Sunday 17 February 2013

அதுதான் டிவி-யில காட்டுறாங்களே... பேப்பர்ல போடுறாங்களே!




வீட்டிற்கும் பணித்தலத்திற்கும் இடையேயான ரயில் பயணத்தில் நிகழ்ந்த உரையாடல் இது. பேச்சு ‘விஸ்வரூபம்’ திரைப்படம் பற்றியதாகத் தாவியது. படத்திற்குத் தடைவிதித்த அரசின் செயலை ஒரு பயணி விமர்சித்தார். படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்லாமிய அமைப்புகளை இன்னொருவர் குறைகூறினார்.

“எங்களையெல்லாம் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களைப் போலக் காட்டுறது சரியில்லைன்னு முஸ்லிம்ஸ் சொல்றாங்க... ஆனா அவங்க அப்படித்தானே இருக்காங்க,” என்றார் அந்த இன்னொருவர்.
“எப்படிச் சொல்றீங்க,” என்று கேட்டேன் நான்.

“அதான் எல்லா டிவியிலயும் காட்டுறாங்களே சார், எல்லாப் பேப்பர்லயும் போடுறாங்களே...” என்றார் அவர். அவர் கையில் வைத்திருந்த ஒரு பத்திரிகையில் ஏதோ ஒரு நாட்டின் ஏதோ ஒரு தீவிரவாத அமைப்பின் சார்பில் யாரோ ஒரு நபருக்குக் கொடுமையன தண்டனை தரப்பட்ட செய்தி படத்தோடு இடம் பெற்றிருந்தது.

அரசுப் பணிகளில், கல்வி வாய்ப்புகளில், தொழில் துறையில் முஸ்லிம் மக்களின் அடையாளம் சுருங்கிப் போயிருப்பது பற்றி சச்சார் குழு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களில் இந்த மக்களுக்கு தாராளமான அடையாளம் தரப்பட்டிருக்கிறது - பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற அடையாளம்! பயங்கரவாதி என்ற சொல்லைச் சொன்னால் உடனே, மீசையில்லாத, தாடி வைத்த, நீண்ட அங்கி அணிந்த, கையில் ஏ.கே.-47 துப்பாக்கியோடு இருக்கிற உருவம் பலருக்கும் நினைவு வருகிறது என்றால், அப்படியொரு உருவத்தை மனங்களில் உருவேற்றியதில் நிச்சயமாக ஊடகங்களுக்குப் பங்கிருக்கிறது. அதிலும் வர்த்தக அடிப்படையிலான பெரு நிறுவன ஊடகங்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.

அதே போல் முஸ்லிம்கள் எல்லோருமே கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகள், நவீனமாகாதவர்கள், மாற்றுக் கருத்துகளை சகித்துக்கொள்ளாதவர்கள், கலை-இலக்கிய வெளிப்பாடுகளை ஏற்காதவர்கள் என்பன போன்ற மதிப்பீடுகள் பொதுவெளியில் உருவாகியிருக்கியிருப்பதிலும் இந்தப் பெரு ஊடகங்களின் பங்கு பெரியதுதான்.

ஆகவேதான், விஸ்வரூபம் விவகாரத்தில் கூட நடிகர் - இயக்குநர் - தயாரிப்பாளர் கமல்ஹாசனின் இழப்பு, உணர்ச்சிகரமான பேட்டி ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், முஸ்லிம் அமைப்புகளுடைய விசனத்துக்கு அளிக்கப்படவில்லை. படத்திற்குத் தடை விதிக்கப்பட்டதை ஏற்காத, ஆனால் அந்தப் படம் எந்த வகையில் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்பதைச் சொல்லத் தயாராக இருந்த முஸ்லிம் சிந்தனையாளர்களது கருத்துகளை வாங்கி வெளியிடவும் ஊடகங்கள் முன்வரவில்லை.

இதற்கு நீண்டதொரு பின்னணி இருக்கிறது என்றாலும் உடனடியாக நினைவுக்கு வருவது 1992 டிசம்பர் 6 அன்று அரங்கேற்றப்பட்ட பாபர் மசூதி இடிப்பு அக்கிரமம். அதை ஒரு பிரபல தமிழ் ‘நடுநிலை’ நாளேடு “பாபர் மசூதி தகர்ப்பு - ராம பக்தர்கள் ஆவேசம்” என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டது. நியாயக் கோபத்திற்கான “ஆவேசம்” என்ற சொல்லாடலை பெரிய பத்திரிகைகள் அவ்வளவு எளிதாகப் பயன்படுத்துவதில்லை. இந்தச் செய்தியில் அந்தச் சொல்லைப் புகுத்தியதன் மூலம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது நியாயம்தான் என்ற கருத்தை மட்டுமல்ல, இத்தனை காலமாக முஸ்லிம்கள் அந்த இடத்தை அநியாயமாக ஆக்கிரமித்து வைத்திருந்தார்கள் என்ற எண்ணத்தையும் அந்த ஏடு நுட்பமாக ஊன்றியது.

கோவையில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கோட்டைமேடு பகுதியில் காவல்துறையினர் நடத்திய சோதனைகள் பற்றிய செய்தியை வெளியிட்ட ஒரு பிரபல புலனாய்வு வார ஏடு, “கோட்டைமேடு பகுதி முழுக்க சோதனைகள் நடத்தப்பட்டுவிட்டதாக போலிஸ் சொல்கிறது. ஆனால் ..... .... ..... ..... ..... ஆகிய வட்டங்களிலும் .... ..... ..... ..... .... ஆகிய தெருக்களிலும் போலீ;!காரர்கள் நுழையவே இல்லை,” என்று விவரித்து எழுதியது. அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாகக் காவல்துறையினால் தூக்கிச் செல்லப்பட்ட நடவடிக்கை அது. ஒரு ஊடகமாக அந்த நடவடிக்கையை விமர்சிக்காமல், எந்தெந்தத் தெருக்களுக்குள் காவலர்கள் நுழைய வேண்டும் என்று பட்டியல் போட்டுக்கொடுத்தது அந்த புலனாய்வு இதழ்.

