Sunday 16 December 2012

தருமபுரி சாம்பல்களும் தருமமிகு ஊடகங்களும்

தருமபுரியில் என்ன நடந்தது என்பதை விடவும் அதற்கு முன்பும் பின்பும் இந்த தர்மமிகு நாட்டில் என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது முக்கியம்.

ஒரு காலகட்டத்தில் இங்கே பிராமணிய எதிர்ப்பை மையமாக

வைத்து திராவிட இயக்கமாக ஒரு அரசியல் அணித் திரட்சி வேலை நடந்தது. பிற்காலத்தில் அதன் வெளிச்சத்தில் ஆட்சியதிகாரத்திற்கே வந்த வர்களது கூச்சமற்ற சமரசங்களில் விமர் சனங்கள் இருக்கலாம் - ஆனால், அப்படி யொரு இயக்கத்திற்கான தேவை இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. சமூக நீதிக் கான இட ஒதுக்கீடு, அனைத்து சாதியின ரும் அர்ச்சகராவதற்கான சட்டம், ஆலயங் களில் தமிழ் அர்ச்சனை, தேவதாசி முறை ஒழிப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பெண் களுக்கான சில பாதுகாப்புச் சட்டங்கள் இவையெல்லாம் நடைமுறையாகியிருப்ப தில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

இன்று, தலித் மக்களுக்கு எதிராகப் பிற் படுத்தப்பட்டோரையும் மிகவும் பிற்படுத் தப்பட்டோரையும் - சுருக்கமாகச் சொல்வ தானால் பிராமணர் அல்லாதோரை - அரசியலாகத் திரட்டுகிற வேலை நடக் கிறது. தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் அணிந்து பிறசாதிப் பெண் களை மயக்குகிறார்கள் என்று சொல்லி பெண்களை அவமானப்படுத்துகிற கூச்ச மற்ற வெறியூட்டல்கள் நடக்கின்றன. முந் தைய இயக்கம் ஒரு வரலாற்றுத் தேவை என் றால், இன்று நடப்பது வரலாற்றுச் சக்கரத் தைக் கடந்த காலத்திற்குத் திருப்புகிற ஆதிக்க சாதிய அயோக்கியத்தனம்.

முற்போக்காளர்களும் ஜனநாயகவாதி களும் கவலைப்பட வேண்டிய விசயம் - பொது எதிரிகளான ஆளும் வர்க்கத்தின ரையும் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவ தற்காக ஒன்றுபட வேண்டிய உழைப்பாளி மக்களை இது கூறுபோடுகிறது. ஒரு பகுதி பாட்டாளி தனது சமூகம் யாரோலோ மிதி படுவதை விடவும், தன் காலில் மிதிபடு வதற்கு இன்னொரு சமூகம் இருப்பதில் மனநிறைவு கொள்கிற, பாட்டாளிவர்க்கக் குணத்திற்கே நேர் மாறான சிறுமைத்தனத் தைக் கெட்டிப்படுத்தும் கைங்கர்யம் இது.
கள்ளச் சிரிப்பு சிரிக்கிறான் மனு.

அந்தச் சிரிப்பு இந்தியாவின் ஊடகக் களத்திலும் ஊடுறுவி ஒலிக்கிறது, தலித் மக்கள் மீது தாக்குதல் நடக்கிற போது, ஒன்று காவல்துறையோ மற்ற அரசு எந்திரங்களோ அசைவதில்லை. அப்படியே நடவடிக்கை எடுத்தாலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்ப தில்லை. கல்வி உள்ளிட்ட அரசுத்துறை களில் தலித்துகளுக்கான இடங்கள் நிரப்பப் படுவதில்லை. இதற்கெல்லாம் காரணம், காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங் களின் உயர் அதிகார நாற்காலிகளில் தலித்து கள் கிட்டத்தட்ட அறவே இல்லை என்கிற அளவுக்கு மிகக்குறைவானவர்களே இருப் பதுதான்.

அதே நிலைமைதான் ஊடகங்களிலும். இந்தியாவின் பெரும் வர்த்தக ஊடகங் களின் செய்தித் தயாரிப்பு அறைகளில் - 1992ல் ஒரு தலித் கூட இருக்கவில்லை. இன்று 2012ல் அதே நிலை - கிட்டத்தட்ட ஒரு தலித் கூட இல்லை என்ற நிலைமை தான். இந்த ஆய்வை நடத்தியவர் - கென்னத் ஜே. கூப்பர் என்ற ஒரு அமெரிக்க-ஆப்பிரிக் கர். 2006ல் நடத்தப்பட்ட அவரது ஆய்வின் படி, இந்திய ஊடகங்களில் முடிவெடுக்கும் இடங்களில் - குறிப்பாகப் பெரும் தனியார் ஊடகங்களில். இருக்கும் 300 முக்கிய ஊடக வியலாளர்களில் ஒருவர் கூட தலித் இல்லை. பழங்குடியினரும் இல்லை. தொலைக் காட்சிகளின் தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்போரில் ஒருவர் கூட தலித், பழங் குடியினர் இல்லை. இன்றைய நிலைமையில் எங்காவது ஓரிருவர் இருக்கக்கூடும்.

பிறகு எப்படி இந்த பெரிய ஊடகங் களில் தலித் மக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும்? தமிழ் சினிமாவிலும் இதே நிலை தான். எனக்குத் தெரிந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு கதாநாயக நடிகர் விக்ரம். அது பொதுவாக யாருக்கும் தெரியாது - ராமநாத புரம் மாவட்ட ஆதிக்கசாதியினரைத் தவிர. அவரது தெய்வத்திருமகன் படத்தின் பெயரை அவர்கள் எதிர்த்ததற்கு முக்கியக் காரணம் அவர் பிறப்பால் ஒரு தலித் என்பதே.

ஏன் - இசைஞானி இளையராஜாவை இங் குள்ள சில பெரிய பத்திரிகை நிறுவனங்கள் எப்போது அங்கீகரித்து அட்டைப்படம் போட்டார்கள் என்றால், அவர் மேல்தட்டினரின் ரசனைக்கேற்ற ஜனனீ ஜனனீ என்ற பாட்டுக்கு இசையமைத்த பிறகுதான்.

அமெரிக்காவில் உள்ள அமெரிக்க ஸ்பானியர்கள், அமெரிக்க ஆப்பிரிக்கர்கள் அந் நாட்டு ஊடகங்களில் இல்லாத நிலை உள்ளது. அதன் விளைவு, இந்த மக்கள் பற்றி இதர மக் களிடையே பரவியிருக்கும் கருத்து: இவர்கள் வெளியே பயணிப்பதே இல்லை. முறையாகச் சாப்பிடுவதில்லை. முறையான திருமண உறவு கிடையாது...

இதே போன்ற மனநிலை இங்கேயும். தங் களது பெண்ணுக்கு வேறு சாதிகளில் கூட மாப்பிள்ளை பார்க்க முன்வந்த பெற்றோர், “அந்த சாதி” மட்டும் வேண்டாம் என்று என்னிடம் சொன்னார்கள். ஏன் வேண்டாம் என்று கேட்டபோது, “அவங்க திருந்தவே மாட்டாங்க,” என்றனர். எந்தவகையில அவர்கள் கெட்டுப்போயிருக்கிறார்கள், திருந்துவதற்கு, என்று நான் விடாமல் கேட்டபோது, மாப்பிள்ளை தேடும் விசயத்தை என்னோடு பேசுவதில்லை என்று முடிவெடுத்தார்கள்.

இந்த மனநிலையை இறுகிப்போக வைப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு அல்லது பங்களிப்பின்மை முக்கியப் பங்காற்றுகிறது. தலித் இயக்கங்கள் நடத்தும் ஏடுகள், தலித் பிரச் சனைகளுக்காகக் குரல் கொடுக்கும் இயக்க ஏடு கள் தவிர்த்து, பெரும் வர்த்தக (கார்ப்பரேட்) ஊடகங்களின் ஆசிரியர் குழுக்களில் தலித் எழுத்தாளர்கள் கிடையாது.

தில்லியின் மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகக் கல்லூரியின் (யுசிஎம்எஸ்) தலித் மாண வர்கள் 1995ல் ஒரு தொடர் போராட்டம் நடத் தினர். கல்லூரியில் பயிலும் பிற சாதி மாணவர்கள் தங்களை இழிவுபடுத்துகிறார்கள், உணவகத்தில் அவர்கள் வரும் நேரத்தில் இவர்கள் சாப்பிட அனுமதிப்பதில்லை, சாதிப்பெயர் சொல்லித் திட்டுகிறார்கள் என்பது அவர்களது புகார்கள். அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு முடிவு அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தோர் கலவரத்தில் இறங்கியபோது, அதை ஏதோ சத்திய ஆவேசப் போராட்டம் போல தினமும் செய்தி வெளி யிட்ட ஏடுகள், தலித் மாணவர்களின் இந்தப் போராட்டத்தைக் கண்டுகொள்ளவே இல்லை.

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் பரவட்டும் என இந்த நெருப்பைப் பரப்புக என்ற தலைப்பில் தலையங்கம் எழுதிய பத் திரிகையாளர் உண்டு. அவருக்கு வாஜ்பாய் அர சில் அமைச்சர் பதவியும் கிடைத்தது. இட ஒதுக் கீட்டையே குழிதோண்டிப் புதைப்பதற்கான பொதுத்துறை கைகழுவல் துறை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அது அவரிடம் ஒப்படைக் கப்பட்டது!

உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முடிவு அறிவிக்கப்பட்டபோது, எருமை மாட்டின் மீது செல்கிற சிறுவனுக்கு அமைச்சர் டாக்டர் பட் டம் தருவது போன்ற கார்ட்டூன் வெளியிட் டது ஒரு பெரிய ஆங்கில நாளேடு.
தமிழகத்திலேயே கூட, சென்னையில் சட்டக்கல்லூரி வளாகத்தில் பிற்படுத்தப் பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை தலித் மாணவர்கள் தாக்கிய நிகழ்வை (அந்த வன்முறையை நியாயப்படுத்துவதற்கில்லை என்பது வேறு விவகாரம்) நேரடி ஒளிபரப்பாகவும், மறு மறு மறு ஒளிபரப்பாகவும் பரப்பிய தமிழகப் பெருந் தொலைக்காட்சி நிறுவனங்கள், பரமக்குடி, தருமபுரி, கடலூர் உள்பட தலித் மக்கள் தாக்கப்பட்ட கொடுமை குறித்து அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லையே?

தருமபுரியில் நடந்தது திட்டமிட்ட தாக்குதல்தான் என்பதற்கு சுயசாட்கியமாக சில தலைவர்கள் பேட்டியளித்திருக்கிறார்கள். பொருள் கள்தானே அழிக்கப்பட்டன, யாருடைய உட லுக்கோ உயிருக்கோ இன்னல் ஏற்படுத்த வில்லையே என்கிறார் இன்னொருவர். மேல் சாதிக்கு சமமான நிலை வர வேண்டுமானால், தங்களின் விந்து மேல் சாதிப் பெண்களின் உடலுக்குள் சென்றாக வேண்டும் என்று தலித் இளைஞர்கள் நினைக்கிறார்கள் என்று காதல் உறவுகளைக் கொச்சைப்படுத்தி தனது சமூகத் தினருக்கான தலைமைப்பதவியைத் தக்க வைத்துக்கொள்ள முயல்கிறார் மற்றொருவர்.

இப்படிப்பட்டவர்களை அழுத்தமாகக் கண்டிக்க எந்தப் பெரிய ஊடகம் முன்வந்தது? தீக்கதிர் எழுதியது.

உத்தப்புரம் பிரச்சனையில், சுவரை எழுப் பியவர்களின் துயரத்தைத்தான் நம் ஊடகங் கள் பெரிதுபடுத்தின என்பதை மறக்க முடி யுமா? இன்று அங்கே இரு தரப்பு மக்களும் இயல்பாக இணைந்து வாழ்கிறார்கள். இந்த இணக்கத்தை ஏற்படுத்தியது மார்க்சிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை முன்னணி யும்தான் என்று பாராட்டுகிறார் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு. ஏன் பெரிய ஊடகங்கள் ஒரு வரிச்செய்தியாகவாவது வெளியிடவில்லை?

ஊடகங்களின் இந்தத் தொடர்ச்சியான அணுகுமுறைக்குக் காரணம், அவர்களுக் குள்ளேயும் மனுவாதம் ஊறிப்போயிருக்கிறது. வர்க்க அரசியல் போலவே ஆழமான வர்ண அரசியல் என்பதை மறுக்க முடியுமா? நடுநிலை என்பது அவர்கள் போட்டுக்கொண்டிருக்கிற ஒப்பனை என்பதை மறக்க வேண்டுமா?

இதன் விளைவு என்ன?

தலித் மக்களின் அவலங்கள் வெளியே தெரியாது. அதை தீவிரவாத சக்திகள், குறுங் குழுவாத கும்பல்கள் பயன்படுத்திக் கொள் கின்றன. தலித் மக்களுக்கு எதிரான சிந்தனை கள் தொடர்கின்றன. இட ஒதுக்கீடு எதிர்ப்புக் கொந்தளிப்புகள் அவ்வப்போது கிளப்பிவிடப் படுகின்றன. அரசமைப்பு சாசனத்தின் சமத்து வம், சகோரத்துவம் என்ற லட்சியங்கள் எள்ள லுக்கு உள்ளாக்கப்படுகின்றன. சமூகப் பன் முகத்தன்மை மறுக்கப்படுவதால் மேலோங்கு கிறது ஒற்றைப் பண்பாட்டு ஆதிக்கம்.

உலக அரங்கில் குனிந்த இந்தியாவின் தலை நிமிரவே முடியாமல் போகிறது.

(‘தீக்கதிர்’ நாளேட்டின் 2012 டிசம்பர் 16 இதழுடனான ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளியாகியுள்ள எனது கட்டுரை)

Monday 3 September 2012

வதந்திகளால் வளைக்கப்படுகிறதா வாழ்க்கை?

வெறும் தந்திக்கும் வதந்திக்கும் என்ன வேறுபாடு? வெறும் தந்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் ஒரு என்னவோ ஏதோ என்ற ஒரு பதைப்பை ஏற்படுத்தும். அவர்களோடு முடிந்துவிடும். வதந்தியோ, அதைப் பெறப்பட்டவரிடமிருந்து மற்றொருவருக்கு அவரிடமிருந்து இன்னொருவருக்கு அந்த இன்னொருவரிடமிருந்து இன்னொரு இன்னொருவருக்கு என்று காற்றுக் காலத்துத் தீ போல எல்லைகள் தாண்டி பரவிவிடும். தகவல் தொடர்பு மூலமாகத்தான் மனித சமுதாயம் வளர்ந்தது. பொய்யான தகவல் தொடர்பாகிய வதந்தியோ சமுதாய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் மாணவர்களும் சென்ற மாதம் கூட்டம் கூட்டமாகத் தங்களது சொந்த ஊர்களுக்கே திரும்பினார்கள். இப்போது அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தாங்கள் வேலை செய்கிற, படித்துக்கொண்டிருக்கிற மாநிலங்களுக்கு வந்துகொண்டிருகிறார்கள். முதலில் அவர்கள் இப்படிக் கூட்டம் கூட்டமாக வெளியேறியதன் பின்னணி என்னவென்றால் - வதந்தி. தாங்கள் தாக்கப்படலாம் என்றும், ஏற்கெனவே சில இடங்களில் தாக்குதல்கள் நடந்திருப்பதாகவும், ஒரு சில கொலைகளும் நிகழ்ந்திருப்பதாகவும் பரவிய வதந்தி.

இது வடகிழக்கு மாநிலங்களிலும் பரவியது. அங்கே உள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் பட்டத்தோடும் பணத்தோடும் வருவதைவிட உயிரோடு வந்தால் போதும் எனக் கருதியதில் வியப்பில்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் பயணப்பைகளில் துணிமணிகளோடு தங்களது அச்சங்களையும் சுமந்துகொண்டு காத்திருந்தவர்களிடம் செய்தியாளர்கள் விசாரித்தபோது, யாராலும் எந்த ஒரு குறிப்பிட்ட தாக்குதலையும் அடையாளங்காட்ட இயலவில்லை. அவர் சொன்னார், இவர் சொன்னார், அங்கே நடந்ததாம், இங்கே நடந்ததாம் என்ற வகையிலேயே அவர்களது பதில்கள் இருந்தன.

வடகிழக்கு மாநிலத்தவர்கள் வெளியேறியதற்கு, கைப்பேசி குறுஞ்செய்திகள் மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பரவிய வதந்திகளே காரணம் என்று கூறி, ஒரு நாளில் 5 குறுஞ்செய்திகளுக்கு மேல் அனுப்பத் தடை விதிக்கப்பட்டது, பின்னர் அது 20 ஆக உயர்த்தப்பட்டது, சில சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன, கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டன என்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இன்றைய வாழ்வின் தவிர்க்க முடியாத கூறுகளாகிவிட்ட இந்த வசதிகளை அரசாங்கமே பயன்படுத்த முடியுமே? எவ்வித தாக்குதலும் எங்கேயும் நடக்கவில்லை, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படும், வதந்திகளை நம்பாதீர்கள் என்று அனைத்து கைப்பேசி எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்புமாறு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்குக் கட்டளையிட்டிருக்க முடியும். அதே போல், வலைத்தளங்களில் உண்மை நிலவரங்களையும் உத்தரவாதங்களையும் கொண்டுசென்றிருக்க முடியும், எளிதில் முடியக்கூடிய இந்த வழிமுறையை ஏன் அரசு எந்திரம் யோசிக்கவே இல்லை?

வரலாறு நெடுகிலும் இப்படிப்பட்ட வதந்திகள் பரவி வந்திருக்கின்றன. 1517ம் ஆண்டில், லண்டன் நகரில் புனித மேரி தேவாலயத்தில் ஒரு பாதிரியார், அந்த நகரில் குடியேறி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர்களால் உள்ளூர்க் குழந்தைகள் பசியால் வாடுகிறார்கள், உள்ளூர்க் கைவினைக் கலைஞர்களின் வாழ்வதாரத்தைப் பறிக்கிறார்கள் என்று பேச, மறுநாள் அந்த நகரில் பெரும் கலவரம் மூண்டது. பிழைப்புக்காக லண்டனுக்கு வந்திருந்த சிறு வியாபாரிகள், கைவினைஞர்கள், அடகுக்கடைக்காரர்கள் உள்ளிட்டோர் தாக்கப்பட்டார்கள். லண்டனில் தொழில் பயிற்சி பெற்று வேலை கிடைக்காமல் இருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வெளிநாட்டவர்களின் வீடுகளைத் தாக்கினார்கள்.

இந்தியப் புராணங்களைப் பார்த்தால் தேவர்களின் சார்பாக தெய்வங்கள் நடத்திய போர்களில், வதந்திகளும் வஞ்சகங்களும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. போர்க்களத்தில் துரோணரை வீழ்த்த, அவரது மகன் இறந்துவிட்டதாகப் பொய்யாக ஒரு செய்தி பரப்பப்பட்டதாக மகாபாரதம் சொல்கிறதல்லவா? அண்மையில் குஜராத்தின் அகமதாபாத் நகரில், குடிசை வாழ் மக்களிடையே இலவச வீடுகள் வழங்கப்பட இருப்பதாக வதந்தி பரவ, அதை நம்பி விண்ணப்பப் படிவங்களுக்காகக் கூடிய மக்களைக் காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர். ஊழலற்ற, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான, வளர்ச்சித்திட்டங்களுக்கு முன்னோடியான ஆட்சியை குஜராத்தில் நரேந்திர மோடி அரசு வழங்கிக்கொண்டிருப்பதாக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுவது வேறு விவகாரம். தமிழகத்தில், ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின் கடைசி ஆண்டில், சென்னை எம்ஜிஆர் நகரில் பரப்பப்பட்ட வதந்தி 42 பேர் கூட்ட நெரிசலில் இறந்துபோகக் காரணமானது.

அகில இந்திய அளவில் கூட, பாஜக கூட்டணி ஆட்சியின்போது இந்தியா ஒளிர்கிறது என ஆட்சியாளர்கள் சொல்லிவிட்டதால், அதை மக்கள் நம்பியாக வேண்டும் என்று பிரச்சார வதந்தி பரப்பப்பட்டது. இன்றும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, வறுமைக்கோடு மட்டத்தை அவர்களாகக் கீழிறக்கிக்கொண்டு, வறுமை பெருமளவுக்குக் குறைக்கப்பட்டுவிட்டதாக வதந்தியைப் பரப்பத்தானே செய்கிறது!

வதந்திகள்  வெறும் தீயல்ல. அவற்றில் வாழ்க்கை உண்மைகள் அடிநிலையாக இருக்கின்றன. வடகிழக்கு இளைஞர்கள் வெளியேறியதன் பின்னணியில், பொருளாதார வளர்ச்சியின் ஏற்றத்தாழ்வு, பெருகியிருக்கும் வேலையின்மை போன்ற நிலைமைகள் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி, ஏழை முஸ்லிம் மக்கள் மீது இனவாதிகள் முடுக்கிவிட்ட வன்முறைகளால், அதற்குப் பழிவாங்க மற்ற மாநிலங்களில் உள்ள அஸ்ஸாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சம் எழுந்தது. மும்பையில் ஒரு இஸ்லாமிய இளைஞர் அமைப்பு அரங்கேற்றிய் வன்முறை அந்த அச்சத்தீயை விசிறிவிட்டது. அந்த இஸ்லாமிய இளைஞர்கள் பார்த்த சில சமூகவலைத்தள செய்திகளில், ஒரே படத்தையே மாற்றி மாற்றிப் பயன்படுத்தி, நாட்டின் பல பகுதிகளிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்ததாக நம்பவைக்கிற முயற்சி நடந்திருக்கிறது. அந்த விசமச் செய்திகள் பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டதாக இந்திய அரசு சொன்னது, அதற்கு ஆதாரம் தேவை என்று பாகிஸ்தான் அரசு கேட்டுள்ளது. இதற்கிடையே, வதந்தியைப் பரப்பியது பாகிஸ்தான் என்று ந்ம் ஊர் ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கி, ஏதோ பாகிஸ்தான் அரசே திட்டமிட்டு அந்த வதந்தியைப் பரப்பியது போன்ற வதந்தியைப் பரப்பின.

ஆந்திராவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த முஸ்லிம்கள் தேசபக்தியே இல்லாமல், பாகிஸ்தானின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் ஆட்கள் மின்னஞ்சல் மூலமாக படத்துடன் ஒரு செய்தியைப் பரப்பினர். அந்தப் படம், பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் நடந்த கொண்டாட்டமே என்பது உளவுத்துறை புலனாய்வில் தெரியவந்து, அது செய்தியல்ல வதந்தியே என தெளிவானது. விஎச்பி வதந்திச் சேவை நோக்கம் என்னவென விளக்க வேண்டியதில்லை.
மக்களின் வறுமை, வேலையின்மை, அடிப்படை வசதிகளுடனாவது வாழவேண்டும் என்ற கனவுகள் நிறைவேறாத ஏக்கம், அதைக்கூட நிறைவேற்ற வக்கில்லாத அரசுக் கொள்கைகள், பணமிருந்தால் பிழைத்துக்கொள் என்ற குரூரமான நவீன முதலாளித்துவம், அதன் உடன்பிறப்புகளாக பணத்தைத் தேடுவதற்கான சமூகவிரோத உத்திகள், நவீன சிந்தனைகளைத் தடுத்துக்கொண்டிருக்கிற பண்ணைச் சமுதாயப் பழமைவாதங்கள்... இவையும் வாழ்க்கையின் உண்மை நிலவரங்கள்தான்.

முன்பு பிள்ளையார் சிலைகள் பால் குடித்தது என நாடு முழுதும் பாக்கெட் பாலுக்கு கிராக்கி ஏற்படுத்திய வதந்தி, பிறந்த குழந்தை பேசுகிறது என அண்மையில் கிளப்பிவிடப்பட்ட வதந்தி போன்றவை ஒரு பக்கம் சிரிப்பூட்டுகின்றன. ஆழமாக யோசித்தால், மக்களிடையே இன்னும் அறிவியல் உண்மைகள் கொண்டுசெல்லப்படாத உண்மை நிலைமையை அவை வெளிப்படுத்துகின்றன. அறிவியல் கண்ணோட்டம் ஆழமாக வேரூன்றாதவரையில் சுரண்டலுக்கும் வஞ்சகங்களுக்கும் தடையில்லை என ஆளும் வர்க்கங்கள் நிம்மதியாக இருக்கின்றன. அந்த நிம்மதி நிலைக்க விடக்கூடாது. வர்க்க - வர்ண - பாலின ஆதிக்கக்கோட்டைச் சுவர்களைத் தகர்க்க மக்கள் சக்தி திரட்டப்பட்டாக வேண்டும் - உண்மைகளின் பலத்தில்.

-‘தீக்கதிர்’ ஞாயிறு (2-9-2012) இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளியாகியுள்ள எனது கட்டுரை.

Saturday 4 August 2012

மோடி ஏன் பிரதமராகக் கூடாது என்றால்...ணக்கம் மிகுந்த வாழ்க்கை, வந்தாரை வரவேற்கும் இன்முகம் - இவற்றுக்கு அடையாளமானவர்கள் குஜராத் மக்கள்.” -முப்பது ஆண்டுகளுக்கு முன் எனது நண்பனோடு குஜராத்திற்கு அவனது தொழில் தொடர்பாக ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஒரு ஆசிரியர் இப்படிச் சொல்லி வழியனுப்பி வைத்தார். அந்த மாநிலத்தில் அதை நாங்கள் நேருக்கு நேர் அனுபவித்தோம். பலித்தானா என்ற ஊரில் நள்ளிரவு சென்று இறங்கியபோது, அந்த நேரத்தில் ஒரு கூலித்தொழிலாளி ஒரு குதிரை வண்டிக்காரரிடம் எங்களுக்காக அவர்களது மொழியில் பேசி, தங்கும் விடுதிக்கு அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் வந்து, வண்டிக்காரர் சரியாகக் கொண்டுவந்து சேர்த்தாரா என்றும், விடுதி வசதியாக இருக்கிறதா என்றும் விசாரித்தார். அவருக்கு நாங்கள் கொஞ்சம் பணம் கொடுக்க முயன்றபோது வாங்க மறுத்துவிட்டுச் சென்றார்.

காந்தி பிறந்த மண் என்ற அளவிலேயே குஜராத் பற்றிய புரிதல் இருந்தபோது, அங்கே காந்தியின் மத நல்லிணக்கக் கொள்கைக்கு நேர்மாறான பாரதிய ஜனதா கட்சி  ஆட்சியமைத்தபோது, அந்த நடப்பு நிலையை ஏற்பது சற்று கடினமாகத்தான் இருந்தது. அந்த அளவுக்கு குஜராத் மக்களிடமிருந்து தனிமைப்பட்டுப்போன காங்கிரஸ் கட்சி பற்றிய கோபமும், இரண்டிற்கும் மாற்றான முற்போக்கு சக்திகள் அங்கே வலுவாக வளரவில்லையே என்ற ஆதங்கமும் எனக்கு ஏற்பட்டன. இன்று அந்த மாநிலத்தின் முதலமைச்சரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோடி, இன்னும் இரண்டு ஆண்டுகளில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராகவே நிறுத்தப்பட இருக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிற நிலையில் என் ஆதங்கம் அதிகரிக்கிறது.

மோடி பிரதமராக வர முடியுமா, முடியாதா என்ற விவாதங்க்ள் நடந்துகொண்டிருக்கின்றன. என்ன நடக்கும் என்று சோதிடம் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றாலும், எது நடக்கக்கூடாது என்று சொல்கிற அக்கறை எனக்கு உண்டு. நாட்டின் பிரதமராக மட்டுமல்ல, குஜராத்தின் முதலமைச்சராகவும் அவர் திரும்பி வரக்கூடாது, அவரது கட்சி மத்தியிலும் ஆட்சியமைக்கக்கூடாது, குஜராத்திலும் மறுபடி ஆட்சி பீடம் ஏறக்கூடாது.

அவரை விட்டால் வேறு ஆள் கிடையாது என்பவர்கள் யாரென்று பார்த்தால், ஆகப் பெரும்பாலும் தரையில் கால் வைக்காத நடுத்தர வர்க்க, அதிலும் குறிப்பிட்ட மேலாதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். சென்னையில் எல்.கே. அத்வானி, மோடி இருவருமே கலந்துகொண்ட ‘துக்ளக்’ ஆண்டுவிழாவில் கலந்துகொண்டவர்களைப் பார்த்தாலே இது தெரியும்.

மோடி ஆட்சியில் குஜராத் வேறு எந்த மாநிலத்தோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு முன்னேற்றங்களைச் சந்தித்திருக்கிறது என்பதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். மோடி பிரதமரானால் அதே போன்ற முன்னேற்றம் நாடு முழுவதும் ஏற்படும் என்கிறார்கள். ஆனால், குஜராத்தின் உண்மையான வளர்ச்சி பற்றிய ஆய்வறிக்கைகள் இந்த மிடில் கிளாஸ் மாயைகளை உடைத்தெறிகின்றன.

மோடியே தனது பேச்சுகளிலும் பேட்டிகளிலும் அடிக்கடி குறிப்பிடுவது, குஜராத்தின் தொழில் வளர்ச்சிக்காக தன்னால் அந்நிய நேரடி முதலீடுகளைப் பெருமளவுக்கு ஈர்க்க முடிந்திருக்கிறது என்பதுதான். ஆனால், கடந்த ஆண்டுகளில் குஜராத்துக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணம் என்று அவர் கூறுவதில் மிகப்பெரும்பாலும், வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து வந்ததுதான். வெளிநாடுகளில் வேலை செய்கிற, தொழில்களில் ஈடுபட்டிருக்கிற குஜராத்திகள் தங்களது வீடுகளுக்கு அனுப்புகிற பணத்தை அந்நிய நேரடி முதலீடாகச் சொல்வது, அதைப்பற்றிய அவரது அறியாமையிலிருந்து அல்ல, மக்களின் அறியாமை மீது அவருக்கு உள்ள நம்பிக்கையிலிருந்துதான்.

ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குச் சென்று திரும்புகிறபோதெல்லாம் இத்தனை ஆயிரம் கோடி முதலீடு அங்கேயிருந்து வரப்போகிறது என்றும் அதற்காக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்றும் கூறுவது அவரது வழக்கம். அப்படி அவரால் அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளில் அதிகபட்சமாக 15 சதவீதத்திற்கு மேல் வரவில்லை என்று பொருளாதாரத்துறை சார்ந்த ஏடுகள் எடுத்துக்காட்டியிருக்கின்றன.

ஜனவரி 2000 முதல் மார்ச் 2010 வரையில் குஜராத்துக்கு வந்த மொத்த வெளிநாட்டு முதலீடு 28,000 கோடி ரூபாய்தான். இதே காலகட்டத்தில் உ.பி. மாநிலத்திற்கு வந்த முதலீடு 1.02 லட்சம் கோடி ரூபாய். கர்நாடக மாநிலத்திற்கு வந்தது 31,000 கோடி ரூபாய். மத்திய அரசின் தொழில் மற்றும் மேம்பாட்டுக் கொள்கைத் துறை ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. தமிழகத்தை விட குஜராத் 3,000 கோடி ரூபாய் கூடுதலாகப் பெற்றிருக்கிறது என்பதை வேண்டுமானால் அவர்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம்.

அந்நிய முதலீடுகள் பற்றிய தம்பட்டங்களின் பின்னணியில், வெளிநாட்டுத் தொழிற்சாலைகளுக்காக நிலங்களைக் கைப்பற்றுவது, அந்த நிலங்களிலிருந்து விவசாயிகளையும் இதர கிராம மக்களையும் வெளியேற்றுவது, வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பல ஆண்டுகள் வரிச் சலுகை அளிப்பது என்ற இணக்க நடவடிக்கைகள் இருக்கின்றன என்று அஹமதாபாத் நகரைச் சேர்ந்த பண்பாடு மற்றும் மேம்பாடு மையத்தின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கூட நிலம் கையகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது எனபது உண்மையே. மோடி அரசு, உள்நாட்டு - வெளிநாட்டுப் பெரு நிறுவனங்களுக்காக நிலங்களைக் கைப்பற்றித் தருகிற கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை என்பதே இங்கு கவனிக்கத்தக்கது.

இதனால் சுமார் 50 லட்சம் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துவிட்டு, தங்களது பாரம்பரிய வாழ்க்கைக்கு சம்பந்தமே இல்லாத இடங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு மோடி அரசு செய்தது என்ன? அப்படிப்பட்ட கதியற்ற மக்களிடையே “உங்கள் நிலைமைக்குக் காரணம் இஸ்லாமியர்கள்தான்,” என்று சங் பரிவாரம் தனது குட்டிகளை விட்டுப் பிரச்சாரம் செய்வதற்கும், மோடி அரசின் செயலின்மைக்கும் தொடர்பில்லையா?

பவநகர் மாவட்டத்தில் 270 ஏக்கர் பயிர் நிலத்தைச் சுற்றி திடீரென சுவர் முளைக்கத் தொடங்கியது. சுற்றுவட்டார கிராமங்களின் மக்கள் அது எதற்காக என்று விசாரித்தபோது, கால்நடைகளைத் தடுப்பதற்காக என்று அரசு அதிகாரிகள் பதிலளித்திருக்கிறார்கள். பிறகுதான் மக்களுக்குத் தெரியவந்தது, அது உண்மையில் நிர்மா நிறுவனத்தின் புதிய சிமென்ட் ஆலை கட்டுவதற்காக வளைக்கப்பட்ட நிலம் என்பது. அரசாங்கம் சல்லிசான விலையில் அந்த நிலத்தை நிர்மா நிறுவனத்திற்கு விற்றிருக்கிறது. கிராம மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, பொது விசாரணை ஒன்று நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற விவசாயிகளிடம் ஒரு ஆவணத்தைக் காட்டி அதில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். கூட்டத்தில் கலந்துகொண்டதற்கான பதிவுதான் அது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். ஆனால், அந்த இடத்தில் சிமென்ட் ஆலை வருவதில் தங்களுக்கு மறுப்பு ஏதும் இல்லை என்று விவசாயிகள் ஒப்புக்கெர்ள்வதாக அந்த ஆவணத்தில் எழுதப்பட்டிருந்திருக்கிறது! இப்படிப்பட்ட மோ(ச)டி வழிகளில்தான் மாநில அரசு தொழில் வளர்ச்சிக்குப் பாடுபடுகிறது போலும்.

நிலத்தையும் இழந்து, இருக்கிற நிலத்தில் பிழைப்பை இழந்து இறுதியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் கதையும் குஜராத்தில் மாறுபட்டுவிடவில்லை. கடந்த பத்தாண்டு காலத்தில் அந்த மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் பற்றிய புள்ளிவிவரத்தை தேசிய குற்றச்செயல்கள் பதிவகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் விபத்து மரணங்களும் தற்கொலைகளும் என்ற அந்த ஆவணம், குஜராத்தில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கிறது. அவர்கள் என்ன காதல் தோல்வியாலா தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்கள்?

ஆனால், வேறொரு பொய்யை மோடி அரசு சொன்னது. 2007 மார்ச் 29 அன்று மாநில சட்டமன்றக் கூட்டத்தில், 2005 ஜனவரிக்கும் 2007 ஜனவரிக்கும் இடையே தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 148 என்று அரசு அறிவித்தது. இது தவறான தகவல் என்று மறுப்புத் தெரிவித்தது ஒரு விவசாய அமைப்பு. அது எதிர்க்கட்சிகளின் தலைமையில் உள்ள அமைப்பு அல்ல; மாறாக பாஜக தலைமையிலான பாரதிய கிஸான் சங் (பிகேஎஸ்)! அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் பிரபுல் சஞ்ஜேலியா வெளியிட்ட அறிக்கையில், தன்னுடைய மதிப்பீட்டின்படி குறைந்தது இந்த எண்ணிக்கை 300க்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறினார் (அதன் பின் பாஜக மேலிடம் தலையிட்டதும், பிகேஎஸ் தேசியச் செயலாளர் ஜீவன் படேல், குஜராத்தில் விவசாயிகள் தற்கொலை என்ற பிரச்சனையே இல்லை என்று அடித்துப் பேசியதும் தனிக்கதை).

மோடி ஆட்சி குறித்துக் கட்டப்படுகிற இன்னொரு மாயக் கோட்டை, அது ஊழலற்ற ஆட்சி என்பது. மேற்படி தொழில் வளர்ச்சியின் பின்னணியில், முதலாளித்துவத்தின் உடன்பிறப்பான ஊழல் தாண்டவமாடிக்கொண்டிருப்பதை பல செய்திகள் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. தொடக்கத்தில் ஊழலில்லா நிர்வாகத்திற்கு முன்மாதிரி என்று மோடி அரசாங்கத்திற்கு நற்சான்று அளித்த அன்னா ஹசாரே குழுவினர் கூட இப்போது, இந்தியாவின் ஊழல் மலிந்த மாநிலங்களில் ஒன்று குஜராத் என்று அறிவித்து அந்த நற்சான்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டனர்.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், மோடியின் மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி, 58 நீர்நிலைகளில் மீன்பிடிப்பதற்கான உரிமங்களை வெறும் 2.36 கோடி ரூபாய்க்குக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு நீர்நிலைக்கும் 40 கோடி ரூபாய் வரையில் தருவதற்கு சிலர் தயாராக இருந்தும் இப்படியொரு சொற்பத்தொகைக்கு உரிமம் வழங்கப்பட்டதன் நோக்கம், மக்களுக்குக் குறைந்தவிலையில் மீன் கிடைக்கச் செய்வதற்காகவா என்ன? சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் சோலங்கி மீது விசாரணை நடத்துவதற்கு மாநில ஆளுநர் அனுமதியளித்துள்ளார்.

திலிப் சங்கானி என்ற இன்னொரு அமைச்சர் மீதும் இதே போன்ற ஊழல் குற்றச்சாட்டு எழ, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எல்லா அமைச்சகங்களிலும் நைவேத்தியம் இல்லாமல் எந்தக் காரியமும் நடப்பதில்லை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். அமைச்சர்கள் கையெழுத்திடுகிற ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் குறிப்பிட்ட சதவீதம்  முதலமைச்சருக்கான நைவேத்தியப் படையலாக நிர்ணயிக்கப்படுகிறது என்றும், நிர்ணயிக்கப்பட்ட தொகை பல்வேறு தடங்களில் முதலமைச்சருக்குச் செல்கிறது என்றும், எதிர்க்கட்சிகள் அல்ல - ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே புலம்புகிறார்கள். “தொழிலதிபர்களை ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் சந்திக்கிறார் மோடி.  நிர்வாக அதிகாரங்களைத் தனது அதிகாரிகள் பொறுப்பில் விட்டிருக்கிறார். இந்த ஏற்பாட்டின் மூலம் அவருக்குத் தொடர்ச்சியாகப் பணம் பாய்வது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.” -இப்படிக் கூறியிருப்பவர் குஜராத் பாஜக அரசின் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேல். ஆக, இதிலேயும் மிடில் கிளாஸ் மயக்கம் உடைபடுகிறது.

பெருந்தொழிலதிபர்களுடனான உறவு, அவர்களுக்காக நிலப் பறிப்பு, அதற்காக லஞ்ச நைவேத்தியம், வேலைவாய்ப்பற்ற தொழில் முதலீடு, விவசாய அழிப்பு, ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள், அதிகரிக்கும் சிசு மரணம்... இவையெல்லாம் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் ஆளுகிற மற்ற மாநிலங்களிலும் நடப்பதுதான். மோடியைப் பொறுத்தவரையில் கண்டிப்பாக அவரிடம் மறுபடியும் அந்த மாநில ஆட்சிப்பொறுப்போ, பாஜக-வின் ஒரு பகுதி தலைவர்கள் (வேறு ஆளில்லாமல்) ஆசைப்படுவது போல் மத்திய ஆட்சிப் பொறுப்போ சிக்கிவிடக்கூடாது என்பதற்கு மிக முக்கியமான வேறு காரணங்களும் உள்ளன. அவரையே பிரதமராக்க, பாஜக-வின் மூல இயக்குநரான ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன் என்ற கேள்வியோடு தொடர்புடைய காரணங்கள் அவை.

இந்து மத ஒற்றை ஆதிக்க நாடாக இந்தியாவை மாற்றும் நெடுந்திட்டத்தோடு செயல்பட்டுக்கொண்டிருப்பது ஆர்எஸ்எஸ். இந்துத்துவம் என்றால் அதன் அடியர்த்தம் பிராமணியம். அதாவது சாதிப்பாகுபாடுகளும் பெண்ணடிமைத்தனமும் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடுகளும் விதியின் பெயரால் ஏற்றத்தாழ்வுகளுமே. அந்த நெடுந்திட்டத்தை அடைவதற்கான இடைக்கால ஏற்பாடுதான் வர்ண அடுக்கின் மேல்தட்டைச் சாராத பிறரையும் வளர்த்துவிட்டு, அவர்களது செல்வாக்கையும் பலத்தையும் பயன்படுத்திக்கொள்வது. அப்படி முன்னிறுத்தப்படுகிறவர்தான் மோடி. இதில், தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிற அவருடைய சொந்தக் கணக்குகளும் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது ஒன்றும் கடினமானதல்ல.

அதே நேரத்தில், இந்துத்துவ நோக்கத்தை அடைவதில் அவருடைய பக்குவமற்ற வழிமுறைகள் பயனளிக்காது என்ற கோணத்தில் அவரை எதிர்ப்பவர்களும் ஆர்எஸ்எஸ், பாஜக கூடாரங்களில் இருக்கவே செய்கிறார்கள். குஜராத்தின் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சிலர் வெளிப்படையாகவே அவரைத் தாக்கிக் கருத்துக் கூறியிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் தலைமை அவர்களைப் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறது.

மிதவாத இந்துத்துவத் தலைவராக சித்தரிக்கப்படும் பாஜக மூத்த தலைவர் அடல்பிகாரி வாஜ்பேயி கூட, நரேந்திர மோடியின் செயல்முறை கண்டு கடுப்பாகியிருக்கிறார். குஜராத்தில் கோத்ரா ரயில்பெட்டி எரிப்பைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், அவர்களது உடைமைகள் சூறையாடப்பட்டது குறித்தும் இனி நான் எந்த முகத்தோடு வெளிநாடுகளுக்குச் செல்வேன், என்று அன்றைய பிரதமராக இருந்த வாஜ்பேயி வெளிப்படையாகவே கூறினார்.  அந்தப் படுகொலைகளுக்குப் பிறகு, மோடியை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட வாஜ்பேயி விரும்பினார் என்றும், பாஜக-வின் மற்ற தலைவர்கள் அதை ஏற்கவில்லை என்றும், பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா அண்மையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்தப் படுகொலைகளில் மோடி சம்பந்தப்பட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. இந்துத்துவக் கும்பல்கள் நேரடியாகவே தாக்குதல்களில் இறங்கின. அவர்களது தூண்டுதலால் அப்பாவிப் பழங்குடி மக்களும், கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்து நகரங்களில் குடியேறியவர்களும் கைகளில் சூலாயுதம் ஏந்தி அந்தக் கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்டார்கள்.  முதலமைச்சர் முன் கூடிய காவல்துறை அதிகாரிகளிடம், “முஸ்லிம்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும். நீங்கள் தலையிடாதீர்கள்,” என்று அவர் ஆணையிட்டதை, அப்போது அங்கே இருந்த காவல்துறை அதிகாரி சஞ்ஜய் பட் அம்பலப்படுத்தியிருக்கிறார். அவர் இப்போது வேட்டையாடப்பட்டு வருகிறார்.

பக்குவமற்ற முறையில் மோடி இதையெல்லாம் செய்தார் என்று நம்ப முடியாது. ஏனென்றால், அவரது மனதில் மதப்பகைமை குடியேறியிருக்கிறது என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. குஜராத் பள்ளிகளின் பாடப்புத்தகங்களில் மதக்கண்ணோட்டம் புகுத்தப்பட்டது, பல்கலைக்கழகத்தில் சோதிடப்பாடம் சேர்க்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள் அத்தகைய சான்றுகளில் சில. காந்தி பற்றிய பள்ளிப் பாடங்களில், அவர் நாதுராம் கோட்ஸேயால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது அடித்துத் திருத்தப்பட்டு அவர் 1948 ஜனவரி 30 அன்று காலமானார் என்று மாற்றப்பட்டது - காந்தி என்னவோ காலரா வந்து காலமானது போல!

2002ம் ஆண்டுப் படுகொலைக் கலவரத்தில் பலியான குடும்பங்களுக்கு உதவித்தொகை அளிக்குமாறு நீதிமன்றம் பணித்ததை ஏற்க மறுத்தவர் மோடி. மத அடிப்படையில் அப்படிப்பட்ட உதவிகளைச் செய்ய முடியாது என்று மதச்சார்பின்மைப் போர்வை போட்டுக்கொண்டவர். கலவரத்தில் சேதமடைந்த மசூதிகளை மறுபடியும் கட்டுவதற்கு அரசாங்கம் நிதியுதவி செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையையும், அதே போர்வையைப் போர்த்திக்கொண்டு செயல்படுத்த மறுத்தவர்.

அவருடைய ஆட்சியில் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பாக, மன நிறைவாக இருக்கிறார்கள் என்ற ஒரு பிரச்சாரம் எவ்விதக் கூச்சமும் இல்லாமல் செய்யப்படுவதுண்டு. மத்திய அரசு, சிறுபான்மை மக்களுக்கான கல்வி உதவித்திட்டத்தின் கீழ், குறிப்பாகப் பெண்குழந்தைகளின் கல்விக்காக என ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்கிற நிதியைக் கூட, இப்படிப்பட்ட கல்வி உதவிகளை மத அடிப்படையில் செய்யக்கூடாது, என்று கூறி திருப்பி அனுப்பி வருகிறவர் மோடி.

அவருடைய மனதில் எந்த அளவுக்கு மதக் குரோதம் இருக்கிறது என்பதற்கு இன்னொரு ஆதாரத்தையும் குறிப்பிடலாம். முஸ்லிம் மக்களுடன் தனது சகோதரத்துவத்தைக் காட்டுவதற்காக ஒரு உண்ணாவிரத நாடகம் நடத்தினார் மோடி. அப்போது, ஒரு பெரியவர் தன் கையால் தைத்துக் கொண்டு வந்த குல்லா ஒன்றை மோடியிடம் கொடுத்தார். அதை அணிந்துகொள்ளாமல் தள்ளி வைத்தார் மோடி.

ஏற்கெனவே ஆறரையாண்டுக் கால பாஜக ஆட்சியின்போது மத்திய அரசுக் கட்டமைப்பில் இந்துத்துவ ஆட்களை நியமிப்பது போன்ற கரசேவைகள் நடந்தன. அந்தத் திருப்பணிகள் அரைகுறையாக நின்றுவிட்டன என்பதால், மோடியை பிரதமராக்கி அவற்றை முழுமையாக நிறைவேற்ற ஆர்எஸ்எஸ் - பாஜக பீடம் வியூகம் அமைக்கிறது. மன்மோகன் சிங்கின் உலமயமோக பொருளாதாரக் கொள்கைகளால் காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களின் கடும் சினத்திற்கு உள்ளாகியுள்ள நிலையை, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வியூகம் அது. மக்களின் விழிப்புணர்வும், மதச்சார்பற்ற ஜனநாயக எழுச்சியும் அந்த வியூகத்தை உடைக்கட்டும்.

(‘ஆழம்’ ஆகஸ்ட் - 2012 இதழில் இக்கட்டுரை சிறிது சுருக்கப்பட்டு வெளிவந்துள்ளது)

Monday 16 July 2012

பிக்பாக்கெட் அடிக்கப்படும் ஞாயிறு

ண்பரின் மகள் நேற்று (2012, ஜூலை 15) அதிகாலையில் அலைபேசியில் அழைத்தாள். “அங்கிள், நாளைக்கு ஒரு கட்டுரைப் போட்டி வெச்சிருக்காங்க. ‘நேர்மையற்ற வணிக முறை’ன்னு தலைப்புக் கொடுத்திருக்காங்க. வீட்டுல எப்ப இருப்பீங்க? கொஞ்சம் பாயின்ட்ஸ் சொல்லுங்க...” 

பள்ளிப்பாடம் சார்ந்தவற்றுக்காக மட்டுமல்லாமல் பொது விசயங்கள் பற்றித் தெரிந்துகொள்வதிலும் அக்கறை உள்ள, பிளஸ் டூ படிக்கிற குழந்தை அவள். 

“காலையில 9 மணி வரைக்கும் வீட்டுலதான் இருப்பேன், அதற்குள் எப்போது வேண்டுமானாலும் நீ வரலாம்,” என்றேன். ஞாயிற்றுக்கிழமை எனக்கு அலுவலகம் உண்டு.

“ஓ... காலையிலே 7 மணிக்கு டியூசன் இருக்கு அங்கிள். 6 மணிக்கே வீட்டுலயிருந்து புறப்பட்ருவேன். ஈவ்னிங் எப்ப வருவீங்க”

“உனக்காக வேண்டுமானால் 6 மணிக்கு வந்துவிடுகிறேன்...”

“இல்லை அங்கிள், சண்டேயிலே ஸ்பெஷல் கிளாஸ் வெச்சிருக்காங்க. அது முடிஞ்சு வர்றதுக்கு 7 மணியாயிடுமே...”

“ஸ்பெஷல் கிளாஸ் இன்னிக்குப் போகாம இருந்தா என்ன? இல்லாட்டி சாயங்காலம் பெர்மிஷன் வாங்கிட்டு சீக்கிரமா கிளம்பி வாயேன்...”

“இல்லை அங்கிள். திட்டுவாங்க.” பள்ளியில் முதல் நிலை மதிப்பெண் பெறுகிற மாணவிகளில் ஒருத்தி அவள்.

ஒரு வழியாக இரவு 9 மணிக்கு வந்தாள். நான் சொன்னவற்றைக் குறித்துக்கொண்டு, தான் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்தது சரியாக இருக்குமா என்று கேட்டுக்கொண்டு புறப்பட்டாள்.

“எப்பம்மா இதை உக்காந்து எழுதுவ? காலையிலேயா?”

“இல்லை அங்கிள், டியூசனுக்குப் போயிட்டு அப்படியே ஸ்கூலுக்குப் போகணும். அதனால இப்ப நைட்லயே உக்காந்து எழுதிடுவேன்...”

குழந்தைகளை விளையாட விடாமல், நண்பர்களைச் சென்று பார்த்துப் பேச விடாமல், வீட்டில் கதை-கவிதை படிக்கவிடாமல், தொலைக்காட்சி கூட பார்க்கவிடாமல் டியூசன், ஸ்பெஷல் கிளாஸ், கட்டுரைத் தயாரிப்பு என்று அவர்களின் ஞாயிற்றுக்கிழமைகளை பிக்பாக்கெட் அடிக்கிற தனியார் பள்ளி நிர்வாகங்களை என்ன செய்வது? இது கூட ஒரு நேர்மையற்ற வணிக முறைதானே...

Thursday 5 July 2012

“கடவுள் துகள்” கண்டுபிடிப்பு!


லகம் முழுவதும் உள்ள அறிவியலா ளர்களாலும் அறிவியல் ஆர்வலர்களாலும் பெரி தும் எதிர்பார்க்கப்பட்ட அந்தஅறிவிப்புபுத னன்று (ஜூலை 4) அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்பட்டது. 45 ஆண்டுகளாக அறிவியலா ளர்கள் கடுமையான ஆராய்ச்சியில் ஈடுபட்ட தன் வெற்றியாக, ‘ஹிக்ஸ் போஸோன்’ என்ற புதிய அணுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக் கிறது. “கடவுள் துகள்” என்று அறிவியலாளர் கள் செல்லமாகப் பெயர் சூட்டியிருந்த இந்த அணுத்துகள் ஆராய்ச்சிக்காக, பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள, ‘செர்ன்’ எனப்படும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் அணுத்துகள் மோதல் ஆய்வுக்கூட உரையரங்கில், நிற்பதற் கும் இடமில்லாத அளவுக்குக் கூடியிருந்த அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர் கள், செய்தியாளர்கள் ஆகியோர் முன்னிலை யில் இந்தக் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டது.யாருடைய பெயர் அந்த அணுத்துகளுக்கு சூட்டப்பட்டிருக்கிறதோ அந்த அறிவியலாளர் பீட்டர் ஹிக்ஸ் இதை அறிவித்தபோது,அனை வரும் பலத்த கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். “என் வாழ்நாளிலேயே இந்தக் கண்டுபிடிப்பு நடந்திருப்பது உண்மையிலேயே நம்பமுடி யாத வியத்தகு நிகழ்வுதான்,” என்று கூறிய ஹிக்ஸ், தன் விழிகளில் துளிர்த்த கண்ணீ ரைத் துடைத்துக்கொண்டார். அறிவியலாளர் கள் உணர்சியுள்ள மனிதர்கள்தான் என அந்தக் காட்சி உணர்த்தியது.

அணுத்துகள் பற்றிய அறிவியல் கோட் பாடு பிறந்த காலத்திலிருந்தே, ஏற்கெனவே தெரிய வந்துள்ள நியூட்ரான், புரோட்டான் போல இன்னொரு அணுத்துகள் இருக்கிறது என்ற கருத்து முன்மொழியப்பட்டு வந்தது. ஆனாலும் அதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அது பெருமளவுக்கு நம்பக்கூடிய ஒரு ஊகமாக மட்டுமே இருந்து வந்தது. உண்மையிலேயே அது இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர்கள் தங்க ளுக்கிடையே ஒத்துழைப்புடன் ஆராய்ச்சி யில் ஈடுபட்டுவந்தார்கள். இந்திய அறிவிய லாளர்களும் இந்தப் படையில் உண்டு.

செர்ன் அமைப்பு சார்பாக ஏற்படுத்தப்பட் டிருக்கும் அணுத்துகள் மோதல் கூடத்தில் இறுதிக்கட்ட சோதனைகள் பல முறை நடத்தப்பட்டன. அதில் போதிய தடயங்கள் கிடைத்துள்ளன. அந்தத் தடயங்கள் கிடைத் திருப்பது பற்றி புதனன்று அறிவிக்கப்பட்டது.“எங்களது சோதனைகளில் ஒரு புதிய அணுத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்து விட்டோம். அது, ஹிக்ஸ் போஸோன் அணுத் துகளின் தன்மைகள் பற்றி இதுவரையில் அறி வியல் ஊகத்துடன் கூறப்பட்டுவந்துள்ள வரையறைகளோடு பெருமளவுக்கு ஒத்துப் போகிறது,” என்று ஆய்வாளர்கள் தெரிவித் தார்கள்.

ஒரு அறிவியலாளர், “இது வரை ஊகிக்கப் படாத தன்மைகளும் அதில் தென்படுகின் றன. அதனால் நாங்கள் கண்டுபிடித்திருப்பது முற்றிலும் ஒரு புதிய அணுத்துகளாகக் கூட இருக்கலாம்! எப்படியோ அறிவியல் உலகத் தின் சுவைமிகு ஆராய்ச்சி தொடரப்போகிறது,” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த அணுத்துகள் கண்டுபிடிப்பு, நமது பேரண்டம் தொடங்குவதற்கு முன் எதுவும் இருந்ததில்லை, வெறும் சூனியமாகவே இருந் தது என்ற கருத்தை நிராகரிக்கிறது. கார்ல் மார்க்ஸ் சொன்னதுபோல், எங்கும் எப்போதும் பொருள் என்பது இருந்து வந்திருக்கிறது. பொருள் என்பதற்கு ஆதி - அந்தம் இல்லை என்பதை மெய்ப்பிக்கிறது.இந்தக் கண்டுபிடிப்பால் பேரண்டம் உரு வாவதற்கு முன் கருமைப்பொருள் இருந்தது - கருமைப்பொருள், ஒளிப்பொருள் என இருந் தது என்ற கருத்து வலுப்படக்கூடும்.

இதனால், மக்கள் வாழ்வுக்கு என்ன பயன் என்ற கேள்வி எழுவது இயல்பு. பேரண்டத்தையும், உலகத்தையும், வாழ்க் கையையும் அறிவியல் பூர்வமாக புரிந்து கொள் வதற்கு இதுவும் உதவும். இந்த ஆராய்ச்சிக்காகவே உருவாக்கப்பட்ட சோதனைக் கருவிகளும், காந்தப் புலன் கருவிகளும் எதிர் காலத்தில் மருத்துவ சோதனைகளுக்கு மிகவும் பயன்படும். 

பொருளின் “திரட்சி” சுருக்கப்பட்டு, செயல் திறன் அதிகரிக்கப்படும். அதனால் என்ன பயன்? எடுத் துக்காட்டாக இன்று ஒரு ஜெட் விமானம் 200 டன் எடையில் தயாரிக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் கோட்பாடுகளைப் பயன் படுத்துவதன் மூலம், அதே விமானத்தை 20 டன் எடையில் தயாரிக்க முடியும்! இதனால், எரிபொருள் செலவு மிகப்பெருமளவுக்கு சேமிக்கப்படும். வேறு கோள்களுக்கு விண்வெளிக் கப்பல்களை அனுப்புவது என்பது இன்று ஒரு கண் டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு விமானத்தில் செல்வதுபோல் எளிதாகிவிடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொருள் முதல்வாத சிந்தனைகளை உரத்து உரைக்கும் இந்த அணுத்துகள் ஆராய்ச்சி யில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

(‘தீக்கதிர்’ ஜூலை 5, 2012 இதழின் ‘தெருவிளக்கு’ பகுதியில் வெளியாகியுள்ள எனது கட்டுரை.)

Thursday 28 June 2012

உள்நாட்டு அரசியல் கொள்கைகளில் உலக நிதி நிறுவனங்களின் செல்வாக்கு


(பிணத்துககு காசோலை
கொடுத்த நேர்மை)

ஒரு பெரும் செல்வந்தர் மரணப் படுக் கையில் கிடந்தார். தனது நிர்வாகத்தில் உள்ள கோவிலின் பூசாரி, தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர், தனது பணத்தைப் போட்டு வைத் துள்ள நிதிநிறுவன நிர்வாகி ஆகியோரை அழைத்திருந்தார். மூவரிடமும் தலைக்கு ஒரு கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்தார். “எந்த நேரத்திலும் நான் இறந்துவிடுவேன். வேறு யாரையும் நம்ப முடியவில்லை. அதனால்தான் இந்தப் பணத்தை உங்களிடம் கொடுத்து வைக்கிறேன். நான் இறந்ததும் என்னைப் புதைக்கும்போது நீங்கள் இந்தப் பணத்தையும் என் உடலோடு வைத்துப் புதைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,” என்று சொன்னார். சில நாட்களில் அவர் இறந்துவிட்டார். உடல் அடக்க நிகழ்ச்சிகள் முடிந்து திரும்பும்போது அந்த மூன்று பேரும் சந்தித்துக்கொண்டார் கள். முதலில் அந்தப் பூசாரி, “உங்கள் இரண்டு பேரிடமும் நான் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். பெரியவர் கொடுத்த பணத்தில் 50 லட்ச ரூபாயை மட்டும்தான் அவருடைய உட லோடு வைத்தேன். மீதிப்பணத்தை, அவர் கட்டிய கோவிலை விரிவு படுத்துவதற்காக வைத்துக்கொண்டேன்,” என்றார். உடனே அந்த மருத்துவர், “நானும் உண்மையை ஒப்புக் கொள்கிறேன். 50 லட்ச ரூபாயைத்தான் நானும் கல்லறைக்குள் போட்டேன். மீதி 50 லட்சத்தை அவர் கட்டிய மருத்துவமனையில் புதிய கருவிகளை வாங்கி வைக்கப் பயன் படுத்தப்போகிறேன்,” என்றார். இருவரையும் கோபத்தோடு பார்த்தார் நிதி நிறுவன நிர்வாகி, “உங்களை நம்பியவருக்கு நீங்கள் நேர்மை யாக நடந்துகொள்ள வேண்டாமா? நான் உங்களைப் போல இல்லை. முழுத் தொகைக் கும் செக் எழுதி உள்ளே வைத்துவிட்டேனாக் கும்,” என்றார்.

நாட்டின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒய்.வி. ரெட்டி கூறியுள்ள கருத்துக்களைப் படிக்கிற போது இந்தக் கதைதான் நினைவுக்கு வரு கிறது. பொதுவாக எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவராம் இவர். சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் நகரில், பெர் ஜாகோப்ஸன் அறக்கட்டளை சொற்பொழிவு-2012 நிகழ்ச்சி யில் “சமுதாயம், பொருளாதாரக் கொள்கைகள், நிதித்துறை” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், பன்னாட்டு நிதி நிறுவனங்களின் ஆதிக் கத்தை அம்பலப்படுத்தினார். அவரது உரை யில் தெரித்த சில முக்கிய கருத்துகள் வருமாறு:

“உலக அளவிலான சில நிதி நிறுவன மலைகள் பல்வேறு நாடுகளின் மைய வங்கி களை விடவும் சக்தி வாய்ந்தவையாக இருக் கின்றன. சில பெரிய பன்னாட்டு வங்கிகள் பல நாடுகளின் அரசியல் பொருளாதாரத்தில் குறிப் பிடத்தக்க அளவுக்குத் தாக்கம் செலுத்து கின்றன.“வரியைத் தவிர்ப்பது தொடர்பான செயல் பாடுகளை மேற்கொள்ளவும், அதனால் ஆதாயம் பெறவும் பன்னாட்டு வங்கி நிறுவனங் களுக்கு வாய்ப்பு உள்ளது. இத்தகைய செயல் பாடுகள் காரணமாக சம்பந்தப்பட்ட நாடு களின் அரசியல் பொருளாதாரத்தில் அந்த நிறுவனங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன.]“இன்றைய உலக நிதிச் சந்தை நிலவரத் தில் சில பெரும் நிதி நிறுவன மலைகள் மிகப் பெரியவையாக உள்ளன. ஏன், சில மைய வங்கிகளை விடவும் சக்தி வாய்ந்தவையாக வும் இருக்கின்றன.

“அண்மைக் கால ஆண்டுகளில், (பொரு ளாதார நெருக்கடிகளால்) பாதிக்கப்பட்ட நாடு களில் அரசியல் நடவடிக்கைகளுக்கு நிதி நிறுவனங்களின் பங்களிப்புகள் அதிகரித்து வந்துள்ளன என்பதைக் கிடைத்துள்ள ஆதா ரங்கள் காட்டுகின்றன. மேலும், அந்த நிதி நிறுவன மலைகள் தங்களுடைய சொந்த நலன் களுக்காக, அரசியல் நிர்வாகத்தில் மட்டு மல்லாமல், பெருந்தொழில் நிறுவனங்களின் நிர்வாகங்களிலும் தலையிடுகின்றன என்று தெரிகிறது.

“உலக நிதி ஆளுமைகள், நெருக்கமான தொடர்புகள் உள்ள சில அமைப்புகளில் செல் வாக்கு செலுத்துவது போட்டித் திறன் உள்ள சக்திகளை சீர்குலைக்கக்கூடும். நாடுகளின் பொருளாதார நிலைகளை மதிப்பிடும் நிறு வனங்களும், நிதிக் கணக்கு நிறுவனங்களும், சில முன்னணி வர்த்தகச் செய்தி நிறுவனங்க ளோடு சேர்ந்து, ஒன்றுக்கொன்று தொடர்ச்சி யான கொடுக்கல் வாங்கல்களைச் செய்து கொள்கின்றன. இது சந்தையில் அந்தச் சில ஏகபோக அமைப்புகள் ஆளுமை செலுத்த இட்டுச் செல்கிறது.

“உலகளாவிய நிதிச் சந்தையின் மீதான நம்பிக்கை, குறிப்பாக பொருளாதாரத்தில் முன் னேறிய நாடுகளின் வங்கித் துறைகள் மீதான நம்பிக்கை அரிக்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம், நிதி நிறுவனங்கள் பொருத்தமற்ற ஆதாயங்களை அனுபவிப்பதும், சில உலகளா விய நிதி நிறுவனங்கள் விசாரணைக்குரிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதும்தான்.

“பல நாடுகளின் நிதித்துறை ஒழுங்கு முறை ஆணைய அமைப்புகள் இப்படிப்பட்ட நிறுவனங்களின் மீது அபராதம் விதிக்கின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள் செய்த முறை கேடுகள் பற்றியோ, அதனால் பொதுமக்க ளுக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றியோ எந்த விவரத்தையும் வெளியிடுவதில்லை. அது மட்டுமல்ல, எந்த நிறுவனங்களை அந்த ஒழுங்குமுறை அமைப்புகள் கட்டுப்படுத்த வேண்டுமோ, அந்த நிறுவனங்களின் ஆலோ சனைகளைத்தான் சார்ந்திருக்கின்றன.

“அத்தகைய ஒழுங்குமுறை அமைப்பு களிலும், அரசாங்கக் கருவூலத் துறைகளி லும், நிதியமைச்சகங்களிலும் பணியாற்று கிறவர்களுக்கு இந்த உலகளாவிய நிதி நிறு வனங்கள் மிக அதிகமான ஊதியத்தில் பதவி களை அளிக்கத் தயாராக இருக்கின்றன... நிதிச் சந்தையில் இப்படிப்பட்ட சில நிறுவனங்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதும், நிதி என்பது எந்த அளவுக்கு விரிவானதாக இருக்கிறது என்பதுமாகச் சேர்ந்து நடைமுறைகளிலும் விளைவுகளிலும் தாக்கம் செலுத்துகின்றன...”-

இவையெல்லாம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருடைய கருத்துகள். மக்கள் நலத்தில் அக்கறையுள்ள பொருளாதார வல்லு நர்களும், இடதுசாரி சிந்தனையாளர்களும் நம் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில், அதன் மூலம் நாட்டின் உயர் தன்னாளுமை உரிமையில் ஒரு அரிமானத்தை ஏற்படுத்துவதில் உலகளாவிய நிதி மூலதன சக்திகள் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்பதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கிறார்கள். அவர்களுடைய வாதத்திற்கு வலுச் சேர்க்கிறது ஒய்.வி. ரெட்டியின் பேச்சு. உலகச் சந்தை நிலவரத் தின்படி ஆடுவதையே பெருமைக்குரிய கடமையாக ஏற்றுச் செயல்படும் ஆட்சியாளர் களுக்கு இது உறைக்குமா?

(தீக்கதிர் 28.6.2012 இதழில் இடம்பெற்றுள்ள எனது கட்டுரை)உள்

Tuesday 22 May 2012

பாடப்புத்தக கார்ட்டூனும் எதிர்ப்புக்கு எதிர்ப்பும்

டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் அரசமைப்புச் சட்ட சாசனத்தை உருவாக்கித் தந்த மேதை.”
-இந்த அளவோடுதான் நம் பள்ளிப்பாடங்கள் நிற்கின்றன. அவர் காலமெல்லாம் எதற்காகப் போராடினார் என்ற உண்மை மாணவர்களுக்குத் தெரியாமலே மறைக்கப்பட்டு வந்திருக்கிறது. கல்வி வளாகங்களுக்கு வெளியே நடைபெறும் இயக்கங்கள்தான் உண்மையான பாடப் புத்தகங்களாக, அம்பேதகர் பற்றியும் இந்தியாவின் ஈடு இணையற்ற இழிவாகிய சாதியக் கட்டமைப்பு பற்றியும் கற்பிக்கின்றன. அரசமைப்புச் சட்ட சாசனத்தை உருவாக்கியவர் என்பதைத்தாண்டி மற்ற உண்மைகளைப் பாடப்புத்தகங்கள் பேச வேண்டாமா என்ற கேள்வி அவ்வப்போது எழுவதுண்டு. சிலர், அரசமைப்புச் சட்ட சாசனத்தைத் தயாரிப்பதற்கென்றே ஒரு சபை ஏற்படுத்தப்பட்டது என்கிறபோது அது ஒரு கூட்டு முயற்சிதானே, அம்பேத்கர் அதற்குத் தலைமை தாங்கியவர்தானே,  அப்படியிருக்க அதற்கான பெருமையை அவருக்கு மட்டும் தூக்கிக் கொடுப்பது என்ன நியாயம் என்று கேட்பதுண்டு.

அம்பேத்கர் பற்றி “விரிவாக” பேசவைப்பதற்காக என மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 11ம் வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் ஒரு நையாண்டிச் சித்திரம் (கார்ட்டூன்) சேர்க்கப்பட்டிருக்கிறது. 1949ல் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கார்ட்டூன் அது. ஒரு நத்தையின் மீது அம்பேத்கர் கையில் சவுக்குடன் அமர்ந்து அதை ஓட்டுகிறார், நத்தையையும் அம்பேத்கரோடு சேர்த்து நத்தையை வேகமாக ஓட்ட சவுக்கை வீசுகிறார் பிரதமர் நேரு.

நாடாளுமன்றத்திற்கு வெளியே பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சென்னையில் கண்டன இயக்கம் நடத்தியது. நாடாளுமன்றத்திற்கு உள்ளே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் பிரச்சனை கிளப்பினார்கள். குறிப்பிட்ட கார்ட்டூனையும், அதே போல் அரசியல் தலைவர்களை இழிவு படுத்தும் இதர கார்ட்டூன்களையும் அந்தப் பாடநூலிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்றத்தில் அரசு உறுதியளித்தது.

அதைத் தொடர்ந்து, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தில் (என்சிஇஆர்டி) இருந்து இரண்டு இயக்குநர்கள் விலகினார்கள். இந்திய குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர், பதவி விலகிய ஒருவரது அலுவலகத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில ஈடுபட்டதை ஒரு அரசியல் நாடகம் என்று தள்ளுபடி செய்துவிட முடியும். ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சி, சிவசேனா ஆகிய இரண்டு இந்துத்துவ சக்திகளுடன் கூச்சமே இல்லாமல் அரசியல் உறவு கொண்டிருக்கிற கட்சி அது.

இப்போது சில வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் அறிவுத்தளத்தில் செயல்படுகிறவர்களும், மேற்படி கார்ட்டூன் நீக்கப்படுவதை விமர்சித்திருக்கிறார்கள். 63 ஆண்டுகளுக்கு முன் வெளியான கார்ட்டூன் அது, அப்போது அதற்கு எவ்வித எதிர்ப்பும் வரவில்லை, இப்போது வருவது ஏன் என்று அவர்கள் கேட்கிறார்கள். பாடப்புத்தகத்தில் கார்ட்டூன் 6 ஆண்டுகளாக இருக்கிறது, இப்போது திடீரென அதை எதிர்க்க வேண்டிய தேவை என்ன என்றும் அவர்கள் கேட்கிறார்கள். ஆரோக்கியமான கல்விச் சூழலை இப்படிப்பட்ட எதிர்ப்புகள் சீர்குலைக்கின்றன, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கின்றன என்றெல்லாம் அவர்கள் வாதிடுகிறார்கள். தில்லி பல்கலைக்கழகத்தில் டாக்டர் கே. ராமானுஜத்தின் ‘300 ராமாயணங்கள்’ பாடத்திற்கு ஆர்எஸ்எஸ் சீடகோடிகள் எதிர்ப்புத் தெரிவித்து அதை நீக்க வைத்ததோடு இதை ஒப்பிடுகிறார்கள். இது ஒரு அடையாள அரசியல், அதற்கு இடதுசாரிகள் ஆதரவளிப்பது தவறு என்கிறார்கள்.

அரசமைப்பு சாசன சபையில் பலரும் இடம்பெற்றிருந்தபோதும் மற்ற உறுப்பினர்கள் யாருமே அதில் அக்கறையோ ஈடுபாடோ காட்டாத நிலையில், அம்பேத்கர் தன்னந்தனியராக உழைத்து அதைத் தயாரித்தார். நாடாளுமன்றத்தில் அது தாக்கல் செய்யப்பட்டபோது, இந்த உண்மையை அன்று டி.டி. கிருஷணமாச்சாரி அறிவிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மேசையைத் தட்டி ஆரவாரித்துத் தங்களது பாராட்டைத் தெரிவித்தார்கள். ஆகவேதான் அந்த சபைதான் பொறுப்பு என்றாலும், அதற்குத் தலைமை தாங்கிய அம்பேத்கர் தனிச்சிறப்புக்கு உரியவராகிறார். சொல்லப்போனால், சாசனத்தை இரவு பகலாக உழைத்துத் தயாரித்ததன் காரணமாகவே அவரது உடல்நலம் குன்றியது, அதன் பின் 6 ஆண்டுகளில் அவர் காலமானார். (நன்றி: தமுஎகச கவுரவத் தலைவர் பேராசிரியர் அருணன்).

63 ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிகையில் வெளியானபோது அது அன்றைய அரசியல் சூழலில் ஒரு கார்ட்டூன் அவ்வளவுதான். அன்றைக்கு அந்த ஆங்கிலப் பத்திரிகையை எத்தனை பேர் பார்த்திருக்க முடியும்? மேலும் அன்றைக்கு அதற்கு எதிர்ப்பு வரவில்லை என்பது கருத்துச சுதந்திரத்திற்கு அளிக்கப்பட்ட மரியாதை.

இன்று அது ஒன்றும் ஏதோவொரு பத்திரிகையில் மறுபதிப்புச் செய்யப்படவில்லை. ஒரு பள்ளிப் பாடத்திட்டத்தில், அதிலும் 16 வயதே நிரம்பிய 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் அந்த கார்ட்டூன் சேர்க்கப்படுகிறது, அப்படிச் சேர்க்க வேண்டிய கட்டாயம் என்ன? 6 ஆண்டுகளாக அந்தத் தவறு கவனிக்கப்படவில்லை என்பதால், இன்றைக்கு அதை சரிப்படுத்தக்கூடாது என்பது சரியான வாதம்தானா?

சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் ஆகப் பெரும்பாலும் நடுத்தர, உயர்நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் தலித் அல்லாத குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்தான். அந்தக் குழந்தைகளின் மனதில், அம்பேத்கர் பற்றிய மட்டமான சிந்தனையை இப்படிப்பட்ட கார்ட்டூன் ஊன்றி விடும். இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்டப்பூர்வ ஏற்பாடுகளை எதிர்ப்பவர்கள், சட்டத்தில் அதற்கு இடம் வகுத்தவர் என்ற முறையில் அம்பேத்கர் மீது கோபம் வளர்க்க முற்படுகின்றனர். ஒடுக்கப்பட்டவர்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களும் கல்வி உரிமை பெற்றதை சகித்துக்கொள்ள முடியாத சாதிய ஆதிக்க உணர்வோடு கலந்த இந்த கோப யாகத்துக்குத்தான் அந்த கார்ட்டூன் துணை செய்யும.

சும்மாவே நம் நடுத்தர வர்க்கம் அரசமைப்பு சாசனத்தை மதிப்பதில்லை. தேர்தலில் வாக்களிக்க வராமல் கைவிரலைக் கரைபடியாமல் வைத்திருப்பதை நாகரிகமாகக் கருதிப் பீற்றிக்கொள்வது இந்த வர்க்கம்தான். அந்த இளக்கார மனநிலையை வளரும் மாணவப்பருவத்திலேயே ஊட்டி வளர்க்கவே இந்த கார்ட்டூன் மறுபதிப்பு உதவும்.

என்சிஇஆர்டி பொறுப்பாளர்கள் இப்படிப்பட்ட உள்நோக்கங்களோடுதான் இந்த கார்ட்டூனைச் சேர்த்தார்கள் என்று சொல்வதறகில்லைதான். ஆனால், இந்தியச் சூழலின் பின்விளைவுகள் பற்றிய முன் சிந்தனையின்றி மேலோட்டமான பார்வையோடு அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியும். இன்னும் நுட்பமாகச் சொல்வதென்றால், பிராமணர் அல்லாதாரைக் கொண்டு, தனது சாதிப்பாகுபாட்டு ஆதிக்க அரசியலை நிலைநாட்டிக்கொள்வது பிராமணியத்தின் ஒரு வெற்றிகரமான உத்தி.

எதிர்ப்பில் முழு நியாயம் இருக்கிறது. அந்த எதிர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் சிறிதும் நியாயம் இல்லை.

Monday 7 May 2012

பிள்ளையார் சிலை குடித்த பாலும் ஏசு சிலை வடித்த கண்ணீரும்

சனால் எடமருகு - ஒரு பகுத்தறிவாளர். இவர் மீது மும்பை நகரின் மூன்று காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்படுமானால் இவருக்குக் குறைந்தது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும்.

இவர் செய்த குற்றம்? “மக்களின் மத நம்பிக்கையைப் புண்படுத்தினார், மதப் பகையுணர்வைக் கிளறிவிட்டார், அமைதியை சீர்குலைக்க முயன்றார்...”

என்ன நடந்தது? மும்பையின் இர்லா சாலையில் ஒரு வேளாங்கன்னி ஆலயம் இருக்கிறது, அதன் வளாகத்தில், ஏசு சிலுவையில் தொங்குகிற சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம், திடீரென ஏசு சிலையின் பாதத்திலிருந்து தானாகவே சொட்டுச் சொட்டாக நீர் சொட்டத் தொடங்கியிருக்கிறது. அது ஏசுவின் கண்ணீர் என்றும், அதற்கு நோய்களைப் போக்கி இல்லங்களைப் புனிதப்படுத்தும் சக்தி இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதை நம்பிய ஒரு பகுதி மக்கள் வரிசையில் நின்று சொட்டுவடி நீரை பாத்திரங்களிலும் பாட்டில்களிலும் பிடித்துச் சென்றிருக்கிறார்கள்.

தகவலறிந்து இரண்டு வாரங்களில் அங்கே வந்து ஆராய்ந்த எடமருகு, அரை மணி நேரத்தில் உண்மையைக் கண்டுபிடித்தார். சிலுவை ஊன்றப்பட்டுள்ள இடத்தில் தரைக்கடியில் சேர்ந்துள்ள தண்ணீர், அழுத்தம் காரணமாக சிலுவையின் மெல்லிய, முடி அளவிலான கோடுகள் போன்ற இடைவெளிகள் வழியாக மேலே எறி வழிகிறது என்பதே அந்த உண்மை. அறிவியல் பாடத்தில் இதை “தந்துகி விளைவு” என்பார்கள். தாவரங்களுக்கு இந்த இயற்கையான விளைவின் காரணமாகத்தான் வேர்களிலிருந்து நீர் கிடைக்கிறது.

இந்த உண்மையைக் கண்டுபிடித்ததோடு நிற்காமல் இதை ஊரறிய அறிவிக்கவும் செய்தார் எடமருகு. செய்யலாமோ? புகார் பதிவு செய்திருக்கிறார்கள்.

முன்பு இப்படித்தான் பிள்ளையார் பால் குடிப்பதாகக் கிளப்பிவிட்டார்கள். அது “பரப்பு இழுவிசை” எனும் இயற்பியல் செயல்பாடே என்று அறிவியல் இயக்கத்தினரும் பகுத்தறிவாளர்களும் வெளிப்படுத்தினார்கள். அந்த இயற்பியல் செயல்பாட்டின்படி மார்க்ஸ், பெரியார் சிலைகள் கூட “பால் குடிக்கும்” என நிரூபித்துக் காட்டினார்கள்.

அறிவியல் உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதைப் பொறுத்தவரையில் மத வேறுபாடே இல்லை! இந்த உண்மையைச் சொல்வது எப்படி மத நம்பிக்கையைப் புண்படுத்துவதாகும்? மறைநூல்களில் எங்காவது இப்படி ஏசு சிலை கண்ணீர் வடிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறதா? இது எப்படி மதப் பகைமையைத் தூண்டும்? “ஏசு சாமி போலி, என் மதத்தின் சாமிதான் ஒரிஜினல்” என்று எடமருகு ஏதாவது பிரச்சாரம் செய்தாரா? இது எப்படி பொது அமைதியைக் குலைக்கும்? பொதுமக்கள் ஏசுவின் கண்ணீர் செய்தியையும் கேள்விப்பட்டார்கள், எடமருகுவின் செய்தியையும் கேள்விப்பட்டார்கள், தங்களுடைய வேலையைப் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். இதை ஒரு மதப்பிரச்சனையாக மாற்ற சிலர் முயல்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

உண்மையிலேயே ஏசு சிலை கண்ணீர் வடிக்கிறது என்றால், எட மருகு சொல்வது பொய் என்று நிரூபித்து மகிமையை நிலைநாட்ட வேண்டியதுதானே? எதற்காகக் காவல் நிலையம் செல்ல வேண்டும்? கர்த்தர் உள்ளிட்ட மகிமை மிகு கடவுளர்களால் எடமருகு போன்றோரை ஒன்றும் செய்ய முடியாது என்பதால்தானே சட்டத்தின் துணையுடன் அவர்களது வாயை அடைக்க முயல்கிறார்கள்? அறியாமல் செய்கிறார்கள், கர்த்தரே இவர்களை மன்னியும் என்று சொல்ல முடியவில்லை.

இந்தியாவின் அரசமைப்பு சாசனம், மக்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பது அரசின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகக் கூறுகிறது. அரசு அதைச் செய்யத்தவறுகிறது. சில தனி மனிதர்களும் முற்போக்கான இயக்கங்களைச் சேர்ந்தோரும் செய்கிறார்கள். அவர்களைக் கைது செய்வது நாட்டின் அரசமைப்பு சாசனத்தை அவமானப்படுத்துகிற செயல்.

மக்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்கிறவர்களாக, எதையும் ஏன் எப்படி என்று கேள்வி கேட்பவர்களாக இருக்கக்கூடாது என்பது நாட்டின் வளங்களை எல்லாம் வளைத்துக் கொழுக்கிற நவீன உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்ளையர்களின் விருப்பம். எல்லா மதங்களையும் சேர்ந்த திடீர் மகிமைக் கதைகள் அந்த விருப்பத்தைத்தான் நிறைவேற்ற முயல்கின்றன. அந்தக் கதைகளின் மூளைச்சலவை இரைச்சல்களை மீறி உண்மைகளும் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன - அடக்குமுறைகளைப் பொருட்படுத்தாமல்.

நீங்கள் கதையின் பக்கமா, உண்மையின் பக்கமா?

(தகவல் ஆதாரம்: தி ஹிண்டு நாளேட்டின் 7.5.2012 இதழில் பிரவீன் ஸ்வாமி எழுதியுள்ள கட்டுரை)

Monday 30 April 2012

திருநங்கையர் மனக்குமுறலை ‘எதிரொலிக்கும் கரவொலிகள்’


நாடகக்களம்


டுக்கப்பட்ட மக்கள் தங்களது விடுதலைக் குரலைக் கலையாக வெளிப்படுத்தும்போது அது ரசனைக்குரியதாக மட்டும் இருப்பதில்லை, போராட்ட உணர்வைத் தூண்டுகிற படைப்பாக்கமாகவும் அமைகிறது. திருநங்கை நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து மேடையேற்றியுள்ள ‘எதிரொலிக்கும் கரவொலிகள்’ என்ற நாடகம் இதற்கு சாட்சியம் கூறுகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் திருநங்கையர் பிரச்சனைகள் பல வடிவங்களில் முன்னுக்கு வந்துள்ளன. பொது இடங்களில் கைகளைத் தட்டிக்கொண்டு, ‘ஒரு மாதிரியாக’ நடந்து கொண்டு பிச்சை கேட்கிறவர்கள், உழைப்ப தற்கு மனமில்லாமல் உடலை விற்கிறவர்கள், சமூக ஒழுங்கிற்குக் கட்டுப்படாதவர்கள் என் றெல்லாம் அதுவரையில் திருநங்கையர்கள் பற்றி பேசப்பட்டு வந்தது. திரைப்படங்களிலும், தெருக்களிலும் ‘ஒன்பது’ என்ற எண் இவர் களைப்பற்றிய இளக்காரமான அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. “நாங்களும் மனிதர் கள்தான்... எங்களுக்கும் உங்களைப்போல உணர்வுகள் உண்டு, சுயமரியாதை உண்டு,” என்ற குரல் அவர்களிடமிருந்து ஒலிக்கத் தொடங்கி இந்த 20 ஆண்டு காலத்தில் படிப்படி யாக உரத்து முழங்கி வருகிறது.

அரசு இவர்களுக் கான நலவாரியம் அமைத்திருப்பது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இவர்கள் தங்களை திருநங்கையர் என்றே குறிப்பிடுவதற்கான உரிமை, கல்விக் கூடங்களிலும்- பணித்தலங் களிலும் இவர்களுக்கு இடம் அளித்தாக வேண் டும் என்ற வலியுறுத்தல்... என்ற காட்சி மாற்றங் கள் எளிதில் நிகழ்ந்து விடவில்லை. திருநங் கையர் அமைப்புகளின் இடையறாத முயற்சி கள், இவர்களைப் புரிந்து கொண்டவர்களின் தோழமைக் கரங்கள், போராட்டக் களங்கள், அதில் ஏற்பட்ட காயங்கள் என ஆழமான பின்னணிகள் இருக்கின்றன. எதிர்காலத்தில் திருநங்கையர் சமமாக மதிக்கப்படுவதற்கான இன்றைய ஒரு போராட்டப் படைப்பாக வந்திருப்பதுதான் வானவில் கலைக்குழு வழங்கியுள்ள இந்த நாடகம்.

உள்ளடக்கம், உருவம் இரண்டிலுமே பார் வையாளர்கள் மனம் நிறையும் வண்ணம் இந்த நாடகம் உருவாகியிருக்கிறது. நாடகம் தொடங்கு வதாக அறிவிக்கப்பட்ட உடனேயே தோல் கருவியின் தாளம் ஒவ்வொரு அடியாக ஒலிக் கத் தொடங்கி வேகம் பிடிக்கிறது. அப்போது பார்வையாளர்களிடையே இருந்து கலைஞர் கள் - அனைவரும் திருநங்கையர் - வரிசையாக மேடையில் ஏறி இரண்டு நீள கயிறுகளைக் கட்டுகிறார்கள். அந்தக் கயிறுகளில் துணிகளைத் தொங்கவிடுகிறார்கள், மேடை யைக் குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றி வந்து பின்புலத் திரையை நோக்கி அமர்கிறார்கள். இப்படி மேடை ஏற்பாட்டை நாடகத்தின் தொடக்க அங்கமாகவே ஆக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேடைத் திரையில் ஓசை எதுவுமின்றி சில திரைப்படக் காட்சிகள் ஓடுகின்றன. பாடல் காட்சிகளில் திருநங்கையர்கள் எப்படியெல்லாம் கேலிப் பொரு ளாகக் காட்டப்பட்டார்கள் என்ப தைக் காட்டுகிற காட்சிகள் அவை. ஒருவர் எழுந்து “இதே காட்சிகளை இன்னும் எத்தனை நாள் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்,” என்று கேட்கிறார். “ஏன் பார்த்தால் என்ன,” என்ற பதில் கேள்வி எழுகிறது... அப் படியே நாடகம் வாழ்க்கையின் உண்மை நிலைகள் பற்றிய விமர்சனமாக விரிகிறது.

“அரவாணிகள் கைது,” “ஆண் விபச்சாரிகள்,” “சிறுவனைக் கடத்திய அலிகள்...” இப்படியெல் லாம் ஊடகங்களில் வரும் செய்திகள் நீண்டதொரு துணியில் எழுத்துகளாக எழுதப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட செய்திகளின் பின்னால் மறைக் கப்படும் திருநங்கையரின் உண்மை வாழ்க்கை நிலைமைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அதே துணி கலைஞர்களைச் சுற்றி ஒரு விலங்குபோல பிணைத்துக் கொள்கிறது. திருநங்கையர்களைக் கிண்டல் செய்த பிரபலமான திரைப்படப் பாடல் கள் ஒலிக்க சில கலைஞர்கள் ஆடுகிறார்கள். ஊடகங்களின் திரிக்கப்பட்ட செய்திகள் இவர் களை முன்னேற விடாமல் கட்டிப்போடுவதை உணர்த்துவதாக இந்தக் காட்சி அமைகிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரி இவர்களிடம் வருகிறார். பெயர்களைக் கேட்கிறார். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொண்ட பெண் பெயர்களைச் சொல்ல அவரோ இவர்களை ஆண்களின் வரிசையில் பதிவு செய்கிறார். சட்டத்தில் இவர்களை திருநங்கையர் என்றே குறிப்பிடுவதற்கான ஆணை பிறப்பிக்கப் பட்டதோ, இவர்கள் விரும்பினால் பெண் வரிசையில் பதிவு செய்யலாம் என இருப்பதோ அந்த அலுவலருக்குத் தெரியவில்லை. “நீங்களெல்லாம் இந்தியர்கள்... இந்தியக் குடிமக்கள்” என்று அவர் சொல்ல திருநங்கையர்கள் வெடித்துச் சிரிக் கிறார்கள். “நாங்கள் இந்தியக் குடிமக்கள் என்பது இப்போது மட்டும்தான் உங்களுக்குத் தெரிகிறதா,” என்று அவர்கள் கேட்கிறார்கள். வீட்டில் துவங்கி பொதுவெளி வரையில் தங்களைச் சிறுமைப்படுத் தும் சமுதாயத்தைப் பார்த்து  “நாங்கள் உங்களோடு தான் இருக்க விரும்புகிறோம்... ஆனால் நீங்கள்தானே எங்களை ஒதுக்குகிறீர்கள்,” என்று கேட்காமல் கேட்பதாக அந்தச் சிரிப்பொலி எழுகிறது. மக்களின் மனசாட்சியை அந்தச் சிரிப்பொலி தொட்டுவிட்டது என்பது பார்வையாளர்களிட மிருந்து எழுகிற பலத்த கரவொலியில் எதிரொலிக்கிறது.

ஏப்ரல் 15 திருநங்கையர் தினத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் நடந்த விழாவில் அரங்கேற்றப்பட்ட இந்த நாடகத்தில் பங்கேற்ற அனைவருமே திருநங்கை வாழ்க்கை நிலைமையின் பல்வேறு படிகளில் நிற்பவர்கள். ஒரு வார கால ஒத்திகையில் பிசிறின்றி இந்த நாடகத்தை நடத்தியது அவர்களது ஈடுபாட்டை உணர்த்தியது. விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்பாகக்கூட இவர்களில் சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போலியாக திருட்டுப்பழி சுமத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்கள், தமுஎகச முயற்சியால் ஜாமீனில் வெளிவந்து தொடர்ந்து நாடகத்தில் பங்கேற்றார்கள். உரிமைச் செய்திகளை வெளிப்படுத்துவதற்கு இப்படி எத்தனை தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது.

அப்படித் தாண்டுவதற்கான மன உறுதியை ஏற்படுத்தி, கலைக்குழுவாக செயல்படுவதற்கான ஒருங்கிணைப்பு பொறுப்பை ஏற்றவர் நாடகத்துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்துவரும் இளம் கலைஞர் லிவிங் ஸ்மைல் வித்யா. நாட கத்தை நெறியாள்கை செய்தவர் மொளகாப் பொடி புகழ் ஸ்ரீஜித் சுந்தரம். சித்திரசேனன் தாள இசை நாடகம் முழுவதும் வந்து பேசுகிறது. வின்சென்ட் பால் ஒளியமைப்பும், தமிழரசன் காட்சியமைப்பும் நாடகத்திற்கு எழில் சேர்க்கின்றன.

கோமதி, மானு, தேன்மொழி, திவ்யா, விபாசா, பிரபா, குஷ்பூ, சிந்து, ரசிகா, தேவி ஆகியோரின் ஈடுபாடு மிக்க நடிப்பு மாற்றத்திற்கான நியாய ஆதங்கத்தைப் பிரதிபலித்தது.

மாநிலம் முழுவதும் இந்த நாடகம் கொண்டு செல்லப்பட வேண்டும். அது இந்தக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, “எங்களுக்கு உங்கள் தோள் வேண்டும், தோழமை வேண்டும்” (விழாவின் எழுத்தாளர் பிரியா பாபு சொன்ன சொற்கள்) என்ற திருநங்கையரின் வேண்டு கோளை தமிழ்ச் சமுதாயம் செவிமடுக்கச் செய்வதற்கான முனைப்பாகவும் அமையும்.

(‘தீக்கதிர்’ 29.4.2012 இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளியாகியுள்ள எனது நாடக அறிமுகக் கட்டுரை)

Friday 27 April 2012

“சதம்” அடித்ததற்காக பதவியா?


ச்சின் டெண்டுல்கர் நாட்டின் பெருமைக்குரிய ஒரு விளையாட்டு வீரர்தான். உலக அளவிலான போட்டிகளில் இந்திய அணி திணறிடும்போது சச்சினின் மட்டை கைகொடுக்காதா என்று எதிர்பார்த்து, அது நிறைவேறுவதைக் கண்டு மகிழ்ந்திருக்கிற கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவன்தான் நான். பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நூறாவது நூறு அடித்த அசாதாரண சாதனையை எண்ணி, ஏதோ நானே அதைச் செய்தது போலத் தலையை உயர்த்திக்கொள்கிறவன்தான் நான். 

உலகச் சாதனை செய்த கிரிக்கெட் நட்சத்திரம் என்ற ஒரு பெருமைக்காக அவருக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி... அதை என்னால் ஏற்க முடியவில்லை. நாடாளுமன்றம் மக்களின் பிரச்சனைகளுக்காக, மக்களோடு கலந்து இயங்குகிற, மக்கள் தொண்டர்களும் தலைவர்களும் பங்கேற்க வேண்டிய இடம். மக்களவை உறுப்பினர்களை மக்களே தேர்ந்தெடுக்கிறார்கள், மக்களின் பிரதிநிதிகள் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து சச்சின் எந்த ஒரு மக்கள் பிரச்சனைக்காகவும் குரல் கொடுத்ததில்லை, களம் இறங்கியதில்லை. ஒரு முறை சிவசேனை கட்சியினரின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். மும்பை நகரிலிருந்து பிற மாநிலத்தவர்கள் வெளியேற வேண்டும் என்று சிவ சேனா கூச்சலிட்டுக்கொண்டிருந்தபோது “மும்பை இந்தியர்கள் எல்லோருக்குமே சொந்தம்தான்” என்று கருத்துக் கூறினார் சச்சின். அப்போது சிவ சேனா தலைவர் பால் தாக்கரே தனது பத்திரிகையில் சச்சினைத் தாக்கி எழுதினார். நாடு முழுவதும் சச்சினுக்கு ஆதரவாகக் கைகள் உயர்ந்தன.

அதன் பின், இப்படிப்பட்ட “சர்ச்சைகளில்” இறங்காமல் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துவதில் கவனமாக இருந்தார் சச்சின். அரசியல், சமுதாயம் சார்ந்த கூர்மையான பிரச்சனைகளில் இளைய தலைமுறையினர் பலர் ஆழ்ந்த அக்கறை கொள்ளாமல், அவர்களது சிந்தனைகள் கிரிக்கெட் ஸ்கோர் போர்டுகளோடு சுருக்கப்பட்டதில் அவருக்கும் பங்கு உண்டு.

ஒரு வேளை அவர் ஏதேனும் சமுதாயப் பணிகளையும் செய்து வந்திருக்கிறார் என்றால் சொல்லுங்கள், நான் திருத்திக்கொள்கிறேன். ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை கொடுத்தார், அன்னதானம் செய்தார், மருத்துவ உதவி செய்தார், குடிசைப்பகுதி குழந்தைகளோடு கிரிக்கெட் விளையாடினார் என்பது போன்ற சேவைகளைச் சொல்லாதீர்கள்...

உலக விளையாட்டரங்கில் இந்தியாவின் பெருமிதம் சச்சின் என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. அதற்காக மக்கள் பிரதிநிதிகள் சபையில் இடம் என்பது கொஞ்சமல்ல, ரொம்பவே ஓவர். கோடிக்கணக்கில் அவருக்கு இந்திய அரசு பணம் பரிசளித்திருக்கிறது. இப்போதும் ‘பாரத ரத்னா’ போன்ற நாட்டின் உயரிய விருதுகளை வழங்கி கவுரவிக்கட்டும். குடியரசுத்தலைவர், பிரதமர், எதிர்க்கட்சிகள் என அனைவரும் அவரை நாடாளுமன்றத்திற்கு வரவழைத்துப் பாராட்டிப் பெருமைப்படுத்தட்டும்.

விளையாட்டை விட்டுவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின் அவர் மக்கள் பிரச்சனைகள் பற்றிப் பேசலாம் அலலவா, விளையாட்டுத் துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தலாம் அல்லவா... என்று சிலர் கேட்கலாம். அப்படியெல்லாம் ‘விளையாட’ முடியாது. விளையாட்டை விட்டுவிட்டு, அல்லது விளையாடிக்கொண்டே அப்படிப்பட்ட சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் அவர் வெளிப்படுத்தட்டும். மக்களின் பிரதிநிதியாகவே நாடாளுமன்றத்திற்கு வரட்டும். யார் வேண்டாம் என்கிறது?

சச்சின் மட்டுமல்லாமல் மூத்த திரைப்படக் கலைஞர் ரேகா, தொழிலதிபர் அனு ஆகா ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்படலாம் என்று செய்திகள கூறுகின்றன. இப்படிப்பட்ட கவுரவ நியமனங்களால் நாடாளுமன்றத்தின் கவுரவம் உயர்வதில்லை, மாறாக மக்களுக்காகப் போராடுகிறவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்பதே என் கருத்து. என் சொந்தக் கருத்து.

Monday 23 April 2012

புத்தகக் கொடி பிடிப்பது...
உன்னைச் சுற்றி
வாழ்க்கைப் பக்கங்களை
விரித்து வைத்திருக்கிறது
உலகப் புத்தகம்

எந்தப் புத்தகத்தையும்
பார்க்கவே நேரமில்லை
படிக்க மட்டும்
முடியவா போகிறது?

புத்தகச் சாலையில்
ஒவ்வொரு பயணத்திலும்
எல்லை நீள்கிறது
எனது சாலைக்கு.

நாங்கள் மட்டும்தான்
படிக்கப் படைக்கப்பட்டோம்
நீங்களோ விளக்கு
பிடிக்க வார்க்கப்பட்டீர், என

வாசிப்பு வயலிலும்
வரப்பாய்ச் சுற்றி
மூச்சை நெரித்தது
வர்ண நூல்.

பணத்துக்கு ஏற்ற
படிப்பை எடுத்துக்கொள்ள
கடையில் தொங்கவிட்டது
வர்க்க நூல்.

பிரித்த நூல்களை
அறுத்து மனங்களை
இணைத்து வைக்கிறது
புத்தக நூல்.

இந்த நூலை நாமும்
கையிலெடுக்காமல் இருக்கும் வரை
திரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்
அந்த இரு நூல்களும்.

பழசோ புதுசோ
புத்தகம் ஒன்றை
படித்துக்கொண்டே இரு
அதற்கொரு ஈடுதான் ஏது?

மேசைக் கணினி முதல்
கையில் அடக்கமாய்
பேசும் கணினி வரையில்
புதுசு புதுசாய் வரும் போகும்.

புத்தம் புதிதாய்
அகத்தை ஆக்குவதில்
புத்தகம்  என்றும்
நிலைத்து நிற்கும்.

எவ்வளவு தொலைவில்
எழுதியவர் இருப்பினும்
அவரின் அருகில் என்னை
அமர வைக்கிறது புத்தகம்.

அடுத்த அறையில்
இருப்பவரைக் கூட
அயல் தேசத்தவராய்
தள்ளி வைக்கிறது இணையம்.

எழுதும் கைகளுக்கு இணையம்
ஆதாரமாய்க் கை கொடுக்கும்
வாசிக்கும் கண்களுக்கு இணையம்
கண்ணாடியாய்த்  தெளிய வைக்கும்.

இணையத்தின் சேவைகளை
மறுப்பவர் இங்கே எவரேதான்?
இருப்பினும்  வீட்டில்
செல்வமாய்ச் சேர்வது புத்தகம்தான்.

இறுதியாய் ஒன்று...
புத்தகக் கொடி பிடிப்பது
என் புத்தகத்தை நீ படிக்க அல்ல
உன் புத்தகத்தை நான் படிக்க...

(உலக புத்தக தினத்தை வரவேற்று ஏப்ரல் 23 சனிக்கிழமையன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ‘கவிதை அலைகள்’ நிகழ்வில் வாசித்தளித்த எனது படைப்பு. பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க்ம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின,)

Sunday 22 April 2012

நல்லா கௌப்புறாங்கப்பா... பீதிய...


பொதுவாகவே பீதி ஒரு நல்ல வியாபாரப் பொருள். சமூகத்தில் ஏதாவது ஒரு பீதி கிளம்பிடும்போதெல்லாம் பல தரப்பினரும் பலனடைகிறார்கள்... பீதி வசப் பட்டவர்களைத் தவிர்த்து.

எல்லாக் காலத்திலுமே எங்கிருந்தாவது யாராலாவது ஏதாவது ஒரு பீதி கிளப்பி விடப் பட்டுதான் வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து அப்படிப் பரவிய பீதிகளில் ஒன்று கூட உண்மை நடப்பாக மாறியதில்லை. ஒரு பீதியால் ஏற்பட்ட பரபரப்பும் மனக் கலவரமும் அரவமிழந்து அடங்கி சில காலம் ஆன பிறகு இன்னொரு பீதி வீதிக்கு வந்துவிடும். ரூம் போட்டு யோசித்துக் கிளப்புவார்கள் போலும்.

மதுரை அருகில் திருமங்கலம் நகரில் குடியிருந்து பள்ளிக்கூடம் சென்றுவந்த நாட்களில் திடீரென எல்லா வீடுகளிலும் வாயிற் கூரைகளில் தும்பைப்பூ செடிகளைக் கொத்தாக, பூச்செண்டு போலச் செருகி, அதற்கடியில் கொஞ்சம் குங்குமம் வைத்தார்கள். ஊருக்குள் ‘‘ராக்காச்சி’’ வரப்போவதாகவும், காப்புச் செய்துகொள்ளாத வீடுக ளுக்குள் அவள் புகுந்து அங்கே இருக்கிறவர்களை அறைந்து விடு வாள் என்றும், அறை வாங்கியவர்கள் ரத்தம் கக்கிச் செத்துவிடுவார் கள் என்றும் யாரைக் கேட்டாலும் சொன்னார்கள்.

எங்கள் வீட்டுக்கூரையிலும் தும்பைக் கொத்து செருகப்பட்டிருந்தது. பக்கத்தில் இருந்த ரம்ஜான் கொண்டாடுகிற வீட்டிலோ, எதிர் வரிசையில் இருந்த கிறிஸ்துமஸ் கொண்டாடுகிற வீட்டிலோ எதற்காகத் தும்பைக்கொத்து தேவைப்படவில்லை என்று கேட்கிற புத்தி அப்போது எனக்கு வரவில்லை.

பள்ளியில் கோடை விடுமுறை விட்டதும் நெல்லை மாவட்டத்தில் எங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றோம். அங்கேயும் பல வீடுகளின் கூரைகளில் தும்பைக் கொத்துகள் காய்ந்துபோய்க் காட்சிய ளித்தன. பல ஊர்களிலும் ராக்காச்சி வலம் வந்திருக்கிறாள் என்பதும், தும்பைக்கொத்துகளால் அவள் துரத்தப்பட்டிருக்கிறாள் என்பதும் தெரியவந்தது. தும்பைக் கொத்து வைக்காத வீடுகளில் ஏதாவது வில்லங்கம் நடந்ததா என்பது மட்டும் யாருக்குமே தெரியவரவில்லை.

ராக்காச்சி போன்ற கதைகள் பழைய நம்பிக்கைகள் சார்ந்த “ஓல்டு ஃபேஷன்” பீதிகள். நவீன தொழில்நுட்பம் சார்ந்த “லேட்டஸ்ட் ஃபேஷன்” பீதிகள் அவ்வப்போது இன்பச்சுற்றுலா வருவதுண்டு. விண்வெளியில் சுற்றிவந்த ஒரு செயற்கைக்கோள் தனது சுற்றுப் பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது, அது குறிப்பிட்ட நாளில் பூமியில் ஏதாவது ஒரு இடத்தில் விழும், அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று வரைபடத்தோடு செய்திகள் வந்தன. அவ்வளவுதான் குறிப் பிட்ட நாளில் காலையிலிருந்தே பலரும் வெளியே வராமல் வீட்டிலேயே இருந்துகொண்டார்கள். வீட்டு மேலேயே விழுந்தால் என்ன ஆகும் என்று அவர்கள் யோசித்துப் பார்த்தார்களா தெரியவில்லை.

ராக்காச்சி போல இந்த சேட்டலைட் மதச்சார்புள்ளது அல்ல என்பதால், தங்கள் ஊரை மட்டும் அதன் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு அவரவர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்கள். அது பூமியின் காற்று மண்டலத்தில் நுழைகிறபோது எரிந்துவிடும், எஞ்சிய பகுதி கடலில் விழும், அப்படியே தரையில் விழுந்தாலும் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என்று அறிவியல் இயக்கங் கள் சொன்னது, ஊடகங்கள் மற்றும் பூசை நடத்துவோரின் பரபரப்பு இரைச்சல்களைக் கடந்து மக்கள் காதுகளில் சன்னாகவே ஒலித்தது.

இந்த 2012ம் ஆண்டு தொடங்கியதே உலகளாவிய பீதி வியாபாரத்தோடுதான். மயன் காலண்டர் கணிப்புப் படி இந்த ஆண்டுடன் உலகத்தின் கதை முடியப்போகிறது என்றார்கள். இந்தியக் காலக்கணிப்பின்படி கலியுகம் தொடங்குவதாகவும், தற்போதைய உலகத்தின் அழிவுடன்தான் அது தொடங்கும் என கூறப்பட்டிருப்பதாகவும் காலத்திற்கே ஜாதகம் கணித்தார்கள்.

கலியுகத்தில் மக்கள் அவரவர் கடமையை மறந்து செயல்படுவார்கள், அத்து மீறிச் செயல்படுவார் கள் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அதாவது, மேல் வர்ணத்தவர்க்குத் தொண்டாற்றுகிற நான்காம் வர்ணத்தில் தள்ளப்பட்டவர்களும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டவர்களும் தங்களுக் கென ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலைகளோடு நிற்க மாட்டார்கள், பெண்கள் குடும்ப விளக்குகளாக மட்டும் பணிவிடை செய்துகொண்டிருக்க மாட்டார்கள் என்று பொருள். வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயல்வது, இறைவன் வகுத்த இனிய காலகட்டத்தின் அழிவாம்! இன்று தலித் அமைப்புகள், மாதர் இயக்கங்கள் ஆகியவற்றின் உரிமைக்குரல் உரத்து ஒலிக்கிறது. கலிகாலம் தொடங்கிவிட்டது போலும்! இது ஆதிக்கக் கூட்டங்களுக்கு பீதியைத் தருவதில் வியப்பில்லைதான்.

இன்றைய வலைத்தள யுகத்தில் பீதி உற்பத்தி அமோகமாக நடக்கிறது. நியாயமான அச்ச உணர் வுக்கும், உள்நோக்கமுள்ள பிரச்சாரத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொண்டாக வேண்டியி ருக்கிறது. எங்கேயாவது கடலோரத்தில் ஒரு பூகம்பம் என்று செய்தி வந்தால் போதும், சமூக வலைத் தளங்களில் மின்னல் வேகத்தில் அந்தத் தகவல் பரவுகிறது. கூடவே, அந்த பூகம்பத்தால் சுனாமி வரக்கூடும், சுனாமியால் ஊரே அழியலாம், அணு உலைகள் வெடிக்கும் அபாயம் என்றெல்லாம் பதற்றம்

பற்றவைக்கப்படுகிறது. அண்மையில் இந்தோனேசியா பூகம்பத்தையொட்டி வலைத் தளங்களில் கூடங்குளம் தொடர்பாக அப்படியொரு சுனாமி அலை கிளப்பிவிடப்பட்டது. அறிவிய லாளர்கள் வசைபாடலுக்கு உள்ளானார்கள். பயன்படுத்தப்பட்ட சொற்களில் எதிரொலித்தது சுனாமியால் அணு உலைக்கசிவு ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கவலையா, அப்படி ஏதாவது ஏற்பட் டால் நல்லது - கூடங்குளம் திட்ட ஆதரவாளர்களை வாயை அடக்கலாமே என்ற எதிர்பார்ப்பா என்ற பீதிதான் எனக்கு ஏற்பட்டது.

இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறபோது கூட, “சென்னையில் ரத்தக்காட்டேறியா” என்ற தலைப்புடன் ஒரு மாலைப் பத்திரிகையின் சுவரொட்டி விளம்பரத்தைப் பார்த்தேன். என்கவுன்டர் சாகசங்களைத்தான் அப்படிச் சொல்கிறார்களோ என்ற எண்ணம் எழுந்ததில் பீதி ஏற்பட்டு, எதற்கடா வம்பு என்று அந்த எண்ணத்தை அழித்தேன்.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்றார் வள்ளுவர். நியாயமான பீதிகளும் உண்டு. எங்கே, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் சொதப்பல்களால் பலம்பெற்று மறுபடியும் பாஜக ஆட்சிக்கு வந்துவிடுமோ, அத்வானியோ மோடியோ பிரதமராகிவிடுவார்களோ  என்ற பீதி இரவுத் தூக்கத்தைக் கெடுக்கிறது. இது போன்ற பீதிகள், அப்படிப்பட்ட துயரநிலை வந்துவிடாமல் தடுக்க மக்களிடையே இறங்கி அரசியல் பணியாற்றத் தூண்டுகிறது.

இயற்கைப் பேரிடர்களும் அதைச் சார்ந்த பாதிப்புகளும் எதிர்பாராத தருணத்தில் கொஞ்சமும் ஊகிக்க முடியாத சூழலில்தான் நிகழ்கின்றன. ஆயினும் எந்த ஒரு திடீர் நிலைமையையும் எதிர் கொள்ளும் மனத்திண்மை தேவைதான். அந்த மனத்திண்மை இப்படிப்பட்ட பீதிச் சேவைகளால் வளராது. வெறும் பதற்றம் அறிவியல் கண்ணோட்டத்துடன் உண்மைகளைப் புரிந்து கொள்ள உதவாது.

காலங்காலமாகக் கிளப்பிவிடப்பட்டு வந்துள்ள பீதிகள் சுவையான கதைகளாகவே முடிந்திருக்கின்றன. இனி வரும் காலத்திலேனும் பழைய - புதிய ராக்காச்சிகளால் எவரையும் அச்சுறுத்த இயலாது என்ற அறிவுலகம் கட்டப்பட வேண்டும். அந்த உலகத்தில் பீதிகள் பீதி கொண்டு ஓட்டமெடுக்க வேண்டும்.

Friday 24 February 2012

என்கவுன்டர் வரிசையில் தொடரும் கேள்விகள்


"இப்படி பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் வங்கிகளில் இருந்து கொள்ளையடிக்கிறவர்களை நிற்க வைத்தே சுட வேண்டும்."
"வங்கி ஊழியர்கள் எதிர்க்க முயன்றிருந்தால் அவர்களைக் கொள்ளையர்கள் போட்டுத் தள்ளியிருப்பார்கள். ஆகவே கொள்ளையர்களைப் போட்டுத் தள்ளுவதில் தவறில்லை."
"பீஹாரிலிருந்தும் மற்ற வட மாநிலங்களில் இருந்தும் நிறையப் பேர் வேலைக்காக என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். அவர்கள்தான் திருட்டுகளிலும் கொள்ளைகளிலும் ஈடுபடுகிறார்கள். வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களை இனிமேல் இங்கே வரவிடாமல் தடுத்தால் குற்றங்கள் குறைந்துவிடும்."

-இவையெல்லாம் அண்மையில் நடந்த வங்கிக் கொள்ளைகளையும், இன்னும் துப்புக் கிடைக்கவில்லை என்ற செய்திகளையும் தொடர்ந்து பொதுமக்களில் பலரும் தங்களுக்கிடையே பேசிக்கொண்டபோது வெளியிட்ட கருத்துகள். இப்படிப்பட்ட பேச்சுகளை, பிப்ரவரி 22-23 நள்ளிரவில் சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த குடியிருப்பில் நடந்ததாகக் கூறப்படும் மோதல் நிகழ்வில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்ட நிகழ்வு நியாயப்படுத்துகிறதா?

அந்த வீட்டின் சுவர்களிலோ, வெளிப்புற கம்பிக்கதவுகளிலோ துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த அடையாளமே இல்லையாமே? காவலர்கள் உடைத்ததாகக் கூறப்படும் சன்னல் கதவில் மட்டும் இரண்டே இரண்டு தோட்டா பாய்ந்த அடையாளங்கள், கச்சிதமாக ஒரே உயரத்தில் அமைந்திருக்கின்றனவாமே? காவலர்களை நோக்கிச் சுட்டவர்களும், திருப்பிச் சுட்ட காவலர்களும் அவ்வளவு நேர்த்தியாக, குறிவைத்த ஆட்கள் மீது மட்டுமே சுட முடிந்தது எப்படி?

ஒரே ஒருவரைக்கூட உயிரோடு பிடிக்க முடியவில்லையா? தகவலறிந்து செல்கிற காவலர்கள் ஒரே ஒரு சாட்சியைக் கூட வைத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது ஏன்? கொள்ளைகள் நடந்து இத்தனை நாட்களாகியும் துப்புத்துலக்குவதில் ஒரு முன்னேற்றமும் இல்லை என்ற விமர்சனங்களைத் துடைக்க நடத்தப்பட்ட தாக்குதலே இது என்று சிலர் சொல்வது ஏற்கத்தக்கதுதானா?

நள்ளிரவில்தான் தகவலே கிடைத்து அந்த வீட்டின் முன் காவலர்கள் போய் சூழ்ந்துகொண்டதாக ஆணையர் கூறுகிறார், ஆனால் இரவு 10.30 மணியளவிலேயே காவலர்கள் வந்து இறங்கிவிட்டார்கள், கதவுகளை மூடிவிட்டு வீட்டுக்குள் போக ஆணையிட்டார்கள் என்று அண்டை வீடுகளில் குடியிருப்போர் சொல்வது மறுக்கத்தக்கதுதானா?

இப்படியொரு பெரும்போடாகப் போட்டுவைத்தால்தான், கொள்ளையர்கள் மிரண்டுபோய் சும்மா இருப்பார்கள் அல்லது தமிழகத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்ற நோக்கத்துடன் இது நடத்தப்பட்டிருக்கலாம் என்று சிலர் கூறுவது வெறும் கற்பனைதானா?

யார் என்றே தெரியவராத நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு முதல் நாள் ஊடகங்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் அளித்த பேட்டியில் கொள்ளையர்கள் இந்த இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூற முடிந்தது எப்படி?

கொள்ளையர்களின் கதையை முடிக்க வேண்டும் என்ற, பொதுமக்களில் சிலரது சினிமாக் கதைத்தனமான எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுதான் காவல்துறையின் வேலையா? நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்று குற்றங்களை நிரூபித்துத் தண்டனை பெற்றுத்தருவதில் நம்பிக்கை இழக்கச் செய்கிற வேலையைக் காவல்துறையே செய்யலாமா?
ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் சட்டம் ஒழுங்கு நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்ற விமர்சனங்கள் இதனால் அடங்கிவிடுமா?
காவல்துறையின் செயலின்மை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த நடவடிக்கை எனில், இது காவல்துறையின் செயல்திறன் பற்றிய மரியாதையை ஏற்படுத்துமா?

மக்களின் பணத்தை (இப்படி நேரடியாகவும், அரசின் உரிமங்கள் - ஒப்பந்தங்கள் வழியில் மறைமுகமாகவும்) கொள்ளையடிக்கிற பேர்வழிகள் பரிவுக்கு உரியவர்கள் அல்ல. ஆனால், காவல்துறை என்ன சொல்கிறதோ அதை அப்படியே மக்கள் நம்பிவிட வேண்டும் என்ற நிலைமை ஏற்படுவது சட்டத்தின் ஆட்சி எனப்படுவதற்கு உகந்ததுதானா?

தொடரும் என்கவுன்டர் கொலைகள் போலவே கேள்விகளும் தொடர்கின்றன...

Tuesday 14 February 2012

முண்ணூறு ராமாயணங்களும் மூர்க்கத் தாக்குதல்களும்


தை சொல்வது என்பதைப் பலரும் ஒரு பொழுதுபோக்குக் கலையாக மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மானுட வளர்ச்சியோடு இரண்டறக் கலந்தது கதை. ஆதித்தாத்திகள் தாத்தன்கள் காலத்திலிருந்து, நடந்ததையும் நடக்க வேண்டும் என விரும்பியதையும் கதையாகச் சொல்லிச் சொல்லி வந்ததால்தான் மனித இனம் பரிணாம மரத்தில் ஒரு கிளையாக நின்று விடாமல், வரலாறைப் படைக்கிற சமுதாய வளர்ச்சியை நிலைநாட்டியது. அப்படிக் கதை சொல்லி வந்ததில் ஒரு தலையாய கூறு, சொன்னதையே சொல்லிக்கொண்டிராமல், புதிது புதிதாய் சேர்த்துச் சொல்வதுதான். வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் அன்றைய அரசியல், வாழ்க்கை நிலை, பொது லட்சியம் ஆகியவற்றுக்கு ஏற்ப கதையும் பரிணாம வளர்ச்சியை அடைந்து வந்திருக்கிறது. எனக்கு, பழைய கதையைச் சொல்கிறவர்களைப் பிடிக்கும்; அதிலே புதுசு புதுசாகச் சேர்த்துச் சொல்கிறவர்களை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

கதை சொல்லி முன்னேறிப் பாய்ந்த சமுதாயங்கள் வேகம் எப்போது தேக்கடையைத் தொடங்கின என்றால், பழைய கதைகளை மாற்றக் கூடாது, புதிதாக எதையும் சேர்க்கக்கூடாது என்று விதிக்கப்பட்டபோதுதான். அவ்வாறு விதிக்கப்பட்டதன் பின்னணியில், சமூக நிலைகளில் இனி எந்த மாற்றமும் நிகழக்கூடாது, எல்லாம் அப்படியப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் நோக்கங்களும், மதவாதக் கட்டளைகளும் இருந்தன, இப்போதும் இருக்கின்றன. இந்தியச் சூழலில் இதைப் பார்ப்பதென்றால், சாதிய வேறுபாடு சார்ந்த வர்ணக் கட்டமைப்பையும், பாலினப் பாகுபாடு சார்ந்த அடிமைத்தனத்தையும், இவற்றின் அடித்தளமான பொருளாதாரச் சுரண்டலையும் அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அரசியல் இருந்தது, இருக்கிறது.

இன்று தில்லி பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறை இளங்கலை மாணவர்களுக்கான ஒரு பாட நூலிலிருந்து ஏ.கே. ராமானுஜம் எழுதிய ‘முண்ணூறு ராமாயணங்களும் ஐந்து எடுத்துக்காட்டுகளும் மொழிபெயர்ப்பு குறித்த மூன்று சிந்தனைகளும்‘ என்ற கட்டுரையின் பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. பல்கலைக் கழகப் பாடமுறை மன்றம் (அகடமிக் கவுன்சில்) வாக்கெடுப்பு நடத்தி அந்தக் கட்டுரையை நீக்கியதன் மூலம், கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் கட்டுரையாளரும் மொழியியல் வல்லுநரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான அத்திப்பட்டு கிருஷ்ணசாமி ராமானுஜத்தின் உழைப்புக்கும் வரலாற்றுப் பங்களிப்புக்கும் நினைவாஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது - இழிவான முறையில்.

2006ம் ஆண்டில் அந்தக் கட்டுரை தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து இந்துத்துவக் கூடாரத்தைச் சேர்ந்த ஒரு கும்பலும், பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவுமான அகில் பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபீவிபி) பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைக்குள் புகுந்து வன்முறைகளை அரங்கேற்றியது. அந்தக் கட்டுரை “இந்துக்களின்” மனதைப் “புண்படுத்துகிறது” எனக் கூறி அதை நீக்குவதற்கு வற்புறுத்தியது. பின்னர் தில்லி உயர்நீதிமன்றத்தில் அதை நீக்க ஆணையிடக் கோரி வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல, அதன் ஆணைப்படி நான்கு பேர் கொண்ட வல்லுநர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழு தனது அறிக்கையை அளித்தபோது, மூன்று பேர் அந்தக் கட்டுரை பாடத்திட்டத்தில் தொடரலாம் என்று கருத்துத் தெரிவித்தனர். ஒருவர் அக்கட்டுரை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது என்றும், எனவே அது இளங்கலை மாணவர்களுக்கு ஏற்றதல்ல என்றும் கூறினார். குழுவின் பெரும்பான்மை முடிவுப்படி கட்டுரை தொடர்ந்து இடம்பெறும் சூழல் அமைந்தது.

இந்நிலையில், கடந்த அக்டோபரில் திடீரென பல்கலைக்கழக பாடமுறை மன்றம் கூட்டப்பட்டது. வரலாறு, இலக்கியம், கணிதம், வேதியல், இயற்பியல், மானுடவியல், அரசியல் அறிவியல் என சகல துறைகளையும் சேர்ந்தவர்கள் கொண்ட மன்றம் அது. மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களில் ஆகப் பெரும்பாலோர் அந்தக் கட்டுரையைப் படித்திராதவர்கள். எதற்காகக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்பதே தெரியாமல் வந்தவர்களிடம் கட்டுரை விவகாரம் நீதிமன்றத்திற்கு வந்ததைத் தெரிவித்து, அது தொடரலாமா என்று கேட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒருவர் எழுந்து அது இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்று கூற, அப்படியானால் சிக்கல் வேண்டாம், அதை நீக்கிவிட வேண்டியதுதான் என்று எவ்வித ஆய்வுப்பாங்கும் விவாத மனமும் இல்லாமல் எந்திர கதியாக பெரும்பாலானர்வர்கள் வாக்குப்பதிவு செய்தனர். கட்டுரையைப் படித்து அது தொடர்வதில் தவறில்லை என்று கருதிய, மன்றத்தில் சிறு எண்ணிக்கையில் இருந்தவர்கள் முறைப்படி முழுமையான விவாதம் இல்லாமல் ஓரிரு மணி நேரத்தில் முடிவு எடுக்கப்பட்டதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பல்கலைக் கழகத்திற்கு உள்ளே ஏற்பட்ட ஒரு பிரச்சனை இந்த முடிவினால் வெளியே வந்திருக்கிறது. கல்வியாளர்களும் ஜனநாயகப் பண்பாட்டிற்காக வாதிடுவோரும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் பல்கலைக்கழகப் பாட மன்றத்தின் இந்த முடிவினால் இந்தியாவின் மிக அடிப்படையான தன்மையின் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று தங்களது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பன்முகப் பண்பாட்டுத் தளம் என்பதே அந்த அழகிய அடிப்படைத் தன்மை.

ராமானுஜம் கட்டுரையே அந்தப் பன்முகத் தளத்திலிருந்துதான் தொடங்குகிறது. அதையும் அவர் ஒரு ராமாயணக் கதையிலிருந்தே எடுத்துக் கொடுத்திருக்கிறார்:

வனவாசம், ராவண வதம், சீதையைக் காட்டுக்கு அனுப்பிய வதம் எல்லாம் முடிந்தபின் ஒருநாள் ராமனின் கைவிரல் மோதிரம் தரையில் விழுந்து பூமிக்குள் போய்விடுகிறது. அதை மீட்டு வருவதற்காக, எவ்வளவு சிறிய உருவமும் எடுக்கக்கூடிய அனுமன் மோதிரம் விழுந்த இடத்தில் ஏற்பட்டிருந்த சிறு துளை வழியாக உள்ளே போகிறான். அந்தத் துளை அவனை பாதாள உலகத்திற்கு இட்டுச் செல்கிறது. பாதாள உலகத்தினர் அந்தக் குரங்கைப் பிடித்து, விலங்குக் கறிப் பிரியனான தங்களது மன்னனிடம் ஒப்படைக்கின்றனர். இதனிடையே மேலே ராமனைப் பார்க்க வருகிறார் ராஜரிஷி வசிஷ்டர். ஒரு முக்கியப் பிரச்சனை குறித்துத் தனியாகப் பேச விரும்புவதாகவும், யாரும் குறுக்கே வரக்கூடாது என்றும், அப்படி யார் வந்தாலும் அவரது தலையை வெட்டிவிட வேண்டும் என்றும் வசிஷ்டர் கூறுகிறார். அதை ஏற்று ராமன், தன் தம்பி லட்சுமணனிடம் வாசலில் காவல் இருக்கச் சொல்கிறான். அப்போது அங்கே வரும் விசுவாமித்திரர், தன்னை உள்ளே அனுமதிக்காவிட்டால் நாடே அழிந்துபோகச் சபித்துவிடுவதாக மிரட்டுகிறார். நாட்டிற்காகத் தனது தலை போகட்டும் என்று கருதி அனுமதி பெற உள்ளே செல்கிறான் லட்சுமணன். விசுவாமித்திரர் வந்திருப்பதைக் கூறுகிறான். வசிஷ்டர் தான் சொல்லவந்ததைச் சொல்லி முடித்துவிட்டிருந்ததால், விசுவாமித்திரரை உள்ளே அனுமதிக்கச் சொல்கிறான் ராமன். அவனிடம் லட்சுமணன், “அண்ணா, ஊர்மக்களிடம் உங்கள் நேர்மையை நிரூபிக்க அண்ணியையே தீக்குளிக்க வைத்தவர் நீங்கள். உங்கள் பெருமைக்குக் களங்கம் ஏற்படக் கூடாது. என் தலையை வெட்டுங்கள்,” என்கிறான். “ரகசியப் பேச்சு முடிந்துவிட்டதால் அது தேவையில்லை” என்கிறான் அண்ணன். மனம் பொறுக்காத தம்பி சரயு நதிக்குச் சென்று, வெள்ளத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறான்.
வசிஷ்டரோடு ராமனைச் சந்திக்கும் பிரம்மன், “நீ பூமியில் மனிதனாக அவதாரம் எடுத்த நோக்கம் நிறைவேறிவிட்டது. இனி நீ தேவருலகம் வந்துவிட வேண்டும்,” என்று கூறுகிறான். ராமனும் சரயு நதிக்குச் சென்று, லட்சுமணன் குதித்த இடத்திலேயே தானும் குதித்து மேலுலகம் செல்கிறான்.

அங்கே பாதாள உலகத்து மன்னன், அனுமனிடம் அவன் வந்த காரணத்தைக் கேட்க, அவன் ராமனின் மோதிரத்தைத் தேடி வந்ததைத் தெரிவிக்கிறான். மன்னன் சிரித்துக்கொண்டே ஒரு பெரிய தாம்பாளத்தைக் காட்டுகிறான். அதில் ஏராளமான மோதிரங்கள், அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. திகைக்கும் அனுமனிடம் மன்னன், “இதுவரை எத்தனை ராமன்கள் இருந்தார்களோ அத்தனை மோதிரங்கள் இதிலே இருக்கின்றன. ஒவ்வொரு ராமனும் மரணத்தைத் தழுவுவதற்கு முன்பாகத் தனது மோதிரத்தைக் கழற்றிப் போட்டுவிடுகிறான். அவற்றை எல்லாம் நான் சேகரித்து வைத்திருக்கிறேன்,” என்று கூறுகிறான். அனுமன் தனது ராமனின் கதையும் முடிந்துவிட்டதை உணர்ந்தவனாகத் திரும்புகிறான்...

தென்னிந்திய மொழிகளில் புழங்கும் ராமாயணங்கள் ஒன்றிலிருந்து ராமானுஜம் மேற்கோள் காட்டுகிற இந்தக் கதை எவ்வளவு அழகாக, இன்று பெரிதும் பேசப்படும் ‘மேஜிக்கல் ரியலிசம்’ வடிவத்தில், ஏகப்பட்ட ராமன் கதைகள் இருக்கின்றன என்பதைக் கூறுகிறது! வால்மீகி சமஸ்கிருதத்தில் எழுதியது மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் அனைத்திலுமே ராமாயணம் என்றும் ராம கதை என்றும் ராமன் - ராவணன் - சீதை - லட்சுமணன் - பரதன் - லவன் - குசன் கதைகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனம், கம்போடியம், ஜாவானீ, லாவோஸீ, சிங்களம், தாய், மலாய், திபெத் என வேறு பல நாடுகளின் மொழிகளிலும் இக்கதைகள் புழங்குகின்றன. ஏடுகளில் எழுதப்பட்டவை மட்டுமல்லாமல் வாய்மொழிக் கதைகளாகவும், நாடகங்களாகவும், சுவரோவியங்களாகவும், பாறைச் சிற்பங்களாகவும் இக்கதைகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன. பக்தி வளர்க்கும் புராணங்களாக மட்டுமல்லாமல், ரசனை வளர்க்கும் இலக்கியப் படைப்புகளாகவும் அவை தழைத்திருக்கின்றன. இந்து மதத்தோடு நிற்காமல் சமணம், புத்தம் ஆகிய மதங்களிலும் ராம கதை சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த உண்மையைத்தான் ராமானுஜம் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு கல்விச் சாலையின் வரலாற்று மாணவர்கள் இத்தனை வகைப்பாடுகள் இருப்பதைத் தெரிந்துகொள்வது எவ்வகையில் குறிப்பிட்ட மதத்தினரின் மனதைப் புண்படுத்திவிடும்? ஒரே வகையான ராமாயணத்தை மட்டுமே எல்லோரும் படிக்க வேண்டுமா?

ஏபீவிபி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளே கூட நிறைய ராமாயணங்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதில்லை. ஆனாலும் அவர்கள் ராமானுஜத்தின் கட்டுரை கண்டு முகம் இறுகியது ஏன்?

“இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது,” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் கே.என். பணிக்கர். என்ன அரசியல்? ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அரசியல் அல்ல. அதற்கெல்லாம் அடிப்படையான ஆழமான, அரசு என்பதே அடக்குமுறைக் கருவிதான் என்பதான அரசியல் அது. நாட்டை ஆளுகிற கோட்பாடாக இந்துத்துவம் இருக்க வேண்டும், அதிகார மதமாக இந்து மதம் இருக்க வேண்டும் என்ற அரசியல். இந்து மதம் என்றால், அதன் அடிக்கட்டுமானமான சாதியப் பாகுபாட்டைக் கட்டிக்காக்கிற அரசியல். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை நிராகரிக்கிற அரசியல்.

ராமானுஜம் எடுத்துக்காட்டியிருப்பது போல், முண்ணூறுக்கு மேற்பட்ட ராமாயணங்கள் வெவ்வேறு வடிவங்களில் இருப்பது மட்டுமல்ல, அவற்றின் உள்ளடக்கங்களும் மாறுபட்டிருக்கின்றன. ராமன் தெய்வப்பிறவியல்ல, நற்குணங்களும் தீய சிந்தனைகளும் கொண்டிருந்த சராசரி மனிதப் பிறவிதான் என்று பல கதைகள் காட்டுகின்றன. ராமனுக்குக் கீழ்ப்படிந்தவளாக மட்டுமல்லாமல், அவனோடு வாதிடுகிற சீதையைக் காட்டுகின்றன. அப்படியொரு கதையில், காட்டுக்கு அழைத்துச் செல்ல மறுக்கும் ராமனிடம் சீதை முதலில் கெஞ்சுகிறாள். பின்னர், “நீ கேட்ட ராமாயணங்கள் எதிலாவது ராமன் சீதையை விட்டுவிட்டுச் செல்கிறானா,” என்று மடக்குகிறாள்!

சில கதைகள் ராவணனைக் கதாநாயகனாக்கியுள்ளன. மக்களின் மதிப்பைப் பெற்ற அரசனான அவன், கட்டுப்பாடு இழந்து தனக்குச் சொந்தமல்லாத ஒரு பெண் மீது மோகம் கொண்டதால் அழிந்தான் என்று தாய்லாந்துக் கதைகள் சித்தரிக்கின்றன. அந்தக் கதைகளில் ராமன் பாதிக்கட்டத்தில்தான் வருவான்!

மாறுபடுகிற கதைகளில் உறவுகளும் கூட மாறுகின்றன. சில வட்டாரங்களின் கதைகளில் ராவணனின் மகளாக சீதை சித்தரிக்கப்படுகிறாள். ஒரு நாட்டுப்புறக் கதையில், பிள்ளைச் செல்வம் இல்லாத ராவணன், தவமிருந்து சிவபெருமானிடம் இருந்து பெறுகிற மாங்கனியின் சதைப் பகுதியை மனைவி மண்டோதரியிடம் தராமல், நாவடக்க முடியாதவனாகத் தானே விழுங்குகிறான். அவனுக்குக் கரு உண்டாகி, அவனது மூக்கின் வழியாக சீதை பிறக்கிறாள். அவளைக் கானகத்தில் கொண்டுபோய் விட்டுவிட, அங்கே வேட்டைக்கு வரும் ஜனகன் குழந்தையை வளர்க்கிறான். தன் மகள்தான் என்பது தெரியாமலே அவளை ராமனிடமிருந்து கடத்துகிறான் ராவணன்.
வேறு சில கதைகளில் ராமனும் சீதையும் அண்ணன், தங்கையாக வருகிறார்கள். ஒரு கதையில் அண்ணனும் தங்கையும் அரசாட்சியை சமமாகப் பகிர்ந்து மேற்கொண்டதாகக்கூட சொல்லப்படுகிறது.

சமணத்தில் இக்கதைகளைச் சொன்னபோது, “எதற்காக ராவணனைக் கெட்டவனாகவும் கொடிய அரக்கனாகவும் இந்த பிராமணர்கள் சித்தரிக்கிறார்கள்,” என்ற கேள்வியோடுதான் தொடங்கினார்கள். சமணப் புலவர் விமலாசுரி தனது காப்பியத்தை ‘பிரதிபுராணா’ என்றே குறிப்பிட்டார். பிரதி என்றால் எதிர் என்று பொருள். அன்றைய பிராமணியவாதிகள் சொன்ன புராணத்துக்கு மாறாக அவர் தன்னுடைய படைப்பை “எதிர்ப்புராணம்” என்று பதிவு செய்தார்.

ஆக, இன்றைய மறுவாசிப்பு முயற்சிகளுக்கு அன்றே தொடக்கப்புள்ளி வைக்கப்ட்டது என்பதை அறிய முடிகிறது. இவையெல்லாம் ராமனை நிறை குறையுள்ள மனிதர்களில் ஒருவனாக அடையாளப்படுத்துகின்றன.
வால்மீகியும் கூட தனது படைப்பை அப்படியொரு மனிதப் பிறவியாகவே சித்தரிக்க, அந்தக் கதையை தமிழுக்குக் கொண்டுவந்த கம்பன், முழுக்க முழுக்க அப்பழுக்கற்ற பிறவியாக, தெய்வத்தின் அவதாரமாக ராமனை உருவகப்படுத்தினார் என்பதையும் ராமானுஜம் பதிவு செய்திருக்கிறார். மாற்றுச் சமய இயக்கங்களுக்கு எதிரான பக்தி இயக்க இலக்கியங்களுள் ஒன்றாக கம்ப ராமாயணம் உருவானதில், அன்றைய சோழ ஆட்சி அரசியல் இருந்தது அல்லவா? சூத்திரச் சம்புகன் வேதம் படிக்க முயன்ற போது பிராமண வசிஷ்டரின் ஆணைப்படி அவனுடைய தலையை வெட்டியெறிந்த சத்திரிய ராமனைத் தமிழில் கொண்டுவராமல், ராமன் முடிசூடிக்கொண்டதோடு தன் காவியத்தை முடித்ததுக்கொண்டாரல்லவா கம்பன்?

ராமன் பெயரால் நிறுவுவதற்கு இந்துத்துவ சக்திகள் முயல்கிற இந்த நுட்பமான அரசியலைப் புரிந்துகொள்ள ராமானுஜம் கட்டுரை உதவுகிறது. அவர் நேரடியாகத் தனது கட்டுரையில் எங்கேயும் இந்த அரசியல் விவாதத்தை முன்வைக்கவில்லை. ஆனால் உள்ளது உள்ளபடி அவர் எடுத்துரைக்கிறபோது, அது உண்மைகளை மறைத்தாக வேண்டிய ஆதிக்க அரசியலுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. ஆகவேதான் பல்கலைக்கழகத்திற்குள் இந்த பாசிசம். எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக்கூடாது என்று வேலி போடுகிற பார்ப்பணியம். சமுதாயத்தைச் சிந்திக்க விடாமல், அடுத்த கட்ட மாற்றத்திற்குச் செல்லவிடாமல் தடுக்கிற பழமைவாதம்.

இந்து மதக் கட்டமைப்புக்குள் ராமனை ஒரு முழு தெய்வமாகச் சித்தரிப்பதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. மத நம்பிக்கையாளர்கள் அதைத் தங்களது ஆலயங்களில், கதாகாலட்சேபங்களில், திருவிழாக்களில் திரும்பத்திரும்பச் சொல்வதற்கும் தடையில்லை. ஆனால், பல்வேறு ஆய்வுக் கண்ணோட்டத்துடன் பல்வேறு கோணங்களையும் கற்றறிய வேண்டியவர்களை உருவாக்குகிற ஒரு கல்விச் சாலையில் அதற்கான ஒரு கட்டுரையைத் தடுப்பது, மதவெறியர்கள் செய்திடும் மனிதப் படுகொலைகளுக்குச் சமமான தாக்குதல்தான்.

“அறிவு என்பதே அடுத்தடுத்து கேள்விகளுக்கு உட்பட்டதுதான். அதுதான் அறிவின் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்,” என்று வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் கூறுவது எவ்வளவு உண்மை. அந்த உண்மையைத்தான் மதவெறி தலைக்கேறியவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் - அறிவு வளர்ச்சியை ஏற்க மறுப்பதால்.

வரலாறு நெடுக அடக்குமுறையாளர்களும் ஆதிக்கவாதிகளும் இப்படிப்பட்ட தடைக்கற்களைப் போட்டு வந்திருக்கின்றனர். அந்தக் கற்களின் இடுக்குகள் வழியாகவும், உடைத்துக்கொண்டும் புதிய கதைகள் நேற்று வரையில் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. இன்றும் சொல்லப்படுகிறது. நாளையும் சொல்லப்படும். மானுடம் வாழும்... வளரும், எவன் தடுப்பது?

(‘கிழக்கு பதிப்பகம்’ தொடங்கியுள்ள ‘ஆழம்’ என்ற புதிய பத்திரிகையின் மாதிரி இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை இது.)