Wednesday 4 July 2007

ஊடகமுகம்

ஊடகங்களின் அரசியல்

அ.குமரேசன்

‘‘அரசியலுக்கு அப்பாற்பட்ட நடுநிலை’’ என்பதைத் தங்களது கொள்கையாகச் சொல்லிக் கொள்வதில் ஆகப் பெரும்பாலான ஊடக நிறுவனங்களுக்கு ஒரு மோகம். அரசியல் கட்சிகள் வெளியிடும் ஏடுகள் அவ்வாறு சொல்லிக் கொள்வதில்லை. வர்த்தகக் களத்தில் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிற மற்ற ஏடுகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், மின்னணுத் தட ஏடுகள்... எல்லாமே ‘நடுநிலை’ என்றுதான் அறிவித்துக் கொள்கின்றன. ஊடக மொழியில் இந்த ‘நடுநிலை’ என்பதைவிடவும் மோசடியான சொல் வேறொன்றும் கிடையாது. எந்த ஊடகமும் நடுநிலையாக இல்லை; அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நீதிமன்றத்தில் நீதிபதி விசாரணை முடிகிற வரையில்தான் நடுநிலை நிற்க வேண்டும். தீர்ப்புச் சொல்கிறபோது ஏதேனும் ஒரு தரப்புக்கு சாதகமாகவே சொல்லியாக வேண்டும். அப்போதும் நடுநிலை என்பதாகச் சொல்லிக் கொண்டு பிக்பாக்கெட் பேர்வழிக்கும் ஐந்து மாதம் சிறை, பணத்தைப் பறிகொடுத்தவருக்கும் ஐந்து மாதம் சிறை என்று தீர்ப்பளித்தால் அவருக்கு எத்தனை மாதம் என்று தீர்மானிக்க வேண்டியிருக்கும்தானே!

ஊடக வல்லாளர்கள் பலரும் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். ஒரு கட்சியின் கருத்தை அல்லது ஒரு தரப்பின் வாதத்தை வெளியிட்டு, அத்தோடு இன்னொரு கட்சியின் கருத்தை அல்லது இன்னொரு தரப்பின் வாதத்தையும் கொடுத்து விட்டால் அதுதான் நடுநிலை என காட்டிக் கொள்கிறார்கள். சில ஏடுகள் தலையங்கம் மூலமாகத் தங்களது நிலைபாடு என்னவென்று சொல்வதுண்டு. மற்றவர்கள் அதைக்கூடச் செய்வதில்லை. எடுத்துக்காட்டாக, ‘‘அழகிப்போட்டி தேவையா’’ என்று ஒரு விவாதத்தை எடுத்துக் கொள்வார்கள். தேவையில்லை என்று மாதர் இயக்கத் தலைவர் ஒருவர் சொல்வதையும், தேவைதான் என்று போட்டி அமைப்பாளர் ஒருவர் சொல்வதையும் எதிரும் புதிரும் என வெளியிடுவார்கள். இரு தரப்பினரும் விவாதிக்கிற நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள். அந்த விவாதத்தில் அந்த ஏட்டின் அல்லது தொலைக்காட்சி நிறுவனத்தின் கருத்து என்ன என்று நேரடியாகக் கூற மாட்டார்கள். அனால் அழகிப் போட்டி தொடர்பான ‘‘கிளுகிளு’’ செய்திகள், பரபரப்புத் தகவல்கள், அட்டகாசமான படங்கள் என வெளியிடுவதில் அந்த நிறுவனங்களின் ஆதரவு எதற்கெனத் தெரிந்துவிடும்.

‘நடுநிலை’ என்று எதுவும் இல்லை; ஒவ்வொரு ஊடகத்திற்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அரசியல் என்றால் அந்தக் கட்சி அரசியல், இந்தக் கட்சி அரசியல் அல்ல. அதிலேயாவது அனைத்துத் தரப்புச் செய்திகளையும் ஒரளவுக்காவது போட்டாக வேண்டிய கட்டாயம் - வணிக நோக்கத்திற்காகவாவது இருக்கிறது. அப்போதும் கூட செய்திகளைச் சுருக்கியோ முக்கியத்துவமின்றியோ வெளியிடுவதில் இவர்களது நடுநிலை எந்தப் பக்கம் சாய்ந்திருக்கிறது என்பது என்பதை அறிய முடியும். இங்கே ஒவ்வொரு ஊடகத்திற்கும் ஒரு அரசியல் இருக்கிறது என்று குறிப்பிடுவது வர்க்க அரசியல். நமது நாட்டில் வர்க்க அரசியல் என்பது வர்ண அரசியலோடும் சம்பந்தப்பட்டிருடிருக்கிறது.

இவர்களது வர்ண அரசியலுக்கு இட ஒதுக்கீடு பிரச்சனை நல்ல எடுத்துக்காட்டு. பொதுவாகவே இந்த நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பது எதுவெனக் கேட்டுப் பாருங்கள்- தகுதிக்கு இடமளிக்காத இட ஒதுக்கீடு கொள்கைதான் என்பார்கள். ‘‘சாதி ஒழிய வேண்டும் என்கிறது அரசு. ஆனால் சாதிய உணர்வுகளை அரும்பிலேயே கிள்ளி எறியவேண்டிய பள்ளிக் கூடத்தில் குழந்தைகளைச் சேர்க்கும் போதே சாதி என்ன என்று கேட்கப்படுகிறது,’’ என இட ஒதுக்கீடு கொள்கை கொண்டு வரப்பட்டதன் வரலாற்றுத் தேவை என்ன என்பது குறித்த எந்தப் புரிதலுமின்றி மேலோட்டமாக எழுதுவார்கள். அப்படிப்பட்ட வாதங்களை உற்சாகமாக ஒளிபரப்புவார்கள்.

இதன் ஒரு முற்றிய வெளிப்பாடுதான், உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை எதிர்த்து ‘‘உயர்’’ சாதி இளைஞர்கள் தெருவில் இறக்கிவிடப்பட்டபோது, அதற்கு இந்த ஊடகங்கள் அளிக்க முக்கியத்துவம். மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனிடம் ‘‘இனிமேல் நீ ஐஐஎம், ஐஐடி படிக்கலாம்’’ என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் சொல்வது போல் கார்ட்டூன் வெளியிட்டுத் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியது ‘டெக்கான் கிரானிக்கிள்’ ஏடு. இதற்குக் கண்டனங்கள் எழுந்த போது ‘‘அது கார்ட்டூனிஸ்ட்டின் சொந்கக் கருத்து’’ என்றெல்லாம் (பொதுவாகச் சொல்லப்படுவது போல்) அந்த ஏடு சொல்லிக் கொள்ளவில்லை. ஆகவே அந்த ஏட்டின் கருத்தும் அதுதான் என்பதில் யாருக்கும் துளியும் சந்தேகம் வேண்டியதில்லை.

இதையொட்டி தலைநகர் தில்லியின் ஏஐஐஎம்எஸ் மருத்துவமனை விவகாரம் வந்தது. அதன் இயக்குநர் டாக்டர் வேணுகோபால் இட ஒதுக்கீட்டை எதிர்த்ததோடு, கல்லூரி வளாகத்துக்குள் எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைகளுக்கு இடம் ஒதுக்கினார்! ஆனால் நடுநிலை ஊடகங்கள் அதை மறைத்து, சுகாதார அமைச்சர் அன்புமணிக்கும் வேணுகோபாலுக்குமான தகராறாக ஊதிவிட்டன.

வி.பி. சிங் பிரதமராக இருந்தபோதுதான் அரசுத்துறை வேலைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்யும் சட்டத்தை, மண்டல் குழு அறிக்கை அடிப்படையில் கொண்டு வந்தார்.அப்போதும் இதே போல் கலவரத் தீ மூட்டப்பட்டது. அதனை அன்றும் இந்த ஊடகங்கள் பரபரப்புடன் வெளியிட்டன. வி.பி.சிங்கின் முடிவு சாதிய வாக்கு வங்கி அரசியல் என்று திட்டித் தீர்த்தன. ‘‘உயர்’’ சாதியினரின் ஆதிக்க அரசியலை மூடி மறைத்தன. ‘‘இந்தக் கிளர்ச்சி பரவட்டும்’’ என்று தலையங்கமே எழுதிய அன்றைய ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆசிரியர் அருண் ஷோரிக்கு பின்னாளில் வாஜ்பாய் அமைச்சரவையில் ஒரு நாற்காலி பரிசளிக்கப்பட்டது.