பொதுவாகவே மதவெறி மோதல்களில் பெரிதும் பாதிக்கப்படுகிறவர்கள் முஸ்லிம் மக்கள்தான். மிகப்பரபரப்பு கிளப்பக்கூடிய சில நிகழ்வுகளை மட்டும் அந்த நேரத்து முக்கியச் செய்தியாக்கிவிட்டு, பின்னர் அந்தப் பரபரப்பு வடிய வடிய அதை அப்படியே விட்டுவிடுவார்கள். எங்கிருந்தோ வருகிற பயங்கரவாதிகளின் தாக்குதலில் பொதுமக்கள் பலியாவது, சிதறிக்கிடக்கும் உடல்கள். நொறுங்கிப்போன வாகனங்கள், உற்றவரை இழந்து தவிக்கும் முகங்கள் என்ற உண்மைகளையெல்லாம் பரவலாக வெளியிடுகிறவர்கள், இன்னொரு உண்மையாகிய, எளிய முஸ்லிம் மக்களின் பரிதவிப்பு பற்றி எதுவும் பதிவு செய்வதில்லை. பயங்கரவாதிகளுக்கு மதமில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்களைத் தேர்ந்தெடுத்துக் குறிவைத்துத் தாக்குவதில்லை. அதனால்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் பல இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த உண்மையை மட்டுமல்ல, முஸ்லிம் மக்களின் சமூகப் பொருளாதார நிலைமைகள் பற்றிய உண்மைகளையும் ஊடகங்கள் வெளிப்படுத்துவதில்லை. ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் எழுதிய ‘குற்றமும் தண்டனையும்’ குறுநாவல் நினைவுக்கு வருகிறது. அதில் காவல்துறையினரால், கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைக்காகக் கைதுசெய்யப்படும் ஒரு முஸ்லிம் இளைஞன் பற்றிய சித்தரிப்பு மறக்க முடியாதது. சிவந்த உடல், நல்ல உயரம், நீண்ட ஜிப்பா. இளம் தாடி என பார்ப்பதற்கு நல்ல வசதிக்காரன் போன்ற தோற்றத்துடன் இருக்கிற அந்த இளைஞன் உண்மையில் கடைத்தெரு நடைமேடையில் ஜட்டி, பனியன் விற்கிற சாலையோர வியாபாரி. “இந்தப் பணக்காரத் தோற்றம்தான் இவர்களுடைய பலவீனமே” என்று கூறுவார் எழுத்தாளர்.

இந்தியா முழுவதுமே முஸ்லிம் மக்களில் பெரும்பகுதியினர் வசதிகள் இல்லாதவர்களாக, சலுகைகளும் கிடைக்காதவர்களாக, ஒதுக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பல ஆய்வுகள் இதை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் அந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்ட ஊடகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பல ஊடகங்கள் ஏன் இதை வெளியிடவில்லை என்பதன் பின்னணியில், அதைச் செய்தியாக்குவதில் சுவாரசியமிருக்காது என்ற தொழில் சார்ந்த ஒதுக்கல் மட்டுமல்ல, பல ஊடக நிறுவனங்களின் தலைமைப் பீடங்களில் இருப்பவர்களது இந்துத்துவப் பார்வையும்தான். ஊடக நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர்கள் உள்ளிட்ட இந்துத்துவ ஆட்கள் புகுந்திருப்பது பற்றி முன்பொரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் இன்றைய ‘தி ஹிண்டு’ நாளேட்டின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன்.

அந்தப் பார்வையுடன்தான் செய்திகள் தரப்படுகின்றன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு:  மஹாராஷ்டிரா மாநிலம் மாலேகாவுன் நகரில், சில முஸ்லிம் இளைஞர்கள் பின் லேடனை ஆதரித்து பேரணி நடத்தியதாகவும், அது வன்முறையாக மாறியதால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பல பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் செய்தி வந்தது. உண்மையில் என்ன நடந்தது என்றால், அந்த இளைஞர்கள் பின் லேடனுக்கு ஆதரவு தெரிவிக்கும் துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாகக் கூறிய,  காவல்துறையினர் அதை விநியோகிக்கத் தடை விதித்தனர்.  உருது மொழியில் இருந்த அந்தத் துண்டுப் பிரசுரத்தில், “இந்தியராக இருப்போம், இந்தியப் பொருள்களையே வாங்குவோம்; ஆப்கன் மக்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்காவின் பொருள்களைப் புறக்கணிப்போம்” என்றுதான் இருந்தது. மஹாராஷ்டிரா மாநில காவல்துறையில் உருது தெரிந்தவர்கள் இல்லையா அல்லது வேண்டுமென்றே உண்மையை மறைத்துச் செய்தி தரப்பட்டதா? இதை விசாரிக்காமல் காவல்துறையின் செய்தியை அப்படியே வெளியிட்ட ஊடகங்களின் தொழில்நெறியை என்னவென்று சொல்வது?

ஊடகங்களின் இந்த நிலைமைக்கான காரணங்கள் இரண்டு: ஒன்று, அமெரிக்க ஏகாதிபத்தியம் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில், தனது ஊடக வல்லரசுகளின் துணையோடு உலகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிற முஸ்லிம்கள் பற்றிய கருத்தாக்கம்; அதையொட்டி உள்நாட்டில் ஆர்எஸ்எஸ் வகையறாக்கள் ஏற்படுத்த விரும்புகிற முஸ்லிம் எதிர்ப்பு வன்மம். இந்த வன்மத்தின் பிடியில் ஊடகங்களும் சிக்கியுள்ளன. இரண்டு, பெரு நிறுவனங்களாக உள்ள ஊடகங்களின் செய்திகளை இறுதிப்படுத்தும் மையமான இடங்களில் முஸ்லிம்கள் இல்லை, அல்லது மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். எம்.ஜே. அக்பர் போன்ற சிலர்தான் விதிவிலக்கு.

சிறப்பாக எழுதக்கூடிய முஸ்லிம்கள், தாங்கள் பணபுரியும் நிறுவனத்தின் நிலைபாட்டிற்கு ஏற்பவே செய்திகளையும் கட்டுரைகளையும் வடிவமைக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்று சித்தார்த் வரதராஜன் குறிப்பிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் ஒரு கட்டுரையில், “நான் பணியாற்றிய பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்த முஸ்லிம் நண்பர்கள் என்னை ஏதோ சிறப்புரிமை பெற்ற குடிமக்களில் ஒருவனாகப் பார்த்தார்கள்,” என்கிறார். அவர் குறிப்பிடுவது முஸ்லிம் சமயத்தைச் சேர்ந்த ஒருவரால் நடத்தப்பட்ட ‘அஞ்ஜாம்’ என்ற  பத்திரிகை!

“1947 நாட்டுப்பிரிவினையின்போது இந்தியாவிலேயே தங்கிவிடுவது என்று முடிவு செய்த முஸ்லிம்கள், பின்னர் இங்கே இந்து மதவாதிகளால் சிறுமைப்படுத்தப்படுவதாக உணர்ந்தார்கள். அப்போது, பிரச்சனையை எபபடி அணுகுவது என்று வழிகாட்டக் கூடியவர்களாக முஸ்லிம் பத்திரிகையாளர்கள் இல்லை,” என்றும் நய்யார் குறிப்பிடுகிறார்.

யோசித்துப் பார்த்தால், முஸ்லிம் மக்கள் பற்றிய எதிர்மறைக் கண்ணோட்டம் பரவலாக இருப்பதில் முஸ்லிம்களால் நடத்தப்படுகிற ஊடகங்களுக்கும் ஓரளவு பங்கிருக்கிறது எனலாம். அந்தப் பத்திரிகைகளிலும், முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார நிலைமைகள் குறித்த முழுமையான விவரங்கள் கண்ணில் படுவதில்லை. மாறாக எங்காவது நடந்திருக்கக்கூடிய சில பழமைவாதச் செயல்களை நியாயப்படுத்துகிற வாதங்களைத்தான் அவை முன்வைக்கின்றன.

எடுத்துக்காட்டாக ஒரு சவுதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ரிசானா மதவாத நீதிமன்றத் தீர்ப்பின்படி பொது இடத்தில் கொல்லப்பட்டதை தமிழக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் விமர்சித்தார். உடனே அவர் மீது ஒரு அமைப்பு பாய்ந்தது, மிரட்டல் விடுத்தது. இதை எந்த முஸ்லிம் ஊடகமும் கண்டிக்க முன்வரவில்லையே?

காஷ்மீரில் முதல் முறையாகப் பெண்களே கொண்ட ஒரு இசைக்குழு அமைக்கப்பட்டது. உடனே, அது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கூறி,அந்த மூன்று இளம் பெண்களுக்கும் ‘ஃபட்வா’ அறிவிக்கப்பட்டது. பெண்களுக்கான இஸ்லாமிய அமைப்பு ஒன்று அந்த மூன்று பெண்களும் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவார்கள் என்று அச்சுறுத்தி அறிக்கை விடுத்தது. மாநில முதலமைச்சரே இசைக்குழுவை ஆதரித்து, முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்தபோதிலும் கூட, அந்தப் பெண்கள் குழுவைக் கலைத்துவிட்டார்கள். அந்தப் பெண் குழந்தைகளின் பக்கம் எத்தனை முஸ்லிம் பத்திரிகைகள் நின்றன?

இது பற்றி பிப்ரவரி 8 அன்று சென்னையில் சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் ஏற்படு செய்திருந்த ‘விஸ்வரூபம் திரைப்படத்தை முன்வைத்து, ஊடகங்களில் முஸ்லிம்கள் பற்றிய சித்தரிப்பு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்ற நான் கேள்வி எழுப்பினேன். அதில் உரையாற்றிய கவிக்கோ அப்துல் ரகுமான், “இஸ்லாத்தில் அப்படிப்பட்ட தடை எதுவும் கிடையாது, யாரோ சிலர் தவறான புரிதல்களுடன் செய்கிற செயலுக்கு இஸ்லாம் சமயம் பொறுப்பேற்ற இயலாது,” என்றார். இது நல்ல விளக்கம்தான் என்றாலும், ஜனநாய உரிமைகளுக்காக வாதாடும் முஸ்லிம் பத்திரிகைகள் அந்தப் பெண்களுக்காக வெளிப்படையாக உரத்த குரல் எழுப்பியிருக்க வேண்டாமா?

இப்படிப்பட்ட மவுனங்கள் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலுக்கு சாமர்த்தியமாகப் பயன்படுத்தப்படுவதும் மனதில் கொள்ளப்பட வேண்டும். இன்றைய பொருளாதார உலகமய - தனியார்மயஆதிக்கச் சூழலில் கேள்வி கேட்காத, தட்டிக்கேட்காத தலைமுறைகள் தேவை. அப்படிப்பட்ட தலைமுறைகளை வார்க்கும் பணியை இன்றைய சுரண்டல் அமைப்பின் அங்கங்களாகிய பெரு ஊடகங்களும் செய்கின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான், சுரண்டல் உலகத்தின் தலைமைத் தலமாகிய ஏகாதிபத்தியம் உருவாக்க முயல்கிற பயங்கரவாதம் என்றால் மீசையற்ற தாடி முகங்கள் என்ற தோற்றத்திற்கு உள்ளூர் வண்ணப்பூச்சு செய்யும் கைங்கர்யத்தை  உள்நாட்டுப் பெரு ஊடகங்கள் பத்திசிரத்தையோடு நிறைவேற்றுகின்றன.

இதை மாற்ற முடியுமா? முடியும். உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு, உள் நாட்டு ஏகபோக எதிர்ப்பு, ஒற்றை மதவெறி எதிர்ப்பு, ஆதிக்க சாதிய அரசியல் எதிர்ப்பு, ஆணாதிக்க அகம்பாவ எதிர்ப்பு போன்ற பொதுப் போராட்டங்களில் சிறுபான்மை மக்களையும் அணிதிரட்டிப் பங்கேற்கச் செய்கிற பொறுப்பை இஸ்லாமிய அமைப்புகளும் சேர்ந்து நிறைவேற்றினால் முடியும். பெரு ஊடகங்களின் பாகுபாட்டுப் போக்குகளை பொதுவெளியில் விவாதிக்கவும் விமர்சிக்கவும் தொடங்கிவிட்டோம் என்ற செய்தி அநத நிறுவனங்களின் செவிகளைச் சென்றடையச் செய்தால் முடியும்.

('தீக்கதிர்’ 17-2-2013 ஞாயிறு இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வந்துள்ள எனது கட்டுரை)

Wednesday 13 February 2013

காதலுக்குச் சொந்தமானது இந்த உலகம்


அந்நாள் வாலன்டைன்களும்
இந்நாள் கிளாடியஸ்களும்

காதலுக்கும் அறிவியலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? அறிவியல் ஆராய்ச்சிகள் இரண்டு உண்மைகளை ஐயத்திற்கிடமின்றி நிலைநாட்டுகின்றன.

ஒன்று: நாம் வாழும் இந்த உலகம் உள்ளிட்ட நம் பேரண்டம் முழுக்க முழுக்கப் பொருளால் ஆனது என்ற உண்மை. பருப்பொருள் அல்லாத ஒளி உள்பட மாபெரும் மலைகள் வரையில், ஒரு செல் உயிரினம் தொடங்கி மனிதர்கள் வரையில் எல்லாம் அணு எனும் பொருளால் ஆனவையே. அந்த அணுக்கள் இன்னும் நுட்பமான அணுத்துகள் எனும் பொருளால் ஆனவை. ஹிக்ஸ் போஸாம் அணுத்துகள் ஆராய்ச்சியின் வெற்றி இந்த உண்மையை மேலும் வலுவாக எடுத்துரைக்கிறது.

இரண்டு: எந்த ஒரு பொருளின் வடிவமும் தன்மையும் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது என்றால் அதன் அணுக்களின் சேர்க்கையால். அணுக்களின் சேர்க்கை எப்படி வரையறுக்கப்படுகிறது என்றால் அணுத்துகள்கள் ஒன்றையொன்று ஈர்ப்பதால். அவற்றின் அடர்த்தி, சேர்மானம் இவற்றின் அடிப்படையிலேயே உயிருடன் இயங்கும் பொருள், இயங்காப் பொருள் அனைத்தும் கட்டப்படுகின்றன...

அணுத்துகள்கள் ஒன்றையொன்று ஈர்த்து இணைகின்றன, அதனால் உருவாகும் அணுக்கள் ஒன்றையொன்று ஈர்த்துச் சேர்கின்றன என்றால் என்ன அர்த்தம்? அவை காதலிக்கின்றன! ஆம் - மண், அந்த மண் சார்ந்து நீர், மண்ணும் நீரும் சார்ந்து தாவரங்கள்,  அந்தத் தாவரங்கள் சார்ந்து விலங்குகள், மண்ணும் நீரும் தாவரமும் விலங்கும் சார்ந்து நாம்! இப்படி இந்த பூமியும், இந்த பூமி சுற்றி வருகிற சூரியனும், பல ஆயிரம் கோடி சூரியன்கள் வலம் வருகிற பால் வெளி மண்டலங்களும், எத்தனையோ பால் வெளி மண்டலங்கள் சூழ்ந்த பேரண்டமும் எப்படி உருவாக முடிந்தது? எதனால் இயங்க முடிகிறது? காதலால்!

எந்த ஒரு உண்மையும் வெளியே தெரிய வராத வரையில் ரகசியமாகவே இருக்கிறது. அணு ரகசியங்களைக் கண்டறிந்ததன் மூலம் காதலையும் காதலுக்காகவும் உரத்து முழங்குகிறது அறிவியல். இந்தக் காதல் உறவை சிலர் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்கள் அடிப்படையில் அறிவியலுக்கு எதிரிகள், இயற்கைக்கு எதிரிகள், நாகரிக சமுதாயத்திற்கு எதிரிகள், நாட்டின் அரசமைப்பு சாசனத்திற்கே எதிரிகள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

வரப்பும் வேலியும்
இந்தியாவின் பெருமைகள் என்று எதைஎதையோ முன்னிறுத்துகிறார்கள். ஆனால், இரண்டு அடிப்படையான சிறுமைகளின் மீது கட்டப்பட்டவையே அந்தப் பெருமைகள். சாதியமும் பெண்ணடிமையும்தான் அந்த இரு சிறுமைகள். சொல்லப்போனால் உழைப்புச் சுரண்டலோடு இணைந்த இந்த இரண்டையும் கெட்டிப்படுத்திப் பாதுகாப்பதுதான் மதத்தின் வேலை.
அவரவர் சாதி வேலிகளைத் தாண்டிவிடக்கூடாது,  பெண்கள் அவர்களுக்கான கூண்டுகளை விட்டு வெளியேறிவிடக்கூடாது என்று எத்தனையோ விதிகளும் சம்பிரதாயங்களும் கட்டுப்பாடுகளும் காலங்காலமாகத் தொடர்கின்றன. குறிப்பாக, மேல் சாதிகள் என்று சொல்லப்படுவோர், அவர்களைக் காட்டிலும் பின்னுக்குத் தள்ளப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களைக் காதலித்தால் அது சொந்த சாதிக்குச் செய்கிற துரோகம் என்று கரித்துக்கொட்டப்படுகிறது. இன்னும் குறிப்பாக, மேல் சாதிகள் என்று சொல்லிக்கொள்வோரைச் சேர்ந்த பெண்கள், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களைக் காதலித்தால், அது சாதித் தூய்மையைக் கெடுக்கிற குற்றமாக வரிக்கப்படுகிறது.

இக்குற்றத்தை விசாரிக்க சட்டவிரோதக் கட்டப் பஞ்சாயத்துகள், காதல் இணைகளைப் பிரிக்கிற கொடூரத் தீர்ப்புகள், ஏற்க மறுத்தால் பழிவாங்கும் வன்முறைகள், அந்த வன்முறைகளை நியாயப்படுத்த அற்பத்தனமான குற்றச்சாட்டுகள்... இருபத்தோராம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா என்ற ஐயப்பாட்டை எழுப்புகிற வன்மங்கள் தொடர்கதையாகின்றன.

எல்லா ஆதிக்க சாதிகளும் இந்த ஐயப்பாட்டை ஏற்படுத்துகின்றன என்றாலும், இன்று சில குறிப்பிட்ட சாதிகளைத் தளமாகக் கொண்ட தலைவர்கள் மூலமாக இந்த வன்மங்கள் வெளிப்படுகின்றன. அதிலும், தவறான அணுகுமுறைகளால் சொந்த அரசியல் செல்வாக்கு அரித்துப்போய்விட்டது என்று கண்கூடாகத் தெரிந்துவிட்ட நிலையில், மறுபடி அந்தச் செல்வாக்கைக் கட்டுவதற்கு அடிப்படைப் பிரச்சனைகளுக்காக மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்துவதற்கு மாறாக, மக்கள் ஒன்றுபடுவதையே அடிப்படைப் பிரச்சனையாக்கி, அதை வளரவிடாமல் வேரில் வெந்நீர் ஊற்றுகிற நவீன மனு பக்தர்கள் வலம் வருகிறார்கள். அவர்களோடு, அனைத்து சமுதாயத் தலைவர்கள் என்ற பெயரில் மேலும் சில நவீன மனு பக்தர்கள் உலா வருகிறார்கள்.

மாற்றப்படும் அணித்திரட்சி
ஒரு காலகட்டத்தில் தமிழகத்தில் பிராமணிய ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு அணித்திரட்சி திராவிட இயக்கத்தாலும் பெரியார் போராட்டங்களாலும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அது ஒரு வரலாற்றுத் தேவையாக உருவானது. முற்போக்கான பார்வை கொண்ட பிராமணர்களும் கூட அந்த இயக்கத்திற்கு ஆதரவாக நின்றார்கள். இன்று அரசியல் களம், அதிகாரத் தளம், கல்விக் கூடம், வழிபாட்டு ஆலயம் என எங்கும் அனைத்துச் சாதியினரும் தங்களுக்கான இடத்தை ஓரளவுக்கு உறுதிப்படுத்த முடிந்திருக்கிறது என்றால் இது அந்த வரலாற்றுப் போராட்டத்தின் பங்களிப்புதான்.

ஆனால் இன்று, தலித் மக்களுக்கு எதிரான அணித்திரட்சிக்கான முயற்சி திட்டமிட்டு நடைபெறுகிறது. இது வரலாற்றுத் தேவை அல்ல, வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளுகிற அப்பட்டமான ‘அடையாள அரசியல்.’ சிலரது குறுகிய ஆதாய நோக்கத்திற்காக, காதலிக்கிறவனின் கையை வெட்டு, காலை வெட்டு என்று காதலெனும் ‘காட்டை வெட்டி’ அழிக்கச் சொல்கிறார்கள். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் ஜீன்ஸ், டி சர்ட், கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு பிற சாதிப் பெண்களை மயக்குகிறார்கள் என்று கூறி பகை வளர்க்கிறார்கள். இவ்வாறு சொல்வதன் மூலம் வெறும் ஜீன்ஸ்சுக்கும் டி சர்ட்டுக்கும், கூலிங் கிளாஸ்சுக்கும் மயங்கிப்போகிறவர்கள் என தங்களது சொந்தச் சாதிப் பெண்களையே இழிவு படுத்துகிறார்கள். சாதியமும் பெண்ணிழிவும் பிரிக்க முடியாதவை என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?

மாவட்டம் மாவட்டமாய் நடத்தப்படுகிற “அனைத்து சமுதாய” ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்கிற பல்வேறு சாதிகளின் தலைவர்கள், கூடவே அமர்ந்திருக்கிற மற்ற தலைவர்களது சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஜீன்ஸ் - டீ சர்ட் - கூலிங்கிளாஸ் அணிவதை ஏற்றுக்கொள்கிறார்களா என்பது தெரியவில்லை! இவர்களால் கிளப்பிவிடப்படும் காதல் விரோதச் சிந்தனைகளின் பிரதிபலிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் காதலர்கள் கொடூரமான முறையில் பிரிக்கப்படுவதும், பிரிக்க முடியாவிட்டால் கொல்லப்படுவதும் நிகழ்கின்றன.

இவர்கள் காதல் எதிர்ப்பின் உள்ளூர் வகையறா என்றால், நாடு முழுவதுமே இவர்களது குளோனிங் பதிப்புகள் காதலுக்கும் கலப்புத் திருமணத்திற்கும் எதிரான கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்புகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குப் புரிகிறது - காதல் மட்டுமே சாதி வரப்புகளை உடைக்கும், மத வேலிகளை தகர்க்கும் என்ற உண்மை.

அந்நாள் வாலன்டைன்
இந்தக் காதல் எதிர்ப்புச் சூழலில்தான் ‘வாலன்டைன் டே’ என கொண்டாடப்படுகிற பிப்ரவரி 14 முக்கியத்துவம் பெறுகிறது. உலகம் முழுவதும் காதலர் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் இந்த நாளுக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. புனித வாலன்டைன் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அன்றைய ரோம் நாட்டில் இயங்கிய ஒரு கிறிஸ்துவ தலைமைக் குரு (பிஷப்). அப்போது ரோமானியப் பேரரசின் கீழ் கிறிஸ்துவ சமயம் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகியிருந்தது. பேரரசர்களுக்கே உரிய லட்சணப்படி நாடுபிடிக்கும் பேராசையோடு இருந்த பேரரசன் இரண்டாம் கிளாடியஸ், தனது படை வீரர்கள் யாரும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று தடை விதித்திருந்தான். திருமணம் செய்துகொண்டால் அவர்கள் குடும்பத்தின் நினைவாக இருப்பார்கள், போர்க்களத்தில் முனைப்புடன் செயல்பட மாட்டார்கள் என்று அவன் நம்பியதால் இந்தத் தடை. அப்போது வாலன்டைன், அந்த வீரர்களுக்கு ரகசியமாகத் திருமணம் செய்துவைத்தார். இதைக் கண்டுபிடித்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்து சிறையில் அடைத்தான்.

சிறையில் அடைபட்டிருந்த நாட்களில், சிறை அதிகாரியின் மகளுக்கு ஒரு நோயின் தாக்கத்தில் பார்வை மங்கிப்போக, வாலன்டைன் தனக்குத் தெரிந்த மருத்துவ முறைகளில் சிகிச்சையளித்து மீண்டும் பார்வை கிடைக்கச் செய்தார் (அவர் இறையருளால் அந்த அதிசயத்தை நிகழ்த்தியதாகப் பின்னர் வந்த மதப்பிரச்சாரகர்கள் எழுதினார்கள் என்பது வேறு கதை). அரண்மனை ஆணைப்படி வாலன்டைன் கொலை மேடைக்கு இட்டுச்செல்லப்பட வேண்டிய நாள் வந்தது. அதற்கு முதல் நாள் அவர், அந்த சிறையதிகாரியின் மகளுக்கு ஒரு வாழ்த்துக் கடிதம் அனுப்பி, அதன் முடிவில் “உன் அன்பான வாலன்டைன்” என்று குறிப்பிட்டிருந்தாராம். அவரைப் பற்றிய ஆவணங்கள் பலவும் அதிகாரிகளால் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பிப்ரவரி 14 என்பது அவரை நினைவுகூர்ந்திடும் நாளாக அடையாளம் பெற்றது. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் அது காதல் ஆதரவுக்கான அடையாள தினமாக உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது.

ரகசியத் திருமணம் செய்துவைத்த வாலன்டைன், ஏசுவின் அன்பைக் குறிப்பிடும் வகையில், ஆட்டுத் தோலில் சிறிய இதயம் போல வெட்டி, அதையும், மலர்க்கொத்தையும் மணமக்களுக்குப் பரிசளித்தாராம். அதுவே பின்னர் காதல் சின்னமாக இதய வடிவமும், காதலர் தினப் பரிசாக ரோஜா மலரும் வழங்குவது என்ற நடைமுறையாகப் பரிணமித்தது.

இந்நாள் கிளாடியஸ்கள்
இன்று வாலன்டைன் தினம் என்பது கிறி°துவர்களுக்கான தினம் அல்ல. சாதி மதம் கடந்த காதலர்களுக்கான தினம். தினம் தினம் அழகான, ஆரோக்கியமான காதல் பயிர் செழித்தோங்கிய காலம் வரவேண்டும் என்பதே ஆண்டில் ஒரு நாளை காதலர் தினமாகக் கொண்டாடுவதன் அடிப்படை. ஆனால், சாதி வரப்புகள் உடைபடக்கூடாது, மத வேலிகள் தகர்க்கப்படக் கூடாது என்று தடையாணை போடுகிற இன்றைய இரண்டாம் கிளாடியஸ்களாக சாதிய ஆதிக்கவாதிகளும் மதவெறியர்களும் காதலர் தின கொண்டாட்டத்தை எதிர்க்கிறார்கள். இது அந்நிய விழா, மதம் மாற்றுவதற்கான வலைவிரிப்பு, வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப்பொருள் வியாபாரத்திற்கான தந்திர ஏற்பாடு என்றெல்லாம், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு காதலர் தினத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

அவர்கள் கொச்சைப்படுத்துவது உண்மையில் இயற்கைக் காதலைத்தான். ஆகவேதான், “வாலன்டைன் தினத்தன்று காதலர்கள் பொது இடத்தில் நடமாடினால் தாக்குவோம்” என்று ஒரு கும்பல் அறிவிக்கிறது. இன்னொரு கும்பல், ஒரு கையில் தாலிக்கயிறு, இன்னொரு கையில் ராக்கிக்கயிறு தூக்கிக்கொண்டு அலைகிறது. பொது இடத்திற்கு சேர்ந்து வருகிறவர்கள் ஒன்று கணவன்-மனைவியாக இருக்க வேண்டும் அல்லது அண்ணன்-தங்கையாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. ஆக இந்தக் கலாச்சார தாதாக்கள் காதலுக்கு மட்டுமல்ல, பாலின வேறுபாடற்ற நட்புக்கும் தோழமைக்கும் கூட எதிரிகள்தான்.

சாதி-மத அடையாள அரசியலின் நோக்கம் சமுதாய மாற்றமே கூடாது என்பதுதான். சாதி வரப்புகளைக் கெட்டிப்படுத்துவது, மத வேலிகளை வலுப்படுத்துவது இரண்டுமே உலகமய வேட்டைகளுக்கும் உள்நாட்டுத் தாராளமய சுரண்டல்களுக்கும் செய்கிற தொண்டூழியம்தான். ஆம் அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தின் ஒரு முக்கியமான கூறுதான் சாதி வெறி ஒழிப்பு - மத வெறி எதிர்ப்பு - காதல் ஆதரவு முழக்கங்களும்.

தில்லியில் பாலியல் வன்முறைக்கு பலியான அந்த மாணவி, பெண்ணின் சுய தேர்வு உரிமையை மறுத்துக் கட்டாயப்படுத்தும் ஆணாதிக்க அமில வீச்சுக்கு பலியான காரைக்கால் விநோதினி, தருமபுரியில் வன்கொடுமைக்குக் காரணமாகக் கூறப்பட்ட திவ்யா - இளவரசன், நாடு முழுவதும் ஊடக வெளிச்சம் பெறாமலே பலியாகிக்கொண்டிருக்கிற காதலர்கள்... இவர்கள் அனைவரின் கதைகளும் உரக்கச் சொல்வது: காதல் வாழ வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்ற செய்தியைத்தான்.

இதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு என்ன அக்கறை என்று கேட்கிறார்கள் சிலர். கம்யூனிஸ்ட்டுகள் காதலிக்கிறார்களே - இயற்கையை, உலகத்தை, மக்களை!

Thursday 7 February 2013

பொழுதுபோக்கின் விஸ்வரூபம்?


டம் திரையரங்கிற்கு வருகிற முதல்நாளே பார்த்துவிடுகிற பழக்கம் விட்டுப்போய் வெகுநாளாகிவிட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஏற்பட்ட கட்டாயம் போலத்தான் எனக்கும்.

ஒரு கலைப்படைப்பு வெளிவந்து அதை மக்கள் துய்க்கிற உரிமையை எந்த ஒரு அமைப்பும் செய்யக்கூடாது, எந்தவொரு அரசாங்கமும் செய்யக்கூடாது என்பதே என் கருத்து. அந்த வகையில் கமல்ஹாசனின் படம் நேரடியாக வர முடியாமல் தடுக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை. ‘ஃபயர்’ படத்தை யாரும் பார்க்கவிடாமல் தடுத்த. ‘வாட்டர்’ கதைக்குப் படப்பிடிப்பே நடத்தவிடாமல் விரட்டியடித்த சங் பரிவாரக் கும்பல்களைக் கண்டித்த அதே தொனியில்தான் இதையும் ஏற்க மறுத்தேன்.

உயர்நீதிமன்றம் அரசின் தடையை விலக்கி ஆணையிட படம் முதலில் திரையிடப்பட்டபோது பார்க்க முடியாமல் போனது. அந்த முதல் காட்சியோடு உயர்நீதிமன்றத்தின் மறுதடை வந்துவிட்டது. ஒரு மதவாத மோதல் அளவுக்கு விவாதங்கள் போய்க்கொண்டிருந்ததால் வெறொரு ஏற்பாட்டில் படம் பார்த்துவிட்டேன். ஆயினும், பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக செய்திகள் வந்த நிலையில், சில காட்சிகளைத் திருத்த கமல் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் கசிந்துகொண்டிருந்த நிலையில், அந்த இறுதிப்படுத்தப்பட்ட படத்தைப் பார்க்காமல் விமர்சனம் எழுதுவது முறையல்ல என்று காத்திருந்தேன். இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சு நடத்தி ஒரு உடன்பாட்டிற்கு வந்து, இணக்கமான பேச்சுக்கு வழிசெய்ததற்காகத் தமிழக அரசுக்கு கமல்ஹாசன் நன்றி கூறி, கோடிக்கணக்கில் செலவிட்டிருந்தாலும் கிடைத்திருகக முடியாத பரபரப்பு விளம்பரத்தோடு இரண்டாம் முறையாகப் படம் திரையரங்குகளுக்கு வந்த இன்றைய (பிப்,7) நாளிலேயே முக்கியத்துவம் கருதி இரண்டாவது தடவையாகப் படத்தைப் பார்த்தேன்.

கதை என்ன என்பதெல்லாம் பத்திரிகைகளின் விமர்சனங்கள், முகநூல் பதிவுகள் மூலம் பலருக்கும் தெரிந்துவிட்டது. அதை இங்கேயும் சொல்ல வேண்டியதில்லை. படத்திற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டாக வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, அதே நேரத்தில் படைப்பாளிகளுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா என்ற கேள்வியையும் முன்வைத்திருந்தேன். எப்போதுமே வர்த்தக சினிமா வட்டத்திற்குள் நின்றுகொண்டே கொஞ்சம் மாறுபட்ட அனுபவங்களையும் தர முயன்று வந்திருக்கிற கமல் மீது உள்ள ரசனை கலந்த மரியாதையோடு அந்த சமூகப் பொறுப்பு அவருடைய இந்தப் படைப்பில் வெளிப்பட்டிருக்கிறதா என்று கவனமுடன் பார்த்தேன்.

ஒரு சினிமாவை சினிமாவாக மட்டும் பார்த்து ரசிப்பதற்கும் வியப்பதற்கும் படத்தில் நிறையவே தூவல் வேலைகள் இருக்கின்றன. காட்சிகளுக்கிடையான தர்க்கப்பூர்வமான இணைப்பு, எதுவும் தொங்கலாகிவிடாத கச்சிதமான கோர்ப்பு, அரங்க வேலைப்பாடுகள், பொருத்தமான முகங்கள், ஒப்பனை தெரியாத ஒப்பனை, நேர்த்தியான ஒளிப்பதிவு, மிரள வைக்கும் அந்த முதல் சண்டைக் காட்சி, மெல்லியதாய் இழையோடும் நகைச்சுவை என்று சொல்வதற்கு நிறையவே இருக்கின்றன.
நடன ஆசிரியராக, ஜிஹாதி குழுவில் ஒருவனாக, இந்திய உளவுத்துறை அதிகாரியாக கமலின் மாறுபட்ட நடிப்பும் விருந்துதான்.

இவை மட்டும்தான் இந்தப் படமா? பரபரப்புகள் எழுந்திராவிட்டால் இது ஒரு சாதாரணமான பொழுதுபோக்கு மசாலாப்படம், அவ்வளவுதான், அதற்கு மேல் இதில் ஒன்றுமில்லை என்று முகநூல் நண்பர்கள் பலரும் பதிவிட்டிருக்கிறார்கள். அவ்வளவுதானா? உலகம் முழுவதும் இன்று பயங்கரவாதம் என்றால் மீசையில்லாத தாடி முகங்களும், அவர்களது கைகளில் உள்ள துப்பாக்கிகளும், அவர்களது இடுப்பில் கட்டிய வெடிகுண்டுகளும் மட்டுமே என்ற எண்ணம் பளிச்சென ஏற்படுகிறதே - அந்த எண்ணத்தை இறுக்கமாகவும் பரவலாகவும் ஏற்படுத்தியதில் ஹாலிவுட் தயாரிப்புகளாக வந்த ஏராளமான, சாதாரணமான, பொழுதுபோக்கு மசாலாப்படங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அரசியல், ஊடகம் என பல வகைகளிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கிற இஸ்லாமிய மக்கள் பற்றிய சித்தரிப்பை அந்த ஹாலிவுட் மசாலாப் படங்கள் கெட்டிப்படுத்தியிருக்கின்றன.

அதே கைங்கர்யத்தைத்தான் ‘விஸ்வரூபம்’ செய்கிறது. கமல் திட்டமிட்டு இதைச் செய்தாரா? இந்தக் கைங்கர்யத்தை அவர் திட்டமிட்டுத் தவிர்க்கத் தவறிவிட்டார். இவ்வளவு நுணுக்கமாகத் திரைக்கதை அமைத்தவர், திட்டமிட்டிருந்தாரானால் படம் வேறு வகையில் அமைந்திருக்கும். ஜிஹாதிகளின் மனிதத்தன்மையற்ற தண்டனைகளையும், சித்திரவதைகளையும் அவ்வளவு விளக்கமாகக் காட்டியவர், ஏற்கெனவே மொபைல் போன் வழியாகவும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்பட்டிருக்கிற காணொளிப்படங்களை நடிகர்கள் மூலம் பார்ப்பவர் நெஞ்சங்களில் “எவ்வளவு ஈவிரக்கமில்லாமல் நடந்துகொள்கிறார்கள்” என்ற பதைப்பை ஏற்படுத்தியவர் ஜிஹாதிகளின் அந்த அமெரிக்க எதிர்ப்புக்குப் பின்னால் உள்ள நியாயங்களையும் அழுத்தமாகக் காட்டியிருப்பார்.

மனிதநேயத்தை நேசிப்பவர்கள் ஜிஹாதிகளின் வழிமுறைகளை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். அரசாங்கம், அதன் அமைப்புகள் ஆகியவற்றோடு நேரடியாக மோதுவதற்கில்லாமல் அப்பாவி மக்களைக் கொன்றுகுவிக்கும் வெறித்தனம், அதன் மூலம் அரசாங்கங்களுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதாக எண்ணிக்கொள்ளும் முதிர்ச்சியற்ற அரசியல் கணக்கு இரண்டுமே வன்மையான கண்டனத்திற்கும், எதிர்ப்புக்கும் உரியவை. அதனால்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிற கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட மனித நேய சக்திகள் இந்த பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறார்கள்.  அரசியல் அடிப்படையில் மக்களைத் திரட்டாத போராட்ட வழிமுறை உண்மையில் எதிரிக்குத்தான் சாதகம்.

ஆனால் அந்த அமெரிக்க எதிர்ப்புணர்வின் ஆழமான அரசியல், பொருளாதார அடக்குமுறைப் பின்னணிகள் உரக்கச் சொல்லப்பட வேண்டியவை. இந்தப் படத்தில் ஆப்கானிஸ்தான் குடியிருப்புகள் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசுகிற காட்சி வருகிறது, ஆனால், அது அங்கே சிறைப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினரை மீட்பதற்காகத்தான். புஷ் படத்தின் மீது துப்பாக்கித் தோட்டாக்களை ஜிஹாதிகள் பாய்ச்சுகிறார்கள். அவ்வளவு கோபம் ஏன் என்பது தொட்டுக்காட்டப்படவில்லை. “நாம அல்லாவுக்காகப் போர் செய்யுறோம், அவங்க ஆயிலுக்காகப் போர் செய்றாங்க” என்ற வசனம் போகிற போக்கில் உதிர்க்கப்படுவது, இப்படி விமர்சிப்பவர்களுக்காக “இல்லையே, அதையும் நாங்கள் தொட்டுக்காட்டியிருக்கோமே” என்று சொல்லிக்கொள்ள இணைக்கப்பட்ட வசனமாகவே இருக்கிறது.

போதாக்குறைக்கு அமெரிக்க ராணுவம் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லமாட்டார்கள் என்று ஜிஹாதி ஒருவரே சொல்கிற வசனம் வேறு வருகிறது. இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையான குழந்தைகள் பற்றிய செய்திகளை கமல் சார் படிக்கவே இல்லையோ?

உலகளாவிய பயங்கரவாத மூலஸ்தானமே அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் சிஐஏ தலைமையகமும் பென்டகன் வளாகமும்தான் என்ற உண்மையை ஹாலிவுட் மசாலாப் படங்கள் மறைக்கலாம். ஒரு கோலிவுட் படம் ஏன் மறைக்க வேண்டும்? அமெரிக்க லாபப் பசி வேந்தர்களின் உலக ஆக்கிரமிப்பு நோக்கத்திற்குத் தோதாக, சோவியத் யூனியன் வீழ்த்தப்பட்ட பிறகு, பயங்கரவாதம் என்ற பொது எதிரி கற்பிக்கப்பட்டதை ஹாலிவுட் பொழுதுபோக்குப் படங்கள் சொல்லத் தயங்கலாம். கோலிவுட் படம் அதை ஏன் சொல்லத் தயங்க வேண்டும்? ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானில் இன்னபிற இஸ்லாமிய நாடுகளில் தீவிரவாதிகளுக்கு எதிராகக் குரல்கொடுத்து ஒடுக்கப்படுகிற மனித நேய முஸ்லிம்கள்தான் மிகுதி. அவர்களை அடையாளப்படுத்த ஹாலிவுட் படங்கள் முன்வராமல் போகலாம். கோலிவுட் படம் ஏன் முன்வராமல் போக வேண்டும்?

ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் வெளிநாட்டுப் படங்களின் பட்டியலிலாவது விஸ்வரூபத்தைச் சேர்த்துவிடும் முயற்சியா?

நாயகனை தொழுகை நடத்துகிறவனாகக் காட்டுவதும் ஒரு சமாதானம்தான். உள்ளூர் ஆதிக்க மதவாதிகள், முஸ்லிம்களிடமும் கிறிஸ்துவர்களிடமும் “இந்தியாவில் இருப்பதானால் இந்துவாக இரு, இல்லாவிட்டால் இந்துவுக்குக் கட்டுப்பட்டு இரு” என்றுதான் சொல்கிறார்கள். நாயகன் விசுவாசமான இந்திய சிப்பாய் என்பது அந்த ஆதிக்க மதவாதிகளை திருப்திப்படுத்தக்கூடும். காயம்பட்டிருக்கிற சிறுபான்மையினருக்கு மனநிறைவளிக்காது.

கலை வெளிப்பாட்டுச் சுதந்திரம், கலை வெளிப்பாட்டின் சமூகப் பொறுப்பு இரண்டுமே பிரித்துப் பார்க்க இயலாத சம முக்கியத்துவம் வாய்ந்தவை. “வெளிநாட்டுக்குப் போயிடுவேன்” என்பது போன்ற உணர்ச்சிவசப் பேட்டிகளாலும், சமரசப் பேச்சுகளாலும் முன்னதைத் தக்கவைத்துக்கொண்ட உலகநாயகன் பின்னதை ரொம்ப ரொம்ப பின்னுக்குத் தள்ளிவிட்டாரே...

மூல முதல்வன்


பெண்ணும் வேதநூல்களைப்
படிக்கக்கூடாது என்றானாம்
தலைமுதல் கால்வரை
வர்ணம் பிரித்த பகவன்.

பெண்ணோ பொதுவில்
கருவிகள் இசைத்துப்
பாடக்கூடாது என்றானாம்
மார்க்கம் சொன்ன இறைவன்.

பெண்ணின் ஆசைப்பேச்சு
கேட்கக்கூடாது என்றானாம்
விலா எலும்பில்
அவளைச் செதுக்கிய கர்த்தன்.

போதனைகள் படித்ததில்
விளக்கங்கள் கேட்டதில்
புத்திக்குப் புரிந்தது-
கடவுளைப் படைத்தவன் ஆண்.

Tuesday 5 February 2013

பள்ளத்தாக்கில் புதைக்கப்பட்ட பாட்டுக் குரல்


அந்தப் பதின்பருவப் பெண் குழந்தைகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்ட, முழுக்க முழுக்கப் பெண்களே கொண்ட, இசைக்குழுவில் இணைந்து பாடத் தொடங்கினார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கின் எழிலோடும் குளுமையோடும் இவர்களது குரலினிமையும் கலந்தது. ஆனால், பாடத்தொடங்கிய சில நாட்களிலேயே அவர்களது குரல் ஒடுங்கிவிட்டது. பாடிப் பாடி தொண்டை கட்டிப்போனதால் அல்ல, பாடவே கூடாது என்று மிரட்டப்பட்டதால்.

முதலில் சமூகவலைத்தளங்களில் சிலர் இப்படியெல்லாம் இளம் பெண்கள் வெளியே வந்து பாடலாமா என்று பதிவு செய்ய ஆரம்பித்தார்கள். மறைமுகமான தாக்குதல் மிரட்டலும் அந்தப் பதிவுகளில் இருந்தன.

மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, ‘ட்வீட்டர்’ தளத்தில் அந்தச் சிறுமிகள் அஞ்ச வேண்டியதில்லை, அவர்கள் இசைக்குழுவில் இணைந்து பாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை, அவர்களுக்கு அரசு வேண்டிய பாதுகாப்பை அளிக்கும் என்று உறுதியளித்தார்.

ஆனால், துகாதார்ன்-இ-மில்லத் என்ற ஒரு இஸ்லாமியப் பெண்கள் அமைப்பு, இப்படிப் பெண்கள் வெளியே வந்து பாடுவது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று அறிவித்தது. அந்தச் சிறுமிகள் தொடர்ந்து பாடினால் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றும் அச்சுறுத்தி அறிக்கை வெளியிட்டது. ஏற்கெனவே மாநிலத்தின் தலைமை முஃப்தி தடையாணை (ஃபட்வா) பிறப்பித்திருக்கிறார்.

சிறுமிகளின் பெற்றோர் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர்களைத் தலைமறைவாக வைத்துள்ளனர். யாரும், குறிப்பாக ஊடகங்கள் சிறுமிகளோடு தொடர்புகொள்ள முடியாத வகையில் அவர்களது கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட தொடர்புக் கருவிகளைக் கைப்பற்றி வைத்திருக்கின்றனர். முதலமைச்சரின் ட்வீட் உறுதிமொழியோ, காவல்துறையோ தங்களது குழந்தைகளைப் பாதுகாக்க முடியாது என்று அந்தப் பெற்றோர் கூறுகின்றனர்.

பள்ளத்தாக்கு தனக்குக் கிடைத்த கூடுதல் இசைக்குரல் இனிமையை இழந்திருக்கிறது.

கலை இலக்கியவாதிகள், ஜனநாயக - மனித உரிமை இயக்கங்கள் இதைக் கண்டிக்கின்றன.

கமல்ஹாசனின் கலை வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்காக நியாயக் குரல் எழுப்பிய நண்பர்களே இந்தச் சிறுமிகளுக்காகவும் குரல் எழுப்புவீர்களா?

‘விஸ்வரூபம்’ திரைப்பட விவகாரத்தில் நியாயமான கோபத்தை வெளிப்படுத்திய இஸ்லாமிய அமைப்புகளே, முஸ்லிம் நண்பர்களே - உங்களது அந்த ஆவேசத்தின் நியாயத்தை ஏற்றுக்கொண்டவன் என்ற அடிப்படையில் கேட்கிறேன் - அந்தச் சிறுமிகளுக்கு எதிரான இந்த மதவாத ஒடுக்குமுறையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? இஸ்லாம் மார்க்கம் உண்மையிலேயே இளம் பெண்களின் கலைத்திறமை வெளிப்பாடுகள் கூடாது என்று சொல்கிறதா? உண்மைதான் என்றால் அது நியாயம்தானா? இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த 21ம் நூற்றாண்டில் தொடர்வது பொருத்தம்தானா? பொருத்தமில்லை என்றால் இதற்கும் நீங்கள் உங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டாமா?