நோயும் நோவும் நேர்த்திக்கடனும்
நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடிச் வாய்ப்பச் செயல்புரிகையில் நோய் தணிவது மட்டுமல்ல அது மனதில் சில உணர்வுகளைத் தணிய விடாமல் கொழுந்துவிட்டு எரியவும் வைக்கிறது.
சிலர், இனிமேல் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்டு கட்டுப்பாட்டுடன் இருக்க உறுதிபூணுகிறார்கள். இனிமேல் °வீட் சாப்பிடவே கூடாது, எண்ணெய்ப் பலகாரங்களின் கிட்டேயே போகக்கூடாது, ஒழுங்கா உடற்பயிற்சி செய்யணும்... இப்படியாக. சிலருக்கு ‘பிரசவ வைராக்கியம்’ என்பார்களே அப்படியாக, நோய் குணமாகி நன்றாக நடமாடத் தொடங்கியதும் படிப்படியாக இந்த உறுதிகள் குலைந்துவிடும்.
வேறு சிலர், முந்தைய நேர்த்திக்கடனில் பாக்கிவைத்ததால்தான் கடவுள் போட்டுப்பார்த்துவிட்டார் என்பதாகக் கருதி, வட்டியும் முதலுமாக புதிய நேர்த்திக்கடன் செலுத்த, மருத்துவச் செலவு போதாதென்று திருத்தலப் பயணச்செலவையும் ஏற்றிக்கொள்வார்கள்.
இன்னும் சிலர், தத்துவ வாழ்க்கை என்றால் ஏதோ எதிலும் பட்டுக்கொள்ளாத துறவு வாழ்க்கை என்பதாக யாருடனும் ஒட்டாமல், ஆனால் எல்லோருக்கும் சுமையாக, ஆசைகளின் அனர்த்தங்கள் பற்றி அறிவுரை பொழிந்துகொண்டிருப்பார்கள். அதிலேயும் சிலர், வாழ்க்கையில் என்ன வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் நடக்கலாம்... அதனால இருக்கிற சுகங்களையெல்லாம் அனுபவிச்சுட்டுப் போயிடுவோம் என்று இறங்கிவிடுவார்கள்.
எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘உயிராசை’ என்றொரு குறுநாவல் எழுதினார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தபின் எழுதிய கதை அது. ஒரு கட்டட விபத்தில் சிக்கி, இடிபாடுகளுக்குக் கீழே நகர முடியாமல் ஒரு வார காலம் மாட்டிக்கொண்ட ஒரு எழுத்தாளரின் அனுபவமும் எண்ண ஓட்டங்களும் அந்தக் கதையில் துல்லியமாக வெளிப்படும். அந்த இடிபாட்டுச் சூழல் பற்றிய சித்தரிப்பு சுஜாதாவுக்கேயுரிய தகவல்நுணுக்கங்களுடன் அமைந்திருக்கும். மீட்கப்பட்ட பின் தன்னை பேட்டி காணவரும் நிருபரிடம் அந்தக் கதையின் நாயகர் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்பட்டிருப்பது பற்றியும், தனது கனவு ஒன்றைப் பற்றியும் சொல்லிக்கொண்டே சாலையோரமாக நடந்துபோகும்போது பின்னால் வந்த லாரி மோதி பொட்டென்று போய்விடுவார். வாழ்க்கை நிலையற்றது, லட்சியங்களை மூட்டை கட்டிவைத்துவிட்டு வருவதுபோல் வாழ்ந்துவிட்டுப் போங்கள் என்ற, புரட்சிகர சிந்தனைகளுக்கு எதிரான விரக்திகர மழுங்கடிப்புத் தத்துவம் நுட்பமாகப் புகுத்தப்பட்டிருக்கும். நோயும் நோவும் இப்படியெல்லாம் சொந்தக் கட்டுப்பாடு, நேர்த்திக்கடன், சுகவேட்கை, அவநம்பிக்கை என்ற பாடங்களை மட்டும்தான் கற்பிக்க வேண்டுமா?
நானும் ஒரு நோயின் பிடியில் சிக்கினேன். சாதாரண காய்ச்சல், உடல் வலி என்பதாகத் தொடங்கி, அப்புறம் மூட்டுக்கு மூட்டு வலி பின்னியெடுத்து, பின்னர் வலி கால்களில் மட்டுமாகக் குடியேறி, கணுக்கால்களைச் சுற்றி ஆக்கிரமித்து, ஒரு சில நிமிடங்கள் கூட நிற்க முடியாமல், பத்தடி தொலைவுக்குக் கூட நடக்க முடியாமல், வேளை தவறாமல் மருந்து, உணவுக் கட்டுப்பாடு, அசதி, படுத்த படுக்கை, தூக்கம்... என்று கிடந்தேன். புத்தகம் படிக்க வாய்ப்பு என்று நினைத்தால் படித்த வரிகளின் பொருளை உள்வாங்கவிடாமல் தடுத்தது வலி. வீட்டுச் சிறை எவ்வளவு கொடூரமானது என்பதைக் கொஞ்சம் அனுபவப்பூர்வமாக உணரமுடிந்தது. ‘இப்படியாவது வீட்டோடு இருக்கிறீர்களே’... குடும்பத்தினரின் உணர்வை, வீட்டுக்கு வந்த நண்பர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.
சாலையில் விந்தி விந்தி நடப்போர், நின்று நின்று நடப்போர், சுவரைப் பிடித்துக்கொண்டே நடப்போர் போன்றோரின் துன்பத்தை முன்னெப்போதையும் விட நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
எங்கள் குடியிருப்பில் இந்த பாதிப்புக்கு உள்ளாகாதவர்களே இல்லை என்கிற அளவுக்கு அநேகமாக எல்லா வீடுகளுக்கும் இதைக் கொண்டுபோயிருக்கின்றன கொசுக்கள். ஆனால் அது ஒரு கிராமம். சென்னை போன்ற நகரங்களிலாவது கொசு விரட்டிப் புகை, மருந்தடித்தல் என்று அவ்வப்போது கண்ணில் படுவதுண்டு. இந்த கிராமத்தில் அப்படிப்பட்ட ஏற்பாடு எதுவும் கிடையாது. ஊராட்சி மன்ற உறுப்பினர்களை அணுகினால், தலைவர் மீதும் நிர்வாகத்தின் மீதும் வண்டிவண்டியாய் புகார்களை வைத்திருக்கிறார்கள்.
மருத்துவரை நாடுவதானால் கூட, நகரத்திலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வருகிற ஒரு தனியார் மருத்துவர்தான். மற்றபடி எந்தவொரு அவசரத் தேவைக்கும் நகரத்திற்கே சென்றுவர வேண்டும். நகரத்தின் நெருக்கடிகளிலிருந்து விலகி காற்றோட்டமான, அமைதியான இடம் என்று இங்கு குடியேறியவர்களெல்லாம் இப்படிப்பட்ட அவசர மருத்துவத் தேவைகளின்போது நொந்துபோய், இவ்வளவு தூரம் வந்து குடியேறியதை எண்ணி வெந்துபோகிறார்கள்.
அநேகமாக, தமிழகம் முழுவதுமே இந்த முறை இவ்வகைக் காய்ச்சல் ஒரு ஆட்டம் போட்டிருக்கிறது. ஒரு மருத்துவப் பத்திரிகையில் செய்தியாளராக உள்ள நண்பர் ஒருவர், “இது சிக்குன் குனியா என்று சொல்லிவிட முடியாது. இது என்னவென்றே கண்டுபிடிக்கப்படாத இன்னொரு வகையான, உயிராபத்து இல்லாத ஒரு கிருமிக் காய்ச்சல்தான். சிக்குன் குனியா, பறவைக் காய்ச்சல், இப்போது பன்றிக் காய்ச்சல் என்று பரவி ஒரு பீதிச் சூழல் உருவாகியிருப்பதால் இதற்குப் பெயர் எதுவும் சூட்டாமல் சிகிச்சையை மட்டும் செய்துவருகிறார்கள்,” என்றார்.
தகவலறிந்து என்னோடு தொடர்புகொண்டு நலன் விசாரித்தவர்கள் எல்லோருமே தாங்களும் அண்மையில் அல்லது சில மாதங்களுக்கு முன்னால் இதே போல் பாதிக்கப்பட்டதைப் பகிர்ந்துகொண்டார்கள். ஓரிரு நண்பர்கள் இப்போதும் முழுமையாக வலியிலிருந்து விடுபடவில்லை என்று தெரிவித்தார்கள். ஒரு நண்பர், எனக்கு இரண்டு மாதங்களில் இந்த அளவுக்குக் குணமாகிவிட்டதைக் கேட்டு அதிர்ச்சியே அடைந்தார்: ‘அடப்பாவி எனக்கு ஆறு மாசமாச்சேப்பா!’
என்னைப் பரிசோதித்த மருத்துவர் ஒருவர், அனைத்துச் சோதனை முடிவுகளையும் பார்த்துவிட்டு, சர்க்கரை அளவில் நான் கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டதை சுட்டிக்காட்டிவிட்டு அதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளைச் சொல்லிவிட்டுப் பிறகு கூறினார்: “உங்களுடைய இந்த வலி, வேதனை அத்தனையும் நானும் அனுபவித்திருக்கிறேன். ஆறு வார காலம் துன்பப்பட்டேன். மருத்துவத் தொழிலையே விட்டுவிட வேண்டியிருக்குமோ என்கிற அளவுக்குக் கலங்கிப்போய்விட்டேன். பின்னர்தான் படிப்படியாக அதிலேயிருந்து மீண்டேன். உங்களுக்கும் அப்படி நான்கு வாரத்தில் குணமாகலாம், ஆறு வாரமாகலாம், இரண்டு மாதமாகலாம், அதற்கு மேலேயும் ஆகலாம். பொறுமையாக இருங்கள்.”
அந்தப் பொறுமையும் உணவுக் கட்டுப்பாடும் உதவின. சற்றே நடக்க முடியும் என்ற நிலை வந்ததும் பத்து நிமிடம், இருபது நிமிடம், அரை மணிநேரம், முக்கால் மணிநேரம் என்று நடைப்பயிற்சியை மறுபடி பிடித்துக்கொண்டேன். மீள்வதற்கு உதவியது, அறிவியல்பூர்வமானது என்று நான் நம்புகிற ஹோமியோபதி மருத்துவம். என்னைப் பரிசோதித்து மற்ற ஆலோசனைகளைக் கூறிய அலோபதி மருத்துவர்கள் ஹோமியோபதி மருந்தையே தொடர்வதற்கு அறிவுறுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு, சோசலிச சோவியத் யூனியனில் பல்வேறு மருத்துவ முறைகளும் ஒருங்கிணைந்த மருத்துவமணை உருவாக்கப்பட்டதை செய்தியாகப் படித்திருக்கிறேன். அப்படிப்பட்ட, மருத்துவம் என்பது அடிப்படையில் மக்களை நோவின் பிடியிலிருந்து விடுவிப்பதுதான் என்ற பொதுச் சிந்தனையோடு, வறட்டுப் பிடிவாதங்களோ நிராகரிப்புகளோ இல்லாத ஒருங்கிணைந்த மருத்துவ முயற்சி இங்கேயும்/உலகெங்கும் தொடங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு உண்டு.
இப்போதும் 10 சதவீத வலி ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. அதை விரட்டும் வழி வேலையில் ஈடுபடுவதுதான், இல்லையேல் ‘இவன் பயந்துவிட்டான்’ என்று நோய் நம்மை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கும் என்ற முடிவோடு மறுபடியும் பணிகளில் இறங்கிவிட்டேன். நிச்சயமாக, ‘வலிக்கொல்லி’ மாத்திரைகளை விட இந்த ஈடுபாடு வலியை மறக்கவைப்பதை உணர முடிகிறது.
இப்போது பார்க்கிற தோழர்கள், உடல் இளைத்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். இதையொட்டி சர்க்கரை அளவை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்துவிட்டதைப் பாராட்டி அதை அப்படியே தொடர்வதற்கு ஊக்கமளிக்கிறார்கள். இவையெல்லாம் கெட்டதில் ஒரு நல்லது என்பதுபோல் வந்த சில ஆதாயங்கள்.
அதைவிடவும் இதையொட்டி ஏற்பட்ட சிந்தனை முக்கியமானது. அன்பைப் பொழிந்த தோழர்களிடமிருந்து ஆதரவுகள் மட்டுமல்ல, அருமையான ஆலோசனைகள் பல கிடைத்தன. இழந்த தெம்பை மீட்க எளிமையான சத்துணவு, உடலின் வெளியே செயல்பட்டு உள்மருந்துக்கு உறுதுணையாகக் கூடிய ஆயுர்வேதத் தைலம், நடக்கும்போதும் கணினியை இயக்கும்போதும் வலியைக் கட்டுப்படுத்த உதவும் காலுறை-கையுறைகள் என பலவகையான நடைமுறை ஆலோசனைகள் கிடைத்தன. தோழமையின் கதகதப்போடு உதவிகள் கிடைத்தன.
இவையெல்லாம் கிடைக்க வழியில்லாத என் சக மக்கள் நிலைமை என்ன? வயது முதிர்ந்த தந்தையின் வசதிக்காக, மேற்கத்திய அமைப்பிலான கழிப்பறை ஒன்றும் இணைந்த வீடாகப் பார்த்துதான் குடியேறியிருக்கிறோம். அது இப்போது எனக்கும் மிகவும் பயன்பட்டது. கழிப்பறையே இல்லாத மக்கள்? செடிமறைவுகளும், கால்வாய்க் கரைகளும், ஒதுக்குப்புற சந்துகளும், சாலையின் நடைமேடைகளும், ரயில் தண்டவாளங்களுமே கழிப்பிடங்களாக வாய்த்த அடித்தட்டு மக்களின் கதி? அறிவியல் தகவல்கள் எதுவும் போய்ச்சேர வழியின்றி இன்னமும் மந்திரிப்புகளையும், ஆளுக்காள் சொல்லக்கூடிய ஆதாரமற்ற கசாயங்களையும் சார்ந்திருக்குமாறு தள்ளப்பட்டிருக்கும் எளியோரின் நிலை?
வெறும் புலம்பல் கவிதை ஒன்றுடன் நிறுத்திக்கொள்வதற்கில்லை. அவர்களுக்காகக் கடவுளிடம் மனுப்போட்டு ஒரு பிரார்த்தனை செய்து முடித்துக்கொள்வதற்கில்லை. ஏதாவது ஒரு குடிசைப்பகுதிக்கு அல்லது இல்லத்திற்குச் சென்று ஒரு வேளை உணவு, உடைகள், பரிசுப்பொருள்கள் என்று வழங்கிவிட்டு சேவை செய்ததாய் மனநிறைவடைவதற்கில்லை. நோய்க்கு இருக்கிற சமத்துவ உணர்வு ஆள்வோருக்கு இல்லாத நிலையில் ஏற்றத்தாழ்வுகளும், பாகுபாடுகளும் கெட்டிப்பட்டுப் போய்விட்ட சமுதாய அமைப்பை மாற்றுவதற்கான இயக்கத்தில் இன்னும் முனைப்போடு ஈடுபடுவதன்றி தீர்வில்லை.
நோயும் நோவும் வாழ்க்கையை நிலையற்றதாக, அவநம்பிக்கைக்குரியதாகக் காட்டவில்லை. தான், தன் குடும்பம் என்பதைத் தாண்டி, வெறும் பரிவுணர்வுக்காக அல்லாமல் கடமையுணர்வோடு, மக்களைச் சிந்திக்கிறபோது அர்த்தமுள்ளதாககிறது வாழ்க்கை.