Friday 23 December 2011

உயிர் வாழ்வதன் உள் விசை எது?


பூமியில் பிறக்கிறோம். எப்படியெப்படியோ வாழ் கிறோம். இறுதியில் செத்துப்போகிறோம். விலங்கு கள் பறவைகள் பூச்சிகள் தாவரங்கள் என்று எல்லா உயிர்களுக்கும் இதுதான் நிலைமை. இப்படிப் பிறந்து வாழ்ந்து மடிவதன் அர்த்தம்தான் என்ன?
எவ்வளவு பெரிய தத்துவக் கேள்வி! இந்தக் கேள்விக்கு ஒரு திரைப்படத்தால் பதில் சொல்ல முடியுமா? முடியும் என்று என்று மெய்ப்பிக்கிறது ட்ரீ ஆஃப் லைஃப் (வாழ்க்கை மரம்):

இருட்டில் எங்கோ நெருப்புச் சுடர் போன்ற தொரு புதிரான ஒளி படபடவென்று மின்னுகிறது.

1960ம் ஆண்டுகளின் நடுக்கட்டம். ஓ பிரை யன் மனைவிக்கு ஒரு தந்தி வருகிறது. அதைப் படித்து அவள் நொறுங்கிப்போகிறாள். 19 வயது மூத்த மகன் ஜேக் இறந்துவிட்டான் என்று அந்தத் தந்தி கூறுகிறது. குடும்பம் துயரத்தில் மூழ்குகிறது. நிகழ்காலம்: பிரையன் தம்பதியின் இரண்டா வது மகன் ஜேக் ஒரு கட்டடக் கலை வரைவாள ராகத் தட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கிறான். ஒரு கட்டடத்தின் முன்பாக மரம் நடப்படுவதைப் பார்க் கிற அவனுக்கு, 1950களில் ஒரு சிறுவனாக இருந்த போது தானும் தன் அண்ணனும் வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்கு வருகிறது...
பேரண்டம் உருவாகிறது. அணுக்களின் ஈர்ப் பில் நட்சத்திரங்களும் கோள்களும் உருவாகின் றன. பூமி உருவாகிறது. அதில் எரிமலைகள் வெடிக் கின்றன. நுண்ணுயிர்கள் பரிணமிக்கின்றன. எலாஸ்மோச ரஸ் என்ற கடல் வாழ் விலங்கு ஒன்று இடுப் பில் காயத்து டன் கடலுக் குள் செல்கி றது. காட்டுக் குள் ஒரு இளம் பராசாரோலோ பஸ் (டைனசோர் வகையைச் சேர்ந்த விலங்கு) தன்னை வேட்டையாட முயலும் மற்ற விலங்கு களிடமிருந்து தப்பித்து ஒடுவதில் களைப் படைந்து ஒரு நதிக்கரையோரமாக விழுகிறது. ஓர்னித்தோமிமஸ் என்ற மற்றொரு விலங்கு இந்த இளம் விலங்கை பரிசீலிக்கிறது. அதை விழுங்க லாம் என்று கழுத்தில் வாய்வைக்கிறபோது, அது இன்னும் உயிருடன் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டுவிடுகிறது...


டெக்ஸாஸ் மாநிலத்தின் வாக்கோ நகரில் இளம் பிரையன் தம்பதி வாழ்கிறார்கள். பதின்பரு வத்தை அடையும் மூத்தவன் ஜேக், எந்தப்பாதை யைத் தேர்ந்தெடுப்பதென்று குழம்புகிறான். கனிவும் கட்டுப்பாடும் கொண்டவளும், உலகத்தை அதிச யித்து ரசிக்கத்தக்க ஒன்றாகக் குழந்தைகளுக்குக் காட்டுகிறவளுமான தனது தாயை அவன் கரு ணைப்பாதையின் அடையாளமாகப் பார்க்கிறான். அதிகாரமும் எளிதில் கோபப்படுகிற குணமும் கொண்ட தந்தையை கடுமைப் பாதையின் அடை யாளமாகப் பார்க்கிறான். மகன்களை பிரையன் நேசித்தாலும், உலகம் சுயநலமும் சுரண்டலுமாய் நிறைந்திருக்கிறது என்று கருதுகிற அவன், மகன் களை அதற்கேற்பத் தயார்ப்படுத்த முயல்கிறான். குழந்தைகளைக் குழந்தைகளாக நடத்தாமல் வளர்ந்தவர்களிடம் எதிர்பார்க்கிற முதிர்ந்த செயல் களை வற்புறுத்துகிறான். சாப்பாட்டு மேசையில் தன்னிடம் கூட அவர்கள் ஒரு விசுவாசமான ஊழி யர்கள் போலப் பணிவுடன் நடந்துகொள்ள வேண் டும் என கட்டாயப்படுத்துகிறான். சரியாக நடந்து கொள்ளாவிட்டால் அறையில் போட்டு அடைக் கிறான். தாய் அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடிகிறது. (அமெரிக் காவிலும் தாய்மார்கள் நிலை இதுதானா?) அவன் இல்லாத நேரத்தில் ஆறுதலாக அணைத்துக் கொள்கிறாள். ஒரு கட்டத்தில் கணவனோடு மோதவும் துணிகிறாள்...

ஒரு இசைக்கலைஞராக வாழ விரும்பி, பொறி யியலாளராக வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பதிவு செய்து செல்வம் சேர்க்கும் கனவில் இருக் கிறவன் பிரையன். ஒரு கோடை காலத்தில் அவன் தனது கண்டுபிடிப்புகளை வர்த்தகரீதியாகக் கொண்டுசெல்வதற்காக உலகப் பயணம் மேற் கொள்கிறான். அந்த நாட்களில் மகன்கள் விடு தலை பெற்றதுபோல், தாயின் தடையற்ற அன்பை அனுபவிக்கிறார்கள். மூத்தவன் ஜேக், தெருவில் மற்ற சிறுவர்களோடு சேர்ந்து சுற்றும்போது கண் ணாடி சன்னல்கள் மீது கல்லெறிகிறான். விலங்கு களைத் துன்புறுத்துகிறான். பக்கத்து விட்டுக்குள் நுழைந்து, அந்த வீட்டுப் பெண்ணின் உள்ளாடை யைத் திருடி வருகிறான். பின்னர், தன் செயல் களுக்காக வெட்கப்படும் அவன், திருடி வந்த உள் ளாடையை ஆற்றில் வீசுகிறான்.

பிரையன் தனது கண்டுபிடிப்புகளை விற்க முடியாதவனாகத் திரும்பி வருகிறான். அவன் பணியாற்றுகிற நிறுவனத்தின் தொழிற்சாலை மூடப்படுகிறது. நிர்வாகம், அவனைத் தொடர்ந்து வேலையில் வைத்துக்கொள்ள வேண்டுமானால், இடமாறுதலுக்கு அவன் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைச் சிந்திக்கிற அவன், தான் நல்லவ னாக வாழ முடிந்திருக்கிறதா என்று யோசிக்கி றான். சிறுவன் ஜேக்கிடம், முன்பு கடுமையாக நடந்துகொண்டதற்காக வருத்தம் தெரிவிக்கிறான்...

எதிர்காலம். லட்சக்கணக்கான ஆண்டுகள் கழித்து, செந்நிறமாக மாறி எரியும் பூமி, பின்னர் குளிர்ச்சியடைந்து உயிரற்ற கோளாகிறது. சூரியனும் இப்போது வீரியமற்ற ஒரு சிறிய வெள்ளைப் பந்தாக மாறியிருக்கிறது...
நிகழ்காலம். பெரியவனாகிவிட்ட இரண்டாவது மகன் ஜேக் அலுவலகத்தில் வேலை முடிந்து புறப் படுகிறான். நவீன மின்தூக்கியின் கண்ணாடி வழியே வெளியே தெரியும் கட்டடக் காட்டைப் பார்த் துக்கொண்டே கீழிறங்கும் அவனுக்கு பாறைகள் நிறைந்த வட்டாரத்தில் நடப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. முன்னால் ஒரு பெண் நடந்துசெல்கிறாள். ஒரு பாறையின் மேல் ஒரு மரக் கதவு தெரிய, அதன் வழியாக வெளியேறுகிறான். அங்கே ஒரு மணல் மேட்டில் தனது நினைவில் இருக்கிற அனைவரும் இருப்பதைப் பார்க்கிறான். இவன் வருவதைப் பார்த்து தந்தை பிரையன் மகிழ் கிறான். இவன் இறந்துபோன மூத்தவனை நினை வூட்ட, தாய் மனம் நெகிழ்ந்து அணைத்துக்கொள் கிறாள். அந்த மணல்மேட்டில் இப்படிப் பல பேர்...
ஜேக்கின் மனக்காட்சி மறைகிறது. புன்முறு வலோடு அவன் அலுவலகக் கட்டடத்திலிருந்து வெளியேறுகிறான்.

இருட்டில் அந்தப் புதிரான சுடரொளி இன்னும் படபடத்துக்கொண்டிருக்கிறது.

பேரண்டம், பால்வெளி மண்டலம், பூமி, உயிர் கள் என அனைத்துக்கும் ஈர்ப்பு மையம் அன்புதான் என்று - எந்த இடத்திலும் வசனமாகச் சொல் லாமலே - உணர்த்துகிறது படம். அமெரிக்கத் திரைப்பட இயக்குநரும் திரைக் கதை எழுத்தாளரும் தயாரிப்பாளருமான டெரேன்ஸ் மாலிக் இயக்கிய படம் இது. கேன்ஸ் திரைப்பட விழாவின் மிக உயர்ந்த பால்மே டீ ஓர் விருது உள் பட பல விருதுகளையும் பாராட்டுகளையும் இந்தப் படம் பெற்றுள்ளது. பிராட் பிட், சீன் பென், ஜெசிகா சேஸ்டைன் உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் நடி கர்கள் நுட்பமான உணர்வுகளை நுட்பமாக வெளிப் படுத்தி நடித்துள்ளனர்.

திரைப்படக் கலையை ஒரு தத்துவ அலசலுக்கு உள்ளாக்க முடியும் என்று காட்டுகிற இந்த மாறுபட்ட படத்தை, தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கம் சென் னையில் நடத்திய உலகத் திரைப்பட முகாமில் காணும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் பல காட்சிகளைப் போலவே கவித்துவமான அனுபவம் அது.

Friday 9 December 2011

தடுக்க முடியுமா தகவல் நுட்பக் கிளர்ச்சியை?


காங்கிரஸ் கட்சிக்கென ஒரு கலாச்சாரப் பெருமை உண்டு. கட்சிக்கு உள்ளே ஒரு பொதுக்கருத்து என்றில்லாமல் ஆளுக்காள் அவரவர் கருத்தை வெளியே பேசுவார்கள், அதை உட்கட்சி ஜனநாயகம் என்பார்கள்; ஆனால் கட்சிக்கு வெளியே மாறுபட்ட கருத்துகள் வந்தால் அந்த ஜனநாயக உரிமையை ஒடுக்கிவிட முயல்வார்கள். இந்த மரபின் புதிய பதிப்பாகத்தான் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் மூலமாக ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.

இணையத்தின் மூலமாக இன்று பரவலாகி வரும் சமூகவலைத்தளங்களை, அந்த நிறுவனங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறார். அந்த சமூக வலைத்தளங்களில் சிலர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை படங்களில் உருமாற்றம் (மார்ஃபிங்) செய்து வெளியிட்டிருக்கிறார்களாம். சிலர் மதப் பகைமையைத் தூண்டுகிற கருத்துகளைப் பதிவு செய்கிறார்களாம். "இத்தகைய செயல்களால் சட்டம் ஒழுங்கு சிதையும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும். அத்தகைய தீங்கான பதிவுகளைத் தடுப்பதற்கு வலைத்தள நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையேல் அரசாங்கமே தலையிட வேண்டியிருக்கும்," என்பதாக ஒரு மிரட்டல் கலந்த தொனியில் வற்புறுத்தியிருக்கிறார்.

இணையம் வழி சமூக வலைத்தளங்கள் பின்னப்படுவது இன்றைய ஒரு முக்கிய தொழில்நுட்ப வளர்ச்சி. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ், யாஹூ பிளஸ், ஆர்க்குட், லிங்கெடின், மை ஸ்பேஸ்,, பெர்ஃப்ஸ்பாட், பிக் அடா, ஃபிராப்பர் என்று பல சமூக வலைத்தளங்கள் இயங்குகின்றன. கணினி வழியாக இணைய உலகத்தைக் கையாளத்தெரிந்த எவரும் இந்த சமூக வலைத்தளங்களில் இணைந்து தங்கள் கருத்துகளைப் பதிவேற்ற முடியும்; மற்றவர்களின் கருத்துகளுக்கு எதிர்க்கருத்துச் சொல்லவும் முடியும். குறிப்பிட்ட அலைக்கற்றை சேவையை வழங்கும் நிறுவனத்திற்குத் தருகிற மாதாந்திரக் கட்டணத்தோடு சரி. சற்றே மின்சாரச் செலவும் ஆகும். இணையத்தில் இயங்குகிறபோது பக்கத்தில் நொறுக்குத் தீனி, தேநீர் என்று வைத்துக்கொண்டால் அதற்கான செலவுதான். வேறு பெரிய முதலீடுகள் தேவையில்லை. இவையன்றி அவரவரின் சொந்தப் பத்திரிகை போல வலைப்பூ எனப்படும் 'பிளாக்' தளங்களை யார் வேண்டுமானாலும் முற்றிலும் இலவசமாகத் தொடங்கலாம்.

பெரிய பத்திரிகைகளில் நட்சத்திரம் அல்லாத புதியவர்களின் எழுத்துகள் எளிதில் இடம் பிடிக்க முடிவதில்லை. பதிப்பகங்களின் வாசல்களுக்குள் சந்தை மதிப்பு இல்லாதவர்கள் நுழைந்துவிட முடிவதில்லை. இவர்களுக்கும் சேர்த்து இந்த வலைத்தளங்கள் ஒரு அறிமுக வெளியை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அவர்களது கவிதையோ, கட்டுரையோ, ஓவியமோ உடனடியாக உலகம் முழுவதும் செல்கிறது. பலரிடமிருந்தும் பாராட்டோ விமர்சனமோ வருகிறது. அடுத்து, இந்த வலைத் தளங்களில் பெண்கள் நடமாடவும் தங்களது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது.

எழுத்தாளர்களாக, கலைஞர்களாக, சிந்தனையாளர்களாக, பத்திரிகையாளராக, தலைவர்களாக என தங்களது இடத்தை உறுதிப்படுத்தியிருப்பவர்களும் இந்த வலைத்தளங்களைக் கையாள்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே ஒரே உத்தரவாதம், இவர்களது எண்ணங்கள் வெட்டப்படாமல், மாற்றப்படாமல் முழுமையாக எடுத்துச்செல்லப்படும் என்பதே.

கபில் சிபலார் கூறுவது போல் நிறுவனங்கள் முன்கூட்டியே வடிகட்டத் தொடங்கினால் என்ன ஆகும்? குறைந்தது 60 விழுக்காடு பயன்பாட்டாளர்களை அந்த நிறுவனங்கள் இழக்க நேரிடும். உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதால் அந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கிற விளம்பர வருவாய் வற்றிச் சுருங்கிவிடும். ஆகவே அந்த நிறுவனங்கள் இதற்கு முன்வரப் போவதில்லை. மேலும், தற்போதைய தகவல் தொழில்நுட்பப் புரட்சி யுகத்தில் அவ்வாறு முன்கூட்டியே வெட்டிச் சுருக்கிப் போடுவது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. அப்படி ஒரு ஏற்பாடு புகுத்தப்பட்டால் அதை உடைத்துக்கொண்டு இன்னொரு தொழில்நுட்பம் வந்துவிடும்.

வர்த்தக ரீதியான சில மென்பொருள் நிறுவனங்களின் சந்தை ஆக்கிரமிப்பை எதிர்த்துதான் சுதந்திர மென்பொருள் இயக்கம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அந்த இயக்கத்தின் முக்கியப் பணியே இத்தகைய கட்டுகளை அறுப்பதுதான்.

தலைவர்களின் படங்களை உருமாற்றம் செய்வது, அரசியல் நையாண்டிக்காக என்றால் அதிலே கபில் சிபல்கள் கோபப்பட ஏதுமில்லை. நையாண்டிச் சித்திரங்களாகிய கார்ட்டூன்கள் அரசியல் விமர்சனத்தில் முக்கியமான இடம் பிடித்துள்ளன. அதைத் தடுப்பது அப்பட்டமான சர்வாதிகாரம்தான்.

ஆனால், வக்கிர எண்ணத்தில் ஊறிப்போன சிலர், ஆபாசமான முறையில் பட மாற்றம் செய்வதுண்டு. ஒரு பெண் பகுத்தறிவுக் கருத்துகளைத் துணிவுடன் பதிவு செய்தபோது, இந்துத்துவக் கூடாரத்தைச் சேர்ந்த சிலர், வேறொரு நிர்வாண உடல் படத்தோடு அந்தப் பெண்ணின் முகத்தை ஒட்டுவேலை செய்து, முற்போக்கு பேசுகிற இந்தப் பெண் இப்படித்தான் நடந்துகொள்கிறாள்... இவளை நம்பாதீர்கள், என்று பதிவு செய்தனர். பலரும் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தபோது, அந்தப் பெண் சற்றும் மனம் தளராமல் அது ஒட்டுவேலைதான் என்பதை எல்லோரும் அறியும்படி செய்தார். அந்த வக்கிரர்கள் அப்புறம் காணாமல் போனார்கள்.

விவாத நெறிகளை மீறி சிலர் மற்றவர்களது மத உணர்வுகளை இழிவுபடுத்துவது போன்ற சொற்களைப் பதிவிடுகிறார்கள்தான். எனினும், வலைத்தளங்களில் செயல்படுகிற பலரும் அத்தகைய நெறிப்பிறழ்வுகளை வெளிப்படையாகக் கண்டிக்கிறார்கள். அதன் மூலம், சிறுமதியுடன் பகைவளர்க்க முயல்வோர் தனிமைப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட ஒருவரது பதிவுகள் மனித மாண்புகளுக்குக் கறை ஏற்படுத்துவதாகப் பலரும் கருதினால், அவரைப் பற்றி புகார் செய்வதற்கான இணைப்பு, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அத்தகைய புகார்கள் வருமானால் அவரது தளக்கணக்கை முறித்துக்கொள்வதற்கான ஏற்பாடு முதலியவை இருக்கவே செய்கின்றன. விக்கிபீடியா என்ற சுதந்திரத் தகவல் ஏட்டில், பெரியார் பற்றிய கட்டுரையில் ஒருவர் வேண்டுமென்றே பெரியார் என்று வருகிற இடங்களில் எல்லாம் ராமசாமி நாயக்கர் என்று திருத்தம் செய்து வந்தார். அவரைப் பற்றிய புகார்கள் பதிவானதைத் தொடர்ந்து அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மேலும், கபில் சிபல் கூறுவது போல் சிலர் உள்நோக்கத்துடன் செயல்பட்டால் அவர்கள் மீது வழக்குத் தொடரவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வழி இருக்கவே இருக்கிறது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். காங்கிரஸ் தலைமைக்கு, வலைத்தளங்களில் நடைபெறும் நெறிமீறல்கள் பற்றிய கவலை திடீரென ஏன் வரவேண்டும்? சோனியா, மன்மோகன் படங்களில் ஒட்டுவேலை நடந்தது மட்டுமே காரணமா?

இல்லை. விக்கிலீக்ஸ் தளம், ஆட்சியாளர்கள் அமெரிக்க அரசோடு செய்துகொண்ட கொள்கைச் சமரசங்களையும் பேரங்களையும் அம்பலப்படுத்தியபோதே, அரசாங்க உயர்மட்டத்தில் எப்படியெல்லாம் வர்த்தகச் சூதாட்டத் தரகர்கள் புகுந்து செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்பதை உலகறியச் செய்தபோதே இவர்களுக்கு ஆத்திரம் பொங்கத் தொடங்கிவிட்டது. இத்தகைய சமூக வலைத்தளங்களின் மூலம் பரவிய கருத்துகள் சில நாடுகளில் அண்மையில் ஆட்சிமாற்றங்களுக்கே இட்டுச் சென்ற மக்கள் கிளர்ச்சிகளுக்கு ஒரு முக்கியக் தத் தொடங்கிவிட்டது. உலகச் சுரண்டலின் நிதி மூலதன ஊற்றாகிய அமெரிக்காரணமாக அமைந்தன என்ற தகவல் வெளிவந்தபோதே இவர்களுக்கு உறுத்க வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டியதில் அதற்கென்றே உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் மையமான பங்காற்றியிருக்கின்றன என்ற தகவல் உறுதிப்பட்டபோது இவர்களுக்கு முழு விழிப்பு ஏற்பட்டுவிட்டது.

இந்திய சில்லரை வர்த்தகக் களத்தை அந்நிய நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றுவதற்குக் உடன்பட்ட கேவலம், உழைப்பாளிகளின் ஓய்வூதியப் பணத்தைக் கூட பங்குச்சந்தைச் சூதாடிகளின் 'உள்ளே வெளியே' ஆட்டத்துக்குத் தாரை வார்க்கும் துரோகம் உள்ளிட்ட அக்கிரமங்களை எதிர்த்து இங்கேயும் அத்தகைய மக்கள் போராட்டங்கள் வெடித்துவிட்டால் என்னாவது? ஆகவே, வருமுன் தடுக்கிற புத்திசாலி அரசாக இப்படிப்பட்ட மறைமுகத் தணிக்கையைப் புகுத்தப் பார்க்கிறது மன்மோகன் சிங் அரசு.
ப் புரட்சி; இரண்டு: அதனால் எழும் மக்கள் கிளர்ச்சி.
அவசர நிலை ஆட்சி, அவதூறு மசோதா ஆட்சி என்று கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களை முறியடித்துக் காட்டிய நம் மக்கள் இதையும் வீழ்த்துவார்கள். இரண்டு விசயங்களை ஆட்சியாளர்களால் தடுக்க முடியாது. ஒன்று: தகவல் தொழில்நுட்பப் புரட்சி; இரண்டு: அதனால் எழும் மக்கள் கிளர்ச்சி.

-‘தீக்கதிர்’  9-12-2011 இதழில் வந்துள்ள கட்டுரை

Tuesday 29 November 2011

கொலவெறி டீ கொள்ளைகொண்டது எப்புடீ?



ஒய் திஸ் கொலவெறி டீ பாட்டை இன்னுமா கேட்கலை என்று கொலவெறியோடு பல நண்பர்கள் கேட்டுவிட்டார்கள், ஆகவே அதை கணினியில் இறக்கிக் கேட்டுவிட்டேன், தொடக்கத்திலேயே என் கருத்தைத் தெரிவித்துவிடுகிறேன்: பாட்டு எனக்குப் பிடித்திருக்கிறது.

முதலில் ஒலி குறைவாக வைத்துக் கேட்டபோது கொஞ்சமாகத்தான் பிடித்தது, அப்புறம் உரத்த ஒலியில் கேட்டேன், ரொம்பவும் பிடித்துவிட்டது, பாடியவர், இயக்குநர், உடன் நடிப்பவர் எல்லோரும் பெரிய இடத்துப் பிள்ளைகள் (இசையமைப்பாளரும் அப்படித்தானோ?) என்பது மட்டுமே கொஞ்சம் இடிக்கிறது. கோடிக்கணக்கில் முதலீடு, ஊடக விளம்பரங்கள் (தி ஹிண்டு நாளேட்டிலேயே முதல் பக்கச் செய்தி), உயர் தொழில் நுட்ப வாய்ப்புகள் எல்லாமே எளிதாக வாய்க்கப்பெற்றவர்களின் தயாரிப்பு. எளிய நிலையிலிருந்து முயல்கிறவர்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் எப்போது கிடைக்கும்?

மற்றபடி. பாட்டைக் கேட்ட பின். நாள் முழுக்க, இப்போதும் கூட, அந்த வரிகளும் இசையும் காதில் ஒட்டிக்கொண்டே இருக்கின்றன. வேலை முனைப்பிலிருந்து சற்றே விடுபடுகிற நேரங்களில் வாய் தானாகவே பப்பாப்பாப்பேங் பப்பாங்பாப்பேங் பப்பாப்பா பாபேங் என்று வாசித்துக்கொண்டிருக்கிறது, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் புதியவர், குறும்படஙகளுக்கு இசையமைத்தவருக்கு இந்த ‘3’ முதல் பெரிய திரைப்படம்.

பாடலைப் போலவே, அத்துடன் இணைந்தே பரப்பப்பட்டுவிட்ட பாடல் உருவான பின்னணி பற்றிய செய்தியும் சுவையாக இருக்கிறது. பாட்டின் கருத்து இசையமைப்பாளருக்குச் சொல்லப்பட்டது. உடனே அவர் ஒரு அடிப்படை இசையை அமைத்தது, அதைக் கேட்டு தனுஷ் அந்த இடத்திலேயே பத்தே நிமிடங்களில் ஒரு பாட்டை எழுதியது, உடனே பாடல் பதிவு தொடங்கி, திருத்தங்களுக்குத் தேவையின்றி எல்லாம் 45 நிமிடங்களுக்குள் சட்டுப்புட்டென்று முடிந்துபோனது... என குறுகுறுப்போடு பேசிக்கொள்ள ஏற்ற தகவல்கள் இன்றைய இணைய யுகத்தில் மின்னல் வேகத்தில் பரவிவிட்டன. அந்தப் பரவலும் சேர்ந்தே பாட்டின் மீது ஒரு கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தனுஷ் பாடுகிற அந்தக் காணொளி இணைப்பைப் பார்த்தால் அந்தக் குழுவினர் ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல், வருத்திக்கொள்ளாமல், தங்களை இறுக்கமாக்கிக்கொள்ளாமல், வெகு இயல்பாக, வெகு கலகலப்பாக ஈபட்டிருப்பது தெரிகிறது, அந்த இயல்பும் எளிமையும் பாடல் வரிகளில், இசைக் கோர்ப்பில் நன்றாகப் பதிந்துள்ளன. சிக்கலான சொற்கள், புலமை தேவைப்படுகிற உவமைகள், மிரள வைக்கும் இசை நுணுக்கங்கள் எதுவும் இல்லை. குறைந்தபட்ச இசை ஆர்வம் இருப்பவர்கள், சினிமா பாடல் கேட்கிற - பாடுகிற அளவோடு தங்கள் இசை ஞானம் நின்றுவிட வேண்டிய சூழல் ஏற்பட்டவர்கள் (இவர்கள்தான் எண்ணிக்கையில் பெரும்பான்மை) ஆகியோரை சட்டென இந்தப் பாடல் கவ்விக்கொண்டதில் வியப்பில்லை, இணையத் தொடர்புகளிலும் பொது இடஙகளிலும் பாட்டு பற்றி கருத்துக் கூறியிருப்பவர்களில் பெரும்பாலனவர்கள் இந்த எளிமைத்தன்மையை முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான காரணம் அந்த மொழி. இன்றும் கூட, ஆங்கிலத்தை ஆங்கிலேயர்கள் பேசுவது போல் பேச முயல்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்படிப் பேசுவதுதான் சரி என்று வாதிடுவார்கள். தமிழர்களோ இதர இந்திய மொழியினரோ தங்களது உச்சரிப்பு மரபுக்கேற்ப ஆங்கிலத்தைப் பேசுகிறபோது அதை மட்டமாகக் கூறி கேலி செய்வார்கள். இங்கிலீஷ்காரர்களின் நாவில் தமிழ் அரைபடுவது பற்றி இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். அது அவர்களது உச்சரிப்புப் பழக்கத்திலிருந்து வருவது, அவர்கள் தமிழர்கள் போலத் தமிழைப் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. கொலவெறி டீ பாட்டு, ‘மூனு’, ‘நைட்டு’ என்று எளிய தமிழர்களின் உச்சரிப்பில் ஒலிக்கிறது. அதன் மூலம் அந்த மக்களின் உச்சரிப்பு முறை கேலிக்கு உட்படுத்தப்படாமல் பாடலில் அங்கீகரிக்கப்படுகிறது.

ஏ.ஆர். ரஹ்மான் திரைப்படத்துரையில் கால் வைத்தபோது இசையமைத்த ‘சின்னச்சின்ன ஆசை’ பாட்டு இதே போல் எளிய இசை காரணமாகவே நாடு, மொழி எல்லைகளைத் தாண்டி எல்லோர் மனங்களிலும் குடியேறியது.

‘கொலவெறி டீ’ பாட்டு, ‘3’ படம் குழுவினர் தங்களது கல்லூரிக் காலத்திலிருந்தே நண்பர்கள் என்பது தெரிய வருகிறது. இளம் நண்பர்களுக்கே உரிய நெருக்கமும் கலகல குணமும் கடினப்படுத்திவிடாமல் பாடலை உருவாக்க உதவியிருக்கின்றன.

நாடு முழுக்கத் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த இளையராஜா, தான் அறிமுகமான கட்டத்தில் இதே போன்ற நண்பர்கள் குழாமோடு கலகலப்பாகவே செயல்பட்டார். பின்னர் ஏனோ தன்னைத் தானே இறுக்கமாக்கிக்கொண்டார். ஆன்மிகம் அது இது என்று ஒரு சனாதன வலைக்குள் சிக்கிக்கொண்டார்.

காலத்தால் மறைந்துவிடாத திரையிசையை வழங்கிய எம்.எஸ். விஸ்வநாதன் அன்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்துடனும் கண்ணதாசனுடனும் வாலியுடனும் இப்படிப்பட்ட கலகலப்பான உறவை வளர்த்துக்கொண்டவர்தான். அவரது முக்கியமான ஒரு குணம், இப்போதும் புதியவர்களை உச்சிமோர்ந்து ரசித்துப் பாராட்டுவது.

காதலித்த பெண் தள்ளுபடி செய்துவிட காதலன் ஆதங்கமும் ஆத்திரமுமாகப் பாடுவது போன்ற கொலவெறி பாட்டில் முற்போக்கான கருத்து ஒன்றும் இல்லைதான். அதை ஒரு குற்றச்சாட்டாகக் கூறுகிற எண்ணத்திற்கு மாறாக, முற்போக்கான சிந்தனை கொண்ட பாடல்கள் இதே போல் எப்போது கோடிக்கணக்கான மக்களை எளிதிலும் விரும்பத்தக்க வகையிலும் சென்றடையும் என்ற எதிர்பார்ப்புதான் எனக்கு மிஞ்சுகிறது.

Saturday 26 November 2011

பெட்ரோல் விலைக்கு காரணம் சனிப்பார்வை!


பிரதமரை விசிலடிக்க வைக்கும் விளக்கம்!


பெ
ட்ரோல், டீசல் விலைகளை கன்னாபின்னா என்று உயர்த்துகிற மன்மோகன் சிங் அரசுக்கு, “உலகச் சந்தையில் எண்ணை விலை உயருகிறபோது இந்தியாவிலும் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது,” என்று சொல்வது வழக்கமாகிவிட்டது. கூட்டாளிக் கட்சிகளும் கூட தாங்கள் மக்களின் கோபத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்பதால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், எல்லோரையும் ஏற்க வைக்கிற வழி என்ன என்பது தெரியாமல் பிரதமரும் மற்றவர்களும் விழி பிதுங்குகிறார்கள். யாராலும் மறுக்க முடியாத விளக்கம் ஒன்றைச் சொல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் இவர்களுக்கு இருக்கக் கூடும்.

அந்த ஏக்கத்தைப் போக்குவதற்கு ஒருவர் புறப்பட்டிருக்கிறார். சற்றே வளைந்த நேர்கோடு போல மட்டுமே புன்னகை செய்து வந்திருக்கிற மன்மோகன் சிங் “ஹய்யா” என்று விசிலடிக்காத குறையாகக் குதூகலிக்கும் ஆலோசனை அவரிடமிருந்து  வந்திருக்கிறது. அந்த ஆலோசனையை அரசு கடைப்பிடிக்குமானால் பொது மக்களிலும் கூட ஆகப் பெரும்பாலானோர், “ஓ இதுதான் காரணமா, அப்படியானால் நம்மால் என்ன செய்ய முடியும்,” என்று அடங்கிப் போவார்கள்!

எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் சனி பகவான் பார்வைதான்! அன்னாருடைய நாட்டாமை காரணமாகத்தான் பெட்ரோலியா பொருள்களின் விலை எகிறுகிறது! கச்சா எண்ணை இறக்குமதிக்கு மத்திய அரசு விதிக்கிற எக்கச்சக்கமான சுங்கவரி, எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் விதிக்கப்படும் ஆயத்தீர்வை, பல்வேறு மட்டங்களில் விதிக்கப்படும் வரிகள், மாநில அரசுகளின் விற்பனை வரி, எண்ணை விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு கைவிடுவது ஆகிய எதுவுமே விலை உயர்வுக்கு காரணம் அல்ல! எல்லாம் கிரக சாரம்! இந்த விசித்திர விளக்கத்தை அளித்திருக்கிற அவர் ஒரு சோதிட வல்லுநர்!

‘ஜோதிட ரத்னா’ என்ற (யாரோ கொடுத்த, அல்லது தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட) பட்டத்தைச் சூட்டிக்கொண்டுள்ள “முனைவர்” க.ப.வித்யாதரன் என்பார் இந்த வானிலை ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுகிறார்.

“எரிபொருள் விலை குறையுமா?” - இப்படியொரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் கூறியிருக்கிற பதில் வருமாறு:

“எரிபொருள் விலை டிசம்பர் 21க்குப் பிறகு இன்னும் விண்ணைத் தொடும் அளவிற்கெல்லாம் வரும். பெட்ரோலைப் பற்றி பேசப்படும் அளவிற்கு வாய்ப்பு உள்ளது. 100 ரூபாயைக் கூட எட்ட வாய்ப்புள்ளது. ஏனென்றால் சனி கனிம, கரிம பொருட்களுக்கு உரிய கிரகம். அவர் இதற்குமேல் பற்றாக்குறையைத்தான் எல்லா இடங்களிலும் ஏற்படுத்துவார்.”

கேள்வியை கேட்டது ‘தமிழ்.வெப்துனியா.காம்’ என்ற ஒரு இணைய ஏடு. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாக மக்களுக்குக் கிடைத்திருக்கிற இணையம் என்ற நவீன வசதியை எவ்வளவு எளிதாக, கூச்சமே இல்லாமல் இப்படியொரு அறிவியல் மறுப்புச் சிந்தனைக்குப் பயன்படுத்துகிறார்கள்!

இதே இணைய ஏடு அரசின் இப்படிப்பட்ட முடிவுகளை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் வெளியிட்டதுண்டு. சனிப் பார்வையால்தான் விலை உயர்கிறது என்றால் அதை எதிர்த்துக் கட்டுரை வெளியிடலாமோ?

பெட்ரோல் விலையோடு மட்டும் இந்த ஜோதிட ரத்னாவின் கணிப்பு முடிந்துவிடவில்லை. அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தும், அத்வானிஜி ரதயாத்திரை நடத்தியும் ஒழித்துக்கட்ட விரும்புகிற ஊழல் விவகாரம் குறித்தும் இவரது கிரகக் கணக்கு விளக்கம் தருகிறது.
“இந்தியாவில் ஊழல்: எங்குபோய் முடியும்?” -இது தமிழ்.வெப்துனியா கேட்டுள்ள கேள்வி.

ஜோதிட ரத்னா வித்யாதரன் கூறியுள்ள பதில் இது:  “தற்போதைய இந்திய ஜாதகத்தைப் பார்க்கும் போது, ஊழலிற்கு எதிரான முழக்கம் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு இன்னமும் அதிகமாக இருக்கும். 21.12.2011 அன்று சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. அதற்குப் பிறகு இதன் தாக்கம் இன்னும் அதிகமாகும். ஏனென்றால் இந்திய ஜாதகம் கடக ராசிக்கு 4வது வீட்டிற்கு சனி வருகிறார்...”
-இப்படியாக சொல்லிக்கொண்டே போகிறார்.

இடசாரி உள்ளிட்ட பல்வேறு மக்கள் இயக்கங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டங்களின் பலனாக, அரசு அலுவலகங்களிலிருந்து அவ்வளவு லேசில் பெயராது என்றிருந்த தகவல்களைப் பெற முடியும் என்பதற்கான தகவல் உரிமைச் சட்டம் வந்தது. அதுவும் மன்மோகன் சிங் அரசின் முதல் சுற்று ஆட்சி இடதுசாரிகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயச் சூழல் இருந்ததால், அவர்கள் மக்கள் நலனையும் உரிமையையும் பாதுகாக்கும் உன்னத நோக்கத்தோடு, தகவல் உரிமைச் சட்டத்தை கொண்டுவந்தாக வேண்டும் என உறுதியாக வலியுறுத்தியதால்தான் இது நடந்தது. ஆனால் இந்த முனைவர் சொல்கிறார் தெரியுமா?

“இந்திய ஜாதகம் கடக ராசிக்கு 4வது வீட்டிற்கு சனி வருகிறார். அதனால், யாராக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும்சரி, தப்பு செய்தால் தண்டனையை அதிகரித்தே தீரவேண்டும் என்ற அமைப்புகள் இனிமேல் அதிகரிக்கத் தொடங்கிவிடும். தற்போது கேள்வி கேட்கும் வீடான புதனில்தான் சனி உட்கார்ந்திருக்கிறார். அதனால்தான், யாராக இருந்தாலும் கேட்டுவிடுவது என்ற நிலை வந்தது. அதன்பிறகு, கன்னிக்கு சனி வந்த பிறகுதான் தகவல் அறியும் சட்டம் என்ற சட்டம் வந்தது. சாதாரணமானவர்கள் கூட ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் அஞ்சல் தலை ஒட்டி அனுப்பினால், 10 நாள், 15 நாள் ஒரு அலுவலகத்திற்குச் சென்று சேகரிக்க முடியாத தகவல்களைக் கூட பெறக்கூடிய தகவல் அறியும் சட்டம் என்பது வந்தது. யார் யார் என்ன செய்கிறார்கள், எந்த நிலையில் இருக்கிறார்கள், எந்தப் பதவிக்கு எந்தப் பணிக்கு யார் யார் வருகிறார்கள் என்பதை சாதாரண, எளிய மக்களும் தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் சட்டம் வந்துள்ளது. அந்த சட்டத்தின் மூலமாகத் தெரிந்த விஷயங்களைத் தண்டிக்கக்கூடிய வீடுதான் துலாம். இந்த துலாத்துக்குதான் சனி வருகிறார். துலாம் என்பது நீதிக்கோள். நீதிபதிக்கு மேல் நீதி தேவை தராசுடன் இருப்பார்களே அதுதான் நடக்கும். டிசம்பரில் இருந்து நிறைய பேர், பெரிய பெரிய ஆட்களெல்லாம் தண்டனையை அனுபவிக்கக் கூடிய நிகழ்வுகள், தப்பித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் தப்பிக்கவே முடியாது என்கின்ற நிலை வரும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் கன்னியில் சனி இருப்பதால்தான், உலகத்தையே ஒரு சுற்று வந்து பார்த்தால் பல நாடுகளில் ஆள்பவர்களை எதிர்த்துக் குரல்கள் எழுந்துள்ளது தெரியும். அதில் நியாயமான விஷயங்களும் நிறைய இருக்கிறது. இப்பொழுது துலாத்திற்கு சனி வரும்போது, தவறு செய்தவர்களுக்கெல்லாம் தண்டனை கொடுக்கக்கூடிய காலமாக அமையும். மேலும் எளியவர்களும் பெரிய பதவியில் போய் உட்காரக்கூடிய காலமும் வரப்போகிறது.”

பல நாடுகளில் ஆள்பவர்களை எதிர்த்துக் குரல்கள் எழுவதில் நியாயமான விஷயங்களும் நிறைய இருக்கிறது, என்று சொல்லிவிட்டு, அதன் பிறகு துலாம், சனி, கன்னி என்று ஓட்டுவதில் நியாயமான விஷயம் எதுவும் இல்லை. கிரகங்களின் சஞ்சாரத்தால்தான் எழுச்சிகள் ஏற்படுகின்றன, தவறு செய்பவர்களுக்குத் தண்டனைகள் கிடைக்கின்றன என்று ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொள்வது என்றால், மக்களின் குமுறல் எதுவும் இல்லாத இடத்தில் கடகமும் புதனும் புகுந்து விவகாரம் செய்து பார்க்கட்டுமே!

அரசியல், சமூக நிகழ்வுகளையும், அன்றாடச் செய்திகளையும் கவனிக்கக் கூடிய எவரும் ஊகித்துத் சொல்லக் கூடிய கணிப்புகளைத்தான் இந்த ஜோதிட ரத்னாக்கள் கூறுகிறார்கள். கூடவே ஆங்காங்கே சனியின் பார்வை, கன்னியின் கண்வீச்சு, துலாம் நிலை, புதனின் இடம் என்று ஒட்ட வைத்துக்கொள்கிறார்கள். இப்படியெல்லாம் அனுபவத்தின்  அடிப்படையில் ஊகிக்கக் கூடியவர்கள், தங்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாதபட்சத்தில் இப்படி ராசிபலன் கணிக்கிற லாபகரமான சுய தொழிலில் ஈடுபடலாம்! என்ன, யாரையாவது பிடித்து ஜோதிடஸ்ரீ, ஜோதிடப்புலி, ஜோதிடரத்ன, ஜோதிடமரகத, ஜோதிடப்பவள என்றெல்லாம் பட்டங்களை ஒட்டவைத்துக் கொள்ளவேண்டியிருக்கும்! அதற்குக் கொஞ்சம் செலவாகும்!

சோதிடம் என்றால் சோதனையின்போது திடம் சொல்வது என்று முன்பொருமுறை கவிஞர் கண்ணதாசன் கூறினார். ஆனால் இது சும்மா திடம் சொல்கிற பிரச்சனை மட்டுமல்ல. நட்சத்திரங்களும் கோள்களும் இருக்கிற இடத்தைப்  பொறுத்துதான் அரசியல், பொருளாதார, சமூக நிகழ்வுகள் முதல், சொந்த வீட்டு விவகாரங்கள் வரை எல்லாம் தீர்மானிக்கப்படுகின்றன என்று சோதிடம் சொல்வதன் அடி ஆழத்தில், நடந்துகொண்டிருக்கிற எதையும் மாற்றமுடியாது என்ற தலைவிதித் தத்துவம் மக்களின் தலையில் அழுத்தமாகக் குடியேற்றப்படுகிறது. மாறுதல் ஒன்றைத் தவிர எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டது என்ற உண்மைத் தத்துவம் மறைக்கப்படுகிறது.

அடிப்படையில், மக்களின் இன்றைய நிலைமைகள் எதுவும் மாறக்கூடாது, எவரும் தட்டிக்கேட்கிறவர்களாகப் பரிணமிக்கக்கூடாது என்ற சுரண்டல் கூட்டத்தின் விருப்பத்தையும், ஆதிக்க சக்திகளின் ஆசையையும் நிறைவேற்றுகிற ஏவலாக சோதிடம் பயன்படுத்தப்படுகிறது.

“சோதிடந்தனை இகழ்” என்றான் முண்டாசுக் கவிஞன். சோதிடத்தை நவீன தொழில் நுட்பத்தில் புகுத்திக் கொடுக்கிற கைங்கர்யமும் இகழத்தக்கதுதான்.


(‘தீக்கதிர்’ 27-11-2011 இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளியாகிற கட்டுரை)

Tuesday 22 November 2011

யம்மா என்று அலறிய மன்னன்

வாழ்க்கை எத்தனை சுவை மயம்!






நாடகத்தில் நடிக்கிற ஆசை எனக்குச் சிறு வயதிலேயே தொற்றிக்கொண்டது. கோம்பையில் 3ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் எனக்கு வில்லன் வேடம்! திரைப்படங்களில் வருவது போல் ஆப்பிள் பழத்தைக் கத்தியால் குத்தி எடுத்து கடித்துக்கொண்டே வசனம் பேசச் சொன்னால்கள். நாடகத்திற்காகப் தலைமுடியை வெட்டாமல் வளர்த்துக்கொள்ள பெற்றோரிடம் பேசி அனுமதி பெற்றார்கள். ஒத்திகைகளில் நான் நன்றாகச் செய்வதாகப் பாராட்டினார்கள். ஆனால் விழா நாள் ஏனோ தள்ளிப்போனது. மின் ஊழியரான தந்தைக்கு இடமாற்றல் ஆணை வந்தது.

திருமங்கலத்தில் பி.கே.என். உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தபோது மகாபாரதக் கதை சார்ந்த ஒரு நாடகம். அதிலே கர்ணனின் மனைவிக்கு நான் தோழி. அந்தப் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு ஊரே திரளும். ஆகவே, பள்ளியின் கழிப்பறைகளை அன்றைக்குப் பாலின அடிப்படையில் பிரித்திருந்தார்கள். நாடகம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே ஒப்பனைகள் முடிந்து, சேலை கட்டிவிட்டிருந்தார்கள். அரங்கத் திரை தூக்கப்படுவதற்கு சில மணித்துளிகள் இருந்தபோது எனக்கு பயங்கரமாக ஒண்ணுக்கு முட்டிக்கொண்டு வர, அரங்கின் பின்பகுதியில் இருந்த கழிப்பறையின் ஆண்கள் பகுதிக்கு வேகமாகச் சென்றேன். அங்கே நின்றிருந்த ஆண்கள் என்னை ஏன் வெறித்துப் பார்த்தார்கள் என்று வெகுநேரத்திற்கு எனக்கு விளங்கவில்லை.

அதே ஊரில் நாங்கள் குடியிருந்த வீடு உட்பட நான்கைந்து வீடுகள் சூழ, நடுவில் ஒரு பரந்த இடம் அமைந்திருந்தது. எல்லா வீடுகளின் பசங்களும், கந்தன் கலைக்குழு தொடங்கினோம். அதன் முதல் நாடகத்திற்கான ஒத்திகைகள் முடிந்து மேடையேற்றத் தயாரானோம். எதிர்வீட்டுத் திண்ணைதான் மேடை. (அந்த வீட்டில்தான் என் கண்மா என்ற என். கண்ணம்மாவோடு எனக்கு நட்புறவு மலர்ந்தது. அந்தக் கண்மாவைத்தான் இப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன்.)

அது ஒரு சரித்திர நாடகம். அதில் எனக்கு ஒரு துரோகத் தளபதி கதாபாத்திரம். தெரு முழுக்க நாடகம் பார்க்க வந்திருந்தார்கள். எல்லோரும் நாடகத்திற்காக நன்கொடை கொடுத்திருந்தார்கள்.

கதைப்படி, நான் எந்த மன்னனுடைய தளபதியோ அவனுக்கும் எதிரி மன்னனுக்கும் போர்க்களத்தில் நேரடிச் சண்டை நடக்கும். நான் அடிபட்டவன் போல் கீழே கிடப்பேன். எதிரியுடன் செய்த சூழ்ச்சிப்படி நான் மெதுவாக எழுந்து எனது மன்னனின் முதுகில் கத்தியால் குத்த வேண்டும். அவன், "தாயே! தாயகமே! தமிழ் மண்ணே! உனக்காக நான் மடியில் விழுந்தேன், துரோகத்தால் மடிந்தேன் என வரலாறு சொல்லட்டும்... உன்னை என் மக்கள் காப்பார்கள்..." என்பது போல ஒரு வீர உரையாற்றிக்கொண்டே சாய வேண்டும்.

நாடகத்தில் எதிரி மன்னனனாக நடிக்க வேண்டிய அண்ணனுக்கு உடல் நலம் குன்றியதால், இன்னொரு அண்ணனைத் தயார் செய்தோம். பாடங்களை ஒரே வாசிப்பில் மனனம் செய்யக்கூடிய திறமை படைத்தவன் அவன்.

தளபதிக்கான உடைகளை அணிந்த பின் பார்த்தால் என் கத்தியைக் காணோம்! ஒரு அட்டையைக் கத்தி போல வெட்டி, அதன் மேல் வெள்ளிச் சரிகைத்தாளை ஒட்டி வைத்திருந்தோம். இரண்டு மன்னர்களுக்குமான வாள்களை, இரண்டு நீண்ட பிரம்புகளைச் சுற்றி வண்ணம் பூசித் தயாரித்திருந்தோம். அந்த வாள்கள் வைத்த இடத்தில் இருக்க, என் கத்தியை மட்டும் காணவில்லை (பிற்காலத்திய விசாரணையில், அடுத்த தெருவில் எங்களுக்குப் போட்டியாக கண்ணன் நாடக மன்றம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருந்த போட்டிக்குழுவைச் சேர்ந்தவர்கள், எங்கள் நாடகத்தைச் சீர்குலைப்பதற்காக அந்தக் கத்தியை கடத்தியிருந்தார்கள் என்று தெரியவந்தது. அந்த வயதிலேயே பொறாமை! அந்த வயதிலேயே கந்தன்-கண்ணன் என சைவ-வைணவ அரசியல்!)

இயக்குநர் அண்ணன், "அவசரத்துக்கு ஏதாவது செய்டா," என்று ஆணையிட்டான். ஒரு சோளத்தட்டைக் குச்சியை அரையடி நீளத்திற்கு ஒடித்து எடுத்து, சரிகைத் தாள் சுற்றி இடுப்புத் துண்டில் செருகிக்கொண்டு மேடைக்குச் சென்றேன்.

கடைசிக் காட்சி வந்தது. நானும் வேறு இரண்டு பேரும் கீழே கிடக்க, இரண்டு மன்னர்களும் தங்கள் வாள்களால் சண்டை போட்டார்கள். எதிரி மன்னனாக நடித்த அண்ணன் கடைசி நேர ஒத்திகையில் மட்டும்தான் கலந்துகொண்டான் என்பதால், மேடையில் அவன் தனக்குத் தோன்றியபடியெல்லாம் செய்துகொண்டிருந்தான். அந்தப் போர்க்களக் காட்சியில் அவன், நிறைய சினிமாக்களைப் பார்த்த தாக்கத்தில் தன் வாயாலேயே "டைய்ங்... டொய்ங்... டிங்... டங்" என்று வாள்களின் உரசல் சத்தத்தை எழுப்பிக்கொண்டிருந்தான்!

தரையில் கிடந்த நான், "அண்ணே, வாள் மாதிரி நீங்க வாயால சத்தம்போட வேணாம்... அதுதான் அந்த வாள்கள உரசுரப்ப தானாவே சத்தம் வரும்ல. என்றேன்.

"சும்மா கிடடா... நான் மன்னன். நீ தளபதி. எனக்கு நீ எப்படி கட்டளை போடலாம்," என்று கேட்ட அந்த எதிரி, தொடர்ந்து டைய்ங் டொய்ங் டிங் டங் ஒலிகளை எழுப்பிக்கொண்டிருந்தான்! பார்வையாளர்கள் சிரித்தார்கள்.

என்னுடைய மன்னனுக்குத் தாங்கவில்லை. "டேய், சீக்கிரம் எந்திருச்சி என் முதுகுல குத்திக் கொல்ரா... இல்லாட்டி இவன் நாடகத்தக் கொன்னுறுவான்," என்றான்.

துரோகத் தளபதி வேடம் என்பதற்காக நடிப்பில் நான் அவர்களுக்குச் சோடை போக முடியுமா? நானும் முகத்திலும் உடலிலும் ஏகப்பட்ட உணர்ச்சிகளைக் காட்டியவாறு மெதுவாக எழுந்தேன். இடுப்பிலிருந்த கத்தியை உருவினேன். எனது மன்னனின் முதுகில் ஓங்கிக் குத்தினேன்.

"ஆ.. யம்மா," என்று அலறிக்கொண்டே ஒரு கையால் தன் முதுகைப் பிடித்துக்கொண்டான் அவன்.

"டேய், என்னடா வசனத்தை மாத்திச் சொல்ற... தாயே தமிழ் மண்ணேன்னு சொல்லிட்டே கீழே விழுடா..." என்றான் இயக்குநர்.

"போடா... இவன் நெசமாவே குத்திட்டாண்டா... வலிக்குதுடா," என்றான் இவன். அவன் முதுகிலிருந்து ரத்தத் துளி எட்டிப்பார்த்தது. இயக்குநர் அசரீரி போல அந்தக் கடைசி உரையாடலைத் தானே சொல்லிவிட்டு திரையை இறக்க ஆணையிட்டான்.

வாய்விட்டுச் சிரித்த அத்தனை வீட்டுக்காரர்களும் எங்களைத் தட்டிக்கொடுத்துவிட்டுத்தான் போனார்கள். பக்கத்து வீட்டு அத்தை தேங்காய் எண்ணெய் கொண்டுவந்து அந்த அண்ணனின் முதுகில் தட்டைக்குச்சிக் கத்தி குத்திய இடத்தில் தடவிவிட்டார்.

மதுரையில் செம்மலர் கலைக்குழுவின் வீதி நாடகங்கள், பீப்பிள்ஸ் தியேட்டர் குழுவின் மேடை நாடகங்கள் என்று என் நாடக ஈடுபாடு தொடர்ந்தது. சென்னைக்கு வந்த பின் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. ஆயினும் நாடக தாகம் அடங்கவில்லை. நாடகங்களைப் பார்ப்பது, அவற்றைப்பற்றி எழுதுவது என்று அந்த தாகத்தைத் தணித்துக்கொள்கிறேன். எத்தனையோ நாடகங்கள் பார்த்துவிட்டாலும் திருமங்கலம் அனுபவத்தை மறக்க முடியவில்லை.

Tuesday 15 November 2011

அசாக்: சம்புகன் தலையறுத்த வாளின் நீட்சி?

அசாக்: சம்புகன் தலையறுத்த வாளின் நீட்சி?

சம்புகன் தலையறுத்த வாளின் நீட்சி?



ரு சொல்லின் தொடக்கத்தில் அ என்ற எழுத்தைச் சேர்த்தால் அந்தச் சொல்லுக்கு நேர் எதிரான பொருள் கிடைக்கும். சுத்தம் என்பதற்கு முன் அ சேர்த்தால் அது அசுத்தம் என்றாகிவிடும். நியாயம் என்ற சொல் அ சேர்ந்து அநியாயம் என மாறிவிடும்.

திமுக என்பதற்கு முன்னால் அ சேர்த்துக்கொண்டதாலோ என்னவோ திமுக ஆட்சியில் நடந்த சில நல்ல விசயங்களை அழிக்கிறது அதிமுக அரசு. புதிய தலைமைச் செயலகம் மூடல், சமச்சீர் கல்விக்கு முட்டுக்கட்டை, செம்மொழித் தமிழாய்வு மையத்தின் புத்தகங்கள் கடத்தல், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புலம் பெயரச் செய்யும் முடிவு, மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம்...

கட்சிப் பெயரில் அண்ணாவை இணைத்துக்கொண்டு அண்ணா அணிவித்த கொள்கை ஆடைகளைக் கழற்றிப் போடுகிறது அதிமுக தலைமை. அண்ணாவின் பல அரசியல் நிலைபாடுகளோடு முரண்பட்டவர்களும் கூட, திமுக ஒரு இயக்கமாகப் புறப்பட்டபோது அவர் தொடங்கிய ஒரு ஆக்கப்பூர்வமான செயலைப் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். திமுக சார்பில் ஊர் ஊருக்கு வாசகசாலை அமைத்த செயல்தான் அது. கட்சிவேறுபாடின்றி எல்லோரும் அந்த மன்றங்களுக்குள் நுழைந்து படிக்க முடிந்தது. அரசியல் விவாதங்களில் ஈடுபட முடிந்தது. புத்தகங்களைப் படிக்கச் சொல்லி தமது உரைகளில் மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதை அண்ணா ஒரு கடமையாகவே செய்துவந்தார். கல்வியறிவுக்கும் மக்களுக்கும் இடையே வர்ணச்சுவர் எழுப்பப்பட்ட சமுதாயத்தில், எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்தவர்களுக்குப் பத்திரிகைகளும் புத்தகங்களும் வாசிக்கக் கிடைத்தது என்பது ஒரு முக்கியமான பண்பாட்டு மலர்ச்சி. (பிற்காலத்தில் அந்த மன்றங்கள் வெறும் தலைமை வழிபாட்டுக் கூடங்களாக மாறிப்போனது ஒரு வீழ்ச்சி.)

அந்த அண்ணாவின் பெயர் தாங்கி, அவரது நூற்றாண்டில் அமைக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த நூலகத்தை இடித்து மாற்ற அவரது பெயரிலேயே இருக்கும் கட்சியின் ஆட்சி முடிவு செய்திருப்பது வேடிக்கையான வக்கிரம்தான். தமிழ் மக்கள் அனைவரும் புத்தகக் கடல் நீந்தி அறிவுக் கரை சேர வேண்டும் என்ற அவரது கனவை மூழ்கடிக்கத் துடிக்கிறவர்களுக்குத்தான் இந்த முடிவு மகிழ்ச்சியளிக்கும்.

அரசின் இந்த முடிவு பற்றிச் சிந்திக்கிறபோது, உலகின் பல பகுதிகளில் நூலகங்கள் தாக்கப்பட்ட நிகழ்வுகள் சில நினைவுக்கு வருகின்றன.

முதலில் சில அண்மைக்காலப் பதிவுகளைப் பார்க்கலாம். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கை ஓங்கியபோது அவர்கள், தொன்மைக் கால மக்களின் நாகரிகத்தோடு இணைந்த ஆப்கன் மண்ணில், பல நாட்டு ஆய்வாளர்களின் நேசிப்புக்கும் வாசிப்புக்கும் உரியதாக இருந்த நூலகங்களை 1998ல் தரைமட்டமாக்கினர்.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இன்றும் அணையாமல் எரிந்துகொண்டிருப்பது, இலங்கையின் புகழ்பெற்ற நூலகத்திற்கு 30 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட தீ. 1933ல் கட்டப்படத் தொடங்கி, படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, 1981ல் கிட்டத்தட்ட ஒரு லட்சம் புத்தகங்களோடு ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக விளங்கிய யாழ் பொது நூலகத்தை ராணுவத்தினரும் காவல்துறையினரும் சிங்கள இனவெறிக் கும்பலுமாகச் சேர்ந்து சூறையாடி, நெருப்புக்கு இரையாக்கினர்.

1990ல் குவைத் நாட்டிற்குள் ஊடுருவிய இராக் ராணுவம் அங்கிருந்த நூலகங்களை சேதப்படுத்தியது. இப்படியொரு காரணத்திற்காகவே காத்துக்கொண்டிருந்த அமெரிக்க அரசு, இல்லாத அணுகுண்டுகளை அழிப்பதென்ற பெயரில் இராக்கிற்குள் புகுந்து படுகொலைகளை நடத்தியதோடு, உலகப் புகழ்பெற்ற பாக்தாத் நூலகத்தின் மீது 2003ல் குண்டுவீசி அழித்தது. அங்கிருந்த புத்தகங்கள் அமெரிக்க அரசுக்கு அறிவுக்குண்டுகளாகத் தெரிந்தன போலும்.

நூலகங்களை அழிக்கிற வன்மம் நூலகங்கள் பரிணமித்த காலத்திலேயே தொடங்கிவிட்டது எனலாம். கி.பி. 48ம் ஆண்டில் ஜூலியஸ் சீசரால் தெரியாத்தனமாக அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் எகிப்து நாட்டு அலெக்ஸாண்டிரியா நூலகம், தொன்மைக்கால சிரியாவில் பேரரசன் ஜோவியன் ஆணைப்படி கி.பி. 364ல் எரிக்கப்பட்ட ஆன்டியோக் நூலகம், அக்கால பெர்சியாவில் (இன்றைய ஈரான்) கி.பி. 651ல் அரபு ஆக்கிரமிப்பாளர்களால் புத்தகங்கள் யூப்ரோடஸ் நதியில் வீசப்பட்டு அழிக்கப்பட்ட செசிபோன் நூலகம், 1154ல் துருக்கிய ஆக்கிரமிப்பாளர்களால் எரிக்கப்பட்ட பெர்சியாவின் நிஷாபுர் நூலகம், 1258ல் பாக்தாத் நகரில் ஊடுருவிய மங்கோலியப் படையினரால் ஆற்றில் புத்தகங்கள் வீசப்பட்ட ஞான இல்லம் நூலகம், 1499ல் ஸ்பெயின் சர்வாதிகாரியின் ராணுவத்தால் அழிக்கப்பட்ட கிரெனடா நாட்டு மதரஸா நூலகம், 1558ல் அன்றைய இங்கிலாந்து அரண்மனை அதிகாரிகளால் அழிக்கப்பட்ட கிளாஸ்னி கல்லூரி நூலகம், 1646ல் வேல்ஸ் பகுதியில் இங்கிலாந்து உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்றப் படையினரால் அழிக்கப்பட்ட வொர்சஸ்டர் நூலகம், 1887ல் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் தீக்கிரையாக்கப்பட்ட பர்மா ராயல் நூலகம், 1914ல் பெல்ஜியம் நாட்டில் புகுந்த ஜெர்மானிய ஆக்கிரமிப்புப் படையினரால் சாம்பலாக்கப்பட்ட லியூவென் கத்தோலிக்க நூலகம், இரண்டாம் உலகப் போர் காலத்தில் சீனாவின் பல ஊர்களிலும் ஜப்பான் படைகளால் அழிக்கப்பட்ட நூலகங்கள், 1941ல் யுகோஸ்லாவியா நாட்டில் குண்டு மழை பொழிந்த ஹிட்லரின் நாஜிப்படையினரால் தரைமட்டமாக்கப்பட்ட செர்பியா தேசிய நூலகம், 1844ல் போலந்து நாட்டில் நாஜிப்படையினரால் எரியூட்டப்பட்ட ஜலூஸ்கி நூலகம், 1992ல் போஸ்னியா நாட்டில் செர்பிய ராணுவத்தால் அழிக்கப்பட்ட போஸ்னியா பல்கலைக்கழக நூலகம்... என்று அழிக்கப்பட்ட நூலகங்கள் ஒரு பெரிய புத்தகமாக எழுதக்கூடிய அளவுக்கு விரிகின்றன.

இந்தியாவிலும், உலக அறிஞர்களை ஈர்த்துவந்த நாளந்தா பல்கலைக்கழக நூலகம் அழிக்கப்பட்ட கதை உண்டு. அந்தப் பல்கலைக்கழகம் புத்தரின் சமத்துவச் சிந்தனைகளோடு தழைத்திருந்தபோது, அதன் அடையாளங்களை அன்றைய மனுவாதிகள் தங்களுக்கே உரிய திரைமறைவுக் கைங்கர்யங்களால் பெருமளவுக்கு அழித்துவைத்திருக்க, அதை முற்றிலுமாக ஒழிப்பதை 1191ல் படையெடுத்த பாக்தியார் கில்ஜி படையினர் முடித்துவைத்தனர்.

தமிழ் மண்ணிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மூடத்தனங்களுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிராக எழுதப்பட்ட ஏடுகளை அழித்தொழித்துவிட்டு, ஆற்று வெள்ளத்தில் போட்டதாகவும் எதிர்த்துவந்த ஏடுகளை மட்டும் எடுத்துக்கொண்டதாகவும், பொற்றாமரைக் குளத்து சங்கப் பலகையின் மீது வைத்து, நீரில் மூழ்காத ஏடுகள் மட்டுமே தரமானவை என ஏற்றுக்கொண்டதாகவும் கதை புனையப்பட்டது நமக்குத் தெரிந்ததுதானே...

அந்த நூலகங்களும் நூல்களும் இவ்வாறு தாக்கப்பட்டதன் நோக்கம் ஒன்றுதான்: ஆதிக்கவாதிகளாகக் கிளம்பிய சக்திகள் மக்களிடையே மாற்றுச் சிந்தனையையும் போராடும் குணத்தையும் வளர்க்கக்கூடிய புத்தகப் பயிர்களை விட்டுவைக்க விரும்பவில்லை.

தமிழகத்தில் இன்று நடப்பதை இந்த நிகழ்வுகளோடு ஒப்பிட முடியுமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. இப்போது - செம்மொழித் தமிழாய்வு நூலகம் எரிக்கப்படவில்லை, தகர்க்கப்படவில்லை. ஆனால் நெருப்பின்றி, குண்டுகளின்றி நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில், அரிய புத்தகங்கள் எல்லாம் எடைக்குப் போடப்படும் பழைய தாள்கள் போன்று கட்டிக் கடத்தப்பட்டுவிட்டனவே!

அண்ணா நூலகத்திற்குத் தீ வைக்கப்படவில்லை, புல்டோசர்கள் அனுப்பப்படவில்லை. ஆனால் நூலகத்தை இடம் மாற்றப்போவதாக ஒரு நாடகம் அறிவிக்கப்படுகிறதே! புதிய இடத்தில் ஒரு அறிவுசார் பூங்கா அமைக்கப்பட இருப்பதாகவும் அங்கே இந்த நூலகம் இருப்பதே பொருத்தம் என்றும் கதைக்கப்படுகிறது. மக்களின் கோபத்தை மடைமாற்ற, கோட்டூர்புரம் கட்டடம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. அதுதான் உண்மை நோக்கமெனில், ஏற்கெனவே சவலைப் பிள்ளையாக இருக்கிற எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையை வலுப்படுத்தி நவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டியதுதானே? சிறப்பு மருத்துவமனையை இயற்கைச் சூழல் அமைந்த வேறொரு இடத்தில் ஏற்படுத்த வேண்டியதுதானே?

நூலகம் தற்போதுள்ள இடத்தைச் சுற்றி அண்ணா பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக் கல்லூரி, கணித ஆய்வு நிறுவனம், எம்.எஸ். சுவாமிநாதன் வேளான் ஆராய்ச்சி மையம், மத்திய தொழிற்பயிற்சிக் கல்லூரி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பல கலைக்கல்லூரிகள், புற்று நோய் ஆய்வு மையம், தோல் ஆராய்ச்சி மையம், பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் மையம் என ஒரு பெரும் கல்வி நகரமாகவே இருக்கிறது. அதெல்லாம் அறிவுசார் அமைப்புகளாக அம்மையார் அரசின் கண்களுக்குத் தெரியவில்லையா?

உண்மையில் இது ஒரு அரசியல் பகையுணர்ச்சி. அறிவுத்தளத்தில் இயங்கிடும் பலரும் குறிப்பிடுவது போல இது ஒரு பண்பாட்டுத் தாக்குதலின் தொடர்ச்சி. அனைவருக்கும் ஞானம் என்ற லட்சியப் பயணத்தைப் பாதியில் முறிக்கும் சூழ்ச்சி. சம்புகன் தலையறுத்த வாளின் நீட்சி.

அந்த நீட்சியை முறிக்கும் ஆற்றல் மக்களிடம்தான் இருக்கிறது. மக்கள் இயக்கங்களின் போராட்டங்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பாதுகாப்பதோடு நில்லாமல், தமிழகத்தின் அனைத்து நூலகங்களையும் வலுப்படுத்தட்டும். கிராமங்களில் பூட்டியே கிடக்கும் நூலகக் கதவுகளின் பூட்டுகளை உடைக்கட்டும்.

Saturday 5 November 2011

ஊடகச் சுதந்திரமா ஊடகத்திலிருந்து சுதந்திரமா?



சசிகுமார்

(விருதுநகரில் செப்.16 முதல் 18 வரை நடைபெற்ற தமுஎகச 12வது மாநில மாநாட்டுக் கருத்தரங்கில் ஆசியா ஊடகவியல் கல்லூரி இயக்குநர் சசிகுமார் ஊடக அரசியலைப் புரிந்துகொள்வது குறித்து நிகழ்த்திய உரை இது. தமிழில்: அ. குமரேசன்)

நாட்டிற்கு உள்ளேயும் நாடு கடந்தும் ஊடகங்களின் நிலை குறித்த ஒரு புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது. இந்தியாவில் ஊடகச் சுதந்திரம், நாட்டின் சுதந்திரப்போராட்ட வெற்றியோடு இணைந்தே நிலைநாட்டப்பட்டது. விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற தலைவர்களில் பெரும்பாலோர் வழக்கறிஞர்களாகவோ, பத்திரிகையாளர்களாகவோ, இரண்டுமேயாகவோ இருந்தவர்கள்தான். காந்தி தனித்திறமை வாய்ந்த ஒரு பத்திரிகையாளர். அவர் ஒரே நேரத்தில் இண்டியன் ஒப்பீனியன், ஹரிஜன், நவஜீவன் என பல பத்திரிகைகளுக்கு அவர் ஆசிரியராகப் பணியாற்றியவர் அவர். அவரது சத்தியாக்கிரகம் என்ற கோட்பாடு அவருக்குத் திடுதிப்பென ஒரு நாள் உதித்துவிடவில்லை. பத்திரிகையாளராகத் தொடர்ந்து எழுதிவந்த பின்னணியில், படிப்படியாகவே அந்தக் கோட்பாடு உருவானது என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஒரு வலிமை வாய்ந்த ஆயுதமாகச் சுழன்ற அந்தக் கோட்பாடு நாட்டின் சுதந்திரத்தை ஈட்டித்தந்தது.

இவ்வாறு அரும்பாடுபட்டு வென்றெடுத்த ஊடகச் சுதந்திரம் சுதந்திர இந்தியாவில் பல சோதனைகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வந்திருக்கிறது. பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் பெரும் தாக்குதல் என்றால் அவசரநிலை ஆட்சியைத்தான் சொல்ல வேண்டும். மத்திய அரசு, மாநிலம் இரண்டிலுமே ஆட்சி நிர்வாகமும், சட்டமியற்றும் மன்றமும் பத்திரிகைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் விதிகளைக் கொண்டுவர முயன்றதுண்டு. அப்போதெல்லாம் இந்திய மக்கள்தான் ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் நடத்திய போராட்டத்தில் தோளோடு தோள் நின்று ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாத்தார்கள். ஆம், இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் கடுமையான போராட்டங்களின் பலனாகவே வென்றெடுக்கப்பட்டது.

யாரிடமிருந்து சுதந்திரம்?
இன்று நடப்பதென்ன? ஊடகச் சுதந்திரத்திற்காகப் போராடுவதா அல்லது ஊடகங்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடுவதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஊடகங்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு என்பது இன்று தலைகீழாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம். ஜனநாயகத்தின் காவலர்களாக, மாற்றத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று சுரண்டலின் காவலர்களாக, லாப வேட்டையின் தூதுவர்களாக மாறிப்போயிருப்பதைப் பார்க்கிறோம். நிதி மூலதனச் சூழலில் ஊடகங்கள் அப்பட்டமாக, லாபத்தை அதிகரிக்கும் வர்த்தக எந்திரங்களாக மாறிவிட்டன.

ஊடகங்களின் பணி, குறிப்பாகச் செய்தி ஊடகங்களின் பணி தலைகீழாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். ஜனநாயகத்தின் காவலர்களாக, மாற்றத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று வெறும் விற்பனைச் சரக்கு உற்பத்திக் கூடங்களாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். நிதி மூலதன காலகட்டத்தில் ஊடகங்கள், அதிகபட்ச லாபம் மட்டுமே குறியாகக் கொண்ட வர்த்தக நிறுவனங்களாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். கார்ல் மார்க்ஸ் கூறியதைப் போல, உழைப்பு என்பது அந்நியப்படுத்தப்படுகிற, வளர்ச்சிப்போக்குகளில் உழைப்பாளிகளுக்குப் பங்கில்லாமல் போகிற விற்பனைச் சரக்காக ஊடகம் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் ஒரு பெரிய கேள்வி எழுகிறது: ஊடகங்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடுவதா வேண்டாமா?

இந்த நிலை ஏற்பட்டதன் பின்னணியில் திட்டவட்டமான சூழல்களும் நிகழ்ச்சிப் போக்குகளும் உள்ளன. தொழிற்புரட்சிக் காலகட்டத்தைக் கண்ட உலகம், தகவல்தொழில்நுட்பப் புரட்சிக் காலகட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. தொழிற்புரட்சியின் ஒரு முக்கிய வடிவமாக அமெரிக்காவின் டெட்ராயிட் நகரில் அமைந்த ஃபோர்டு கார் தொழிற்சாலையில் கொண்டுவரப்பட்ட தயாரிப்பு நடைமுறையைக் கூறுவார்கள். தொழிற்சாலையின் அசெம்பிளி லைன் எனப்படும் எந்திர வரிசைப் பிரிவுகளில், காரின் பாகங்கள் ஒவ்வொன்றாகப் பொருத்தப்பட்டு இறுதியில் முழு கார் வெளியே வரும். இதை அன்று சோவியத் யூனியனில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த ஸ்டாலின், சோசலிச தொழில் வளர்ச்சிக்கேற்ப திட்டமிட்ட உற்பத்தி முறை என்ற வடிவில் பின்பற்ற நடவடிக்கை எடுத்தார். இந்தியாவிலும் இந்த உற்பத்திமுறை கொண்டுவரப்பட்டது. முதலாளித்துவ சரக்கு உற்பத்தியைப் பொறுத்தவரையில், அசெம்பிளி லைன் எந்திர வரிசையில் இந்த இந்த வேலைகளுக்கு இந்த இந்தத் தொழிலாளர்கள் என்று பிரிக்கப்பட்டுவிடுகிறார்கள்; தொழிலாளிகள் உயிரும் உணர்வுமற்ற கருவிகளாக  மாற்றப்படுகிறார்கள். தொழிலாளி இப்படி எந்திரத்தோடு எந்திரமாய், இறுதியில் என்ன பொருள் உருவாகிறது என்பதைக் கூட அறியாதவராய், மறையாணிகளை முடுக்கிக்கொண்டிருப்பதே  வாழ்க்கையாய் வார்க்கப்படுவதை, உலகம் போற்றும் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் தமது புகழ்பெற்ற மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தில் தமக்கே உரிய நையாண்டியோடு சித்தரித்திருப்பார்.

தொழிற்புரட்சிக் காலகட்டத்தில், முதலாளித்துவ அமைப்பின் மிகச்சிறந்த அடையாளமாகக் கருதப்பட்டவரான ஹென்ரி ஃபோர்டு, எந்த ஒரு வாடிக்கையாளரும் தான் வாங்குகிற கார் கறுப்பு வண்ணத்தில் இருக்கிற வரையில் அதை தான் விரும்புகிற எந்த ஒரு வண்ணத்திற்கும் மாற்றிக்கொள்ள முடியும், என்று கூறியதாகச் சொல்லப்படுவதுண்டு. ஏனென்றால் அப்போது அவருடைய தொழிற்சாலையில் உருவான கார்கள் எல்லாமே கறுப்பு வண்ணத்தில் மட்டுமே இருந்தன.  தொழிற்புரட்சிக் காலகட்டத்திலிருந்து தகவல் தொழில்நுட்பப் புரட்சிக் காலகட்டத்திற்கு வந்திருக்கிறோம். ஹென்ரி ஃபோர்டு அறிமுகப்படுத்திய ஒரே வகையான கார் உற்பத்தி முறையின் இடத்தை, இன்று உலகந்தழுவிய அளவில் ரூபர்ட் முர்டோச் நிறுவியுள்ள ஊடக பேராளுமை பிடித்திருப்பதைக் காண்கிறோம்.

இந்தியாவானாலும் சரி, உலகின் வேறு எந்த நாடானாலும் சரி, ஊடகம் ஒரே வகையான சரக்கை உற்பத்தி செய்யும் எந்திரமாக்கப்பட்டிருக்கிறது. செய்திகள், தகவல்கள் அனைத்தும் பொறுப்புணர்வற்ற பொழுபோக்குச் சரக்குகளாக்கப்படுகின்றன. அந்தச் சரக்கு உற்பத்தியின் நோக்கம், மாற்றங்களை ஏற்படுத்துவதல்ல, லாபத்தை அதிகரிப்பது மட்டுமே.

நிதி மூலதன காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கிற ஒரே மாற்றம், அன்றைக்கு ஃபோர்டியம் என்பதாக இருந்தது இன்றைக்கு முர்டோக்சியம் என மாறியிருப்பது மட்டும்தான். இது ஊடகம் குறித்த மதிப்பீட்டிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா போன்ற நாடுகளில் அரசு அதிகாரத்தின் மூன்று தூண்களாக ஆட்சிமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் ஆகிய மூன்று கட்டமைப்புகளும் இருக்க, ஊடகம் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது. இவற்றில் முதல் மூன்று தூண்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவை. ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்திற்கு பதிலளித்தாக வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் மக்களைச் சந்தித்தாக வேண்டியர்கள். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் உச்சநீதிமன்ற நீதிபதியைக் குற்றவாளியாக அறிவிக்க முடியும். அண்மையில் கூட, கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவரை நாடாளுமன்ற மாநிலங்களவை குற்றவாளியாக அறிவித்தது; அவர் பதவி விலகியதால் மக்களவையின் விசாரணைக்குத் தேவையில்லாமல் போனது.

நான்காவது தூணின் மவுனம்
இந்த மூன்றையும் கேள்வி கேட்கக்கூடிய நான்காவது தூணாகிய சுதந்திர ஊடகம், எந்தவகையிலும் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கவில்லை என்பதுதான் வேடிக்கை!  சட்டப்பூர்வமாக ஊடகம் பதிலளிக்கக்கடமைப்பட்டிருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஏனென்றால் அது சட்டப்பூர்வமானதாக இருக்குமானால், அதிகாரத்தின் மற்ற மூன்று கட்டமைப்புகள்தான் ஊடகத்தை விசாரணை செய்யும். ஆட்சியாளர்களுக்கு ஊடகம் கட்டுப்படுமானால் அங்கே ஊடகச்சுதந்திரம் பறிபோய்விடுகிறது எனக்கூறுவோம். நாடாளுமன்றம் கட்டுப்படுத்துமானால் அது ஊடகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்போம். நீதிமன்றம் கட்டுப்படுத்துமானால் அது நீதித்துறையின் தலையீடு என்று விமர்சிக்கப்படும்.

ஆனால், ஊடகம் தன் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டதாக இருக்க வேண்டாமா? அந்தப் பொறுப்பை ஊடகங்கள் தாங்களாகவே உருவாக்கிக்கொள்ள வேண்டாமா?
அந்த ஜனநாயகக் கடமையை மிகப் பெரும்பாலான ஊடகங்கள் தட்டிக்கழிக்கின்றன என்பதே என் குற்றச்சாட்டு. மக்கள் உரிமைகளின் காவலராய் இருப்பதற்கு மாறாக, முதலாளித்துவ சமுதாய அமைப்பில் ஆளும் வர்க்கத்தின் - சமுதாயத்தில் மிகச் சிறியதொரு பகுதியினரின் - நலன்களைப் பாதுகாக்கிற வேலையைத்தான் இந்த ஊடகங்கள் செய்கின்றன. நாட்டு மக்கள் மேலும் மேலும் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டவர்களாக இருப்பதை விட, அவர்களை வெறும் வணிகச் சரக்கு நுகர்வோராக மாற்றுவதற்குத்தான் ஊடகங்கள் உதவுகின்றன. வணிக ஏடுகளுக்கு நாம் வாசகர்களல்ல, தொலைக்காட்சிகளுக்கு நாம் பார்வையாளர்கள் அல்ல, வானொலிகளுக்கு நாம் நேயர்களல்ல. மாறாக, நாம் வெறும் வாடிக்கையாளர்கள்தான், நுகர்வோர்தான். அப்படித்தான் ஊடகங்கள் நம்மை நடத்துகின்றன. இப்படிப்பட்ட ஊடகங்களை ஜனநாயகக் காவலர்களாக உயர்த்திப் பிடிக்கத்தான் வேண்டுமா?

வரையறுக்காத சட்டம்
ஊடகங்களின் சட்டப்பூர்வ உரிமைகள் என்பவை விளக்கத்தின் அடிப்படையில் அமைந்தவையேயன்றி, சட்டப்படி வரையறுக்கப்பட்டவை அல்ல. இந்திய அரசமைப்பு சாசனத்தில் எங்கேயும் ஊடகங்களின் உரிமைகள் இவை என திட்டவட்டமாக சொல்லப்படவில்லை. அமெரிக்காவில் அப்படிப்பட்ட சட்டம் இருக்கிறது. அமெரிக்க அரசமைப்பு சாசனத்தில் நாடாளுமன்றம் ஒருபோதும் ஊடகங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் எதையும் நிறைவேற்றாது என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அரசமைப்பு சாசனத்தில் அவ்வாறு நேரடியாக இல்லை. அதன் அடிப்படை உரிமைகள் பிரிவில், 19 - 1 ஏ, ஜி ஆகிய உட்பிரிவுகளில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என கூறப்பட்டுள்ளது. அந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில்தான் ஊடகச் சுதந்திரம் விளக்கப்படுகிறது. இந்திய குடிமக்கள் எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடுவதற்கு, குறிப்பிட்ட கட்டுப்பாடுகளோடு சுதந்திரம் அளிக்கும் பிரிவுகளில் ஒன்றாகவே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் இருக்கிறது.

அரசமைப்பு சாசனத்தில் குறிப்பாக வரையறுக்கப்படாத ஒரு சுதந்திரத்தை ஊடகங்கள் அனுபவித்துக் கொண்டிருப்பது எப்படி?  நாம் வழங்கிய  - இந்திய மக்கள் வழங்கிய - சுதந்திரம் அது. ஊடகங்களுக்கு அப்படி ஒரு அறம் சார்ந்த உயர்ந்த இடத்தை வழங்கியவர்கள் நாம்தான். சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும், சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தை மேம்படுத்தும், சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தின் ரத்தமும் உயிர்த்துடிப்புமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையில் நாம் அந்த உயர்ந்த இடத்தை ஊடகங்களுக்கு வழங்கியிருக்கிறோம். ஆனால் ஊடகங்கள் வெறும் லாப வேட்டை வர்த்தக நிறுவனங்களாக, விற்பனைச் சரக்கு உற்பத்திக் கூடங்களாக மாறியிருக்கிறபோது, இப்படிப்பட்ட உயர்ந்த இடத்தை வழங்கியது சரிதானா என்று நாம் கேட்டாக வேண்டியிருக்கிறது.

ஹசாரே சித்திரம்
ஊடகங்கள் எவ்வாறு வர்க்க நலன்களோடு செயல்படுகின்றன என்பதைப் பார்ப்போம். எடுத்துக்காட்டாக, அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தையும், அதை இந்த ஊடகங்கள் எப்படி பெரிதுபடுத்தின என்பதையும் ஆய்வு செய்வோம். தலைநகர் தில்லியின் ராம்லீலா மைதானத்தில் அவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் கூடினார்கள் என்பது உண்மைதான். ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில் ஊடகங்கள், இன்னும் குறிப்பாக ஆங்கில தொலைக்காட்சிகள் அந்தச் செய்தியை எப்படி வெளியிட்டன? ஏதோ அந்த மைதானத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின. தில்லி தெருக்களில் பல மக்கள் இயக்கங்கள் லட்சக்கணக்கானோரைத் திரட்டியிருக்கின்றன. அண்மையில் கூட தொழிற்சங்க இயக்கங்கள் நடத்திய பேரணியில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம்  தொழிலாளர்கள் பங்கேற்றார்கள். ஆனால் அன்னா ஹசாரே இயக்கத்திற்குக் கொடுத்த முக்கியத்துவம் போல இந்த நிகழ்வுகளை ஊடகங்கள் வெளிப்படுத்தியது உண்டா? ஏன்?

ஏனென்றால் இது அதிகாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு ஏற்பாடுதான். அன்னா ஹசாரே இயக்கத்தை ஊடகங்கள் குடிமைச் சமூகத்தின் இயக்கமாக சித்தரித்தன. குடிமைச் சமூகம் என்பது அதிகார அமைப்புக்கு அப்பாற்பட்டதல்ல, அதற்கு எதிரானதுமல்ல. அண்டோனியோ கிராம்ஷி கூறுவது போல அதிகாரக் கட்டமைப்பின் ஒரு அங்கம்தான் குடிமைச் சமூகம்.  ஒரே அமைப்பின் இரண்டு அங்கங்களில் ஏற்பட்ட பதற்றத்தைத்தான் நாம் கண்டோம். ஒரே குடும்பத்தில் நடக்கிற சண்டையைப் போன்றதுதான் அரசுக்கும் குடிமைச் சமூகத்துக்கும் இடையே நடக்கிற மோதல். இரண்டுக்கும் ஒரே வர்க்க நலன்தான். இரண்டுக்கும் ஒரே குறுகிய சுயநல நோக்கம்தான்.

ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரண்டிருந்தவர்கள் யார்? அவரைப் பொறுத்தவரையில் ஒரு காந்தியவாதிதான், அவரது போராட்டத்துக்கு உள்நோக்கம் கற்பிக்க நான் விரும்பவில்லை. ஆனால் அவர் குறுகிய நோக்கமுள்ள சக்திகளால் கடத்தப்பட்டதாகவே நான் பார்க்கிறேன்.  அவருக்கு ஆதரவாகக் கூடியவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவருக்கு நெருக்கமாக நின்றவர்கள் சாமியார்கள். பாபா ராம்தேவ்கள், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீக்கள். ஒரு சுவாமியாக பார்க்கப்படாத சுவாமி அக்னிவேஷ் அங்கே இருந்தார். மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த வேறு பல சாமியார்களும் மடாதிபதிகளும் அங்கே இருந்தார்கள். தங்களுக்கென்று சொந்தமாகத் தீவுகளையே வைத்திருப்பவர்கள், தங்களுடைய கணக்குவழக்குகளை ஒருபோதும் தணிக்கைக்கு உட்படுத்தாதவர்கள் இவர்கள். அடுத்து அங்கே தெரிந்த முகங்கள் திரைப்பட நட்சத்திரங்களுக்குச் சொந்தமானவை. கறுப்புப் பணம் தொடங்குவதே அவர்களிடத்தில் இருந்துதான். கறுப்புப் பணம் என்றாலே பொதுமக்கள் மனதில் திரைப்பட நட்சத்திரங்கள்தான் நினைவுக்கு வருவார்கள். திரைப்படத் துறையே கறுப்புப் பணத்தில்தான் இயங்குகிறது என்பது மக்களுக்குத் தெரியும். இப்படிப்பட்ட சாமியார்களும் நட்சத்திரங்களும்தான் ஊழலை எதிர்ப்பதாக, கறுப்புப் பணத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு அங்கே கூடியிருந்தார்கள். அது உண்மையென நம்மை  நம்பவைப்பதற்கு இந்த ஊடகங்கள் முயன்றன. எந்த அளவுக்கு மிகைப்படுத்தப்பட்ட, பொய்மையான செய்திகளை அவை வெளியிட்டன என்பதைப் பார்த்தோம்.

இவை பெரிய ஊடகங்களா?
ஐந்து பெரிய ஆங்கில தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த செய்திகளை வெளியிட்ட விதத்தைப் பார்த்தால், நாட்டில் மிகப் பெரும்பாலான மக்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சிகள் இவைதான் என்ற எண்ணம்தான் ஏற்படும். உண்மையில் இந்த ஐந்து பெரிய ஆங்கில செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் உள்ள மொத்த பார்வையாளர்கள் எவ்வளவு தெரியுமா? வெறும் 12 விழுக்காடுதான். இவற்றில் எந்தவொரு நிறுவனத்திற்குமே ஒற்றை இலக்க விழுக்காட்டிற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் கிடையாது. மூன்று விழுக்காடு முதல் அதிக அளவாக ஐந்து விழுக்காடு வரைதான் சி.என்.என்., ஐ.பி.என்., டைம்ஸ் நவ், என்.டீ டி.வி, என எந்த ஆங்கில தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டாலும் இதற்குமேல் அவர்களுக்குப் பார்வையாளர்கள் கிடையாது. ஆனால்  தேசத்திற்கு நாங்கள்தான் இந்த செய்தியைக் கொண்டுவருகிறோம் என்பதாக அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டார்கள். இதுதான் இந்த வர்த்தக ஊடகங்களுடைய, நிதிமூலதனத்தினுடைய அராஜகம். இப்படிப்பட்ட ஊடகங்களின் சுதந்திரத்திற்காக இனி மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்களா? தங்களுடைய லாப அறுவடையை அதிகப்படுத்திக் கொள்வதற்காக இந்த ஊடகங்கள் இவ்வாறு செயல்படுவதை ஆதரித்து மக்கள் எதற்காக போராட வேண்டும்?

பெருகும் வதந்தி
தொலைக்காட்சி நிறுவனங்களின் இந்தப் பாதையை அச்சு ஊடகங்களாகிய பத்திரிகைகளும் பின்பற்றுகின்றன. இந்திய பத்திரிகைகளுக்கு நுறாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. ஆனால் தொலைக்காட்சி நிறுவனங்களின் வர்த்தக வெற்றியைக் கண்டு தங்களின் வழிமுறைகளை மாற்றிக் கொள்கின்றன. ஆகவேதான் பத்திரிகைகளில் வதந்திகளை அதிகமாகவும், செய்திகள் குறைவாகவும் வருகின்றன. எந்த நட்சத்திரம் எந்த நட்சத்திரத்தோடு போகிறார், மேலிடத்தில் நடப்பதென்ன, மது விருந்துக் கூடங்களில் என்ன நடக்கிறது, என்ற வகையிலான வதந்திகள் அதிக இடத்தைப் பிடிக்கின்றன. நாட்டு மக்களின் வாழ்க்கையை பாதிக்கிற பொருளாதாரக் கொள்கைள், மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் விளைவுகள் போன்றவை குறித்து பத்திரிகைகள் விவாதிப்பதில்லை.

எப்போதாவது, பட்டினிச் சாவு போன்ற பரபரப்பான நிகழ்வுகள் வருகிற போது மட்டுமே இதைப் பற்றி ஓரளவு எழுதப்படும். ஒரு பெரிய இயற்கைச் சீற்றம், தீ விபத்து, ரயில் விபத்து என நிகழ்கிற போது இந்தப் பிரச்சினைகள் குறித்தும் எழுதப்படும். ஆனால் வறுமையின் கதையை, பட்டினியின் வரலாற்றை, சாதியக் கொடுமைகளை, வர்க்க ஒடுக்குமுறைகளை, பாலினப் பாகுபாடுகளை, குழந்தை உழைப்பு அவலங்களை, விவசாயிகளிக் வீழ்ச்சியை, நிலமற்ற உழவர்களின் ஆதரவற்ற நிலையை, அன்றாடக் கூலிக்காக நடக்கும் போராட்டங்களை இந்த தொலைக்காட்சி ஊடகங்களும் பிரதிபலிப்பதில்லை, பத்திரிகை ஊடகங்களும் வெளிப்படுத்துவதில்லை.

காலப் பெட்டகம்
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அறிவுக்குப் பொருத்தமற்ற ஒரு செயலில் இறங்கினார். பல்வேறு செய்திகள், தகவல்கள், இலக்கியப் பதிவுகள், வரலாற்றுக் குறிப்புகள் கொண்ட காலப்பெட்டகம் ஒன்றை மண்ணில் புதைத்தார். பல ஆண்டுகள் கழித்து, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களால் சமுதாயம் அழியக்கூடுமானால், அதன்பின் வரக்கூடிய தலைமுறையினர் அந்தக் காலப்பெட்டகத்தை திறந்து பார்த்தால் நாடு எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதே அந்த நடவடிக்கையின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. இந்திய விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் நேரு குடும்பம் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தது என்று வருங்காலத் தலைமுறைக்கு சொல்கிற நோக்கம் அதற்குள் இருந்தது.

அதே போன்றதொரு காலப்பெட்டகம் இப்போது புதைக்கப்படுவதாக, இன்றைய தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் செய்திகளும் சித்தரிப்புகளும் அதற்குள் வைக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். ஐம்பது, நுறு ஆண்டுகளுக்குப் பிறகு வரக்கூடியவர்கள் அந்தப் பெட்டகத்தைத் திறந்து பார்த்தால் என்ன நினைப்பார்கள்? 21 ஆம் நுற்றாண்டின் தொடக்க கட்டத்தில் இந்தியாவில் பெரிய பெரிய நகரங்கள் மட்டுமே, உயரமான கட்டடங்கள் மட்டுமே இருந்ததாகத்தானே நினைப்பார்கள்? கிராமப்புற இந்தியா என ஒன்று இருந்ததாகவே தெரியாமல் போகும். கார்கள், இருசக்கர வாகனங்கள், சாப்பிட்ட உணவு செரிப்பதற்கான மருந்துகள்... என இந்திய மக்கள் வாழ்ந்ததாகத்தான் நினைப்பார்கள். இவையெல்லாம் நடுத்தரவர்க்க மக்களின் வாழ்க்கை. 70 முதல் 75 விழுக்காடு வரையிலான மக்கள் இந்த வட்டத்திற்கு வெளியேதான் வாழ்கிறார்கள் என்பது  காலப்பெட்டகத்தை பார்க்கிற எதிர்காலத் தலைமுறையினருக்கு இது தெரியாமலே போகும். இது அவர்களுடைய குற்றமா, இன்றைய ஊடகங்களின் குற்றமா?
இப்படிப்பட்ட ஊடகங்களின் சுதந்திரத்திற்காக நாம் போராட வேண்டுமா, அல்லது இப்படிப்பட்ட ஊடகங்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட வேண்டுமா?

அரசியல் முதலாளித்துவம்
இது ஒருபுறம் இருக்க, உலக அளவிலும் இந்தியாவிற்கு உள்ளேயும இன்னொரு அபாயகரமான நிகழ்ச்சிப்போக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் அரசியல் முதலாளித்துவம். இத்தாலியில் நடந்தது என்ன? அந்த நாட்டின் பிரதமர் குரோனி...... தனது சொந்த ஊடக நிறுவனங்களின் பலத்தின் பின்னணியில்தான் ஆட்சிக்கு வந்தார். அங்கே அவர் ஒரு பெரிய ஊடகப் பேரரசையே நடத்திக்கொண்டிருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் அதிபர் சர்க்கோஸி, நேரடியாக ஊடகங்களை நடத்தவில்லை என்றாலும், ஊடக முதலாளிகளில் 85 விழுக்காட்டினர் வரையில் நெருக்கமான தொடர்பு உள்ளவர். அண்டை நாடான தாய்லாந்தில் தக்ஷின் சினாவாத்ரா தனது சொந்த ஊடக நிறுவனங்களின் பலத்தில் ஆட்சிக்கு வந்தவர்தான். இப்போது அவருடைய சகோதரி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.

இவ்வாறு ஊடகங்களின் உடைமையாளர்களாக இருந்து அல்லது ஊடகங்களைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவது என்பது பல நாடுகளில் நடந்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் நாடுகளில், முதலில் கைப்பற்றப்படுவது எது என்றால் ஊடக நிறுவனங்கள் தான். வானொலி நிலையங்களையும் தொலைக்காட்சி நிறுவனங்களையும் கைப்பற்றிய பிறகுதான் நாடாளுமன்றத்தையோ, அதிபர் மாளிகையையோ ராணுவம் கைப்பற்றுகிறது. ஊடகத்தின் பலம் என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். முதலாளித்துவ சமுதாய அமைப்பில் அரசியல்வாதிகள் ஊடகங்களை உடைமையாக்கிக் கொள்கிறபோது எப்படிப்பட்ட பன்பாட்டுத் தாக்கங்களை அது ஏற்படுத்தும் என்று விளக்க வேண்டியதில்லை.

குழப்பும் தொலைக்காட்சிகள்
இந்தியாவிலும் - தமிழகத்திலும் - இதே போன்று நிகழ்வதைப் பார்க்கிறோம். தமிழகத்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான திமுக, அஇஅதிமுக இரண்டுமே தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்துகின்றன. இந்த இரு நிறுவனங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. சில நேரங்களில் இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் பார்வையாளர்களோடு பேசுவதைவிட தங்களுக்கிடையேயே பேசிக்கொள்வது போலத்தான் இருக்கிறது. வெளியே இருந்து வருகிற ஒருவர் இந்த இரு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை மாறி மாறிப் பார்ப்பார் என்றால் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது என்ற குழப்பம்தான் அவருக்கு மிஞ்சும்.

திமுக ஆட்சியில் இருக்கும்போது எல்லாமே நன்றாக நடந்து கொண்டிருப்பது போல் கலைஞர் தொலைக்காட்சியும், சன் குழுமத்தின் தொலைக்காட்சியும் சித்தரிக்கும். மழை வெள்ளம் ஏற்பட்டால் அரசு எப்படி அக்கறையோடும் விரைவாகவும் செயல்பட்டு மக்களை பாதுகாக்கிறது என்று இந்தத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டேயிருக்கும். ஜெயா தொலைக்காட்சி அரசாங்கத்தின் அலட்சியத்தால் எங்கும் சீரழிவுகளே நிகழ்வதாகக் கூறும். அதிமுக ஆட்சிக்கு வருகிறபோது இது அப்படியே இடம் மாறிவிடும்.   ஊடக உலகத்தைப் பொறுத்தவரையில் அரசியல் முதலாளித்துவம் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது. ஒவ்வொரு ஊடகமும் என்ன சொல்கிறது என்பதை நம்ப வேண்டியவர்களாகத்தான் நாம் இருக்கிறோமேயன்றி, எது உண்மை என்பது நமக்குத் தெரியப்போவதில்லை. ஏனெனில் வர்த்தக நோக்கமும் அரசியல் நோக்கமும்தான் அந்தச் செய்திகளைத் தீர்மானிக்கின்றன. வர்த்தக நோக்கம் என்பது மிக வலிமையானதாக இருக்கிறது.

பெரும்பாலான ஊடகங்கள் வர்த்தக ரீதியாக விளம்பர வருவாயைச் சார்ந்தே இயங்குகின்றன. ஆங்கில ஊடகங்களைப் பொறுத்தவரையில் அவற்றின் வருவாயில் 80 முதல் 85 விழுக்காடு வரை வர்த்தக விளம்பரங்களில் இருந்துதான் கிடைக்கிறது. பத்திரிகைகளுக்கு நீங்கள் தருகிற விலையில் இருந்தோ, தொலைக்காட்சிகளுக்கு செலுத்தும் சந்தாத் தொகையிலிருந்தோ கிடைப்பது 15 விழுக்காடுதான். யாருக்கு முக்கியத்துவம்?
ஆகவே ஊடக நிறுவனத்தைப் பொறுத்தவரையில் - அல்லது ஊடக முதலாளியைப் பொறுத்தவரையில் - யார் முக்கியமானவர்? சந்தா கொடுக்கிற வாசகரா அல்லது விளம்பரதாரரா என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. உங்களுடைய தேவைகள், உங்களுடைய பிரச்சனைகள், உங்களுடைய கோரிக்கைள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா அல்லது விளம்பரதாரர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா?

விளம்பரங்களைத் தருகிற உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் வர்த்தக நிறுவனங்கள், இந்திய மக்களின் வறுமை செய்தியாவதை விரும்புவதில்லை. வறிய நிலையில் மக்கள் வாடுகிறார்கள் என்ற செய்தியை வெளியிடாதீர்கள், எல்லாம் சுமூகமாக, சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற தோற்றத்தையே ஏற்படுத்துங்கள் என்றுதான் அவர்கள் வற்புறுத்துவார்கள். எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்ற கருத்தாக்கத்தை உருவாக்குவதே ஊடகங்களின் பணியாகிவிட்டது. இவ்வாறாக முன்பு ஊடகங்கள் எந்த நோக்கங்களுக்காக குரல் கொடுத்தனவோ அந்த நோக்கங்களில் இருந்து திசைமாற்றப்பட்டுவிட்டது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் அரசியல் முதலாளித்துவம்.

அரசியல் இயக்கங்கள் ஊடகங்களை நடத்தக் கூடாது என்பதல்ல எனது வாதம். ஆனால், வர்த்தகம், அரசியல் பின்னிப் பிணைந்த நோக்கத்தோடு, ஊடகத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிற சக்திகளாக அந்த நிறுவனங்கள் உருவெடுக்கிற போது செய்திகள் எப்படியெல்லாம்  திரிக்கப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டுவதே என் நோக்கம். வர்த்தக நோக்கம், அரசியல் முதலாளித்துவம் ஆகிய இரண்டு தீங்குகளுக்கும் இடையே நாம் மாட்டிக்கொள்கிறோம். அந்த நிகழ்ச்சிப்போக்கில் உண்மைத் தகவல்களிலிருந்து நாம் வெகுதொலைவுக்குக் கடத்தப்பட்டுவிடுகிறோம்.

தகவல் உரிமை
உண்மைத் தகவல்களைப் பெறுவது மக்களின் உரிமை. அவ்வகையில் நமது நாட்டில் நீண்டநெடும் போராட்டத்திற்கு பிறகு கொண்டுவரப்பட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த சட்டத்தைப் பயன்படுத்தி அரசுத் துறைகளிடம் இருந்து, பொதுவாக எளிதில் கிடைக்காத பல தகவல்களைப் பெற முடிகிறது என்பது உண்மை. சிலர் இதைப் பயன்படுத்தி சில நல்ல திட்டங்களைக் கூட முடக்க முயல்கிறார்கள் என்பதும் நடக்கிறது. ஆயினும் இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. அதே நேரத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் போலவே மக்களுக்கு இன்று மிகவும் தேவைப்படுவது என்னவென்றால் ஊடகங்களிடமிருந்து உண்மைத் தகவலை பெறுவதற்கான உரிமைதான். ஊடகங்கள் உண்மைத் தகவல்களைத் தரத் தவறுகின்றன என்றால், அவற்றை ஜனநாயகத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் செயல்படுகிற ஊடகங்கள் என்று இனியும் நாம் சொல்லிக்கொண்டிருக்க முடியாயாது.

விலகியது ஏன்?
ஊடகங்கள் தங்களது லட்சியப் பாதையிலிருந்து விலகியது ஏன்? காலையில் எந்தவொரு தொலைக்காட்சியைப் பார்த்தாலும், எந்தவொரு பெரிய பத்திரிகையைப் புரட்டினாலும் ஒரே மாதிரியான செய்திகளே ஆக்கிரமிப்பது எப்படி? அதுவும் ஒரே ஒழுங்குவரிசையில் தரப்படுவது எப்படி? இது ஒன்றும் தற்செயலானது அல்ல. அதற்காக ஊடக நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று கலந்தாலோசித்து ஒரே மாதிரியான செய்திகளைக் கொடுக்கின்றன என்றெல்லாம் நான் சொல்லவில்லை. விவிலியத்தில் மோசஸ் கடவுளின் பத்துக் கட்டளைகளோடு வந்தது போல, இன்றைக்கு இதுதான் தலைப்புச் செய்தி, இதுதான் அடுத்த செய்தி என்றெல்லாம் யாரும் தீர்மானித்துச் சொல்வதில்லை. ஆனால் ஊடகங்களுக்கிடேயே ஒருவகையான ஒருங்கிணைப்பு இருக்கிறது. நீ எந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாயோ அதற்கு நானும் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பதுபோன்ற ஏற்பாடு இருக்கிறது. பத்திரிகையாளர் மன்றம் போன்ற இடங்களில் இயல்பாக அந்தக் கலந்துரையாடல் நடக்கும்.  அதைச் செய்யவில்லை என்றால், ஒரு செய்தியை ஒரு நிறுவனம் வெளியிடத் தவறினால் அந்தச் செய்தியை இன்னொரு நிறுவனம் வெளியிட்டுவிடும்.

தொலைக்காட்சியோ, பத்திரிகையோ அதன் ஆசிரியர் குழு கூட்டங்களில், தலைமையாசிரியர், விட்டுப்போன முக்கியமான செய்தியைக் குறிப்பிடும்போது நாம் இந்தக் கதையை தவற விட்டுவிட்டோம் என்று சொல்வதைக் கேட்கலாம். அவர்களுக்கு செய்திகள் வெறும் கதைகள்தான் - அதாவது ஸ்டோரிகள்தான். அப்படி அவர்கள் சொல்லிக்காட்டுகிற தவறிப்போன செய்தி என்பது, உலகத்தில் அல்லது உள்நாட்டில் எங்கெங்கோ நடந்திருக்கக் கூடிய முக்கியமான நிகழ்வுகளை அல்ல. எங்கும் எப்போதும் ஏதாவது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அவை அனைத்தையும் செய்தியாக்கிவிட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். நாம் தவற விட்டுவிட்டோம் என்று அவர்கள் சொல்வது, வேறொரு ஊடகத்தில் இடம்பெற்ற செய்தியைத்தான். ஒரு ஊடகத்தில் வருகிற செய்தியை இன்னொரு ஊடகம் விட்டுவிடக் கூடாது என்ற நிலைபாட்டில் இருந்துதான் ஒரே மாதிரியான செய்திகள் வெளியாகின்றன. இந்த நிகழ்ச்சிப்போக்கில் பார்வையாளர்களாகிய நாம்தான் ஏமாளிகளாக ஒரே செய்தியை வெவ்வேறு அலைவரிசைகளில்  பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தனியார் வருகையால் மாற்றம் உண்டா?

ஒரு காலகட்டம் வரையில் இங்கு அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. அதில் அரசாங்கத்திற்குச் சாதகமான, ஆட்சியாளர்களுக்குச் சாதகமான செய்திகள் மட்டுமே ஒளிபரப்பாகின என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்படி ஊடகத்தில் அரசின் ஏகபோக ஆதிக்கம் என்பதை ஏற்க முடியாதுதான். ஆனால், இப்போது சுமார் 300 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வந்துவிட்டன. அவையெல்லாம் ஒன்றுக்கொன்று மாறுபட்ட செய்திகளைத்தான் தருகின்றனவா? ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிகழ்ச்சிகளைத்தான் வெளியிடுகின்றனவா? அனைத்து தனியார் ஊடகங்களும் சேர்ந்து, ஒரு ஒப்பந்தக்கூட்டு போல அமைத்துக்கொண்டு செயல்படுவதுபோல இருக்கிறது. அதனால்தான் ஒரே மாதிரியான செய்திகள், ஒரே ஒழுங்குமுறையில் வருகின்றன. நாம் அந்தச் செய்திகளையெல்லாம் ஏற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது. அவையெல்லாம் உண்மையான செய்திகள்தான் என்று நம்பவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம் என்பதுதான் உண்மை. ஊடகங்களின் இந்தப் போக்கு இன்றைய நிதிமூலதனச் சூழலில் மேலும் மேலும் முற்றுகிறது. ஏனென்றால் ஊடகங்களும் வர்த்தகமயமாக்கப்பட்டு, நல்ல லாபம் ஈட்டியாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் நிலைமை என்பதை நாம் புரிந்துகொள்வதும் முக்கியம்; அதே வேளையில் இந்த நிலைமையை மாற்றுவதற்கு என்ன செய்யப்போகிறோம் என்பதும் முக்கியம். நிலைமையை ஆராய்கிற கட்டம் முடிந்துவிட்டது, அதை மாற்றுவதற்கான கட்டம் வந்துவிட்டது என்றார் கார்ல் மார்க்ஸ்.

மார்க்சியம் ஊடகச்சுதந்திரத்தை மறுக்கிறதா?
பொதுவாக மார்க்சியம் என்றாலே அது ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற ஒரு தவறான சித்தரிப்பு பரப்பப்பட்டிருக்கிறது. உண்மை என்னவென்றால், ஊடகச் சுதந்திரத்திற்காக வாதாடியவர், போராடியவர் மார்க்ஸ். முதலில் அவரே ஒரு ஊடகவியலாளர்தான் - பத்திரிகையாளர்தான். தனது வருவாய்க்காக அவர் செய்த ஒரே தொழில் பத்திரிகையாளராகப் பணியாற்றியதுதான். அவர் ரைனிஷ்சஸ் ஸெய்டுங் என்ற ஜெர்மன் மொழிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அது பிரஷ்ய அரசின் சர்வாதிகாரம் கோலோச்சிய காலம். கடுமையான தணிக்கை விதிகள் செயல்படுத்தப்பட்ட காலம். அதை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார் மார்க்ஸ். அதனாலேயே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற அவர் அங்கேயும் ஒரு பத்திரிகையில் சிறிதுகாலம் பணியாற்றினார். லண்டனில் 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கை ஆவணத்தை வெளியிட்ட பிறகு, திரும்பி வந்து நியூ ரைனிஷ்சஸ் ஸெய்டுங் என்ற பத்திரிகையை அவரே தொடங்கி அதிலே எழுதிவந்தார். குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடியேறிய அவருக்கு, அவரது உற்ற நண்பரும் மார்க்சிய மூலவர்களில் ஒருவருமான ஃபிரடெரிக் எங்கெல்ஸ் உதவினார் என்ற அளவில்தான் நாம் தெரிந்துவைத்திருக்கிறோம். ஆனால் மார்க்ஸ் அப்போதும், அமெரிக்காவிலிருந்து வெளியான நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் என்ற பத்திரிகைக்கு ஐரோப்பிய தலைமைச் செய்தியாளராகப் பணியாற்றினார். அப்போது ஸ்பெயின் உள்நாட்டுப்போர் பற்றி, லண்டன் தொழிலாளர் பற்றி, இந்தியாவைப் பற்றி, சீனாவைப் பற்றி... என ஏராளமான கட்டுரைகளையும் அரசியல் விமர்சனங்களையும் எழுதினார். அப்போது அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் ரெவல்யூசன் அன் கவுன்ட்டர் ரெவல்யூசன் (புரட்சியும் எதிர்ப்புரட்சியும்) என்ற புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

கார்ல் மார்க்ஸ் ஊடகக்காரராகப் பணியாற்றினார் என்ற தகவலை விடவும், ஊடகவியல் குறித்து அவர் என்ன சொன்னார் என்பது முக்கியம் என்று நினைக்கிறேன். பத்திரிகைத் தணிக்கை பற்றிய ஒரு விவாதத்தின்போது அவர், தணிக்கை ஒருபோதும் ஒரு நன்னெறியாகாது, அது சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் கூட. அடிமைத்தனம் சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் அது எப்படி ஒரு நன்னெறியாகாதோ அதைப் போலத்தான் தணிக்கையும், (அப்போது பல நாடுகளில் அடிமைமுறை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது) என்று சுதந்திர எழுத்துக்காகக் குரல் கொடுத்தார் மார்க்ஸ்.

உழைப்புச் சுரண்டல் பற்றியும், அதில் தொழிலாளி ஆன்மா இல்லாத சடப்பொருளாக அந்நியமாக்கப்படுவது பற்றியும், நிறைய எழுதிய அவர், இதழியலாராகப் பணிபுரிகிறபோது இவ்வாறு அந்நியமாக்கப்படுவது நிகழ்வதில்லை. ஏனென்றால் இதழியல் ஒரு விற்பனைச் சரக்கு அல்ல; அது மாற்றத்துக்கான ஒரு பங்களிப்பைச் செய்கிறது, என்று கூறினார். ஊடகங்களின் சுதந்திரமான செயல்பாட்டை வலியுறுத்திய அவர், சுதந்திரமான இதழியலில் கிடைக்கிற சரக்கு மோசமானதாக இருந்தாலும் அது நல்லதுதான், ஆனால் தணிக்கை செய்து கிடைப்பது நல்ல சரக்கானாலும் அது மோசமானது என்றார். அதே வேளையில், மக்களுக்கான இதழியல் என்பதையே மார்க்ஸ் உயர்த்திப் பிடித்தார்.

ஊடகச் சுதந்திரத்தை அவர் இந்த அளவுக்கு வலியுறுத்தியபோதிலும் மார்க்சியம் அந்தச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற தவறான கருத்து பரவியது எப்படி? சோவியத் புரட்சி வெற்றி பெற்று, போல்ஷ்விக்குகள் ஆட்சி ஏற்பட்ட பிறகு, 1920ம் ஆண்டுகளில், மக்களின் அரசு அமைக்கப்பட்டுவிட்டதால் இனி அரசுக்கு எதிரான செய்திகள் வெளியாக வேண்டிய தேவை இல்லை என்ற கருத்து உருவானது. அதனால் ஊடகச்சுதந்திரம் என்ற கண்ணோட்டம் அங்கே ஓரங்கட்டப்பட்டது. வரலாற்றின் ஒரு சந்திப்பு முனையில் ஏற்பட்ட ஒரு சூழல் அது. அதைப் பயன்படுத்திக்கொண்டு முதலாளித்துவ ஊடகங்கள் மார்க்சியத்தைப் பற்றிய தவறான சித்திரத்தைப் பரப்பிவிட்டன. சோவியத் யூனியன் அனுபவத்திலிருந்து உலகம் வெகுதொலைவு வந்துவிட்ட இன்றைய சூழலில் ஊடகம் குறித்த அப்படிப்பட்ட கண்ணோட்டம் தேவையில்லை என்று மார்க்சிய ஆசான்களான ரோஸா லக்ஸம்பர்க், அன்டோனியோ கிராம்ஷி உள்ளிட்டவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

இந்திய ஊடகங்கள்
இந்தியாவில் ஊடக அரசியல் குறித்து விவாதிக்கிறபோது நாம் இங்குள்ள முதலாளித்துவ ஊடகங்களைத்தான் எடுத்துக்கொள்கிறோம். இவர்களுடைய வர்க்க நலனும் வர்த்தக நலனும் சார்ந்த வெளியீடுகளையும் சித்தரிப்புகளையும் திசைதிருப்பல்களையும் எதிர்கொள்ள, மார்க்ஸ் விரும்பியதைப் போல் மக்கள் ஊடகத்தை வளர்ப்பதே வழி. முதலாளித்துவ சக்திகளின் பிடியிலிருந்து ஊடகங்களை மீட்க வேண்டிய தேவை இருக்கிறது. ஊடகங்கள் மீண்டும் மக்களை பிரதிபலிப்பவையாக, மக்களின் குரலை எதிரொலிப்பவையாக மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. பாட்டாளிவர்க்கத்தின் தலைமையில் சுதந்திரமான ஊடகம் என்ற மார்க்சியக் கருத்தாக்கத்தை வலுவாக முன்வைக்கிறார் கிராம்ஷி.

முதலாளித்துவத்தின் பண்பாட்டு ஆளுமை இன்று மக்களின் கலை, இலக்கியம் அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது. அது பற்றிப் பேசுவதாலும், கவலைப்படுவதாலும், விமர்சிப்பதாலும், விவாதிப்பதாலும் மட்டும் முதலாளித்துவத்தின் பண்பாட்டு ஆளுமையை எதிர்கொண்டுவிட முடியாது. ஒரு எதிர் ஆளுமையை - பாட்டாளி வர்க்கத்தின் பண்பாட்டு ஆளுமையை நிலைநாட்டுவதன் மூலமாக மட்டுமே முதலாளித்துவ ஆளுமையை எதிர்த்திட முடியும். இந்தியாவின் பெரும் ஊடகங்களும் மக்களிடமிருந்து விலகி, மக்களின் உண்மை வாழ்க்கையிலிருந்து தொடர்பு அறுந்து போயிருக்கிற  நிலையில், ஊடகங்களின் வரலாற்று லட்சியங்களை மீண்டும் நிலைநாட்டியாக வேண்டியிருக்கிறது. முதலாளித்துவக் கட்டமைப்பிலேயே கூட அந்த லட்சியங்களை மறுபடியும் உயர்த்தியாக வேண்டியிருக்கிறது. ரோஸா லக்ஸம்பர்க் போன்றோர் முன்வைப்பது போல், ஊடகங்களின் உரிமைகளுக்காகப் போராடுவதும் மார்க்சிய மரபில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

ஆகவே, புதிய கண்ணோட்டத்தில் ஊடகச் சுதந்திரம் பற்றிய விவாதங்களை முற்போக்கு சக்திகள் நடத்தியாக வேண்டும். அந்த விவாதங்கள் நாடுதழுவிய அளவில் நடந்தாக வேண்டும். ஒரு நல்வாய்ப்பாக நாம் இன்று ஒரு கணினி சார் தொழில்நுட்ப காலகட்டத்தில் இருக்கிறோம். முதலாளித்துவ ஊடகக் கோட்டைவாசிகள் நம்மை அனுமதித்துவிட மாட்டார்கள். முதலாளித்துவ ஊடகங்களை நாம் நெருங்கிவிட முடியாது. மக்கள் கிளர்ச்சி, உள்நாட்டுப் போர் போன்ற சூழல்கள் ஏற்படுகிற இடங்களில் வேண்டுமானால் முதலாளித்துவ ஊடகங்களைக் கைப்பற்றுவதும் நடக்கும்.

டிஜிட்டல் புரட்சி
ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் முற்றிலுமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். கைப்பேசி குறுந்தகவல்களில் பரவுகிற செய்திகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும், டிஜிட்டல் புரட்சி நுட்பங்களைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரப்புவதில் முன்போல வசதி படைத்தவர்கள், வசதியற்றவர்கள் என்ற பாகுபாடு இல்லை என்பதையும் அண்மைக்கால அனுபவங்கள் காட்டுகின்றன. கணினியைக் கையாள்வது கூட அதற்கான வாய்ப்புகளைப் பொறுத்ததாக இருக்கிறது, ஆனால் கைப்பேசியை இன்று பெரும்பாலானவர்கள் கையாள முடிகிறது. ஊடகவியலின் பொருளே கூட பெருமளவுக்கு மாறியிருக்கிறது. ஊடகமொழி கூட வெகுவாக மாறியிருக்கிறது. தீக்கதிர் உள்ளிட்ட முற்போக்கான ஊடகங்கள் அந்தத் தொழில்நுட்ப வாய்ப்புகளைக் கைக்கொண்டு, வெகு வேகமாக முன்னேறிச் செல்ல முடியும். இந்தத் தொழில்நுட்பம் மலிவானது, ஜனநாயகப்பூர்வமானது, எல்லோருக்குக் கட்டுப்படியாகக்கூடியது, அனைவரும் பங்கேற்கக்கூடியது. இணைய வழி சமூகத் தொடர்புத் தளங்களில் பல தரப்பினரும் ஈடுபட முடிகிறது.

இந்த டிஜிட்டல் நுட்பங்களை உள்வாங்கிக்கொண்டு வசப்படுத்துவதன் மூலம், சுதந்திர ஊடகத்தின் மாண்புகளை மீட்டெடுக்க முடியும். எங்கெல்ஸ் கூறுவது போல், முதலாளித்துவ ஊடகங்களின் பிடியிலிருந்து விடுபட்ட, மக்களின் சுதந்திர ஊடகத்தை உயர்ந்தெழச் செய்யமுடியும். முதலாளித்துவ ஊடகங்கள் நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படும் என்ற மாயைகள் தேவையில்லை. அவர்களுக்கு அவர்களது வர்த்தகமும் லாபமும்தான் இலக்கு. மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் கவலைகளையும் குரலையும்தான் அவர்கள் எதிரொலிப்பார்கள் - அன்னா ஹசாரே செய்திகளில் நாம் இதைத்தான் பார்த்தோம். மக்களின் உண்மையான வலியை, பசியை, வேதனையை, துயரத்தை, கண்ணீரை மக்களின் ஊடகம் மட்டுமே வெளிப்படுத்தும். மக்களின் ஊடகம் விளம்பர வருவாயை நம்பியிராமல், வாசகர்களின் ஆதரவைச் சார்ந்தே தழைத்திருக்க முடியும்.

உலகம் தொழில்புரட்சிக் காலத்திலிருந்து தகவல் தொழில்நுட்பப்புரட்சிக் காலத்திற்கு மாறியிருக்கிறபோது, முற்போக்கு சக்திகளுக்கும் மாற்று வழிகள் தேவைப்படுகின்றன. மிகப்பெரும் பண்பாட்டு ஆளுமையை நிலைநாட்டுவதற்கு தொழில்நுட்பப் புரட்சியைக் கைவசப்படுத்தியாக வேண்டும் என்று கருதுகிறேன். மார்க்கியப் பார்வையில் இன்று பண்பாட்டு ஆளுமை என்பது பொருளாதார ஆளுமையைப் போலவே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

ஊடகம் உண்மையைச் சொல்லவில்லை என்றால், மக்களின் உண்மை வாழ்க்கையைச் சொல்லவில்லை என்றால் அது வெறும் பொழுதுபோக்காக, நுகர்பொருளாகவே முடிந்துவிடும். ஊடகத்தின் உண்மையான மாண்பையும் மரபையும் மீட்கிற கனவு மக்கள் ஊடக இயக்கத்தினால் மட்டுமே மெய்ப்படும்.

(மாநாட்டில் இந்த உரையினைத் தமிழில் சுருக்கமாகச் சொல்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த முழு உரை செம்மலர் அக்டோபர் 2011 இதழில் வெளியாகியுள்ளது,)

Thursday 3 November 2011

ஊடகங்களை உலுக்கும் ஒரு அதிர்வு



நாட்டில் சில அமைப்புகள் இருப்பது அவற்றின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஏதாவது சலசலப்பை ஏற்படுத்துகிறபோதுதான் மக்களுக்குத் தெரியவரும். தேர்தல் ஆணையம் என இருப்பதும், அதற்கு இவ்வளவு அதிகாரங்கள் இருபப்பதும் முன்பு டி.என். சேஷன் எடுத்த சில அதிரடி நடவடிக்கைகளால் தெரியவந்தது. அண்மையில் எஸ்.ஒய். குரேஷி குழுவினரால் தேர்தல் ஆணையத்தால் என்ன செய்ய முடியும் என்பது மேலும் தெளிவாகப் புலப்பட்டது. அதே போலத்தான் இதுவரையில் பத்திரிகை வட்டாரங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த பத்திரிகை மன்றம் (பிரஸ் கவுன்சில்) குறித்து இன்று பலருக்கும் தெரியவந்திருக்கிறது. அதற்குக் காரணம் அதன் தலைவரான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஊடகங்கள் குறித்து - குறிப்பாக மின்னணு ஊடகங்கள் குறித்து - தெரிவித்த கருத்துகள்தாம். அது கூட கண்டுகொள்ளப்படாமல் போயிருக்கும்; ஆனால் மின்னணு ஊடக நிறுவனங்கள் சார்பாக ஊடக ஆசிரியர்கள் அமைப்பு (எடிட்டர்ஸ் கில்டு) அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதன் மூலம் கட்ஜூ கூறியதைக் கவனிக்காதவர்களும் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரண் தப்பார் நேர்காணலில் அவர் அப்படி என்னதானப்பா சொல்லிவிட்டார் என்று கவனிக்க வைத்திருக்கிறது.

அவர் அப்படி என்னதான் சொல்லிவிட்டார்?

"... மக்கள் நலனுக்காக ஊடகங்கள் செயல்பட வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செயல்படவில்லை. சில நேரங்களில் மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதையும் பார்க்கிறேன்... நிலப்பிரபுத்துவ சமுதாயமாக இருந்த இந்தியா இன்று நவீன தொழில் சார் சமுதாயமாக மாறிக்கொண்டிருக்கிற காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வலி மிகுந்த காலகட்டம் இது. முன்பு ஐரோப்பா இத்தகைய மாற்றத்தைச் சந்தித்தபோது மக்களுக்கு அந்த வலியைக் குறைக்கும் வகையில் ஐரோப்பிய ஊடகங்கள் செயல்பட்டன. இங்கே தலைகீழாக நடைபெறுகிறது...

"... பற்றி எரியும் உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை ஊடகங்கள் திசை திருப்புகின்றன. நம் மக்களில் 80 விழுக்காட்டினர் வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் அந்தப் பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து தீர்வு காணத் தூண்டாமல் திசைதிருப்புகின்றன. திரைப்பட நட்சத்திரங்கள், அழகிப்போட்டிகள், கிரிக்கெட் போன்ற விசயங்களைப் பெரிதாக்கி அவை மட்டுமே நாட்டுக்கே முக்கியமானவை என்பதுபோன்ற மன மயக்கத்தை ஏற்படுத்துகின்றன...
"அநேக நேரங்களில் ஊடகங்கள் மக்களைப் பிளவுபடுத்துகின்றன... ஒரு ஊரில் குண்டுவெடித்தால் அடுத்து ஒரு மணி நேரத்திற்குள், குண்டுவைத்தது நாங்கள்தான் என்று இந்தியன் முஜாஹிதீன் கூறுகிறது; அல்லது ஜய்ஸ் இ முகமத் கூறுகிறது, அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் கூறுகிறது என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை தொலைக்காட்சிகள் கூறுகின்றன. அதற்குள் எப்படித் தெரிந்தது என்றால் குறுந்தகவல் வந்தது, மின்னஞ்சல் வந்தது என்கிறார்கள். இதையெல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப இயலும். விஷமிகள் அனுப்பியிருக்கலாம். ஆனால் தொலைக்காட்சிகள் அதைப் பெரிதாகக் காட்டி, முஸ்லிம்கள் எல்லோருமே குண்டுவைக்கிற தீவிரவாதிகள்தான் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தையே ஒட்டுமொத்தமாக அசுரர்கள் என்பது போலச் சித்தரிக்கின்றன...

"... அறிவியல் சிந்தனையைத் தூண்டுவதற்கு மாறாக சோதிடம், மூட நம்பிக்கை என அறிவியலுக்குப் புறம்பானவற்றைப் பரப்புகின்றன ஊடகங்கள். ஏற்கெனவே நம் நாட்டு மக்களில் 80 விழுக்காட்டினர் சாதி, மதம், மூடநம்பிக்கைகளில் சிக்கி மனதளவில் பின்தங்கியிருக்கிறார்கள். அந்த மாயைகளிலிருந்து மக்களை விடுவித்து முற்போக்கான எண்ணங்கள் வளர துண்ட வேண்டாமா? ஆனால் ஊடகங்கள் மக்களை மேலும் மடமையில் தள்ளும் வேலையைத்தான் செய்கின்றன..."

-இப்படியாக ஊடகங்களின் சமூகப் பொறுப்பின்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார் கட்ஜூ. இதுவரையில் ஊடகங்களை விமர்சிக்கிற கலை இலக்கியவாதிகள், ஆய்வாளர்கள், சமூகவியலாளர்கள் போன்றோர்தான் இத்தகைய கருத்துகளைக் கூறிவந்தார்கள். முதல் முறையாக, பத்திரிகைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கென்றே உள்ள ஒரு அமைப்பின் தலைவரே சொல்லியிருக்கிறார் என்பதால் இக்கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

நடுநிலையாக இருக்க வேண்டிய ஒரு அமைப்பின் தலைவர் இப்படி வெளிப்படையாக ஊடகங்களை விமர்சிக்கலாமா என்று மேற்படி ஊடக ஆசிரியர்கள் அமைப்பு கேட்கிறது. ஊடகச் சுதந்திர ஆதரவாளர்களும் கேட்கிறார்கள். ஆனால், சுதந்திரம் என்றால் பொறுப்பற்றிருப்பது என்ற பொருளல்ல. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பல நிதிபதிகள் பொது நிகழ்ச்சிகளில் ஊழல், அரசின் பொறுப்பின்மை, சாதிப்பாகுபாடு, ஆணாதிக்க வக்கிரம் போன்றவற்றைச் சாடிப்பேசியிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் நடுநிலை தவறிவிட்டார்கள் என்று விமர்சிக்க முடியுமா? தேர்தல் ஆணையத் தலைவர் பல கட்சிகளின் முறைகேடுகள் குறித்துக் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். நடுநிலை தவறிவிட்டதாகக் கட்சிகள் அவரைத் தாக்க முடியுமா?

ஊடக நிறுவனங்களுக்கு மட்டும் கோபம் வருவது ஏன்? பத்திரிகைகள் மன்றத் தலைவர் தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார், என்கிற அளவுக்கு ஆசிரியர்கள் அமைப்பு கூறியிருக்கிறது. கருத்துச் சுதந்திரம் இந்திய ஊடகங்களின் சிறப்பான உரிமை, அதைப் பறிப்பதற்கு இவர் யார் என்பது போல தாக்கியிருக்கிறது. அவரது விமர்சனங்கள் குறித்து எதுவும் சொல்லவில்லை.
தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட சிலரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு சாதகமாகச் செய்திகள் வெளியிட்ட விலைகொடுக்கப்பட்ட செய்திகள் (பெய்டு நியூஸ்) கலாச்சாரம் பற்றியும் கட்ஜூ கருத்துக்கூறியிருக்கிறார். இதைப் பற்றியும் ஆசிரியர்கள் அமைப்பு மறுப்பேதும் சொல்லவில்லை.

அவர் தனக்கு ஊடகங்கள் மீது மரியாதை இல்லை என்று கூட கரண் தப்பாரிடம் கூறியிருக்கிறார். பத்திரிகைகளுக்கான அமைப்புக்கே தலைவராக வந்தபின் இப்படிப்பட்ட சொற்களை அவர் தவிர்த்திருக்க வேண்டும்தான். ஆனால் அதனால் மட்டும் இவர்களுக்குக் கோபம் வந்துவிடவில்லை. ஆழமாகப் போய்ப்பார்த்தால்தான் இவர்களுடைய கோபம் அவரது மேற்படி கருத்துகளின் மேல் அல்ல என்பது தெரியும். வேறு என்ன கோபம்? மின்னணு ஊடகங்களுக்கும் ஒரு கண்காணிப்பு ஏற்பாடு தேவை என்று அவர் கூறியிருக்கிறார். தற்போதை பத்திரிகை மன்றத்தையே ஊடக மன்றமாக (மீடியா கவுன்சில்) மாற்றிவிடலாம் என்றும், அது குறித்து பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் கட்ஜூ கூறியிருக்கிறார். இதுதான் இவர்களுக்கு இடிக்கிறது - கொஞ்சம் கடுமையாகவே.

தவறு செய்யும் ஊடகங்களுக்கான அரசு விளம்பரங்களைத் தடை செய்வது உள்ளிட்ட அதிகாரங்கள் இந்த மன்றத்திற்குத் தரப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதெல்லாம் சேர்ந்துதான் ஊடக முதலாளிகளைக் கடுப்படித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது ஒன்றும் கடினமானதல்ல.
பத்திரிகைகளைக் கண்காணிக்க ஒரு மன்றம் இருக்கலாம் என்றால் தொலைக்காட்சி, இணையத்தள ஏடுகள் உள்ளிட்ட மின்னணு ஊடகங்களுக்கு ஏன் ஒரு அமைப்பு இருக்கக் கூடாது? எல்லாவற்றுக்குமாக ஒரே ஊடக மன்றம் ஏன் ஏற்படுத்தப்படக் கூடாது?

பத்திரிகைச் சுதந்திரம், பத்திரிகை தர்மம் என்ற பதங்கள் அடிக்கடி அடிபடுவதுண்டு. ஆனால் இந்த இரண்டும் என்ன என்பது இதுவரையில் வரையறுக்கப்படவே இல்லை. இவற்றை வரைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்பாடு செய்த உலக அளவிலான மாநாடுகள் எந்த முடிவும் எடுக்க முடியாமல் கலைந்துவிட்டன. அதற்குக் காரணம், மேற்கத்திய ஊடக முதலாளிகள் - குறிப்பாக அமெரிக்க முதலாளிகள் - சுதந்திரமாகச் செய்திகளை வெளியிடுவது, பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டுமேயல்லாமல், பத்திரிகைகளின் பொறுப்புணர்வு குறித்து விவாதிக்கக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டதுதான்.

அதே வழியில்தான் இந்தியாவின் இன்றைய பெரு மூலதன ஊடக நிறுவனங்கள் செல்ல விரும்புகின்றன. எந்தச் செய்தியையும் எப்படி வேண்டுமானாலும் வெளியிடுவோம், அதை யாரும் தட்டிக்கேட்கக் கூடாது என்று வாதிடுகின்றன. தட்டிக்கேட்க ஒரு அமைப்பு இருக்குமானால், மக்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்து மூளைச்சலவை செய்வது போல் சிலரைத் திடீர் மகான்களாக்குவது, மக்களுக்காகவே இயங்குவோர் மீது அவநம்பிக்கைகளைப் பரப்புவது போன்ற தற்போதைய சேவைகளைத் தொடர முடியாமல் போகும் அல்லவா?

மார்க்கண்டேய கட்ஜூ கூறுவது போன்ற அதிகாரங்கள் அந்த அமைப்புக்குத் தரப்பட வேண்டுமா என்பதை வேண்டுமானால் விவாதிக்கலாம். ஆனால், பன்முகப் பண்பாடுகள் கொண்ட இந்தியாவில் இப்படியொரு கண்காணிப்பு அமைப்பு தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஊடகங்களுக்கு பயம் தேவை என்றும் அவர் கூறியிருக்கிறார். அந்த பயம் மக்களை நினைத்தும் சமுதாயத்தை நினைத்துமே வர வேண்டும்.

அத்தகைய ஒரு வளர்ச்சிக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரு விவாதத்துக்கு ஏற்படுத்தும் அதிர்வலைகளை மார்க்கண்டேய கட்ஜூ ஏற்படுத்தியிருக்கிறார் என்பது உண்மை.

Sunday 23 October 2011

நரகாசுரன் கதை - அன்றும் இன்றும்


‘‘நீ காட்டுக்கு உள்ளேயே இருப்பவன். நாங்கள் நாடு பல கண்டவர்கள். உனக்கு உலகத் தைப் பற்றி ஒன்றும் தெரியாது. நாங்களோ உலக அறிவையெல்லாம் திரட்டி வைத்திருப்ப வர்கள். திரட்டிய அறிவுக்கேற்ப நாடு விரிவாக்க இந்தக் காடு வேண்டும். உன் ஆட்களின் எதிர்ப்பை சமாளிக்க நீ உதவினால் எம் பேரர சில் உனக்கும் ஒரு இடம் தருவோம். உதவ மறுத்தால் உன்னோடு போரிட்டு காட்டைக் கைப்பற்றுவோம்.”

“உங்களுக்கு உலக அறிவு இருக்கலாம். எனக்கு இந்தக் காடு பற்றியும், இதில் வாழும் என் மக்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்கள் பற்றியும் நன்றாகத் தெரியும். உலக அறிவை நாங்களும் கற்றுக்கொள்ள விடாமல் தடுத்த வர்களே நீங்கள்தானே... நாங்கள் அதையெல் லாம் பயில்வது பாவம் என்றீர். மீறிப் பயின் றால் எம் நாவை அறுக்கச் சொன்னீர். உங்கள் பாடத்தை நாங்கள் கேட்டுவிட்டாலோ செவியில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னீர்...”

“அதை விடு. இப்போது காட்டை எம் மிடம் ஒப்படைப்பது பற்றி என்ன சொல் கிறாய்?”

“அது நடக்காது. எம் மக்கள் காடன்றி வேறெதையும் அறியமாட்டார். அவர்களைக் காடற்றவர்களாக விரட்டுவதற்கு ஒருபோதும் நான் உதவ மாட்டேன். உதவ மாட்டேன் என்பது மட்டுமல்ல, எதிர்த்துப் போராடவும் செய்வேன்...”

“நீ ஒரு அரக்கன்...”

“என் போன்றோரை அழிப்பதற்கு முன் நீங்கள் இந்தப் பெயரைத்தான் சூட்டுவீர்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.”

மூண்டது போர். காடு பிடிக்க வந்தவர்களின் சார்பாக வந்தவன் தன்னுடைய ஆளுமை எக்காலத்திலும் பின்னுக்குத் தள்ளப்படக் கூடாது என்ற நிபந்தனையோடு அவர்களுக்கு உதவியவன். போரின் இறுதிக்கட்டத்தில்...

“உன் போன்ற வீரர்கள் எம்மோடு இருப் பதே பொருத்தம். இப்போதும் கூட நீ விட்டுக் கொடுத்தால் என் சக்ராயுதம் உன் மேல் பாயாது.”

“எம் மக்களைக் காட்டிக்கொடுத்து உயிர்ப் பிச்சையும் உயர் பதவியும் தேவையில்லை...”

“நீ அழியப்போவது நிச்சயம்...”

“ஹஹ்ஹஹ்ஹா!”

“ஏன் சிரிக்கிறாய்?”

“ஒரு காடு வாழ் மனிதனாக என்னிடம் இருப்பதெல்லாம் எளிய ஆயுதங்கள். நாடு நாடாய்ச் சுற்றி வந்த நீர் சக்ராயுதம் போன்ற நவீன ஆயுதங்களால் எம்மை எளிதில் வீழ்த்தி விடுவீர் என்பது எனக்குத் தெரியும். அதிலே நீங்கள் பெருமைப்பட ஏதுமில்லை. ஆனால் ஒன்று, உங்களால் என்னை அழித்துவிட முடியாது...”

“என்ன சொல்கிறாய்?”

“என்னைக் கொன்று காட்டைக் கைப்பற்றி யதை உங்கள் மக்கள் கொண்டாடுவார்கள். ஆனால், என் மக்களும் நான் அவர்களுக்காகப் போராடி வீழ்ந்ததைக் கொண்டாடுவார்கள். அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்... என் சாவில் யாரும் துயரம் கொள்ளக்கூடாது என்று. எதற்காக நான் சாவைத் தழுவினேன் என்பதை தலைமுறை தலைமுறையாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கூறியிருக் கிறேன். என்றாவது ஒரு நாள் எம் மக்கள் வெல் வார்கள். உங்களிடமிருந்து கானகத்தை மீட் பார்கள்.”

ஈவிரக்கமற்ற கொடூரமான அசுரன் என்று புராணத்தில் சித்தரிக்கப்பட்ட நரகன் சக்ரா யுதத்தால் கழுத்தறுபட்டு மாண்டான்.

அரண்மனையில் ஆக்கிரமிக்க வந்தவர் களின் அரசன், சக்ராயுதம் சுழற்றி உதவியவன், வழிகாட்டும் குருமார்கள், அமைச்சர்கள் எல் லோருமாய்க் கூடியிருக்கிறார்கள். “நரகாசுரன் சொன்னது போலவே அவனுடைய மக்கள் அவனுடைய சாவைக் கொண்டாடுகிறார்கள், அவன் மாண்டது ஏன் என்று சொல்லிச் சொல் லிக் கொண்டாடுகிறார்கள். என்ன செய்வது?”

“அவன் கொல்லப்பட வேண்டிய பாவி, தேவர்களை வதைத்த கருணையற்ற அரக்கன் என்பதாகப் பரப்புங்கள். சாபத்தால் அரக்க னாய்ப் பிறந்தான் என்று கதை கூறுங்கள். சாப விமோசனம் கண்ணனின் சக்ராயுதத்தால் கிடைத்தது என்று முடியுங்கள். மரணத் தறு வாயில் அவன் வைத்த கோரிக்கையை இறை வன் ஏற்றுக்கொண்டதால், அதன்படி மக்கள் நரகாசுரனின் இறப்பை, தீப ஒளி நாளாகக் கொண்டாடுகிறார்கள் என்று புதிய புராணம் எழுதுங்கள். நெருப்பின் பயனை மனிதர்கள் கண்டுபிடித்ததன் நினைவாகத் தொடர்கிற தீப விழாவையும் நரகன் கொலையையும் இணை யுங்கள்...”

“மக்கள் அதை நம்ப வேண்டுமே?”

“ஏன் நம்ப மாட்டார்கள்? புராணக் கதை யாக மாற்றி நம் ஊடகங்கள் வாயிலாக திரும் பத் திரும்பச் சொல்லுங்கள். ”

“ஊடகங்களா...?”

“கதாகாலட்சேபங்கள், நாடகங்கள், நாட் டியங்கள், ஆலயச் சுவர் ஓவியங்கள், சிற்பங் கள்... இவற்றின் மூலமாகப் பரப்புங்கள். நடந் ததை நேரில் பார்க்காத சனங்கள் நாம் சொல் வதை விரைவிலேயே நம்பிவிடுவார்கள். நவீன ஊடக வசதி எதுவும் இல்லாத வீழ்த்தப்பட்ட வர்கள் இப்படியெல்லாம் பரப்ப முடியாது. அப்படியே அவர்கள் நடந்தது என்னவெனக் கூறினாலும், அது தோற்றவர்களின் புலம்ப லாகவும், வரலாறு தெரியாதவர்களின் பிதற்ற லாகவுவும் நம் வாரிசுகளால் திரிக்கப்பட்டு விடும்... வீழ்ந்தவர்களின் வாரிசுகளும் உண்மை தெரியாமலே நம் விழாவைக் கொண்டாடு வார்கள்...”

........

ண்டிகை, கலாச்சார விழா என்று என்ன பெயரிட்டாலும் இப்படிப்பட்ட பின்னணி களும் இருக்கின்றன. எனினும், மனிதர்கள் கூறு போடப்பட்டதைக் கொண்டாடுகிற இதே விழாக்கள் இன்று மனிதர்களை இணைக்கிற வேலையையும் செய்கின்றன. கூறப்படும் கதைகளில் நம்பிக்கை உள்ளவர் கள் கொண்டாடுகிறார்கள். நம்பிக்கை இல் லாதவர்கள் பண்பாடு கருதி இந்தக் கொண் டாட்டங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார் கள். தீபாவளி பிடிக்காவிட்டாலும் தீபாவளி இனிப்புகளையும் பலகாரங்களையும் ஏன் மறுக்க வேண்டும்?

விழாக்கள் ஒரு வகையில் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு எட்டப்பட்டன என்பதை மதிப்பிடும் ஆண்டுக் கணக்கெடுப்பாகவும் உதவுகின்றன. புத்தாடைகள், புதிய வாகனங்கள், புதிய பொருள்கள் என வாங்க வைத்து, வர்த்தக சுழற் சிக்கு வழி வகுத்து, பொருளாதாரத் தேக்கத்தை ஓரளவேனும் உடைக்கப் பயன்படுகின்றன.

பகுத்தறிவாளர்கள் என்றால் இதிலேயெல் லாம் பட்டுக்கொள்ளாமல் பரிசுத்தம் பேணு கிறவர்கள் அல்ல. மக்களோடு சேர்ந்து நின்று, சக மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களாகி, உண்மை வரலாற்றையும் அழுத்தமாகக் கூறுகிற நுட்பம் கைவரப் பெற்றவர்களே முற்போக்காளர்கள்.

நண்பர் ஒருவர் விமர்சித்தார்: “இந்து மதத்தின் கதைகளைத்தான் உங்களைப் போன்ற வர்கள் தாக்குகிறீர்கள். மற்ற மதங்களை நீங்கள் கண்டுகொள்வதில்லை... அச்சமும் அவர்களது வாக்கு வங்கியும்தானே காரணம்?”

வாக்கு வங்கிதான் நோக்கம் என்றால் பெரும் பான்மை மதத்தினரோடு சமரசம் செய்து கொள்வதுதானே புத்திசாலித்தனமான உத்தி யாக இருக்கும்? அதற்கு இடதுசாரிகளும் இதர முற்போக்காளர்களும் தயாராக இல்லை என்பதை ஏனோ இவர்கள் புரிந்துகொள்வ தில்லை.
பிறந்து வளர்ந்த குடும்பச் சூழல் காரண மாக எந்த நம்பிக்கைகள் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள முடிந்ததோ அந்த நம்பிக்கைகளை விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள் முற் போக்காளர்கள். இஸ்லாமிய மதமும், கிறிஸ்துவமும் பெரும்பான்மை மதங்களாக உள்ள நாடுகளின் பகுத்தறிவாளர்கள் அங்குள்ள பிற்போக்குத் தனங்களை எதிர்த்துக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்களிடம் போய் “நீங்கள் ஏன் இந்து மத நம்பிக்கைகளைச் சாடுவதில்லை,” என்று கேட்பதில் பொருளில்லை. அப்படித்தான் இங்கேயும்.

அதே வேளையில், சிறுபான்மை மத அமைப்புகளில் நடக்கிற மனித உரிமை மீறல் கள், சாதியப் பாகுபாடுகள், பெண்ணடி மைத்தனங்கள் போன்றவற்றை எதிர்த்து இங்குள்ள முற்போக்குச் சிந்தனையாளர்கள் குரல்கொடுக்கவே செய்கிறார்கள். அதற்காக அந்த சிறுபான்மை மதவாதிகளின் தாக்குதல் களுக்கும் உள்ளாகிறார்கள்.

............

காடு பிடிக்க நரகர்களை அழிக்கிற வேலை இன்று வேறு சக்திகளால், வேறு நோக்கங் களுடன், வேறு வடிவங்களில் நடத்தப்படு கிறது. தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் வனங்களின் கனிம வளங்களைச் சூறையாடுவ தற்கும், நிலங்களை வளைப்பதற்கும் உள் நாட்டு - பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. வனமன்றி மண்ணில் வேறெதுவும் அறியாமல் வளர்ந்துவிட்ட, வனங்களின் பிள்ளைகளான பழங்குடியினருக்கு ஆசை காட்டப்படுகிறது. அதில் ஏமாறாதவர்களுக்கு அச்சம் ஊட்டப்படுகிறது. அதற்கும் பணியாவிட்டால் அடக்குமுறை ஏவப்படுகிறது. வன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு, அவர் களது நிலங்களைச் சிக்கலில்லாமல் கார்ப் பரேட் முதலாளிகளுக்குக் கிடைக்கச் செய்வ தற்கான சட்டத் திருத்தங்கள் மனசாட்சியின்றி நிறைவேற்றப்படுகின்றன. தேவைப்பட்டால் வனங்களுக்குள் காவல்படைகள் குண்டாந் தடிகளோடும் துப்பாக்கிகளோடும் அனுப்பப் படுகின்றன. அந்த மக்களுக்காக வாதாடுவோர் மீது தீவிரவாதி, பயங்கரவாதி என்றெல்லாம் அசுர முத்திரை குத்தப்படுகிறது. நவீன சக்ராயுதங்களால் “என்கவுன்டர்” நடத்தப்படுகிறது.

செய்தியோடு செய்தி என்று விட்டுவிட் டால் இந்த ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் இன் றைய கார்ப்பரேட் ஊடகங்களால் புதிய புரா ணங்களாக்கப்பட்டுவிடும். ஆயினும், அன் றைய நரகனுக்கு இல்லாமல் போன சில வாய்ப்பு கள் இன்றைய நரகன்களுங்ககு இருக்கின்றன: மக்களின் விழிப்புணர்வு, இடதுசாரி-முற் போக்கு இயக்கங்கள், அக்கறையுள்ள மக்கள் ஊடகங்கள்... ஆகியவையே அந்த வாய்ப்புகள்.