Thursday 28 June 2007

film review

திரைப்பட விமர்சனம்

சிவாஜி

அ.குமரேசன்

ம்பது ரூபாய் டிக்கெட் ஐநூறு முதல் ஆயிரம் ரூபாய் வரையில் விற்கப்பட்டு, உண்மையிலேயே தயாரிப்புக்கு எத்தனை கோடி, விற்பனை எத்தனை கோடி, யார் யாருக்கு சம்பளம் எத்தனை கோடி என்பதெல்லாம் ஒரு போதும் வெளியே தெரியவராத புதிர்கள் ஆக்கப்பட்டு... இப்படியாக வந்துள்ள இந்தப் படம் சொல்கிற சேதி என்ன தெரியுமா? கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான்!

படம் பார்த்து முடித்ததும் நண்பர் கேட்டார்: "ரஜினி வெள்ளையில் வாங்கியது எவ்வளவு, கறுப்பில் வாங்கியது எவ்வளவு என்று சொல்வாரா? அவர் இப்படி கறுப்புப் பணத்தை ஒழிக்கப் புறப்படுகிறவராக நடிக்கலாமா?"

அந்த நொடியில் எனக்குத் தோன்றிய பதிலைச் சொன்னேன்: " நடிப்பு என்பதே உண்மையாக இல்லாததை உண்மை போலக் காட்டுவதுதானே? வயதானவர் இளைஞராக, இளைஞர் குடுகுடு கிழவராக, எட்டாம் வகுப்பு தாண்டாதவர் ஆராய்ச்சிப் பட்டதாரியாக, பலபடிப்புப் படித்துப் பட்டம் பெற்றவர் எழுத்தறிவில்லாத தற்குறியாக... இப்படியெல்லாம் நடிப்பதில்லையா? உயிரோடிருப்பவர் செத்துப் போனவராக நடிப்பதில்லையா? அது போலத்தான் இதுவும்."

எங்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் நான் படத்தைப் பாராட்டுவதாக எண்ணிக்கொண்டு, "சரியாச் சொன்னீங்க," என்றார். படத்திற்காக நீண்ட நேரம் வரிசையில் நின்றது, தானும் கடைசியில் பிளாக்கில்தான் டிக்கட் வாங்க வேண்டியிருந்தது... எதுவும் அவருக்கு உறுத்தவில்லை. யாருக்கு உறுத்தல் ஏற்பட வேண்டுமோ - அந்த சாமான்ய மக்களுக்கு எவ்வித உறுத்தலும் ஏற்படாமல் மரத்துப் போகச் செய்வதில் `சிவாஜி' படத்திற்குப் பெரிய வெற்றிதான். இந்த ஒரு குறிப்பிட்ட படம் பற்றிய உறுத்தல் மட்டுமா? சமூக - அரசியல் நிகழ்வுப் போக்குகள் எது குறித்த உறுத்தலும் ஏற்படாமல் வெற்றுப் பொழுது போக்குத் திருப்தியிலும் பிரம்மாண்டங்களின் பிரமிப்பிலுமாக மூழ்கடித்து மரத்துப் போக வைக்கிற கைங்கர்யம். அதன் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் அடிப்படை நோய்களாகிய சுரண்டல், சாதியப் பாகுபாடு, மதவெறி, ஆணாதிக்கம், நவீன காலனியாதிக்கம், மூட நம்பிக்கைகள்... இன்ன பிறவற்றிக்கு எதிரான உணர்வையும் கோபத்தையும் காயடிக்கிற கர சேவை.


தமிழ்ச் சமுதாயம் போலவே தமிழ்ச்சினிமாவும் எப்படியாவது முன்னேற்றத்தடத்தில் செல்லத் துடிக்கிறது. சினிமா பார்க்க வருகிறவர்களின் பொழுதுபோக்குத் தேவையையும் நிறைவு செய்து, சமூக நிலைமைகள் பற்றிய ஓரளவு அக்கறையையாவது ஏற்படுத்தக் கூடிய படங்கள் வரத் துவங்கியுள்ளன. "அய்யய்யோ இது ஆபத்தாச்சே" என்ற பதைப்போடு தமிழ்ச் சினிமாவின் தடத்தைப் பின்னுக்கு இழுப்பதற்கு சிவாஜிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. திரையரங்குகளை முடக்கி, சந்தையை ஆக்கிரமித்து, மாற்று சினிமா முயற்சிகளை முடக்குகிற இப்படியாகப்பட்ட சகலகலா வல்லவ வேலையை எப்போதுமே செய்து வந்திருக்கிற தமிழ்த் திரையுலக ஏகபோகியாகிய ஏவிஎம் நிறுவனம் இப்போதும் அதைச் செய்திருக்கிறது. சமூகப் பண்பாட்டுத்தளம், வர்த்தகம் இரண்டிலும் ஒரு வன்முறைத் தாக்குதல் இது!

கதையாக்கம், கற்பனை ஆகிய படைப்புத் தளத்திலும் கூட, " இந்த ஊர் ரசிகனுக்கு இது போதும்," என்பதான ஒரு வன்முறை இருக்கிறது. ஏதோ பெரிதாக இருக்கிறது என்பதாக நம்ப வைத்து, பலகோடிப் பகட்டுகளிலும், தொழில்நுட்ப சாகசங்களிலும் மிரள வைக்கிற உத்தியை கைவசப்படுத்தி வைத்திருப்பவர் இயக்குநர் ஷங்கர்.

உள் நாட்டில் உள்ளோரெல்லாம் உளுத்துப் போனவர்களாக இருக்க, அமெரிக்காவிலிருந்து கோடிக்கணக்கான பணத்தோடு திரும்பி வருகிற சிவாஜி இங்கு ஏழைகளுக்காக இலவசப் பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் ஏற்படுத்துவதற்கென அந்தப் பணத்தைச் செலவிட முயல்கிறான். (இலவசக் கல்வி நிறுவனம்தான் நடத்த வேண்டும் என்று ரஜினியின் மனைவிக்கும் மைத்துனர் குடும்பத்துக்கும் வற்புறுத்துகிறானா சிவாஜி?)

கல்வி வியாபாரத் தொழில் ஈடுபட்டுள்ள வில்லன், தனது வருமானம் வற்றிப்போகுமே என்று கருதி, செல்வாக்கையெல்லாம் பயன்படுத்திக் கதாநாயகனின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறான். சிவாஜியின் பணம், சொத்து, கைக் கடிகாரம் உட்பட `ஜப்தி' செய்ய வைக்கிறான். இதற்காக அவன் மேலிருந்து கீழ் வரை தன்னிடமுள்ள கறுப்புப் பணத்தை லஞ்சமாகக் கொடுக்கிறான். அவனைப் போன்றவர்களிடமும், அவர்களிடமிருந்து பெட்டி வாங்குகிறவர்களிடமும் இருக்கும் கணக்கில் வராத கறுப்புப் பணம்தான் நாட்டின் சீரழிவுக்குக் காரணம் என இப்போதுதான் உணர்கிறான் அமெரிக்கா ரிட்டர்ன்டு சிவாஜி. நாடு பூராவும் இருக்கிற கறுப்புப் பணத்தைக் கைப்பற்றி மக்களை உய்விக்க முடிவு செய்யும் சிவாஜி சகல சாணக்கியங்களையும் சண்டைகளையும் கையாண்டு படம் முடிவதற்குள் அதைச் சாதித்து முடிக்கிறான். இலவசக் கல்லூரி திறக்கப்பட கட்டணக் கல்லூரி மாணவர்கள் அங்கே திபுதிபுவென்று ஓடுகிறார்கள். கதாநாயகனுடன் கடைசியாக மோதும் வில்லன், கீழே விழுந்து மாணவர்களின் கால்களில் மிதிபட்டுச் சாகிறான்...

இதற்கிடையே, அமெரிக்கா வாழ் இந்திய இளைஞர்கள் விரும்புவது போலவே சிவாஜியும் ஒரு அழகான, அடக்க ஒடுக்கமான, பக்திமயமான தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, அவளைக் கோவிலில் கண்டுபிடித்து, வீட்டுக்குப் போய்க் கலாய்த்துக் கல்யாணம் செய்து கொள்கிறான். ஆரம்பத்தில் அவனுடைய கறுத்த கையையும் தன்னுடைய சிவந்த கையையும் ஒப்பிட்டுக் காட்டி "எப்படி நாம சேர முடியும்," என்று கதாநாயகி கேட்கிறாள். உடனே வீட்டில் ஒரு பியூட்டி பார்லர் அமைத்து, உடம்பெல்லாம் ஃபேர் அன் லவ்லி கிரீம் பூசி செவ்வண்ண மேனியாய் நடந்து வந்து அவளை அசத்துகிறான்! கிராபிக்ஸ் உபயத்தில் ரஜினி நிஜமாகவே சிவப்பாக வர ரசிகர்கள் விசிலடித்து ஓய்ந்து போகிறார்கள். முன்பு வெளியாகிப் புகழடைந்த "கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு" பாட்டில் "சூப்பர் ஸ்டாரும் கறுப்புத்தான்," என்ற ஒரு வரி வரும். அந்தப் பெருமை வேண்டாமென முடிவு செய்தார்களோ? சமூக நடப்பில் ஆண்தான் "சிவப்புத் தோல் பெண் வேணும்" என்று கேட்டு இல்லாத பட்சத்தில் வரதட்சணை பேரத்தை உயர்த்திக் கொள்கிறான்.
இந்தக் காட்சியில் மட்டுமல்ல, நாயகியை நாயகன் விரட்டிக் கொண்டிருக்கிறபோது பக்கத்து வீட்டு சாலமன் பாப்பையா தனது இரண்டு பெண்களைக் கூட்டி வந்து, " இந்த ரெண்டுல எதை வேணா நீங்க கட்டிக்கோங்க," என்று ஆஃபர் பண்ணுகிறார். அந்த இரண்டு பெண்களையும் அமாவாசைக் கறுப்பில் காட்டுகிறார்கள். கறுப்பை இப்படி கேலிக் குரியதாக்குவது காமெடியாம். தனக்கு வருபவள் பண்பாட்டுச் சிகரமாக இருக்க வேண்டும் என்று நாயகன் எதிர்பார்த்து, அவனுக்கு அப்படியே ஒரு ஆள் கிடைக்கிறது என்றாலும் ரசிகர்களுக்கு ஸ்ரேயாவை அப்படியே காட்டிவிடக் கூடாது என்ற அக்கறையோடு பாடல் காட்சிகளில் அதிகபட்சமாக அவருக்கு ஆடையுரிப்பு நடத்தி ஆடவிட்டிருக்கிறார்கள். பண்பாட்டுக்கு பண்பாடும் ஆச்சு, வியாபாரத்திற்கு வியாபாரமும் ஆச்சு.

கறுப்புப் பணத்தை சிவாஜி எப்படி வெளிக்கொண்டுவருகிறான் என்பது முக்கியமானது. மந்திரிமார்கள், அதிகாரிகள், முதலாளிகள் போன்ற கறுப்புப் பணக்காரர்களால் வேலையை விட்டு நீக்கப்பட்ட கார் டிரைவர்கள், பணியாட்கள் போன்றவர்களைத் திரட்டி, கல்யாண மண்டபத்தில் கூட்டம் நடத்தி, அவர்களிடம் கறுப்புப் பணத்தின் தீமையை விளக்குகிறான். அவர்களது முன்னாள் எஜமானர்கள் எங்கெங்கே கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தான் நன்றாக தெரியும் என்பதால், மக்களின் வறுமையை ஒழிக்க அந்த ரகசிய இடங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறான். அவர்களும் தேசப்பற்றோடு அந்த இடங்களைக் காட்டிக்கொடுக்க அந்தத் தகவல்களை அவன் வருமான வரித் துறைக்கு அனுப்ப - அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து அத்தனையையும் கைப்பற்றுகிறார்கள். வருமான வரித்துறை, புலனாய்வுத் துறை ஆகியவற்றிற்கு பயனுள்ள வழிகாட்டல்! எதற்கும் ஏவிஎம் நிறுவனத்தினர், ரஜினி, ஷங்கர் உள்ளிட்டோர் தங்களது பணியாளர்களை மாற்றாமல் இருப்பது நல்லது. கதாநாயகன் சொல்லித்தான் இந்த ரகசியங்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்குத் தெரியுமா என்ன? அப்புறம் கறுப்புப் பணக் கில்லாடிகள் இந்தத் துறைகளுக்குள் மட்டும் புகுந்து விளையாடாமல் விட்டுவைப்பார்களா என்ன? ஆனால் சூப்பர் ஸ்டார் படத்தில் இப்படியெல்லாம் `லாஜிக்' தேடுவது தேசத் துரோகம்.

வில்லனின் சதியால் சிவாஜி செத்துப்போகிறான். இவ்வளவு கோடி செலவழித்து எடுக்கிற படத்திலாவது, ஹீரோவாவது, அதுவும் சூப்பர் ஸ்டாராவது முக்கால் வாசியில் செத்துப்போவதாவது! ரசிகர்கள் எந்த அதிர்ச்சியும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில் " வித்தியாசமான கெட்டப்பில்" (அதாவது டோபா வைக்காத தலையுடன்) திரும்பி வருகிறார் ரஜினி. `காமிக்ஸ்' புத்தகத்திற்குக்கூட லாயக்கில்லாத இந்தக் கதையைத்தான் இவ்வளவு மர்மமாக வைத்திருந்து, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை செயற்கையாக ஏற்படுத்தி, தமிழ் சினிமா ரசிகர்களை ஒரு மாதிரியாக்கினார்களா!

திரையுலகில் ரொம்ப காஸ்ட்லியான ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், தொகுப்பாளர், சண்டைப் பயிற்சியாளர், நடன இயக்குநர் இன்ன பிற வல்லுநர்கள் என்றெல்லாம் துணை சேர்த்துக் கொண்டு, கூடவே கிராபிக்ஸ் நுட்பங்களையும் பயன்படுத்திப் படமாக்கித் தருவதில் என்ன சிறப்பு இருக்கிறது? இளைய இயக்குநர்கள் இன்று எளிய கலைஞர்களைக் கொண்டே வலிய படங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். அந்தத் தன்னம்பிக்கை இல்லை என்பது மட்டுமே இவர்களது இந்த பிரம்மாண்ட சார்புக்குக் காரணமல்ல. படம் வெளியாகி முதல் சுற்றிலேயே போட்ட பணத்தைவிடப் பலமடங்காக அள்ளிவிட வேண்டும் என்கிற வேட்கைதான் காரணம்.

கிராபிக்ஸ் நுட்பம் கன்னாபின்னாவென்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ரஜினி 1 ரூபாய் நாணயத்தைக் காற்றில் சுண்டிப்போட்டு தனது சட்டைப் பாக்கெட்டில் விழவைக்கிற "ஸ்டைல்" கூட கிராபிக்ஸ்!

ஆறுதலுக்கு ஒரு நல்ல அம்சம்கூடவா இல்லை என்று கேட்பவர்களுக்காக: இருக்கிறது. கதாநாயகி தனது ஜாதக தோஷப்படி தன்னைத் திருமணம் செய்து கொள்பவன் செத்துப்போவான் என்று பயப்படுகிறாள். நிஜமாகவே சிவாஜி செத்ததாக தகவல் வர அழுது கதறுகிறாள். அப்புறம் அய்யா வந்துவிடுகிறார் ஆகவே ஜாதகம், கீதகம், தோஷம், கீஷம் சங்கதியெல்லாம் கிடையாது என்றாகிறது. ஆனால் இது படத்தின் மையப்பிரச்சனை அல்ல என்பதால் எவ்வித அழுத்தமும் பெறவில்லை.

விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி, ரகுவரன் போன்ற திறமையாளர்கள் எல்லாம் பிரம்மாண்டத்தில் காணாமல் போய் விட்டார்கள். ஸ்ரேயா மட்டும் என்ன செய்துவிட முடியும் பாவம்.

பொழுதுபோக்கு நோக்கத்தற்காக தயாரிக்கப்படுகிற படத்தில் இப்படியெல்லாம் நொட்டை, நொள்ளை பார்ப்பது சரியா என்று சிலர் கேட்கிறார்கள். பொழுது போக்கு என்பது வாழ்க்கையின் ஒரு தேவைதான். ஆனால் அது பொழுது பறிப்பாக இருக்குமானால் விமர்சிக்காமல் இருக்க முடியாது. அதுவும் பொழுது போக்கின் பெயரால், வெறும் நாயக வழிபாடு வளர்க்கப்பட்டு, அநீதிகளுக்கு எதிரான ஆவேச உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு, பணம் பிடுங்குவதற்கான நெட்டை மரங்களாக மக்கள் மாற்றப்படுவது ஒரு பண்பாட்டு மோசடி. அதைத்தான் ஆரவாரங்களோடு செய்கிறது `சிவாஜி'.

No comments: