Sunday 4 November 2007

கவிதை

முணகலல்ல முழக்கம்

வீணாகக் கூச்சல் போடுகிறீர்கள்
நாங்கள் நாங்களாக
எங்களின் தர்மப்படி
நடந்துகொள்கிறோம்
நீங்கள் நீங்களாக
உங்களின் தர்மப்படி
நடந்துகொள்ளத் தவறுவதால்.

உங்களின் தர்மம்
நாங்கள் அசுத்தமாகாதிருக்க
ஊர் கூட்டுவது;
நீங்களோ
நாங்கள் ஆதிக்கமாகாதிருக்க
ஊரையே கூட்டினீர்கள்.
அதர்மமில்லையா இது?

ஆதியற்ற எங்களின் வேதத்திற்கு
அந்தம் வைக்க நீங்கள் முயலும்போது
வேதாந்திகளை அனுப்புகிறோம்.
மறுபடியும் மறுபடியும் நாங்கள்
போதித்து வருகிறோம்;
மறுபடியும் மறுபடியும் நீங்கள்
போதனையை மீறி வருகிறீர்கள்.

அன்று உம் பாட்டனின்
கட்டை விரலைக் கேட்டு வாங்கினோம்
அப்புறம் உம் பூட்டனின்
கண்ணைப் பறித்துத் தர வைத்தோம்
இடையில் தில்லையில் உம் மாமனின்
உடலையே ஜோதியில் எரியச் செய்தோம்...

முணகல் என்ன அங்கே?
முணகல் அல்ல
முழக்கம் என்றா சொல்கிறீர்கள்?
மந்திரங்கள் மட்டுமே
கேட்கும் எம் செவிகளில்
முழக்கங்கள் நுழைவதில்லை.
நடப்பதெல்லாம் நன்றாகவே
நடப்பதாகச் சொன்ன
வரிகளை மட்டும் பார்த்துவிட்டு
பரவசத்தில் முழ்கிக் கிடந்தீர்கள்.
வரம்பு மீறுவோர்க்குத்
தண்டனை என்னவென்று
சொல்லிவைத்த பக்கங்களை
படிக்காமல் விட்டது உங்கள் தப்பு.
எங்கே அதையெல்லாம் படிக்கவிட்டீர்கள்
என்று மறுபடி முழங்குகிறீர்கள்.
படித்தால் உமக்குப் புரியாதென்றுதான்
செயல் முறை விளக்கமாக

கட்டை விரலை
கேட்டு வாங்கினோம்
கண்ணைப் பறித்து
அப்ப வைத்தோம்
உடலை ஜோதியில்
கலக்க விட்டோம்
இன்னும் நீங்கள்
பேசுவீர்கள் என்றால்
நாக்கும் தலையும்
கேட்க மாட்டோமா?

மறுபடியும் என்ன முணகல்...
சரி சரி மறுபடியும் என்ன முழக்கம்?

“ஏகலைவன் வாரிசுகள்
ஏகலைவனைப் போல் இருப்போம்
ஏகலைவனாகவே இருக்க மாட்டோம்
கண்ணப்பன் வாரிசுகள்
கண்ணப்பனைப் போல் இருப்போம்
கண்ணப்பனாகவே இருக்கமாட்டோம்
நந்தன் வாரிசுகள்
நந்தனைப் போல் இருப்போம்
நந்தனாகவே இருக்கமாட்டோம்...”

புரிகிறது... மெய்யான
பாரத யுத்தத்திற்கு
படை திரட்டத்
தயாராகிவிட்டீர்கள் நீங்கள்.
பகவத் கீதைக்கு
பதவுரை சொல்ல
பார்த்தசாரதியைத்
தேடுகிறோம் நாங்கள்.

-அ. குமரேசன்

No comments: