Friday 25 January 2008

விவாதம்

தாய்மொழி வழி பொதுக் கல்வி:
ஊடகங்களுக்கு உண்டா
உண்மை அக்கறை?

“தாய்மொழி வழி பொதுக் கல்வியும் சமுக மாற்றமும்” என்ற ஆய்வுத் தலைப்பே ஒன்றை உணர்த்துகிறது. இது, சமுக மாற்றத்தை விரும்புகிற முற்போக்கு சக்திகளுக்கும் சமுகம் மாறாமல் அப்படியே தேங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிற பிற்போக்குவாதிகளுக்கும் இடையேயான நெடுங்காலப் போராட்டத்தின் ஒரு அங்கம்தான்.சமுகம் பலப்பல மாற்றங்களை அடைந்து வந்திருப்பதைத்தான் நெடுங்கால வரலாறு காட்டுகிறது. இந்தப் போராட்டத்திலும் இறுதி வெற்றி முற்போக்காளர்களையே வந்து சேரும். ஆனால், தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய் என்பதால், தாய்மொழி வழி பொதுக் கல்வி, அதன் வழியில் சமுக மாற்றம் என்பதும் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள் போன்றோரின் நல்ல நினைப்பால் மட்டும் நிகழ்ந்துவிட முடியாது. மக்கள் திரள் பங்கேற்கிற, விரிவான, இடையறாத போராட்டம்தான் அதனை நிகழ்த்தும். மக்கள் திரளுக்கு இந்தச் சிந்தனைகளை எடுத்துச் செல்லக் கூடியவை ஊடகங்கள். ஆகவே, இதில் ஊடகங்கள் என்ன செய்தன, என்ன செய்கின்றன, என்ன செய்ய வேண்டும் என்ற விவாதமும் முக்கியத்துவம் பெறுகிறது.

வேறுபடும் நிலைப்பாடுகள்
முதலில் தாய்மொழி வழிக் கல்வி குறித்த எனது கருத்தினைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். பொதுவாக இரண்டு விதமான அணுகு முறைகள் உள்ளன. ஒன்று, உணர்ச்சிவசப்பட்ட நிலை. மொழியைத் தெய்வ நிலைக்கு உயர்த்தித் தொழுகிற நிலை. “மொழியே எனது மூச்சு,” “எனது உயிரையே அதற்குத் தரத் தயார்,” “மொழியைக் குறை கூறுபவர்கள் இனப் பகைவர்கள்” என்றெல்லாம் மனதில் வரித்துக் கொள்ளும் நிலை. இந்நிலைப்பாடு உடையோரின் உணர்வையோ உண்மைத் தன்மையையோ ஐயங்கொள்வதற்கில்லை.

இன்னொரு நிலை, அறிவியல் கண்ணோட்டம். மொழி ஒரு வெளிப்பாட்டுக் கருவி, மக்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகவும் வினையாற்றுகிற கருவி என்ற சமுக அறிவியல் பார்வை. இந்த இரண்டாவது அணுகுமுறைதான் என்னுடைய நிலைப்பாடு. அதே நேரத்தில் மொழி உரிமை, மொழிக்கான இடம், சம வாய்ப்புகள் ஆகியவற்றுக்காகப் போராடுவதில், சற்றும் குறையாத உணர்வுள்ள நிலைப்பாடு இது.

மொழிப் புலமையைத் தமது சொந்த வாய்ப்புகளுக்கும் ஆதாயங்களுக்கும் புகழுக்கும் பயன்படுத்திக் கொள்கிற இன்னொரு வகையினரின் நிலை ஒன்றும் இருக்கிறது. எந்த அளவுக்கு வெளியே மொழிக்காக வீராவேசமாகக் குரல் எழுப்புகிறார்களோ அந்த அளவுக்குத் திரை மறைவில் பல சமரசங்களுக்குத் தயாராக இருப்பார்கள் இவர்கள். இத்தகையோரின் பொய்மையால், தாய் மொழி குறித்த சிந்தனைகள் மீதே பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாமல் போய்விடுகிறது. ஏற்கெனவே ஆங்கில வழிக் கல்வியின் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டாயமான மனநிலைகள், அரசியல் - பொருளாதாரம் சார்ந்த கட்டுமானங்கள், மறுக்கப்படும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றால் சமுதாயத்தில் தாய்மொழி வழி கல்வி தொடர்பாக எதிர்மறையான எண்ணங்களே நிலவுவதைப் பார்க்கிறோம். இந்த சமுகச் சூழலோடு, மேற்படி பொய்மைவாதிகள் ஏற்படுத்தியிருக்கும் எண்ணங்களையும் எதிர்த்தே சரியான தாய் மொழி வழிக் கல்வி பற்றிய சிந்தனைகளை மக்கள் திரளிடையே கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.

அறிவியல் கண்ணோட்டம்
அதென்ன அறிவியல் கண்ணோட்டம்? இதைப் புரிந்து கொள்ள அறிவியல் மேதையாக இருக்க வேண்டியதில்லை. ஒருவர் தமது தாய் மொழியில் - குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றோரிடமும் மற்றோரிடமும் எந்த மொழியைக் கேட்டும் பேசியும் வளர்ந்தாரோ அந்த மொழியில் - கல்வி பயில்கிற போது, ஒரு தகவலைக் கேட்கிற போது, படிக்கிற போது அவரது மூளை எவ்வித சிரமமும் இல்லாமல் புரிந்து கொள்கிறது. மாறாக, வேறொரு மொழியின் வழியாக - அதில் அவர் எவ்வளவுதான் ஆற்றலும் திறமையும் புலமையும் பெற்றிருந்தாலும் - பயில்கிற போது, தகவல் கேட்கிற போது அவரது மூளை கடினமான பணியினைச் செய்கிறது. கேட்ட தகவலை தாய்மொழியில் மாற்றியே மூளை புரிந்து கொள்கிறது.அதே போல், வேறு மொழியில் ஒன்றைச் சொல்கிற போதும், எழுதுகிற போதும் மூளை நேரடியாக அந்த மொழியில் யோசிப்பதில்லை. தாய் மொழியில்தான் யோசிக்கிறது. அதன் பின் அந்த வேறொரு மொழிக்குப் பெயர்த்துத் தருகிறது. இப்படி மொழிபெயர்ப்பு மூலமாகவே எதையும் புரிந்துகொள்ள முடியும், சொல்ல முடியும் என்பது மூளைக்கு இரட்டை வேலை அல்லவா?

நாம் பிற மொழியினரோடு உரையாடுகிறோம், அவர்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றால் அங்கே நமது மூளை இந்த இரட்டை வேலையைச் செய்வது தவிர்க்க இயலாதது, தேவையானது. ஆனால், நம்முடைய மக்களுடனேயே உரையாடுவதற்கும், நமது வட்டாரத்திலேயே கல்வி பயில்வதற்கும் வேறு மொழி என்பது மூளைக்குத் தேவையற்ற அழுத்தத்தையும் சுமையையும் தருகிற வேலை. இப்படிப்பட்ட இரட்டை வேலைத் திணிப்பால் மூளையின் இயற்கையான ஆக்க ஆற்றல் மங்குகிறது. சுயமாக ஆராய்ந்து கண்டுபிடிக்கிற திறன் மட்டுப்படுகிறது.

நமது நாட்டில் அருமையான அறிவியல் - தொழில் நுட்ப வல்லுநர்கள் இருக்கிறார் கள். அவர்கள், ஏற்கெனவே வெளி நாட்டார் கண்டுபிடித்த அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத் துவதிலும் பணியாற்றுவதி லும் வல்லவர் களாக இருக்கி றார்கள். ஆனால் அறிவியல் கண் டுபிடிப்பாளர்களாக இருக்கி றார்களா? கணினியை சிறப்பாகக் கையாளக் கூடியவர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் உடனடியாகப் பணியில் நியமித்துக் கொள்கிற அளவுக்கு, இங்கே மிகுதி. ஆனால் கணினியைக் கண்டுபிடித்தவர்கள் நாம் இல்லை. இதற்கு ஒரு முக்கியமான காரணம், தாய்மொழி வழிக் கல்வி இல்லாததால், மொழிபெயர்க்கிற இரட்டைப் பணியால், மூளையின் கண்டுபிடிப்புத் திறன் கட்டுப்படுத்தப்பட்டதுதான். கணினியைக் கண்டுபிடித்தவர் தம் தாய் மொழியில் கற்று, ஆராய்ந்து கண்டுபிடித்தார். தாய் மொழியில் கல்லாததால் நம் வல்லுநர்கள் கணினியைக் கையாள்கிறவர்களாக மட்டுமே உள்ளனர்.

அறிவியல் ஞானம் நமக்கு ஒன்றும் அந்நியமானது அல்ல. வானியலில், வேளாண்மையில், கட்டடக் கலையில், நகர அமைப்பில், மருத்துவத்தில், கணிதத்தில் நம் முன்னோர்களின் சாதனைகளை வரலாற்றுப் பாடங்களில் படித்து இறும்பூதெய்துகிறோம். ஆனால், அவர்கள் அன்று தாய் மொழியிலேயே கற்றார்கள், ஆராய்ந்தார்கள், வாதிட்டார்கள், முடிவுக்கு வந்தார்கள் என்ற வரலாற்றுப் பாடத்தைப் பெற்றோமா? இக் கேள்விக்கு எதிர்மறை பதிலைத்தானே சொல்ல வேண்டியிருக்கிறது!

ஆக, மனித மூளையின் இயற்கையான செயல்பாட்டிற்கே தாய் மொழி வழிக் கல்வி தேவையாகிறது. சங்கடம் என்னவெனில், தாய் மொழி வழிக் கல்வியை வலியுறுத்துகிற தலைவர்கள், சான்றோர்கள் பலர் இந்த அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில்லை. அதே குறைபாடு காரணமாகத்தான், மக்கள் வெறும் மோக வயப்பட்டு வேற்று மொழியில் கல்வி பயில்வதற்கு ஓடுகிறார்கள் என்று மக்களின் மீதே இவர்கள் குற்றம் காண்கிறார்கள். சமுக-அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகினால், தாய்மொழி வழி கல்விக்குத் தடையாக இருக்கும் அரசியல் - பொருளாதார காரணங்கள் புலப்படும். அவற்றை மாற்றுவதற்கான போராட்டம் வலுப்படும்.

தடம் மாற்றிய தடைகள்
இந்தியாவைப் பொறுத்த வரையில் எங்கும் எதிலும் இந்தியும் ஆங்கிலமும் என்று ஆக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய பல இயக்கங்கள், இந்திக்கு மாற்றாக தமிழ் வழிக் கல்வி என்பதை முன்வைக்காமல் ஆங்கிலத்தை முன்வைத்தன. ஆங்கில வழி கல்வி நிறுவனங்களுக்கு வாய்ப்புகளும் வசதிகளும் அள்ளியள்ளித் தரப்பட்டன.

இன்னொரு பக்கம், பள்ளியிறுதி வகுப்பு வரையில் தமிழில் பயின்றாலும் உயர் கல்விப் பிரிவுகள் அனைத்தும் ஆங்கில வழியில்தான் இருக்கின்றன. அந்த உயர் கல்வி பயின்றோருக்கே மரியாதையான ஊதியத்தில் மரியாதையான வேலை நியமனங்கள் கிடைக்கும். இந்நிலையில், உயர் கல்வி நிறுவனங்களில் எளிதில் இடம் கிடைக்க வேண்டுமானால், பள்ளிக் கல்வியையும் ஆங்கிலத்தில் பெறுவதே புத்திசாலித்தனமானது என்ற முடிவுக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

வாழ்க்கையோடு தொடர்புள்ள சிக்கல் இது. இந்தக் கண்ணோட்டம் முன்வைக்கப்படாததாலும், முதலில் குறிப்பிட்ட சில பொய்மைவாதிகளின் செயலாலும், இன்று தாய் மொழி வழிக் கல்விக்கான போராட்ட அறைகூவல் முன்போல் இளைஞர்களையும் மாணவர்களையும் பொதுமக்களையும் ஈர்க்கவில்லை. மாறாக, அது ஏதோ காலத்திற்கு ஒவ்வாத பழமைவாதிகளின் கூச்சல் போல், முன்னேற்றத்தைத் தடுக்கும் முட்டுக்கட்டை போல் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அறிவியல் உண்மைகள் பழமையாகிவிடுவதில்லை. எனவே, சரியான அறிவியல் கண்ணோட்டத்தை மக்களிடையே எடுத்துச் சென்றால் நிச்சயமாக அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

ஊடகங்களின் பாத்திரம்
அப்படி எடுத்துச் செல்கிற வாய்ப்பு ஊடகங்களுக்கு நிறைய இருக்கிறது. தமிழ் மொழி வட்டாரத்துக்கு வட்டாரம் மாறுபட்ட முறையில் பேசப்படுவது தெரிந்ததுதான். நெல்லைத் தமிழ், மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், முகவைத் தமிழ், குமரித் தமிழ், வடக்கு எல்லைத் தமிழ், சென்னைத் தமிழ் என்று தமிழிலேயே எத்தனை மாறுபாடான உச்சரிப்பு முறைகள்! இதிலேயே அடித்தட்டு மக்களின் தமிழ், அக்கிரகாரத்துத் தமிழ் என்றெல்லாமும் இருக்கிறது. இத்தனை மாறுபாடுகளைத் தாண்டி செய்திகளும் கருத்துக்களும் தமிழக மக்களைச் சென்றடைவதில் ஊடகங்கள் பெரும் பணியாற்றிவருகின்றன.

“பத்திரிகைத் தமிழ்” என்றே சொல்லத்தக்க வகையில், ஒரு பொதுவான தமிழ் நடையும், சொல்லாட்சியும் பரவலாகியுள்ளன. இது எளிதில் நடந்துவிடவில்லை. தொடக்கத்தில் இதழியல் துறையில் நுழைந்தவர்கள் பிராமணர்கள் என்பதால், பல ஏடுகளை நடத்தியவர்களும் அவர்கள்தான் என்பதால், ஒரு காலகட்டம் வரையில் பத்திரிகை எழுத்துக்களிலும் அகிக்ரகார நெடி விஞ்சியிருந்தது. மற்ற பிரிவினர் இதழியல் துறையிலும் எழுத்துக் களத்திலும் காலடி வைத்த பிறகு அந்த நெடி மறையலாயிற்று. ஆனாலும் ஜலம் தண்ணீராவதற்கும், அபிப்ராயம் கருத்தாவதற்கும், அபேட்சகர் வேட்பாளராவதற்கும், அக்ராசனர் தலைவராவதற்கும் வெகுகாலம் பிடித்தது. இன்று பொதுவான ஒரு ஊடக மொழி உருவாகியிருக்கிறது. அவரவர் வட்டார மொழியிலேயே ஊறிப்போனவர்களும் இந்தப் பொது மொழியை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதே போல், கதைகளின் வாயிலாக, ஒரு வட்டாரத்தின் பேச்சுத் தமிழை மற்ற வட்டாரத்தினரும் சுவைக்க வைத்ததிலும் ஏடுகள் உள்ளிட்ட ஊடகங்கள் அரும்பங்காற்றியுள்ளன. இதில் திரைப்படத்தின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. அதே நேரத்தில், சென்னைத் தமிழ் என்பதை, ஒரு பெருநகரத்தின் அடித்தட்டு உழைக்கும் மக்களுடைய மொழியாகப் பார்க்காமல் கேலிக்கு உரியதாகச் சித்தரிக்கும் போக்கு இன்றளவும் பெரும் ஊடகங்களில் நீடிக்கிறது. திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், பத்திரிகைகளில் “இன்னாபா” என்று விளிப்போர் நையாண்டிப் பாத்திரங்கள், “ரவுடிகள்” என்ற வரிசைகளிலேயே வைக்கப்படுகிறார்கள். அவர்கள் பேசுவது தமிழ்க் கொலை என்பதாக கிண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறது.

இன்று நடப்பது என்ன?
ஆனால், இன்று இந்த ஊடகவியலாளர்கள் எந்த அளவுக்குத் தமிழைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்? பத்திரிகைகளின் பெயர்களே “ஜூனியர் .....,” “..... ரிப்போர்ட்டர்,” “..... டுடே,” “சண்டே .....” என்றுதான் சூட்டப்பட்டுள்ளன. தொலைக்காட்சிகளோ “..... டிவி,” என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கின்றன (‘மக்கள் தொலைக்காட்சி’ மட்டும் விதிவிலக்கு). வானொலியில் பண்பலை நுட்பம் வந்து, அதில் தனியார் நுழைவுக்குக் கதவு திறக்கப்பட்டதும் அதில் நுழைந்த எல்லோரும் “..... எஃப் எம்” பெயர் சூட்டிக் கொண்டார்கள். வானொலி என்று அழகாகத் தமிழில் சொல்லி வந்த பொதுத் துறையின் அகில இந்திய வானொலி நிறுவனம் கூட தனது பண்பலைகளுக்கு “ரெயின்போ” “கோல்டு” என்றுதான் போட்டி நடத்திப் பெயர் தேர்வு செய்தது.

ஊடக நிறுவனங்களின் பெயர்களே இப்படி இருக்கிற போது, அவை வெளியிடும் செய்திகள், கட்டுரைகள் போன்றவற்றின் தலைப்புகள் அப்பட்டமான ஆங்கிலக் கலப்போடு வருவதில் வியப்பில்லை. “சைடு டிஷ்,” “மர்டர்,” “ஐட்டம்,” “அட்டாக்” என்பன போன்ற தலைப்புச் சொற்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. நுழை வாயில்களாகிய தலைப்புகளே இப்படி இருக்குமானால் உள்ளே சென்றால் எப்படி இருக்கும் என்று என்பதற்கு, கண்ணில் படுகிற எந்தவொரு பெரிய நிறுவனத்தின் பத்திரிகையையும் கையில் எடுத்து விரித்துப்பார்த்தால் ஒவ்வொரு கட்டுரையும் சாட்சியமாக இருக்கும்.

மொழிக் கலப்பே கூடாது என்று கதவடைத்துக் கொள்வதில் எனக்கும் உடன்பாடில்லை. சுவை கருதியும், சில இடங்களில் குறிப்பிட்ட உணர்வை ஏற்படுத்துவதற்காகவும் போகிற போக்கில் ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம்தான். நடைமுறை வாழ்க்கையில் நாம் நமது உரையாடல்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்கிறபோது, அதன் பிரதிபலிப்பாக எழுத்துக்கள் அமைவது தவிர்க்க இயலாதது.

ஆனால் ஆங்கிலத்தைத் தவிர வேறு வழியே இல்லை என்பது போல், நல்ல தமிழில் சொல்வது என்பது ஒரு அநாகரிகச் செயல் என்பது போல் இந்த முன்னணி ஊடகங்கள் நடந்து கொள்கின்றன. இது ஏற்கெனவே ஒரு கட்டாயச் சூழலில் தள்ளப்பட்டிருக்கும் மக்களிடையே தமிழில் எழுதுதல், படித்தல், பேசுதல், கேட்டல் என்ற செயல்களின் மீது ஒரு அசூயை உணர்வையும், அலட்சிய எண்ணத்தையும், அக்கறையற்ற போக்கையும் மேலும் கெட்டிப்படுத்துகிறது. பல உண்மைகளின் மேல் வெளிச்சம் பாய்ச்சும் அரிய பணியைச் செய்கிற ஊடகங்கள் தாய்மொழி வழி கருத்துப் பரிமாற்றம் என்பதில் உள்ள அறிவியல் உண்மையைப் புரிந்து கொண்டு இதில் ஆக்க நலமார்ந்த அணுகுமுறைகளை வகுத்துச் செயல்பட வேண்டும்.

விவாதத்தை விரிவாக்குக
அடுத்து, இந்த விவாதத்தையே வெகுமக்கள் தளத்திற்குக் கொண்டு செல்கிற பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கிறது. யாராவது ஒரு நடிகை ஏதாவது ஒரு சொந்தக் கருத்தை வெளிப்படுத்திவிட்டால் அவர் கூறியது சரிதானா என்று பட்டிமண்டபம் நடத்துகிற ஊடகங்கள் இப்படிப்பட்ட விவாதங்களை நடத்த முன்வருவதில்லை. அப்படியே முன்வந்தாலும், தாய் மொழி வழிக் கல்விக்கு ஆதரவாக ஐந்து பேர், எதிர்ப்பாக ஐந்து பேர் என்று கருத்துக்களை வாங்கித் தொகுத்துப் போடுவதோடு தமது கடமையை முடித்துக் கொள்கின்றன. இந்த “நடு நிலை” எந்த விதமான மாற்றுச் சிந்தனையையும் வளர்க்க உதவாத நழுவு நிலையே ஆகும்.

இதிலேயே இன்னொரு வகையான நடுநிலையும் இருக்கிறது. தாய் மொழிக் கல்வி குறித்த ஒரு விவாதத்தை நடத்த முடிவு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, முதலில் குறிப்பிட்டதைப் போன்ற, எல்லாம் தமிழ் மயம் என்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அணுகுகிற ஒருவரையும், எப்போதும் ஆங்கில வழிக் கல்வியே நலம் என்று மக்கள் மனங்களில் ஏற்கெனவே உருவேற்றப்பட்டுள்ள கருத்தை வலியுறுத்தக் கூடிய ஒருவரையும் வாதிட வைப்பார்கள். இவருக்கு இரண்டு பக்கம் என்றால் அவருக்கு இரண்டு பக்கம் என்று ஒதுக்கி “சமத்துவத்தோடு” நடந்து கொள்வார்கள். ஆனால், இரண்டு முனைகளில் உள்ள இவர்களன்றி, மூன்றாவதாக, சமுக-அறிவியல் கண்ணோட்டத்தோடு இதனையும் கையாளக்கூடிய முற்போக்காளர்களை இது போன்ற விவாதங்களில் சேர்த்துக் கொள்வதே இல்லை! அரசியலில் எந்த சக்தி முன்னுக்கு வரவேண் டும், பொருளாதாரத் தில் எந்தக் கொள்கை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றெல்லாம் உறுதியான கருத்துக்கள் உள்ள இந்த ஊடகங்கள் அவற்றை மக்கள் மனங்களில் பதிய வைக்கப் பல வகையான உத்திகளைக் கையாள்கின்றன. எடுத்துக்காட்டாக, இடதுசாரிகள் குறித்து எதிர்மறைக் கருத்தைப் பரப்புவதில் வணிகப் போட்டியை மீறிய ஒரு ஒற்றுமையோடு பெரும்பாலான ஊடகங்கள் செயல்படுகின்றன. உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குதற்கான சட்டம், உண்மையான “தகுதி” உடையோரது வாய்ப்புகளைப் பறித்துவிடும் என்ற உண்மைக்கு மாறான எண்ணத்தை இந்த ஊடகங்களால் பரப்ப முடிந்தது. அந்த அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, தாய் மொழி வழிக் கல்வி குறித்து இந்த ஊடக நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால்தான் அது பற்றிய ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இவர்கள் தயாராக இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியதாகிறது.

அடிப்படையான மனித உரிமைகளில் ஒன்று, ஒருவர் எதையும் தமது தாய்மொழியில் அறிவதற்கான உரிமையாகும். எனவே மனித உரிமைகள் பாதுகாப்புக்காகக் குரல் கொடுக்கும் ஊடகங்கள், முதலில் தம்மளவில் இதனைச் செயல்படுத்துகிற விசாலமான, அறிவியல்பூர்வமான கொள்கைநிலையை மேற்கொள்ள வேண்டும். ஆட்சிமொழியாக ஆளுமை செய்தல், நீதிமன்ற மொழியாக தீர்ப்பளித்தல், நாடாளுமன்ற மொழியாக மக்களின் பிரச்சனைகளை விவாதித்தல் என்று பல தளங்களில் ஒரு மொழி வேரூன்றி நிற்கும்போதுதான் சமுக மாற்றம் எனும் இலக்கை நோக்கி ஒரு பேரடி எடுத்துவைக்க இயலும். தாய்மொழி வழி பொதுக் கல்வி அந்தப் பயணத்திற்கான ஒரு தலையாய தேவை. அதைப் பற்றிய சமுக விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் பரப்புவதிலும் வலுவாக்குவதிலும் ஊடகங்கள் பெரும் பங்காற்ற முடியும். பல்வேறு கோணங்களில் இதைப்பற்றிய சிந்தனைகளைத் திரும்பத் திரும்ப மக்களிடையே கொண்டு செல்தல், இதற்கான முயற்சிகள் குறித்த செய்திகளை உரிய முக்கியத்துவத்துடன் வெளியிடுதல், அரசியல் மட்டத்திலும், அரசாங்க மட்டத்திலும், இதர மட்டங்களிலும் இதற்குத் தடைக்கற்களாக இருக்கும் கோட்பாடுகள், விதிகள், நடைமுறைகள் போன்றவை பற்றிய உண்மைகளை வெளிக் கொணர்தல் எனப் பல வடிவங்களில் அந்தப் பங்கினை நிறைவேற்றுவது ஊடகங்களின் சமுகக் கடமை.

மாற்றமில்லாத சமுகம் தேக்கமடைந்த சமுகமாகவே கிடக்கும். தேக்கமடைந்த சமுகம் பின்னர் தேய்ந்து மறைந்த சமுகமாகவும் காணாமல் போய்விடும். இயற்கை விதியும், வரலாறும் இணைந்த இந்த உண்மை இது. தேக்கத்தை உடைக்க, மாற்றத்தை முடுக்க வேண்டும். முடுக்குவதற்கான உந்து விசைதான் இயக்கம். எந்தவொரு கருத்தும் மக்கள் இயக்கமாக, போராட்டமாக உருக்கொள்ளும் போதுதான் வெற்றி பெறும். ஊடகங்களின் பார்வையை மாற்றுவதாகவும் அந்தப் போராட்டம் பல முனைகளில் வியூகம் கொள்ளும். அதற்கு இப்படிப்பட்ட விவாதங்கள் துணையாகும்.

- சென்னை லயோலா கல்லூரியில் ஜன.10,11,12 தேதிகளில் “தாய் மொழி வழிக் கல்வியும் சமுக மாற்றமும்” என்ற தலைப்பில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் நிகழ்த்திய உரை.

No comments: