Wednesday 20 October 2010

இந்தியாவின் பெருமை? எங்குமில்லாச் சிறுமை!


(கம்யூனிசம் என்றால் - 12)


ந்தியக் கண்டத்திற்குள் நுழைந்த ஆரிய இனத்தவர்களின் வாரிசுகளாக வந்தவர்கள் நிலங்களையும் வளங்களையும் வளைத்துப்போட்டார்கள். அப்படி வளைத்துப்போட முடியாத இடங்களில், ஏற்கெனவே அவற்றைக் கைப்பற்றி மக்களை ஆண்டுகொண்டிருந்த மன்னர்களோடு சமரசம் செய்துகொண்டார்கள். அந்த மன்னர்களுக்கும் தங்களது ஆட்சியை நிர்வகிப்பதற்கு கல்வியறிவுள்ள வழிகாட்டிகள் தேவைப்பட்டது. அந்த வழிகாட்டிகளாகத் தங்களை முன்னிறுத்திக்கொண்டார்கள் ஆரிய வாரிசுகள்.

சமுதாயத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோர் தாங்கள தயாரித்த பொருள்களைக் கொண்டுசென்று மற்றவர்களுக்கு விற்பது, அவர்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்வது என்ற நடைமுறையும் வளர்ந்தது. எடுத்துக்காட்டாக, சமையலுக்குத் தேவையான பானைகளைத் தயாரிப்பார் குயவர். ஆடைகள் தயாரிப்பார் நெசவாளி. அவருக்கு ஆடைகள் தேவை; இவருக்குப் பாத்திரங்கள் தேவை. இருவரும் அவரவரிடம் கூடுதலாக இருக்கிற பொருள்களைக் கொடுத்து மாற்றிக்கொள்வார்கள். இப்படியாகத் தொடங்கிய பண்டமாற்று முறை பிற்காலத்தில் திட்டமிட்ட வணிக நடைமுறையாக மாறியது. பொருள்களையே கொடுத்து வாங்கிவதற்கு பதிலாக, பொருள்களின் மதிப்பில் பணம் என்பது உருவானது.

பானை செய்கிறவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் தொடர்ந்து பானையே செய்துகொண்டிருந்தார்கள். துணி நெய்கிறவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் தொடர்ந்து அதையே செய்துகொண்டிருந்தார்கள். இவர்கள் அல்லாத மற்ற பிரிவினர் தொடர்ந்து வயல்களிலும் பட்டறைகளிலும் கட்டடங்கள் என பல்வேறு பணிகளில் உழைத்துக்கொண்டிருந்தார்கள். ஊரையும் வீடுகளையும் தூய்மைப் படுத்துகிற பணிக்கு என ஒதுக்கப்பட்டவர்கள் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டார்கள்.

இப்படியான ஏற்பாட்டில் சமுதாயம் அமைதியாக இருந்தபோது, நிச்சயமாக சிலர் அவர்கள் வசதியாக வாழ்கிறபோது நாம் மட்டும் ஏன் இப்படி அவர்களுக்காக உழைத்துக்கொண்டிருக்க வேண்டும்? உழைத்துக் கொடுக்கிற நாம் ஏன் ஊருக்கு வெளியே இருக்க வேண்டும், என்றெல்லாம் கேள்வி கேட்கத் தொடங்கியிருப்பார்கள்தானே? அய்ய்யோ! அவர்கள் அப்படிக் கேள்வி கேட்டால் அது ஆபத்தாயிற்றே!

அப்படிக் கேள்வி கேட்க இயலாதவர்களாக மக்களை மாற்றுகிற மிகப்பெரிய சமுதாய மோசடி இங்கேதான் தொடங்குகிறது. படை பலத்தோடு இருக்கிற அரச குடும்பத்தினர் தொடர்ந்து ஆட்சியாளர்களாகவே இருப்பது, அவர்களுக்கு ஆலோசனை கூறுகிற குருமார்களாகத் தங்களை வைத்துக்கொண்டு மறைமுகமாக ஆள்வது, மற்ற பிரிவினர் அவரவர் வேலைகளைச் செய்வது என்கிற ஒரு சமுதாய ஏற்பாடு உருவாக்கப்படுகிறது. அந்த ஏற்பாட்டில், ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு சமூகமும் எப்படியெப்படி இருக்க வேண்டும் என வரையறுக்கப்படுகிறது. இதைத் தீர்மானித்தது மனிதர்கள் அல்ல, எல்லா உயிர்களையும் படைத்த ஆண்டவன்தான் என்ற தத்துவம் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.

உலகைப் படைத்த ஆண்டவனாகிய பிரம்மனின் தலையிலிருந்து பிறந்தவன் - குருமார் குலத்தவனாகிய பிராமணன்; தோளிலிருந்து பிறந்தவன் - அரசகுலத்தவனாகிய சத்திரியன்; இடுப்பிலிருந்து பிறந்தவன் - மற்ற தொழில்களைச் செய்கிற வைசியன்; காலிலிருந்து பிறந்தவன் - இவர்களுக்கெல்லாம் கட்டுப்பட்டு உழைத்துக்கொண்டிருக்க வேண்டிய சூத்திரன் என்பதாக அந்தத் தத்துவம் உருவாக்கப்படுகிறது.

அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை விட மேலான நிலையில் பிராமணன் வைக்கப்பட்டாலும் கூட தங்களது அதிகாரத்துக்குப் பங்கம் இல்லை என்பதால் இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டார்கள். வைசியர்களாகிய பிற தொழில் சமூகங்களைச் சேர்ந்தோரும் தங்களுக்கு மேலே சத்திரியனும் பிராமணனும் இருந்தால் கூட, தங்களுக்குக் கீழே சூத்திரன் இருப்பான் என்பதால் இதை அங்கீகரித்தார்கள். காட்டில் அலைந்துகொண்டிருப்பதை விட அரண்மனையில் சேவகர்களாகவோ, வயலில் உழுகிறவர்களாகவோ, மற்ற வேலைகளைச் செய்கிறவர்களாகவோ இருந்து வாழ்க்கைக்கு வழி செய்துகொள்ளலாம் என்று எண்ணி சூத்திர சமூகங்களைச் சேர்ந்தவர்களும் இதை ஒப்புக்கொண்டார்கள்.

கீழே தள்ளப்பட்ட சமூகங்களுக்கிடையே, அந்த சாதியை விட நம்ம சாதி உயர்ந்தது என்ற எண்ணப்போக்குகள் ஏற்படுத்தப்பட்டு, அதிலே திருப்தி அடைந்தார்கள். இன்று கூட, அலுவலகத்தில் வேலை செய்கிற ஒரு எழுத்தர் தனக்கு மேலே தலைமை எழுத்தாளர், மேலாளர் என்றெல்லாம் இருந்தாலும் தனக்குக் கீழே உதவியாளர், துப்புரவாளர் என்றெல்லாம் இருப்பதில் திருப்தி அடைவது போன்ற ஏற்பாடு இது.

இப்படி நான்கு பெரிய பிரிவுகளாக சமுதாயம் பிரிக்கப்பட்ட ஏற்பாட்டிற்குப் பெயர்தான் வர்ணாசிரமம். அதை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பணிய வைக்க இரண்டு வழிமுறைகள் கையாளப்பட்டன. ஒன்று, இதுதான் சட்டம், மரியாதையாக இதற்குக் கட்டுப்பட்டு இருங்கள் என்று மக்களுக்கு ஆணையிடுகிற அரசியல் வழிமுறை. இன்னொன்று, அப்படி மனிதர்களின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட மாட்டேன் என்று அடம்பிடிப்போரைப் பணியவைக்க, இவையெல்லாம் கடவுளால் தீர்மானிக்கப்பட்ட ஒழுக்கங்கள் என்று மூளைச் சலவை செய்கிற ஆன்மீக வழிமுறை.

அரசியல் வழிமுறையை திட்டவட்டமாகத் தொகுத்துக்கொடுத்த ஆவணங்களில் முக்கியமானது அர்த்தசாஸ்திரம் என்ற அக்காலத்து அரசமைப்பு சாசனம். ஆன்மீக மூளைச்சலவையை வெற்றிகரமாகச் செய்த ஆவணங்களில் முக்கியமானது பகவத் கீதை என்ற தத்துவ நூல்.

அந்தக் கால கல்வியறிவுக்கு அடையாளமாகிய வேத நூல்களை பிராமணன் மட்டும்தான் படிக்க வேண்டும் மற்ற வர்ணத்தவர்கள் படிக்கக்கூடாது என்ற விதிகள் எழுதப்பட்டன. தன் சாதிக்கான கடமைகளைச் செய்யத்தவறுகிறவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. தன் சாதியோடு நிற்காமல் அடுத்த சாதியோடு கலக்க முயல்கிறவர்களுக்கோ கொடூரமான தண்டனைகள் அளிக்கப்பட்டன. இந்தப் பிறவியில் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை ஒழுக்கத்தோடு செய்கிறவர்கள் அடுத்த பிறவியில் மேலான நிலையை அடைவார்கள் என்பதாகவும் ஒரு நம்பிக்கை வலை விரிக்கப்பட்டது.

இப்படி அரசியல் அதிகாரம், ஆன்மீக அரிதாரம் இரண்டுமாகச் சேர்ந்துதான் இந்த சாதிக்கட்டுமானத்தை நியாயப்படுத்தி மக்கள் ஏற்கும்படி செய்தன. தலைமுறை தலைமுறையாக இந்தப் பாடம் போதிக்கப்பட்டது. இப்படி வாழ்வதே பண்பாடு, கலாச்சாரம் என்பதாக போதை ஏற்றப்பட்டது. அந்தக் காலத்திலிருந்தே, பிராமணர் ஆதிக்கத்துக்குப் போட்டியாகக் கல்வியிலும், அரசாங்க நிர்வாகம் போன்ற மற்ற துறைகளிலும் முன்னுக்குவந்திருந்த மற்ற சாதிக்காரர்களும் இருந்தார்கள். சூத்திரர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் மதிக்காத இவர்கள் தங்களை உயர்சாதி என்று சொல்லிக்கொண்டார்கள்.

இந்த ஏற்பாட்டில் நுட்பமாக இரண்டு பெரிய வஞ்சகங்கள் இழைக்கப்பட்டிருப்பதை கவனிக்கலாம். ஒரு வஞ்சகம்: எந்த வர்ணமானாலும் அல்லது எந்தச் சாதியானாலும் அதிலே ஆண்தான் மையப்படுத்தப்பட்டான். பெண் அவனுக்கு அடங்கியிருக்க வேண்டியவளாக்கப்பட்டாள். அழகாகவும், கட்டுப்பட்டும் இருப்பதே பெண்ணுக்குப் பெருமை என்று மனதில் உருவேற்றுகிற கதைகளும் கவிதைகளும் புறப்பட்டன.

இன்னொரு வஞ்சகம்: தொல்குடி மக்களும், துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சாதிகளும் மேற்படி நான்கு வர்ணங்களில் எதிலேயும் சேர்க்கப்படவில்லை. சூத்திர வர்ணத்தில் கூட அவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. அவர்கள் கடவுளின் கருணையைப் பெறாத மிலேச்சர்கள், சண்டாளர்கள், தெருத்தெருவாகச் சென்று அரண்மனைத் தகவல்களை பறையடித்துச் சொல்கிற பறையர்கள், ஊரின் மேட்டுப்பகுதிக்கு வரக்கூடாதவர்களாகப் பள்ளப்பகுதிகளிலேயே வசிக்க வேண்டிய பள்ளர்கள் என்றெல்லாம் ஒதுக்கப்பட்டார்கள்.

ஒவ்வொரு சாதியும் தனக்கு மேலே இருந்துகொண்டு தன் தலையை மிதிக்கிறவர்கள் பற்றிக் கவலைப்படாமல், தனக்குக் கீழே தன் கால்களால் மிதிபடுகிறவர்கள் இருப்பார்கள் என்ற ஏற்பாட்டில் ஒரு போலியான மனநிறைவும் பெருமையும் அடைகிறது. அதைக் காப்பாற்றுவதற்காக சாதிக்குள்ளேயே திருமணம் போன்ற இறுக்கமான நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படுகின்றன. இந்தியாவின் தனித்துவமான, மிக வலிமையான சமுதாயக் கட்டமைப்பு இது.

இதற்கும், இந்தியாவில் ஏன் கம்யூனிச இயக்கம் பெரியதொரு சக்தியாக வளரவில்லை என்ற கேள்விக்கும் என்ன தொடர்பு? தொடர்ந்து பேசுவோம்.

No comments: