Tuesday 13 November 2007

பலம் பெறட்டும் பர்மா தேக்கு
அ. குமரேசன்

காவிக் கூட்டம் என்றால் நம் நாட்டில் மதவெறி சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கடலுக்கடியில் பாலம் என்றெல்லாம் கடவுளின் பெயரால் கலவரம் செய்துகொண்டிருக்கிற கும்பல் நினைவுக்கு வருகிறது. பக்கத்து நாடான பர்மாவில் ஜனநாயகக் காற்று வீசச் செய்வதற்காகவும் அதற்குத் தடையாக இருக்கும் ராணுவ ஆட்சியை அகற்றுவதற்காகவும் காவியங்கித் துறவிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே காவிக் கலவரம், அங்கே காவிக் கிளர்ச்சி!

புத்த துறவிகளுக்கு அன்னம் படைப்பது என்பது பர்மாவில் பெரியதொரு கவுரவம், மன நிம்மதி. அந்த கவுரவத்தையும் நிம்மதியையும் ராணுவத்தினருக்கோ அவர்களது குடும்பத்தினருக்கோ வழங்க மறுக்கிறார்கள் பர்மா துறவிகள். சமுதாயத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு போராட்ட வடிவம் இது. கடந்த செப்டம்பரில் மற்றவர்களோடு சேர்ந்து துறவிகளும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என்று அணிவகுத்தனர்; மற்றவர்களோடு சேர்த்து துறவிகள் மீதும் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது; இது உலகத்தின் கவனத்தை பர்மாவின் மீது திருப்பியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் மிகச் சிலர்தான் உயிரிழந்ததாக ராணுவ அரசு கூறுகிறது. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டதாகவும், அதில் பாதிப்பேர் துறவிகள் என்றும் மக்கள் கூறுகிறார்கள்.ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ள அந்த நாட்டில், கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை உலகம் தெரிந்து கொள்வதே ஒரு போராட்டம்தான். தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் நாம் காணும் போராட்டக் காட்சிகள், அங்கு செயல்படும் இளம் மின்னணு ஊடக ஆர்வலர்கள் அரசின் கெடுபிடிகளை மீறி தங்களது கேமரா மொபைல் போன், ஹேண்டிகேம் போன்றவற்றில் பதிவு செய்து இணையத் தளம் வழியாகப் போட்டுவிடுகிற படங்கள்தான். நவீன தொழில்நுட்ப வழி சாத்தியங்களை ராணுவ அரசால் தடுக்க முடியவில்லை.

‘பர்மா’ என்ற பெயரையே இன்று பொது அறிவுப் புத்தகங்களில் ‘மியான்மர்’ என்ற சொல்லையடுத்து அடைப்புக் குறிகளுக்குள்தான் காண முடியும். பெரும்பகுதி மக்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல் நாட்டின் பெயரை மாற்றியது ‘ஜூன்டா’ எனப்படும் ராணுவக் கும்பல் சர்வாதிகார அரசு. பெயர் மாற்றுவதிலேயே இந்தச் சர்வாதிகாரம் என்றால், ஆட்சி முறையையே மாற்றுவதற்கான போராட்டத்தை அங்கீகரித்துவிடுவார்களா என்ன? அதற்காக அயராமல் போராடுகிற வீரப் பெண்மணி ஆங் சான் சூ குயி விடுதலைசெய்யப்பட வேண்டும் என்ற உலக சமுதாயத்தின் வேண்டுகோளை, துப்பாக்கி முனையிலிருந்து நாட்டையே விடுதலை செய்ய மறுக்கிற கும்பல் ஏற்றுக் கொண்டுவிடுமா என்ன?

வெள்ளை ஏகாதிபத்தியத்தால் அதன் காலனி நாடாக அடிமைப்படுத்தப்பட்டு, இந்தியாவின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டிருந்தது பர்மா. அதன் வற்றாத இயற்கை வளங்களை பிரிட்டிஷ் முதலாளிகள் வாரிச் சுருட்டினார்கள். விடுதலைப் போராட்ட இயக்கம் எரிமலையாய்க் கிளம்பியது. அதற்குத் தலைமை தாங்கி, முதலில் ஜப்பான் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் பின்னர் வஞ்சகமாக ஏமாற்றிய பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தும் போராடியவர் ஆங் சான். நேதாஜி போல், பர்மா விடுதலைப் படையை 1942ல் உருவாக்கியவர். பிரிட்டிஷ் அரசு அவரோடு விடுதலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் அது ஈடேறுவதைக் கண்ணாரக் காண்பதற்கு முன் அவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்ட 6 மாதங்கள் கழித்து, 1948 ஜனவரி 4ல் பர்மா விடுதலை பெற்றது. ஆனால் பர்மிய மக்களால் சுதந்திரக் காற்றை முழுமையாக சுவாசிக்க முடியவில்லை. ஒரு சுதந்திர நாட்டின் அரசுக்குக் கட்டுப்பட்ட பாதுகாப்புக் கருவியாக இருப்பதற்கு மாறாக, நாட்டையே தனக்குக் கட்டுப்பட்டதாக மாற்றியது பிரிட்டிஷ் வழி வந்த ராணுவம். அதிகார ருசி கண்டவராக 1962ல் பர்மா மக்களை சொந்த நாட்டு அடிமையாக்கினார் ஜெனரல் நே வின்.

ஆங் சானின் புதல்வியான சூ குயி மக்களைத் திரட்டி ஜனநாயகப் போராட்டத்தில் குதித்தார். அன்றைக்கும் அந்த எழுச்சிக்கு புத்த துறவிகள், ஆதரவாய் நின்றார்கள். துறவறம் என்பது “என்ன நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது” என கண்டுகொள்ளாமல் இருப்பதல்ல என்ற உணர்வுடன், போராட்டத்தில் பங்கேற்றார்கள். ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஜனநாயக மீட்புப் போராளிகளில், 600க்கும் மேற்பட்டோர் துறவிகள்.

1988ல் வங்கக் கடல் சுனாமி போல் தாக்கிய அந்தப் பேரெழுச்சியை எதிர்கொள்ள முடியாமல், ஆட்சியை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்திடம் ஒப்படைப்பதாக ராணுவ அரசு அறிவித்தது. 1990ல் பொதுத் தேர்தல் என்பதாக நடத்தப்பட்டது. ராணுவத்தின் திடீர்ச் சலுகைகள், மிரட்டல்கள் அத்தனையையும் மீறி மக்கள் சூ குயியின் தேசிய ஜனநாயக முன்னணி (என்.எல்.டி.) கட்சிக்கு மிகப் பெரும் வெற்றிவாகை சூட்டினர். அதிகாரப் பசி கொண்ட ஜெனரல் தான் வே தலைமையிலான ஜூன்டா குண்டாட்சி அந்தத் தேர்தல் செல்லாது என்று அறிவித்தது. நாடெங்கும் ஜனநாயக இயக்கச் செயல்வீரர்கள் கைது செய்யப்பட்டனர். சூ குயி சிறையிலடைக்கப்பட்டார். உலகத்தின் கடும் கண்டனங்கள் எழுந்த சூழலில் 1995ல் அவரை வெளியே விட்ட ஜூன்டா, அவர் ஆட்சிக்கு எதிராகக் கலகத்தைத் தூண்டுவதாகக் கூறி, வீட்டுக் காவலில் வைத்தது.

நம் நாட்டில் அடிக்கடி தேர்தல் வரும்போது, அதனை ஜனநாயகத்தில் மக்கள் மறுதேர்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதாமல், “நிலையான ஆட்சி” என்பதைக் கவர்ச்சிகரமான மாற்றாக பாஜக வகையறாக்களும் மேம்போக்கு ஊடகங்களும் பிரச்சாரம் செய்வதைக் காண்கிறோம். பர்மாவின் 45 ஆண்டு கால நிலையான ராணுவ ஆட்சி அந்த மக்களுக்கு வழங்கியது நிலையான வறுமையைத்தான். வலிமை மிக்க “பர்மாத் தேக்கு” விளையும் நாட்டில், மக்களின் வாழ்க்கை நிலை பட்டுப் போன முருங்கை மரமாய் பலவீனமாக்கப்பட்டிருக்கிறது. “தூர கிழக்கு நாடுகளின் அரிசிக் கலயம்” என்ற பெயர் பெற்ற நாட்டில் மக்கள் சோற்றுக்குத் தவிக்கும் நிலை. கரும்பு விளைச்சல் மிகுதியாக உள்ள நாட்டில் மக்களின் அனுபவம் கசப்பு மிக்கது. பெட்ரோலிய எண்ணை, இயற்கை வாயு ஆகியவற்றோடு, மரகதம், ரத்தினம் போன்ற மதிப்புமிக்க கனிமக் கற்களும் வளமாக உள்ள பர்மாவின் மக்கள், அவற்றின் ஆதாயத்தில் எந்தப் பங்கும் இல்லாதவர்களாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பர்மா மக்களின் போராட்டக் காட்சிகளைப் பார்க்கும்போது, புத்த பிக்குகளின் கால்களிலும், மக்களின் கால்களிலும் செருப்பில்லாததைக் கவனிக்க முடிகிறது. துறவிகளின் கால்களில் செருப்பு இல்லாததற்குக் காரணம் அவர்களது கோட்பாடு. பெரும்பாலான மக்களிடம் காலணிகள் இல்லாததற்குக் காரணம் ராணுவ ஆட்சியின் கேடு. உலகின் மிக ஏழ்மையான 10 நாடுகளின் பட்டியலில் பர்மா இடம் பிடித்திருக்கிறது. அதே நேரத்தில் ராணுவ ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அவர்ளோடு கூட்டு வைத்துள்ள முதலாளிகளும் சுகபோகத்தில் திளைக்கிறார்கள். நாட்டின் பெயரை மாற்றியது போல், தலைநகரம் யாங்கூன் என்பதையும் மாற்றி, நேபிடா என்ற புதிய தலைநகரத்தை உருவாக்கி, அதனை நவீனப்படுத்த கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தட்டிக்கேட்க எவருமில்லை என்ற அகங்காரத்தோடு சில மாதங்களுக்கு முன் - உலக வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகியவற்றின் கட்டளைப்படி - பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணை ஆகியவற்றின் விலைகளைக் கடுமையாக உயர்த்தியது ஜூன்டா. அதன் தொடர் விளைவாக அடிப்படைத் தேவைப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொட்டன. மக்களின் வாழ்க்கை மேலும் மோசமானது.

இந்தப் பின்னணியில்தான், விலை உயர்வு எதிர்ப்பாகத் துவங்கிய கிளர்ச்சி, ஆள்வோரைத் தட்டிக் கேட்க உரிமையுள்ள ஜனநாயகத்திற்கான போராட்டமாகப் பரிணமித்து வருகிறது.1988ம் ஆண்டுப் போராட்டத்தில் முக்கியப்பங்காற்றிய அன்றைய மாணவர் இயக்கத்திலிருந்து வந்தவர்கள், “88 மாணவர் தலைமுறை” என்ற அமைப்பை ஏற்படுத்தி அரசியல் சீர்திருத்தங்களுக்காகவும், பொருளாதாரக் கொள்கை மாற்றங்களுக்காகவும் கருத்துப் பிரச்சாரம் செய்தனர். சிறைகளில் வாடும் சுமார் 5 லட்சம் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கையெழுத்து இயக்கம் நடத்தினர். மக்களின் பெருமூச்சைப் புயலாக மாற்றும் வல்லமை இவர்களது பிரச்சாரத்திற்கு இருப்பதை உணர்ந்த அரசு, இதை வளரவிடக்கூடாது என்ற எண்ணத்துடன், ஜனநாயக இயக்கத்தின் ஒரு முன்னணித் தலைவராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் மிங் கோ நாய்ங் உட்பட, அமைப்பின் தலைவர்கள் பலரையும் கைது செய்து சிறையில் அடைத்தது.

தற்போதைக்கு போராட்டத்தை அரசு தனது அடாவடிகளால் அடக்கிவிட்டது போல் தோன்றுகிறது. ஆயினும், அக்கினிக் குஞ்சாக ஆவேசச் சுடர் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. மக்களோடு புத்த துறவிகளும் இணைந்து நிற்பது போராட்டத்திற்குப் புதிய வலிமை சேர்க்கிறது. ராணுவத்தால் மக்களைத் தாக்க முடியாத வகையில் ஒரு கேடயமாய்த் துறவிகள் அணிவகுக்கின்றனர். ராணுவம் துறவிகளையும் தாக்கத் துணிகிறபோது, மக்கள் கேடயமாகின்றனர்.

இதனிடையே, ஐ.நா. சிறப்புத் தூதராக இப்ராஹிம் கம்பாரி பர்மாவுக்கு வந்தார். ஆங் சாங் சூ குயியை விடுதலை செய்ய வேண்டும், ஜனநாயக முறையில் மக்கள் தங்களது அரசைத் தேர்ந்தெடுக்க வழிவிட வேண்டும், ஒடுக்கு முறைகளைக் கைவிட வேண்டும் என்ற வேண்டுகோள்களை அவர் முன்வைத்தார். ஜனநாயகத் தேர்தல் பற்றி உறுதியளிக்க மறுத்துவிட்ட ஜெனரல், சூ குயியை விடுதலை செய்ய வேண்டுமானால் அவர் மக்கள் போராடத் தூண்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்! தூதருக்கு ஜெனரல் அளித்த ஒரே சலுகை, சூ குயியைச் சந்திக்க அனுமதித்ததுதான்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்களும் பர்மாவின் ஜனநாயகம் பற்றி அக்கறை காட்டி வருகின்றன. நம் ஊரில் நகரப் பேருந்துகளின் கூட்ட நெருக்கடி பற்றியும் அதனால் அவதிப்படுபவர்கள் பற்றியும் அதிகமாகக் அலட்டிக் கொள்வது யாரென்று பார்த்தால் பிக் பாக்கெட் கில்லாடியாக இருப்பான்! அதைப் போல மேற்கத்திய அரசுகளின் உண்மையான அக்கறை, பர்மா மண்ணின் மரகதங்கள், தேக்கு, எரிவாயு உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கடத்திச் செல்வதுதான்.

இந்திய அரசின் நிலை என்ன? ஈராக் நாட்டிற்குள் அமெரிக்கா செய்து வரும் அட்டூழியங்கள் குறித்து, ஜார்ஜ் புஷ்-சுக்கு வலித்துவிடாமல் மென்மையாகக் கருத்துக் கூறியது போன்ற, இந்திய மக்கள் பெருமைப்பட முடியாத வழவழப்புதான் அரசின் நிலைபாடாக இருக்கிறது. இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் இடையே சுமார் 1600 கி.மீ. நீளத்திற்குப் பொதுவான எல்லை இருக்கிறது. பர்மாவுடன் ஒரு இயற்கை எரிவாயு ஒப்பந்தம் இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களின் சில தீவிரவாதக் குழுக்கள் பர்மாவைப் பதுங்கிடமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க ராணுவ அரசு ஒத்துழைக்காமல் போனால் என்ன செய்வது என்ற கோணத்திலும் இந்தியா வாய்மூடியிருப்பதாகக் கூறப்படுகிறது. சுயமரியாதையைச் சுருட்டிக் கொண்ட இந்த இழிவான மௌனத்தைக் கலைத்து, வலுவான குரலில் இந்திய அரசு பர்மா அடக்குமுறைகளைக் கண்டிக்க வேண்டும், ஜனநாயகப் போராட்டத்திற்குத் திட்டவட்டமாகத் தோள் தர வேண்டும்.

சூ குயி பர்மாவை விட்டு வெளியேறுவது, அவருக்கு இந்தியா போன்ற நாடுகள் அடைக்கலம் தருவது என்பது போன்ற “அரிய” யோசனைகளையும் சில மேற்கத்தியத் தரகர்கள் கூறிவருகிறார்கள். தமது மண்ணையும் மக்களையும் விட்டுப் புகலிடம் தேடி எங்கேயும் போகப் போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்துவிட்டார் அந்த 60 வயது வீராங்கனை.

இப்படிப்பட்ட உறுதிப்பாடுகளின் தாக்கத்தில், உலக சமுதாயத்தின் உணர்வார்ந்த ஒருமைப்பாட்டில் --- மரகதங்களையும் ரத்தினங்களையும் விட மதிப்பு வாய்ந்த உண்மையான சுதந்திரமும் ஜனநாயமும் அங்கே நிலை பெறட்டும். தேக்கு போல் பர்மிய மக்களின் போராட்டம் வலுப்பெறட்டும். இயற்கை எரிவாயுவாய் அவர்களது ஆவேசம் ராணுவ சர்வாதிகாரத்தைச் சுட்டெரிக்கட்டும்.

(‘மக்கள் களம்’ ஏட்டிற்காக எழுதப்பட்ட கட்டுரை. அதன் நவம்பர் இதழில் வெளியாகியுள்ளது)

No comments: