Wednesday 26 May 2010

ரசியாவில் கம்யூனிசம் தோற்றது ஏன்? (கம்யூனிசம் என்றால் - 2)

மருத்துவரின் குற்றமா அல்லது

மருத்துவத்தின் குற்றமா?

வரலாற்றுக்குள் நுழையாமல் நேரடியாகவே கேள்விகளை இனி அணுகலாம்.
முதல் கேள்வி: ரசியாவில் கம்யூனிசம் தோற்றது ஏன்?

ரசியாவில் சோதனை செய்து பார்க்கப்பட்டது கம்யூனிசம் அல்ல. கம்யூனிசம் அல்லது பொதுவுடைமை சமுதாயம் என்பது உருவாவதற்கு பல ஆண்டுகள் ஆகும். ரசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது ஒரு சமூகவுடைமை (சோசலிசம்) அமைப்புக்கான ஒரு முன்மாதிரி (மாடல்) அமைப்புதான். உலகில் வேறு எங்கும் அதற்கான வெற்றிகரமான முன்மாதிரிகள் இல்லாத நிலையில், ரசியாவில் நடந்த மாபெரும் புரட்சியின் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, புரட்சிக்காக இணைந்த பல்வேறு அரசியல் பிரிவுகளின் ஒற்றுமையையும் மக்கள் ஒருமைப்பாட்டையும் பயன்படுத்திக்கொண்டு, கம்யூனிஸ்ட் கட்சி அந்த சோசலிச மாடலை செயல்படுத்தியது.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் அரசுடைமை, பொதுவுடைமை என்பதைப் புரிந்துகொள்வது போல் பொதுமக்கள் புரிந்துகொள்ள இயலாதுதான். ஆகவே, அன்று லெனின் அரசு நிர்வாகத்துக்கு முன்வைத்த கோட்பாடு புதிய பொருளாதாரக் கொள்கை என்பதே. அதாவது, அந்தக் கோட்பாட்டில் முழுக்க முழுக்க அரசுடைமை என்பது இருக்காது. அடிப்படையான பெருந்தொழில்கள் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்; மற்ற தொழில்களில் தனியார் அனுமதிக்கப்படுவார்கள்.

இதன் மூலம் அந்தத் தனியாரின் செயல்திறன், அவர்களது உற்பத்தி ஆற்றல், அவர்களது நிர்வாக வல்லமை ஆகியவற்றின் பலன்கள் புதிய சோசலிச அமைப்புக்குக் கிடைக்கும். அதே நேரத்தில் அரசின் கண்காணிப்பு என்பதும் இருக்கும். தனியாரின் லாபம் வரம்புமீறாமல் இருப்பது உறுதிப்படுத்தப்படும். தொழிலாளர்களை முதலாளிகள் நினைத்தால் நியமிக்கலாம், நினைத்தால் வீட்டுக்கு அனுப்பலாம் என்பது நடக்காது. கல்வி, மருத்துவம், பாதுகாப்பு, நிதி நிர்வாகம், அடிப்படைத்தேவைகளுக்கான பொதுவிநியோகம் போன்றவை அரசின் பொறுப்பாக இருக்கும்.

விவசாயத்தைப் பொறுத்தவரையில் விவசாயிகள் தாங்களாக முன்வந்து கூட்டுப்பண்ணை முறையில் இணையலாம்; தங்களது நிலத்தில் தாங்களே சொந்தமாக விவசாயம் செய்ய விரும்புகிறவர்கள் அப்படியே செய்யலாம்.

இப்படித்தான் லெனின் தொடங்கிய புதிய பொருளாதாரக் கொள்கை இருந்தது. தனி நிலத்தில் விவசாயம் செய்தவர்கள் பின்னர் கூட்டுப்பண்ணை முறையில் ஒவ்வொரு தனி விவசாயிக்கும் கூடுதல் வருமானம் கிடைப்பதைப் பார்த்து தாங்களும் கூட்டுப்பண்ணையில் இணைந்தார்கள்.

இன்னொரு பக்கம் சோசலிச அமைப்பின் எதிரிகள் (முந்தைய மன்னராட்சியில் அமோகமாகக் கொள்ளையடித்தவர்கள்) அதற்கு எதிரான பிரச்சாரத்தையும் அப்போதே தொடங்கிவிட்டார்கள்.

படிப்படியாக முழுமையான சோசலிசத்துக்குப் போவதே லெனின் உள்ளிட்ட அன்றைய சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் கணக்கு. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு வந்த தலைவர்கள் (மேல்மட்டத் தலைவர்கள் முதல் உள்ளூர் கிளைமட்டத் தலைவர்கள் வரையில்) ஒரு அதீதமான, தவறான புரிதலுக்குப் போனார்கள். அதிரடியாக அனைத்தையும் அரசுடைமையாக்கினார்கள். சோசலிசத்தின் மேன்மை பற்றிய சிந்தனைகள் மக்களிடையே முற்றிலுமாக வேரூன்றாத நிலையில் இந்த அதிரடி அரசுடைமை நடவடிக்கைகள் மனக்கசப்புக்கு இட்டுச் சென்றது. இன்னொரு பக்கம், அந்தந்தத்ததொழில் சார்ந்தோரிடையே ஒரு அலட்சியப்போக்கிற்கு இட்டுச் சென்றது. (இந்தியாவிலும் பொதுத்துறை ஊழியர்கள் பலரிடையே இப்படிப்பட்ட அலட்சியப்போக்கைப் பார்க்கிறோம் அல்லவா? பொதுத்துறையே வீண் என்ற மனப்போக்கு வளரவும், தனியார்மயமானால்தான் எல்லாம் சரியாகும் என்ற வாதம் ஒலிப்பதற்கும் இது காரணமாகிறது அல்லவா? அதைப்போன்றதுதான் இது. )

பின்னொரு எதிர்காலத்தில் உருவாக வேண்டிய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதைக் கொச்சையாகப் புரிந்துகொண்டவர்களாக, எங்கும் எதிலும் அரசின் கட்டுப்பாடு என்றாக்கினார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகாரம்தான் என்பதாக, பின்னர் அது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு சர்வாதிகாரமாக, பின்னர் தனியொரு தலைவரின் சர்வாதிகாரமாக மாறியது. ஒரு தொழிற்சாலையின் குறிப்பிட்ட உற்பத்திப்பொருளின் தரம் எப்படி இருக்க வேண்டும், அதற்கான தொழில்நுட்பம் என்னவாக இருக்க வேண்டும் என்பதைக்கூட அந்தத் தொழிற்சாலையின் கட்சிக்குழு தலைமைதான் முடிவு செய்யும் என்கிற அளவுக்குப் போனார்கள்.

மாற்றுக்கருத்துக்கள் ஒலிப்பதற்கு இடமளிக்காத போக்கு கெட்டிப்பட்டது.

இந்த நடவடிக்கைகளின் நோக்கம் உயர்ந்தது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்கிற உன்னத நோக்கம் அது. ஆனால், அதற்கான வழிமுறை சொதப்பலாகிவிட்டது. அந்த சொதப்பல் சோசலிச அமைப்பின் மீதே மக்களுக்கு அதிருப்தி ஏற்படச் செய்தது. வறுமை ஒழிந்தது, பட்டினி பழங்கதையானது, எல்லோரும் குடியிருப்பதற்கு வீடு கிடைத்தது. கல்வி கிடைத்தது. மருத்துவம் கிடைத்தது. ஆனால், நவீன முன்னேற்றங்கள் பல வந்துசேரவில்லை. தயாரிப்புத் தரம் மிகவும் தாழ்ந்திருந்தது. மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான மேடை மறுக்கப்பட்டது. எதிரிகள் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்ற எச்சரிக்கைதான் அதற்குக் காரணம். ஆனாலும், மக்களின் மாற்றுக் கருத்துக்களைக் கேட்காத ஆட்சி மக்களிடமிருந்து தனிமைப்படவே செய்யும். மக்களின் இந்தக் குமுறல் நெருப்புக் கங்கை, அமெரிக்க அரசின் உதவியோடு எதிரிகள் ஊதிவிட்டுக்கொண்டே இருந்தார்கள்.

தவறு நடந்துவிட்டதைப் புரிந்துகொண்டு சரிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் கோர்பச்சேவ் காலத்தில் தொடங்கின. ஆனால், மாற்றுக் கருத்துக்களை அனுமதிப்பது என்ற பெயரால் எதிரிகளின் பிரச்சாரங்கள் மட்டுமே முன்வந்தன. மூட நம்பிக்கைக் கருத்துக்கள் கூட பரவுவதற்கு இடமளிக்கப்பட்டது. அரசுத்தரப்பிலிருந்தோ, கட்சியின் தரப்பிலிருந்தோ எதிர்வாதங்கள் செயலூக்கத்துடன் வைக்கப்படவில்லை.

பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அரசின் கட்டுப்பாடுகள் ஒரேயடியாகக் கைவிடப்பட்டன...

அமெரிக்க ஒத்துழைப்புடன் சோவியத் யூனியன் நாட்டிற்கு உள்ளேயும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயும் செயல்பட்டுக்கொண்டிருந்த யெல்ட்சின் போன்றவர்கள் இந்தச் சூழலையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். மிச்சம் மீதியிருந்த சோசலிசப் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒழித்துக்கட்டினார்கள். ஒட்டுமொத்த விளைவாக, ரசியாவிலிருந்து அகற்றப்பட்ட வறுமை, பட்டினி, வேலையின்மை, வறுமையை ஈடுகட்ட பாலியல் தொழில், திருட்டு, லஞ்சம் போன்ற எல்லா விதமான தொற்று நோய்களும் மறுபடியும் அந்த மக்களைத் தொற்றிக்கொண்டன.

இன்னும் விரிவாக விளக்க வேண்டிய வரலாறு இது. ஆனால் இடமும் காலமும் கருதி சுருக்க வேண்டியிருக்கிறது. ஸ்டாலின் போன்றோரின் தலைமையில் சோசலிச அரசு ஒன்று ரசியாவில் இருந்தது என்கிற பலத்தினால்தான் உலக யுத்தத்தில் உலக ஆக்கிரமிப்பு சக்திகள் பின்வாங்கின. இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விடுதலைப்போராட்டம் வெற்றியடைந்ததற்கு சோசலிச சோவியத் யூனியன் ஒரு ஈர்ப்பாக அமைந்தது. அடிமைப்படுத்திய நாடுகளிலிருந்து காலனியாதிக்கவாதிகள் வெளியேறவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய காரணியாக சோவியத் யூனியன் திகழ்ந்தது. சீனா, கியூபா, வியட்நாம், வடகொரியா உள்ளிட்ட 15 சோசலிச அரசு அமைப்பு கொண்ட நாடுகள் மலர்ந்தன. இப்படிப்பட்ட பல ஆக்கப்பூர்வ நிகழ்வுகளை மறந்துவிட்டு உலக வரலாற்றை யாராலும் எழுத முடியாது. ஆயினும், ரசியாவில் கம்யூனிசம் தோற்றது ஏன் என்ற கேள்விக்கான விடையாக மட்டும் விரித்துச்சொல்ல முயன்றதால் இந்த ஆக்கப்பூர்வக் கூறுகளை சுருக்கிச் சொல்லவேண்டியதாயிற்று.

அரசுடைமை என்றாலே பேதிமாத்திரை சாப்பிட்டவர்களாக மாறிவிடும் சுரண்டல் பேர்வழிகள், அவர்களை ஊக்குவிக்கும் வெளிநாட்டு அதிகாரக்கும்பல்கள் ஆகியோரின் கூட்டுச் சதி ஒரு முக்கியமான வெளிக்காரணம். கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறைகளில் இருந்த மேற்கூறிய குறைபாடுகள் முக்கியமான உட்காரணம். இந்த இரண்டும் சேர்ந்துதான், ரசியாவில் முன்மாதிரி என்பது இல்லாமல் தொடங்கப்பட்ட சோசலிசப் பரிசோதனை தோல்வியடைந்தது.

இது சம்பந்தப்பட்ட மனிதர்களின் தவறுதான். சம்பந்தப்பட்ட தலைவர்களின் தவறுதான். கம்யூனிசம் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் கட்சிக்கு வெளியேதான் இருப்பார்கள் என்பதில்லை. உள்ளேயும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களின் தவறால் ஏற்படும் தோல்வி கம்யூனிசத்தின் தோல்வி அல்ல. சொல்லப்போனால் கம்யூனிசக் கோட்பாடுகளை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளக் கட்டாயப்படுத்துகிற உலகளாவிய வரலாற்று அத்தியாயம் அது.

காய்ச்சலில் விழுந்த ஒரு நோயாளிக்கு மருத்துவர் வயிற்று வலி மருந்து கொடுக்கும்போது, அந்த நோயாளியின் நிலைமை படுமோசமாகிவிடுகிறது. இது அந்த மருத்துவரின் குற்றமா அல்லது மருத்துவத்தின் குற்றமா? இதற்கான பதில்தான் ரசியாவில் கம்யூனிசம் தோற்றது ஏன் என்ற கேள்விக்கான பதிலும். கம்யூனிசம் கடைப்பிடிக்கப்பட்டதால் ஏற்பட்ட தோல்வி அல்ல, கம்யூனிசம் சரியாகக் கடைப்பிடிக்கப்படாததால் ஏற்பட்ட தோல்வி அது. முழுமையான வெற்றியை எப்படி உறுதிப்படுத்துவது என்ற பாடத்தைக் கற்றுத் தரும் தோல்வி அது.

ஒன்றை நன்றாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ரசியாவில் செயல்படுத்திப்பார்க்கப்பட்டது கம்யூனிச ஆட்சி அல்ல; சோசலிச ஆட்சிதான். உலகில் சமத்துவ சமுதாயம் காணப் பாடுபடுகிறவர்களுக்கெல்லாம்ஊக்கமளிக்கிற, ஒரு ஈர்ப்பு சக்தியாய் அமைந்த ஆட்சி அது.

அடுத்தடுத்த கேள்விகளுக்கு அடுத்தடுத்த பதிவுகளில் விடை தேடலாம்.

Wednesday 19 May 2010

கம்யூனிசம் என்றால்...


வரலாற்றின் அடுத்த கட்ட தேவை

மனித நேயம், அழகுணர்ச்சி, நட்பு, சமுதாயத்தின் மீது பாசம், கலைத்தாகம், இலக்கிய மோகம், சாதி-மத-இன-மொழி வேலிகளற்ற காதல், கடவுள் கோட்பாடுகளுக்குள் சிக்காத அறிவியல் கண்ணோட்டம், பட்டினியில்லா வாழ்வு, அடுத்தவர் உரிமையை மீறாத சுதந்திரம், ஒருவர் உழைப்பை இன்னொருவர் சுரண்டாத சமுதாய அமைப்பு... இந்த முற்போக்கான கூறுகள் அனைத்தும் இணைந்ததே கம்யூனிசம். இது ஏதோ மார்க்ஸ் என்கிற தனி மனிதர் உருவாக்கிப் பரப்பிய கோட்பாடு அல்ல. மனிதர்கள் இயற்கையாய் இப்படித்தான் பரிணமித்தார்கள், வாழ்ந்துவந்தார்கள். நம் ஆதித்தாத்திகளும் தாத்தன்களும் சமத்துவத்துவத்துடன் வாழ்ந்தார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லை, பாலினப் பாகுபாடு இல்லை, இனப் பகைமை இல்லை, தேசங்களின் பெயரால் மோதல் இல்லையென வாழ்ந்தார்கள்.

இப்படி இருந்த அந்த ஆதிப்பொதுவுடைமைச் சமுதாயத்தில் பின்னர் நிலம் என்பது ஒரு சொத்தாக உருவான பிறகு அதைக் கைப்பற்றுவதற்கான சண்டையில் தொடங்கியது. நிலத்திலும், நிலத்தைக் கைப்பற்றியவர்களின் வீட்டிலும் வேலை செய்வதற்காக மக்களில் ஒரு பகுதியினர் அடிமைப்படுத்தப்பட்டார்கள். பெரும் பரப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப வாழ்க்கை முறைகள் உருவாக்கப்பட்டு, அன்றைய சமூக அமைப்பைக் கட்டிக்காப்பதற்கான அரசாங்க அமைப்பாக பரம்பரை மன்னராட்சி தொடங்கியது.

அந்தப் பண்ணைச் சமுதாய அமைப்பின் நியாயங்களை எல்லோரும் ஏற்கச் செய்வதற்காகவும், கட்டுப்பட்டு இருக்கச் செய்வதற்காகவும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அதையொட்டியே, இயற்கையின் புதிர்களைப் புரிந்துகொள்ள இயலாத மக்களின் அச்சங்களை அடிப்படையாக வைத்து மதங்களும் மதச் சடங்குகளும் ஏற்படுத்தப்பட்டன. நிலத்தை ஆக்கிரமிக்க நடந்த சில உண்மையான சண்டைகளை அடிப்படையாக வைத்து கற்பனையான சாகசங்களைக் கலந்து புராணக்கதைகள் புனையப்பட்டன.

முந்தைய அடிமைச்சமுதாயத்தை விட இது முன்னேறிய சமுதாயமாக இருந்தது. ஆனால் இது மக்களுக்கு முழு விடுதலை அளிக்கவில்லை.
அறிவியல் கண்டுபிடிப்புகளின் துணையோடு தொழில்களும் தொழிற்சாலைகளும் உருவானபோது, அவற்றைத் தொடங்கி நடத்துவதற்கு செல்வ பலம் வைத்திருந்தவர்கள் முதலாளிகளானாகள். அவர்களுடைய எந்திரங்களை இயக்குகிறவர்கள் தொழிலாளர்களானார்கள்

இந்தப் புதிய அமைப்புக்கு முந்தைய நிலவுடைமைச் சமுதாயமும் அதைப் பாதுகாக்கும் மன்னராட்சி அரசியலும் முட்டுக்கட்டையாக இருந்தன. எனவே, நிலப்பண்ணையார்களிடமும் மன்னர்களிடமும் அடிமைப்பட்டிருந்த தொழிலாளர்களை மீட்பதற்கான சுதந்திரம், ஜனநாயகம் என்ற முழக்கங்களோடு அரசியல் இயக்கங்கள் தோன்றின. முதலாளித்துவ சமுதாய அமைப்பு பரிணமித்தது. முதலீடு போட முடிகிற ஒருவர் தொழிற்சாலையைத் தொடங்கி அதிலே பலரைத் தொழிலாளர்களாக வைத்துக்கொண்டு வேலை வாங்க முடியும் என்பதே முதலாளித்துவம்.

இதுவும் முழுமையான சமுதாய விடுதலையை அளிக்கவில்லை. இதிலே நேரடியான அடிமைத்தனம் இல்லை என்றாலும் கூலி அடிமைத்தனம் என்பது இருக்கிறது. எவ்வளவு பெரிய அறிவாளியானாலும், உடல் ஆற்றல் மிக்கவரானாலும் முதலீட்டாளரின் (முதலாளியின்) விருப்பப்படியே செயல்பட்டாக வேண்டும். முதலாளிகளோ ஒரு புதிய எந்திரம் வாங்குவது முதல் தொழிலாளிக்கு குடியிருப்பு கட்டித்தருவது வரையில் ஒவ்வொன்றையும் லாப நோக்கத்தோடுதான் செய்கிறார்கள். இந்த லாப நோக்கம் என்பது தனி மனித பேராசையிலிருந்து வருவதல்ல. லாபம் என்ற விளைவு இல்லாமல் முதலாளித்துவம் என்ற அமைப்பே செயல்பட முடியாது.

தெருவோரத்தில் இட்லிக்கடை போட்டால் கூட, எல்லா அடக்கச் செலவுகளும் சேர்ந்து ஒரு இட்லிக்கு ஒரு ரூபாய் செலவாகிறது என்றால் அதை அதே ஒரு ரூபாய்க்கு விற்றால் மறுநாள் கடை நடத்த முடியாது. லாபம் இருக்க வேண்டும். இதே லாபத்தை தொழிலாளிகளை ஏமாற்றும் அநியாயமான வழிமுறைகள், அடுத்த நிறுவனத்தை அழிக்கிற உத்திகள், அதற்கு அரசாங்க அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் சதிகள் என்று ஈட்டுகிறபோது அது கொள்ளை லாபமாக மாறுகிறது.

இந்த லாப வேட்டை நாடுகளின் எல்லைகளைத் தாண்டி நடக்கிறபோது அது பன்னாட்டுச் சந்தையாகிறது. அந்தச் சந்தையில் ஏகபோகமாக நாட்டாமை செலுத்துகிற வெறிதான் போர்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. முன்பு நிலத்தைக் கைப்பற்றுவதற்காக மன்னர்களிடையே போர்கள் நடந்தன. இன்று சந்தையைக் கைப்பற்றுவதற்காக முதலாளிகளிடையே போர்கள் நடக்கின்றன. முதலாளிகள் நேரடியாகப் போர்க்களம் வரமாட்டார்கள். இந்த அமைப்பைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அரசாங்கங்கள் தங்களது ராணுவங்கள் மூலம் அவற்றின் ராணுவங்கள் போர்களை நடத்தும். அந்தப் போர்களுக்கு ஏதாவது பெயர் சூட்டிக்கொள்ளும்.

முதலாளிகளின் லாபம் எப்படி உருவாகிறது என்ற ரகசியத்தைக் கண்டுபிடித்த சமுதாய ஆராய்ச்சியாளர்தான் மார்க்ஸ். அந்த லாபம்தான் முதலாளித்துவ சமுதாய அமைப்பின் உயிர் மூச்சு என்ற பொருளாதார உண்மையை அறிவியல் தேடலோடும், வரலாற்று ஞானத்தோடும் அவர் கண்டறிந்தார். முந்தைய சமுதாய அமைப்புகள் எப்படி அந்தந்தக் காலகட்டத்தில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த மக்களின் புரட்சியால் மாறினவோ அதே போல் இந்த முதலாளித்துவ அமைப்பும் தொழிலாளர்களாகிய மக்களின் எழுச்சியால் மாறும் என்பதே மார்க்ஸ் முன்வைத்த கோட்பாடு. இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும், யாவரும் யாவையும் பெற்ற சமத்துவச் சமுதாயம் மலர வேண்டும் என்பது அவருடைய தலையில் உதித்த ஆசை அல்ல. அது வரலாற்றின் அடுத்த கட்ட தேவை.

அந்தப் புதிய சமுதாயம், தொடக்க கால மானுட சமுதாயத்தைப் போலவே சமத்துவ உரிமைகள் உள்ளதாக, அதே வேளையில் இயற்கையைப் பற்றிய அன்றைய அச்சங்கள் இல்லாததாக இருக்கும். சுரண்டலற்ற அந்தச் சமுதாய அமைப்பு நிலைபெறுகிறபோது உலகில் சண்டைகளுக்குத் தேவை இல்லாமல் போய்விடும். தன்னலம் அடிபட்டுப்போய்விடும். பாலினப் பாகுபாடு முற்றிலுமாக ஒழிந்துவிடும். சாதி-மத-இன வரப்புகள் நொறுங்கிவிடும்.

இந்தப் புரிதலோடு இயங்குகிறவர்களே மார்க்சியவாதிகள். கம்யூனிஸ்ட்டுகள் மார்க்ஸ் என்பவரை பக்தியோடு பின்பற்றுகிற சீடர்கள் அல்ல. மார்க்சியத்தின் துணையோடு இயற்கையையும் வரலாற்றையும் புரிந்துகொண்டு, அவரவர் நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்றபடி சமுதாய மாற்றத்திற்காகச் செயல்படுகிறவர்கள். அந்த மாபெரும் சமுதாய இயக்கத்தை நடத்திக்கொடுக்கிற ஒரு கட்டமைப்புதான் கம்யூனிஸ்ட் கட்சி என்ற அரசியல் வடிவம்.

... இது ஒரு சிறு அறிமுகம். இவ்வளவு மகத்தான கம்யூனிசம் ரசியாவில் தோற்றது ஏன்? தியானென்மென் தாக்குதல் ஏன்? இந்தியாவில் மார்க்சியக் கட்சிகள் தங்கள் சொந்தக் காலில் நிற்காமல் முதலாளித்துவக் கட்சிகளைச் சார்ந்திருப்பது ஏன்? அடுத்த ஓய்வில் தொடர்வேன்.

Saturday 8 May 2010

தீர்ப்பு

பயங்கரவாதிகளுக்கு இது
“பாடம்” தருமா?

மும்பை 26/11 தாக்குதல் தொடர்பாகப் பிடிபட்ட கசாப்புக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்திருப்பதை சிலர் பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் என்றும், சிலர் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் என்றும் சொல்லி கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தீர்ப்பு இந்திய அரசமைப்பு சாசனப்படி சரியானதாக இருக்கலாம். மும்பை தாக்குதல் மானுடப் பண்பாட்டைத் தலைகுனிய வைக்கிற, ஈவிரக்கமற்ற கொடுமை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், தவறாக வழிகாட்டப்பட்டு, பெரிய லட்சியத்திற்காகப் போராடுவதாக நினைத்துக்கொண்டு, தன் உயிரையே அதற்காக இழக்க நேரிட்டாலும் அது தனக்குப் பெருமைதான் என்பதான மயக்கத்தோடும் மனப்பூர்வ ஈடுபாட்டோடும்தான் ஒரு பயங்கரவாதியின் பிறப்பு நிகழ்கிறது. ஆகவே இப்படிப்பட்ட தண்டனைகளால் பயங்கரவாதிகள் பாடம் கற்பார்கள் என்பது இன்னொரு விதமான பழிவாங்கும் மயக்கமே.

பாகிஸ்தானுக்குப் பாடம் என்று ஏதோ இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் அரசாங்கம்தான் திட்டமிட்டு நடத்தியது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது போல் கூறுவது, பாகிஸ்தான் எதிர்ப்பு உணர்வை விதைத்து, அதை முஸ்லிம் எதிர்ப்பு உணர்வாக வளர்க்கிற உள்நோக்கத்துடன்தான். இங்கே, பரந்த சிந்தனைகள் வளர்வதைத் தடுத்து மதவெறியோடு குஜராத் கொலைகாரர்கள் போல புதிய கும்பல்களைத் தயாரிக்க இந்தத் தீர்ப்பை ஒற்றை மதஆதிக்கவாதிகள் பயன்படுத்துவார்கள்.

இதே போல் அங்கேயும் இந்திய எதிர்ப்பு உணர்வையும், அதன் பேரில் இந்து மக்களுக்கு எதிரான உணர்வையும் வளர்க்க முயலும் சக்திகள் தங்களுடைய தொடர் சதிகளுக்கு ஒரு தூண்டுதலாகவே இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்திக்கொள்வார்கள். அங்கே பரந்த சிந்தனைச் சூழல்களோ வேலை வாய்ப்புகளோ இல்லாத புதிய புதிய கசாப்புகளைத் தயாரிப்பதற்கு இது அவர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்திய அரசின் அமெரிக்க மயக்கக் கொள்கைகளும், காஷ்மீர் பிரச்சனையில் மனந்திறந்த பேச்சுக்குத் தயாராக இல்லாத பம்மாத்துகளும் இப்படிப்பட்ட தாக்குதல்கள் தொடரவே இட்டுச்செல்லும்.

இரு தரப்பு மதவெறியர்களும் இப்படி ரத்தப்பசியோடு ஆர்ப்பரித்துக்கொண்டே இருப்பார்கள். மக்கள் பலியாவார்கள். இரு நாட்டு மக்களுக்கும் உண்மை நிலைமைகள் புரிந்துவிடக்கூடாது என்று நினைக்கும் உலகச் சுரண்டல் கும்பல்கள் இப்படிப்பட்ட மோதல்களால் மக்களின் கோபம் திசைதிருப்பப்படுவதில் கும்மாளம்பேட்டுக்கொண்டிருக்கும்.


Wednesday 5 May 2010

அசாக்: Blogger Buzz: Blogger integrates with Amazon Associates

இணைய தள சோதிடம்:
எதற்கிந்த வலைவிரிப்பு?

லகில் பிறந்து வாழ்கிற இத்தனை கோடி மனி தர்களுக்கும் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றை சரியாகக் கணிக்க முடியும் என்கிற சோதி டம் அறிவியல் அடிப்படையில் நம்பக்கூடியதுதானா?

இப்படி கிடுக்கிப்பிடி போட்டுக் கேட்டபோது திண றியவர்களுக்குத் துணையாக அன்றைக்கு அர்த்த முள்ள இந்து மதம் புகழ் கண்ணதாசன் சொன்ன விளக்கம் ஒன்று உண்டு. சோதனையின்போது மன துக்கு ஆறுதலாகத் திடம் சொல்வதுதான் சோதிடம், என்றார் அவர். சோதிடத்தை நம்புகிறவர்கள், நம் பாதவர்கள் இரு சாராரையுமே திருப்திப்படுத்த முயல்கிற தந்திரமான விளக்கம் இது.

நகரங்களின் நட்சத்திர விடுதிகளில் குளு குளு அறைகளில் மடியில் கிடத்திய கணினி முதல், பேருந்து நிலைய நடைமேடைகளில் முக்காலியில் நிறுத்தப்பட்ட கணினித் திரை வரையில் இந்த நவீன சோதிட வர்த்தகம் பெரிய அளவிலும், சாலைவியாபார அளவிலும் நடக்கிறது.

இணைய தளம் மூலமாக திருமணத் தகவல் மோசடி, மின்னஞ்சல் வழியாக நம் வங்கிக் கணக்கை யும் கடவுச் சொல்லையும் தெரிந்து கொண்டு பண மோசடி என்றெல்லாம் நடப்பது பற்றி அவ்வப்போது செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட மோசடிகளில் இறங்குகிறவர்களாவது அவ்வப்போது சட்டத்தின் கைகளில் பிடிபடுவதுண்டு. ஆன்மீக வலைவிரிக்கும் ஆனந்தாக்கள் கூட அவ்வப்போது அம்பலமாகிறார் கள். ஆனால் மேற்படி ஜோதிட ஸ்ரீக்கள் மட்டும் சர்வ ஜம்ப கீர்த்தியுடன் சுற்றி வருகிறார்கள்.

அண்மையில் இணைய தள தகவல் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு அறிவிப்பு எட்டிப்பார்த்தது. எதிர்காலத்தைத் துல்லியமாக கணித் துச் சொல்கிற சேவை என்று அதிலே இருந்தது. நம் பிக்கை வருவதற்காக, குறிப்பிட்ட மின் முகவரிக்குத் தொடர்பு கொள்ளுமாறு போடப்பட்டிருந்தது. உங் களைப் பற்றிய ஒரு சுருக்கமான கணிப்பை இலவச மாக அனுப்புகிறோம். அதிலே நம்பிக்கை ஏற்பட் டால் தொடர்பை உறுதிப்படுத்துங்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி மட்டும் குறிப்பிடுங்கள். ஜாதகம் இல்லா மலே நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக உங்களைப் பற்றிய சில உண்மைகளை ஆங்கிலத்தில் உங்கள் மின் முகவரிக்கு அனுப்புகிறோம். இந்த சேவை முற்றிலும் இலவசம். அதிலே உள்ள கணிப்புகள் உண்மைதான் என்று உங்களுக்குத் தோன்றினால் தொடர்ந்து முழு கணிப்பையும் அனுப்புகிறோம், என்று அந்த அஞ் சல் சொன்னது.

சும்மாதான் அந்த சேவை என்பதால், சும்மா அந்த முகவரிக்குள் சென்று என்னதான் சொல்கிறார்கள் பார்க்கலாமே என்று அதன் மேல் சுண்டெலியை முடுக்கி விட்டேன். அப்போது திரையில் தோன்றிய அட்ட வணையில் கேட்டிருந்தபடி எனது பெயரையும் பிறந்த தேதியையும் தட்டிவிட்டேன். சில நொடிகளில் ஒரு தகவல் என் மின்னஞ்சல் முகவரிக்கு வந்தது. அதிலே, அன்புள்ள குமரேசன், (இப்படி பெயர் குறிப் பிடுவது கூட ஒரு வலைதான்) உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உண்மைலேயே உங்களுக்கு எமது சேவை வேண்டும் என்பதை இந்த மின்முகவரியில் கிளிக் செய்து உறுதிப்படுத்துங்கள். நீங்கள் உறுதிப்படுத்திய தகவல் வந்த 24 மணி நேரத்திற்குள் உங்களுக்கு எங்கள் சோதிட வல்லுநரிடமிருந்து உங்களைப் பற் றிய தொடக்கக் கணிப்பு இலவசமாக வரும். அதன் பின் நீங்கள் விரும்பினால் முழுமையான கணிப்பு அனுப்பி வைக்கப்படும், என்று இருந்தது.

இப்படியே இழுத்துக்கொண்டு போவார்கள் என்ற எண்ணம் வந்ததாலும், பணிகள் நிறைய இருந்ததாலும் அந்த உறுதிப்படுத்தும் தகவலை நான் அனுப்ப வில்லை. ஆனால், மறுநாள் ஒரு அஞ்சல் வந்தது. அதிலே, அன்புள்ள குமரேசன் நீங்கள் உறுதிப் படுத்தியதற்கு நன்றி. (நான் எங்கேயப்பா உறுதிப் படுத்தினேன்?) உங்களைப் பற்றிய அடிப்படையான கணிப்பைத் தயாரிக்க இவ்வளவு நேரம் தேவைப் பட்டது. உங்களுடைய ஜாதகம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. மிக அரிதாகத்தான் இப்படி அமையும். அதைத் தெரிந்துகொள்ள பின்வரும் வலைத் தளத்தைப் பார்க்கவும். இவண், உங்களின் தொழில் முறை சோதிடர் --- என்று அடுத்த கொக்கி போடப் பட்டிருந்தது. (சோதிடரின் பெயர் ஒரு பெண்ணின் பெயராக இருந்தது. அதுவும் ஒரு வலைதானோ?)

அதையும் பார்த்துவிடலாம் என்று, குறிப்பிடப் பட்டிருந்த வலைத்தளத்திற்குள் சென்றேன். அதில் எனக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருந்தது.
... சோதிடரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாழ்க்கை உங்களுக்கு அமையவிருக் கிறது என்பது மட்டுமல்ல, அருமையான வாய்ப்புகள் மிகுந்த ஆசிர்வதிக்கப்பட்டதொரு எதிர்காலம் உங்களுக்கு இருப்பது எனது கணிப்பில் தெரிய வந்துள்ளது. நான் இந்தத் தொழிலில் பல ஆண்டு களாக இருந்துவருகிறேன். ஆனால் மிடர் குமரே சன், உங்களுடையதைப் போன்ற அற்புதமான ஜாத கங்கள் மிக அரிதாகவே அமைகின்றன என்பதை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்... இப் போது நான் சொல்லப்போவது மிக முக்கியமானது. ஒரு முறைக்கு இரண்டு முறை நான் என் சோதிடக் கணக்கை சரி பார்த்துவிட்டுத்தான் இதை எழுதுகி றேன்... என்று அது சொல்லிக்கொண்டே போனது.

அதன் பின், ... இதுதான் என் கண்டுபிடிப்பு: நீங் கள் இப்போது ஒரு முக்கியமான மாறுதல் கால கட்டத் தில் இருக்கிறீர்கள். விண்ணில் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலைகளும் கோணங்களும் உங்க ளுக்கு மிக முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரு வதற்கு ஏற்ற வகையில் இருக்கின்றன... அடுத்த 44 நாட் களில் உங்கள் தொழிலின் மிக முக்கியமான தருணங் களை சந்திக்கப் போகிறீர்கள். உங்கள் தொழிலைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான வெற்றியை அடைய இருக்கிறீர்கள். அது எப்படிப்பட்ட வெற்றி என்று இப்போது சொல்வது கடினம். ஆனால், யாரோ ஒரு வெளிநாட்டில் உள்ளவரோடு அல்லது ஏதோ வொரு வெளிநாட்டு நிறுவனத்தோடு நீங்கள் நடத்தப் போகிற பேச்சுவார்த்தை தொடர்பானதாக இருக்கலாம் என்று மட்டும் இப்போதைக்கு என்னால் ஊகிக்க முடிகிறது...

... மூன்று முக்கியமான அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். முதலாவதாக, இந்த 44 நாட் கள் மிகப்பெரும் பணத்துடன் சம்பந்தப்பட்டிருக் கின்றன; இரண்டாவதாக அந்தப் பெரும் பணம் உங் களுடைய மிகப்பெரிய லட்சியம், முதலீடு அல்லது திட்டத்திற்குப் பயன்படப்போகிறது; மூன்றாவதாக உங்களது இயற்கையான வாய்ப்புகளையும் நல்ல திர்ஷ்டத்தையும் இணைத்து மேலும் முடுக்கிவிடு வதன் மூலம் அந்தப் பணம் வரப்போகிறது... இந்த வாய்ப் பைப் பயன்படுத்த நீங்கள் உங்களைத் தயார் நிலை யில் வைத்திருக்க வேண்டும் என்பதே முக்கியம்...

... இன்னும் சில உண்மைகளை நான் கண்டு பிடித்திருக்கிறேன். உங்களைச் சுற்றி மகத்தான சக்தி யின் அதிர்வுகள் இருப்பதை நான் பார்க்கிறேன். இதன் விளைவாக எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு எளி தாகக் கிடைத்துவிடும்... ஒரு எச்சரிக்கையும் விடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். மற்றவர்கள் தங்களுக்கான வாய்ப்புகள் தானாக நடக்கட்டும் என்று காத்திருப் பார்கள். ஆனால் குமரேசன், ஒரு சரியான சோதிட ரின் உதவியோடு உங்களது நட்சத்திர-கோள் நிலை களை துல்லியமாக அறிந்து அதற்கேற்ப உங்களது செயல்பாடுகளை நீங்கள் அமைத்துக்கொள்வது முக்கியம். அப்போதுதான் அந்த சாதகமான பலன் கள் முழுமையாக உங்களை வந்தடையும்...

இப்படியே தன் கணிப்பை ஓட்டிக்கொண்டே போயிருக்கிறார் அந்தப் பெண்மணி. சுமார் மூன்று பக் கங்களுக்கு உள்ள கணிப்பில் ஒரே ஒரு இடத்தி லாவது திட்டவட்டமாக ஏதாவது சொல்லப்பட்டி ருக்கிறதா? நான் யார், எப்படிப்பட்ட தொழிலில் இருக் கிறேன் என்ற நிகழ்காலமோ, எந்தவிதமான வாழ்க் கையை இதுவரை வாழ்ந்துவந்தேன் என்ற கடந்த காலமோ, இனி என்னதான் குறிப்பாக நடக்கப்போ கிறது என்ற எதிர்காலமோ மருந்துக்காவது அடை யாளம் காட்டப்பட்டிருக்கிறதா?

பொத்தாம் பொதுவான ஊகங்களுக்குப் பெயர் துல்லியமான கணிப்பாம்! சாதாரணமாக எவரும் சிக்கி விடக்கூடிய பெரிய வலை இது என்பது மட்டும் உறுதி. இன்றைய இணையவலை நுட்பங்களைப் பயன் படுத்துகிற எவருக்கும், போட்டிகளின் வெக்கையில் வெந்துபோயிருக்கிற யாருக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கள் பற்றிய ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் இருக் கும். பெட்டிக்கடை வைத்திருப்பவர் முதல் ஆகாய விமான உற்பத்தியாளர் வரையில் அவரவர் மட்டத் திற்குப் பெரும் பணம் தேவைப்படவே செய்கிறது. எல்லோருக்குமே எதிர்வரும் காலம் என்பது ஏதாவ தொரு வகையில் மாறுதல் காலகட்டம்தான்.

மக்களின் வாழ்க்கை ஏக்கங்களை முகர்ந்துபார்க் கக்கூடிய எவரும் இந்த கணிப்புகளுக்கு வர முடி யும்! வேறொரு மின்னஞ்சல் முகவரியிலிருந்து வேறொரு பெயரில் இதே சோதிடரின் வலைத் தளத்தைத் தட்டியபோது, இதே கணிப்புதான் வந்தது! அன்புள்ள .... என்ற இடத்தில் மட்டும் அந்தப் புதிய பெயர் இருந்தது! இந்த இலவச முதல் சேவைக்குப் பிறகு அடுத்தடுத்த ஆழமான கணிப்புகளுக்கு சிறப்புக் கட்டணங்கள் உண்டு!

இப்படிப்பட்ட பொதுவான, எவருக்கும் பொருந்து கிற சொல்லாடல்களில் மிரண்டுபோய், மின்னஞ்சல் குறிப்புகளின்படி அடுத்தடுத்த தொடர்புகளை மேற் கொண்டு, கேட்கிற கட்டணங்களை (ஆயிரக்கணக் கான ரூபாய்கள்) செலுத்துகிறவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

வாழ்க்கை உண்மைகளை, அரசியல் நிலைமை களை, சமுதாய சூழல்களை, இயற்கை ரகசியங்களைப் புரிந்துகொண்டால் அடுத்த நொடி எப்படி அமை யுமோ என்ற புதிரோடு, ஆக்கப்பூர்வ முயற்சிகளுக் கான முனைப்புகளோடு வாழ்வதன் சுகத்தை முழுமை யாக அனுபவிக்க முடியும். அப்படி அனுபவிக்கக் கற்றுக்கொள்கிற திட மனங்களை சோதனைகள் என்ன செய்யும்? சோதிடம்தான் என்ன செய்யும்?