Monday 24 March 2014

முழு விடுதலைக்கான முதற்பெரும் சுதந்திரம்

னியொரு பிறவியே இல்லாமல் பரம்பொருளோடு ஐக்கியமாவதுதான் முழு விடுதலை என்று ஆன்மிகத் தத்துவங்கள் கற்பிக்கின்றன. இருப்பது ஒரு பிறவிதான் என்பதே உண்மை. அந்த ஒரு பிறவியில் சந்திக்கும் சவால்களும் சோதனைகளும் ஏற்ற இறக்கங்களும்தான் இயற்கைக்கு அப்பாற்பட்டதொரு சக்தி இருப்பதாகவும் அந்த சக்தியோடு ஐக்கியமாகிவிட்டால் பிறவிப் பெருங்கடல் என்ற துயரத்திலிருந்து விடுபட்டிருக்கலாம் என்ற புலம்ப வைக்கின்றன. சுதந்திரமான வாழ்க்கைக்கான வேட்கையை வற்றிப்போக வைக்கிற, சுயநலமிக்க, ஈவிரக்கமற்ற சுரண்டல் சமுதாய அமைப்புதான் இத்தகைய புலம்பல் தத்துவத்தைப் பரப்பச் செய்கிறது. கண்முன் இருக்கிற இந்த உலகில், சமத்துவத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் நடக்கிற போராட்டங்களில் ஐக்கியமாவதே உண்மையான விடுதலையை நோக்கிய பயணம். ஆம், சமத்துவமும் சுதந்திரமும் பிரித்துப் பார்க்க முடியாதவை. சமத்துவம் இல்லாத சுதந்திரம் போலித்தனமானது, சுதந்திரம் இல்லாத சமத்துவம் காலித்தனமானது.

மானுட விடுதலையில் அடிப்படையானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்தான். உலகச் சமுதாயத்தில் இன்று நாம் காண்கிற அத்தனை ஆக்கப்பூர்வமான வளர்ச்சிகளும், பூமியில் மனிதர்கள் பரிணமித்த ஆதி நாளிலிருந்து நேற்று வரையில் தாங்கள் தெரிந்துகொண்டதையும் புரிந்துகொண்டதையும் சக மனிதர்களோடு பகிர்ந்துகொள்கிற கருத்துவெளிப்பாட்டிலிருந்தே நிலைநாட்டப்பட்டிருக்கின்றன. மானுடம் கனவு காண்கிற காதலும் கலையுமே ஆளுமை செலுத்துகிற முழுமையான ஜனநாயகமும் சமத்துவமும் நிலைநாட்டப்படுவதற்கு ஒரு அடிப்படைத் தேவையாக இருப்பதும் அதே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்தான். சுதந்திரத்திற்குப் பகையான எல்லா வகை ஒடுக்குமுறைகளிலும் மிகக் கொடூரமானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறைதான். ஒருவர் தன் மனதில் நினைப்பதை, கற்பனை செய்வதை, உண்மையெனக் கருதுவதை சக மனிதர்களோடு பகிர்ந்துகொள்ள முடியாது என்பதை விடவும் மூர்க்கத்தனமான வேறொரு ஒடுக்குமுறை இருந்துவிட முடியாது.

சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியின் உச்சகட்ட நாகரிகம் என்று சொல்லப்படுகிற முதலாளித்துவம் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் முதலாளித்துவம் நிலைப்படுத்துவது கட்டற்ற வர்த்தகச் சுதந்திரத்தையும், வரம்பற்ற சந்தைச் சுதந்திரத்தையும்தானேயன்றி உண்மையான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையல்ல. அந்த வர்த்தக - சந்தைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தேவையான அளவுக்கு மற்ற சுதந்திரங்களும் (பண்பாட்டுச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், தேர்வுச் சுதந்திரம், கலை - இலக்கியச் சுதந்திரம் இன்ன பிற) அனுமதிக்கப்படும். மேற்படி சுதந்திரத்திற்குச் சிக்கல் வருகிறதென்றால் மற்ற மற்ற சுதந்திரங்கள் கட்டுப்படுத்தப்படும், தேவைப்பட்டால் ஒடுக்கப்படும்.

வர்த்தகச் சுதந்திரமும், சந்தைச் சுதந்திரமும் கூட மேற்பூச்சுதான். அடியில் இருப்பது வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்கிற, சந்தையுலக ஆதிக்கக் கும்பல்களின் சுதந்திரம்தான். இன்றைய சொற்களில் சொல்வதென்றால், உள்நாட்டு - வெளிநாட்டு கார்ப்பரேட் தாதாக்களின் சுதந்திரம்தான். சின்ன மீனைப் பார்த்து பெரிய மீன், “நாம் இரண்டு பேரும் ஒருவரையொருவர் விழுங்குவதற்குச் சுதந்திரம் இருக்கிறது, நீ சுதந்திரமாக என்னை விழுங்கலாம், முடிந்தால் நானும் உன்னை விழுங்கலாம்...” என்று செய்துகொள்கிற ஏற்பாடுதான் சந்தைச் சுதந்திரம்.

உலகளாவிய சுரண்டல் ஆதிக்கத்திற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகளில் ஒன்றுதான் கட்டுப்பாடு, ஒழுங்கு, பொது அமைதி என்பதான பல காரணங்களைக் கூறி விதிக்கப்படுகிற தணிக்கை. பத்திரிகைகள், நாடகங்கள், கவிதைகள், கதைகள், ஓவியங்கள், சிற்பங்கள், புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள், இணையப் பதிவுகள் என என்னென்ன கருத்து வெளிப்பாட்டு வழிகள் இருக்கின்றனவோ அத்தனை வழிகளிலும் தண்டல் சாவடி (டோல் கேட்) போல தணிக்கை விதிகள் திணிக்கப்படுகின்றன.

“(தணிக்கை) குடிமக்களின் மிக உயர்ந்த நலன் மீது, அவர்களது மனங்களின் மீது சட்டாம்பிள்ளைத்தனம் செலுத்துகிறது. இயற்கையின் அழகான பன்முகத்தன்மைகளை, வற்றாத வளங்களை வியந்து போற்றுகிறீர்கள். ஒரு ரோஜா மலர் வயலட் பூவைப் போல மணக்க வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட வளமிக்கதான மனம் மட்டும் ஒற்றைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறதே...” என்று எழுதினார் கார்ல் மார்க்ஸ். பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியதன் தேவை குறித்து மார்க்ஸ் எழுதிய இந்த வரிகள், அனைத்து வகையான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரங்களுக்கும் பொருந்தும்.

நாடுகளின் அரசுகள், நாடுகளுக்குள் இருக்கக்கூடிய மாநிலங்களின் அரசாங்கங்கள் மட்டுமல்ல, மத பீடங்கள், சாதிக் கூடங்கள், கருத்துச் சுதந்திரத்தைக் கற்பிக்க வேண்டிய கல்விச் சாலைகளின் நிர்வாகங்கள்... என எல்லா அதிகார அமைப்புகளும் இந்தக் கங்காணி வேலையைச் செய்கின்றன. சில நேரங்களில் அரசாங்கம் தானாகவே தனது பிரம்பைச் சுழற்றுகிறது; சில நேரங்களில் மேற்படி இதர அமைப்புகள் நேரடியாகக் கெடுபிடி செய்கின்றன; சில நேரங்களில் அந்த அமைப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் அந்த அமைப்புகளுக்குக் கட்டுப்பட்டு தடையாணைகளோடு தாண்டவமாடுகிறது. இதில், ஒரு முறை ஒரு அமைப்பின் கெடுபிடிக்குப் பணிந்து ஒரு நடவடிக்கை எடுத்துவிட்டால், அடுத்த முறை இன்னொரு அமைப்பின் கெடுபிடிக்குப் பணிந்து இன்னொரு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறாக “ஜனநாயகம்” பாதுகாக்கப்படுகிறதாம்!

சென்னையைச் சேர்ந்த எவாம் என்ற கலைக்குழுவினர் தயாரித்த ‘அலி ஜே’ என்ற நாடகத்தை சென்னையில் மேடையேற்றத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக் கால வலிகளையும், 2002ல் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தின்போது அனைத்து சமூக மக்களும் ஒருவர்க்கொருவர் உதவியாக இருந்த குஜராத்தில் சில மாதங்களிலேயே மத வன்முறை கிளப்பிவிடப்பட்டதால் விளைந்த வேதனைகளையும் சொல்வதன் மூலம், மத வேலிகளைத் தாண்டிய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறது என்று கூறப்படுகிற, ஒரு மர்மக்கதை வடிவ நாடகம் அது. குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே வரக்கூடிய அலையன்ஸ் பிரான்ஸ் (பிரான்ஸ் நட்புறவு மன்றம்) அரங்கில் மார்ச் 9 அன்று நடைபெற இருந்த அந்த சிறு நாடகத்தில், “தேச விரோதக் கருத்துகள்” சொல்லப்படுவதாக ஹிந்து ஜனஜாகிருதி சமிதி, இந்து முன்னணி ஆகிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததால் “சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக” எனக்கூறி அந்த நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம் என சென்னை காவல்துறை ஆணையிட்டிருக்கிறது. “தேச பக்தியில் நாங்கள் யாரையும் விட குறைந்தவர்கள் அல்ல, யாரோ எழுதியதை வைத்து நாடகம் பற்றி முடிவு செய்யாதீர்கள், நீங்களே வந்து நாடகத்தைப் பார்த்து உண்மையிலேயே இது யாரையாவது புண்படுத்துகிறதா என்று முடிவு செய்யுங்கள்,” என்று நாடகத்தின் இயக்குநர் கார்த்திக் குமார் கேட்டுக்கொண்டது யார் காதிலும் விழவில்லை. எடின்பர்க் நாடக விழாவில் பெரும் வரவேற்பைப் பெற்று, ஏற்கெனவே மும்பையில் தடைசெய்யப்பட்ட அந்த நாடகம் உண்மையிலேயே எப்படிப்பட்டது என்று யாருமே நேரில் முடிவுக்கு வர இயலாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய தத்துவ ஆராய்ச்சியாளர் வெண்டி டோனிகர் எழுதிய “தி ஹிண்டுஸ் - அன் ஆல்டர்நேடிவ் ஹிஸ்டரி’ (இந்துக்கள் - ஒரு மாற்று வரலாறு) என்ற, வரலாற்றில் இந்தியப் பெண்களின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய்கிற புத்தகத்தை எதிர்த்து, ஷிக்ஷா பச்சாவோ அந்தோலன் என்ற இந்து மதவாத அமைப்பு நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் தனது தீர்ப்பைச் சொல்வதற்கு முன்பே, உலகின் புத்தகச் சந்தையில் பெரியதொரு நிறுவனமான பெங்குயின், நீதிமன்றத்திற்கு வெளியே மேற்படி அமைப்போடு உடன்பாடு செய்துகொண்டது. புத்தகத்தை விலக்கிக்கொள்வதாகவும், அதை அரைத்துக் காகிதக் கூழாக்கிவிடுவதாகவும் அறிவித்தது. அந்தப் புத்தகம் எப்படிப்பட்டது, டோனிகர் என்ன சொல்கிறார் என்று யாரும் தெரிந்துகொள்ள முடியாத சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது. ஒரு குறிப்பிட்ட மதம் குறித்த விமரிசனங்கள் தேச விரோதமானவை என்றால், அந்த மதம் சார்ந்த கருத்துகள் மட்டுமே தேசிய உணர்வு என்ற கருத்தாக்கம் புகுத்தப்படுவதும் நுட்பமாக நிகழ்கிறது.

இப்படிப்பட்ட தடைகளின் மூலம் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை மட்டுமல்லாமல், மற்றவர்கள் அந்தக் கருத்தை அறிந்துகொள்ளும் சுதந்திரத்தையும் பறிக்கிற வேலையை குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்த அமைப்புகள் மட்டும்தான் செய்கின்றன என்று சொல்வதற்கில்லை. அறிவார்ந்த விவாதங்களின் ஆரோக்கியமான களமாகத் திகழ்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்தில், சென்ற ஆண்டு, அமினா வாதூத் என்ற அமெரிக்க கறுப்பினத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் பேராசிரியர், உரையாற்றுவதாக இருந்தது. பெண்களுக்காகத் தனி தொழுகைக் கூட்டங்களை நடத்துகிற, மத நம்பிக்கை உள்ளவர்தான் அவர். சென்னையைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு அவரது உரையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை விடுத்தது. “சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக” காவல்துறை தலையிட, பல்கலைக்கழக நிர்வாகம், அந்த உரையரங்க நிகழ்ச்சியை விலக்கிக்கொண்டது.

அவர்களுக்கு மட்டும் சலுகையா என்று கேட்டுவிடுவார்களே என்று எண்ணியோ என்னவோ, அண்மையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை பாடத்திட்டத்திலிருந்து, தமிழகத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான புதுமைப்பித்தனின் இரண்டு சிறுகதைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன் பின்னணியில்,. அது தலித் மக்களைத் தாழ்வு படுத்துகிறது என்று, சிலர் தெரிவித்த  எதிர்ப்பு இருந்திருக்கிறது. புதுமைப்பித்தனின் சாதிய எதிர்ப்புணர்வையும், கதை எழுதப்பட்ட காலத்தின் சூழலையும் வரலாற்றுப் பூர்வமாகவோ, இலக்கிய அடிப்படையிலோ புரிந்துகொள்ளாத, மக்கள் போராட்டங்களை குறுகிய அடையாள அரசியல் மூலம் திசை திருப்ப முயல்கிற அந்தச் சிலரது நிர்ப்பந்தத்திற்கு, பாரம்பரியமுள்ள ஒரு பல்கலைக்கழகம் பணிந்தது எவ்வளவு சோகம்!

‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று ஒரு பகுதியினர் வலியுறுத்தியது (அந்தத் திரைப்படம் எப்படி  அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கத்திற்கும் உள்நாட்டு இந்துத்துவவாதிகளின் நோக்கத்திற்கும் சேவைசெய்வதாக அமைந்தது என்பதை கடுமையாக விமரிசித்திருக்கிறோம் என்பது வேறு விசயம்), ‘மதுரை வீரன்’ புத்தக வெளியீடு - மாநாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை, ‘மள்ளர் வரலாறு’ புத்தகம் வெளிவர இயலாமல் தடுக்கப்பட்ட நடவடிக்கை என்று தமிழகத்திலேயே அடுத்தடுத்து எடுத்துக்காட்டுகள் உள்ளன. நாடு முழுவதும், உலக அளவிலும் கணக்கெடுத்தால், எப்படியெல்லாம் கருத்துச் சுதந்திரத்தின் மீதான வன்மத் தாக்குதல்கள் கோர நடனமாடிக்கொண்டிருக்கின்றன என்பது நவீன காலத்தில்தான் நாம் வாழ்கிறோமா என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது. ஒரு கலையாக்கம் அல்லது புத்தகம் தங்களைத் தாக்குவதாக இருக்கிறது என்று சிலர் கருதுவார்களானால், அதை வெளிப்படையாக விமரிசிப்பதும், மற்றவர்கள் ஒப்பிட்டுப் பார்த்து நியாயத்தை ஏற்கச் செய்வதும்தான் வழி. அந்தப் படைப்பு மக்களைச் சென்றடையவிடாமல் தடுப்பதல்ல. இவ்வாறு தடுப்பது இறுதியில் தங்களுக்கே எதிரானதாக மாறிப்போகும் என்பதைத் தடுக்கிறவர்கள் உணர்ந்தாக வேண்டும்.

இந்தியச் சூழலில், இப்படிப்பட்ட ‘தடை’ கோரும் சக்திகளுக்குக் கோட்பாட்டு அடிப்படையிலேயே சாதகமான மதவெறி அரசியல் கும்பல்கள் மறுபடி தேசிய ஆட்சியதிகாரத்துக்கு வந்தால் என்ன ஆகும்? மானுட விடுதலையின் முழு அர்த்தமாகிய கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் நிலைபெற வேண்டுமானால், அந்தக் கும்பல்கள் தடுக்கப்பட்டாக வேண்டும் - மக்களின் அரசியல் தெளிவால்.

(‘தீக்கதிர்’ 23-4-2014 ஞாயிறு ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வந்துள்ள எனது கட்டுரை)