Saturday 9 May 2009

எதிரெதிர் வினை

சிபிஎம் எதிர்ப்பு அரசியலும்
சில விமர்சனங்களும்
(‘சிபிஎம்’ புத்தகத்தின் மீதான எதிர்வினைக்கு எதிரெதிர் வினை)

மருதன் அவர்களுக்கு நன்றி. என்னையும் வலைத்தள வாசகர்கள் கவனிக்க வைத்திருக்கிறாரே. ஓ - இது என்னைக் கவனிக்க வைப்பதல்ல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பற்றி நான் எழுதி, ‘மினிமேக்ஸ்’ வெளியீடாக வந்துள்ள ‘சிபிஎம்’ குறும்புத்தகத்தைக் கவனிக்கவைப்பது. அதற்காக மேலும் நன்றி.
அப்புறம், ரொம்ப நாளாக விரிக்காமல் வைத்திருந்த எனது வலைப்பதிவு ஏட்டை மறுபடி திறந்து இதை எழுதவைத்திருக்கிறார். அதற்காக உளமார்ந்த நன்றி.

ஒரு 78 பக்க புத்தகத்தில், ஒரு சுருக்கமான அறிமுகமாக அமையட்டும் என்கிற அளவிலேயே அந்தப் புத்தகம் எழுதப்பட்டது. அது சிபிஎம் சார்பில் எழுதப்பட்ட அதிகாரப்பூர்வ புத்தகம் அல்ல. சிபிஎம் உறுப்பினராக இருக்கிற ஒருவனால், வெளியே பரந்துபட்ட அளவில் இருக்கிற, புத்தக வாசிப்பில் ஆர்வம் முளைவிட்டிருக்கிறவர்களுக்காக எழுதப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தோன்றி வளர்ந்த பின்னணி, அது செயல்படும் விதம், அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் - இவற்றைத் தொட்டுக்காட்டுவதே புத்தகத்தின் நோக்கம். இதிலே கட்சியின் மாநாட்டு ஆவணம் போலவோ, நிறைய பக்கங்களில் ஆழமான ஆய்வுடன் எழுதப்படுகிற புத்தகம் போலவோ விமர்சனம் - சுயவிமர்சனம் என்று அதிகமாக எழுத முடியவில்லை.

அடுத்து இவரது அகராதிப்படி, சுயவிமர்சனம் என்றால் கிழிகிழியென்று கிழித்துப்போடுவதாக இருக்க வேண்டும். சமுதாய இயக்கச் செயல்பாட்டில் நேரடியாக தன்னை ஒப்படைத்துக்கொளளாமல், வசதியாக எல்லாவற்றையும் தள்ளுபடி செய்து, அது நொட்டை இது நொள்ளை என்று துப்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இது சாத்தியம்தான். அதிலே ஒரு அரசியல் உண்டு. இவரது அரசியல் நோக்கத்திற்கு இப்படி சிபிஎம் கிழிபடவேண்டும் என்பது தேவையாக இருக்கலாம். எனக்கு அது வராது.

என் இயக்கத்திற்கு உண்மையானவனாகவே இருப்பேன். மினிமேக்ஸ் மூலமாகக் கிடைத்த வாய்ப்பையும் அப்படியே பயன்படுத்திக்கொண்டேன். இவரைப் போன்றவர்களையும் தாண்டி புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு எம் கட்சியைப் பற்றி ஒரு தொடக்கப் புரிதலையும், மரியாதையையும் ஏற்படுத்துவது மட்டுமே என் நோக்கம். நடுநிலை ஒப்பனை எல்லாம் போட்டுக்கொண்டு நான் எழுதுவதில்லை.

நந்திகிராமம் பிரச்சனை நிச்சயமாக கட்சியின் பயணத்தில் பாதையில் இடறிக் காயப்படுத்தும் கல்லைப் போல் வந்ததுதான். “... காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துகிற அளவுக்கு அந்தப் பிரச்சனைகளைக் கையாள்வதில் தவறு நேர்ந்ததா என்பதை சிபிஎம் நேர்மையாக ஆய்வு செய்துள்ளது” என்று பதிவு செய்திருக்கிறேன். இதுவும் ஒரு சுயவிமர்சனம்தான். நந்திகிராமம் பற்றிய ஆய்வுக் கட்டுரை அல்ல இது. கட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றைச் சொல்லும் முயற்சியில் அதுவும் ஒரு கட்டம் அவ்வளவுதான். நக்சலைட்டுகள் ஆயுதங்களோடு அந்த வட்டாரத்தை சுற்றி வளைத்துக்கொண்டது பற்றியும், சிபிஎம் மீது உள்ள ஆத்திரம் காரணமாக நக்சலைட்டுகளோடு மற்ற சில கட்சிகள் ஒத்துழைத்தது பற்றியும் அதே பத்தியில் குறிப்பிட்டிருக்கிறேன். மருதனின் கோபம் அதனால்தானோ?

“ஆய்வின் முடிவில் அவர்கள் (சிபிஎம்) என்ன கண்டுபிடித்தார்கள்” என்று கேட்டிருக்கிறார். ஆய்வின் முடிவு வந்தபின் கட்சி முழுமையாக விவாதிக்கும், அதை வெளிப்படுத்தவும் செய்யும். பொறுத்திருங்கள் நண்பரே.

“டாட்டாவின் காசோலையை திருப்பி அனுப்ப முடிந்த கட்சியால் டாட்டா நிறுவனத்தை திருப்பி அனுப்ப முடியவில்லை” என்று எழுதியிருக்கிறார். புத்தகப் பக்கங்களைத் தாண்டிய விமர்சனம் இது. தவறில்லை. ஆனால், எதற்காகத் திருப்பி அனுப்ப வேண்டும்? சொல்லப்போனால் அந்த நிறுவனத்தை அழைத்ததே இடது முன்னணி அரசுதான். இதிலே ஒளிவு மறைவு ஒன்றுமில்லை. கட்சியின் தலைமையிலான கூட்டணியின் அரசுக்கும் கட்சிக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியாதவராக மருதனை எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஆனால் அப்படித்தான் எழுதியிருக்கிறார்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில் வளர்ச்சி தேவை. அதற்கு இப்படிப்பட்ட நிறுவனங்கள் தேவை. மேற்கு வங்கத்தில் இருப்பது ஒன்றும் சோசலிச அரசோ கம்யூனிச அரசோ அல்ல. இந்திய அரசமைப்புக்கு உட்பட்ட ஒரு மாநில அரசுதான். இந்திய அரசமைப்பு சாசனத்துக்கு உட்பட்டுதான் அது செயல்பட முடியும். சிபிஎம் சொல்கிற மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கிச் செல்வதில் இவ்வாறு அரசு எந்திரம், நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய கட்டமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது என்பது ஒரு கட்டம், ஒரு வழிமுறை. இதுவே முழுப்புரட்சி அல்ல. இதைப் பற்றியும் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

சுத்த சுயம்பிரகாச புரட்சிக்காரர்களைப் பார்த்து நீங்கள் ஏன் முதலாளித்துவ அரசின் ரயிலில் பயணம் செய்கிறீர்கள், ஏன் முதலாளித்துவ ஓட்டலில் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால், அப்படிக் கேட்பவர்களை மருதன் எப்படிப் பார்ப்பார்?

“மக்கள் எதிர்ப்பை மீறி” டாட்டா கார் நிறுவனத்தை நிறுவ சிபிஎம் முயன்றதாக எழுதியிருக்கிறார். எந்த மக்கள்? மம்தா பானர்ஜியும், பாஜக ஆட்களும் திரட்டியவர்கள் மட்டுமா? சிங்கூர் வட்டாரத்துக்கு வர இருந்த ஒரு பெரிய தொழிற்சாலையை மம்தா வகையறாக்கள் தடுத்துவிட்டார்கள் என்றுதான் அந்தப் பகுதி மக்கள் இப்போது கோபத்தில் இருக்கிறார்கள்.

அதிமுக-வுடன் கூட்டணி அமைப்பதால் மக்கள் ஜனநாயகத்தைக் கொண்டுவர முடியும் என்று சிபிஎம் நம்புகிறதா என்று கேட்டிருக்கிறார். அரசு எந்திரம் பற்றிய சில கருத்துக்களையும் முன்வைத்திருக்கிறார். இதற்கெல்லாம் என்னுடைய பதில்: புத்தகத்தை மறுபடியும் படியுங்கள். இப்போது நடக்கிற தேர்தலை மக்கள் ஜனநாயக அரசுக்கான தேர்தல் என்று யாராவது எங்கேயாவது சொன்னார்களா என்ன? ஒன்றை மட்டும் சொல்லாம்: கட்சிகள் என்றால் தலைவர்கள் மட்டுமல்ல, அவற்றின் தளமாக உள்ள மக்களும்தான். கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு என்பது மக்களோடு கொள்ளும் உறவுதான். அதிலே அசூயைப் பட என்ன இருக்கிறது?

நேபாளத்தை சுட்டிக்காட்டி பிரசாந்தா பதவி விலகியதை சிலாகித்திருக்கிறார். அதே பிரசாந்தா, அமைதியான முறையில் அரசு அமைப்பதற்கு ஒத்துழைப்பதாகவும் கூறியிருக்கிறார். அவருடைய கட்சி தனது ஆயுதப்பாதையைக் கைவிட்டு அரசியலுக்கு வந்ததால்தான் அரசு அமைக்கிற அளவுக்கு வந்தது.

அப்புறம் வெறும் ஊகக் கேள்விகளாக கடைசியில் அடுக்கியிருக்கிறார். இது என்ன குருப்பெயர்ச்சி பலன்கள் புத்தகமா என்ன? எல்லா கிரக நிலைமைகளுக்கும் விளைவுகள் என்ன என்று கணித்துக்கொண்டிருப்பதற்கு? திட்டவட்டமான நிலைமைகள் உருவாகிற போதுதான் திட்டவட்டமான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். இதைத்தான் இவர் “வளைந்து நெளிந்து” என்று வர்ணிக்கிறார். ஒன்று செய்யலாம் - எதிலேயும் பட்டுக்கொள்ள மாட்டேன், தூசு படியாமல் படுசுத்தமாக இருப்பேன், யாரோடும் ஒட்ட மாட்டேன் என்று கோவணத்தையும் உருவிப்போட்டுவிட்டு நடுக்காட்டில் போய் தவம் இருக்கலாம்.

“... பலவிதமான விளையாட்டுகளை மக்கள் பார்த்து சலித்துவிட்டார்கள்,” என்று முடித்திருக்கிறார் மருதன். சலித்து சலித்து மக்கள் சரியானதைத் தேர்வு செய்வார்கள். அப்போது, எதுவும் சரியில்லை என்று பினாத்திக்கொண்டே இருப்பவர்களும் ஓரங்கட்டப்படுவார்கள் - இப்போதிருப்பதை விடவும்.

No comments: