Sunday, 22 August 2010

மறுவாசிப்பில் கலகக்குரல்கள்

கேள்வியே கேட்கக்கூடாதவை என்று சொல்லப்படும் இதிகாசங்களையே இன்று கேள்விகளுக்கு உட்படுத்தும் மறுவாசிப்புகள் நடக்கின்றன. பக்தி இலக்கியங்கள் என்று அடையாளம் பெற்ற பாடல்களை அப்படிப்பட்ட மறுவாசிப்புக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில ஒருவரான வழக்கறிஞர் ச. செந்தில்நாதன். அந்தப் பாடல்களை மறுவாசிப்பு செய்திருக்கிறார் என்பதை விட, அவற்றின் படைப்பாளிகளான ஆன்மீகத் தலைவர்களையே மறுவாசிப்புக்கு உட்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

பொதுவாக மறுவாசிப்புகளில், இதிகாசங்களில் புனிதப்படுத்தப்படும் கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் உண்மையில் எப்படி இருந்திருக்கும் என்பது ஆராயப்படும், ஏன் இப்படி இருந்திருக்கக்கூடாது என்ற புதிய கண்ணோட்டத்தில் முன்வைக்கப்படும். செந்தில்நாதனின் இந்தப் புத்தகம் அந்த ஆன்மீகத் தலைவர்களது செயல்களின் பின்னணியில் இருந்த சில முக்கியமான உண்மைகளை ஆராய்கிறது, அவ்வகையில் இதனை மறுவாசிப்பு என்பதாக அல்லாமல் ஒரு முதல் வாசிப்பு என்றே சொல்ல வேண்டும்.

அருணகிரி நாதர் முதல் வள்ளலார் வரையிலான ஆன்மீகவாதிகளை, பிறவிப் பெருங்கடல் நீந்திப் பரம்பொருள் என்ற கற்பிதத்தோடு கலந்து கரைவதற்கு வழிகாட்டியவர்களாக மட்டுமே கருதுகிறார்கள் பெரும்பாலான இறைநம்பிக்கையாளர்கள். பகுத்தறிவாளர்களிலும் கூட பலர் இவர்களது இந்த ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு, பக்தியைப் பரப்பியவர்கள்தானே என்று எடுத்துக்கொண்டு இன்னொரு பக்கத்தைக் காண மறுக்கிறார்கள்.
ஆனால் எந்தவொரு மனிதரின் செயல்பாடுகளையும் அவரது காலத்தின் அரசியல் சமூக வரலாற்றோடு இணைத்துப் பார்ப்பதும், அன்றைய சூழலில் அவர் செய்ததில் நியாயம் இருந்ததா இல்லையா என்ற புரிதலுக்கு வருவதுமே மார்க்சியப் பார்வை. செந்தில்நாதன் அந்தத் தெளிவான கண்ணாடியை அணிந்துகொண்டுதான் இவர்களது அந்த இன்னொரு பக்கத்தைப் பார்த்திருக்கிறார். அப்படிப் பார்த்ததில் அவர்கள் தம் காலத்திய ஆதிக்கப்போக்குகளை எதிர்த்துக் குரல்கொடுத்தவர்கள் என்ற உண்மை நமக்குத் தெரியவருகிறது.
ஆதிக்கசக்திகளை எதிர்த்துப் போராடுவது என்பது அரசியல், ஆலயம், பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம் என சமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் நடந்து வந்திருக்கிறது. அருணகிரி முதல் வள்ளலார் வரை அப்படி ஒரு போராட்டத்தையும் நடத்தியிருக்கிறார்கள். இரண்டு வகையான ஆதிக்கங்கள் அவர்களது எதிர்ப்பின் இலக்குகளாக இருந்தன. ஓன்று- சமய ஆதிக்கம், இன்னொன்று- மொழி ஆதிக்கம்.

இப்படிப்பட்ட கலகக்குரல் எழுப்பியர்களின் பின்னால் மக்கள் அணிதிரண்டு செல்லாமல் தடுக்க ஆதிக்கசக்திகள் பயன்படுத்திய ஒரு உத்தி - அவர்களது சிலைகளை ஆலயங்களுக்குள் வைத்துவிடுவது. இதனால் அவர்கள் வழிபாட்டுக்கு உரியவர்கள் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் பதியவைக்கப்பட்டது. அவர்கள் எதை எதிர்த்துப் போராடினார்கள் என்பது மறக்கடிக்கப்பட்டது. ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தை அவர்கள் ஆன்மீக எல்லைக்குள் நின்றேதான் நடத்தினார்கள். அதாவது இறை நம்பிக்கை என்ற வட்டத்தைத் தாண்டி அவர்களால் சிந்திக்க முடியவில்லை. அவர்கள் வலியுறுத்திய பக்தி மார்க்கம் பற்றிய மயக்கம் .ஏதுமின்றி, அவர்களது உரிமைக் கலகத்தை மட்டும் அடையாளப்படுத்தியிருக்கிறது இந்நூல்.

தமிழக வரலாற்றில் நடந்த சமயப் போராட்டங்களில் நாவல் பழக்கொட்டை போல மருந்தாகும் போராட்டங்களும் உண்டு..... பண்பாட்டுத்தளத்தில் மக்களை மயக்கி ஆளும் பேராற்றலால் சமயம் தொடர்ந்து ஆட்சி புரியும்போது அதன் வட்டத்துக்குள்ளே எழும் மாற்றுக் கருத்துக்களிடம் நாம் பாராமுகமாய் இருக்க முடியாது, என்று நூலாசிரியர் கூறுவது அவரது நோக்த்தைத் தெளிவுபடுத்திவிடுகிறது.
சமய ஆதிக்கம் என்பது இந்திய மண்ணில் சாதிக்கம்தான் என்பதைத் தெளிவுபடுத்திவிடுவதால், சமய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்களை சாதிய மேலாதிக்கத்துக்கும் பாகுபாட்டிற்கும் எதிராகக் கிளர்ந்தவர்கள் என்ற புரிதலோடு தொடர்ந்து அணுக முடிகிறது,

தமிழகத்தில் சோழர்கள் காலத்தில் நடந்த சமயத் திணிப்பு முயற்சிகள், பின்னர் வந்த இஸ்லாமியர் ஆட்சி, நாயக்கர்களின் அரசு, மராத்தியர் ஆளுகை, நவாபுகள் அதிகாரம் என அன்றைய அரசியல் சூழல்கள் பற்றி தொடக்கக் கட்டுரைகள் விளக்கிவிடுகின்றன, பிற்காலத்தில் வந்த ஆங்கிலேயர் ஆட்சியும் தொட்டுக்காட்டப்படுகிறது. இந்த ஆட்சி மாற்றங்களோடு சேர்ந்து நடந்த சமூக மாற்றங்களும் எடுத்துரைக்கப்படுகின்றன. இது புத்தகத்தின் மையமான விவாதத்திற்குள் எளிதாக இட்டுச்செல்கிறது.

சாதிக்கட்டுமானத்தில் பிராமணமே உயர்ந்த சாதி மற்றவை கீழ்ப்பட்ட சாதிகளே என்பதை மக்கள் ஏற்கச் செய்வதற்காக அரசியல் அதிகாரம் பயன்படுத்தப்பட்டது. அது மட்டுமல்லாமல், விதியின் பெயராலும் வர்ணாசிரம ஏற்பாட்டை மக்கள் ஏற்கும் படி செய்யப்பட்டது, வர்ணாசிரமத் திணிப்பில் ஏனைய சமூகங்கள் அடக்கப்பட்டதோடு, தமிழ் மொழியும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆலயங்களில் பூசை செய்யத் தகுதிவாய்ந்த மொழியாக சமஸ்கிருதம் முன்நிறுத்தப்பட்டது. அதுவே ஆண்டவனுக்குப் புரிகிற புனிதமான மொழி என்றும் புகுத்தப்பட்டதை செந்தில்நாதன் ஆதாரங்களோடு காட்டுகிறார். அந்த மொழி யாருக்குத் தெரியுமோ அவர்களே பூசை செய்யும் தகுதி வாய்ந்தவர்களாக ஒப்புக்கொள்ள வைக்கிற உத்திதானே இது?

அடக்குமுறை, திணிப்பு என்று வந்தாலே அதையெல்லாம் ஏற்க மறுத்துக் கலகம் செய்வது இயற்கையே. 15ம் நூற்றாண்டில் அப்படியொரு கலகத்தைச் செய்யப் புறப்பட்டவர்தான் அருணகிரி. வசதியான குடும்பத்தில் பிறந்து காம மோகத்துடன் உல்லாசமாகச் சுற்றிக் கொண்டிருந்தவர் அவர். அவரது போக்கு கண்டு வருந்திய அவரை வளர்த்தவரான தமக்கை ஆதி, உன் இச்சையைத் தணித்துக்கொள்ள என்னையே எடுத்துக்கொள், என்று சொல்ல, மனம் திருந்திய அருணகிரி ஆன்மீக வழியில் ஈடுபட்டு சித்திகள் பெற்றார். உடல் விட்டு உடல் பாயும் அருள் பெற்ற அவர், மன்னன் கேட்டுக்கொண்டதற்காக மண்ணில் விளையாத அரிய ஆற்றல் மிக்கதொரு பாரிஜாத மலரைக்கொண்டுவர திருவண்ணாமலை ஆலயக் கோபுரத்தில் தன் மனித உடலைவிட்டுவிட்டு ஒரு கிளியின் உடலில் புகுந்து வானுலகம் சென்றார். அவரது எதிரி மன்னனிடம் சென்று அருணகிரிநாதர் இறந்துவிட்டதாக நம்பவைத்து உடலை எரிக்கச் செய்ய, பின்னர் முருகனோடு ஐக்கியமானார்...

இப்படியான மகிமைக் கதைதான் பரவலாக எல்லோருக்கும் தெரியும், உண்மையில் அருணகிரிநாதர் செய்தது ஆலயத்தில் தமிழ் வழி வழிபாட்டை மீட்பதற்கான ஒரு இயக்கமே, அவரது காலத்தில் ஏற்கெனவே சைவத்தின் பெயரால் சிவன் முன்னிலைப்படுத்தப்பட்டு, தமிழ் மக்களின் முருகன் ஒரு ஒட்டுக் கடவுளாக மாற்றப்பட்டிருநதான். கந்தபுராணம் கட்டப்பட்டு, முருகனின் காதல் மனைவி வள்ளி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு, தெய்வானை முக்கியத் துணையாக்கப்பட்டிருந்தாள். இதன் பின்னணியில் சமூக மேலாதிக்க நோக்கம் இருந்தது தெளிவு. ஆகவேதான் அருணகிரி நாதரின் பயணம், ஆதித்தமிழ் மக்களின் முருக வழிபாட்டை மீட்பதற்கான ஒரு இயக்கமாகவும் அமைகிறது.

இவ்வாறு அருணகிரி நாதரில் தொடங்கி தாயுமானவர், சித்தர்கள், குமரகுருபரர், சிவப்பிரகாசர், அண்ணாமலை ரெட்டியார் எனத் தொடர்ந்து, வள்ளலார் இயக்கம் வரையில் ஆராயப்பட்டிருக்கிறது. இந்தத் தொடர்ச்சியில் தமிழுரிமை, சமூக உரிமை ஆகிய உணர்வுகள் அழுத்தமாக இழையோடுவதைக் காண முடிகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது அசைவுகள் மிக்க சமூக மாற்றங்களின் பின்னணியில் எழுந்தது வள்ளலார் குரல். கிறிஸ்துவ சமயம் சார்ந்தவர்களோடு நட்புக் கொண்டிருந்த வள்ளலார் அதிலிருந்து உள்வாங்கிக்கொண்ட கருத்தாக்கங்களோடு சமயச் சீர்திருத்தத்தில் ஈடுபட்டார் என்ற தகவல் எந்த அளவுக்கு இந்த ஆய்வு வரலாற்றுப் பொருளியல் கண்ணோட்டத்தோடு செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அந்த சீர்திருத்த முயற்சிகளும், மதமாகிய பேய் பிடியாதிருக்க வரம் கேட்ட முற்போக்கு எண்ணமும்தான் சனாதன சமயவாதிகளின் ஆத்திரத்தைக் கிளறிவிட்டன. கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக என்ற அவரது பாடல் வரி அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் கொடுமையை எதிர்த்த அரசியல் வெளிப்பாடாகவும் இருந்ததை உணர முடிகிறது. கூடுவிட்டுக்கூடு பாய்ந்ததாகக் கூறப்படும் அருணகிரி நாதருக்கு உண்மையிலேயே என்ன நடந்தது என்பது ஒரு புதிர். வடலூரில் ஜோதியில் கலந்ததாகக் கூறப்படும் வள்ளலார் என்ன ஆனார் என்பதும் கண்டுபிடிக்கவே முடியாமல் போனது. ராமாயணத்திலாவது ராமன், தடையை மீறி வேதம் பயில முயன்ற சூத்திரன் சம்புகனை நேரில் சென்று கழுத்தைச் சீவிக் கொன்றான். இந்த அண்மைக்கால வரலாறுகளிலோ நியதிகளை மீறியது மட்டுமல்லாமல் அவற்றை எதிர்த்துப் பிரச்சாரமும் செய்தவர்கள் இப்படி உருத்தெரியாமலே அழிக்கப்பட்டிருக்கிறார்கள். வரலாற்றுத் தொடர்ச்சியில் ஆதிக்கசக்திகள் தங்களது மேலாண்மையைத் தக்கவைத்துக்கொள்ள, கடவுளை நம்பிக்கொண்டிராமல் தாங்களே நேரடியாகப் படுகொலை நடவடிக்கைகளில் இறங்கிய மூர்க்கமும் இழையோடுகிறது.

தமிழகத்தில் வைணவத்தின் நிலை குறித்தும் ஒரு கட்டுரை ஆராய்கிறது. சைவ சமயத்தில் நாயன்மார்கள் எப்படி பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தார்களோ அதே போல் வைணவத்தில் ஆழ்வார்களும் பல சாதிகளிலிருந்து புறப்பட்டதை அக்கட்டுரை தெரிவிக்கிறது. நந்தனுக்கு ஏற்பட்ட கதியைப் போலவே திருப்பாணாழ்வாருக்கு நேர்ந்த கதையையும் தெரிந்துகொள்ள முடிகிறது. 120 ஆண்டுகள் வாழ்ந்த ராமானுஜர் ஏன் நாடுவிட்டு நாடு செல்லவேண்டியதாயிற்று என்ற தகவல்கள் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.

ஒரு கேள்வி,,, இப்படி இவர்களது இன்னொரு அடையாளத்தைத் தெரிந்துகொள்வதால் என்ன பயன்? இன்று இந்துத்துவவாத எதிர்ப்பிலும், அதன் மூலக்கூறாகிய சாதிய எதிர்ப்பிலும் ஈடுபடுகிறபோது இதெல்லாம் மேற்கத்திய சிந்தனை என்று கூறிப் புறந்தள்ளும் முயற்சி நடக்கிறது. மேற்கத்திய சிந்தனை என்று கூறுவது ஒரு மோசடி, இந்த மண்ணில் ஒரு நீண்ட போராட்டச் சங்கிலியும் அதன் கண்ணிகளும் இருந்து வருவதை அவர்களுக்கு உரத்துச் சொல்ல இத்தகைய ஆய்வுகள் பயன்படும். இந்த ஆன்மீகத் தலைவர்களது இன்னொரு பக்கத்தை மக்களுக்கு எடுத்துக்கூறுவது, ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில் அந்த மக்களைத் திரட்டவும் பயன்படும்,
-அ. குமரேசன்

அருணகிரி நாதர் முதல் வள்ளலார் வரை - ஒரு மறுவாசிப்பு
ச. செந்தில்நாதன்
வெளியீடு:
புதுமைப் பித்தன் பதிப்பகம்,
ப.எண் 57, 53வது தெரு,
9வது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை 600 083
பக்கங்கள்:152 விலை: ரூ.80-00

Thursday, 19 August 2010

கம்யூனிசம் என்றால்... 7

பெண் எப்படி மனைவியானாள்?


நிலம் அனைத்து உயிர்களுக்கும் தாய் என்ற பொது உடைமை நிலை மாறி அதைக் கைப்பற்றியவர்களின் சொத்து என்ற தனி உடைமை நிலை உருவானதை முந்தைய கட்டுரையில் கண்டோம். அந்த நிலத்தில் விளைகிற தாவரங்கள், வளர்க்கப்படும் கால்நடைகள், அதில் கட்டப்படுகிற கட்டடங்கள் ஆகியவை நிலச்சொந்தக்காரரின் உடைமையாகின்றன. இறங்கி வேலை செய்கிற மனிதர்களும் கூட நில உடைமையாளரின் சொத்தாகிறார்கள்.

நிலம் ஒரு சொத்தாக மாற்றப்பட்ட பிறகு, அதைக் கைப்பற்றியவர்கள் தொடர்ந்து தமது பிடியிலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள். வயது முதிர்ந்து முன்போல் யாரையும் கட்டுப்படுத்தவோ வேலை வாங்கவோ முடியாது என்ற நிலை வருகிறபோது, தன் சார்பாகக் கட்டுப்படுத்துகிறவர்கள் தேவை என்று திட்டமிடுகிறார்கள். தன் சார்பாகக் கட்டுப்படுத்துவதற்கு வேறு யாரையும் நம்ப முடியாது என்பதால் தனது இன்னொரு பிம்பத்திடம் - அதாவது வாரிசாகப் பிறக்கிறவரிடம் சொத்தை ஒப்படைக்கிற நடைமுறை உருவாகிறது.

அந்த ரத்த உறவான வாரிசை உருவாக்குகிற ஏற்பாடாகக் குடும்பம் உருவாகிறது. மனை என்ற சொத்தின் உடைமையாளன் குடும்பத்தின் தலைவனுமாகிறான். பயிர்களை உருவாக்கித் தருகிற நிலம் போல, வாரிசாக உயிர்களை உருவாக்கித் தருகிற உயிருள்ள நிலமாகப் பெண் மாற்றப்படுகிறாள். குடும்பத் தலைவனின் உடைமையாகிறாள்.

கணம் என்றால் குழு என்றும் அதன் தலைவன் கணபதி என்றும் பார்த்தோம் அல்லவா? குடும்பம் என்பதே ஒரு கணமாக உருவெடுக்கிறபோது அதன் தலைவன் கணவனாகிறான். அவனுடைய மனையை ஆள்வதற்கான வாரிசைப் பெற்றுக்கொடுக்கிற பெண் அவனது மனைவியாகிறாள்.

ஆம், குடும்பம் என்ற ஏற்பாட்டில் கணவனுக்கு நிகரான உரிமையோ அதிகாரமோ மனைவிக்குக் கிடையாது. எவ்வளவுதான் அவள் ஆணின் ஆசைக்கும் காதலுக்கும் உரியவளானாலும் அவளுடைய பொறுப்பு ஆணின் ரத்தச் சொந்தமாக அவனுக்கு ஒரு வாரிசை உருவாக்கித் தருவதுதான். கணவனுக்குப் பின் சொத்தின் உடைமையும் அதிகாரமும் அவனுடைய வாரிசுக்குத்தான். அதுவும் ஆண் வாரிசுக்குத்தான். பெண் வாரிசு பிரியத்துக்கு உரியவளாக இருந்தாலும், இன்னொரு ஆணுக்கு வாரிசை உருவாக்கித் தருவதுதான் அவள் பொறுப்பு. இப்படியாகப் பெண்ணுக்குப் பிறந்த வீடு, புகுந்த வீடு என்ற கருத்துக்கள் உருவாகின்றன.

இயற்கையாக ஒவ்வொருவரும் தன்னை ஈர்க்கிற இன்னொருவரைத் துணையாக்கிக் கொண்டு, ஒருவர் மீது ஒருவர் அன்பையும் காதலையும் பொழிந்து, அந்த உறவால் பிறக்கிற குழந்தைகளை வளர்த்துவிட்ட உறவு முறைக்கு மாறாக, சமூகத்தின் விதிகளுக்கு உட்பட்ட குடும்ப உறவு முறை உருவாக்கப்படுகிறது. மனிதர்கள் இப்போது தன் குடும்பம் என்ற உணர்வோடு பாசத்தை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினார்கள்.

அரசு என்ற அதிகார அமைப்பின் மூலமாக இந்தக் குடும்ப உறவு முறைகளும் வாரிசு உரிமைகளும் சட்டப்பூர்வமானதாக எழுதப்படுகின்றன. ஆணுக்குப் பெண் அடங்கி வாழ்வதும், குறிப்பிட்ட ஆணுக்கு மட்டும் வாரிசைப் பெற்றுத் தருவதும் சமூக விதிகளாக போதிக்கப்படுகின்றன. அதற்கு கற்பு என்ற பெயர் சூட்டப்படுகிறது. கற்புடைய பெண்ணே புனிதமானவள் என்ற கருத்துக்களும் விதைக்கப்படுகின்றன.

இதையெல்லாம் விதிகளாக உருவாக்கி அறிவிப்பதற்கான அரசு என்ற அதிகார அமைப்பின் தலைவன்தான் அரசன். அவனுடைய ஆளுமை, ஆயுத வலிமை, படை பலம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசின் அதிகாரம் நிலைநாட்டப்படுகிறது. யாராவது அரசனின் ஆணையை மீறி இன்னொருவனின் சொத்தைக் கைப்பற்ற முயல்கிறபோது அல்லது தன் சொத்தைக் காப்பாற்றப் போராடுகிறபோது அவனை அடக்குவதற்கான அடியாட்கள்தான் அரசனின் படை. அதே நிலங்களைக் கைப்பற்ற வேறு இடங்களிலிருந்து வருகிற மற்ற அரசர்களின் ஆட்களோடு மோதுகிற வேலையும் இந்த அரசனின் படையாட்களுக்குத் தரப்படுகிறது.

இப்படியாக அதிகாரம், ஆயுதம் ஆகியவற்றைக் கொண்டு அடக்குவதன் மூலம் சமுதாயத்தைக் கட்டுப்படுத்துகிற அமைப்பாக உருவெடுத்ததால்தான் அரசு என்பது அடக்குமுறைக் கருவி என்று கூறப்படுகிறது.

இந்த அதிகாரக் கட்டமைப்பில் கடவுள் நம்பிக்கை புகுத்தப்பட்டது இன்னொரு வகையான ஏற்பாடு. அதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

Tuesday, 17 August 2010

செங்கோட்டைப் பேச்சு திண்ணைப் பேச்சுதானா?


“பேச்சுவார்த்தைதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண ஒரே வழி... இந்தியாவின் ஜனநாயகத்துக்கு நாட்டின் எந்தவொரு பகுதி அல்லது எந்தப் பிரிவு மக் களின் பிரச்சனைகளையும் கையாள்கிற விசால குணமும் நெகிழ்வுத் தன்மையும் இருக் கிறது,” என்று அருமையான சொற்களால் கூறி யிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். காஷ்மீரிகளானாலும், வடகிழக்குப் பகுதியானாலும், நக்சலைட்டுகளானாலும் எந்தவொரு பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே தாம் விரும்புவதாக அவர் தெளிவானதொரு செய்தியை வெளியிட்டதாக ஊடகங்கள் புகழ்கின்றன. சரிதான், இந்தப் பிரச்சனைகளுக்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடங்கப் போகின்றன என்று மனதில் நம்பிக்கை விரிய வில்லை. ஏனென்றால் அவர் பேசியது நாட்டு மக்களின் மிக உயர்ந்த பிரதிநிதித் துவ அமைப்பாகிய நாடாளுமன்றத்திலோ, அமைச்சரவைக் கூட்டத்திலோ அல்ல. ஆகஸ்ட் 15 அன்று தில்லி செங்கோட்டையில் சுதந்திர தினக் கொடியேற்றி உரையாற்றிய போதுதான் அவர் இப்படிக் கூறியிருக்கிறார்.

அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான விவகாரங்களுக்கு முறையான பேச்சுவார்த் தைகள் மூலமே சரியான தீர்வு காண முடி யும் என்றுதான் மார்க்சிஸ்ட் கட்சியும் இதர இடதுசாரி இயக்கங்களும் ஜனநாயக அமைப்புகளும் எடுத்துரைத்து வந்துள்ளன. ஆனால் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட பல மாநில அரசுகளும்தான் பேச்சுவார்த்தை வழி முறைக்கு வர மறுக்கின்றன. பிரச்சனைக ளால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டக் களத்திற்கு வருகிறபோது, அவர்களில் சிலர் தவ றான வழிகாட்டலால் வன்முறையில் இறங்கு வார்கள். சில நேரங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், ஏன் காவல்துறையினரே கூட அப்படிப்பட்ட வன்முறைகளைத் தூண்டிவிடுவதுண்டு. இவர்களே வன்முறையில் இறங்கிவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தான் கலவரம் செய்ததாகப் பதிவு செய்வதும் உண்டு. கலவரத்தைச் சாக்கிட்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் தொடுப்பதே நோக்கம். அந்தத் தாக்குதல்களும் இரண்டு வகைப்படும். ஒன்று, நேரடியான தடியடி, துப்பாக்கிச் சூடு போன்ற தாக்குதல்கள்; இரண்டு, வழக்கு, வாய்தா போன்ற தாக்குதல்கள். எங்கே போயிற்று பேச்சுவார்த்தை வழிமுறை?

இன்று பற்றியெரிந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்சனையின் அடிப்படை என்ன? அந்த மக்கள் தொடர்ந்து ஆட்சியாளர் களால் வஞ்சிக்கப்பட்டதுதான் அவர்கள் தனி மைப்பட்டதாக உணர்வதற்கு, கணிசமான மக்கள் இந்திய அரசுக்கு எதிராகத் திரும்பு வதற்கும் இட்டுச் சென்றது. இந்தியா விடு தலையடைந்தபோது காஷ்மீர் இந்தியா வுடன் இணைந்திருக்கவில்லை, அது தனி யொரு அரசாகவே இருந்தது என்ற உண் மையே கூட பலருக்கும் தெரியாது. இந்திய மாநிலங்களில் ஒன்றாக இணைவதற்கு ஒப்புக்கொண்டபோது அன்றைய இந்திய அரசு செய்துகொண்ட உடன்பாடு, அந்த உடன்பாட்டின்படி காஷ்மீருக்கு அளிக்கப் பட்ட தனித்தகுதிகள் நேர்மையின்றி மீறப் பட்டது போன்ற விவகாரங்கள் நாட்டின் இதரபகுதி மக்களுக்குத் தெரியாது. இந்திய அரசு அதையெல்லாம் சொல்வதில்லை. மாறாக, காஷ்மீருக்கு மட்டும் ஏன் சிறப்புச் சலுகைகள் என்கிற பாஜக பாணி வாதம்தான் பரப்பப்படுகிறது. இதைப் பயன்படுத்தி சில அமைப்புகள் தங்களின் பின்னால் வரக் கூடிய இளைஞர்களைத் திசைதிருப்பித் தூண்டிவிடுவதும் நடக்கிறது. இப்படிப்பட்ட அத்துமீறல்களின் தொடர்ச்சிதான் காஷ் மீரின் இன்றைய நிலைமை. ஆனால் அந்த மக்களின் பிரதிநிதி களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? அந்த மக்க ளையே எதிரிகளாக்கி அந்த மண்ணையே ஒரு போர்க்களமாக்கி பாதுகாப்புப் படை யினரின் துப்பாக்கிச் சூடு, இளைஞர்கள் பலி என்ற நிகழ்வுகளை தினசரிச் செய்தி யாக மாற்றியது யார் குற்றம்? காஷ்மீர் மக்களின் அடையாளங்கள் பாதுகாக்கப் படும், அதிகபட்ச சுயாட்சியுடன் கூடிய ஒரு புதிய அரசியல் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும், அது பற்றிப் பேசலாம் என்று உறுதியளித்து அழைப்பதற்கு மாறாக, பேச்சுவார்த்தைக்கு வருவதையே தடுக்கிற கெடுபிடிகள் ஏன்?

வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சனை யும் இப்படித்தான். மணிப்பூர் செல்லும் சாலைகள் மறிக்கப்பட்டிருப்பதால் உயிர் காக்கும் மருந்துகள் கூட அந்த மக்களைச் சென்ற டைய முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தேசிய அளவில் உண்மையான கூட்டாட்சி யும், சரியான மாநில சுயாட்சியும் இணைந்த அரசமைப்பு உறுதிப்படுத்தப்படும் என்ற வாக் குறுதிதான் இந்த நிலைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அடிப்படைத் தேவை. அதற்கான பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கத் தடையாக இருப்பது என்ன?

நக்சலைட் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதும், வனப்பகுதி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளோடு இணைந்ததுதான். நக்சலைட்டுகள் தற்போதைய சூழலைத் தங்களது வன்முறை அரசியலுக்கு சாதகமாகக் கைப்பற்றியிருக்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மானால், வன மக்களின் நிலங்களுக்குள் கார்ப்பரேட் புல்டோசர்கள் புகுந்து வேட்டையாட அனுமதிக்கிற கொள்கையை முதலில் மத்திய அரசு கைவிட்டாக வேண்டும். அதன் பின் ஜனநாயக அமைப்புகளோடு நேர்மையான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண் டும். ஆனால், மேற்கு வங்கத்தில், வன மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண விடாமல், இடது முன்னணி அரசுக்குத் தலைவலி ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மாவோயிஸ்ட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் உறவும் வைத்திருக்கிற திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மன்மோகன் சிங் அமைச் சரவையில் முக்கிய இடத்தில் இருக்கிறார்! அவருடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி வன்முறை உறவைத் துண்டித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டியதுதானே!

இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர் பாகப் பேச்சுவார்த்தை நடத்துவது இருக்கட் டும், முதலில் தனது அரசின் பல்வேறு நட வடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசு வதற்கு முன்வரட்டும்! இந்தியச் சந்தையை அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் கபளீகரம் செய்வதற்கு, குறிப்பாக இந்தியாவின் எளிய விவசாயிகளைத் தெருவில் நிறுத்துவதற்கு வழிசெய்யும் சுதந்திர வர்த்தக உடன்பாடு, அமெரிக்காவுடனான அணு விபத்து இழப் பீடு ஒப்பந்தம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகள்... இன்ன பிற சங்கதிகள் குறித்து மக்களின் பிரதி நிதிகள் சபையில் சுதந்திரமாக விவாதிக்க விடுவதில் என்ன தயக்கம்?

ஆகவே பிரதமர் அவர்களே, மக்களின் பிரதிநிதிகள் சபையில் பேசுவதற்குத் தயாராகுங்கள், நீங்கள் சொன்ன பிரச்சனைகள் தொடர்பானவர்களோடும் பேச்சுவார்த்தை நடத்துங்கள். இதற்கான முயற்சிகளைத் தொடங்காத வரையில், வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையாக மட்டும் அணுகிடும் வரையில் உங்கள் செங்கோட்டை மேடைப் பேச்சு வெறும் திண்ணைப்பேச்சாகவே எடுத்துக்கொள்ளப்படும்.

Wednesday, 11 August 2010

கம்யூனிசம் என்றால்... 6


வர்க்கம் எனப்படுவது யாதெனின்


உடைமை வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என இரண்டு பிரிவுகள் இருப்பதைக் கண்டோம். அந்த உடைமை வர்க்கம்தான் குறிப்பிட்ட சமுதாயத்தில், குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆளும் வர்க்கமாக இருக்கிறது. ஆளும் வர்க்கம் என்றால் அரசாங்கத்தின் ஆட்சி பீடத்தில் இருக்கிறவர்கள் என்று அர்த்தமல்ல. அந்த சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துகிற, மற்றவர்களின் உழைப்பைப் பயன்படுத்துகிற வர்க்கம் என்று பொருள்.

முதலில் எங்கும் காடாகவே இருந்தது. அந்தக் காடுகளில் மனிதர்கள் குழுக்குழுவாக வாழ்ந்தார்கள். ஒவ்வொரு காட்டின் தன்மை, அங்கு வாழ்ந்த மனிதர்களின் உடல் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் வெவ்வேறு குழுக்களாக இருந்தார்கள். இனக் குழு என்று சொல்லப்படுவது இதுதான். அன்றைய காலத்தில் இப்போது போல் பல நூறுகோடி மக்கள் தொகை என்பதெல்லாம் கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சிறு சிறு இனக்குழுக்களாகத்தான் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு குழுவிலும் நூறுபேர், நூற்றைம்பது பேர் என்றுதான் இருந்தார்கள். அனுபவத்தால் சேர்த்த அறிவின் அடிப்படையில் வனத்தின் கடுமையான நிலைமைகளில் வாழ்வது எப்படி, விலங்குகளில் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பது எப்படி, விலங்குளை வேட்டையாடுவது எப்படி, எப்படிப்பட்ட தாவர உணவுகளை உண்ணலாம், மழை வந்தால் என்ன செய்யலாம், நெருப்பு பிடித்துக்கொண்டால் என்ன செய்யலாம் என்றெல்லாம் மற்றவர்களுக்கு வழிகாட்டியவர்கள் குழுக்களின் தலைவர்கள் ஆனார்கள். இந்திய நிலப்பகுதிகளில் இப்படி குழுத்தலைவராக இருந்தவர்தான் ‘கணபதி’ என்று பின்னர் குறிப்பிடப்பட்டார். கணம் என்றால் குழு அல்லது சமூகம் என்று பொருள். பதி என்றால் தலைவர்.

உற்பத்திக் கருவியாக அதாவது உற்பத்தி செய்வதற்கான ஆதாரமாக நிலம் பயன்படுத்தப்படுவது தொடங்கியதைப் பற்றிப் பார்த்தோம். கருவி என்று வந்துவிட்டால் அதைக் கையாள்வதற்கான கைகள் வேண்டும் அல்லவா? அந்தக் கைகள் மற்றவர்களுடையதாக இருக்க, அந்த உழைப்பின் பயனை ஒருவர் அல்லது ஒருசிலர் மட்டும் அனுபவிப்பதே சுரண்டல். வன்முறை, தந்திரம் என பல வழிகளில் ஒருவர் நிலத்தை வளைத்தை வளைத்துப் போட்டுக்கொண்டாலும் அவரால் மட்டுமே நிலத்தில் இறங்கி வேலை செய்து பயிர்களை விளைவிக்க முடியாது அல்லவா? எனவே அவர் அந்த வேலையில் பலரை ஈடுபடுத்துகிறார். நிலத்தைக் கைப்பற்றும் போட்டியில் பின்தங்கியவர்கள், அப்படியொரு போட்டி நடப்பதே தங்களது கவனத்திற்கு வராமல் ஏமாந்தவர்கள், ஆனால் உழைப்பதற்குச் சலிக்காதவர்கள் நிலத்தில் இறங்கினார்கள்.
தொடக்கத்தில் இவ்வாறு வேலை செய்வதற்காக காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த மக்களைக் கூட்டம் கூட்டமாகப் பிடித்துக்கொண்டுவந்து ஈடுபடுத்தினார்கள். அவர்களை அடிமைகளாக நடத்தினார்கள். நிலத்தில் மட்டுமல்லாமல் பெரிய கோட்டைகள் கட்டுவது, நடமாட்டத்துக்கு வசதியாக சாலைகள் அமைப்பது போன்ற வேலைகளுக்கும் அந்த அடிமைகளையே பயன்படுத்தினார்கள். வேலை முடிந்ததும் விரட்டிவிட்டார்கள். ஒரு செல்வந்தர் தன் அடிமைகளை மற்ற செல்வந்தர்களுக்குப் பரிசாக அளிப்பார். ஆடு மாடுகளை விற்பது போல். வேலை செய்வதற்காக அடிமைகளை விற்பனை செய்வது என்ற கொடுமையும் நடந்தது. அடிமைகள் அளவுக்கு மேல் சேர்ந்துவிட்டால் கூடுதலாக இருப்பவர்களைக் கொன்றுவிடுவார்கள். இப்படி அடிமை முறை இருந்த காலத்தை அடிமைச் சமுதாயம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நிலம் என்பது அடிப்படையான, நிலையான ஒரு உற்பத்திக் கருவியாகப் பயன்படும் என்று கண்டறிந்த பின் அதே அடிமைகள் விவசாய உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். நிலம் இல்லாதவர்கள் மட்டுமல்லாமல் சிறு அளவுக்கு மட்டுமே நிலம் வைத்திருந்தவர்களும் பெரிய பண்ணை நிலங்களில் வேலை செய்யச் சென்றார்கள். இந்த விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் மண்ணை சரிப்படுத்தினார்கள், பயிரிட்டார்கள், பயிரைப் பாதுகாத்தார்கள், வளர்த்தார்கள், பயிரிலிருந்து தானியங்கள் விளைந்ததும் அவற்றை அறுவடை செய்து கொடுத்தார்கள்.

இப்படி உழைப்பவர்களின் பங்களிப்பு என்பது இல்லை என்றால், எவ்வளவு பெரிய நிலம் இருந்தாலும் அதனை விவசாயத்துக்கும் பயன்படுத்துவதில் உடைமையாளருக்கும் உழைப்பவருக்கும் சம பங்கு இருக்கிறது. ஆனால், விளைச்சலை அனுபவிப்பது என்று வருகிறபோது மட்டும் சமமாகப் பங்கிடப்படுவதில்லை.

உண்மையிலேயே பாடுபட்டு உற்பத்தி செய்தவர்களுக்கு, நிலத்தில் விளைந்ததில் கொஞ்சத்தைக் கொடுத்துவிட்டு பெரும்பங்கு மீதி விளைச்சல்களை உடைமையாளர் தானே வைத்துக்கொள்கிறார். உழைத்ததற்கான பங்காக உழைப்பாளிக்கு அவர் கொடுப்பதுதான் கூலி.
கூலியாகக் கொடுப்பது எந்த அளவுக்கு இருக்கும் என்றால், மறுநாள் வேலைக்கு வரவேண்டுமானால் உயிரோடும் உழைப்பதற்கான தெம்போடும் இருக்க வேண்டும் அல்லவா? அவ்வாறு உயிரோடும் தெம்போடும் வைத்திருப்பதற்குத் தேவையான அளவுக்கு மட்டுமே உணவு தானியம் கூலியாகக் கொடுக்கப்பட்டது. (பணம் என்பது உருவாக்கப்பட்டதற்குப் பின்னர் தானியத்திற்கு பதிலாக பணமே கூலியாகத் தரப்பட்டது. பணம் எப்படி நடைமுறைக்கு வந்தது என்பது சுவையான தனி வரலாறு.)

இதுதான் உழைப்புச் சுரண்டல் என்பது. நிலம் ஒரு சொத்தாக மாற்றப்பட்டு, பெரிய அளவுக்கு அதைக் கைப்பற்றியவர்கள், அவரவர் பலத்துக்கு ஏற்ப சிறியதும் பெரியதுமாகக் கைப்பற்றியவர்கள், அந்த நிலங்களில் பாடுபட்டு உழைத்துக்கொடுத்துவிட்டுப் பசியாறியவர்கள் என்ற இந்த சமூக அமைப்புக்குப் பெயர்தான் நிலவுடைமைச் சமுதாய அல்லது பண்ணைச் சமுதாயம். நிலப்பிரபுத்துவ சமுதாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு.

இந்தக் காலத்திலேயே கூட ஒரு அரையடி நிலத்தை சட்டவிரோதமாகக் கைப்பற்றுவதற்கோ, அல்லது கைப்பற்றிய நிலத்தில் அரையடி அளவுக்குக் கூட வேறு யாரும் எடுத்துக்கொள்ளாமல் தடுப்பதற்கோ எவ்வளவு வன்மம் நிறைந்த மோதல்கள் நடைபெறுகின்றன என்பதைப் பார்க்கிறோம். சில நேரங்களில் வெட்டுக்குத்து, கொலை செய்கிற அளவுக்குக்கூட அந்த மோதல்கள் போய்விடுகின்றன. சட்டம், விதி, கண்காணிப்பதற்கான அதிகார அமைப்பு என்றெல்லாம் இருக்கிற இந்தக் காலத்திலேயே இப்படியெல்லாம் நடக்கிறது என்றால் அந்தக் காலத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று எளிதாக ஊகிக்கலாம். நிலத்தைக் கைப்பற்றும் ஆசையில்லாதவர்கள், அதற்கு வழியற்றவர்கள் எந்த நிலத்தில் வேண்டுமானாலும் இறங்கி உழைத்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் நிலம் இயற்கை கொடுத்தது, அதிலே உழைப்பதற்கும் தேவையானதை உற்பத்தி செய்துகொள்வதற்கும் யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றே நினைத்தார்கள். நிலத்தை வளைத்துப் போட்டவர்கள் அவர்களை அடித்தார்கள். இதைத் தொடர்ந்து பல வன்முறை மோதல்கள் நடைபெற்றன.

அப்போதுதான் இதையெல்லாம் கண்காணிப்பதற்கும் முறைப்படுத்துவதற்கும் ஒரு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த ஏற்பாட்டிற்குப் பெயர்தான் அரசு. அதுவரையில் மனிதர்கள் சுதந்திரப் பறவைகள்தான். அடிப்பவர்களும் சுதந்திரமானவர்களே, அடிபடுகிறவர்களும் சுதந்திரமானவர்களே. இப்போது அரசு என்ற ஒரு ஏற்பாடு உருவாகி, சட்டங்களும் விதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன இந்த நிலம் இவருக்குச் சொந்தம், அதை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் வருகிறது. நிலத்தில் இறங்கி உழைக்கிறவர்கள் கோபித்துக்கொள்வார்களே? அதைத் தவிர்க்க, உழைக்கிறவர்களுக்கு நிலச் சொந்தக்காரர்கள் எவ்வளவு கூலி தரவேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
அது வரையில் குழுக்களின் தலைவர்கள் மட்டுமே இருந்தார்கள். தலைவர் என்றால் உடனே நம் புத்தியில் ஆண் உருவம்தான் நினைவுக்கு வரும். அந்தக் காலத்தில் அனுபவ அறிவின் அடிப்படையில் தங்களது கூட்டங்களுக்குப் பெண்களும் தலைமை தாங்கினார்கள். சொல்லப்போனால் குடும்ப உறவு என்பதெல்லாம் உருவாகியிராத அக்காலத்தில் தாயைத்தான் பிள்ளைகளுக்குத் தெரியும். தாயை வைத்தே ஒருவர் எந்தக் குழுவைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டார். தாய் வழிச் சமூகம் என்று இதைச் சொல்வார்கள்.
குழுக்களின் தலைவர் என்பதற்கு மாறாக காடு, மலை, ஆறு, வயல், ஊர் என அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட அரசு என்ற அமைப்பு உருவானது. ஆம், அரசு என்பது உருவானதன் அடிப்படையே சொத்துடைமையைப் பாதுகாப்பதுதான்.

இவ்வாறாக அரசு உருவான பின் பெண் எப்படி தலைமையிடத்திலிருந்து ஆணுக்குக் கீழ்ப்பட்ட இடத்திற்குத் தள்ளப்பட்டாள்? இதில் சாதி, மதம் எப்படி உருவானது? அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

Monday, 2 August 2010

முகத்திரை விலக்க ஒரு சட்டம்: விடுதலையா அத்துமீறலா?


ந்த இளம் பெண் கண்ணாடி முன் வந்து நிற்கிறாள். பார்த்துப் பார்த்துக் கூந்தலை வாரி நேர்த்தியாகச் சடை பின்னுகிறாள். தன் முகத்தை ஒரு ஓவியத்திரையாக்கி, ஒளிரச் செய்யும் ஒப்பணைத் தூள் பூசிக்கொள்கிறாள். புருவம் தீட்டிக்கொள்கிறாள். இமைகளுக்கு மை தடவித் தன் கண்களைப் பளிச்சென எவரும் காணத்தக்கதாய் ஆக்குகிறாள். அலமாரியிலிருந்து அழகான உடை ஒன்றை எடுத்து அணிகிறாள். அதன் கசங்கல்களை நேர்கிறாள். தேவதை என வர்ணிக்கத் தக்க வடிவில் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு புறப்படுகிறாள். புறப்படுவதற்கு முன்... கொடியில் தொங்கவிடப்பட்டிருக்கும் இன்னொரு கருப்பு அங்கியை எடுத்து மாட்டிக்கொள்கிறாள். அவளது தலை முதல் பாதம் வரையில் மூடுகிற அந்த அங்கியை மாட்டிக்கொண்டபின் அதன் நெற்றிப்பகுதியில் மடிந்திருக்கும் முகத்திரையை இழுத்துவிடுகிறாள். யாரும் அவளது தலைமுடியைக் கூடப் பார்க்க முடியாது என்பதை உறுதிப்படுத்திய பின் வாசல் படியில் கால்வைக்கிறாள்...

இதற்காகத்தானா இவ்வளவு நேர அலங்காரமும் என்ற சிந்தனையையும், அவளது சொந்த விருப்பங்கள் அந்தக் கருப்பு அங்கிக்குள் புதையுண்டுபோவது பற்றிய வேதனையையும் ஏற்படுத்துகிற இந்தக் காட்சி ஒரு குறும்படத்தில் வருகிறது (படத்தின் பெயர்: ‘மறைபொருள்’, இயக்குநர்: பொன் சுதா). நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் பார்த்த இந்தக் குறும்படத்தைப் பற்றிய நினைவு இப்போது எழுந்ததற்குக் காரணம் ஒரு செய்தி.

பிரான்ஸ் நாடாளுமன்றம் இந்த ஜூலை மாதத்தில் ஒரு சட்ட முன்வரைவை நிறைவேற்றியிருக்கிறது. 335 பேர் அதனை ஆதரித்தும், ஒரே ஒருவர் எதிர்த்தும் வாக்களித்திருக்கிறார்கள். வரும் செப்டம்பரில் பிரான்ஸ் நாடாளுமன்ற மேலவை இந்த சட்ட முன்வரைவை நிறைவேற்ற வேண்டும். அதன் பின் அது அதிகாரப்பூர்வமான சட்டமாகிவிடும். பொது இடங்களில் எந்தவொரு பெண்ணும் தனது உடலை முற்றிலுமாக மறைக்கிற பர்தா உள்பட, முகத்தை மறைக்கும் எந்தவொரு திரையையும் அணிந்துகொள்வதற்குத் தடை விதிக்கும் சட்டம் அது. தடையை மீறுவோருக்கு 150 யூரோ ( ரூ. 9,120 ரூபாய்) தண்டம் விதிக்கப்படும்! குடியுரிமை பற்றிய பயிற்சி முகாமுக்கும் அவர் அனுப்பிவைக்கப்படுவார். பர்தா அல்லது முகத்திரை அணியக் கட்டாயப் படுத்துவோருக்கு 15,000 யூரோ அபராதம் (ரூ. 9,12,000) அல்லது ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

குறிப்பாக இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த பெண்கள்தான் பர்தா அணிகிறார்கள் என்பதால், இந்தச் சட்டம் அவர்களது நம்பிக்கையில் குறுக்கிடுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமல்லாமல், மதப் பாகுபாடற்ற மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. உலகப் பொதுமன்னிப்பு அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு மக்களிடையே நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 82 விழுக்காட்டினர் இந்தத் தடைச் சட்டத்தை வரவேற்பதாகவும், 17 விழுக்காட்டினர் இது ஏற்கத்தக்கதல்ல எனக் கருத்துத் தெரிவித்திருப்பதாகவும் பியூ குளோபல் ஆட்டிடியூட்ஸ் பிராஜக்ட் என்ற அமைப்பு தெரிவிக்கிறது. பர்தா அணிவதை ஒரு மதநம்பிக்கை சார்ந்த நடைமுறையாகக் கடைப்பிடிக்கும் இஸ்லாமிய மக்களிடையே ஆய்வு நடத்தப்பட்டதா, அவர்களில் எத்தனை விழுக்காட்டினர் இதை ஆதரிக்கிறார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை.
பிரான்ஸ் நாட்டு இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் அங்கேயே தலைமுறை தலைமுறையாக வாழ்கிறவர்கள். மேற்கத்தியப் பண்பாட்டுடன் இணைந்தே வாழ்ந்துவந்திருப்பதால் பிரெஞ்சு இஸ்லாமியப் பெண்களில் பலர் இந்தச் சட்டத்தை உற்சாகத்துடன் வரவேற்கிறார்கள் என்று அங்குள்ள என் நண்பரொருவர் கூறினார். இதை எதிர்க்கிற இஸ்லாமியர்களில் ஆண்கள்தான் மிகுதியாக இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரெஞ்சு அரசாங்கம் என்ன கூறுகிறது ? பர்தா, முகத்திரை அணிதல் நாட்டின் சம உரிமை விதிகளுக்கு முரணானதாக இருக்கிறது என்று கூறுகிறது. “சமுதாய வாழ்க்கையை அனுமதிக்கிற, தனிமனித கவுரத்தையும் பாலின சமத்துவத்தையும் உறுதிப்படுத்துகிற சட்ட விதிகளுக்கு இந்த (பர்தா/முகத்திரை) வழக்கம் ஊறு விளைவிக்கிறது; இதனை ஒருவர் தானாகவே முன்வந்து கடைப்பிடிக்கிறார் என்றாலும் கூட பொது இடங்களில் இது சகித்துக்கொள்ளக்கூடியதல்ல,
” என்பது அந்நாட்டு அரசின் வாதம். மேலவையிலும் நிறைவேறி சட்டமாக அறிவிக்கப்படுமானால், ஐரோப்பாவிலேயே இப்படியொரு தடையை முதலில் கொண்டுவந்த நாடாக பிரான்ஸ் இருக்கும். இது எப்படிப்பட்ட தொடர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கவனித்து பின்னர் தங்கள் நாடுகளிலும் இதே போன்ற தடையாணை கொண்டுவருவது குறித்து ஆலோசிக்க இதர மேற்கத்திய அரசுகள் திட்டமிட்டுள்ளனவாம்.

பிரான்ஸ் அரசின் இந்த நடவடிக்கையை எப்படி எடுத்துக்கொள்வது? மத வேலியிலிருந்து விடுதலையளிக்கும் புரட்சிகரமான முயற்சியா, அல்லது சொந்த நம்பிக்கைகளில் தலையிடும் அத்துமீறலா?

பெண்கள் முகத்திரை அல்லது முழு உடலையும் மறைக்கும் அங்கி அணிவது இஸ்லாமியர்களிடையே மட்டுமே உள்ள நடைமுறை அல்ல. இந்தியாவில் மார்வாடிகள் உள்பட பல சமூகங்களில் சேலை முந்தானையையே தலை வரை இழுத்து மூடி முகத்தை மறைத்துக் கொள்கிற பழக்கம் இருக்கிறது.
தமிழகத்திலும், பல சமூகங்களில் இந்தப் பழக்கம் இருக்கிறது. குறிப்பாக வேற்று ஆடவர்கள் வீட்டுக்கு வந்தால் பெண்கள் இழுத்துப் போர்த்திக்கொண்டாக வேண்டும். கிறிஸ்துவத்திலும் பெண் துறவிகள் தலையில் பின்பக்கமாக ஒரு துணியைத் தொங்கவிட்டுக்கொள்கிறார்கள்
. அவர்கள் முகத்தை மறைப்பதில்லை. ஆனால் உடலை மறைக்கும் நீண்ட அங்கியை அணிகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் பெண்களின் ஆடைச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்துடையவவன். ‘பெண்ணே நீ‘ ஏட்டிற்கு நான் எழுதிய முதல் கட்டுரையே பெண்ணின் ஆடை உரிமை பற்றியதுதான். பண்பாட்டுப் பெருமையாகப் பேசப்படும் சேலையை விட, தன்னிடம் வம்பு செய்கிறவனைக் காலால் ஓங்கி மிதிக்கவும், நிறுத்தத்தில் நிற்காமல் ஓடும் பேருந்துகளை ஓடிப்பிடிக்கவும் எந்த உடைகள் வசதியாக இருக்கின்றனவோ அவைதாம் பெண்களுக்கு ஏற்ற உடைகள் என்று அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

எப்படி வந்தது இந்த பர்தா/முகத்திரைப் பழக்கம்? இஸ்லாம் சமயம் தழைத்து வளர்ந்த அரபு நாடுகள் பாலைவனப் பகுதிகளில் அமைந்திருப்பவை. அங்கே வீசும் காற்று தன்னோடு மணலையும் வாரிக்கொண்டு வருவது இயற்கை. அந்த மணல் காற்றிலிருந்து உடலையும் முகத்தையும் பாதுகாப்பதே நீண்ட அங்கி/முகத்திரையின் ஆதி நோக்கம். ஆகவேதான் ஆண்களும் நீண்ட அங்கி அணிகிறார்கள், முகத்தை மூடிக்கொள்கிறார்கள். இன்று இருசக்கர வாகனம் ஓட்டுகிற பல பெண்கள் வேகக்காற்றிலிருந்தும் தூசுகளிலிருந்தும் ஒரு தற்காப்பாகத் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொள்வது போன்றதே இது.

இப்படி, வாழ்க்கைச் சூழலையொட்டி ஒரு தேவையாக ஏற்பட்ட உடைப்பழக்கம், பின்னர் சமய அடையாளமாக்கப்பட்டு, ஒரு கட்டுப்பாடாகவே மாற்றப்பட்டது. அரபு நாடுகளிலிருந்து இந்தியா போன்ற நாடுகளுக்கு வணிகத் தொடர்புக்காகவும் அரசியல் பின்னணியோடும் புலம்பெயர்ந்து குடியேறிய அராபியர்கள் இந்த உடைப் பழக்கத்தையும் எடுத்து வந்தார்கள். புதிய நாட்டில் தங்கள் சமய அடையாளத்தைப் பாதுகாக்கிற உணர்வோடு தங்களது தனி அடையாளங்களைத் தொடர்ந்து பின்பற்றினார்கள். மதம் மாறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள்.

அரசியல் மோதல்கள், சமயச் சண்டைகள் என்று வந்தபோது, வன்முறைகளை நிகழ்த்துவோர் ஆண்களாகவே இருந்து வந்துள்ள பின்னணியில், ஒரு அரசியல் கூட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் எதிர்த்தரப்பு ஆண்களைப் பழிவாங்க அந்தத் தரப்பின் பெண்களைக் கடத்துவதும், வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவதும் எப்போதும் நிகழ்ந்து வந்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் ஆண்களுக்கிடையே தகராறு ஏற்படுகிறபோது கூட பழிவாங்கும் உணர்ச்சியோடு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. பெண்கள் தங்கள் முகத்தை மூடிக்கொள்ளத் தொடங்கியதன் பின்னணியில், எதிரிக்கூட்டத்தின் ஆண்களிடமிருந்து தப்பிக்கிற நோக்கமும் இருந்தது. இதுவே ஒரு பண்பாடாகவும் பதிந்துபோனது.

பண்பாடாகவும் சமயச் சடங்காகவும் மாறிவிட்ட பின்னணியில், பின்னர் இந்தப் பழக்கம் பெண்கள் மீது மட்டும் வலிந்து ஏற்றப்பட்ட ஒன்றாகியது. தன் மனைவியை மற்ற ஆண்கள் பார்க்கக்கூடாது என்ற ஆணாதிக்க வக்கிரம் மேலோங்கியது. அடங்கி ஒடுங்கி இருப்பதே அழகு என பெண்ணுக்கான லட்சண வரையறுப்பு இப்படி முகத்தை மூடிக்கொள்வதும், வேற்று ஆடவர் முன்பாக இழுத்துப்போர்த்திக்கொள்வது
ம்மாக இறுக்கமானது. இந்தப் பரம்பரைப் பண்பாட்டுத் திணிப்பில் ஒவ்வொரு புதிய தலைமுறைப் பெண்ணின் சொந்த விருப்பம், உடை ரசனை போன்ற நுட்பமான உணர்வுகள் ஒடுக்கப்பட்டுகின்றன. அதை மீறி, முக்காட்டை விலக்கி சற்றே எட்டிப்பார்க்கிற பெண் ஒழுக்கம் கெட்டவளாகச் சித்தரிக்கப்பட்டு, அந்த மீறல் துணிவு மற்ற பெண்களுக்கும் பரவிடாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. இப்படிப்பட்ட முழு மூடல் அங்கிகளைப் பெண்கள் ‘அணிகிறார்கள்’ என்று கூட சொல்லக்கூடாது, அவர்கள் அவற்றை ‘மாட்டிக்கொள்கிறார்கள்’ என்றே சொல்ல வேண்டும்.

ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில், இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களது செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளில், பெண்ணின் உடைச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவது இந்த நூற்றாண்டிலும் தொடர்வது நியாயம்தானா என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள், இதுதான் பெண்ணுக்குப் பாதுகாப்பு என்பதாக விளக்கம் அளித்திருக்கிறார்கள். சிலர், பெண் இப்படி உடையணியாவிட்டால் ஆணின் பாலியல் உணர்ச்சிகள் தூண்டப்படும், அது தவறு செய்யத் தூண்டும் என்று கூடுதல் விளக்கம் அளித்திருக்கிறார்கள். அப்படியானால், ஆண் தன் முகத்தையும் கழுத்தையும் கைகளையும் வெளிப்படுத்துகிற ஆடைகளை அணிந்துகொள்கிறானே, அதனால் பெண்ணின் பாலியல் உணர்ச்சிகள் தூண்டப்படாதா என்று கேட்டபோது பதில் சொல்லாமல் மௌனமாகிவிடுவார்கள். பொத்திப் பொத்தி வைப்பதால்தானே விரல் நுனியைக் கண்டால் கூட கிளர்ச்சி ஏற்படுகிறது, தொடக்கத்திலிருந்தே தேவைக்கேற்ற ஆடையணிந்தால் போதும் என்றிருந்தால், அப்படிப்பட்ட கிளர்ச்சிகள் ஏற்படாதல்லவா என்று கேட்டிருக்கிறேன். அதற்கும் மௌனமே பதில். அந்த மௌனத்தில் பொதிந்திருப்பது பெண்ணின் உணர்வுகளை அடக்குவது பற்றிய உறுத்தலல்ல, இப்படிப்பட்ட கேள்விகளின் மீதான கோபம்தான்.

உடல் முழுக்க மூடுகிற கருப்பு அங்கியின் மேல், அந்தக் கருப்பு வண்ண நூலிலேயே அழகிய பின்னல் வேலைப்பாடுகளைப் பெண்கள் செய்துகொள்கிறார்கள்; அல்லது அழகிய பின்னல் வேலைப்பாடுகளோடு கூடிய அங்கியாகப் பார்த்து வாங்கிக்கொள்கிறார்கள். இந்தப் பண்பாட்டுத் திரையைக் கிழித்துக்கொண்டு அழகுணர்ச்சியோடும் ரசனையோடும் வாழவேண்டும் என்ற தாகத்தின் வெளிப்பாடாகவே இதனை நான் பார்க்கிறேன்.

பிரான்ஸ் அரசின் சட்டம், முதலில் குறிப்பிட்ட குறும்பட நாயகி போன்றோரின் ஏக்கத்துக்கு ஒரு வடிகாலாகும்தான். அதே வேளையில், அந்தச் சட்டத்தை அத்தகையோரின் ஏக்கம் தவிர்க்க வந்த அருட்கொடையாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியவில்லை. உடலங்கியும் முகத்திரையும் அணிகிற பழக்கம் பல்வேறு பிரிவினரிடையயேயும் இருப்பதால், இதை ஒரு மதச்சார்பற்ற சட்டம் என்பதாக அந்நாட்டு அரசு சொல்லக்கூடும்.

உலக வளத்தையெல்லாம் ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் காய்களை நகர்த்தும் அமெரிக்க அரசு, உலகத்தின் பொது எதிரி பயங்கரவாதம்தான் என்று அறிவித்து, அதை வீழ்த்தப் புறப்பட்டதாகக் கூறி, பயங்கரவாதத்தை இஸ்லாத்துடன் அடையாளப்படுத்திக்காட்டி, இஸ்லாமிய நாடுகள் மீது பல்வேறு நெருக்கடித் தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது. இராக் நாட்டில் அரங்கேற்றப்பட்ட அந்த அட்டூழியத்தால் ஏற்பட்ட ரத்தக் காயங்கள் இன்னும் அந்த நாட்டில் ஆறவில்லை. பொருளாதார ஆதிக்கத்துக்கான சூழ்ச்சியின் ஒரு பகுதிதான் பண்பாட்டுத்தளத்திலும் கையாளப்படுகிறது. மேற்குலகில் மட்டுமல்லாமல், இந்தியா போன்ற நாடுகளிலும் கூட, பன்னாட்டு விமான நிலையங்களில் வந்து இறங்குவோரின் பெயர்கள் இஸ்லாமிய அடையாளத்துடன் இருந்தால் சந்தேகப் பார்வை கூர்மைப்படுத்தப்பட்டு சோதனைகள் இறுக்கமாக்கப்படுகின்றன. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அமெரிக்கா சென்றபோது அவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டதே!
முகத்தை மூடிக்கொண்டு பயங்கரவாதிகள் ஊடுறுவுவார்கள் என்று எண்ணவைத்து, பயங்கரவாத அச்சமூட்டும் அமெரிக்க வல்லாமை அரசியல் இதிலே இருப்பதைக் காணத் தவறக்கூடாது.

பெட்ரோலிய எண்ணைக் கிணறுகளையே கப்பமாகச் செலுத்த முன்வரும் அரபு ஷேக்குகள் இனி முழு அங்கியோடும் தலைத் துணியோடும் வரக்கூடாது என்று பிரான்ஸ் அரசு ஆணையிடுமா? முதலாளித்துவ அரசுகள் எடுக்கிற ஒவ்வொரு சமூக நடவடிக்கையிலும் கூட இப்படிப்பட்ட பொருளாதார ஆதிக்க அரசியல் மறைபொருளாக இருக்கிறது. அதே வேளையில், சமத்துவச் சமுதாயம் உருவாகிற வரையில், முதலாளித்துவ அரசுகள் உள்நோக்கத்துடன் கொண்டுவருகிற இதுபோன்ற நடவடிக்கைகளை வேண்டாமெனத் தள்ளிவிட முடியுமா? மதங்கள் விரித்த பண்பாட்டு வலையிலிருந்து பெண்கள் தப்பிச் சிறகடிப்பதற்கு இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஏதோவொரு வகையில் உதவுகின்றன என்பதும் உண்மையே.

ஆனால், முற்போக்கான மாற்றங்களுக்கான முயற்சிகள் அந்தந்த சமூகங்களுக்கு உள்ளேயும் நடைபெற்றாக வேண்டும். சில இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள், தங்கள் சமூகத்திற்குள்ளேயே பழைமைவாதக் கருத்துக்களுக்கு எதிரான சமூக சீர்திருத்த இயக்கங்களை நடத்த வேண்டியிருப்பது உண்மைதான் என்றும், அதற்கான முயற்சிகள் ஆங்காங்கே நடந்துவருகின்றன என்றும் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.

இஸ்லாமியத்திற்குள் மட்டுமல்லாமல், எந்தெந்த சமூகத்திலெல்லாம் பெண்ணை முன்னால் செல்லவிடாமல் இழுக்கும் கயிறுகள் கட்டப்பட்டிருக்கின்றனவோ அந்தக் கயிறுகள் அறுபட வேண்டும். கயிற்றை அறுக்க வெளியேயிருந்தும் உள்ளேயிருந்தும் மதப் பகைமையற்ற சமத்துவப் பகுத்தறிவுக் கரங்கள் இணையட்டும்.

(‘பெண்ணே நீ’ ஆகஸ்ட் இதழில் சற்று சுருக்கமாக வெளியிடப்பட்டுள்ள எனது கட்டுரையின் முழு ஆக்கம் இது.)