Tuesday 14 January 2014

இயற்கையோடு இணையும் வாழ்க்கையும் செயற்கையாய் சுரண்டும் வேட்கையும்

(பொங்கல் கொண்டாட்ட சிந்தனைகள்)

கூடி உழைத்து நாடி வாழும் சமுதாயத்தின் முக்கியமான அடையாளம் கொண்டாட்டம். தாயும் தந்தையும் தம் குழந்தையுடன் விளையாகிறபோது வேண்டுமென்றே தோற்றுப்போவார்கள். குழந்தையின் வெற்றிக் களிப்பைக் கண்டு மகிழ்வார்கள். இருள், வெயில், மழை, வறட்சி, தனிமை என வாழ்க்கைப் போராட்டத்தின் ஒவ்வொரு சவாலையும் மனிதர்கள் வெற்றிகொள்கிறபோது இயற்கை அப்படித்தான் மகிழ்கிறது. மனிதர்கள் களிப்போடு கொண்டாடுகிறார்கள். இப்படியாகத் தொடங்கிய கொண்டாட்டங்கள், பின்னர் மனிதரை மனிதர் வீழ்த்தியதையும் ஒடுக்கியதையும் அடிமைப்படுத்தியதையும் ஆதிக்க வெறியோடு கொண்டாடுவதாகவும் மாறின. முன்னதில் இருப்பது இயற்கையோடு இணைந்து நடைபோடுகிற வாழ்க்கை. பின்னதில் இருப்பது இயற்கையைச் சுரண்டுகிற வேட்கை.

இயற்கையோடு இணக்கமாக வாழ்வதன் கொண்டாட்ட வடிவமே பொங்கல். யோசித்துப் பார்த்தால், பல்வேறு கோணங்களிலும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக் கொண்டாட்டம் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

முதல் நாள் போகி. "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற இயற்கையின் சட்டத்திற்குக் கொண்டாட்ட வடிவம் கொடுத்திருக்கிற நாள் இது. சருகுகள் உதிர்வதும், துளிர்கள் உதிப்பதும் இயற்கையின் முக்கியமான செயல்பாடு. பழையன கழியாமலே இருந்திருக்குமானால் புதிய மாற்றங்கள் எதுவுமே நிகழாமல் போயிருக்கும். பழையவை நகராமல் நின்றிருக்குமானால் புதியவை நுழையவே இடம் கிடைத்திருக்காது. முதிர்ந்தவர்கள் இறப்பதையும் குழந்தைகள் பிறப்பதையும் கூட அப்படிச் சொல்லலாம். ஒரு வேளை பூமியிலிருந்து வேறு எந்த ஒரு கோளுக்கும் சென்று வருவது (இன்றைய வெளிநாட்டுப் பயணங்கள் போல்) வெகு இயல்பான ஒன்றாகிவிட்ட காலம் வருமானால், அப்போது பழையவர்களும் பன்னெடுங்காலம் வாழ்கிற நிலைமை உருவாகலாம்!

அதே நேரத்தில், பழையன கழிவதும் கழிக்கப்படுவதும் இயல்பாக நடைபெற வேண்டுமேயன்றி, புகை போட்டுக் காய்களைக் கனிய வைக்கிற ஏற்பாடாகிவிடக்கூடாது. விபத்துகளும், ஆதாயக் கொலைகளும், மத - சாதிய - ஆணாதிக்க வன்முறைகளும், சுரண்டல் யுத்தங்களும் எவரையும் முனகூட்டியே அழித்து விழுங்குவதற்கு வாய்பிளந்து அலைகின்றன. அந்தப் பழையனவும் கழிந்து, விபத்துகளும் கொலைகளும் யுத்தங்களும் வன்முறைகளும் இல்லாத புத்துலகம் மலர வேண்டும். டயர், பிளாஸ்டிக் போன்றவற்றைப் போட்டு எரிக்காமல், விறகும் வறட்டியும் பழைய துணிகளும் போட்டு எரிக்கிற போகி நெருப்பு குளிரையும் விரட்டட்டும். குளிர் காய்ந்துகொண்டிருக்கும் உழைப்புச் சுரண்டல் கோட்பாடுகளையும், வெறும் மதச் சடங்காக மாற்றிவிட்ட ஆதிக்கப் புத்திகளையும் விரட்டட்டும்.

