Wednesday 7 July 2010

ராவணன் பார்த்துவிட்டேன்


இயலாமையால் சில நன்மைகளும் ஏற்படுவதுண்டு என்பதற்கு நான் சினிமா பார்க்க இயலாமல் போனதையே சான்றாக்கலாம். முன்பு நான் இப்படிச் சொல்வதுண்டு: சினிமா பார்ப்பது உங்களுக்கெல்லாம் பொழுதுபோக்கு. எனக்கோ அது தொழில். சினிமா பார்ப்பதையும், பார்த்த சினிமா பற்றி எழுதுவதையும் நான் ஒரு ஈர்ப்புடனேயே செய்துவந்திருக்கிறேன்.

அடுத்தடுத்து சில புத்தகங்கள் கொண்டுவர முடிந்திருக்கிறது என்றால் சினிமா பார்ப்பதை விட்டதற்கும் அதில் முக்கியப் பங்கிருக்கிறது. சினிமா பார்ப்பதை விட்டதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. மக்கள் ரசனையோடு இணைந்ததாகவும் மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதாகவும் படங்கள் அமைய வேண்டும், புதுப் புதுக் கதைகளைச் சொல்ல வேண்டும், புதுப்புது நுட்பங்களை வழங்கவேண்டும், அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரசனை வட்டத்தோடு நின்றுவிடாமல் வெகுமக்கள் தளத்திலும் உலாவ வேண்டும் என்ற சிந்தனைகளோடுதான் சினிமா விமர்சனங்களை எழுதிவந்தேன். அப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழத் தொடங்கிவிட்டன. புதியவர்களின் வருகையும், இனி இப்படிப்பட்ட கதைகளைச் சொன்னால்தான் மக்கள் வரவேற்பார்கள் என்ற நிலை உருவாகியிருப்பதும் அந்த மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது. நான் எழுதியதையெல்லாம் படித்துத்தான் சினிமா உலகம் திருந்தியது என்றெல்லாம் சொல்லி என்னை நானே ஏமாற்றிக்கொள்ள மாட்டேன். ஆனால் இந்த மாற்றத்தை விரும்பி நான் எழுதிவந்தேன் என்பதென்னவோ உண்மை. எனவே என் வேலை முடிந்தது போல் ஒரு மன மயக்கம்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் பார்த்து எழுதிய படம் பூ. ஒரு நாள் புத்தக வேலையில் ஈடுபடவும் மனமில்லாமல் சோர்வாக இருந்தபோது கால்போன போக்கில் சென்று பார்த்த படம் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். அதன் பிறகு இதே போன்ற சோர்வுடன் இருந்தபோது அப்படியே எழுந்துபோய் பார்த்துவிட்டு வந்த படம்தான் ராவணன். சிலர் அந்தப் படம் வெளியான சூட்டோடு பார்த்துத் தங்களது கருத்தைப் பதிவு செய்துவிட்டார்கள். வேலைகளின் நெருக்கடியில் நேரம் கிடைக்காமல், இரண்டொரு நாட்களுக்கு முன்னர்தான், திருவள்ளூர் துளசி திரையரங்கில் அன்று வந்திருந்த 47 பேர்களுடன் படத்தைப் பார்த்தேன்.

கார்ப்பரேட் சமரசம், பார்ப்பணீய தாக்கம் போன்ற சில சாடல்களுக்கு உள்ளாகக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டே இதை எழுதியிருக்கிறேன். சாடலை நிறுத்தி விவாதங்களை நடத்தினால் திருத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். சாடுவோரும் அதற்குத் தயாராக இருந்தால் சரி. ஒற்றை வரியில் ஒன்றைச் சொல்லிவிட்டுத் தொடர்கிறேன்: படம் எனக்குப் பிடித்திருக்கிறது.

ஊடகங்களிலும் வலைத்தளத் தொடர்புகளிலும் நிறையவே எழுதப்பட்டுவிட்டதால் படத்தின் கதையைச் சொல்லவேண்டியதில்லை. பொதுவாக ராமாயணம் பற்றியும் ராமன் பற்றியும் கட்டப்பட்டிருக்கிற புனிதப் படிமங்களை உடைப்பதில் ஒரு வர்த்தக சினிமா இந்த அளவுக்குச் செய்திருப்பது முக்கியமானது. அறிவுத்தளத்தில் மட்டும் இயங்குவோரிடையே இது அப்படியொன்றும் புதிய சங்கதியாக இல்லாமல் போகலாம். இப்படிப்பட்ட விவாதங்களில் பங்கேற்கிற வாய்ப்பில்லாத பரந்த பகுதி மக்களிடையே, ராமன் ஒரு சூழ்ச்சிக்காரன், தன்னிடம் தூதாக வந்தவனையும் போட்டுத்தள்ளத் தயங்காதவன், தன் மீது முழு நம்பிக்கை வைத்திருந்த மனைவியின் மீது கூச்சமே இல்லாமல் சந்தேகப்பட்டவன் என்ற சிந்தனைகளை இந்தப் படம் கொண்டுசெல்கிறது. ராமாயணத்தோடு சம்பந்தப்பட்ட படம் என்ற செய்தி பரவியிருப்பதால் இந்த மறுவாசிப்பை (இதற்கு இலக்கியத்தில் மறுவாசிப்பு என்ற பெயர் இருப்பது தெரியாமலே) மக்கள் புரிந்துகொள்கிறார்கள். புனிதப் படிமம் உடைபடுவதில் அல்லது அதில் ஒரு சிறு கீறல் விழுவதில் இந்தப் படமும் உளியைத் தட்டியிருக்கிறது.

கொடூரன், அரக்கன் என்றெல்லாம் இதிகாசத்தால் நம் மண்டைகளில் ஏற்றப்பட்டுள்ள ராவணன் இதில் வீராவாக, ஏதோவொரு ஆதிக்கத்தையும் அடக்குமுறைகளையும் எதிர்த்துக் கிளம்பிய போராளியாக அடையாளப்படுத்தப்படுவது எவ்வளவு முக்கியமானது! பத்துத் தலை ராவணன் என்ற கற்பனையை, திரும்பத் திரும்ப தாக்குதல்களிலிருந்து மீண்டு எழுந்து, தன் போராட்டத்தை மீண்டும் மீண்டும் மேற்கொள்கிறவன் என்பதாகச் சித்தரித்திருப்பதில் ஒரு பகுத்தறிவுக் கண்ணோட்டம் இருக்கிறது.

சினிமா ராமனாகிய அந்த காவல்துறை அதிகாரி தேவ் தன் மனைவியின் மீது சந்தேக வார்த்தைகளை வீசியது சந்தேகத்தால் மட்டுமல்ல, நிச்சயமாக அவள் கோபித்துக்கொண்டு தன்னிடம் திரும்பி வருவாள், அவளைப் பின்பற்றி வந்து என்கவுன்ட்டர் நடத்திவிடலாம் என்ற திட்டத்துடனும்தான் என்பதைப் புரிந்துகொள்கிற அறிவுக்கூர்மையாளனாக சினிமா ராவணன் செய்யப்பட்டிருப்பதும் அசாதாரணமானது. காக்க காக்க போன்ற படங்கள் போல் இது போலிஸ் என்கவுன்ட்டர்களை வீரசாகசமாக நியாயப்படுத்தவில்லை, உயர்த்திக்கூறவில்லை.

ராவணனின் தங்கை சூர்ப்பனகை காமமோகத்துடன் ராமனுடன் உறவுகொள்ள விரும்பினாள், அதனாலேயே அவளது மூக்கை லட்சுமணன் அறுத்து அனுப்பினான் என்பது ராமாயணம். இதில் வீரா சகோதரர்களின் தங்கை, காவல்துறையினரால் கடத்தப்படுகிறாள், வீரா எங்கே இருக்கிறான் என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறாள், அவள் மறுக்கிறபோது பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறாள். காவல்துறையினரை ஏம்பா இப்படி செஞ்சீங்க என்று கூட கேட்காத உத்தமன்தான் இப்படத்தின் ராமனாகிய தேவ். தேடுதல் வேட்டை என்ற பெயரில் காவல்துறையினரும் வனத்துறையினரும் பழங்குடி மக்கள் மீது எவ்வளவு வக்கிரமான தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்ற நுட்பமான வெளிப்பாடுதானே இது? வாச்சாத்தி நம் கண் முன் தெரிகிறதே!

அனுமனை இதில் வேடிக்கையான ஒரு வன உழியராகக் காட்டியிருப்பது போன்ற ரசிக்கத்தக்க சில அம்சங்களும் உள்ளன.

காவல்துறை அதிகாரியைப் பழிவாங்குவதற்காகக் கடத்திவந்த பெண்ணின் அழகில் வீராவுக்குக் கொஞ்சம் கொஞ்மாக ஏற்படுகிற ஈடுபாட்டில் பாலியல் ஈர்ப்பு தொடர்பான உளவியல் கூறு சுட்டிக்காட்டப்படுகிறது. ஆயுதந்தாங்கிய போராளிகளானாலும், மக்களைத் திரட்டும் இயக்கத்தில் ஈடுபடும் போராளிகளானாலும் தாண்டியாக வேண்டிய கூறாக பாலியல் இயற்கையுணர்வு இருப்பதை மறுக்க முடியுமா? அப்படித் தாண்ட முடியாமல் தவிக்கிறவனை சகாக்கள் விமர்சிப்பதும் சரியாகவே வந்திருக்கிறது.

படத்தில் முக்கியமான குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன. அந்தப் பழங்குடி மக்களுக்கு எதிராகக் காவல்துறையினர் இப்படிக் கொலைவெறியோடு அலைவது ஏன்? காவல்துறையினர் மீது அந்த வனக் கிராமத்தினர் அவ்வளவு அவ்வளவு ஆத்திரம் கொண்டிருப்பது ஏன்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் படத்தில் தெளிவான பதில்கள் இல்லை. இதனால், என்னதான் இருந்தாலும் இன்னொருத்தனின் மனைவியைக் கடத்தி வந்த அநியாயத்தைச் செய்தவனாகிறான் வீரா-ராவணன்.

வனப்பகுதிகளில் நாட்டின் ஆளும் வர்க்கங்களின் சுரண்டலுக்குத் தோதாக நடத்தப்படும் ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் அந்த மக்கள் போராடுகிறார்கள்; அந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே ஆயுதப்படைகளை அரசாங்கம் வனங்களுக்குள் அனுப்புகிறது. வனங்கள் அந்த மக்களின் சொந்த இடங்களாகத் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து இருந்துவந்துள்ளன. அந்த உரிமையை மறுத்து அவர்களை அப்புறப்படுத்திவிட்டு உள்நாட்டு-அயல்நாட்டு முதலாளிகளிடம் வன நிலங்களைத் தாரைவார்க்க அரசு நிர்வாகம் கூச்சநாச்சமின்றி முயல்கிறது. பழங்குடி மக்களிடையேயிருந்து புறப்படும் படித்த இளைஞர்கள் இந்தச் சுரண்டலுக்கு எதிராகப் போராடுகிறபோது, இடதுசாரி இயக்கங்களின் வழிகாட்டலின்றி இளம்பருவ சாகசமாக ஆயுதங்களை ஏந்துதல், ஆள் கடத்தல், குண்டு வைத்தல் போன்ற தீவிரவாதப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதையே சாக்கிட்டு காவல்துறையின் வன்முறைத் தலையீடு அதிகரிக்கப்படுகிறது. ஆரம்ப ஆக்கிரமிப்பு நோக்கம் இன்னும் வசதியான முறையில் நிறைவேற்றிக்கொள்ளப்படுகிறது.

இதையெல்லாம் படம் காட்சியாகவும் வெளிப்படுத்தவில்லை, ராவணன் வாய் மூலமாகவும் சொல்லவுமில்லை. பகல் நிலவு படத்தில் ஒரு கடத்தல் தாதா தன் சுயநலத்திற்காகப் பள்ளிக்கூடம் நடத்துவது, மருத்துவமனை நடத்துவது என்று சமூக சேவைகள் செய்கிற போலித்தனத்தை வெளிப்படுத்தினார் இயக்குநர் மணிரத்னம். அது அவருடைய முதல் படம். பின்னர் வந்த நாயகன், பாரதக் கதையிலிருந்து உருவிப்போட்ட தளபதி ஆகிய படங்களில் மக்களுக்குத் தொண்டாற்றுவதற்காகவே தாதா வேலையில் ஈடுபடும் நாயகன்களை உலாவவிட்டார். குரு படம் சந்தை மோசடிகளை காந்தியின் போராட்டத்தோடு ஒப்பிட்டு அம்பானிகளுக்கு வக்காலத்து வாங்கியது. அந்த அளவுக்குப் போன இயக்குநர், இந்தப் படத்தின் கார்ப்பரேட் சுரண்டல் வேட்டைகளையும் அதற்குத் துணையாக அரசாங்கம் முடுக்கிவிடும் காவல் வேட்டைகளையும் நேரடியாக விமர்சனத்திற்கு உட்படுத்தத் துணியவில்லை என்பதில் வியப்பு ஒன்றுமில்லை. ஏற்கெனவே செய்தி வெளிச்சம் பாய்ந்த பகுதிகளைப் பார்வையிட்டவர்கள் வேண்டுமானால் அவரவர் கோணத்தில் மலைவாழ் மக்கள் - காவல்துறை மோதலைச் சித்தரித்துக்கொள்ளலாம்.

இந்த உண்மைகள் தொட்டுக்காட்டப்படாததால் வீரா சகோதரர்களின் கோபாவேசம், தங்களுடைய தங்கைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காகத் தனிப்பட்ட முறையிலு பழிவாங்குவதற்காகத்தான் என்பதாகவும் குறுகிவிடுகிறது.

சீதையாக, அதாவது தேவ் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயின் மார்புப் பிளவைக் காட்டும் வகையில் ஜாக்கெட்டைக் கீழிறக்கிக் காட்டும் காட்சிகள் மகாமட்டமான ரசனை. தமிழக/இந்திய திரைப்பட ரசிகர்களை மலிவுபடுத்தும் ரசனை. தமிழ் மக்களின் பேச்சு வழக்கிலிருந்து விலகிய ஒற்றைச் சொல் உரையாடல்கள், அதுவும் தெளிவற்ற ஒலிப்பதிவு, வீரா விக்ரம் சில நேரம் பிதாமகன் விக்ரம் போல் நடந்துகொள்வது, மலைவாழ் மக்கள் திருமண விழாவில் பட்டுப்புடவை - பட்டுவேட்டியோடு நடனம் (ஒருவேளை இது ஒரு பண்பாட்டு ஊடுறுவலின் சித்தரிப்போ?)... என்பன போன்ற சில ஒட்டாமைகள் படம் நெடுக இருக்கின்றன.

இவற்றையெல்லாம் மீறி - ராமப் பொய்மையை, ராவண நியாயத்தை இந்த அளவில் சொன்ன வகையில் - முதலில் சொன்னது போல் படம் எனக்குப் பிடித்திருக்கிறது. வர்த்தப சினிமாவின் வரப்புகளுக்கு உட்பட்டு, அதுவும் இது போன்ற மெகா தயாரிப்பு நிர்ப்பந்தங்களுக்குள், இதைச் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கதே. இது போன்ற முயற்சிகள் தொடருமானால், நாளைய இன்னொரு மறுவாசிப்பு முயற்சியில் சம்புகன் தலையை வெட்டியெறிந்த ராமனுடைய வாளின் ரத்ததாகம் இன்றும் இடஒதுக்கீடு எதிர்ப்பாகத் தொடர்வதைக் காட்டுகிற படைப்புகள் வரலாம். வரட்டும்.

No comments: