Saturday 8 May 2010

தீர்ப்பு

பயங்கரவாதிகளுக்கு இது
“பாடம்” தருமா?

மும்பை 26/11 தாக்குதல் தொடர்பாகப் பிடிபட்ட கசாப்புக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்திருப்பதை சிலர் பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் என்றும், சிலர் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் என்றும் சொல்லி கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தீர்ப்பு இந்திய அரசமைப்பு சாசனப்படி சரியானதாக இருக்கலாம். மும்பை தாக்குதல் மானுடப் பண்பாட்டைத் தலைகுனிய வைக்கிற, ஈவிரக்கமற்ற கொடுமை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், தவறாக வழிகாட்டப்பட்டு, பெரிய லட்சியத்திற்காகப் போராடுவதாக நினைத்துக்கொண்டு, தன் உயிரையே அதற்காக இழக்க நேரிட்டாலும் அது தனக்குப் பெருமைதான் என்பதான மயக்கத்தோடும் மனப்பூர்வ ஈடுபாட்டோடும்தான் ஒரு பயங்கரவாதியின் பிறப்பு நிகழ்கிறது. ஆகவே இப்படிப்பட்ட தண்டனைகளால் பயங்கரவாதிகள் பாடம் கற்பார்கள் என்பது இன்னொரு விதமான பழிவாங்கும் மயக்கமே.

பாகிஸ்தானுக்குப் பாடம் என்று ஏதோ இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் அரசாங்கம்தான் திட்டமிட்டு நடத்தியது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது போல் கூறுவது, பாகிஸ்தான் எதிர்ப்பு உணர்வை விதைத்து, அதை முஸ்லிம் எதிர்ப்பு உணர்வாக வளர்க்கிற உள்நோக்கத்துடன்தான். இங்கே, பரந்த சிந்தனைகள் வளர்வதைத் தடுத்து மதவெறியோடு குஜராத் கொலைகாரர்கள் போல புதிய கும்பல்களைத் தயாரிக்க இந்தத் தீர்ப்பை ஒற்றை மதஆதிக்கவாதிகள் பயன்படுத்துவார்கள்.

இதே போல் அங்கேயும் இந்திய எதிர்ப்பு உணர்வையும், அதன் பேரில் இந்து மக்களுக்கு எதிரான உணர்வையும் வளர்க்க முயலும் சக்திகள் தங்களுடைய தொடர் சதிகளுக்கு ஒரு தூண்டுதலாகவே இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்திக்கொள்வார்கள். அங்கே பரந்த சிந்தனைச் சூழல்களோ வேலை வாய்ப்புகளோ இல்லாத புதிய புதிய கசாப்புகளைத் தயாரிப்பதற்கு இது அவர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்திய அரசின் அமெரிக்க மயக்கக் கொள்கைகளும், காஷ்மீர் பிரச்சனையில் மனந்திறந்த பேச்சுக்குத் தயாராக இல்லாத பம்மாத்துகளும் இப்படிப்பட்ட தாக்குதல்கள் தொடரவே இட்டுச்செல்லும்.

இரு தரப்பு மதவெறியர்களும் இப்படி ரத்தப்பசியோடு ஆர்ப்பரித்துக்கொண்டே இருப்பார்கள். மக்கள் பலியாவார்கள். இரு நாட்டு மக்களுக்கும் உண்மை நிலைமைகள் புரிந்துவிடக்கூடாது என்று நினைக்கும் உலகச் சுரண்டல் கும்பல்கள் இப்படிப்பட்ட மோதல்களால் மக்களின் கோபம் திசைதிருப்பப்படுவதில் கும்மாளம்பேட்டுக்கொண்டிருக்கும்.


4 comments:

vimalavidya said...

you said rightly in different aspects of sociology.Mere over acting will create enmity between two countries..we have to grow affection between the two countries people.

vimalavidya said...

you said rightly in different aspects of sociology.Mere over acting will create enmity between two countries..we have to grow affection between the two countries people.

Unknown said...

பயங்கரவாதம் நடப்பதற்கு என்ன காரணம் என்று சிந்தித்து அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். பயங்கரவாத செயலுக்கு தண்டனை என்பது அவர்கள் மொழியில் வீரமரணம். நாம் தேற்ந்தெடுத்து வந்த பாதை தவறானது என்று நினைக்க வைக்க வேண்டும் அதுவே சரியான தீர்ப்பாகும்.

Anonymous said...

பயங்கரவாதம் நடப்பதற்கு என்ன காரணம் என்று சிந்தித்து அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். பயங்கரவாத செயலுக்கு தண்டனை என்பது அவர்கள் மொழியில் வீரமரணம். நாம் தேற்ந்தெடுத்து வந்த பாதை தவறானது என்று நினைக்க வைக்க வேண்டும் அதுவே சரியான தீர்ப்பாகும்.