Friday 18 June 2010

இந்தியாவில் கம்யூனிசம் வளராதது ஏன்?


கம்யூனிசம் என்றால்... 4

இந்தத் தலைப்பில் அடுத்த கட்டுரை எழுதப்போவதாக சென்ற கட்டுரையின் முடிவில் குறிப்பிட்டிருந்தேன். அதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகப் பல நண்பர்களும் தெரிவித்திருக்கிறார்கள். இவர்களில் மார்க்சிய இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உண்டு, இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களும் உண்டு. அனைவரது எதிர்பார்ப்பிலும் இவ்வளவு முற்போக்கான, அறிவியல்பூர்வமான, நேர்மையான, உண்மையிலேயே சமத்துவ லட்சியம் கொண்ட இயக்கம் இங்கே ஏன் வலுவாக வேர்பிடிக்கவில்லை என்ற ஆதங்கமே வெளிப்பட்டது. அரசியல் கட்சி என்ற முறையில் கம்யூனிஸ்ட் கட்சியோடு மாறுபடுகிறவர்களும் ஒரு சமுதாய மாற்றத்துக்கான இயக்கம் என்ற முறையில் மார்க்சியம் இங்கே பெரிய சக்தியாக வளராதது பற்றி கவலைகொள்கிறார்கள்.

மார்க்சியத்தின் எளிய அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாதவர்கள், முதலாளித்துவ அமைப்பே இறுதியானது, இதிலேயே படிப்படியாக ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சம நீதி நிலைநாட்டப்பட்டுவிடும் என்றெல்லாம் நம்புகிறார்கள். தனி மனிதத் தவறுகளால்தான் முதலாளித்துவ அமைப்பில் சுரண்டல், கொள்ளை லாபம், வறுமை, பொறாமை, அடக்குமுறை போன்ற தீமைகள் நடக்கின்றன என்று கருதுகிறார்கள். அதையெல்லாம் சரிசெய்துவிட்டாலே போதும் என்று நினைப்போரும் உண்டு.

ஆகவே இங்கே கம்யூனிசம் வராது வளராது என்று வாதிடுகிறார்கள். முதலாளித்துவம் என்பதன் அடிப்படையே லாப வேட்டை, அதற்கான உழைப்புச் சுரண்டல், இயற்கை வளக் கொள்ளை ஆகியவைதான். அவரை விதைத்தால் அவரைதான் முளைக்கும். சுரண்டல் அமைப்பு நீடிக்கிற வரையில் ஏழை-பணக்காரர் முரண்பாடுகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் கூடவே இருக்கும்.

ஒரு வாதத்துக்காக, முதலாளித்துவ அமைப்பில் லாப வேட்டைச் சுரண்டலுக்கு முடிவு கட்டப்படுவதாக வைத்துக்கொள்வோம், அப்போது அது முதலாளித்துவ சமுதாயம் அல்ல, அதற்கு வேறு பெயர் சூட்ட வேண்டும் என்றுதான் பொருள். அதுதான் அடுத்த கட்டத்திற்கான சமூக உடைமை அமைப்பாகிய சோசலிசம். அதை உருவாக்குவதற்கும் அதை உருவாக விடாமல் தடுப்பதற்கும்தான் மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

அந்த மோதலின் விளைவாகத்தான், முதலாளித்துவம் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, சோசலிச அமைப்பின் சில நடைமுறைகளை மேலோட்டமாகத் தானும் செயல்படுத்த முன்வருகிறது. எட்டு மணி நேர உழைப்பு, மனித உரிமைச் சட்டங்கள், மக்களுக்கு சில சலுகைகள் என்று செயல்படுத்துகிறது. ஒரு நாட்டின் முதலாளித்துவ சமுதாய அமைப்பைச் சார்ந்த அரசாங்கம் தொழிலாளர் நலச் சட்டங்களைக் கொண்டுவருகிறது என்றால் அது கருணையால் அல்ல, தொழிலாளர்கள் கொந்தளித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

இப்படி பல்வேறு நடவடிக்கைகளையும் குறிப்பிடலாம். இதுவே கம்யூனிச இயக்கம் அந்த நாட்டில் வளர்ந்திருக்கிறதா இல்லையா என்பதற்கு ஒரு அறிகுறிதான்.

இந்தியாவில் கம்யூனிச இயக்கம் வளராதது ஏன் என்ற கேள்விக்கே இடமில்லை. பெரிய அளவுக்கு வளராதது ஏன், ஒரு தீர்மான சக்தியாக வளராதது ஏன், நாடு முழுவதும் சீராக வளராதது ஏன் என்று நம் கேள்விகளை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

கம்யூனிஸ்ட்டுகளின் கதைகளைக் கேட்கிற ஒவ்வொருவருக்கும், இவ்வளவு தியாகமும் வீரமும் மிகுந்த போராட்ட வரலாறு இருந்தும் ஏன் இங்கே இந்த இயக்கம் பெரியதொரு ஆற்றலாக அடியூன்றவில்லை என்ற வினா எழுகிறது. அரசியல் இயக்கம் என்றால் அதன் தலைவர்கள் ஊழல் கறைபடியாதவர்களாக இருக்க வேண்டும், தொண்டர்கள் தன்னலமற்றவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அந்தத் தகுதிகள் இருந்தும் கம்யூனிச இயக்கம் இங்கே பெரும் மாற்று சக்தியாகத் தழைத்தோங்கவில்லையே ஏன் என்ற புதிர் மனதைக் குடைகிறது.

இயக்கத்தின் வரலாறு, இந்தியாவின் சமுதாய அமைப்பு, அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் என்று பன்முகக் காரணங்கள் உள்ளன. எந்த ஒரு விளைவுக்கும் புறக்காரணங்கள், அகக்காரணங்கள் இரண்டும் இருக்கும்.
அந்தக் காரணங்களைத் தேடுவது, கேள்விகளுக்கு சரியான பதில் கிடைத்தது என்று மன நிறைவு அடைவதற்காக அல்ல. நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்வதற்காகத்தான். கேள்விகளுக்கு ஆயத்த பதில்கள் என்னிடம் இல்லை. இந்த விவாதத்தின் தூண்டுதலால் நானும் சரியான விடைகளைத் தேடுகிறேன்.

தேடலைத் தொடங்குவோம்.

No comments: