Tuesday 10 March 2020

சமகாலத்தை எழுதுவதென்பது…

(செம்மலர் மார்ச் 2020 இதழில் வந்துள்ள எனது கட்டுரை)

டந்த காலத்தின் தடங்களைத் தேடுவது வரலாறு. கடக்கும் காலத்தில் தடங்களைப் பதிப்பது வாழ்வு. கடக்க வரும் காலத்துத் தடங்களை நோக்குவது கனவு. இந்த மூன்றும் இணைந்தது இலக்கியம்.

இலக்கிய உலகில் உள்ளடக்கம், உருவம் தொடர்பான விவாதம் புதுப்புது வடிவங்களில் இன்றளவும் தொடர்வது போலவே, முற்காலமா தற்காலமா எதை எழுதுவது என்ற விவாதமும் நடைபெறுகிறது. இதுதான் சரி என்று ஒரு முடிவுக்கு வர இயலாது என்பதால் இந்த விவாதங்களும் முடிவுக்கு வராமல் தொடரவே செய்யும். அது இலக்கியத்தைச் செழுமைப்படுத்தும் இலக்கியப் பங்களிப்பைக் கூர்மைப்படுத்தும்.

சமகால எழுத்து வேறு, சமகாலத்தை எழுதுவது வேறு. இன்றைய நாளில் வருகிற எழுத்துகள், அவை எந்தக் காலத்தைப் பற்றிப் பேசினாலும், சமகால எழுத்துகள்தான். இன்றைய வாழ்க்கை, இன்றைய பிரச்சினைகள், இன்றைய தேவைகள் இன்றைய மாற்றங்கள் பற்றியெல்லாம் எழுதுவது சமகாலத்தை எழுதுவதாகும்.

மற்ற இடங்களைப் போலவே இலக்கியத் தளத்திலும், “அந்தக் காலம் மாதிரி இப்போது வருமா” என்று கேட்பவர்கள் உண்டு. சமகாலம் பற்றிய படைப்புகளை மட்டுமல்லாமல், சமகாலப் படைப்பாளிகளையே கூட அவர்கள் ஏற்பதில்லை. சமகாலத்தை எழுதுவது வெறும் செய்தி சேகரிப்பு வேலை என்பார்கள்.

தமிழில் உரைநடை இலக்கியம் பிறந்ததே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர்தான். அது சமகாலப் பிரச்சினைகளைப் பேசத் தொடங்கியது விடுதலைப் போராட்ட எழுச்சிகள் ஏற்பட்ட பிறகுதான். இங்கு மட்டுமல்ல, உலக அளவிலேயே கூட, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில்தான் அதனால் ஏற்பட்ட இழப்புகளையும் வேதனைகளையும் சாகசங்களையும் வெளிப்படுத்துகிற சமகால எழுத்துகள் புறப்பட்டன என்று ஒரு கட்டுரை தெரிவிக்கிறது.

உடனடிப் பிரச்சினைகள் பற்றிய எழுத்துகள் உடனடித் தலையீடுகளுக்கு வழி செய்கின்றன. தீர்வுக்கான போராட்டங்களில் பங்கேற்பதற்பதற்கு உந்துவிசையாய் அமைகின்றன. ஒரு போராட்டக் களத்தில் வாசிக்கப்படுகிற கவிதையும் நிகழ்த்தப்படுகிற நாடகமும் ஒருமைப்பாட்டை ஊக்குவித்து உறுதியூட்டுவதை மறுப்பதற்கில்லை. தற்போது நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கிற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களில், பல இடங்களில் கவிஞர்கள் பங்கேற்றுத் தங்கள் கவிதைகளையே முழக்கமாக அளிக்கிறார்கள். அந்தக் கவிதைகள் சமூக ஊடகங்கள் வழியாக மற்ற இடங்களுக்கும் வந்து சேர்கின்றன.

கவிதை இந்தப் பணியைச் செய்கிறபோது சிறுகதை ஓரளவுக்குத்தான் இந்த உடனளிப்பைச் செய்கிறது. நாவல்களோ முற்காலத்து வரலாற்று நிகழ்வைத்தான், அன்றைய அரசியலைத்தான், அக்கால சமூகவியலைத்தான் தனி மனிதர்களின் கதையாகவும் குடும்பங்களின் கதையாகவும் சொல்கின்றன. ஆயினும், இன்றைய போராட்டக் களத்திற்கு வருகிற ஒருவர் அந்த நாவல்களைப் படித்துவிட்டு வந்திருப்பாரானால் அவர் மேலும் உறுதியோடு கலந்துகொள்கிறார். முந்தைய காலத்துக் கதை இன்றைய காலத்துப் போராட்டத்திற்கு இப்படி ஆதரவு திரட்டித்தர முடிவது எப்படி? பொதுப் போராட்டத்தில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையின் அலைகளை எதிர்கொள்வதிலும் அந்தப் படைப்புகள் பக்குவ அணுகுமுறைக்கான பாடமாக வினையாற்றுகின்றனவே!

அதேவேளையில், போராட்டக் களத்தில் வாசிக்கப்படுகிற கவிதைகள் பின்னர் மறக்கப்படுகின்றன. ஒரு நிகழ்காலப் போராட்டத்திற்கான கவிதையாக்கத்தில் உணர்வும் உண்மையும் இருக்கிற அளவுக்குப் படைப்பு நேர்த்தி இருப்பதில்லை, கடந்தகாலத்தோடும் எதிர்காலத்தோடும் பிணைப்பு இருபபதில்லை, ஆழமான அரசியல் தெளிவு இருப்பதில்லை என்ற காரணங்களோடு, குறிப்பிட்ட ஒரு கவிதையின் தேவை அந்தக் குறிப்பிட்ட போராட்டத்தோடு முடிந்துவிடுவதும் சேர்ந்துகொள்கிறது.

உடனடிப் பிரச்சினைகளை எழுதுகிறவர்களில் பலர் அப்படியே நின்றுவிடுகிறார்கள். சாதியம், பாலினப் பாகுபாடு உள்ளிட்ட நெடுங்கால நிலைமைகளை இப்போதைக்கு மாற்றிவிட முடியாது என்ற எண்ணம் இதற்குக் காரணமா? அப்படி ஒதுக்கிவிட முடியுமா? அதே போல, வரலாற்றுக் காட்சிகளை எழுத்தில் அத்தியாயங்களாக்கியிருக்கிற பல எழுத்தாளர்கள், தற்போது கண் முன்னால் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளைப் பதிவு செய்வதில்லை.

ஊடக வருகையின் தாக்கம்

இதற்கான ஒரு காரணமாக ஊடக வளர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். சமகாலப் பிரச்சினைகளைப் பேசுவதற்கு இன்று இருப்பது போன்ற ஊடகங்கள் முன்பு கிடையாது. நிறுவனங்களின் ஊடகங்கள் மட்டுமல்லாமல் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என்று பல்வேறு சமூக ஊடகங்கள் இன்று வந்துவிட்டன. இன்றைய பிரச்சினைகளையும் தீர்வுகளையும் அந்த ஊடகங்கள் வலுவாகவும் பரவலாகவும் பேசுகின்றன. உடனடிப் பிரச்சினைகளைப் பேச இந்த ஊடகங்கள் இருக்கிறபோது இலக்கியத்திலும் எதற்காகப் பேச வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம்,” என்கிறார் அவர்.

இதை மேலும் விளக்குகிறார் ராமகிருஷ்ணன்: சமகாலப் பிரச்சினைகளுக்கான தீர்வு சமகாலத்திலேயே இருக்கிறதா என்ற கேள்வியிலிருந்தும் இது வருகிறது. இந்த ஊடகங்களெல்லாம் இல்லாத காலத்தில் சமகாலத்தைப் பேசுகிற வேலையையும் இலக்கியமே செய்ய வேண்டியிருந்தது. டிக்கன்ஸ், ரஷ்யப் எழுத்தாளர்கள் போன்றவர்கள் தங்கள் படைப்புகளில் தம் காலத்தியச் செய்திகளையும் இணைத்தார்கள். இன்று செய்திகள், கருத்துகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், தீர்வுகள் என்று இவ்வளவும் வந்த பிறகு, இலக்கியத்தின் பணி அதைத் திரும்பச் செய்வதல்ல. செய்திகளின் பின்னால் என்ன இருக்கிறது என்று ஆராய்வதுதான் இலக்கியத்தின் பணியாகிறது. அப்படி ஆராய்கிறபோது சமகாலப் பிரச்சினையை நேரடியாக எடுத்துக்கொள்வதில்லை. அது உருவாவதற்குக் காரணமாக எதுவெல்லாம் இருந்ததோ அதையெல்லாம் – வரலாற்றை, பண்பாட்டை, சமூகத்தை, மனித மனத்தை – இலக்கியம் ஆராய்கிறது. கடந்தகாலத்திற்குச் சென்றுவருவதன் மூலம் சமகாலத்தைக் காட்டுகிறது, இது எதிர்காலத்திற்கும் இட்டுச் செல்லலாம்.

அது அவர்களின் கவலை

சமகாலப் பிரச்சினைகளை எழுதாமல் விடுவதில் வேறொரு கண்ணோட்டம் இருப்பதாகச் சொல்கிறார் ஆய்வாளரும் நாடகச் செயல்பாட்டாளருமான வ. கீதா. “கண் முன்பாக நடக்கிற பல பிரச்சினைகளை, அதெல்லாம் அரசும் அரசியல்வாதிகளும் களச்செயல்பாட்டாளர்களும் கவலைப்பட வேண்டிய விசயம், எழுத்தாளர்களுக்கு இதில் என்ன வேலையிருக்கிறது என்கிற ஒரு கருத்தோட்டம் இருக்கிறது. எழுத்தாளர்களே கூட ஒரு உடனடிப் பிரச்சினை எந்தத் திசையில் போகிறது, எப்படி முடிகிறது என்றெல்லாம் உள்வாங்கிக்கொண்ட பிறகுதான் எழுத விரும்புகிறார்கள்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

இதற்கொரு எடுத்துக்காட்டாக, “நாங்கள் நடத்திய ஒரு எழுத்துப் பட்டறையில் கலந்துகொண்ட பெருமாள் முருகன், தான் எழுதப்போகிற ஒரு நாவலுக்கான முன்வரைவை உருவாக்கிக்கொண்டிருநதார். அதை அங்கே சொன்னார். சில ஆண்டுகள் கழித்துதான் அந்தக் கதையை ‘பூக்குழி’ என்ற நாவலாக எழுதினார். ஒரு தலித் இளைஞன் தன்னை வேறு சமூகத்தவனாகக் காட்டிக்கொண்டு கோவில் திருவிழாவில் கலந்துகொள்கிறான். அவன் யார் என்று கண்டுபிடிக்கிற மற்ற சாதியினர் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை. உரையாடலின்போது, தலித் மக்களிடையே பெரிய எழுச்சிகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிற இன்றைய காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட கதை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஒருவர் கேட்டார். அதற்கு பெருமாள் முருகன், ‘தற்போது நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகள் பற்றி இப்போதே என்னால் எழுதிவிட முடியாது, நடப்பவற்றை நன்றாக உள்வாங்கி, நான் ஒரு கருத்துக்கு வந்த பிறகுதான் எழுதுவேன். உடனடியாக எழுதுவது என்னுடைய வேலையில்லை, என்றார். இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது,” என்கிறார்.

இங்கே மட்டுமல்ல, உலக அரங்கிலும் இப்படித்தான் இருக்கிறது என்றும் கீதா சொல்கிறார்: “சமகாலத்தை எழுதுவது பற்றிய ஒரு விவாதம் வந்தபோது மேற்கத்திய எழுத்தாளர்கள் என்ன சொன்னார்கள் என்றால், ‘இப்போதைய பிரச்சினைகளை எழுதுவதென்றால் நாங்களும் ஏதோவொரு வகையில் அதில் பங்கேற்கிறவர்களாகிறோம் என்ற சிந்தனை ஏற்படுகிறது. எழுதும் பிரச்சினைக்கு நாங்கள் தீர்வு சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. அது எங்களால் எப்படி முடியும்? இப்போது நடப்பது சரி அல்லது தவறு என்று சொல்வது எங்கள் வேலையில்லை,‘ என்றார்கள். ஆங்கிலக் கவிஞர் ஆடன், ‘நாங்கள் எழுதுவதால் சமகாலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படப்போவதில்லை, என்று சொன்னார்.

என்றென்றும் சமகாலப் பிரச்சினைகள்

சமகாலப் பிரச்சினை என்பதற்கே வேறொரு விளக்கம் அளிக்கிறார் கவிஞர் சுகிர்தராணி. “நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற சமுதாயத்தில்  எல்லா மனிதர்களுக்கும் ஒரு மாண்பு,  சமத்துவம்,  மரியாதை கிடைக்க வேண்டும்.  சுயமரியாதை உறுதிப்பட வேண்டும்இதற்கான ஒரு வெளிஒரு  வாய்ப்பு சமுதாயத்தில் இல்லை என்பதுதான் சமகால பிரச்சினை.  இந்தப் பிரச்சனைக்கு அரசியல்,  பொருளாதாரம்  இன்று பல காரணங்கள் இருக்கும்.  எதை எழுதினாலும் அனைத்து மனிதர்களுக்குமான அந்த மாண்பையும்  சமத்துவத்தையும்,  மரியாதையையும்,  சுயமரியாதையையும்  உறுதிப்படுத்துதல் என்ற இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும்.
இந்தப் பிரச்சனை இப்போதும் இருக்கிறது,  நூறு ஆண்டுகளுக்கு முன்னாலும் இருந்ததுஅசைவில்லை என்றால் நூறு ஆண்டுகளுக்குப்பின் நாளும் இப்படியே இருக்கக்கூடும்ஆகஇது அன்றும் இன்றும் என்றும் சமகாலப் பிரச்சினைதான்,” என்கிறார் கவிஞர்.

“என்னுடைய சுயமரியாதையை பாதுகாக்க நான் போராட வேண்டியிருக்கிறதுஅதிகாரக் கட்டமைப்புகள்.  இதற்குமேல் பேசாதே என்று என்னை  அடக்கி வைக்கின்றனநான் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நொடியில் என்னை இனி வாழவிடுவதில்லை என என்மீது அரச அடக்குமுறைகளும் சமூக வன்முறைகளும் தொடுக்கப்படுகின்றன. மூன்றாம் வகுப்பு குழந்தைக்கு கூட பொதுத்தேர்வுஸ்டெர்லைட்இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்கள்சாதிய மதவாத தாக்குதல்கள்…  இவையெல்லாம் என் சக மனிதர்களை வாழ விட முடியாது  என்று அச்சுறுத்துகின்றனபேராட்டங்களுக்கு மதிப்பளித்தோகொள்கை சார்ந்தோ ஸ்டெர்லைட் மூடல், 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனஇதுபோன்ற சட்டமும் நிர்வாகமும் சார்ந்த முடிவுகளை மாற்றிவிடலாம்ஆனால் சகமனிததரை இழிவு செய்யும் சாதிப் பாகுபாட்டைபெண்களுக்கு எதிரான பாலினப் பாகுபாட்டைஉழைப்பை உறிஞ்சும் வர்க்கப்பாகுபாட்டைஇதையெல்லாம் சட்டம் போட்டுத் திருத்திவிட முடியாதே,” என்று சுகிர்தராணி கேட்பதில் விவாதம் மட்டுமல்ல, இதையெல்லாம் திருத்துவதற்கு வேறு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

டீன் ஏஜ் பெண்ணின் சிக்கல்கள்

சமகாலத்தை எழுத்தில் பிரதிபலிப்பது என்றால் அது அரசியல், சமூக விவகாரங்களாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்றொரு வாதத்தை முன்வைக்கிறார் பத்திரிகையாளர் அரவிந்தன். “இலக்கியத்தில் பிரதிபலிப்பு என்று எதைச் சொல்கிறோம்? இன்று சமகாலப் பிரச்சினை என்றால் ஒரு பக்கம் சிஏஏ இருக்கிறது. காவிரி விவசாயிகள் பிரச்சினை இருக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, எட்டுவழிச் சாலை, ஹைடிரோகார்பன் --- இப்படிப் பல முக்கியப் பிரச்சினைகள் இருக்கின்றன. இவை குறித்துப் பேசப்படுகின்றன, எழுதப்படுகின்றன. இன்னொரு பக்கத்தில், பேச்சுலர்களுக்கு வீடு கிடைப்பதில்லை, பெண்ணுக்குக் காதல் சுதந்திரம் இல்லை, ஆண் புரபோஸ் பண்ணுவதைப் பெண் எளிதாக ஏற்பதில்லை, பழகிப் பார்த்த பிறகு வேண்டாம் என்று இன்றைய பெண்ணால் சொல்ல முடிகிறது. எல்லோரையும் பாதிக்கிற பொதுப் பிரச்சினை, யாரையோ பாதிக்கிற தனி மனிதப் பிரச்சினை இரண்டுமே சமகாலத்தவைதான். பெரிய நகரத்தில் வேலை செய்கிறவருக்கு நல்ல உணவு கிடைப்பதில்லை, வேலை செய்கிற இடத்தில் உயரதிகளோடு உரசல், யாரோ ஒருவன் போட்டுக்கொடுப்பது, கணவன்-மனைவிக்கிடையே பனிப்போர் … இப்படியாக சமகால வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.” என்று காட்டுகிறார் அவர்.

“ஹைடிரோ கார்பன் மட்டும்தான் பிரச்சினை என்றும் முன்வைக்கலாம். ஒரு டீன்-ஏஜ் பெண்ணுக்கும் பெற்றோருக்கும் இடையேயான சிக்கல் மட்டும்தான் பிரச்சினை என்றும் முன்வைக்கலாம். அந்தப்  பெண் ஐம்பதுகளைச் சேர்ந்தவள் என்றால், அப்போது அவள் எதிர்கொண்ட சவால்களே வேறு. லட்சுமி போன்ற எழுத்தாளர்கள் அதை எப்படி வெளிப்படுத்தியிருப்பார்கள் என்று நாம் ஊகிக்கலாம். இன்றைய பெண் எதிர்கொள்ளும் சவால்கள் மாறுபட்டவை. சல்மாவோ வேறு சமகாலப் படைப்பாளிகளோ அதை எப்படிப் பார்க்கிறார்கள், சித்தரிக்கிறார்கள் என்று கவனிக்கலாம். தனி மனிதப் பிரச்சினைகளிலும் அரசியல், பொருளாதார, சமூகத் தாக்கங்கள் இருக்கும். எழுதும்போது அது வெளிப்படும். என்னுடைய கேள்வி, அந்த டீன் ஏஜ் பெண்ணின் சிக்கல்களை மட்டுமே ஒரு படைப்பு பேசுமானால் அது சமகால எழுத்தாகாதா என்பதுதான்,” என்று சமகால எழுத்தாளர்களுக்கு ஒரு புதிய விவாதப் பொருளை எடுத்துக்கொடுக்கிறார்.

தனது வாதத்திற்கு சில சாட்சிகளையும் அரவிந்தன் அழைத்து வருகிறார். “அசோகமித்ரன் பெரிய பிரச்சினைகளை நேரடியாக எடுத்துக்கொண்டதில்லை. ஆனால் அவருடைய கதைகளில் பெரிய பிரச்சினைகள் நுட்பமாக வந்துவிடும். ஜெயகாந்தன் பெரிய பிரச்சினைகளை அடிப்படையாக வைத்துதான் எழுதினார். அவருடைய படைப்புகளில் தனி மனிதச் சிக்கல்கள் வந்துவிடும். இரண்டு பேருமே சமகாலத்தை எழுதியவர்கள்தான் என்பது என் கணிப்பு. மௌனி அகவயப்பட்ட உணர்வுகளை எழுதினார் என்பார்கள். கோவிலுக்குச் செல்கிறவனுடைய உணர்வுளைக் கதையாக்கியிருப்பார் – ஆனால் அது அவர் தனது காலத்திலேயே கோவிலுக்குச் சென்றவனின் மனநிலையை வெளிப்படுத்திய கதையாகத்தான் இருக்கிறதே தவிர, நிச்சயமாக நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலுக்குச் சென்றவனுடைய உணர்வாக இருக்க முடியாது. அழகிரிசாமி பொதுப் பிரச்சினை, தனி மனிதப் பிரச்சினை இரண்டையுமே கையாண்டிருக்கிறார்.

வாசிப்பின் இன்பத்தை அடைய

சமகாலப் படைப்புக்கும் பின்நவீனத்துவத்துக்குமான ஒரு இணைப்பைத் தொட்டுக்காட்டுற இலக்கிய ஆய்வாளரும் ஊடகவியலாளருமான முபீன் சாதிகா, “சமகாலத்தைப் பதிவு செய்தல் இலக்கியத்தின் பணியாக நான் கருதவில்லைஆனால் அப்படிப் பதிவு செய்யும் இலக்கியங்களை மதிப்பிடுவது அவசியம் என்று கருதுகிறேன்இலக்கியம் மூலம் சமூகத்தின் எல்லா அவலங்களையும் அரசியலையும் சொல்வதன் மூலம் பெரிய மாற்றம் விளைந்துவிடும் என்பது அவநம்பிக்கையாகவே கொள்கிறேன்,” என்று தன் மாற்றுக் கருத்தை வெளிப்படுத்துகிறார்.

அதை மேலும் விளக்கும் வகையில், “இலக்கியம் அல்லது எந்த ஒரு கலை படைப்பும் படைப்பாளியின் முழுச் சுதந்திரத்தோடு படைக்கப்படவேண்டும்அதில் சமகால அரசியலிலிருந்து வேறு எந்த உள்ளடக்கத்தைக் குறித்து வேண்டுமானாலும் பதிவு செய்யப்படலாம்ஆனால் சமகால உள்ளடக்கத்தைப் பதிவு செய்வது மட்டுமே இலக்கியமாகவோ கலைப்படைப்பாகவோ கருதிவிடக்கூடாதுசமகால உள்ளடக்கத்தையும் படைக்கும் முறைமையில் வாசிப்புக்கு ஒரு போட்டியை உருவாக்கும் படைப்பு உள்ளடக்கத்தைத் தாண்டி இலக்கியம் மீதான விருப்பத்தை உண்டாக்குகிறதுசமகால இலக்கியமாக எழுதி பின்நவீனத்துவ இலக்கியமாகவும் இருக்கும் எழுத்துகளுக்கு பல உதாரணங்கள் தமிழிலும் பிற மொழிகளிலும் இருக்கின்றனபின் நவீனத்துவ இலக்கியங்கள் மட்டுமே தரமானவை என்பதல்லபின் நவீனத்துவ இலக்கியங்களும் சமகால உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கின்றனவாசிப்பிற்கு நெருக்கடியையும் தருகின்றன,” என்கிறார் இக்கவிஞர். 
“சமகாலத்தை எழுதுதல் என்பது இக்கால வரலாற்றை மட்டுமே எழுதுதல் என்பதாகக் கொள்ளமுடியும்அது எதைப் பற்றிய வரலாறாக வேண்டுமானலும் இருக்கலாம்ஆனால் அந்த வரலாறுதான் பின்னர் ஆவணமாகக் கருதப்படக்கூடும்ஆனால் இலக்கியம் எந்த உள்ளடக்கத்தையும் இருப்பதை அப்படியே பிரதிபலிப்பதாகக் கொள்ளமுடியாதுபுனைவின் தன்மையை அடிப்படையாக வைத்தே எழுதப்படுகிறது என்பதால் வரலாறு என்பதாக அதைக் கருதுவது முழுமையான ஒன்றாகக் கருதமுடியாதுஆனால் வரலாற்றை எழுதுதல் என்பதும் பின்நவீனக்கூறுகளில் ஒன்றுஅந்த வரலாறும் உண்மை வரலாறும் இணைவைத்துப் பார்த்து அதில் இருக்கும் வேறுபாடு அல்லது ஒற்றுமையை அறிந்து வாசிப்பின் இன்பத்தை அடைவது குறித்து பின்நவீனத்துவ விமர்சன முறை பேசுகிறது,” என்ற முபீன் சாதிகாவின் முன்வைப்பில் விவாதத்திற்கான அடுத்தொரு மேடை உருவாகிறது.

இத்தகைய வாதங்களின் நிழலில் நின்று பார்க்கிறபோது, முற்காலத்தை முன்னிலைப்படுத்தும் படைப்புகளின் இக்காலத் தாக்கம் பற்றிய சிந்தனை ஏற்படுகிறது. இதிகாசங்கள் காப்பியங்கள் கூட, அவை படைக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகப் பல தலைமுறைகளாகப் பேசப்பட்டு செவிவழி பரிமாறப்பட்ட பழைய கதைகளைத்தான் கோர்வைப்படுத்திச் சொல்ல வந்தன. பழைய கதையானாலும் சமகாலச் சூழலுக்கும் பொருத்தமாக, தேவையை நிறைவு செய்வதாக, வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். அரசியல் சமூகம் குடும்பம் அலுவலகம் வயல்வெளி என அனைத்து வட்டாரங்களிலும் பிரச்சினைகளின்போது ராமாயணமும் மகாபாரதமும் திரும்பத் திரும்ப நாடப்படுகின்றன. மதம் அவற்றை விழுங்க முயல்கிறபோதிலும், வெறும் நம்பிக்கையைப் போதிக்கிற புராணங்களைக் காட்டிலும் அதிகமாக இவ்விரு இதிகாசங்களும் நாடப்படுவதில் இருப்பது பக்தியல்ல. இரண்டுமே வாழ்க்கையை, அரசியலை நெருக்கமாகக் கையாளுகின்றன. சிலப்பதிகாரம் உள்ளிட்ட காப்பியங்களும் இதே பங்களிப்பைச் செய்கின்றன.  

வருங்கால வாசலுக்கான திறவுகோல்

கலை இலக்கியத்தில் காலப் பிரச்சினைகள் பற்றி ஆராயும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம. ராசேந்திரன். “உயிரினங்களின் தலைமைப் பொறுப்பினை மனித குலத்துக்கு வழங்கியிருப்பவை இரண்டு. ஒன்று  தீ  எனும் பெரும் பூதம்மற்றொன்று சக்கரம் எனும் ஓடுகாலி.
அச்சுறுத்திய அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் மக்கள் கொண்டுவந்து விட்டார்கள்கடவுள் கூட இறந்து போய்விட்டார்கடவுளின் மரணத்தை நீட்ஷே அறிவித்து  நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதுமரத்திலிருந்து பழம் கீழே விழுவதற்குப் புவி ஈர்ப்பு விசை காரணம் எனில் விழுந்த பழத்தின் விதையிலிருந்து மரம் ஏறிய பழத்திற்குக் காரணம்சூரிய ஈர்ப்புதானேஇருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில் ஊஞ்சலாடுகின்றன உயிரினங்கள்இருட்டுப் பூமிக்குள் வேரை ஊன்றி வெளிச்சத்தை நோக்கிய ஈர்ப்பில் பயணப்படுகிற தாவரம்சூழல் இணக்கமாக இல்லையென்றால் சுருண்டு போகிறதுவாழும் சூழல் மாறினால் வாழ்விடத்தை மாற்றிக் கொள்கின்றன கால்களும் இறக்கைகளும்வாழ்கிற இடத்தையே விருப்பச் சூழலுக்கு ஏற்ப வடிவமைத்துக் கொள்கின்றன கைகள்ஆனாலும் காலமும் அரசியலும் மக்களின் கைகளைக் கட்டிப் போட்டு புலம் கடத்துகின்றன,” என்று வேறொரு தளத்திலிருந்து இலக்கியத்துக்கு வருகிறார் அவர்.

“செத்துப் போன கடவுளைக் கட்டிக்கொண்டு இப்போதும் சுற்றிக்கொண்டிருக்கிறது அரசியல்பிறந்த மண்ணில் வாழ முடியாமல் புலம் பெயரச் செய்கிறது அரசியல்சொந்த நாட்டிலும் அகதியாக உணரும் புலம்பெயர் வாழ்க்கைபெற்றோர்ஊர்உறவினர்உடல் நலம்நல்லது கெட்டது எல்லாவற்றிலும் அரசின் தலையீடுபெற்றோரை எதிர்பார்த்து வாழ்ந்த வாழ்க்கை இப்போது இல்லைபெற்றோர் எல்லாவற்றிற்கும் தங்கள் குழந்தைகளை எதிர்பார்க்கும் வாழ்க்கைக்கு மாறி இருக்கிறார்கள்வசதி வந்த பின்பும் பெற்றோர் கருத்துக்குக் கட்டுப்பட்ட வாழ்க்கை மாறி இருக்கிறதுதங்களைப் பற்றித் தாங்களே முடிவெடுக்கும் தகுதி பெற்றிருக்கிறார்கள்கூடவே தங்கள் பெற்றோர் குறித்தும் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார்கள்பிறந்த சாதி ஒருவரைக் கட்டுப்படுத்தும் சக்தியைச் சட்டம் கட்டுப்படுத்தி இருக்கிறதுமதத்தைக் கட்டுப்படுத்தவும் வளர்க்கவும் மதத்தின் வழி மக்களைக்  கட்டுப்படுத்தவுமான  அதிகாரத்தை அரசு பறித்துக்கொண்டிருக்கிறதுஊர்ப் பஞ்சாயத்து ஒருவரைக் கட்டுப்படுத்த முடிவதில்லைஆனால் காவல்நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் கட்டுப்பட வேண்டிய வாழ்க்கைவரும் காலத்துக்கு மட்டுமில்லை வாழும் காலத்திற்கே குழந்தைகளை எதிர்பார்க்கும் வாழ்க்கைமுறை மாறிக்கொண்டு இருக்கிறதுஉடல்நலத்திற்கும் வரும் காலத்திற்கும் இன்ஷூரன்ஸ் இருக்கிறதுதெரியாத ஒன்றைக் கேட்டுத் தெரிந்துகொள்ள கூகுள் இருக்கிறதுஎது சரிஎது தவறுகுழப்பமே இல்லைகம்பெனி என்றால் வாடிக்கையாளர்கள் சொல்வதே சரிஅரசியல் என்றால் வாக்காளர்கள் சொல்வதே சரிஇப்படியாக நாட்டின் போக்கு நடந்துகொண்டிருக்கிறது.
கலையும் இலக்கியமும்அவை தோன்றிய காலத்துப் பிரச்சினைகளுக்கு மட்டுமில்லாமல் அவற்றின் தொடர்வடிவப்  பிரச்சினைகளுக்குமாக – வரும் காலத்திற்குமான தீர்வு வாசல்களின் திறவுகோல்களாக இருக்கும்இருக்க வேண்டும்,” என்று வாழ்க்கையோடு இலக்கியத்தை இணைக்கிறார் ‘கணையாழி’ பதிப்பாளருமான இராசேந்திரன்.

சமகாலத்தை எழுதுகிறபோது அதில் இயற்கைச் சமநிலைக்கு எதிரான வளச் சுரண்டல்கள், அதன் விளைவான சுற்றுச் சூழல் சீர்கேடுகள், இன்றைய உலகமயமாக்கல் – தனியார்மயமாக்கல் புயல்களில் சூறையாடப்படும் தனிமனித வாழ்க்கைகள். மதவெறி ஆதிக்க அரசியலால் ஏற்பட்டுள்ள சமூக அச்சங்க்ள், முன்னேற்றத் தடைகள் என எல்லாமே வந்துவிடும். அதேவேளையில் அந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட மூத்த படைப்புகளும் துணை நிற்கும். இலக்கை நோக்கி இயக்குகிற பணியை நிறைவேற்றிக்கொண்டிருக்கிற வரையில் எழுதுகிறவர், வாசிக்கிறவர் இருவருக்கும் இருவகைப் படைப்புகளும் தேவை.