்கள் உண்டு. இந்த ஆண்டாவது முழுமையாக எல்லா நாட்களும் நாட்குறிப்பை எழுதுவேனாக, என்று ஒவ்வொரு ஜனவரி ஒன் றிலும் எழுதுவது என் வழக்கம்! இதைச் சொன்ன போது ஒரு நண்பர், பரவாயில்லை நீங்கள் இந்த அளவுக்காவது எழுதுறீங்க... நான் புதுசா வாங்கி வைக்கிறதோட சரி, என்றார்! பலருடைய கதையும் இப்படித்தான். ஆனால், புதிய டயரி வழங்கப்படுகிறது என்றால் அதை முண்டி யடித்துப் பெறுவதில் யாரும் பின்தங்குவ தில்லை!

தேவைகளையொட்டிப் புதிய ஆடைகளை எப்போது வேண்டுமானாலும் வாங்கி அணிய லாம்தான். ஆயினும் புத்தாண்டையொட்டி வாங்கி அணிவதில் இரட்டிப்புக் களிப்பு. அதுவே யாராவது அன்பளிப்பாய் வழங்கிய புத்தாடை என்றால் மும்மடங்கு களிப்பு!

அந்தக் களிப்பை அங்கீகரிக்க மறுத்து, இந்தக் கொண்டாட்டமெல்லாம் தேவைதானா, என்று கேட்கிற குரல்களும் ஒலிக்கின்றன. இது நம் புத்தாண்டு அல்ல. நம் புத்தாண்டு என்றால் அது சித்திரைதான். அதைக் கொண்டாடுவதுதான் நம் கலாச்சாரம், என்று இதிலே கலாச்சாரப் பகை மையைப் புகுத்துகிற குரல்கள் அவை.
பருவமாறுதல்கள் இயற்கையாக நடக்கின்றன. அதிலே இப்படி ஆண்டுக்கணக்குகள் வகுத்துக் கொண்டதெல்லாம் அந்தப் பகுதியின் மக்கள் வாழ்க்கை முறை சார்ந்து உருவானதுதான். ஆங் கிலப் புத்தாண்டும் அதற்கான கொண்டாட்டமும் எங்கும் பரவியிருப்பதன் பின்னணியில் கடந்த நூற்றாண்டுகளின் காலனியாதிக்கம், அவற்றின் அடிப்படையில் கட்டப்பட்ட சமூகப் பொருளாதாரம் போன்ற பல நிலைமைகள் இருந்திருக்கின்றன என்பது உண்மைதான். அவையெல்லாம் வரலா றாகிவிட்ட நிலையில், தற்போதைய காலண்டர் முறை வலுவாக நடப்பிற்கு வந்துவிட்ட சூழலில், மாதக் கணக்குகளும் ஊதியங்களும் இதன் அடிப் படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. நடை முறை வாழ்க்கையில் இதை ஏற்றுக்கொண்டு விட்ட பிறகு, புத்தாண்டுத் தொடக்கத்தை மட்டும் ஏற்க மாட்டேன் என்பதில், கலாச்சார அடையா ளத்தைப் பாதுகாக்கிற உணர்வுதான் வெளிப் படுகிறதா?

“நம்” புத்தாண்டு என்பதே ஒரு திணிப்பு வேலைதான், ஒரு வகை அடையாள அழிப்புதான் என்ற எதிர்ப்பு எழுந்துள்ளதை இவர்கள் கண்டு கொள்ள மறுக்கிறார்கள். அந்தந்த வட்டாரத்தின் விவசாயம் உள்ளிட்ட பின்னணிகளில் உருவாகி யிருந்த கொண்டாட்டங்கள், பின்னர் சமஸ்கிருத மயமாக்கலோடு இணைந்த கலாச்சார ஆதிக்கத் தில் மறக்கடிக்கப்பட்டுவிட்டன.
எடுத்துக்காட்டாக, தமிழ் மக்களின் புத்தாண்டு என்பது தை முதல் நாள்தான் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், அரசியல் அதிகாரம், பண்பாட்டு ஒடுக்குமுறை இவற் றோடு சேர்ந்து சித்திரைதான் நம் ஆண்டின் முதல்நாள் என்றாக்கப்பட்டுவிட்டது.