புயலும் மழையும் குளிருமாய் வாட்டிய காலம் முடிந்து, கொஞ்சம் கொஞ்சமாய் கோடை வெயிலுக்குத் தயாராவதற்காக முன்பனி, பின்பனி சுகத்தை அனுபவிக்கத் தொடங்குவதன் அடையாளமாய் போகிக்குப் பிறகு பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலின் அரிசி, வெல்லம், ஏலம், முந்திரி அனைத்தும் உழைப்பின் விருதுகள். அந்த உழைப்பின் அறுவடைப் பலனை கொண்டாடுவதற்கு ஊர் மக்கள் ஒன்றாய்க் கூடுகிற விழா. உழவர்கள் சேற்றில் கால் வைத்ததற்காக, மற்றவர்கள் தாங்கள் சோற்றில் கை வைக்குமுன் நன்றி தெரிவிக்கும் விழா. அன்றாட வாழ்விலும் இயற்கை வளத்திலும் சூரியனின் தேவையை முன்னோர்கள் புரிந்துகொண்டதன் வெளிப்பாடு, சூரிய வழிபாட்டுச் சம்பிரதாயமாக மாற்றப்பட்டது பற்றிய சிந்தனைகள் பொங்க வேண்டும்.

உழுதுண்டு, உலகத்திற்கும் அளித்துண்டு வாழ்வோரைத் தொழுதுண்டு பின் செல்ல வேண்டிய மற்றவர்கள் எல்லோருமாய்ச் சேர்ந்து, அவர்களைத் தொழுதுநிற்க வேண்டியவர்களாக மாற்றிய கொடுமையை இனியேனும் கேள்விக்கு உட்படுத்தியாக வேண்டும். நிலத்தில் இறங்கி உழைப்போரிலும், நிலத்தை உடைமையாக்கிக் கொண்டோரிலும் சாதி - சமய பாகுபாடுகள் இருக்கின்றன. ஆனால், அந்த உழைப்பின் பயனைப் பங்கிட்டுக்கொள்வதில் அந்தப் பாகுபாடுகள் இல்லை. ஆகவே, உழைப்பை உதாசீனப்படுத்தும் தீண்டாமை உள்ளிட்ட வன்மங்களை அடுப்பிலிட்டு, சமத்துவ உணர்வுகளையும் சகோதரத்துவச் சிந்தனைகளையும் பொங்க வைத்துப் பரிமாற எல்லோருமாய்த் திரள வேண்டும். அந்த மகத்தான நாளில் கிடைக்கிற பொங்கலின் இனிப்புக்கு ஈடு இணை ஏது? இன்று கையில் எடுக்கிற ஒவ்வொரு கவளம் பொங்கலும், ஒவ்வொரு துண்டுக் கரும்பும் அந்த இனிப்புக்காக ஏங்க வைக்கட்டும், களம் இறங்கச் செய்யட்டும்.

நிலத்தைப் பண்படுத்தப் பழகிய மனிதர்கள், அதற்காக மாடுகளையும் பழக்கினார்கள். காட்டு விலங்காகச் சுற்றிய மாடு அப்போதிருந்து வீட்டு விலங்காக மனிதரோடு இணைந்து வாழத் தொடங்கியது. உழுவதற்கு மட்டுமல்லாமல், உழுது விளைவித்ததைப் போரடிப்பதற்கு, ஊருக்குள் கொண்டு செல்வதற்கு, எண்ணெய் பிழிவதற்காகச் செக்கு இழுப்பதற்கு என்று பல வகைகளிலும் மாடுகள் மனிதரின் நண்பர்களாகிவிட்டன. அந்த நட்பைக் கொண்டாடுவதே மாட்டுப்பொங்கல்.
கிராமங்களில் காளையை அடக்குகிற காளைகளுக்கே பெண்ணைக் கொடுப்பார்கள் என்ற நடைமுறை முன்பு இருந்தது. அதற்கென்றே உருவான மஞ்சுவிரட்டு இன்று வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கிற ஒரு முக்கியமான சுற்றுலா விழாவாகப் பரிணமித்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் அண்மைக்காலம் வரையில் நடைமுறையில் இருந்த, ஒரு காளையைக் கூரிய ஈட்டிகளால் குத்திக் கொல்கிற பொழுதுபோக்காக இல்லாமல், உயிரைப் பணயம் வைத்து முரட்டுக் காளைகளை அடக்குகிற வீரம் இங்கே கம்பீரம் கொள்கிறது.

காளையை அடக்குகிற இளைஞர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகக் கூட இல்லை, தன் சாதி அல்லாத வேறு பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட அவருக்குப் பெண்ணை மணமுடித்துத் தருகிற உவப்பான சூழல் நிலவியதில்லையே என்ற எண்ணமும் ஏற்படுகிறது. விலங்குளைத் துன்புறுத்தகலாகாது என்ற மனிதநேயக் கண்ணோட்டத்துடன் இன்று இது நீதிமன்றத்தின் தலையீட்டிற்கும் உள்ளாகியிருப்பதும் கவனத்தைப் பெறுகிறது. ஆயினும், புனிதம் என்ற பெயரில் மனிதர்களைப் பாகுபடுத்துகிற செயற்கையான கோமாதா அரசியலை விடவும், மாடுகள் மனிதர்களோடு நடைபோடத் தொடங்கியதைக் கொண்டாடும் மாட்டுப் பொங்கல் இயற்கையோடு இணைந்ததுதான்.

வீட்டுக்குள் முடங்கியிராமல் நாம் ஊரைக் காணவும், ஊர் நம்மைக் காணவும் ஒரு கொண்டாட்டம் - காணும் பொங்கல்! தனித்து ஒதுங்கியிருப்பதல்ல, மற்றவர்களோடு கூடிப் பழகி மகிழ்ந்திருப்பதே மானுட இயற்கை. அப்படிக் கூடி வாழ்ந்ததால்தான் ஊர் என்பதே உருவானது. உழைப்பால் ஊர் செழிக்கக் காரணமானவர்களை ஊருக்குள் பொதுத் தெருவுக்கு, பொதுக் குளத்திற்கு, பொதுக் கோவிலுக்கு வரக்கூடாது என்று ஒதுக்கியதே கொடுமையான செயற்கை. சாதிப்பாகுபாட்டால் மட்டுமல்ல, பணப்பாகுபாட்டாலும் பெரும்பகுதி மக்கள் தங்கள் பகுதியைத் தாண்டி வரமுடியாதவர்களாக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும் வர்த்தக வளாகங்களுக்குள் நுழைந்தாலே காசு கேட்பார்களோவென்ற தயக்கத்துடன் அந்தக் கட்டடங்களை வேகமாகக் கடக்கிறவர்கள் நிறையப்பேர்.

காணும் பொங்கலன்று குடும்பத்தோடு வெளியே கிளம்புகிறவர்கள் ஊர் கூடிக் கொண்டாடுகிற இயற்கையை மீட்க முயல்கிறவர்களாகவே தெரிகிறார்கள். சிலர் இது பெண்களை ஆண்களும் ஆண்களைப் பெண்களும் கண்டு ரசிப்பதற்கான ஏற்பாடேயன்றி வேறொன்றுமில்லை என்று சொல்வதுண்டு. வேற்று ஆண்கள் முன் பெண்கள் தலைகாட்டக்கூடாது என்ற திரை இதனால் விலக்கப்படுகிறது என்றால் அது வரவேற்கத்தக்கதே அல்லவா! இயற்கையான ஈர்ப்புடன் கண்கள் மோதிக்கொள்ளும்போது குறுக்கே எழுப்பட்டுள்ள செயற்கையான வேற்றுமைச் சுவர்கள் தகரட்டுமே!

இப்படி இயற்கையோடு இணைந்த கொண்டாட்டமாக இருக்கும் பொங்கல் எல்லோருக்குமானது. எந்த மதத்தைச் சார்ந்தவர்களானாலும் அவரவர் கடவுள்களை வணங்கிக்கொண்டே கொண்டாடப்பட வேண்டியது. எந்த மதத்தையுமே சாராதவர்களால் இயல்பாகவே கொண்டாடப்படுவது. உழைப்பாளர் தினம் உள்ளிட்ட அனைவருக்குமான முற்போக்குச் சிந்தனை சார்ந்த நிகழ்வுகளும் மக்களால் தன்னுணர்வோடு எடுத்துக்கொள்ளப்படுவதாகப் பண்பாட்டு அடையாளம் கொள்ளச் செய்கிற முயற்சிகள் தேவைப்படுகின்றன. அதை எப்படிச் செய்வது என்ற வினாவுக்கான விடை பொங்கல் விழாவில் இருக்கிறது.

('தீக்கதிர்' சென்னைப் பதிப்பின் 14-1-2014 இதழ் பொங்கல் விழா சிறப்புப் பக்கத்தில் எனது கட்டுரை)