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான இச்செயல்களை ‘‘போராட்டம்'' என்று ஊடகங்கள் குறிப்பிடுதிலேயே கூட ஒரு அரசியல் இருக்கிறது. போராட்டம் என்பது நியாயமான சீற்றத்திலிருந்து வெடித்துக் கிளம்புவதைக் குறிப்பிடுவதற்கான சொல். ஒரு நியாயத்தை எதிர்த்து இவர்கள் நடத்துவதைப் போராட்டம் எனக் கூறுவது போராட்டம் என்ற சொல்லைக் கொச்சைப் படுத்துகிற செயல். அதனை வன்முறை, கலவரம் என்றே குறிப்பிட வேண்டும்.

மண்டல் எதிர்ப்புக் கலவரங்களின் ஒரு உச்சமாகத்தான் 1992ஆம் ஆண்டில் அயோத்தியில் பாபர் மசூதி தகர்க்கப் பட்டது. மசூதியைத் தகர்த்த மதவெறியின் அடியாழத்தில் சாதியக் கட்டுமானத்தைத் தகர்க்கவிடக் கூடாதென்ற இந்துத்வா அரசியல் ஊறிக் கிடந்தது. அதைப்பற்றிய செய்தி வெளியீட்டிலும் ஊடக வசிஷ்டர்களின் நடுநிலை நர்த்தனமாடியது. பல ஏடுகள் அதை ஒரு பரபரப்புச் சம்பவமாக மட்டுமே மட்டுமே சித்தரித்தன. கட்டுக்கடங்காத கூட்டத்தின் மட்டு மீறிய செயலாகவே வர்ணித்தன. ‘‘தேசிய நடுநிலை நாளேடு’’ என்று தன்னைப் பிரகடனப் படுத்திக் கொள்ளும் ‘தினமலர்’ அந்தச் செய்திக்கு ‘‘பாபர் மசூதி தகர்ப்பு - ராம பக்தர்கள் ஆவேசம்’’ என்று தலைப்பிட்டிருந்தது. ‘‘ஆவேசம்’’ என்ற சொல் நீதிக்கான போராட்ட உணர்வைக் குறிப்பிடுவதற்கான சொல். ஏடுகளில் அரிதாகவே கையாளப்படுகிற சொல். அதனை அந்த ஏடு அன்றைக்கு ஒரு அநீதியைக் குறிப்பிடப் பயன்படுத்தியது என்றால் அதில் அரசியல் இல்லையா? சொல்லப் போனால் அந்த ஏட்டின் அவதாரமே மதவாதம்தான். மண்டைக்காடு பகுதியில் இந்து-கிறிஸ்துவ மக்களிடையே மோதல் வெடித்தபோது, இந்துக்களிடையேயான பத்திரிகைச் சந்தையைப் பிடித்துக் கொள்ளும் முனைப்புடன்தான் அப்போது புறப்பட்டிருந்த அந்த ஏட்டின் செய்திகள் தயாரிக்கப்பட்டன.

இப்போது எழுப்பப் படுகிற ராமர் பால கூச்சலை எடுத்துக் கொள்வோம். ஒரு பகுதி மக்களின் இறை நம்பிக்கையை முதலீடாகக் கொண்டு பாஜக, விஎச்பி, இந்து முன்னணி போன்ற சங் பரிவாரங்களும், அதிலே தனக்கும் ஆதாயம் இருக்கிறதென்ற கணக்கில் அதிமுகவும் செய்துகொண்டிருக்கிற அரசியலை எத்தனை ஊடகங்கள் அம்பலப்படுத்தின? அறிவியல் கண்ணோட்டம் வளர்வதைத் தடுப்பது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது என்ற நோக்கங்களைத் துருவியெடுத்து வெளியிட பெரிய நிறுவனங்கள் நடத்துகிற புலனாய்வு ஏடுகள் ஏன் முன்வரவில்லை?

அறிவியல் கண்ணோட்டத்திற்கு நேர்மாறாக மூட நம்பிக்கைகளை வளர்ப்பது, ஏற்கெனவே பரவியுள்ள மூடநம்பிக்கைகளை வியாபாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்வது போன்றவற்றில் மட்டும் ஒரு போட்டியே நடை பெறுகிறது!ஒவ்வொரு நாளும் தனியார் தொலைக் காட்சிகளின் காலை வணக்க நிகழ்ச்சிகளில் அன்றைய தினத்திற்கான ‘‘ராசி பலன்’’ சொல்ல மறப்பதில்லை. காலையில் பண்பலை வானொலியைத் திருப்பினால், ஒவ்வொரு தனியார் நிறுவனமும் ஒவ்வொரு வகையில் அன்றைய கிரக பலன்களைக் கூறுகின்றன. வாராந்திர ராசி பலன் வெளியிடாத நாளேடுகள், வார ஏடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இவ்வாறு வார பலன், தினப் பலன் வெளியிடுவது தொடர்பாக இரண்டு சுவையான நிகழ்ச்சிகள் உண்டு (இரண்டுமே சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் மூலம் தெரிய வந்த தகவல்கள் என்பதால், அந்த நிறுவனங்களின் பெயர்களை இங்கே கூறப் போவதில்லை). ஒரு பண்பலை வானொலியின் காலை ஒலிபரப்பின்போது, அன்று அறிவிப்பதற்கென தயாரித்து வைக்கப் பட்டிருந்த சோதிடக் குறிப்பு எப்படியோ தொலைந்துவிட்டது. பதறிப்போன அறிவிப்புப் பெண்ணிடம் ‘‘பதட்டப் படாதே’’ எனக் கூறிய நிகழ்ச்சித் தயாரிப்பாளர், அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த முந்தைய ஒரு மாதத்துக் கோப்பிலிருந்து ஒரு தாளை உருவியெடுத்து, ‘‘இதை அப்படியே வாசி,’’ என்றாராம். திகைப்புடன் பார்த்த அறிவிப்பாளரிடம், ‘‘எவனுக்குத் தெரியப் போகுது,’’ என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டே கூறினாராம்!

ஒரு வாரப்பத்திரிகை அலுவலகத்தில், கணினி தட்டசுக்குப் போவதற்கான நேரத்திற்குள் வார ராசிபலன் குறிப்புகள் தயாராகவில்லை. இது தெரிய வந்த போது அதன் ஆசிரியர் அலட்டிக் கொள்ளாமல், ‘‘கவலையே வேண்டாம். போன வாரம் போட்டதை எடுத்து வைத்துக் கொள். அதில் மேஷ ராசியில் இருப்பதை இந்த வார ரிஷப ராசிக்குப் போடு. கன்னியில் இருப்பதை கடகத்தில் போடு. விருச்சிகத்தில் இருப்பதை மிதுனத்துக்கு மாற்று. இப்படியே எல்லா ராசிக்கும் மாற்றி மாற்றிப் போடு,’’ என்று ஆலோசனை கூற அந்த வாரம் அதைத்தான் படித்தார்கள் ராசிபலன் நம்பிக்கையாளர்கள்! சோதிடமே ஒரு மோசடி, அதில் இப்படியாக ஒரு உள் மோசடி!

இப்படியாக மூடநம்பிக்கை சங்கதிகளைத் தருவதில் ஊடகங்களுக்கிடையே நடக்கிற போட்டியின் நோக்கம், மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்திக் காசாக்குகிற வியாபார தந்திரம் மட்டுமல்ல. போராட்ட உணர்வுகள் தலை தூக்காதவர்களாக மக்களை இப்படியே வைத்திருக்க வேண்டுமென்ற ஆளும் வர்க்க அரசியல் விருப்பமும் இருக்கிறது.கண்ணுக்குப் புலப்படாதது, ஆனால் கல்லைப் போல் வலிமையாக இருப்பது ஊடகங்களின் இந்த வர்க்க அரசியல். முதலாளி வர்க்கக் கோட்பாடுகளை முற்றிலுமாக ஏற்றுக் கொண்டு சந்தைப் பொருளாதார நலன்களுக்கு வக்காலத்து வாங்குகிற நிறுவனங்கள் மட்டுமல்ல இவை; அடிப்படையில் பெரிய முதலாளிகளால் நடத்தப்படுகிற நிறுவனங்களுமாகும். ‘கார்ப்பரேட்’ உலகில் நடக்கிற சூதுகள், அதிரடிகள், குழிபறிப்புகள், லாப வேட்கைக்கான வேட்டைகள்... ஆகிய அனைத்தும் ஊடக வட்டங்களுக்கு உள்ளேயும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதனால்தான், வணிக விரிவாக்க நோக்கத்திற்காகத் தொழிலாளர் வர்க்கச் செய்திகளை அவ்வப்போது வெளியிட்டாலும், சுரண்டல் வர்க்க நலன்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் வதாக அந்தச் செய்திகள் அமைந்துவிடக் கூடாது என்பதில் ஊடக சாணக்கியர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தைப் பல ஊடகங்கள் எப்படியெல்லாம் சித்தரித்தன! குறிப்பாக முதலில் பார்த்த ‘தேசிய நடுநிலை நாளேடு’ அந்தப் போராட்டத்தை எப்படியெல்லாம் கேலியாக எழுதியது!

மதுரையில் ‘தினகரன்’ அலுவலகம் தாக்கப்பட்டது பற்றியே அதிகம் பேசப்பட்டது. உண்மையிலேயே மக்களிடம் திரப்பட்ட கருத்தோ, அல்லது ராசிபலன் பாணியில் உருவாக்கப்பட்ட கருத்தோ - அதை வெளியிடுவதற்கு அந்த ஏட்டிற்கு உள்ள உரிமையை யாரும் பறிப்பதற்கில்லை. அதே சமயத்தில், ஊடகச் சந்தையில் ஏகபோகமாய்க் கோலோச்சுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கார்ப்பரேட் தர்மம் மூன்று ஊழியர்களது உயிர் பறிக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது என்பதைக் காணத்தவறக் கூடாது.

அதே கார்ப்பரேட் தர்மம்தான் இந்தியாவில் மதவெறி ஆதிக்கவாதிகளின் ஆட்சி ஏற்படுவதற்குக் காரணமானது. ராஜீவ் காந்தி கொலை தொடர்பான ஜெயின் கமிஷன் அறிக்கையை ஒரு திரிக்கப்பட்ட வடிவில் ‘இந்தியா டுடே’ வெளியிட்டது. திமுக மீது கமிஷன் குற்றம் சாட்டியிருப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சி அப்போது ஐ.கே. குஜ்ரால் அரசுக்கு (அதில் அப்போது திமுக அங்கம் வகித்தது) வெளியிருந்து அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. அதைத் தொடர்ந்தே மத்திய ஆட்சி பீடத்தில் பாஜக ஏறியமர்ந்தது. உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவற்றை விசுவாசத்தோடு செயல்படுத்த, அதற்கு எதிராக எழுகிற மக்களின் உணர்வுகளை மதவாதத்தின் மூலம் திசை திருப்பக் கூடிய ஒரு அப்பட்டமான வலதுசாரிக் கட்சி இந்திய ஆட்சிப் பொறுப்பில் இருப்பதே தோதானது. ஏகாதிபத்தியவாதிகள், உள்நாட்டு ஏகபோகவாதிகள் போன்றோரது இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொடுத்ததில் ‘இந்தியா டுடே’ நிர்வாகத்தின் வர்க்கப் பாசம் தெளிவாக வெளிப்பட்டது.

பாஜக-வை அதே ‘இந்தியா டுடே’, ‘துக்ளக்’ போன்ற ஏடுகள் அவ்வப்போது விமர்சிக்கவும் செய்கின்றன - அது நடுநிலைதானே என்று கேட்கலாம். அது, செய்வதைத் திருந்தச் செய்யாமல் இலக்கு நோக்கிச் செல்வதில் சொதப்பிவிட்டீர்களே என்ற ஆற்றாமையின் வெளிப்பாடுதானேயன்றி வேறொன்றுமில்லை.

இத்தகைய ஊடகங்களின் வர்க்க அரசியல், 2004ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் தலைமையிhன ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரிக் கட்சிகளின் ஆதர வோடுதான் ஆட்சியமைக்கப் போகிறது என்பது உறுதியானபோது, ஒரு பதற்றமாகவே வெளிப்பட்டது. அடேயப்பா, எத்தனை வித மான கேலிகள் , ஊக ங்கள், அச்சுறுத்தல்கள்! காங்கிரஸ் கூட்டணி அரசால் நாட்டின் “முன்னேற்றத்துக்கான” தாராளமயப் பொரு ளாதாரக் கொள்கைகளைத் தாராளமாகச் செயல்படுத்த முடியாது, கம்யூனிஸ்ட்டுகள் கட்டையைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் என்பதே அந்தப் பதற்றத்தின் அடியிழை.

‘சன் நியூஸ்’ பேட்டி ஒன்றில், ஒரு பத்திரிக்கையாளரிடம் “இந்த அரசாங்கத்தை கம்யூனிஸ்ட்டுகள் ‘பிளாக்மெயில்’ செய்வார்களா,” என்று செய்தியாளர் கேட்க, அவர் மழுப்பலாக பதிலளித்தது திரும்பத் திரும்ப ஒளிப்பரப்பட்டது. ‘பிளாக்மெயில்’ என்பது மிகக் கடுமையான, இடதுசாரிகள் மீது ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிற சொல். திமுக ஆதரவுத் தொலைக்காட்சியாக செயல்பட்ட அந்த நேரத்திலேயே, அக்கட்சி அங்கம் வகிக்கும் ஐமுகூ அரசுக்கு இடது சாரிகளின் ஆதரவை ‘சன் நியூஸ்’ இப்படிக் கொச்சைப் படுத்தைத் தயங்கவில்லை. அதன் வர்க்க அரசியல்தான் இதற்குக் காரணம் என விளக்க வேண்டியதில்லை.

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலை பாட்டை அறிவித்த போது அதே பதற்றத்தை ஊடகங்கள் வெளிப்படுத்தின. முன்பும், பாஜக ஆட்சியில் இருந்த நேரத்தில் அதன் வேட்பாளராக ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவிக்கப்பட்டார். ஆழ்ந்த அரசியல் ஞானமும் அனுபவமும் உடையவராக, மதச்சார் பின்மையில் உறுதியானவராக உள்ளவரே அந்தப் பொறுப்புக்கு வரவேண்டும் என அன்றைக்கும் மார்க்சிஸ்ட் கட்சி கூறியது. உடனே “ குடியரசுத் தலைவர் பதவி அரசியல்வாதிகளுக்கு மட்டும் குத்தகையா” என்று கோபத்தோடு தலையங்கமே தீட்டியது `தினமணி.' அப்துலகலாம் ஒரு திறமை மிக்க அறிவியலாளர்தான். ஆனால், கடந்த ஆண்டுகளில் குழந்தைகளோடு ‘குவிஸ்’ விளையா ட்டுகள் நடத்திய அக்கறையில் கொஞ்சமேனும் அறிவியலுக்கே விரோதமான மதவெறியர் செயல்களைக் கண்டிப்பதில் காட்டியதுண்டா? ‘நாசா’ செயற்கைக் கோள் எடுத்தனுப்பிய புகைப்படத்தைப் பயன்படுத்தி கடலுக்கடியில் ‘ராமர் பாலம்’ இருப்பதாகக் கிளப்பும் சங்பரி வாரங்கள், தொழில் நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்த சேதுக்கால்வாய் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுகின்றன. அறிவியல் அறிஞர் அப்துல்கலாம் அதுபற்றி வாய் திறக்க வில்லை யே! பாஜக வுக்கு அதன் மதவாத அரசியலில் ஒரு தந்திரமாக ‘அப்துல் கலாம்’ என்ற இஸ்லாமியப் பெயரும், அவரைச் சுற்றிக் கட்டப்பட்ட படிமங்களும் பயன்பட்டன. அந்தப் படிமங்களை உருவாக்கியதே -ரஜினி காந்த் சினிமா வரும் போதெல்லாம் செய்வது போல்- ஊடகங் கள்தான்.

இவர்களது இடதுசாரி விரோத, குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி விரோத அரசியலுக்கு, மேற்கு வங்க த்தின் சிங்கூர், நந்தி கிராமம் விவகாரங்கள் தொடர்பாக இவர்கள் இன்றுவரையில் எப்படியெல்லாம் செய்தி தருகிறார்கள் என்பதே சாட்சி. மார்க்சிஸ்ட் கட்சி தனது தொழில் கொள்கை என்ன என்பதைத் தனது திட்டத்திலும், அகில இந்திய மாநாட்டுத் தீர்மானத்திலும் தெளிவாகக் கூறியிருக்கிறது. அதன் தலைப்பைக் கூட படித்துப் பார்க்காதவர்களாக இவர்கள். சிங்கூர் கார் தொழிற்சாலை பிரச்சனையில் சிபிஎம் இரட்டை நிலை என்று கூசாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். புத்ததேவ் பட்டாச்சார்யா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்தே அவருக்கும் கட்சித் தலைமை க்கும் இடையே தொழில் கொள்கையில் கருத்து வேறு பாடு என்பதாக சித்தரித்து வருபவர்கள் இவர்கள். அண்மையில் ஒரு ஊடக நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “என்ன, உங்கள் பிரகாஷ் காரத் சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறாரே,” என்றார். “ஆம், அதுதான் கட்சியின் நிலைபாடு. இதில் வியப்படைய என்ன இருக்கிறது,” என்று நான் சொன்னேன். உடனே அவர், “அதென்ன சிங்கூர் டாடா தொழிற்சாலைக்கு ஒரு நிலைபாடு, ரிலையன்ஸ் கம்பெனிக்கு ஒரு நிலைபாடா? முரணாக இருக்கிறதே, ” என்று கேலியில் ஊறவைத்து எடுத்த ஒரு தொணியோடும் சிரிப்போடும் கேட்டார். கட்சியின் தொழில் கொள்கை, எப்படிப்பட்ட தொழில்களில் பெரிய முதலீடு கள் தேவை, எவற்றில் தேவை யில்லை என கட்சி கூறுகிறது என்று சுருக்கமாகக் கூறினேன். அதற்கு அவர், “இதையெல்லாம் எந்தப் பத்திரிகையும் சொன்னதில்லையே,” என்றார். “தீக்கதிரையும் படியுங்கள்,” என்றேன் நான்.

சிங்கூர் விவகாரம் வந்த பிறகும் கூட, கட்சியின் தொழில் அணுகுமுறை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் தேவையற்ற செய்திகளாக சுருட்டி வைத்து விடுவதில் மறைந்திருப்பது இந்த ஊடக மிராசுகளின் அரசியல். நந்திகிராமத்தற்கு காவல் துறையினர் அனுப்பப்பட்டது நிலத்தைக் கையகப் படுத்துவதற்காக அல்ல. அந்த மக்களிடையே அப்படியொரு புரளியைக் கிளப்பிவிட்டு, “நிலப்பாதுகாப்பு இயக்கம்” என்பதன் பெயரால் ஆயுதங்கள் குவிக்கப்பட்டன. பள்ளங்கள் தோண்டப்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. தகவல் தொடர்பு இணைப்புகள் வெட்டப்பட்டன. மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட உள்ளாட் சிப் பிரதிநிதிகளும் அரசுப் பணியாளர்களும் விரப்பட்டனடர். ஒரு தீவு போல் அந்த வட்டாரம் தனிமைப்படுத்தப்பட்டதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் துணையாக வலது கோடி பாஜக, இடது கோடி நக்லைட்டுகள் என்று சேர்ந்து கொண்டனர். இதையெல்லாம் கொஞ்சம் கூட தெரியப்படுத்தாத ஊடகங்கள் அந்தத் துப்பாக்கிச் சூட்டு சோகத்தை மட்டும் இன்றளவும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இடதுசாரிகளை - குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியை - மக்களிடமிருந்து துண்டிப்பதற்கு இது ஒரு அருமையான வாய்ப்பு என இந்த ஊடகங்கள் நாக்கைச் சுழற்றிக் கொண்டு இறங்கியுள்ளன. இவற்றின் பின்னணியில் சிரிப்பது... உலகமய தாதாக்கள் முதல் உள்நாட்டுத் தனியார்மய போதகர்கள் வரை.

ஆக, ஊடகங்கள் அரசியல் செய்திகளை வெளியிடுவதோடு நிறுத்திக் கொள்வதில்லை, அரசியல் நடத்தவும் செய்கின்றன. தீக்கதிர், செம்மலர் போன்ற ஏடுகள் “நாங்கள் உழைக்கும் வர்க்கக் குரலை ஒலிப்பவர்கள்தான்” என்று வெளிப்படையாக, “நடுநிலை” ஒப்பனை போட்டுக் கொள்ளாமல் தலைநிமிர்ந்து கூறுகின்றன. வேறு பல அரசியல் கட்சிகள் நடத்தும் ஏடுகளும் ``எமது கட்சி அரசியலைக் கொண்டு செல்வதே எமது நோக்கம்'' என்று அறிவிக்கின்றன. இந்துத்வா கூடாரத்திலிருந்து அனுப்பப்படும் ஊடகங்களும் தமது முகத்தை மறைப்பதில்லை. இதர மத நிறுவனங்கள் நடத்துகிற ஊடகங்களையும் இந்த வரிசையில் சேர்க்கலாம். ஆனால் “நாங்கள் எந்தப் பக்கமும் சாராதவர்கள்” “எந்தச் சாயமும் பூசிக் கொள்ளாதவர்கள்” என்ற வனப்பு வார்த்தைகளைப் பகர்ந்தபடி வருகிற ஊடகங்கள் பூ நாகம் போன்றவை. எச்சரிக்கையோடு கையாளப்பட வேண்டியவை. குறிப்பிட்ட பிரச்சனையில் தனது கருத்து என்ன என்று சொல்லாமலிருப்பதே கூட ஒரு அரசியல்தான். வர்த்தகப் போட்டியின் காரணமாக பல தரப்புத் தகவல்களையும் வெளியிட்டாக வேண்டிய கட்டாயம் அவைகளுக்கு இருக்கிறது- நடுநிலை வேடம் கலையாமல் இருப்பதற் காகவாவது! அவ்வாறு இவர் கள் வெளியிடுகிற தகவல் களைத் தெரிந்து கொள்ளவும் வேண் டும், அவற்றின் அரசியலைப் புரிந்து கொள்ளவும் வேண்டும்.

1 comment:

ஜீவி said...

உங்கள் நீண்ட கட்டுரை உணர்வு பூர்வமாக இருந்தது.
அதில் சில அறிவு பூர்வமான திருத்தங்கள் இருந்தால்
நன்றாக இருக்கும்.
1. இடம் (Seat) கிடைப்பதற்கு தான் ஒதுக்கீடு இருக்க
வேண்டுமே தவிர, அந்தத் துறை சார்ந்த தேர்வுகளுக்கு
மதிப்பெண் போடுவதில் ஒதுக்கீடு கூடாது. உதாரணமாக,
மருத்துவத்துறை படிப்பென்றால், வெற்றி பெற இத்தனை
மார்க் தேவையென்றால், கறாராக எல்லா மாணவர்களுக்கும்
அதைக் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் மருத்துவம்
என்பது மக்கள் உயிரோடு விளையாடுகிற விளையாட்டு.
இன்னும் சொல்லப்போனால், அரசு மருத்துவமனைகளில்
ஏழை பாழைகள் தாம் 'அட்மிட்' ஆகிறார்கள். அரசு மருத்துவ
மனைகளில் டாக்டர் ஆவதற்கு 'ஒதுக்கீடு' அடிப்படையில் குறைந்த பட்சம் இவ்வளவு மார்க் எடுத்தால் போதும் என்கிற
நிலை கூடாது. இதுபற்றி பெரும்பாலான அரசியல் கட்சித்
தலைவர்களுக்கு அக்கறை கிடையாது. எனென்றால்
(கம்யூனிஸ்ட் கட்சி தவிர) மற்ற கட்சித் தலைவர்களும்
அவர்கள் குடும்பத் தலைவர்களும் வியாதி வந்தால்
'அட்மிட்' ஆவது அப்பல்லோ போன்ற 'க்யாதி' பெற்ற
மருத்துவ மனைகளில் தான்.
இடஒதுக்கீட்டை வசதியாக உபபோகித்துக் கொண்டு
டாக்டர் மகன் டாக்டர் ஆவது என்று அந்த குடும்பமே
'டாக்டர் குடும்ப' மாவது போன்ற சில சாபக்கேடுகளை
அதற்கேற்ற சரியான சட்டங்களைக் கொண்டு வந்து
தடுத்து, சமூகக்தின் சகல மட்டத்திலும் அடிதளத்தில்
இருக்கும் அப்பாவி ஏழை மக்களின் குடும்பங்களில்
இந்த இடஒதுக்கீடு ஒரு மலர்ச்சியை கொண்டு வருமென்றால்
போராடி, பல உயிர்களை பலி கொடுத்து ப் பெற்ற
இந்த இடஒதுக்கீடு ஏற்பாடு உண்மையான வெற்றிபெறும்
என்பது சர்வ நிச்சயம். சமூக பல்வேறு மதிப்பீடுகளிலும்
மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்பதும் உண்மை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் முழு கவனத்தை
மத்திய தர தொழிற்சங்கங்களின் பால் திருப்பி விட்டு விட்டபடியால்
அந்த மட்ட சிந்தனை கொண்டவர்களே, கட்சியின் பல்வேறு
மட்டங்களில் தலைவர்களாகும் சூழ் நிலைகளும் ஏற்பட்டு
விட்டபடியால்,  மார்க்ஸின் உண்மையான புரட்டிப்போடும்
சமூக மாற்றம் ஏற்படுவது கனவாகவே இருக்கிறது.