Thursday 27 September 2007

கவிதை

நேரில் நான் வர...

எல்லாம் தலைகீழாய் நடப்பது கண்டு
எனக்கும் சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
நேரில் நான் வர வேண்டும் கொஞ்சம்.

என்ன சொல்கிறாய்...
ஒருவரின் சம்பாத்தியம்
குடும்பம் நடத்தப் போதவில்லை என்பதால்
மனைவியையும் வேலைக்கு அனுப்பினாயா?
வேலைக்குப் போகும் பெண்கள்
ஒழுக்கம் இல்லாதவர்கள் எனும்
பெரியவர்(கள்) சொல் மறந்தாயா?
உன் மனைவி தன் பதி விரதக் கற்பினை
தீக்குளித்து நிரூபிக்கச் சொல்ல
உனக்குக் கற்றுத் தர வேண்டும்- அதற்கு
நேரில் நான் வர வேண்டும்.

எம்பியெம்பிப் படித்த உன் பிள்ளைக்கு
எம்பிபிஎஸ் கிடைக்கவில்லையென்று
என் சன்னதியில் வந்து புலம்புகிறாய்
காரணம் என்னவென்று அறிந்தாயா?
உனக்கும் எனக்கும் பணிந்து
பாத்திரம் தேய்க்கப் பிறந்த
சூத்திரனும் தடையின்றி
சாத்திரம் படிக்க சட்டம் வந்ததால்!
ஆத்திரம் பொங்குகிறதல்லவா?
பதினான்கு வருசம் என் பாதுகையை வைத்தே
என்பதாகையை நாட்டியதாய்க் கூறி
பாராண்ட என் தம்பி பரதன்
வேதம் பயில்வதில் இனி வர்ண
வேற்றுமை இல்லையென அறிவித்து
அன்றைக்கே துவங்கிய வினை இது.
அக்கணமே அந்த அநீதியைஅடியோடு அறுத்துவிட
சம்புகத் தலையெடுத்த என் வாளின்
அடங்காத ரத்த தாகத்தைச் சொல்ல
நேரில் நான் வர வேண்டும்.

ஊனமாய்ப் பிறப்பது முன் ஜென்மப் பாவம்
ஒதுங்கியிருந்து யாசித்திருப்பதே
ஊனமுற்றோருக்கு இடப்பட்ட சாபம்
அதை விட்டு அவர்களும் இன்று
உரிமை கோரினால் வருகிறது கோபம்
மந்தாரைக் கிழவியின் கூன் முதுகில்
வில்லால் அடித்து விளக்கினேன் ஒரு பாடம்
அதனை மறுபடியும் எடுத்துரைக்க
நேரில் நான் வர வேண்டும்.

முன்னேற்றம் எனும் கவர்ச்சி வார்த்தையின்
பின்னால் மறைந்து நின்று
நாட்டின் சுயமரியாதையை
அணுசக்தி உலையில் தள்ளுவதெப்படி?
பண்பாடெனும் பட்டுத்திரைப் பெருமையின்
பின்னால் பதுங்கிக் கொண்டு
சகோதர மக்களைப் பிளப்பதெப்படி?
மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து
வாலியைக் கொன்ற காதையை
வக்கனையாய் மறுபடி சொல்ல
நேரில் நான் வர வேண்டும்.

நான் வர வேண்டும்-
நேரில்நான் வர வேண்டும் என்றால்
நான் நடந்து வருவதற்குத்தான்
என் பெயர் சூட்டியபாலம்
அப்படியே இருக்க வேண்டும்.
தப்புத் தப்பாய் நீங்கள்
செய்து வைத்ததையெல்லாம்
நான் வந்து இடிக்கிறேன் நாளைக்கு
என் பெயர் வைத்த பாலத்தை
இடிக்காமல் பார்த்துக் கொள் இன்றைக்கு.

-அ. குமரேசன்

(சேலத்தில் செப்.23 அன்று தமுஎச நடத்திய பாரதி நாள் கவியரங்கில் வாசித்தது)

Thursday 20 September 2007

புத்தகம்

பேரம்பலத்துக்கு வரும்
சிற்றம்பல ரகசியங்கள்

சிதம்பரம் கோயில் என்றால் ஒரு காலை உயர்த்தி நடனமாடும் நடராசர் உருவம், நந்தனார் பற்றிய பக்திக் கதை, ஆண்டுதோறும் நடைபெறும் நாட்டியாஞ்சலி... இப்படியாகப் பட்ட படிமங்கள் மட்டுமே மக்கள் மனதில் ஊன்றப் பட்டுள்ளன. “சிதம்பர ரகசியம்” என்ற பதத்தை அன்றாட வாழ்வில் பயன்படுத்தினாலும் கூட, அந்த ரகசியம் என்ன என்பதை அறிந்து கொள்வதில் பலருக்கு நாட்டம் இருப்பதில்லை. “அதெல்லாம் கடவுள் விவகாரம், நமக்குப் புரியாத தத்துவம்” என்று ஒதுக்கிவிடுவதில் ஒரு சுகம் இருக்கிறது போலும். மக்களின் அந்த எளிமையைப் பயன்படுத்திக் கொண்டு என்னென்ன அக்கிரமங்கள் அரங்கேறுகின்றன!

மற்ற இந்துக் கோயில்கள் போல் இக்கோயிலில் “மூலவிக்கிரகம்” அல்லது மற்ற சிவன் கோயில்கள் போல் கருவறையில் சிவலிங்கம் இருப்பதில்லை. மாறாக ஒரு திரைதான் இருக்கிறது. வழிபாட்டு நேரத்தில் அந்தத்திரைக்குத்தான் தீபாராதனை நடக்கும். குறிப்பிட்ட நேரத்தில் திரை விலக்கப்படும். திரைக்குப் பின்னால் ஒரு அறையோ, அதில் ஒரு சிலையோ இருக்காது. மாறாக ஒரு வெற்றுச் சுவர் மட்டுமே இருக்கும். எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன் என்ற தத்துவத்தை அது கூறுகிறதாம். கவர்ச்சிகரமான இந்தத்தத்துவத்தின் பின்னணியில், அப்படிப்பட்ட ஏன் இவ்வளவு பெரிய கோயில், ஏன் இத்தனை வழிபாட்டு விதிகள், ஏன் இப்படிப்பட்ட பாகுபாடுகள் என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகள் உண்மைலேயே ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ரகசியத்தை உடைத்துக் காட்டும் ஒரு வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதில் பங்கேற்கிறது, ‘சிகரம்’ செந்தில்நாதன் ஆய்வில் வந்துள்ள ‘சிதம்பரம் கோயில் - சிலஉண்மைகள்.’

64 பக்கங்களே கொண்ட சிறிய புத்தகம்தான். ஆனால் நீண்ட நெடும் வரலாற்று மோசடியை, அதன் அடித்தளமாக உள்ள சமூக ஒடுக்குமுறையை, ஒரு சிறிய மாத்திரைக்குள் அடங்கிய பெரும் மருத்துவ ஆற்றலோடு வெளிக் கொணர்கிறது. படிப்பவர்களுக்கு முதலில் குறிப்பிட்ட அறியாமைச் சுகம் அகன்று, மெய்ப் பொருள் அறிந்து கொண்டதன் ஆவேசம் குடியேறுகிறது.

அண்மையில், இக்கோயிலின் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடச்சென்ற ஆறுமுகசாமி ஓதுவார் தடுக்கப்பட்டார். வயதில் முதியவர் என்றும் பாராமல் தாக்கப்பட்டார். நீதிமன்றத்தின் இடைக்கால ஆணை மூலம், அவர் அங்கு தமிழில் பாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டார். அந்தச் செய்தியிலிருந்து துவங்கும் புத்தகம், பின்னோட்டமாக கோயிலின் வரலாற்றுத் தடத்தில் சென்று அத்தடத்தில் புதைக்கப்பட்டிருக்கும் சாதிய ஆதிக்கச் சதிகளை, தமிழ் பின்னுக்குத் தள்ளப்பட்ட சூழ்ச்சிகளை, கோயிலின் வற்றாத செல்வங்களைச் சுரண்டும் தந்திர ஏற்பாடுகளை ஒவ்வொன்றாக மக்களின் பேரம்பல மேடைக்குக் கொண்டுவருகிறது.

இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயில் போல் முதலிலேயே இவ்வளவு பெரிதாகக் கட்டப்பட்டதல்ல. பல்வேறு மன்னர்கள் பல்வேறு காலங்களில் கோயிலை அவரவர் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரிவுபடுத்தினார்கள். கோயில் முதன் முதலில் எப்போது யாரால் எழுப்பப்பட்டது என்பதற்கான எவ்வித ஆவண ஆதாரமும் இல்லை. உடல் குறை காரணமாக பதவியைத் துறந்து இவ்வூரின் குளத்தில் குளிக்கவந்த கவுட நாட்டு மன்னன் சிம்மவர்மன் முன் சிவபெருமான் தோன்ற, அந்த இடத்தில் அவன் கோயிலைக்கட்டினான் என்பது போன்ற புராணக்கதைகள் மட்டுமே ஆதாரமாகக் காட்டப்படுகின்றன. “புராணக்கதைகள் பக்தர்களுக்கு இனிக்கலாம். வரலாற்று மாணவனுக்கு உண்மைதான் இனிக்கும்,” என்கிறார் செந்தில். ஆதிக்கவாதிகளுக்கு உண்மைகள் கசக்கத்தானே செய்யும்!

தில்லை நடராசனை தரிசிக்க விரும்பிய தலித் உழவுத் தொழிலாளி நந்தனுக்கு நேர்ந்தது போலவே புலையர் குலத்தைச் சேர்ந்த சாம்பான் என்ற விறகுவெட்டித் தொழிலாளிக்கு “கதிமோட்சம்” தரப்பட்ட கதையும் கிடைக்கிறது. சிதம்பரம் தீட்சிதர்களோடு இணக்கமாகப் போக முடியாததால் வள்ளலார் வடலூராராகியதும் நினைவூட்டப்படுகிறது.

ஆறுமுக சாமிக்கு எதிரான வழக்கில், தமிழில் பாட வேண்டுமானால் மேடைக்குக் கீழேதான் பாட வேண்டும் என்பதுதான் வழக்காறு, வழக்காற்றில் அரசாங்கம் தலையிட முடியாது என்ற வாதத்தை தீட்சிதர்கள் முன்வைத்துள்ளனர். அப்படியே தமிழில் பாடுவதானால் கூட, மற்றவர்கள் பாட முடியாது, தீட்சிதர்கள்தான் பாடுவார்கள் என்றும் கூறியுள்ளனர். அப்படியானால் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய தேவார, திருவாசகப் படைப்பாளிகள் - அவர்களில் மூவர் இவர்களை விட ஞானமுள்ள பிராமணர்கள் - எங்கேயிருந்து பாடியிருக்க முடியும் என்ற கேள்விக்கான விடையை நீதிமன்றம் ஆய்வு செய்யத்தான் வேண்டும்.

இது ஒரு தனியார் கோயில், தீட்சிதர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் பாரம்பரிய சொத்து என்ற வாதங்களையும் தவிடு பொடியாக்கியிருக்கிறார் வழக்கறிஞர். எல்லாவற்றுக்கும் மேலாக, 1978ம் ஆண்டில், அன்றைய மத்திய ஜனதா கட்சி ஆட்சியின் போது அரசமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 44வது திருத்தத்தின் படி, சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை என்பது நீக்கப்பட்டுவிட்டது. அதனையும், கேரளக் கோயில் வழக்கொன்றில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் வலுவான ஆயுதங்களாகப் பயன்படுத்தி, சிதம்பரம் கோயிலை மீட்க தமிழக அரசு தயங்காமல் முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளோடு முடிகிறது புத்தகம்.

சிதம்பரம் கோயில் மீட்பு என்பது தமிழ்மீட்பு மட்டுமல்ல, தீட்சிதர் சமூகப் பெண்களை அடிமைத் தளையியிலிருந்து மீட்பதோடும் என்று சொல்கிற இடத்தில், புத்தகம் மேலும் ஒரு சமூக அக்கறைப் பரிமாணத்தைச் சூடிக் கொள்கிறது. “தில்லைக் கோயிலில் எழும் திருமுறைகள் பிரச்சினை வெறும் ஆத்திகர்கள் பிரச்சினை அல்ல. பண்பாட்டுப் பிரச்சினை; மொழியும் ஆன்மீகமும் பண்பாட்டில் அடங்கும்! இப்போது பந்து அரசின் கையில்! தமிழக அரசு என்ன செய்யப்போகிறது,” என வினவுகிறார் செந்தில்நாதன். அரசு மட்டுமல்ல, அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் இயங்குகிற எல்லோருக்குமான வினா இது. சரியான விடையோடு களம் காண விழைவோர் கைகளில் இருக்க வேண்டிய புத்தகம்.

“சிதம்பரம் கோயில் - சில உண்மைகள்”
-ச. செந்தில்நாதன்
பக்கங்கள்: 64 விலை: ரூ.25
வெளியீடு:
சிகரம்,
ஏ -1, அருணாச்சலம் அடுக்ககம்,
1077, முனுசாமி சாலை,கலைஞர் கருணாநிதி நகர்,
சென்னை - 600 078 தொலைபேசி: 044 / 24723269

Sunday 16 September 2007

திரைப்பட விமர்சனம்


அம்முவாகிய நான்

பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவர்களது வாழ்க்கையைக் கூறும் திரைப்படங்கள் ஏற்கெனவே பலவகைகளில் வந்துள்ளன. அவற்றிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட படம் என்று சொல்லிவிட முடியாது என்றாலும், பத்தோடு பதினொன்றாக சேர்த்துவிடக் கூடிய படமும் அல்ல.

கதாநாயகியாகிய அம்முவை விட, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திப் பணம் ஈட்டும் ராணியம்மாவின் பாத்திரப்படைப்பு மாறுபட்டது. சம்பந்தப் பட்ட பெண்களின் மீது கனிவு, அக்கறை என அம்முவின் அந்த வளர்ப்புத் தாய் மனம் கவர்கிறாள். நிஜத்தில் இப்படிப் பார்க்க முடியுமா என்பது வேறு விவகாரம்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து கள்ளிப்பாலுக்கு பலியாவதற்கு பதிலாக தகப்பனால் அந்த இல்லத்தில் கொண்டுவந்து சேர்க்கப்படுகிறவள் அம்மு. அதே போல், கணவனாலேயே வருமானத்திற்காக அங்கே கொண்டுவந்து விடப் படுகிறாள் இன்னொரு பெண். இப்படிப் பட்ட இடங்களின் இன்னொரு பக்கத் தைக் காட்டும் காட்சிகள் இவை. வயதும், பால்வினை நோயும் முற்றிப்போக இரவோடிரவாகக் காணாமல் போய்விடுகிற பெண்கள் பற்றிய தகவலும் மனித நேய நெஞ்சங்களைத் தொடக்கூடியது.குழந்தைப் பருவத்திலிருந்தே அந்தச் சூழலில் வாழும் அம்முவுக்கு, தனது “தொழில்” தவறானது என்ற உறுத்தல் ஏற்படவில்லை என்பதிலும் ஒரு இயல்பான பதிவு.

எழுத்தாளனாகிய கௌரி சங்கர், இப்படிப் பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாவலாக்கி சமுதாயத்தில் கேள்விகளை எழுப்பும் நோக்கத்துடன் அந்த வீட்டிற்கு வருகிறான். அங்கே அம்முவின் வெகுளித்தனம் பிடித்துப் போக, அவளையே திருமணம் செய்து கொள்கிறான். சமூக நிலைமைகள் அப்படி யெல்லாம் இத்தகைய புரட்சிகர தம்பதிகளை நிம்மதியாக வாழ விட்டு விடுவ தில்லை. எதிர்பார்த்த கதைப் போக்குதான் என்றாலும், உண்மையின் பிரதிபலிப் பாய் உள்ளத்தில் குத்துகிறது.

அம்முவின் திருமண வாழ்க்கை தெரிந்ததும் அவளை முன்னாள் “வாடிக்கையாளர்” மனப்பூர்வமாக வாழ்த்துவது இப்படி பலவகைப் பட்ட மனிதர்களைக் கொண்டதுதான் சமுதாயம் எனக் காட்டுவதாக உள்ளது.

கௌரி சங்கரின் படைப்புகளுக் கான அங்கீகார விருது ஒவ்வொரு முறையும் தள்ளிப் போகிறது. அம்முவின் கதையையே சொல்லும் நாவலுக்கு எல்லாத் தகுதிகளும் இருந்தும், விரு துக்குப் பரிந்துரைக்கும் இறுதி அதிகா ரம் கொண்ட ஒரு பெரிய மனிதன் அதற்குக் கேட்கிற விலை, இப்படிப்ப பட்டவர் களும் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துவதன் சித்தரிப்பு. படத்தில் ஒரு கொலை வருகிறது. அதற்கு நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கப் போகிறது என்பது இறுதி வரையில் புதிராகவே வைக்கப்படுவது, தமிழ் சினிமாவில் அரிதாகக் கிடைக்கும் சுவாரசியம்.

இது போன்ற பாத்திரம் என்றால் ஆர். பார்த்திபன்தான் என்பது ஒரு எழுதப்படாத விதியாகிவிட்டது. அதற்கு முழு நியாயம் செய்திருக்கிறார். சவால் மிக்க அம்மு கதாபாத்திரத்தைத் துணிச் சலுடன் ஏற்று வெற்றிபெற்றிருக்கிறார் பாரதி. ராணியாக சாதனாவும் சாதித் திருக்கிறார்.

எம்.எஸ். பிரபு ஒளிப்பதிவு ஒரு ஓவியம் போல் இக்கதைக்கான சூழலை அருமையாக உருவாக்கித்தந்திருக் கிறது. சாகு கலை இயக்கமும், சபேஷ்-முரளி இசையும் அதற்கு ஒத்துழைத் திருக்கின்றன. “அதிருதில்ல” என்று மிரட்டாமலே அதிர்வுகளை ஏற்படுத்தி நம்பிக்கையூட்டும் படங்களின் வரிசை யில் கதை - திரைக்கதை எழுதி இயக்கி யுள்ள பத்மாமகன் தனது படைப்பையும் சேர்த்திருக்கிறார்.
-அ.கு.

Sunday 9 September 2007

பள்ளிக்கூடம் திரைப்பட விமர்சனம்


பள்ளிக்கூடம்


ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சண்முகங்களையும் தனலட்சுமிகளையும் வெளிக்கொணர்வதில் ‘அழகி’ படத்தில் பெரும் வெற்றி பெற்ற தங்கர் பச்சான் சில படங்களின் இடைவெளிக்குப் பிறகு கிட்டத்தட்ட அதே போன்ற வெற்றியைச் சாதித்திருக்கிறார். அந்தப் படத்தில் அதற்கான வாகனமாக இருந்த பள்ளிக்கூடம் இந்தப்படத்தில் இலக்காகவே ஆகியிருக் கிறது. நண்பர்கள் சந்தித்துக் கொள்கிறபோது தங்களது கடந்த காலத்தைத் திரும்பிப்பார்க்கிற கதை புதிதல்ல. அதை ஒரு பொது நோக்கத்தோடு இணைத்திருப்பதில் தங்கர் வேறுபடுகிறார்.


இரவில் மாடுகள் ஒதுங்கும் இடமாக, மழைக்காலத்தில் எல்லோரையும் நனைய விடுகிற அள வுக்கு ஓடுகள் நொறுங்கிய கூரையோடு அந்தப் பள்ளிக்கூடம் பல உண்மையான கிராமத்துப் பள்ளிகளின் லட்சணத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.


ஏற்கெனவே அந்த இடத்தைப் பள்ளிக்காக வழங்கிய ஊர்ப் பெரிய மனிதரின் மகன் அந்த இடத்துக்குச் சொந்தம் கொண் டாட, அரசின் கல்வித் துறையிலிருந்தும் அந்தப் பள்ளிக்கூடத்தை மூடிவிட ஆணை வருகிறது. பள்ளியை மீட்க ஆசிரியர்களும் ஊர்ப் பொதுமக்களும் முயற்சியெடுக்கிறார்கள்....இந்தப் பொதுப் பிரச்சனையோடு, பள்ளிக்கூடத் தரைகளிலும் பெஞ்சுகளிலும் மைதானத் திலும் மரங்களிலும் கலந்திருக்கக்கூடிய காதல் கதைகளையும், அதற்கு இணையான நட்புக் கதைகளையும் கோர்த்திருக்கிறார் தங்கர். அதனால் இந்தப் பள்ளிக்கூடம் உயிர்த்துடிப்போடு இருக்கிறது.


சட்டையில் பட்டன் இல்லாமல் முள் குத்திக் கொள்ளும் குயவர் மகன் வெற்றிவேல், வகுப்பி லேயே சிறந்த மாணவன். அவனுடன் நேசமாகப் பழகும் கோகிலா, பெரிய மனிதக் குடும்பத்தின் இன்னொரு வாரிசு. இவர்கள் பிரிய நேரிடும் சூழல் பெரும்பாலான வீடுகளில் நடப்பதுதான். பின்னர் மாவட்ட ஆட்சியராகும் வெற்றிவேல், நடந்தது என்ன என்பதை விசாரித்து அறிய முடி யாத அளவுக்கு, அன்றைய மோதலில் தனது தந்தையின் மரணத்தால் மனம் கொந்தளித்துப் போனவனாக இருக்கிறான். இதே போல் சினிமா இயக்குநராகும் முத்து, படிப்பு வராமல் கிராமத்திலேயே தேங்கிவிடும் குமாரசாமி ஆகிய நண்பர்களின் கதைகளும் சொல்லப்படுகின்றன.


குமாரசாமிக்கு படிப்பு வர வில்லை என்பதால் அவனது தகப்பன் அழுது புலம்புவதாகக் காட்டியுள்ள தங்கர், இப்படிப்பட்ட வறுமைக் குழந்தைகளின் மூளையில் ஏன் படிப்பு ஏறுவதில்லை என்ற சமூகப் பொருளாதாரப் பார்வையையும் தொட்டிருந்தால் படம் மேலும் அழுத்தம் பெற்றிருக்கும்.


பழைய மாணவர்கள் படையெடுத்து, விழா எடுத்து, நினைவுகளைப் பரிமாறிக் கொள்வ தோடு பள்ளியின் மீட்சிக்குத் தேவையான நிதியையும் வழங் குகிறார்கள். கற்பனையில் தான் இப்படி நடக்கும் என்றா லும் நல்ல நோக்கமுள்ள கற் பனை. படத்தில் கல்வி அதி காரி (இயக்குநர் வெ. சேகர் இப்பாத்திரத்தில் நடித்திருக்கி றார்), தாம் படித்த பள்ளிக் கூடத்திற்கும் இப்படி ஏதேனும் செய்ய விரும்புவதாகக் கூறு வதுபோல், படம் பார்க்கிற பல ருக்கும் இதுபோன்ற உணர்வு ஏற்படுத்தக்கூடும். அத்துடன், ஒவ்வொருவரையும் தமது பள்ளிக்காலத்திற்குப் பயணம் மேற்கொள்ள வைத்து மனதில் ஒரு பசுமையைப் பதிக்கிறார் தங்கர். அதே நேரத்தில், பள்ளியை மீட்பதில் அரசின் பொறுப்பை வலியுறுத் தும் போராட்ட உணர்வுக்கு மாறாக, இப்படிப் பழைய மாண வர்களின் நன்கொடையால் பள்ளி பிழைப்பதாகக் காட்டு வது சரியான இலக்கிலிருந்து தடம் புரள்வதாகிவிடுகிறது.


பள்ளியை மீட்க முயலும் படிக்காத குமாரசாமியாக தங்கர் பச்சான் தமது நடிப்பில் அந்த அப்பாவித்தனத்தை அழகாக வெளிப்படுத்தியிருக் கிறார்.


திரைப்பட இயக்குந ராக, இயக்குநர் சீமான் நண்ப னின் வறுமை கண்டு உருகும் போது உருக்குகிறார். மாவட்ட ஆட்சியராகிவிடும் வெற்றி வேலாக நரேன் சீரான நடிப்பை வழங்கியிருக்கிறார்.


தனது வாரிசுரிமைச் சொத்தை மட்டு மல்லாமல், காதலை மீட்பதிலும் கையறு நிலையில் நிற்கும் கோகிலாவாக சினேகா. அந்தப் பாத்திரத்தை இன்னும் முழுமைப்படுத்த இயக்குனர் முயன்றிருக்கலாம்.


“பள்ளிக்கூடம் போய்ப் பாரு” பாட்டு நீண்ட நாட்கள் மனதில் ஒலிக்கும். பரபரப்பான திடீர்த் திருப்பங்கள் இல்லா மலே படத்தின் உச்சகட்டக் காட்சி சுவாரசியமாக அமைந் திருக்கிறது. கிராம வாழ்க்கை சார்ந்த ஆழமான சமூக அல சல்கள் இல்லாவிட்டாலும் பள் ளிக்கூடத்தின் படிப்பினை யைப் புறக்கணிப்பதற்கில்லை.


-அ.குமரேசன்

Monday 3 September 2007

அறிவியல் மேதைகளோடு ஒரு மல்லுக்கட்டு


விஞ்ஞானிகளா, விபரீத ஞானிகளா?

மெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதற்கு இடதுசாரிக் கட்சிகள் தேசபக்த நேர்மையோடு முயன்று வருகின்றன. இந்தியாவின் கைகளிலும் கால்களிலும் கயிறுகட்டி பொம்மலாட்டம்போல் இயக்கக்கூடிய அந்த உடன்பாட்டை எப்படியாவது இந்தியர்களின் தலையில் கட்டுவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஏஜெண்டுகளும் செய்து வருகிற முயற்சிகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த முயற்சிகள் நேரடியாகவும் இருக்கும், சில நேரங்களில், தாங்கள் செய்வதன் ஆழ - அகலங்களை உணர முடியாத மேதாதி மேதைகளின் மூலமாகச் செய்யப்படும் மறைமுக முயற்சிகளாகவும் இருக்கும்.


இந்திய விஞ்ஞானிகள் குழு ஒன்று அந்த உடன்பாட்டிற்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை இந்த சிந்தனையைத்தான் ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட ஒரு பிரச்சனையில் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ நிலை எடுப்பதும் அதை பகிரங்கமாக வெளிப்படுத்துவதும் ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படை உரிமை. அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த விஞ்ஞானிகள் ஒருபடி மேலேபோய் அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். “அரசியல்வாதிகள் மேற்படி உடன்பாட்டை கடத்திச் செல்லவிடக் கூடாது,” என்பதாக எச்சரித்திருக்கிறார்கள். உடன்பாட்டிற்குத் தெரிவிக்கப்படும் எதிர்ப்பிற்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். “பிரதமர் மன்மோகன் சிங்கின் நேர்மையை சந்தேகிப்பதா,” என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.


“அரசை ஆதரிப்பவர்கள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் பிரதமரின் நேர்மையை சந்தேகிப்பது ஒரு தேசிய அவமானம்,” என்று அணு உலைகள் திட்டக் குழுவின் முன்னாள் இயக்குநர் ஏ.கே.ஆனந்த் உள்ளிட்ட சில விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது இடதுசாரிக் கட்சிகளைத்தான் குறிப்பிடுகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


உடன்பாட்டின் சாதகமான அம்சங்கள் என்று சிலவற்றை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் ஆயுதத் திட்டங்கள் தொடரும் என்றும், நமது அணுசக்தித் திட்டங்களின் வளர்ச்சியை எவ்விதத்திலும் இந்த உடன்பாடு பாதிக்காது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தற்போது இந்த உடன்பாடு குறித்து ஒரு முடிவெடுக்க என உயர்மட்ட அரசியல் குழு ஒன்றை அமைக்க மத்திய அரசே ஒப்புக் கொண்டுவிட்டப்பிறகு, இப்படிப்பட்ட கருத்துக்களை சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளின் சொந்தக்கருத்து என தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை.


பிரதமரின் நேர்மை பற்றி யாரும் கேள்வி எழுப்பவுமில்லை, சந்தேகம் தெரிவிக்கவுமில்லை. இந்த உடன்பாட்டைச் செயல்படுத்துவதில் அவர் பிடிவாதமாக இருப்பது நாட்டின் நலனைக் காவுகொடுத்துவிடும் என்று அச்சம் தெரிவிப்பது பிரதமரின் நேர்மையை சந்தேகப்படுத்துவதாகாது. மாறாக, தேவையின்றி பிரதமரின் நேர்மை குறித்த விவகாரமாக இதை மாற்ற முயல்வதுதான். இடதுசாரிகளின் நேர்மையைக் கொச்சைப்படுத்துகிற செயல். இவ்வாறு திடீரென உடன்பாட்டை நியாயப்படுத்திக் கூட்டறிக்கை விடுகிற விஞ்ஞானிகளின் உள்நோக்கம் என்ன, “எதிர்பார்ப்பு” என்ன என்ற சந்தேகம்தான் எழுகிறது.


இதே உடன்பாட்டின் பாதகங்கள் குறித்து, அது வளர்ச்சியை மட்டுமல்லாமல், ஒரு நாட்டின் மிக உயர்ந்த சுயமரியாதையாகிய இறையாண்மை எனப்படும் உயர் தன்னாளுமை உரிமை என்பதையே கேலிக்குள்ளாக்குகிறது என்பது பற்றி இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, பல விஞ்ஞானிகளே கூட சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார்கள். அணு சக்தி ஒழுங்கமைப்பு வாரிய முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.கோபாலகிருஷ்ணன், மும்பையின் பாபா அணு ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் டாக்டர் ஏ.என்.பிரசாத், அணு சக்தி ஆணைய முன்னாள் தலைவர் டாக்டர் பி.கே.ஐயங்கார் போன்றோர் மிகுந்த கவலையோடு இந்த உடன்பாட்டை எதிர்த்திருக்கிறார்கள். இந்தியாவின் ஒவ்வொரு கட்ட அணு சக்தி வளர்ச்சியையும் அமெரிக்காவின் ஆணைக்கு உட்படுத்திவிடும் உடன்பாடு இது என்று அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். அவர்களும் விஞ்ஞானிகள்தான்.


இந்த 123 உடன்பாடு வெறும் தொழில்நுட்பப் பரிமாற்றப் பிரச்சனையல்ல. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் நாட்டின் இறையாண்மையோடு சம்பந்தப்பட்ட அரசியல் நுட்பப் பிரச்சனை. உலக அளவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுக்கக்கூடிய நாசகர நடவடிக்கைகளுக்கு இந்தியாவையும் உடன்பட வைக்கிற அரசியல் நுட்பம் இதில் பொதிந்திருக்கிறது. ஆகவேதான் இதனை வெறுமனே அறிவியல் ஆராய்ச்சிப் பட்டங்கள் பெற்றவர்களிடம் விட்டுவிடாமல், மக்களோடு மக்களாய் கலந்து செயல்படுகிற அரசியல் தலைவர்களின் பொறுப்பில் விடவேண்டும் என, மக்கள் நலம் சார்ந்து சிந்திக்கக்கூடிய எல்லோரும் சொல்கிறார்கள்.


அதைச் செவிமடுக்காதவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஒலிக்கும் குரல், அறிவியல் ஆய்வாளர்களின் குரலாகத் தெரியவில்லை. அமெரிக்காவின் குரலாகத்தான் ஒலிக்கிறது

Sunday 2 September 2007

விவாதம்


இணைப்பதற்கா,உடைப்பதற்கா பாலம்?



அ.குமரேசன்


றிவியலுக்கும் இலக்கியத்துக்கும் ஒரு அடிப்படை உண்டு. அதுதான் உண்மை. அதே போல் இரண்டுக்கும் ஒரு தேவையும் உண்டு. அதுதான் கற்பனை. உண்மையைத் தேடுகிற அறிவியலில் கற்பனைக்கு என்ன வேலை? கற்பனையான இலக்கியத்தில் உண்மைக்கு என்ன இடம்? பறக்க வேண்டும் என்ற கற்பனைதான் அறிவியல் ஆய்வு முனைப்புகளைத் தூண்டிவிட்டு ஆகாய விமானங்களைக் கொண்டுவந்தது. வாழ்க்கையின் உண்மைகள்தான் இலக்கியப் படைப்புகளைக் கொண்டுவந்தன. கற்பனை கை கொடுக்காமல் அறிவியல் வளர்ச்சி இல்லை. உண்மையின் சாறு இல்லாமல் இலக்கிய வளர்ச்சியும் இல்லை.


அறிவியல், இலக்கியம் ஆகிய இரண்டுக்குமே மிக அடிப்படையான ஒரு இலக்கு உண்டு: சமுதாயம் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதே அது.இப்போது ஒரு இலக்கியம் அறிவியலுக்கு எதிராக நிறுத்தப்படுகிறது - ராமாயணம் என்ற இலக்கியம்.


ஒரு இலக்கியம் என்ற அடிப்படையில் ராமாயணத்தில் அள்ளியள்ளிப் பருகுவதற்கு எவ்வளவோ வாழ்க்கை உண்மைகளும் கற்பனைகளும் இருக்கின்றன. ஆனால் இன்று ராமாயணத்தின் ஒரு கற்பனை வாழ்க்கை உண்மைக்கு எதிராக, சமுதாயத்தின் தேவைக்கு முட்டுக்கட்டையாக வைக்கப்படுகிறது. ஆமாம், ராமர் பாலம் என்ற கற்பனைதான்.


முதலில் எது உண்மையான மூல ராமாயணம் என்பதிலேயே நிறைய சிக்கல் இருக்கிறது. மாநிலத்துக்கு மாநிலம் அந்தந்த மொழியில் ராமாயண மூலக்கதை எடுத்துக் கொள்ளப்பட்ட போது அந்தந்த வட்டார அரசியல் தேவைகளுக்கு ஏற்பப் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. அதனால்தான் சிறப்புகளும் குறைபாடுகளும் உள்ள சராசரி மனிதனாக வால்மீகி ராமாயணத்தில் சித்தரிக்கப்படும் ராமன், பிற்காலத்தில் கம்ப ராமாயணத்தில் அப்பழுக்கற்ற கடவுளின் அவதாரமாகக் காட்டப்படுகிறான்.


தமிழக மக்களின் ஒன்றரை நூற்றாண்டுக் கனவு சேது சமுத்திரத் திட்டம். சுற்றுச் சூழல், இயற்கைச் சமநிலை ஆகிய கவலைகளைக் கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் ஒருபுறம். அவர்களுக்கு அறிவியல் விளக்கம் அளிக்க முடியும். மீனவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் எனக் கூறி எதிர்ப்பவர்கள் இன்னொரு புறம். அவர்களுக்குப் பொருளாதாரம் சார்ந்த விளக்கங்கள் உள்ளன.


ஆனால் ஆதாரமெல்லாம் கேட்காதீர்கள், நம்பிக்கைக்கு ஆதாரம் தேவையில்லை என்று கூறி இதை எதிர்ப்பவர்களுக்கு என்ன விளக்கம் தர முடியும்? அறிவியலும் இலக்கியமும் கேள்வி கேட்கத் தூண்டுகின்றன. ஆனால் மதமும் மதம் சார்ந்த நம்பிக்கைகளும் மனிதர்களுடைய கேள்வி கேட்கும் உரிமையை மறுக்கின்றன. கேள்விகள் எழுப்பாத சமுதாயம் முன்னேறியதில்லை. இந்திய சமுதாயம் ஏன் இந்த 21ம் நூற்றாண்டில் இவ்வளவு பின்தங்கிக்கிடக்கிறது என்பதற்கான பதில் இத்தனை நூற்றாண்டுகளாக கேள்வி கேட்கும் உரிமையை மறுத்து வெறும் நம்பிக்கையை மட்டுமே சார்ந்திருக்கும்படி முடக்கப்பட்டதிலும் இருக்கிறது.


எந்த ராமேஸ்வரத்திலிருந்து மேற்படி பாலத்தை ராமன் கட்டியதாகச் சொல்கிறார்களோ, அந்த ராமேஸ்வரத்தின் உள்ளூர் வரலாறு முதல் தமிழகத்தின் எந்தவொரு வரலாற்றிலும் அந்தப் பாலம் பற்றிய குறிப்பு எந்த வடிவத்திலும் இல்லை. மூல ராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்தியது, ராமன் போய் மீட்டுவந்தது உள்பட எல்லாச் சம்பவங்களும் மத்திய இந்தியப் பகுதியைத் தாண்டவில்லை. விந்திய மலையோடு ராமாயணக்கதை முடிந்துவிடுகிறது.


ஆயினும் ராமன் கதையை விரிவுபடுத்தித் தமிழக எல்லையைத் தாண்ட வைத்ததில் அன்றைய அரசியல் நோக்கங்கள் இருந்தன. அதை விட முக்கியமாக, பகவத் கீதையின் மூலம் கெட்டிப்படுத்தப்பட்ட சாதியக் கட்டமைப்புக்கு தெய்வாம்ச முலாம் பூசிவிடுகிற நோக்கம் இருந்தது. பிறப்பால் மனிதர்களைப் பாகுபடுத்திய வர்ண அடுக்குக்கு கடவுளின் சித்தம் அது என்று நம்பவைக்கிற நோக்கம் இருந்தது. பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டவள்தான் என்ற ஆணாதிக்கச் சிந்தனையை உறுதிப்படுத்துகிற நோக்கம் இருந்தது. அரசன் தெய்வத்தின் பிரதி நிதி, அவன் சொல்வதெல்லாம் தெய்வ வாக்கு என்பதாக மனங்களில் உருவேற்றுகிற நோக்கம் இருந்தது.


இருக்கிற கடவுள்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் ஏன் ராமனை மட்டும் பிடித்துக் கொள்கிறார்கள்? அதற்கும் ஒரு ஆழ்ந்த நோக்கம் உண்டு. கம்பன் மறைத்த ராமன் ராமன் அவன்.


பதிநான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து திரும்பி வரும் ராமனிடம் பரதன் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கிறான். சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்த பின், தம்பியின் ஆட்சி எப்படியிருந்தது என வினவுகிறான். மற்றவர்கள் நல்லபடியாகக்கூற, வசிஷ்டர் மட்டும் கோபத்துடன், "செய்யக் கூடாததைச் செய்துவிட்டான் உன் தம்பி," என்கிறார். என்ன நடந்தது எனக் கேட்கும் அண்ணனிடம் ராஜகுரு, "சூத்திரன் வேதம் படிக்கலாம் என ஆணையிட்டான் பரதன்," என்கிறார். "வேண்டுமானால், ஊர்க்கோடிக்குச் சென்று பார்," என்றும் கூறுகிறார். சினம் தலைக்கேறப் புறப்படும் ராமன் அங்கே சம்புகன் என்பவன் தலைகீழாகத் தொங்கியபடி தவம் இருப்பதைப் பார்த்து, "என்ன செய்கிறாய்," என்று கேட்கிறான். "உனக்குத் தெரியாமலா இங்கே வந்திருப்பாய் மன்னா? வேதம் படிக்க விரும்பினேன். பிராமணர்கள் போல நேரடியாக வேதம் படிக்க எமக்கு அனுமதி இல்லை என்பதால், இப்படித் தலைகீழாகத் தொங்கி என் தகுதியை வளர்த்துக் கொண்டு வேதம் கற்க எண்ணினேன்," என்கிறான் சம்புகன். அதைக் கேட்டு ஆத்திரவசப்படும் அந்த சத்திரிய மன்னன் வாளை உருவி அந்தச் சூத்திர ஞானியின் கழுத்தை ஒரே வீச்சில் துண்டாக வெட்டினான். "தர்மத்தை" மீறுகிறவர்களுக்கு உரிய தண்டனையை நிறைவேற்றிய திருப்தியோடு பாவம் தொலைக்க சரயு நதியில் தலை முழுகுகிறான்.இப்போது உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்க்கும் கும்பல்களுடைய கூச்சல்களோடு இந்த சம்புகன் கதையை ஒப்பிட்டுப் பார்த்தால் ராமனை ஏன் பாலத்துக்கு இழுக்கிறார்கள் என்கிற நுட்பத்தையும் புரிந்து கொள்ளலாம்.


அறிவியலை அசிங்கப்படுத்தி, பலர் உண்மையாக நம்புகிற ஆத்திகத்தையும் அசிங்கப்படுத்தி இவர்கள் கட்ட விரும்புகிற பாலம் - மக்களிடையே உறவை வளர்ப்பதற்கு அல்ல. மாறாக ஒற்றுமையைப் பிளப்பதற்கு. பாலம் என்பதே இணைப்பதற்காகத்தான் என்ற இயற்கையையே சிதைக்க முயலும் இந்தக் குறுமதியினர் குறித்து எச்சரிக்கை தேவை.

விவாதம்

இணைப்பதற்கா,உடைப்பதற்கா பாலம்?