ஆங்கிலப் புத்தாண்டு திணிக்கப்பட்ட ஒன்று என்றால், இது மட்டும் என்ன? நடுவில் இதைச் சரி செய்வதற்காக, தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு நாள் என்பதை மீட்டமைக்கக் கடந்த ஆட்சியில் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தற்போதைய அரசு திருத்தி மறுபடி சித்திரையையே கொண்டாடச் சொல்லிவிட்டது.

வாழ்த்து அட்டைகள், பரிசுப்பொருள்கள் விற் பனை உள்ளிட்ட வர்த்தக நோக்கங்களுக்காகவே ஆங்கிலப்புத்தாண்டு பற்றிய எதிர்பார்ப்புகள் கிளப்பப்படுகின்றன என்றொரு வாதம் வைக்கப் படுகிறது. இன்றைய முதலாளித்துவ சமுதாய அமைப்பில் எதுதான் வர்த்தகமயமாகவில்லை? சித்திரை முதல்நாளுக்குக் கூட பெரிய வர்த்தக நிறுவனங்கள் சிறப்புச் சலுகைகள் அறிவிக்கின் றன. அட்சய திருதியை என்று புதிதாக ஒன்று நம் மக்களின் மீது புகுத்தப்பட்டு, அன்று ஒரு அரைப் பவுன் நகையாவது வாங்கியாக வேண்டும் என்ற மனநிலை ஏற்படுத்தப்படவில்லையா?

இப்படிப்பட்ட விவாதங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, உழைப்பாளிகள், மாணவர்கள், இளைஞர்கள், பக்கத்துவீட்டு - எதிர்வீட்டு அன் பர்கள் என ஹேப்பி நியூ இயர் வாழ்த்தி 2012ஐ வரவேற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர் களில் பலர் சம்பிரதாயப்படி சித்திரையையும் கொண்டாடுகிறவர்கள்தான்.

இவர்களது கொண்டாட்டங்களும் வாழ்த்துப் பரிமாற்றங்களும் புத்தாண்டை வரவேற்றுக்கொண் டிருக்க இவற்றில் எந்த சம்பந்தமும் இல்லாதவர் களாக ஒரு பகுதி மக்கள் விழா வேலிக்கு அப்பால் நிறுத்தப்பட்டிருக்கிறார்களே! கொண்டாட்டங் களில் கழிக்கப்படுகிறவைகளுக்காகக் காத்திருக் கிறார்களே. அப்படி ஏதாவது கிடைத்தால் அதுதான் கொண்டாட்டம் என்று குதிக்கிறார்களே. இவர் களுக்கு எந்த மதத்தின் கடவுளும் எதுவும் செய்வதில்லை. தாங்கள் இப்படி விளிம்புக்குத் தள்ளப்பட்டதற்கு காரணம் அரசின் கொள்கை களும், சமுதாயக் கெடுபிடிகளும்தான் என்பதையும் அறியாமல் இருட்டிலேயே கிடக்கிறார்கள். இவர்கள் இருப்பதே அரசு எந்திரத்திற்கு, இவர்கள் இருக்கும் இடங்களைக் கையகப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறபோதுதான் தெரிய வருகிறது...

இவர்களும் புத்தாண்டு கொண்டாடுகிற புதிய மலர்ச்சிக்கான மாற்றம் நிகழ்ததப்பட்டாக வேண் டும். அந்த மாற்றத்திற்காகப் போராடுகிறவர்களின் லட்சியம் வென்றாக வேண்டும். அதற்கான ஈடு பாடாகப் புத்தாண்டு வாழ்த்து ஒலிக்கட்டும்.

(தீக்கதிர் 1-1-2012 இதழ் வண்ணக்கதிர் இணைப்பில் வந்துள்ள எனது கட்டுரை)