Monday 20 December 2010

அந்த கமிசனை இந்த ‘கமிசனை’ இந்த கமிசன் என்ன செய்யும்


“என்னப்பா இது, ஜேபிசி (கூட்டு நாடாளுமன்றக் குழு) விசாரணை தேவையில்லைன்னு கவர்மென்டு தெளிவா சொல்லியிடுச்சுல்ல. அப்புறமும் ஏன் இந்த எதிர்க்கட்சிக்காரங்க விடாம அதுதான் வேணும்னு உடும்புப்பிடியா நிக்கிறாங்க?”

“ஜேபிசி வைக்க வழியிருந்தாத்தான் கவர்மென்டே அதை வைச்சிருக்கும்ல... ஆனாலும் எதிர்க்கட்சிகளோட கோரிக்கையிலயும் நியாயம் இருக்குதுங்கிறதை ஏத்துக்கிட்டு நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமியில ஒரு நபர் விசாரணைக் கமிசன் அமைச்சிருக்காங்க. அதைப் புரிஞ்சுக்கிட்டு ஒத்துழைக்க மாட்டேங்கிறாங்களே...”

“இருபத்துநாலு நாள் பார்லிமென்ட்டை முடக்கினதாலே ஜனங்களுக்கு என்ன லாபம்? இந்த லட்சணத்திலே அடுத்த பட்ஜெட் கூட்டத்திலேயும் கூட இதே பிரச்சனையை எழுப்பப்போறாங்களாம்.”

“சுப்ரீம் கோர்ட்டே இப்ப சிபிஐ விசாரணையை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கிடுச்சு. இப்படி சுப்ரீம் கோர்ட்டு ஒரு பக்கம், சிபிஐ ரெய்டு ஒரு பக்கம், போதாததுக்கு சிவராஜ் பாட்டீல் கமிசன் விசாரணை... இதுக்கு மேல என்ன வேணும்கிறாங்க? எல்லாம் பாலிடிக்ஸ்சுக்காகத்தான்...”

தொலைத்தொடர்புத் துறையில் இரண்டாம் அலைக்கற்றை ஊழல் விவகாரம் தொடர்பாக இப்படியொரு விவாதம் ஆங்காங்கே கிளப்பிவிடப்படுகிறது. மத்தியில் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது கவலையளிக்கிறது என்று பேட்டியளிக்கிறவர்களும், தமிழகத்தில் இதை ஒரு சாதிப்பிரச்சனையாகத் திசை திருப்ப முயன்றவர்களும் மக்களிடையே இப்படிப்பட்ட ஒரு கருத்தைப் பரப்ப முயல்கிறார்கள். ஆனால், அரசியல் விவகாரங்களை நுனிப்புல் மேய்கிறவர்கள் வேண்டுமானால் இது நியாயம்தான் என்பது போல் மவுனமாக இருக்கலாம். ஆழ்ந்த அக்கறையோடு அணுகுகிறவர்கள் அப்படி இருக்க முடியாது. உண்மையிலேயே உச்சநீதிமன்றத் தலையீடும், சிபிஐ புலனாய்வும், ஒற்றை நீதிபதி ஆணைய விசாரணையும் போதுமென விட்டுவிட முடியுமா?

நீதிமன்ற விசாரணைக்கு கால வரம்பு எதுவும் கிடையாது. குறிப்பாக இந்தியாவில் எவ்வளவுக்கெவ்வளவு ஒரு பிரச்சனை மக்களை பாதிப்பதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நீதிமன்றத்தில் அது இழுத்தடிக்கப்பட்டுவிடும் என்பதே நம் அனுபவம்.

மத்திய புலானாய்வு நிறுவனத்தைப் (சிபிஐ) பொறுத்தவரையில் சில ரெய்டு பரபரப்புகளை ஏற்படுத்த முடியும், முக்கியமான ஆவணங்கள் சிக்கியிருப்பதாகக் கூறி எதிர்பார்ப்புகளைத் தூண்ட முடியும். மற்றபடி அதிகாரிகள் மட்டத்திலானவர்களன்றி அமைச்சக மட்டத்திலானவர்களிடம் விசாரிக்க முடியாது. அதற்கு பிரதமரின் ஒப்புதல் தேவை. இந்த விவகாரத்திலோ, பிரதமர் அலுவலகமே விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. நீ என்னைப் போட்டுக் கொடுத்தால் நான் உன்னைப் போட்டுக் கொடுப்பேன் என்கிற நாகரிகமான அரசியல் பேரத்தில் எந்த அளவுக்கு அப்படிப்பட்ட விசாரணைகளுக்கு பிரதமரின் ஒப்புதல் கிடைக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. அதே போல் எல்லா ஆவணங்களையும் சிபிஐ எளிதில் பார்வையிட்டுவிட முடியாது. அரசின் கட்டுப்பாடு இல்லாமல் சிபிஐ சுதந்திரமாகச் செயல்படுவதற்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு இதுவரை காதில் போட்டுக்கொண்டதே இல்லை.

நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலையிலான ஆணையம் இதிலே எந்த அளவுக்குச் செல்ல முடியும்? இதோ அவரே சொல்கிறார்: “என்னுடைய வேலை இதுதான்... 1999ம் ஆண்டில் புதிய தொலைத் தொடர்புக் கொள்கை உருவானதற்கும், அதைத் தொடர்ந்து 2001ம் ஆண்டில் நான்காவது கைப்பேசி சேவை (சிஎம்டிஎஸ்) உரிமம் கொண்டுவரப்பட்டதற்கும் இட்டுச் செல்லும் வகையில், தொலைத் தொடர்புத் துறையில் ஏற்பட்ட சூழல்களையும், நிகழ்ச்சிப்போக்குகளையும் ஆராய்வதற்காக தொலைத் தொடர்புத் துறையால் பராமரிக்கப்படும் ஆவணங்களைப் படித்துப்பார்ப்பதே என் வேலை.”

இதன் பொருள் என்ன என்பது தெளிவானது. அதாவது, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக அவர் எதுவும் விசாரிக்க மாட்டார் என்பதே இதன் பொருள். இரண்டு வாரங்களுக்கு முன் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் இந்த ஆணையம் அமைக்கப்பட்டதை அறிவித்தார். அதைத் தொடர்ந்து தனது பணிகளைத் தொடங்கிய நீதிபதி பாட்டீலிடம் இதை நேரடியாகவே செய்தியாளர்கள் கேட்டார்கள். இந்த ஊழலின் நாயகர் என குற்றம் சாட்டப்படும் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவை விசாரிப்பீர்களா, என்று அவர்கள் கேட்க, அதற்கு அவர் அளித்த பதில், “இல்லை.”

இந்தக் குறிப்பிட்ட துறை சார்ந்த அதிகாரிகளை மட்டும் அழைத்து அவர்களது உதவியைப் பெற்றுக்கொள்வாராம். மற்றபடி சிபிஐ விசாரிக்கிற விவகாரங்களையோ, உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிற பிரச்சனைகளையோ அவர் கையாளப் போவதில்லை. நாட்டிற்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதை அதிகாரப்பூர்வமாகவே வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலக அதிகாரிகளைக்கூட இந்த ஆணையம் விசாரிக்காது. “2001-2009 காலகட்டத்தில் உரிமங்கள் வழங்குவதிலும் இதே கால கட்டத்தில் அலைக்கற்றை ஒதுக்கீடுகள் அளிப்பதிலும் தொலைத்தொடர்புத் துறை கடைப்பிடித்த உள் நடைமுறைகளை ஆய்வு செய்வதோடு என்னுடைய விசாரணை எல்லை முடிந்துவிடுகிறது,” என்றும் பாட்டீல் கூறியுள்ளார்.

விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்பதை இந்த ஆணையம் ஆராயுமாம். ஆனால் விதிகளை மீறி, முன்னாள் அமைச்சர் தயவில் இதிலே ஆதாயம் அடைந்த தனியார் நிறுவனங்களை இந்த ஆணையத்தால் எதுவும் செய்துவிட முடியாது. இந்நாள் அமைச்சர் கபில் சிபல் இதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். அந்த நிறுவனங்களுக்கு இந்த ஆணையம் விளக்கம் கோரும் கடிதங்கள் அனுப்புமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கும் ஆணையத்திற்கும் சம்பந்தமில்லை என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர்.

ஆக, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய கறையாகப் படிந்துவிட்ட இந்த மாபெரும் ஊழல் அத்தியாயத்தில், ஆணையத்தின் வேலை ஒரு மேம்போக்கான துறைவாரி விசாரணை நடவடிக்கை போன்றதுதான். முக்கியப் பிரச்சனைகள் எதற்குள்ளேயும் செல்வதற்கு அதிகாரம் அளிக்கப்படாத இந்த ஆணையத்தின் கண்டுபிடிப்புகளும், சிபிஐ முடிவுகளும் எதற்குத்தான் பயன்படும்? ஒரு பிளாக்மெயில் அரசியல் பேரத்திற்குப் பயன்படுமேயன்றி, மக்களுக்கு வந்து சேர வேண்டிய நிதி வெள்ளம் வேறு வாய்க்கால்களுக்குத் திருப்பிவிடப்பட்டதைத் தடுக்கவோ, மீட்கவோ உதவப்போவதில்லை.

பிரதமர் உட்பட யாரையும் விசாரணைக்கு வந்து பதிலளிக்குமாறு அழைக்கவும், எந்த ஆவணத்தையும் ஒப்படைக்குமாறு ஆணையிடவும் அதிகாரம் கொண்டது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இடம்பெறும் நாடாளுமன்ற நாடாளுமன்றக் குழு. மக்களின் வறுமை, பிணி, கல்வியின்மை என பல்வேறு அவலங்களை மாற்றும் நோக்கங்களுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நிதி வழிப்பறியானது குறித்து இந்தக் குழுவின் விசாரணை தேவை என்பதே மீண்டும் மீண்டும் தெளிவாகப் புலப்படுகிறது.

No comments: