Sunday 12 August 2007

குறும்படக் களம்


ஏழுமலை ஜமா


பன்முகப் படைப்பாளிகளை ஒரே இடத்திற்கு வரவழைத்து விவா திக்கவிடுவது, உரையரங்க நிகழ்ச்சிகளைக் கூட கலை எழிலுடன் நடத்துவது, தமிழகத்துக்கே ஒரு கலைக்கொடையாக கலை-இலக் கிய இரவு எனும் நிகழ்வடிவத்தை அறிமுகப் படுத்தியது... இப்படியாகப் பல முதல் பெருமைகள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருவண்ணாமலை கிளைக்கு உண்டு. அந்தச் சலங்கையின் மற்று மொரு மணியாக இப்போது இந்தக் குறும்படத்தைப் படைத்தளித் திருக்கிறார்கள்.


தமுஎச முகாமிலிருந்து வந்த முதல் குறும்படம் அல்ல என்றாலும், கதை சார்ந்த ஒரு படத்தை அதிக பட்ச கலை நேர்த்தி யோடு உருவாக்கியிருப்பதில் முதன்மையான படைப்பாக வந்திருக் கிறது `ஏழுமலை ஜமா'.


திருவண்ணாமலை மாவட்டத்தின் கோணலூர் கிராமத்தில் "வேஷங்கட்டிக் கொண்டு," தெருக்கூத்து நடத்துவதே தனது வாழ் வாக ஏற்றுக் கொண்டவர் வாத்தியார் ஏழுமலை. கிராமக் கோவில் களின் திருவிழாக்களில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க, அவரது குழு சுறுசுறுப்பாக ஒவ்வொரு ஊராய்ச் செல்கிறது. அவரது மகிழ்ச்சி கரமான அன்றைய வாழ்வுக்கு சாட்சியமாக, ஒரு ஊரில் கூத்து முடிந்து திரும்பி வரும்போது தனது ஆசை நாயகி வீட்டிற்குச் சென்று வருவ தாகவும், ஊர் திரும்பிய பின்னர் தன் மனைவியிடம் அதே பிரியத் தோடு நெருங்குவதாகவும் காட்டியிருப்பதில் ஒரு நடப்பியல் சித்தரிப் புடன் கூடிய விமர்சனம் இருக்கிறது.


மண்ணின் கலைஞர்களது கூத்தில் மண்ணள்ளிப் போட வரு கிறது திரைப்படம். கிராமக் கோவில் விழாக்களில் கூத்தின் இடத்தை வீடியோ படங்களும் திரையிசை நடனங்களும் பிடித்துக்கொள்ள இவர்கள் இடமற்றுப் போகிறார்கள். "மரியாதை தெரியாத பசங்க" என்பதைத்தவிர வேறெதுவும் சொல்லத் தெரியாதவராகப் புலம்புகிற ஏழுமலை, வேறு வழியின்றி பிழைப்புக்காக பெங்களூர் சென்று அங்கே காய்கறிச் சந்தையில் கூலித் தொழிலாளியாக மூட்டை தூக்குகிறார். கிரீடம் அணிந்த துரியோதனனின் தலை தக்காளி மூட்டை சுமக் கிறது. சலங்கையணிந்து கூத்துக் களத்தில் சுழன்றாடிய கால்கள் சந்தைக்குள் கடைகடையாகச் சுற்றி வருகின்றன. மகாராஜாவாக ஏவலர்களுக்கும் வாத்தியாராக சக கலைஞர்களுக்கும் ஆணையிட்ட வாய் இப்போது, கடை முதலாளி "டேய் அந்த மூட்டையைத் தூக் கிட்டுப் போடா" என்று என்று ஆணையிட "சரிங்க அண்ணே" என்று பணிந்து அடங்குகிறது. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வை நாடு எப்படி வீசியெறிந்துவிட்டிருக்கிறது என்பதை இதை விட அழுத்தமாகச் சொல்ல வேறொரு படைப்புதான் வர வேண்டும்.


கூத்தின் அருமையை உணரமுடியாதவர்களாக பெங்களூர் சந்தையில் தொழிலாளிகளே அவமதிக் கிறார்கள். அதனால் ஊர்திரும்பும் ஏழு மலையை உண்மை நிலைமைகளின் கடும் வெப்பம் தான் வரவேற்கிறது. குடும்பத்தைக் காக்க ஏதாவது செய்யக்கூடாதா என மனைவி வள்ளி ஏக்கமாகப் பார்க்கிறாள். கூத்து கூத்துன்னு அலையாம ஏதாவது வேலை வெட்டியைப் பார் என்று ஊரார் கூறுகிறார்கள். கரும்பு வெட்டப் போக லாமா அல்லது கல்லுடைக்கப் போகலாமா என்று குழுவின் மற்ற கலைஞர்கள் கேட்கிறார்கள். "மறுபடியும் கூத்து நடத்துவோமான்னு யாராச்சும் கேட் டீங்களாடா," என்று உடைந்து போய்க் கேட்கிற ஏழுமலையின் குரலில் எதிரொலிப்பது கலை வாழ்வு பறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கலைஞர்களின் ஆதங்கமும் ஆத்திரமும்.


இத்தகையவர்களுக்கு வலி மறக்க உதவும் மருந்தாக எப்போதும் வருவது சாராயம்தான். அதில் மூழ்கிப் போய் போதையோடு வரும் ஏழுமலை, ஊர்க்கோடியில் ஒரு மரத்தடியில் கூடியிருக்கும் சில இளை ஞர்கள் தாளம் தட்டி தப்பாக அடவு வைத்து ஆடுவதைப் பார்த்து வாத்தி யாராக மாறி அவர்கள் முன்பாகக் குதித்து சரியாக ஆடிக்காட்டி விழு கிற காட்சி, இத்தகைய முடிவுகளுக்கு முடிவு கட்ட என்ன செய்யப் போகி றீர்கள் என்று பார்வையாளர்களின் மனசாட்சியைத் தட்டிக் கேட்டு எழு கிறது. ஒரு வாழ்க்கையை எப்படிக் கதையாக வடிப்பது எனக் காட்டி யிருக்கிறார் பவா செல்லதுரை.


ஒரு மணி நேரத்தில் முடிந்து விடுவதால் இது குறும்படம் - மற்றபடி சுரே ஒளிப்பதிவு, பீ. லெனின் படத்தொகுப்பு, புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்தினரின் பின்னணி இசை, குமார் அம்பாயிரம் கலை நுட்பங்கள் என எல்லாவற்றிலும் பெரிய திரைப் படங்களுக்கு சவால் விடுகிறது. மாற்று சினிமா என்பதற்கு ஒரு முன்னு தாரணமாகிறது.


பாஞ்சாலி சபதம் தெருக்கூத்து அக்கலைஞர்கள் அப்படியே நடித்துக் காட்ட அருமையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துரியோதனன் தன்னைப் பற்றியும் தனது நூறு சகோதரர்கள் பற்றியும் பார்வையாளர் களுக்கு அறிமுகப் படுத்திக்கொள்கிறான். கூத்துக்கேயுரிய தனிச்சிறப் புப் பாத்திரமாகிய பபூன், "ஆமா மகாராஜா, நீங்க நூத்தியோரு அண்ணன் தம்பிங்களும் ஒரே ஆத்தாளுக்கா பொறந்தீங்க," என்று கேட்டு, துரியோதனன் துரத்த ஓடுவதும், பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரிப்பதும் எவ்வளவு எளிமையான, இயல்பான கலைஞர்கள் இவர்கள் என்பதை உணர்த்துகிறது.


துச்சாதனன் துகிலுரிக்க திரௌ பதிக்கு கண்ணன் கரத்திலிருந்து சேலை வருவதை இவர்கள் நடத்திக் காட்டுகிற உத்தியும் அப்படித்தான். இன்று இந்தக் கலையே துகிலுரியப் படுகிறதே, காப்பதற்கு எந்தக் கண்ணன் வருவான்?கதையின் கருத்து மட்டுமல்ல - கலை வெளிப்பாட்டிலும், படம் மேலும் அழகு பெறுகிறது. மாட்டு வண்டியில் கட்டித் தொங்கவிடப்பட்ட மிருதங்கம், எல்லாக் கலைஞர்களுமாக சுற்றியமர்ந்து எதிர்காலம் பற்றிப் பேசிக் கொண்டிருக்க வாத்தியாரின் கையில் சுழலும் காய்ந்த இலை, கல் உடைக்கும் - கைவண்டி இழுக்கும் மகாராஜா, வயல் வரப்பில் ராஜ ஒப்பனையோடு நடந்து செல்லும் நடிகர்கள், காடெங்கும் எதிரொலிக்கும் ஓலச்சிரிப்பு, பார்த்துக் கொண்டிருக்கும் காவல் தெய்வங்கள்... அப்பப்பா எத்தனை படிமங்கள்!


மண்ணின் கலைஞர்களது புழுதி படிந்த கால்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ள இப்படத்தின் அறிமுகத்தில் வேஷங்கட்டிய வர்கள், வாத்ய கோஷ்டி என அவர்களது சொற்களே பயன்படுத்தப்பட்டிருப்பது இன்னும் நெருக்கமாக்குகிறது. வாத்தியார் ஏழுமலையாக வாத்தியார் புரிசை சம்பந்தன் உள்ளிட்ட கூத்துக் கலைஞர்களோடு தமுஎச கலைஞர் கள் வ. ராமு, கி. அன்பரசன், உமா மற்றும் சந்திரா போன் றோரும் நடித்துள்ளனர். உண்மையைச் சொல்வதானால் அவர்கள் நடிக்கவில்லை, குறும்படத்திரையில் ஒரு வாழ்க்கையை உயிர்ப்பித்திருக்கிறார்கள்.


கூத்துக் கலையின் நசிவைக் கூறும் படத்தில் கூத்துக் கலைஞர்களே நடித்திருப்பதைப் பாராட்டுவதா? அல்லது, தங்களது அவலம் குறித்து தாங்களே நடித்துக் காட்டும் நிலை இக்கலைஞர்களுக்கு வந்திருப்பதை எண்ணி விசனப்படுவதா? மண்ணின் மக்களுக்குப் புதி தாக எந்த நன்மையையும் வழங்காமல், ஏற்கெனவே இருந்து வந்ததையும் பறித்துக் கொண்ட சுரண்டல் அமைப்பின் மீதான சினம் கொள்ள வைக்கும் பெரிய காரியத்தைச் செய்கிறது இக்குறும்படம். அதே நேரத்தில் மாற்றமின்றி ஒரே மாதிரியாகத் தொடர்கிற கதை, கருத்து, நடிப்பு போன்றவற்றில் இக்கலைஞர்களும் புதுமைகளைக் கைவசப்படுத்த வேண்டாமா? இப்படி யொரு விவாதத்தையும் துவக்கி வைக்கிற இந்தப் படைப்புக்குத் திரைக்கதை, உரையாடல் எழுதி, இயக்கி ஒவ்வொரு சட்டத்திலும் தன் உழைப்பைப் பதித்திருப் பவர் எஸ். கருணா.


குறும்படக் களத்தில் பல பரிசுகளை வெல்லப் போகிற இப்படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. மண்ணின் கலைகள் மீதும் கலைஞர் கள் மீதும் மக்கள் திரைப்பட இயக்கத்திற்கு உள்ள உண்மையான அக்கறைதான் அது.


-அசாக்

No comments: