கட்டாய மதமாற்றம் எப்போது நடக்கிறது? எந்த மத அடையாளமும் இல்லாமல் பிறக்கும் குழந்தைக்குப் பெற்றோரும் உறவினர்களும் தங்களது மத அடையாளங்களைச் சூட்டுகிறபோது நடக்கிறது. நெற்றியில் இடப்படும் திருநீறு, தீட்டப்படும் நாமம், ஆசிர்வதித்து வரையப்படும் சிலுவை, காட்டப்படும் பிறை இன்ன பிற, இன்ன பிற சடங்குகளாக அந்த அடையாளங்கள் சூட்டப்படுகின்றன. எந்தக் குழந்தையும் இதுதான் சரியான வழி என ஆராய்ந்து சொந்த முடிவாக தான் வணங்க வேண்டிய கடவுளையோ, பின்பற்ற வேண்டிய மதத்தையோ தேர்ந்தெடுப்பதில்லை.
நானும் அப்படித்தான் குழந்தைப் பருவத்தில் ஒரு இந்துவாக மதமாற்றம் செய்யப்பட்டிருந்தேன். அப்படியாக இருந்த ஒரு நாளில் (கல்லூரிப் படிப்பை “முடித்துக்கொண்டு,” அடுத்து என்ன செய்யலாம் என்ற தேடல்களில் ஈடுபட்டிருந்த காலம்) என் அம்மா சொன்னார்கள்: “எங்கேயாவது ஊர் சுத்தப்போயிடாதே,,, அடுத்த வாரம் நாம திருச்செந்தூர் போறோம்...”
அதை விடவும் சின்ன வயதில் நான் நோய் வாய்ப்பட்டிருந்தபோது என்னைத் திருச்செந்தூருக்கு அழைத்து வந்து பால்குடம் எடுக்க வைப்பதாக நேர்ந்திருந்தார்களாம். டாக்டரின் ஊசி, மருந்து எல்லாம் போக முருகன் என்னை குணப்படுத்தினானாம். இடையில் நேர்த்திக் கடனை நிறைவேற்ற முடியாமலே போனதாம். அதனால்தானோ என்னவோ, ஒழுங்காகப் படித்துக்கொண்டிருந்த (?) நான் கல்லூரியை விட்டு வெளியேறினேன், நல்ல வேலையில் சேர முடியாமல் அலைகிறேன்... ஆகவே இப்போதாவது அதை நிறைவேற்றிவிட்டால் முருகன் கோபம் தணிந்து எனக்கொரு நல்வழி காட்டுவான்... (கடவுள் என்றால் இப்படியெல்லாம் கணக்குவைத்துக்கொண்டு, நேர்த்திக்கடனை அடைத்தால் அருள்பாலிப்பது, பாக்கி வைத்தால் பழிவாங்குவது என்று இருக்கலாமோ?)
மதுரையிலிருந்து புறப்பட்டு, அம்பாசமுத்திரம் அருகில் வெள்ளங்குளி கிராமத்தில் பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து, அப்புறம் அங்கேயிருந்து அவர்களும் உடன் வர செந்தூர் முருகனின் கடன் கணக்கை நேர் செய்யக் கிளம்பினோம். அங்கே எங்களுக்கு உதவுவதற்காகக் காத்திருந்தார் சுப்பிரமணிய பட்டர். எங்கள் உறவினர் உட்பட பல குடும்பங்களுக்கு அவர்தான் வாடிக்கையான பட்டர். பக்தி வியாபாரத் தொழிலில் அப்படியொரு ஏற்பாடு. கோவில் சத்திரத்தில் வசதியான அறை ஒன்றை எங்களுக்கு அமர்த்தினார்.
செய்யத்தக்கன - தகாதனவற்றைப் சுப்பிரமணிய பட்டர் பட்டியலிட்டார். அவர் கூறியபடி கோவிலுக்குப் பெரியப்பாவும் அப்பாவும் போய் மறுநாளைய பூசைக்கு டிக்கட் வாங்கிக்கொண்டு, மடப்பள்ளிக்குப் பணம் கட்டிவந்தார்கள்.
முதல் நாள் திருச்செந்தூரின் பல்வேறு சிறு குளங்களில் நான் நீராடுவது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதில் முதல் கட்டம். விரதம் இருப்பது இரண்டாவது கட்டம். பூசையில் உடைத்த தேங்காய், பழம் தவிர்த்து வேறு எதையும் நான் சாப்பிடக்கூடாது. வாய்திறந்தோ, மனதிற்குள்ளாகவோ நான் முருகன் நாமத்தை உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும். முருகனைத் தவிர வேறு எதையும் நினைக்காமலிருக்க வேண்டும்...
முருகனைத் தவிர மற்ற எல்லா நினைப்புகளும் வந்தன. நீராடிவிட்டு வரும் வழியில் ஈரமும் வண்ணமுமாய்ச் சுற்றிவந்த தாவணிகள் முதல், அந்த ஊர் திரையரங்கிற்கு வந்திருந்த ஒரு படத்தின் சுவரொட்டிகள் வரையில் கண்களைச் சுழல விட்டன. சில சிறுவர்கள் கன்னத்தில் அலகு குத்தி, துளையைச் சுற்றி சந்தனம் அப்பி அவர்களது சொந்தபந்தங்களால் மரியாதையோடு தோள் பிடித்து இட்டுச்செல்லபட்டார்கள். அதற்கு மேல் தாவணிகளோ சுவரொட்டிகளோ ஈர்க்கவில்லை. ‘நமக்கும் இப்படி கன்னத்தில் வேல் குத்திவிடுவார்களோ?’
பெரியப்பா மகளும் என் மீது அக்கறை கொண்டவருமான வேலாக்கா சொன்னார், “பைத்தியக்காரா, உனக்குப் பால்குடம் எடுக்கிறதாத்தானே நேர்ந்திருக்கு... அதுக்குப் போயி அலகு குத்துவாகளா?”
பட்டர் சிரித்தார். “அதெல்லாம் வேறவாளுக்குத்தான் தம்பி.” அலகு குத்துவது, காவடி எடுப்பது போன்ற நேர்த்திக்கடன் சடங்குகள் சாதிச்சான்றிதழோடு படிக்கவும் அரசாங்க வேலைக்குச் செல்லவும் விதிக்கப்பட்ட சமூகங்களில்தான் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
காலையில் எழுந்து தயாரானோம். சுப்பிரமணிய பட்டரும் தயாராக வந்தார். மற்றொரு நீராடல் முடிந்து என் இடுப்பில் ஒரு புதிய வேட்டி சுற்றப்பட்டது. ஊர் முனையில் ஒரு பிள்ளையார் கோவிலுக்குக் கூட்டிச் சென்றார். அங்கே, வரிசையாகப் பலர் பால்குடங்களோடு நின்றுகொண்டிருந்தார்கள்.
பிள்ளையாரிடம் புறப்படுவதற்கு ஒப்புதல் பெறுகிற பூசை முடிந்தது. என் நெற்றியிலும் மார்பிலும் வயிற்றிலும் கைகளிலும் சந்தனம், திருநீறு, குங்குமம் என்று தடவப்பட்டது. கழுத்தில் ஒரு மாலை போடப்பட்டது. ஒரு நாயனக் குழு வந்தது. அவர்கள் பக்திப்பாடல்களை வாசிக்கத் தொடங்கினார்கள்.
பிள்ளையார் கோவில் பூசாரி உள்ளே தீபாராதனை செய்துவிட்டு, பால்குடத்தை எடுத்துவந்து என் தலையில் வைத்தார். அது ஒரு சிறிய செம்புதான். புறப்படலாம் என்று சைகையால் பட்டரிடம் கூற, அவர் பெரியப்பாவிடம் ஏதோ சொல்ல, பெரியப்பா என் அப்பாவிடம் எடுத்துரைக்க, பூசாரியின் தட்டில் அப்பா ஒரு ஐந்து ரூபாய்த் தாளை வைத்தார். அப்போது அது பெரிய தொகைதான்.
அதன் பிறகும் என் பால்குட ஊர்வலம் புறப்படவில்லை. அருள் வந்து நான் ஆடவில்லையாம். அப்படி ஆடினால்தான் புறப்பட வேண்டுமாம். நானோ அசையாமல் நின்றேன். பசி வேறு. “சீக்கிரம், சீக்கிரம்... மத்தவங்களுக்கு வழிவிடுங்க...”
திடீரென நாயனக்காரர் என் காதுக்கு நேராக நாதசுரத்தைத் தூக்கிப் பிடித்து ஏதோ ஒரு ராகத்தை ஒரு இழு இழுத்தார். மறு காதுப்பக்கம் தவில்காரர் இடித்தார். தலையைச் சிலிர்த்துக்கொண்டேன்.
“அருள் வந்துடுத்து... புறப்படுங்கோ,” என்றார் பட்டர்.
பசியின் வாட்டத்தில் தடுமாறிய என்னைப் பிடித்துக்கொண்டார்கள். ஊர்வலமாகச் சென்றோம். வழியில் எதிரில் வந்த சிலர் என்னைக் கும்பிட்டார்கள். யார் அவர்கள்? “சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தறவாளை சேவிக்கிறது ஒரு புண்ணியம்.”
முருகன் கோவிலை அடைந்தோம். அங்கே என் பெயருக்கும் என் நட்சத்திரத்துக்கும் அர்ச்சனை உள்ளிட்ட இதர சடங்குகள் நடந்தேறின. சுப்பிரமணிய பட்டர் அப்படி அர்ச்சனை செய்த தட்டிலிருந்து திருநீறு எடுத்து முதலில் என் நெற்றியில் பூசினார். எல்லோரும் அவரிடமிருந்து பக்தியோடு திருநீறு பெற்றுப் பூசிக்கொண்டார்கள். இன்னும் என் தலையிலிருந்து பால்குடம் இறக்கப்படவில்லை.
கோயிலின் சுற்றுப்பிரகார மண்டபத்திற்கு இட்டுச்சென்றார். அங்கே பக்கவாட்டுத் திண்iணை உயரத்தில் இருந்த பக்கவாட்டு மேடையில் மற்றவர்களை உட்காரச் சொன்னார். என்னிடம், “சுவாமியை நினைச்சுண்டு குடத்தை நீயே எடுத்து இறக்கி வை தம்பி,” என்றார். இறக்கிவைத்தேன். அதற்கொரு மந்திரத்தை உச்சரித்தார்.
மடப்பள்ளியிலிருந்து எங்களுக்கான பிரசாதங்களை வாங்கிவந்தார் அப்பா. பெரியம்மா எல்லோருக்கும் துண்டு வாழையிலைகளை விநியோகிக்க, அம்மா சர்க்கரைப் பொங்கல், புளியோதரையைப் பரிமாறினார். தங்கையரும் தம்பியும் அவற்றை ஒரு பிடி பிடிக்க, நான் அவர்களை விட வேகமாக வாரி வாயில் போட்டுக்கொண்டேன். சும்மா சொல்லக்கூடாது, திருச்செந்தூர் கோயில் மடப்பள்ளி தயாரிப்பு சுவையோ சுவை. இப்போது எப்படியோ?
பட்டருக்கு எவ்வளவு கட்டணம் என்ற பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. செய்த பூசைகள், அழைத்துச் சென்ற இடங்கள் என்றெல்லாம் பட்டியலிட்டு ஒரு தொகையை அவர் கூற, அது வரையில் “சரிங்க சாமி” என்று அவர் சொன்னதையெல்லாம் கேட்டுச் செய்து வந்தவர்கள், இப்போது “பட்டரே என்ன ஒரேயடியா கேக்குறீரு...” என்று பேரத்தில் ஈடுபட்டு பாதியாகக் குறைத்தார்கள். அவர் ஒப்புக்கொள்ள மறுத்தார்.
அப்போது அப்பா என்னைப் பார்த்தபடி, “எப்படித் திங்கிறான் பாரு... மனசில ஏதாவது பக்தி இருந்தால்தானே,” என்று கிண்டலாகவும் கடுப்பாகவும் சொன்னார்.
சுப்பிரமணிய பட்டர் குறுக்கிட்டார். “அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ... தம்பி பால்குடத்தை இறக்கிவைக்கிறப்போ நான் நன்னா கவனிச்சேன்... தம்பியோட கை ரெண்டும் அப்படியே நடுங்கித்து... பக்தியில்லாம, சுவாமியோட அருள் இல்லாம அப்படி நடுங்காது... இனிமே தம்பியைப் பிடிச்ச துரதிர்ஷ்டமெல்லாம் தொலையறதா இல்லையான்னு பாருங்கோ.”
பேசிய தொகை பெரிய அளவுக்கு வெட்டப்படாத மன நிறைவுடன், ஆண்டுதோறும் எங்கள் குடும்பத்தின் பெயரில் முருகனுக்கு அர்ச்சனை செய்த திருநீறு, குங்குமத்தைத் தபாலில் அனுப்பிவைப்பதாக உறுதியளித்துவிட்டுக் கிளம்பினார் சுப்பிரமணிய பட்டர். “நாளைக்கு மெட்ராஸ்லேயிருந்து ஒரு ஃபேமிலி பால்குடம் எடுக்க வர்றது... அவாளுக்கு சத்திரத்தில ரூம் ஏற்பாடு செய்யணும்...”
பேருந்து நிலையத்துக்கு நடைபோட்டோம். தம்பியும் தங்ககையரும் என்னைக் கலாய்க்கத் தொடங்கினார்கள். “நிஜமாவே உன் கை நடுங்கிச்சாக்கும்?”