Saturday 25 December 2010

சுனாமிக்குப் பிறகும் சுழன்றடிக்கப்படும் பெண்கள்


அதென்ன மறுகர்ப்ப அறுவை சிகிச்சை?


தமிழக மக்களும் அந்தமான் மக்களும் சந்தித்த, தங்கள் ஆயுட்காலம் முழுவதும் மறக்கவே முடியாத அந்த ஆழிப்பேரலையையும் அது ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகளையும் யார்தான் மறந்துவிட முடியும்? 2004ல் தமிழகத்தில் சுமார் 8,000 பேர், அந்தமானில் 1,300 பேர், புதுவையில் 700 பேர், ஆந்திராவில் 100 பேர், கேரளத்தில் 200 பேர் என பலி கொண்டது அந்த சுனாமி.

சுனாமியால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள், தொழில்களை இழந்தவர்களுக்கு பொருளாதார உதவிகள், சொந்தக் குடும்பத்தினரையும் உற்றார் உறவினர்களையும் கண்முன் பலி கொடுத்து உள்ளம் நைந்து போனவர்களுக்கு உளவியல் வழிகாட்டல்கள் என்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் உண்மையிலேயே எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்த மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. இந்நிலையில் சுனாமியால் சுழன்றடிக்கப்பட்ட பெண்களின் நிலை தொடர்பான புதியதொரு தகவல் அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு எதிரான அணுகுமுறைகள் எந்த அளவிற்கு நம் சமுதாயத்தில் கரடுதட்டிப்போயிருக்கின்றன என்பதை அந்தத் தகவல் சுட்டிக்காட்டுகிறது.

அரசியல் வன்முறைகள், சமூக மோதல்கள் என்றெல்லாம் வருகிறபோது அதிகமான தாக்குதல்களுக்கு இலக்காகிறவர்கள் பெண்கள்தான். இயற்கைச் சீற்றங்களும் இதற்கு விதிவிலக்கில்லை. சுனாமியைப் பொறுத்தவரையில், மறுகர்ப்ப (ரீகேனலைசிங்) அறுவை சிகிச்சை என்ற வடிவில் இந்தத் தாக்குதல் வந்துள்ளது.

ஒருமுறை கர்ப்பத்தடை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் மீண்டும் கர்ப்பம் தறிக்க விரும்பினால் உயிர் அணுக்களும் கரு முட்டைகளும் சந்திப்பதற்கான பாதையைத் திறந்து விடுகிற ஒரு சிகிச்சைதான் மறுகர்ப்ப அறுவை. மருத்துவ அறிவியலாளர்கள் நல்ல நோக்கத்துடன்தான் இத்தகைய நுட்பங்களைக் கண்டுபிடிக்கிறார்கள்.

இது ஒரு வகையில், குழந்தைப் பேறு வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்கிற உரிமையைப் பெண்ணுக்கு உறுதிப்படுத்துகிறது என்ற ஒரு கருத்தும் உண்டு. ஆனால், ஆணாதிக்கம் வக்கிரங்கள் சற்றும் மட்டுப்படாத சமுதாயத்தில் இந்த அறிவியல் நுட்பமும் கூட இப்போது பெண்ணை அடக்குகிற மூக்கணாங்கயிறாகவே பயன்படுத்தப்படுகிறது. உலக மனித உரிமைகள் தினத்தையொட்டி இம்மாதம் 10ம் தேதியன்று சென்னையில் சுனாமி பின்னணியில் பெண்களுக்கு மறுகர்ப்ப அறுவை சிகிச்சையால் ஏற்படும் தாக்கங்கள் என்ற தலைப்பில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. சிநேகா என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தக் கலந்துரையாடலில், பாதிக்கப்பட்ட பல பெண்களும் தங்களது துயரங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

கடலின் பசிக்குக் குழந்தைகளைப் பறிகொடுத்த பல பெற்றோர் தங்களுக்குப் புதிதாகக் குழந்தை பிறக்க வேண்டும் என்பது இயல்பு. இதற்கு உதவியாக சுனாமி பாதித்த பகுதிகளில் இந்த சிகிச்சையை பெண்களுக்கு மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வழக்கமான இயற்கைச் சீற்றங்களைப் போல அல்லாமல் கடுமையான உளவியல் சிக்கல்களையும் சுனாமி ஏற்படுத்தியிருக்கிற நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை திரும்பி வந்த பிறகுதான் இந்த சிகிச்சை தொடங்கியிருக்க வேண்டும் என சமூகப் பணியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் கள ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாமலே இந்த சிகிச்சைக்கு வழி திறக்கப்பட்டுவிட்டது. இதனால் ஏற்கெனவே நொந்துபோயிருக்கிற பெண்கள் மேலும் உடல் சார்ந்த, மனம் சார்ந்த கட்டாயங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

ஏற்கெனவே குழந்தைப் பேற்றின்போது அனுபவித்த வலி உள்ளிட்ட கசப்பான அனுபவங்களால், இந்த சிகிச்சை இப்போது வேண்டாம் என்று மறுக்கக் கூடிய பெண்களை, தங்களது உடல் புதிய கர்ப்பத்திற்குத் தாங்காது என்று அஞ்சுகிற பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள் மறுகர்ப்பத்திற்கு வற்புறுத்துகிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு உடன்படாவிட்டால், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அச்சுறுத்துகிறார்கள். கணவன்மார்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தினரும், உறவினர்களும் கூட கட்டாயப்படுத்துகிறார்கள். அப்படி நடந்தால் தங்கள் நிலை என்னவாகும் என்ற கவலை இந்தப் பெண்களை வாட்டுகிறது.

மறுகர்ப்ப அறுவை சிகிச்சையால் 50 விழுக்காடு அளவிற்குக் கூட பலன் கிடைத்ததில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக நாகை மாவட்டம் ஆரிய நாட்டுத் தெரு, அக்கறைப் பேட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 16 பெண்களுக்கு இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அவர்களில் 4 பேர் மட்டுமே மீண்டும் கருத்தரித்தார்கள். நாகப்பட்டினம் நம்பியார் நகர் பகுதியில் 10 பெண்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டதில் ஒருவர் கூட கருவுறவில்லை. கீச்சன் குப்பம் கிராமத்தில் 52 பெண்களுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்களில் கருவுற்றவர்கள் 5 பேர் மட்டுமே. மறுகர்ப்ப அறுவை சிகிச்சையின் பலன் குறித்து எவ்வித ஆய்வும் நடத்தப்படாமலே அவசர அவசரமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மீண்டும் கருத்தறிக்கவில்லை என்ற பிரச்சனையோடு முடிந்துவிடவில்லை. மாறாக, ஏற்கெனவே மன உளைச்சலில் வாடும் இந்தப் பெண்களை மேலும் வதைப்பதாக முடிகிறது. சும்மாவே ஒரு குடும்பத்தில் வாரிசு உருவாகவில்லை என்றால், ஆணின் உடலில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் பெண் மட்டுமே பொறுப்பாளியாக்கப்பட்டு அவளுக்கு மலடி என்று பட்டம் சூட்டப்படுவதுண்டு. இப்போது மறு கர்ப்ப சிகிச்சைக்குப் பிறகும் ஒரு பெண்ணுக்கு உருவாகவில்லை என்றால் அவள் குடும்பத்தினரின் மோசமான சாடல்களுக்கு உள்ளாக வேண்டியவளாகிறாள்.

“சுனாமிக்கு என் குழந்தைகள் இரண்டு பேரும் பலியானபோது என்னுடைய ராசி தான் அதற்குக் காரணம் என்று என் கணவனும் மாமியார் மாமனாரும் உறவினர்களும் என் மீது குற்றம் சுமத்தினார்கள். இப்போதோ என்னை வேண்டாத விருந்தாளியாக குடும்பத்தில் தள்ளி வைக்கப்பார்க்கிறார்கள்,” என்று ஒரு பெண் கண்ணீருடன் தெரிவித்தது மனதைக் குடைந்தது.

இது கடுமையான உடல்சீர்குலைவுகளுக்கும் இட்டுச் செல்கிறது. பொதுவாக டியூபெக்டமி என்ற அறுவை சிகிச்சைதான் பெண்களுக்கான கர்ப்பத்தடை முறையாகக் கையாளப்படுகிறது. கருத்தடை மாத்திரைகள், கருத்தடுப்பு உறைகள் போன்ற வழிமுறைகள் பெருமளவிற்குப் பின்பற்றப்படுவதில்லை. ஆண்களுக்கான வாசக்டமி முறை ஒன்று இருந்தாலும் கூட மிகப் பெரும்பாலான ஆண்கள் அதை மேற்கொள்வதில்லை. கருவை சுமப்பதானாலும், தடுப்பதானாலும் பெண்ணின் சுமையாகவே மாற்றப்படுகிறது.

டியூபெக்டமி அறுவை சிகிச்சை சில நேரங்களில் தோல்வி அடைவதுண்டு. கருத்தடை செய்து கொண்ட பிறகும் குழந்தை பிறந்துவிட்டது என்ற புகார்கள் அவ்வப்போது எழுவதைக் காணலாம். பல மருத்துவர்கள் இதனால் வரும் சிக்கல்களிலிருந்து தப்பிப்பதற்காக, கருக்குழாயைத் தேவையான நீளத்திற்கும் அதிகமாகத் துண்டித்துவிடுவதுண்டு. அப்படிக் கூடுதலாகக் கருக்குழாய் துண்டிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த மாற்று சிகிச்சையால் பலன் ஏற்படுவதில்லை. அதுமட்டுமல்ல இத்தகைய பெண்களுக்கு இது கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. முறையற்ற மாதவிலக்கு, அதிகமான ரத்தக் கசிவு, பசியின்மை, தொடர்ச்சியான அடிவயிற்று வலி, தலைசுற்றல், முதுகுவலி, தலைவலி, இடுப்பில் வலி, நெஞ்சு வலி, மயக்கம், உடல் பருமன் போன்ற உடல் பாதிப்புகளும் மன உளைச்சலுமே இவர்களுக்கு மிச்சமாகின்றன.

சுனாமியை நினைவுகூர்கிறபோது, இந்தப் பிரச்சனைகள் தொடர்பான முழு ஆய்வுகளுக்கு அரசாங்கமே ஏற்பாடு செய்ய வேண்டும். மறுகர்ப்ப அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்வது அல்லது மறுப்பது பெண்ணின் உரிமை என்ற செய்தி வலுவாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். அந்த உரிமைக்கு அரசின் ஆதரவும் சமுக இயக்கங்களின் துணையும் இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

(‘தீக்கதிர்’ 26.12.2010 இதழில் எனது கட்டுரை)

Monday 20 December 2010

அந்த கமிசனை இந்த ‘கமிசனை’ இந்த கமிசன் என்ன செய்யும்


“என்னப்பா இது, ஜேபிசி (கூட்டு நாடாளுமன்றக் குழு) விசாரணை தேவையில்லைன்னு கவர்மென்டு தெளிவா சொல்லியிடுச்சுல்ல. அப்புறமும் ஏன் இந்த எதிர்க்கட்சிக்காரங்க விடாம அதுதான் வேணும்னு உடும்புப்பிடியா நிக்கிறாங்க?”

“ஜேபிசி வைக்க வழியிருந்தாத்தான் கவர்மென்டே அதை வைச்சிருக்கும்ல... ஆனாலும் எதிர்க்கட்சிகளோட கோரிக்கையிலயும் நியாயம் இருக்குதுங்கிறதை ஏத்துக்கிட்டு நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமியில ஒரு நபர் விசாரணைக் கமிசன் அமைச்சிருக்காங்க. அதைப் புரிஞ்சுக்கிட்டு ஒத்துழைக்க மாட்டேங்கிறாங்களே...”

“இருபத்துநாலு நாள் பார்லிமென்ட்டை முடக்கினதாலே ஜனங்களுக்கு என்ன லாபம்? இந்த லட்சணத்திலே அடுத்த பட்ஜெட் கூட்டத்திலேயும் கூட இதே பிரச்சனையை எழுப்பப்போறாங்களாம்.”

“சுப்ரீம் கோர்ட்டே இப்ப சிபிஐ விசாரணையை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கிடுச்சு. இப்படி சுப்ரீம் கோர்ட்டு ஒரு பக்கம், சிபிஐ ரெய்டு ஒரு பக்கம், போதாததுக்கு சிவராஜ் பாட்டீல் கமிசன் விசாரணை... இதுக்கு மேல என்ன வேணும்கிறாங்க? எல்லாம் பாலிடிக்ஸ்சுக்காகத்தான்...”

தொலைத்தொடர்புத் துறையில் இரண்டாம் அலைக்கற்றை ஊழல் விவகாரம் தொடர்பாக இப்படியொரு விவாதம் ஆங்காங்கே கிளப்பிவிடப்படுகிறது. மத்தியில் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது கவலையளிக்கிறது என்று பேட்டியளிக்கிறவர்களும், தமிழகத்தில் இதை ஒரு சாதிப்பிரச்சனையாகத் திசை திருப்ப முயன்றவர்களும் மக்களிடையே இப்படிப்பட்ட ஒரு கருத்தைப் பரப்ப முயல்கிறார்கள். ஆனால், அரசியல் விவகாரங்களை நுனிப்புல் மேய்கிறவர்கள் வேண்டுமானால் இது நியாயம்தான் என்பது போல் மவுனமாக இருக்கலாம். ஆழ்ந்த அக்கறையோடு அணுகுகிறவர்கள் அப்படி இருக்க முடியாது. உண்மையிலேயே உச்சநீதிமன்றத் தலையீடும், சிபிஐ புலனாய்வும், ஒற்றை நீதிபதி ஆணைய விசாரணையும் போதுமென விட்டுவிட முடியுமா?

நீதிமன்ற விசாரணைக்கு கால வரம்பு எதுவும் கிடையாது. குறிப்பாக இந்தியாவில் எவ்வளவுக்கெவ்வளவு ஒரு பிரச்சனை மக்களை பாதிப்பதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நீதிமன்றத்தில் அது இழுத்தடிக்கப்பட்டுவிடும் என்பதே நம் அனுபவம்.

மத்திய புலானாய்வு நிறுவனத்தைப் (சிபிஐ) பொறுத்தவரையில் சில ரெய்டு பரபரப்புகளை ஏற்படுத்த முடியும், முக்கியமான ஆவணங்கள் சிக்கியிருப்பதாகக் கூறி எதிர்பார்ப்புகளைத் தூண்ட முடியும். மற்றபடி அதிகாரிகள் மட்டத்திலானவர்களன்றி அமைச்சக மட்டத்திலானவர்களிடம் விசாரிக்க முடியாது. அதற்கு பிரதமரின் ஒப்புதல் தேவை. இந்த விவகாரத்திலோ, பிரதமர் அலுவலகமே விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. நீ என்னைப் போட்டுக் கொடுத்தால் நான் உன்னைப் போட்டுக் கொடுப்பேன் என்கிற நாகரிகமான அரசியல் பேரத்தில் எந்த அளவுக்கு அப்படிப்பட்ட விசாரணைகளுக்கு பிரதமரின் ஒப்புதல் கிடைக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. அதே போல் எல்லா ஆவணங்களையும் சிபிஐ எளிதில் பார்வையிட்டுவிட முடியாது. அரசின் கட்டுப்பாடு இல்லாமல் சிபிஐ சுதந்திரமாகச் செயல்படுவதற்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு இதுவரை காதில் போட்டுக்கொண்டதே இல்லை.

நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலையிலான ஆணையம் இதிலே எந்த அளவுக்குச் செல்ல முடியும்? இதோ அவரே சொல்கிறார்: “என்னுடைய வேலை இதுதான்... 1999ம் ஆண்டில் புதிய தொலைத் தொடர்புக் கொள்கை உருவானதற்கும், அதைத் தொடர்ந்து 2001ம் ஆண்டில் நான்காவது கைப்பேசி சேவை (சிஎம்டிஎஸ்) உரிமம் கொண்டுவரப்பட்டதற்கும் இட்டுச் செல்லும் வகையில், தொலைத் தொடர்புத் துறையில் ஏற்பட்ட சூழல்களையும், நிகழ்ச்சிப்போக்குகளையும் ஆராய்வதற்காக தொலைத் தொடர்புத் துறையால் பராமரிக்கப்படும் ஆவணங்களைப் படித்துப்பார்ப்பதே என் வேலை.”

இதன் பொருள் என்ன என்பது தெளிவானது. அதாவது, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக அவர் எதுவும் விசாரிக்க மாட்டார் என்பதே இதன் பொருள். இரண்டு வாரங்களுக்கு முன் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் இந்த ஆணையம் அமைக்கப்பட்டதை அறிவித்தார். அதைத் தொடர்ந்து தனது பணிகளைத் தொடங்கிய நீதிபதி பாட்டீலிடம் இதை நேரடியாகவே செய்தியாளர்கள் கேட்டார்கள். இந்த ஊழலின் நாயகர் என குற்றம் சாட்டப்படும் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவை விசாரிப்பீர்களா, என்று அவர்கள் கேட்க, அதற்கு அவர் அளித்த பதில், “இல்லை.”

இந்தக் குறிப்பிட்ட துறை சார்ந்த அதிகாரிகளை மட்டும் அழைத்து அவர்களது உதவியைப் பெற்றுக்கொள்வாராம். மற்றபடி சிபிஐ விசாரிக்கிற விவகாரங்களையோ, உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிற பிரச்சனைகளையோ அவர் கையாளப் போவதில்லை. நாட்டிற்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதை அதிகாரப்பூர்வமாகவே வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலக அதிகாரிகளைக்கூட இந்த ஆணையம் விசாரிக்காது. “2001-2009 காலகட்டத்தில் உரிமங்கள் வழங்குவதிலும் இதே கால கட்டத்தில் அலைக்கற்றை ஒதுக்கீடுகள் அளிப்பதிலும் தொலைத்தொடர்புத் துறை கடைப்பிடித்த உள் நடைமுறைகளை ஆய்வு செய்வதோடு என்னுடைய விசாரணை எல்லை முடிந்துவிடுகிறது,” என்றும் பாட்டீல் கூறியுள்ளார்.

விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்பதை இந்த ஆணையம் ஆராயுமாம். ஆனால் விதிகளை மீறி, முன்னாள் அமைச்சர் தயவில் இதிலே ஆதாயம் அடைந்த தனியார் நிறுவனங்களை இந்த ஆணையத்தால் எதுவும் செய்துவிட முடியாது. இந்நாள் அமைச்சர் கபில் சிபல் இதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். அந்த நிறுவனங்களுக்கு இந்த ஆணையம் விளக்கம் கோரும் கடிதங்கள் அனுப்புமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கும் ஆணையத்திற்கும் சம்பந்தமில்லை என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர்.

ஆக, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய கறையாகப் படிந்துவிட்ட இந்த மாபெரும் ஊழல் அத்தியாயத்தில், ஆணையத்தின் வேலை ஒரு மேம்போக்கான துறைவாரி விசாரணை நடவடிக்கை போன்றதுதான். முக்கியப் பிரச்சனைகள் எதற்குள்ளேயும் செல்வதற்கு அதிகாரம் அளிக்கப்படாத இந்த ஆணையத்தின் கண்டுபிடிப்புகளும், சிபிஐ முடிவுகளும் எதற்குத்தான் பயன்படும்? ஒரு பிளாக்மெயில் அரசியல் பேரத்திற்குப் பயன்படுமேயன்றி, மக்களுக்கு வந்து சேர வேண்டிய நிதி வெள்ளம் வேறு வாய்க்கால்களுக்குத் திருப்பிவிடப்பட்டதைத் தடுக்கவோ, மீட்கவோ உதவப்போவதில்லை.

பிரதமர் உட்பட யாரையும் விசாரணைக்கு வந்து பதிலளிக்குமாறு அழைக்கவும், எந்த ஆவணத்தையும் ஒப்படைக்குமாறு ஆணையிடவும் அதிகாரம் கொண்டது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இடம்பெறும் நாடாளுமன்ற நாடாளுமன்றக் குழு. மக்களின் வறுமை, பிணி, கல்வியின்மை என பல்வேறு அவலங்களை மாற்றும் நோக்கங்களுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நிதி வழிப்பறியானது குறித்து இந்தக் குழுவின் விசாரணை தேவை என்பதே மீண்டும் மீண்டும் தெளிவாகப் புலப்படுகிறது.

Thursday 2 December 2010

இன்றும் இது நடக்கிறது...


பலதார மணத்தை பாதுகாக்க ஒரு சட்டமா?

றுபதாயிரம் மனைவியர், ஒருத்தியின் மீதும் சந்தேகப்பட்டதில்லை அப்பன். ஒரே ஒரு மனைவி, ஆனால் அவள் மீது சந்தேகம் கொண்டான் மகன். இப்படியொரு குறுங் கவிதையை அண்மையில் படித்தேன். இதிகாச நாயகனின் இன்னொரு பக்கத்தைக் காட்டி ஆணிய வக்கிரத்தைச் சாடுகிற அந்தக் கவிதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர், இதுக்குத்தான் நிறைய மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள உரிமை வேணும்கிறது, என்று கூற, உடனிருந்த எல்லோரும் சிரித்தார்கள். அப்புறம் ஆளுக்காள் பலதார முறை தொடர்பான நகைச்சுவைக் கதைகளைக் கூறத் தொடங்கினார்கள்.

என் முறை வந்தது. அமெரிக்க நையாண்டி எழுத்தாளர் மார்க் ட்வெய்ன் ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தாராம். அங்கே பலதார முறை ஆதரவாளர் ஒருவர் இவருடன் விவாதிக்க வந்தாராம். ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்பதற்கான தன் தரப்பு வாதங்களை எல்லாம் அவர் அடுக்கினாராம். கடைசியில் பல தார மணம் கூடாது என்பதற்கு உங்கள் தரப்பு வாதம் என்ன என்று கேட்டாராம். எல்லோரும் மார்க் ட்வெய்ன் என்ன சொல்லப் போகிறார் என்பதை ஆவலோடு எதிர்ப்பார்த்திருக்க அவர் எழுந்து, ஒரே ஒரு காரணம் போதும். எந்த மனுசனும் இரண்டு எசமானர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது, என்று சொன்னாராம், என்று நான் சொல்ல மறுபடி சிரிப்பலை எழுந்தது.

ஆனால், என் மனசுக்குள் ஒரு உறுத்தல் குடியேறியது. சிரிப்புக்காகக் கூட இதையெல்லாம் நியாயப்படுத்துவது போல் பேசலாமா என்ற உறுத்தல். ஒழுக்க நெறிக் கதைகள், கட்டுப்பாடுகள் என்று என்னென்னவோ இருந்தாலும் அதையெல்லாம் மிதித்துக்கொண்டு ஒரு ஆண் தன் மனைவிக்குத் தெரிந்தோ தெரியாமலோ பல பெண்களுடன் குடும்பம் நடத்துவது இன்றளவும் அவனது ஆண்மையின் அடையாளமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. பல குடும்பங்களைப் பராமரிப்பது அவனது பெருந்தன்மைக்கும் பொருளாதார வலிமைக்கும் சான்றாக்கப்படுகிறது.

இதுவே ஒரு பெண் பல ஆண்களுடன் பழகினால் அவளுக்கு சதைப்பசிக்காரி என்பது போன்ற பட்டங்கள் சூட்டப்படும். ஒழுக்க வாழ்வென்பது எல்லோருக்குமான விதிதான். ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்றெல்லாம் போதிக்கப்பட்டாலும், நடைமுறையில் வேறு கதைதான். மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணுடன் வாழ நேரிடும் கதாநாயகனை மையப்படுத்தி, எப்படிப்பட்ட கட்டாயமான சூழலில், தவிர்க்க இயலாத நிலைமையில் அவன் அப்படியொரு முடிவை எடுத்தான் என்பதாக விளக்கி, கிட்டத்தட்ட அவனை ஒரு தியாகி அளவுக்கு உயர்த்துதாக எத்தனை திரைப்படங்கள் தமிழில் வந்திருக்கின்றன!

எனினும் இந்தியாவைப் பொறுத்தவரையில் பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பு சட்டத்தின் வடிவில் இருக்கவே செய்கிறது. பலதார மணம் என்பது இங்கே தண்டனைக்குரிய தண்டனை. தன்னை விட்டு வேறொருத்தியுடன் வாழ்வதாகத் தன் கணவன் மீது ஒரு பெண் புகார் கொடுத்தால், அவன் ஒரு அரசு ஊழியராகவும் இருந்தால் அவனுடைய வேலை போய்விடும், சிறைவாசமும் உண்டு. இப்படிப்பட்ட கடுமையான சட்டவிதிகள் இருந்தும் பல ஆண்களின் ராசலீலைகள் தொடர்கின்றன - அதற்கு முக்கியமான ஒரு காரணம் பெண் அவ்வளவு எளிதில் சட்டத்தின் துணையை நாடுவதில்லை என்ற நிலை. இரண்டாவது முக்கியக் காரணம் - ஆம்பளை இப்படி ஊர் மேயுறான்னா, பொம்பளைகிட்ட என்ன கோளாறோ, என்று வெகு எளிதாக பெண்ணையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்திவிடுகிற சமூகம். வீட்டுச் சாப்பாடு சரியா இருந்தா ஆம்பளை ஏன் வெளியே சாப்பிடப்போறான், என்று, பெண்ணின் பாலியல் தகுதியைக் கூச்சமே இல்லாமல் கேள்விக்கு உட்படுத்திவிடுகிறார்கள். கடைசியில் இருக்கவே இருக்கிறது, ஆம்பளைன்னா அப்படி இப்படி இருக்கிறது வழக்கம்தான்; பொம்பளைதான் அனுசரிச்சு நடந்துக்கிட்டு அவனை மாத்தணும், என்கிற நெடுங்கால உபதேசம்.

பலதார மணத்திற்குத் தடை விதிக்கிற சட்டம் இருக்கிற நாட்டிலேயே இதுதான் நிலைமை என்றால், அதனை அங்கீகரிக்கிற சட்டம் இருக்கிற நாட்டில் எப்படியிருக்கும்? ஈரான் நாட்டில் அப்படியொரு சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்ற செய்தி உலகம் பழைய நூற்றாண்டுகளுக்குத் திரும்பிச் செல்கிறதா என்ற சிந்தனையை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே திருமணமான ஒரு ஆண் தன் மனைவியின் ஒப்புதல் இல்லாமலே வேறு பெண்களைத் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கும் சட்டத்திற்கான முன்வரைவு ஒன்று ஈரான் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதில் வரதட்சனைக்கு வரி விதிக்கும் ஏற்பாடும் இருக்கிறது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று ஆட்சியாளர்களும், அவர்களுக்கு ஆதரவான மதவாதிகளும் நியாயப்படுத்துகிறார்கள்.

ஈரானில் மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் பாலின சமத்துவத்திற்காகவும் போராடுவோர் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இது நாட்டை மிகவும் பிற்போக்கானதாக மாற்றிவிடும் என்றும், பெண்களுக்குக் கிடைத்துள்ள ஓரளவு உரிமைகளையும் பறித்துவிடும் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். இஸ்லாமியக் கோட்பாடுகளைத் திரித்துக் கூறி தங்களது நோக்கத்திற்காகப் பயன்படுத்த முயல்கிறார்கள், என்கிறார் பெண்ணுரிமை இயக்கத்தில் முன்னணியில் நிற்கும் ஜாரா ரஹனாவார்த். இவரது கணவர் மீர் ஹூசைன் முசாவி - ஜனநாயக சீர்திருத்தங்களுக்காகப் போராடி வருகிற எதிர்க்கட்சித் தலைவர்.

சட்டத்தை ஆதரிப்பவர்கள் தரப்பில் இன்னொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. குடும்பச் சூழல், பொருளாதாரம், உடல் நிலை போன்ற தவிர்க்க முடியாத நிலைமைகள் காரணமாகத் திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு இந்தச் சட்டம் பெரியதொரு வாய்ப்புக் கதவைத் திறந்துவிடுகிறது என்கிறார்கள்! ஈரான் பெண்களிடையே இந்தச் சட்டத்திற்குப் பெரும் ஆதரவு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

அரசாங்கம் நேர்மையாகப் பெண்களிடையே ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டால், ஆகப் பெரும்பாலானவர்கள் இதற்கு உடன்படவில்லை என்ற உண்மை தெரியவரும் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். அப்படியொரு கருத்துக்கணிப்புக்கு ஈரான் அரசு தயாராக இல்லை. ஒருவேளை கருத்துக்கணிப்பு என ஒன்று நடத்தப்பட்டாலும் கூட, பெரும்பாலோர் ஆதரிக்கிறார்கள் என்று அரசாங்கம் அறிவிப்பதைத்தான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும் - ஏனென்றால் இன்றைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதே தேர்தல் மோசடிகள் மூலமாகத்தான் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

2008ம் ஆண்டிலேயே இது சட்டமாகியிருக்கும். ஆயினும் எதிர்க்கட்சிகளும் மனித உரிமை இயக்கங்களும் வலிமையாகக் குரல் கொடுத்ததால், மேற்கொண்டு விவாதிக்க விரும்புவதாகக் கூறி அப்போதைக்கு அதை நிறுத்திவைத்தார் ஈரான் குடியரசுத் தலைவர் மஹமூத் அஹமதிநேசாத். இப்போது மறுபடியும் இதனைச் சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இஸ்லாம் கோட்பாடுகளிலேயே வரலாற்றிலும் பலதார வக்கிரம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்று பிற மதங்களைச் சேர்ந்த சிலர் பகையுணர்வோடு விமர்சிப்பதுண்டு. கடந்தகாலப் பண்பாட்டின் மிச்சசொச்சங்களை இன்றைய தங்களது சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கிற வக்கிரப்பேர்வழிகள் எல்லாச் சமுதாயங்களிலும் இருக்கிறார்கள். பரப்பப்படுகிற எண்ணங்களுக்கு மாறாக முஸ்லிம் மக்களிடையே ஒருதாரப் பண்பாடுதான் ஒங்கியிருக்கிறது என்பதே உண்மை. குறிப்பாக ஈரான் நாட்டில் பலதாரக் குடும்பங்கள் மிகக் குறைவுதான். இருப்பினும் அந்நாட்டு அரசு இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவருவதில் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? தற்கால அரசியல், பொருளாதாரச் சூழல்களை ஆராயாமல் இக்கேள்விக்கு மதவாத அடிப்படையில் மட்டும் விடை காண இயலாது.

உலகின் பெரிய நிலப்பரப்புள்ள நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிற, இயற்கை எரிவாயு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கிற, பெட்ரோலிய எண்ணை உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கிற நாடு ஈரான். புவிவரைபடத்தில் போர் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள நாடுமாகும். ஆகவே, ஈரானின் எண்ணை வளத்தைத் தங்களது ஏகபோகப் பிடியில் வைத்திருக்க உலகச் சுரண்டல் கூட்டங்கள் நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டே இருக்கின்றன.

உலக நாகரிக வளர்ச்சிக்குத் தலையாய பங்களித்துள்ள பாரசீகப் பண்பாட்டின் தாயகம் ஈரான்தான். பூமியில் மனித இனம் தோன்றி, வளர்ந்து மற்ற கண்டங்களுக்குப் பரவிய தொன்மைக் காலத்திற்குச் சென்றால், ஆரியர் இனத்தின் பூர்வீகமே பாரசீகம்தான் என்பது தெரியவரும். அப்போது அங்கே இஸ்லாமிய மதம் என்பதெல்லாம் கிடையாது, ஏன் பூமியின் எந்தப் பகுதியிலுமே இன்று நாம் காண்கிற மதங்கள் எதுவும் கிடையாது. மன்னராட்சிகளும், மன்னராட்சியைப் பாதுகாப்பதற்கான மதவாத அரசியலும் மற்ற நாடுகளைப் போலவே ஈரானிலும் கோலோச்சி வந்திருக்கின்றன. மிகப் பழைய காலத்திற்குச் செல்லாமல் கடந்த ஒரு நூற்றாண்டில் நிகழ்ந்தவற்றைப் பார்த்தாலே போதும், ஈரான் அரசின் இந்தப் பிற்போக்குப் பயணத்தைப் புரிந்துகொள்ளலாம்.

நேரடி மன்னராட்சியிலிருந்து விடுபட்டு குடியரசாட்சி நிறுவப்பட்டிருந்தது ஈரானில். இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1951ல் பிரதமர் முகமது மொசாதீக் அந்நாட்டு பெட்ரோலிய எண்ணை வளத்தையும், பெட்ரோலிய நிறுவனங்களையும் மக்களின் பேராதரவோடு தேசவுடைமையாக்கினார். ஈரானின் எண்ணை வயல்களை உறிஞ்சிக்கொண்டிருந்த அந்நிய முதலாளிகள் கொந்தளித்துப்போனார்கள். அவர்களின் ஆட்சிப் பிரதிநிதிகளான பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்க அதிபர் டிவைட் ஐசனோவர் இருவரும் ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்தார்கள். 1953ல் அமெரிக்க ராணுவம் ஈரானுக்குள் புகுந்தது (1991ல் இராக் நாட்டிற்குள் ஊடுறுவியது போல). முகமது மொசாதீக் சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்காவின் கட்டளைப்படி செயல்படக்கூடிய மன்னர் (ஷா) முகமது ரெஜா பஹலாவி சர்வாதிகாரியாக அமர்ந்தார். ஒரு பக்கம் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே இன்னொரு பக்கம் ஜனநாயக இயக்கங்கள் அனைத்தையும் அமெரிக்க அரசின் ஆதரவோடு ஒடுக்கினார். ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன; மன்னர் ஷா நாட்டை விட்டே ஓடினார். ஜனநாயக சக்திகளும் இடதுசாரிகளும் இணைந்தே போராடினார்கள் என்றாலும், முற்போக்கான இயக்கங்கள் வலிமையாக இல்லாத நிலையில், மதவாதத்தோடு கூடிய அயதுல்லா கோமேனி தலைமையில் ஆட்சியமைந்தது. 1979ல் இஸ்லாமிய குடியரசு நிறுவப்படுவதாக அறிவித்தார் கோமேனி. அரசின் உச்சநிலைத் தலைவர் (சுப்ரீம் லீடர்) அவர்தான் என்றும், அவருக்குக் கீழே குடியரசுத்தலைவர், அமைச்சகம், நாடாளுமன்றம் என்றும் புதிய அரசமைப்பு சாசனம் நடைமுறைக்கு வந்தது.

இன்றளவும் இதே நிலைதான் தொடர்கிறது. கோமேனியின் வாரிசாக உச்சநிலைத் தலைவர் பதவியில் இருப்பவர் அலி கமேனி. அவரது ஆசிர்வாதங்களோடு வலதுசாரிப் பிற்போக்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறவர் மஹமூத் அஹமதிநேசாத். ஏற்கெனவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தியத் தலையீடுகளின் எதிர்வினையாகத்தான், அங்கே இப்படியொரு வலதுசாரி அரசு வந்தது. இன்று அமெரிக்க அரசு மறுபடியும் உலக அரங்கில் ஈரானைத் தனிமைப்படுத்தவும், தன் வழிக்குக் கொண்டுவரவும் எல்லாவிதமான முயற்சிகளையும் செய்துவருகிறது. இராக் போல் ஈரானையும் உருக்குலைக்க முயல்கிறது. இதில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தமது முன்னோடிகளிடமிருந்து பெரிய அளவுக்கு மாறுபட்டுவிடவில்லை. ஈரான் அரசோ, ஆட்சியதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள, முற்போக்கான நடவடிக்கைகளால் மக்களைத் திரட்டுவதற்கு மாறாக, குறுகிய மனம் படைத்தோரின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்து அவர்களது ஆதரவைப் பெறுகிற முயற்சியிலேயே இறங்கியுள்ளது. அந்த முயற்சியோடு இணைந்ததுதான் பலதார சட்டம்.

உலகச் சந்தையிலும் அரசியலிலும் தலைமைத் தாதாவாக வலம் வருகிற அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளின் ஆக்கிரமிப்பு அராஜகம் மேலோங்க மேலோங்க, பல நாடுகளில் பிற்போக்கு வலதுசாரி அரசியல்வாதிகள் தங்கள் பிடியை இறுக்கிக்கொள்கிறார்கள். ஈரானில் நடப்பதும் இதுவே.

பலதார முறையை சட்டப்பூர்வமாக்கிப் பெண்களை ஆண்களின் அடிமைகளாக்குவதோடு, வரதட்சனைக்கு வரி விதிப்பதன் மூலம் அந்தக் கொடுமைக்கும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் திசையில் ஈரான் அரசு செல்கிறது. அதைத் தடுத்து நிறுத்த ஈரானிய பெண்ணுரிமை இயக்கங்கள் நடத்துகிற போராட்டம் அந்நாட்டின் ஜனநாயக மீட்சிக்கான போராட்டத்தோடும், உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தோடும் இணைந்திருக்கிறது. அந்தப் போராட்டம் வெல்லட்டும். மதவாத அரசியலுக்கு மாற்றான முற்போக்கு அரசியல் இயக்கங்களுக்கு மட்டுமல்லாமல் பெண் விடுதலை இயக்கங்களுக்கும் அந்த வெற்றி ஒரு நம்பிக்கை நட்சத்திரமாய் ஒளிரட்டும்.

Sunday 28 November 2010

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

திரைப்படம் அல்ல... வரலாற்றுப் பாடம்


இந்தியாவின் தனித்துவம் என்னவென்றால் இந்திய சமுதாய அமைப்புதான் என்று பெருமிதத்துடன் கூறுவோர் உண்டு. வேலைப்பிரிவினை அடிப்படையில் கட்டப்பட்ட இந்திய சமுதாய அமைப்பு போல் உலகில் வேறெங்கும் காண இயலாது எனப் புளகாங்கிதம் அடைவோர் உண்டு. ஆனால், சிந்திக்க விடாமல் தடுக்கிற இப்படிப்பட்ட பெருமைத் திரைகளின் பின்னால் இருப்பது, பிறப்பால் மனிதர்களுக்குத் தாழ்ச்சியும் உயர்ச்சியும் கற்பித்த சாதிப் பாகுபாடுதான்.

அறிவு சார்ந்த வன்முறை, உடல் சார்ந்த வன்முறை இரண்டு வகையாலும் சாதி அடுக்கின் மேல் தட்டுகளில் அமர்ந்துகொண்டவர்கள், அவர்களுக்குக் கீழேதான் மிதிபட வேண்டும் என்றாலும் தங்களிடமும் மிதிபடுவதற்கு என சில பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டதால் இந்த ஏற்பாட்டை ஒப்புக்கொண்டவர்கள், இந்த மேல்தட்டினர் அனைவரிடமும் மிதிபடுவதற்கென்றே அடித்தட்டிற்குத் தள்ளப்பட்டவர்கள்... இதையெல்லாம் தத்துவமாக்கியதே வர்ணாசிரம (அ)தர்மம். இது இந்த நாட்டின் மிகப்பெரிய அவமானமேயன்றி, பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.

உலகமறிய இந்த உண்மையை உரக்கக்கூறியவர், சாதி-வர்க்க பேதம் ஒழிப்பதற்கான அரசியல் இயக்கத்தை வழிநடத்தி அதற்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்தவர் டாக்டர் அம்பேத்கர். அவரைப் பற்றிய ஒரு திரைப்படம் ஆங்கிலத்தில் 2000வது வெளியானது. சிறந்த ஆங்கிலப்படம், சிறந்த நடிகர், சிறந்த கலை இயக்குநர் ஆகிய தேசிய விருதுகளையும் பெற்ற இந்தப் படம் இந்தி, மலையாளம் உள்ளிட்ட மற்ற பல இந்திய மொழிகளில் மறுபதிப்புச் செய்யப்பட்டு அந்த மாநிலங்களின் மக்களையும் சென்றடைந்தது. தமிழிலும் வருகிறது என்ற தகவல் வந்தது, ஆனால் படம் திரையரங்கிற்கு வராமலே இருந்தது. இப்போது அதிலிருந்த சட்டச் சிக்கல்கள் களையப்பட்டு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நேரடி விநியோகத்தில் தமிழக மக்களிடமும் வருகிறது.

மழைக்காகக் கோவில் மண்டபத்தில் ஒதுங்குகிற தலித் இளைஞனை அடித்து நொறுக்குகிற ஒரு ஆதிக்க சாதிக்கூட்டம், உன் மனசில் என்ன அம்பேத்கர்னு நினைப்பா என்று கேட்பதுடன் படம் தொடங்குகிறது. ரத்தச்சேற்றில் அந்த இளைஞனின் உடல் கோயில் வாசலில் நந்தி சிலையருகே கிடப்பதாகக் காட்டப்படுவது ஆழ்ந்த அர்த்தமுள்ள காட்சி.

மன்னரின் நிதியுதவியோடு மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் செல்கிறார் அம்பேத்கர். படிப்பு முடிந்து வந்தபின் அரண்மனையில் அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்பது ஒப்பந்தம். தந்தையின் எதிர்ப்பை மீறி வெளிநாடு புறப்படுகிற அம்பேத்கரின் நோக்கம் அரண்மனை வேலைக்காகப் பட்டம் பெறுவதல்ல. சிறு வயது முதல் அவர் அனுபவித்த சாதிப் பாகுபாட்டு இழிவுகளுக்கான வரலாற்று மூலங்களைக் கண்டுபிடிக்கிற ஆராய்ச்சியே நோக்கம். அப்படி அவர் கண்டுபிடித்த உண்மைகள்தான், சமுதாய விடுதலையை இணைக்காமல் இந்தியாவின் அரசியல் விடுதலை என்பதில் அர்த்தமில்லை என்ற உறுதியான எண்ணத்தை அவருக்குள் விதைக்கிறது. அந்த எண்ணத்தின் தாக்கத்தில், தீண்டாமைக்கும் சாதி வேற்றுமைகளுக்கும் எதிரான போராளியாக அவர் பரிணாம வளர்ச்சி கொள்ளகிறார்.

இதே அடிப்படையில்தான் அவர் காந்தியிடம் மோதுகிறார். பிரிட்டிஷ் அரசுடனான பேச்சுவார்த்தையில் தலித் மக்களுக்கு என தேர்தல்களில் தனித்தொகுதிகள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். அது மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தில் பிளவு ஏற்படுத்திவிடும் என்று கூறுகிற காந்தியுடன் வாதாடுகிறார். அம்பேத்கரின் இக்கோரிக்கையை எதிர்த்து ஆதிக்கசாதியினர் கலவரங்களில் ஈடுபடுகிறார்கள். பிரிட்டிஷ் அரசு இந்தக் கோரிக்கையை ஏற்கக்கூடாது என வலியுறுத்தி தனது உண்ணாவிரதப் போராட்ட ஆயுதத்தை கையில் எடுக்கிறார் காந்தி. அவரது நாடித்துடிப்பு குறைந்து வருகிறது என மருத்துவர்கள் எச்சரிக்க காந்தியின் மகன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். "என்னுடைய நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வற்புறுத்துகிறவர்கள் காந்தியைப் பார்த்து அவருடைய நிலைபாட்டை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்," என்று அம்பேத்கர் கேட்பதில் எத்தனை நியாயம்! எனினும் காந்தியை சந்திக்கிறார், ஒரு உடன்பாடு ஏற்படுகிறது. அப்போது உண்ணாவிரத ஆயுதத்தை அடிக்கடி கையில் எடுக்காதீர்கள் காந்திஜி, என்று அம்பேத்கர் கூறுகிறபோது திரையரங்கில் எழுகிற கைதட்டல் ஒளி, ஒரு நுட்பமான அரசியல் புரிதலை வெளிப்படுத்துகிறது.

அம்பேத்கர் ஒரு பாரிஸ்டர் பட்டம் பெற்ற பிராமணர் என்று நினைத்த காந்தி அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து வியக்கிறார். பின்னர் சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராக இருக்கத் தகுதி வாய்ந்தவர் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அம்பேத்கரின் பெயரை பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் காந்தி பரிந்துரைக்கிறார். அன்றைய அரசியலின் உயர்ந்த தரத்தை இப்பதிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம், பொதுக் குளத்தில் நீர் பருகும் போராட்டம் என அடுத்துதடுத்த ஓட்டம் அன்றைய உண்மைச் சூழலை உணர்த்துகிறது. இந்தப் போராட்டங்களுக்கான தேவைகள் முற்றிலுமாக மாறிவிடவில்லை என்ற இன்றைய உண்மைச் சூழலோ உறுத்துகிறது.சட்ட வல்லுநராக மட்டுமல்ல, குடியரசாக ஆகிவிட்ட இந்தியாவின் சட்டங்கள் எந்தத் திசையில் அமைய வேண்டும் என்பதைத் தீர்மானித்த அரசமைப்பு சாசன நிர்ணயக் குழுவின் தலைவராகவும் வரலாற்றுப் பங்களித்தவர் அம்பேத்கர். குழுவின் மற்ற உறுப்பினர்களில் பலர் ஒத்துழைக்காத பின்னணியில் மற்ற பல நாடுகளில் இருந்து மாறுபட்ட, பெருமைக்குரிய ஒரு அரசமைப்பு சாசனத்தை உருவாக்கிக் கொடுத்த தலைமகனாகத் திகழ்ந்தவர் அம்பேத்கர்தான் என்ற உண்மையை நாடாளுமன்றம் அங்கீகரிக்கிற இடம், படத்தைப் பார்ப்பவர்களுக்கும் அதனைத் தெளிவு படுத்துகிறது.

சட்ட அமைச்சராக, ஒரு முக்கியமான சட்டத்தைக் கொண்டுவர முனைகிறார் அம்பேத்கர். இந்து திருமணச் சட்டம், விதவைச் சட்டம் ஆகியவற்றில் முற்போக்கான மாற்றங்களைச் செய்கிற இந்தியப் பெண்ணுக்கு புதிய உரிமையை வழங்குகிற அந்தத் திருத்தத்தை ஆணாதிக்க இந்துக்கள் எதிர்க்கிறார்கள். பெண் அடங்கியிருப்பதே தர்மம் என்ற போதிக்கப்பட்ட ஆயிரமாண்டுகால போதனையில் மயங்கிய இந்துப் பெண்களும் கூட எதிர்க்கிறார்கள். முற்போக்காளரான நேரு இந்த எதிர்ப்பைக் கண்டு பணிகிறபோது, அம்பேத்கர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார்...

சாதி, பாலின பாகுபாட்டு இழிவுகளுக்கெல்லாம் அடிப்படை இந்து மதக் கோட்பாடுதான் என்ற முடிவுக்கு வருகிற அம்பேத்கர், இந்துவாகப் பிறந்துவிட்டேன். ஆனால் இந்துவாக இறக்கமாட்டேன், என்று அறிவிக்கிறார். மற்ற மதங்களிலும் இந்துத்துவ சாதிய அழுக்கு ஒட்டியிருப்பதைக் கண்டு இறுதியில், அதற்கு இடமில்லாத புத்த மதத்தைத் தேர்வு செய்கிறார். பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களோடு புத்தமதத்தைத் தழுவுகிறார். இறை நம்பிக்கையோ மத நம்பிக்கையோ இல்லாதவர்களும், அம்பேத்கரின் இந்த முடிவில் இருந்த அறச்சீற்றத்தை அங்கீகரிப்பார்கள்.

தன் மக்களின் காயங்களையும் வலிகளையும் துடைப்பதற்காக அல்லும் பகலும் பாடுபட்ட அவரது உடலில் நோய்களும் வலிகளும் குடியேறுகின்றன. தன் உடலை மட்டுமல்ல குடும்பத்தையும் கூட கவனிக்க இயலாதவராகவே அவரது வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது. ஆயினும், அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார் அன்பு மனைவி ரமாபாய். அவரது மரணப்படுக்கையில் அம்பேத்கரின் துயரம் பார்வையாளர்கள் அனைவரையும் தொற்றிக்கொள்கிறது. மனதை உறைய வைக்கிற இப்படிப்பட்ட காட்சிகள் பல இடங்களில் அமைந்திருக்கின்றன.

அம்பேத்கரின் சமுதாயத் தொண்டு தொடர வேண்டும் என்பதற்காகவே அவரது வாழ்க்கைத் துணையாகிறார் டாக்டர் சவிதா இதனையும் இப்படம் பண்பு நேர்த்தியுடன் சொல்கிறது.

மூன்று மணிநேரப் படத்தில் ஒரு நீண்ட வரலாற்றுப் பாதையில் நடந்து வந்த அனுபவத்தை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார் இயக்குநர் டாக்டர் ஜப்பார் பட்டேல். நேருக்கு நேர் அந்த நிகழ்வுகளோடு கலந்து நிற்கிற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஷோக் மேத்தா. உரையாடல் இல்லாத தருணங்களில் உணர்வுகளைத் தக்க வைக்கிறது ஆனந்த் மோடக் இசை.

பட்டப்படிப்புக்காக செல்கிறவர், தங்குவதற்கு இடம் மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறவர், அதிகாரியாக இருந்தாலும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த கீழ்நிலை ஊழியரால் அவமதிக்கப்படுகிறவர், துன்பம் நேர்கையில் வயலினெடுத்து மீட்டுகிறவர், குடும்பத்தின் மீது பாசம் மிக்கவர், லட்சியத்தில் உறுதிமிக்கவர் என ஒவ்வொரு கட்டமும், அம்பேத்கராய் நடிப்பதற்கு இவரைவிட்டால் வேறு யாரும் பொருத்தமல்ல என்று மெய்ப்பித்திருக்கிறார் மம்முட்டி. மோகன் கோகலே, சோனாலி குல்கர்னி உள்ளிட்டோரும் இந்தப் படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஆம், இந்தப் படம் அம்பேத்கரின் வாழ்க்கைக் கதையைச் சொல்லவில்லை; அவரது வாழ்க்கையின் செய்தியைச் சொல்கிறது - வலுவாக.

ஒரு திரைப்படத்தின் விடுதலைக்கே இப்படிக் காத்துக்கிடக்க வேண்டியிருந்திருக்கிறது என்றால், இந்தப் படத்தின் செய்தியாகிய சாதி-வர்க்க பேதம் ஒழிப்பு என்ற லட்சியம் நிறைவேற இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியிருக்கும்? இனியும் காத்திருப்பதற்கில்லை என்ற உள்வேகத்தை ஒவ்வொருவர் மனதிலும் விளைவிக்கிற வரலாற்று வித்துதான் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்.

டிசம்பர் 6 அன்று அம்பேத்கர் நினைவு நாள் வருகிறது. அதையொட்டி டிசம்பர் 3 அன்று வெளியாகிற இந்தப் படத்திற்கு தமிழக மக்களும் முற்போக்கு இயக்கங்களும் பேராதரவு அளித்து அந்த வரலாற்று வித்து பெரும் காடாக வளர வழிவகுத்திட வேண்டும்.

(தீக்கதிர் 29.11.2010 இதழில் எனது கட்டுரை)

Tuesday 23 November 2010

ஒரு உள் குத்தாட்டம்!


ரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் விவகாரம் உள்நாட்டு ஆட்சியாளர்களைப் பூதம் போல ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது (ஸ்பெக்டர் என்றால் ஆங்கிலத்தில் பூதம் என்று பொருள்). அப்புறம் காமன் வெல்த் விளையாட்டுத் திடலில் விளையாடிய ஊழல் ஆட்டங்கள் சிரிப்பாய் சிரித்துக்கொண்டிருக்கின்றன. இப்படியாக தேசிய மட்டத்திலும் உள்ளூர் மட்டத்திலும் வெளிவந்துகொண்டிருக்கிற தில்லுமுல்லுத் திருவிளையாடல்களின் தட புடலில் சில உலகளாவிய கைவரிசைகள் கவனத்திற்கு வராமல் நழுவிடக்கூடும்.

நம் ஊடகங்கள் பெரிதாகக் கண்டுகொள்ளாத அபபடிப்பட்ட ஒரு கைவரிசை, அமெரிக்காவின் வால் தெரு வட்டாரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. உலகளாவிய பங்குச் சூதாட்டத்தின் தலைமை தாதாக்கள் கோலோச்சுகிற இடம்தான் வாஷிங்டன் நகரின் பொருளாதார மையமான வால் தெரு. அங்கே நடந்திருக்கிற ஒரு பெரிய மோசடி பற்றி, அந்நாட்டுப் புலனாய்வு நிறுவனமான எப்ஃ.பி.ஐ விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது (அமெரிக்காவின் உள்நாட்டுக் குற்றச்செயல்களை விசாரிக்கிற அமைப்பு எஃ.பி.ஐ.; மற்ற நாடுகளின் அரசியல் முதல் வாழ்க்கை வரையில் மூக்கை நீட்டுவது சிஐஏ எனப்படும் மைய உளவு நிறுவனம்).

பங்குச் சந்தையின் அடிப்படையே பலரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆதாயங்களைக் குவிப்பதுதான். குறிப்பிட்ட நிறுவனப் பங்குகளால் அதிக ஆதாயம் கிடைக்கப்பபோவதை ஊகிக்கிறவர்கள், மற்றவர்கள் அதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாகத் தாங்களே அந்த நிறுவனத்தின் பங்குகளைக் குறைந்த விலையில் அல்லது அப்போதைய சந்தை நிலவர விலையில் வாங்கிக்கொள்வார்கள். பின்னர், அந்தப் பங்குகள் பல மடங்கு அதிக விலைக்குப் போகிறபோது தங்கள் கையில் உள்ளதை புதிய விலைக்குத் தள்ளிவிட்டு பெருத்த லாபம் ஈட்டுவார்கள். அதே போல் குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குவிற்பனையில் சரிவு ஏற்படலாம் என்கிறபோது அந்த உண்மையை மறைத்து, பங்குகளை மற்றவர்கள் தலைகளில் கட்டுவார்கள். அவற்றை வாங்கியவர்கள், உண்மை நிலையை அறியவருகிற போது கையில் இருப்பதை விற்க முடியாமல் பெருத்த இழப்புக்கு உள்ளாவார்கள்.

இப்படியான ஒரு மோசடி ஏற்பாடு பங்கு வியாபாரத்திலேயே இருக்கிறது. தொழில்களுக்குத் தேவையான முதலீடாக மாறாமல் வை ராஜா வை என்று பன்னாட்டு கார்ப்பரேட் மட்டத்தில் நடப்பது இது. பொருளாதாரச் சுழற்சி என்பது போன்ற முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்திற்கே உரிய கவர்ச்சிகரமான பெயர்களில் இந்த உள்ளே வெளியே ஆட்டங்கள் கவுரவப்படுத்தப்படுகின்றன.
இப்போது வால் தெருவில் நடந்திருப்பது அந்த மோசடிக்குள்ளேயே ஒரு உள் குத்து!

பங்குச் சந்தையில் பெரிய பெயர்களாக உள்ள சில நிறுவனங்களுக்கிடையே உள் வர்த்தகம் நடந்திருக்கிறது என்பதுதான் அந்த உள் குத்து. தினமும் பங்கு விலை நிலவரங்களைப் பார்த்து இரத்த ஓட்ட அலை எகிறி இறங்குகிற சாதாரண முதலீட்டாளர்களுக்குத் தெரியமாமல், வெளிப்படையான அறிவிப்புகள் எதுவும் செய்யமாமல் அந்த நிறுவனங்களுக்கிடையே ரகசியமான கொடுக்கல் வாங்கல்கள் நடந்திருக்கின்றன. இதனால், பங்கு விலைகள் இயல்பானதாக, உலகச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து ஏறி இறங்குகின்றன என்பதாக நம்பியிருக்கக்கூடிய அப்பாவி முதலீட்டாளர்கள் அப்பட்டமாக ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

கோல்ட்மேன் சாஷ், பிரைமரி குளோபல் ரிசர்ச் எல்எல்சி போன்ற 14 நிறுவனங்கள் பங்குச் சந்தை உலகில் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிற நிதி நிறுவனங்களாகும். செயற்கையான பங்குவிலைப் பதற்றங்களை ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ள இந்த நிறுவனங்கள், சூதாட்ட விதிகளை மீறி தங்களுக்குள்ளேயே உள் விற்பனை நடத்தியிருக்கின்றன. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை எப்.பி.ஐ. தன் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்திருக்கிறதாம்

இந்த உலகளாவிய அழுகுணியாட்டத்தில் இந்திய வல்லுநர்களும் இருக்கிறார்கள்! இது இந்தியாவுக்குப் பெருமையா என்பதை, சந்தைப் பொருளாதாரத்திற்கு சகல சுதந்திரங்களையும் வழங்கியாக வேண்டும் என்று வக்காலத்து வாங்குகிற இந்திய பொருளாதார வல்லுநர்கள்தான் சொல்ல வேண்டும். இன்டெல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் ராஜீவ் கோயல், கேலியன் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ராஜ் ராஜரத்தினம், மெக் கின்சே அன் கம்பெனி நிறுவனத்தின் அனில் குமார் போன்றவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. ஐபிஎம் நிறுவனத்தின் ராபர்ட் மொஃபாட் என்பவர் உள்ளிட்ட பலரும் இதிலே தங்களுடைய திறமையைக் காட்டியிருக்கிறார்கள்.

அந்த 14 நிறுவனங்களுக்கிடையேயான உள் வர்த்தகத்தில் சுமார் 200 லட்சம் டாலர் லாபம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டிருக்கிறதாம்.
திருடர்களானாலும் அவர்களுக்குள் சில குறைந்தபட்ச நேர்மை கடைப்பிடிக்கப்ட வேண்டும் என்ற நடைமுறை விதிகள் உண்டு. அப்படி மீறுகிறபோது மோதல், கடத்தல், கொலை என்று பரபரப்புச் செய்திகளுக்குத் தீனிகள் கிடைக்கின்றன. இந்த உள் குத்தாட்கள் அந்த விதிகளை மீறியிருக்கிறார்கள்.

இதனால் ஒட்டுமொத்த நிதிச் சுரண்டல் அமைப்பே ஆட்டம் கண்டுவிடும்! மக்கள் முதலாளித்துவப் பாதையின் அபாயங்களைப் புரிந்துகொண்டு அதை மூடுவதற்குத் தயாராகிவிடுவார்கள். அப்படி மூடு விழா நடத்துகிற மூடு மக்களுக்கு வந்துவிடக்கூடாது! எனவே எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற மயக்கத்திலேயே மக்களை ஆழ்த்திவைத்தாக வேண்டும்! அதற்காகவே இப்படியொரு விசாரணைக்கு எஃபிஐ ஏவிவிடப்பட்டிருக்கிறது.

இதனை ஏதோ சிறிய முதலீட்டாளர்களும், பைத்தியக்காரத்தனமாக நேர்மையான வழிமுறையில் மட்டும் தொழில் செய்கிற நிறுவனங்கள் மட்டுமே பாதிக்கப்படுகிற பிரச்சனையாகப் பார்ப்பதற்கில்லை. இந்த மோசடியால் ஏற்படும் செயற்கையான பணவீக்க விளைவுகள் இறுதியில் நுகர்பொருள்களின் விலை உயர்வில் கொண்டுபோய் விட்டுவிடும். சொற்ப வருமானத்தில் அப்படியும் இப்படியுமாக மிச்சப்படுத்திப் பொருள்களை வாங்குகிற நீங்களும் நானும்தான் இந்தக் குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்தாக வேண்டும்.

ஏதோவொரு சினிமாவில், எங்க பார்த்தாலும் அநியாயம் மட்டுமே ஜெயிக்குதே என்பது போல் ஒரு வசனம் வரும். நமக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது போல் ஒதுங்கியிருக்கிற வரையில் அநியாயம் ஜெயிப்பதைத் தடுக்க முடியாதுதான்.

Saturday 20 November 2010

நாளும் கடத்தலாகும் 240 கோடி!

ஏழைகளின் நிலைமைகள் குறித்துப் பேசச் சொன்னால் மனமுருகப் பேசுவார்கள். இவர்களுக்காக எதுவும் செய்யக்கூடாதா என்று கேட்டால், கருவூலத்தில் நிதி இல்லையே என்பார்கள். பெட்ரோல் விலையை ஏற்றி ஏழைகள் மீது மேலும் சுமைகளை ஏற்றுகிறீர்களே என்று கேட்டால் அரசு திட்டங்களுக்கான நிதிக்கு எங்கே போவது என்று திருப்பிக் கேட்பார்கள். மத்திய ஆட்சியாளர்களின், அதிகார வர்க்கத்தின் இப்படிப்பட்ட சொல்வித்தைகளை நிறையவே பார்த்திருக்கிறோம். "நிதி இல்லை என்கிறபோது அரசாங்கத்தால்தான் என்ன செய்துவிட முடியும்," என்று நினைக்கிற அப்பாவிகளும் இருக்கிறார்கள்.

"பணம் இல்லை என்ற பிரச்சனையே இல்லை. பணம் வேறு வேறு பைகளுக்கு இடம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் பிரச்சனை." - இது ஒரு ஆங்கில நகைச்சுவைத் துணுக்கு. நமது நாட்டிலும் நிதி இல்லை என்கிற பிரச்சனையே இல்லை. அது யாரிடம் இருக்கிறது, எங்கே போகிறது என்பதுதான் பிரச்சனை.

ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் சுமார் 240 கோடி ரூபாய் நாட்டைவிட்டு சட்ட விரோதமாக வெளியேறுகிறது என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. 1948 முதல் 2008 வரையிலான 60 ஆண்டு காலத்தில் இப்படி நாட்டைவிட்டு சுமார் 9 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சட்டத்தின் கண்களில் படாமல் கடத்தப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் இவ்வளவுதான் என்று நினைத்துவிடாதீர்கள், 2000 முதல் 2008 வரையிலான எட்டே ஆண்டுகளில் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தொகை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய்!

உலக நிதி ஒழுங்குநிலை (ஜிஎப்ஐ) என்ற ஆய்வமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மருட்சியை ஏற்படுத்தும் இந்தப் புள்ளி விபரம் தரப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள பன்னாட்டு கொள்கை மையம் என்ற நிறுவனத்தின் நிதி ஆராய்ச்சிப் பிரிவுதான் இந்த ஜிஎப்ஐ.

சட்டவிரோதமாகப் பணம் கடத்தப்படுகிறது என்றால் அது ஏதோ கள்ளக் கடத்தலில் கொண்டுபோகப்படுவதல்ல; சுவி வங்கிகளில் போடப்படும் கணக்கில் வராத பணமும் அல்ல. "ஊழல், லஞ்சம், கமிஷன், குற்ற நடவடிக்கைகள், வரி ஏய்ப்பு போன்ற முறைகளில் பணம் வெளியேறுகிறது" என்று ஜிஎப்ஐ அறிக்கை கூறுகிறது.

இப்படிப்பட்ட கண்ணுக்குத் தெரியாத வாய்க்கால்கள் மூலம் 2004 - 08 ஆகிய நான்காண்டு காலத்தில் இங்கேயிருந்து கண்ணுக்குத் தெரியாமலே மறைந்த பணம் நான்கு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்! இன்றைக்கு நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிற, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அடிபடும் தொகையை விட சுமார் இரண்டரை மடங்கு அதிகம் என்று, இந்த ஆய்வறிக்கை விவரங்களை ஒப்பிட்டுக் காட்டுகிறார் பத்திரிகையாளர் பி. சாய்நாத். (தி ஹிண்டு 18-11-2010)

இந்த ஆய்வில் ஈடுபட்டவரான தேவ் கார்,"ஆண்டுக்கு சுமார் 19.3 பில்லியன் டாலர் வேகத்தில் நிதி இழப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இவ்வளவு பெரிய இழப்பை இந்தியா நிச்சயமாகத் தாங்கிக்கொள்ள முடியாது," என்று கூறுகிறார்.

"இந்த அளவிற்கு பணம் சட்டவிரோதமாக வெளியேறுவதை தடுத்திருந்தால், 2008ம் ஆண்டு நிலவரப்படி நாட்டிற்கு உள்ள 230.6 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களை அடைத்திருக்க முடியும். எஞ்சுகிற தொகையில் பாதியை வறுமை ஒழிப்புக்குப் பயன்படுத்த முடியும்",என்று அதே அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

"இந்த ஆய்வில் கள்ளக்கடத்தல், சில வகை வர்த்தக மோசடிகள், சில புள்ளி விவரங்களின் பற்றக்குறை ஆகிய விவரங்கள் சேர்க்கப்படவில்லை. விடுதலைக்கு பிறகு இந்தியா சுமார் அரை டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி) டாலர் தொகையை பறிகொடுத்து வந்திருக்கிறது என தோராயமாக மதிப்பிடலாம்", என்று ஜிஎப்ஐ இயக்குநர் டபிள்யு. பேக்கர் கூறுகிறார். இந்த விவரங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் கிடைக்கிற தொகை மாரடைப்பையே ஏற்படுத்தக்கூடும்.

"இந்தியாவின் மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் சுமார் 16.6 விழுக்காடு அளவிற்கு, 2008ம் ஆண்டு இறுதியில் நிதி வெளியேறியிருக்கிறது. ஏற்கெனவே 2009ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் ஊடங்களில் 1.4 டிரில்லியன் டாலர் கடத்தப்படுவதாக செய்திகள் வந்தன. இந்த அறிக்கை அந்த அளவிற்கு சுட்டிக்காட்டவில்லை என்றாலும் கடத்தப்படும் தொகையின்அளவு நிச்சயமாக மிரட்டலானதுதான்," என்கிறார் பேக்கர்.

இதனால் என்ன கெட்டுவிட்டது? “நாட்டின் வளம் விநியோகிக்கப்படுவது மோசமாகிறது. வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய நிதி உதவிகளின் பலன்கள் நீர்த்துப்போகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி முடங்குகிறது.”

இந்தியாவில் சுமார் 83 கோடியே 60 லட்சம் பேர் ஒரு நாளில் 20 ரூபாய்க்கும் குறைவாகவே செலவு செய்யக் கூடியவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று முறைசாரா துறைகளுக்கான தேசிய தொழில் ஆணையம் (என்சிஇயுஎஸ்) கூறியுள்ள பின்னணியோடு, நாள்தோறும் கடத்தப்படுகிற 240 கோடி ரூபாயை ஒப்பிட்டுக் காட்டுகிறார் சாய்நாத்.

நாட்டின் பொருளாதாரத்தைத் தாக்குகிற போட்டிப் பொருளாதாரத்தில் இந்த வெளியேற்ற நிதிதான் பெரும்பான்மை. இந்த வழிகளில் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ள இந்திய சொத்துகளின் மதிப்பு, ஒட்டுமொத்த கருப்புச் சந்தையில் 72 விழுக்காடாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 விழுக்காடாகும். நாட்டின் கருப்புச் சந்தை பணத்தில் 28 விழுக்காடு மட்டுமே நாட்டிற்குள்ளேயே சுற்றிவருகிறது என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிற தகவல் உண்மையிலேயே மலைப்பை ஏற்படுத்துகிறது.

இதற்கெல்லாம் காரணம் என்ன? சிலரது பேராசை, சட்டத்திற்குக் கட்டுப்படாத போக்கிரித்தனம் என்றெல்லாம் எளிதான பதில்களைச் சொல்லிவிடலாம். என்ன வேண்டுமானாலும் செய், லாபம் குவிப்பது மட்டுமே உன்னத லட்சியம் என்ற முதலாளித்துவக் கோட்பாடு கோலோச்சுகிற வரையில் இப்படிப்பட்ட கடத்தல்கள் தொடரவே செய்யும். அண்மைக் காலத்தில் கடத்தப்படும் தொகை இவ்வளவு பெரிய அளவிற்கு அதிகரித்திருப்பதை இன்றைய உலகமய, தாராளமய, தனியார்மய மூர்க்கங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

காமன்வெல்த், ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் என்று என்னென்னவோ நோய்கள் வந்து தாக்கினாலும் உலகமய மோகத்திலிருந்து விடுபட மாட்டேன் என்று பிடிவாதமாகத் தவமிருக்கிற மன்மோகன் சிங்குகள் இதை உணர்வார்களா? மாட்டார்கள், உண்மையை மக்களிடம் கொண்டுசெல்வதே மாற்றுவழி.

(‘தீக்கதிர்’ 19.11.2010 இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை)

Tuesday 9 November 2010

ஏன்? ஏன்? ஏன்? ................................... சங்கிலியாய்த் தொடரும் கேள்விகள்


ந்தியாவில் கம்யூனிச இயக்கம் ஏன் பெரியதொரு சக்தியாக வளரவில்லை என்ற ஒரு நண்பரின் கேள்வியிலிருந்தே இந்தத் தேடலைத் தொடங்கினோம். அந்தத் தேடலில், இந்தியச் சமுதாயம் எப்படி சாதிப் பாகுபாடுகள் என்ற வலிமையான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது என்ற ஒரு முக்கியமான விடை கிடைத்தது.

அந்தச் சாதி என்ற கட்டுமானத்தின் அடிவாரமாக பொருளாதாரச் சுரண்டலும் சமூக ஒடுக்குமுறையும் சம அளவில் கலந்து குழைத்துக் கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிறது. கடவுள், கடவுளின் பெயரால் நிறுவப்பட்டுள்ள மதம், அந்த மதத்தின் உள்ளமைப்பாக சாதி என்று கட்டமைக்கப்பட்டிருப்பது போலத் தெரிந்தாலும், உண்மையில் இங்குள்ள சமூகக் கட்டமைப்பில் அடிப்படையாக இருப்பது சாதிதான். ஆகவேதான் இங்கே யார் வேண்டுமானாலும் மதம் மாற முடியும்; அதாவது தன்னைப் படைத்துக் காப்பவன் என்று இதுவரை நம்பிக்கொண்டிருக்கிற ஒரு கடவுளை அம்போ என்று விட்டுவிட்டு வேறொரு கடவுளை வணங்க முடியும். ஆனால் தன் சாதியை மாற்றிக்கொள்ள முடியாது. அவர் எந்த மதத்திற்குப் போனாலும் அவர் அவரது சாதிதான்.

இதற்கும் கம்யூனிச இயக்கத்தின் நிலைக்கும் என்ன தொடர்பு? கம்யூனிஸ்ட்டுகளின் நேர்மையை, துணிவை, தியாகத்தை மதிக்கிறவர்கள் இவ்வளவு நல்லவர்கள் அரசியலில் ஒரு பெரும் வல்லமை பெறவில்லையே என்ற ஆதங்கத்தைப் பலரும் வெளிப்படுத்துகிறார்கள். கம்யூனிஸ்ட்டுகள் சில நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களுக்காக முதலாளித்துவக் கட்சிகளோடு மாறி மாறிக் கூட்டு வைப்பதால்தான் அவர்கள் வளர்ச்சியடையவில்லை சிலர் கூறுகிறார்கள். நாடாளுமன்றம், தேர்தல் ஆகிய இந்திய அரசமைப்பு முறைகளை நிராகரிக்கிற ஒரு பிரிவினர், தேர்தலில் பங்கேற்கிறவர்களை போலி கம்யூனிஸ்ட்டுகள் என்று திட்டுவதுண்டு.

எந்த நாடானாலும் அதன் சமுதாய அமைப்பு, மக்களின் தயார் நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் எந்வொரு புரட்சியையும் நடத்திவிடமுடியாது. பெரும்பகுதி மக்களைத் திரட்டாமல், மக்கள் பங்கேற்பில்லாமல் நடக்கிற ஒரு புரட்சிகரமான மாற்றம் விரைவில் உலர்ந்து உதிர்ந்துவிடும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சோசலிச அரசுகள் வீழ்ச்சியடைந்ததற்கு, அங்கெல்லாம் படைபலத்தை மட்டுமே முக்கியமாக நம்பி ஆட்சிமாற்றம் கொண்டுவரப்பட்டது ஒரு முக்கியமான காரணம்.

இந்தியாவில் புரட்சிக்காக மக்களைத் திரட்டத் தடையாக இருப்பது எது?

அநியாயங்களைக் கண்டு கொந்தளிக்கிற மக்கள், அக்கிரமக்காரர்களை நிற்கவைத்துச் சுட வேண்டும் என்று ஆத்திரத்தோடு நண்பர்களிடம் பேசுகிறார்கள்; ஆனால், ஒரு சிறு கண்டன ஆர்ப்பாட்டத்திற்குக் கூட வர மாட்டேனென்கிறார்களே - ஏன்?

இன்றைய சுரண்டல்கள் பற்றி எடுத்துச்சொல்லி, இதற்கொரு மாற்றம் வேண்டாமா என்று கேட்டால் “இவர்களுக்கு வேற வேலையில்லை” என்பது போலப் பார்த்துவிட்டு ஒதுங்குகிறார்களே - ஏன்?

வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கோரி ஒரு ஊர்வலம் நடக்கிறபோது, அதற்கு ஆதரவு தெரிவித்து ஏற்கெனவே ஏதோவொரு வேலையில் இருக்கிற தொழிலாளிகளும் கலந்துகொள்கிறார்கள்; ஆனால் வேலையின்றி வீட்டில் அவமானப்படுகிற இளைஞர்கள் அந்த ஊர்வலத்தைக் கண்டு “வெட்டிப்பசங்க, இவங்க கோஷம் போட்டு ஊர்வலம் போனால் வேலை கிடைச்சுடுமாக்கும்” என்று இளக்காரமாகப் பேசுகிறார்களே - ஏன்?

நாட்டின் நிலைமைகள், அவலங்கள் பற்றியெல்லாம் சொல்கிறபோது ஒப்புக்கொள்கிறவர்கள், “இதையெல்லாம் மாத்த முடியாதுங்க” என்று ஒதுங்கிவிடுகிறார்களே - ஏன்?

நம் மக்களின் இந்த பொதுவான மனநிலைக்கான காரணங்களை ஆராயாமல், தீடீர்ப்புரட்சியை நடத்திவிட முடியாது.

காரணங்கள் என்று எதையெல்லாம் கருதுகிறீர்கள்?

நண்பர்களே, உங்கள் எண்ணங்களை சுருக்கமாக இங்கே பின்னூட்டமிடுங்கள். நம் உரையாடலைத் தொடர்வோம்.