Sunday 2 January 2011

ஒரு கவிதைப் புத்தகத்தை முன்வைத்து................. நுட்பமாக இறுகும் அடக்குமுறைக் கயிறு

தவெறி, சர்வாதிகாரம், படைப்புச் சுதந்திர அடக்குமுறை இவை மூன்றும் இணைபிரியா ஒட்டுப்பிறவிகள். இதற்கு, எடுத்துக்காட்டாக ஆர்எஸ்எஸ் வியூகத்தில் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ கூட்டங்கள் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பல. இதில் அண்மையில் சேர்ந்திருக்கிறது இன்னொரு எடுத்துக்காட்டு.

அகீல் ஷதீர் அன்சாரி ஒரு கவிஞர். வயது 49 குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் ஒரு சிறிய தொலைபேசி மையத்தை நடத்தி வருகிறார். அகீலுக்கு நீண்ட காலமாகவே எல்லாக் கவிஞர்களுக்கும் இயல்பான ஒரு கனவு இருந்துவந்தது. தனது கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்தக் கனவு நனவாகிற வாய்ப்பு, குஜராத் உருது சாகித்திய அகடமி அமைப்பின் மூலமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிடைத்தது. மாநில அரசின் நிதி உதவியோடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் உருது இலக்கிய அமைப்பு இது.

வளரும் எழுத்தாளர்களின் முதல் புத்தக முயற்சிக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை இந்த அமைப்பு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தனது புத்தகத்திற்கும் நிதியுதவி கோரியிருந்தார் அகீல். கோரிக்கை ஏற்கப்பட்டு, புத்தகத் தயாரிப்புச் செலவாக ரூ.10,000 அவருக்கு வழங்கப்பட்டது. மகிழ்ச்சியோடு புத்தகத் தயாரிப்பு முயற்சிகளில் ஈடுபட்டார் அவர். 'அபி ஜிந்தா ஹூன் மேய்ன்' (நான் உயிரோடு இருக்கிறேன்) என்ற கவித்துவமான, சிந்தனைகளை தூண்டக்கூடிய தலைப்புடன் அவருடைய புத்தகம் 2008ல் வெளியானது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2010 நவம்பர் 15ல் அவருக்கு அகடமியிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அவருடைய புத்தகத்திற்கு வழங்கப்பட்ட ரூ.10,000 நிதி உதவியை ஏன் திரும்ப பெற்றுக் கொள்ளக்கூடாது என்பதற்கு விளக்கம் அளித் திடுக, என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்தக் கடிதத்தில், இவ்வாறு கேட்பதற்கான காரணமும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் புத் தகத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடியை விமர் சிக்கும் வரிகள் இருப்பதாகவும், இது அவருடைய மரியாதைக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது என்பதாகவும், இது நிதி வழங்குவதற்கான விதிகளை மீறிய செயல் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அகடமிக்கு அவர் அனுப்பிய கையெ ழுத்துப் படியில் அந்த விமர்சனக் குறிப்பு இல்லை என்றும், புத்தகத்தில் மட்டும் அது இடம் பெற்றது எப்படி என்றும் கேட்கப்பட்டிருந்தது.

கேள்விகளுக்கு விளக்கமளித்து பதில் அனுப் பினார் அகீல். டிசம்பர் 1 அன்று அனுப்பிய அந்த விளக்கத்தில் அவர், கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கிற புத்தகங்களில் ஒரு படியில் கூட இந்த விமர்சனம் இல்லை என்பதை தெரிவித் திருந்தார். புத்தகம் வெளியாவதற்கு முன் சில நண்பர்களுக்கும் கவிஞர்களுக்கும் இலக்கிய ஆர்வ லர்களுக்கும் கொடுத்த குறைந்த எண்ணிக்கையிலான படிகளில் மட்டுமே அந்த வரிகள் இடம் பெற்றிருந்தன என்றும், அகடமி உறுப்பினரான எழுத்தாளர் மொஹியுதீன் பாம்பேவாலா அந்த வரிகள் தவறான முறையில் இடம்பெற்றிருப்பதைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடைகளுக்கு அனுப்பிய படிகளில் அந்த வரிகள் நீக்கப்பட்டுவிட்டன என்றும் அவர் தெளிவு படுத்தியிருந்தார்.

அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நிர்வாகம் டிசம்பர் 27 அன்று அவருக்கு அனுப்பிய கடிதத்தில், பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறு ஆணையிட்டிருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன?

கவிஞரின் நண்பரும் இலக்கிய விமர்சகரு மான ராணா அஃப்ரோஸ் பிவாண்டி அந்தப் புத் தகத்திற்கு ஒரு அணிந்துரை எழுதியிருக்கிறார். அதில், 2002ம் ஆண்டில் இந்தியாவின் மன சாட்சியை உலுக்கிய குஜராத் மனிதப் படு கொலைகளை நினைவுகூர்ந்து, மோடி ஆட்சியை விமர்சிக்கும் ஒரு கருத்தை ஓரிரு வரிகளில் பதிவு செய்திருந்தார். இத்தனைக்கும் 'நான் உயிரோடு இருக்கிறேன்' புத்தகத்தில் கவிஞர் தொகுத்துள்ள எந்தக் கவிதையிலும் குஜராத் படுகொலை தொடர்பான சிந்தனை எதுவும் எதிரொலிக்க வில்லை. முற்றிலும் மானுட வாழ்க்கை தொடர்பான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் கவிதைகளே அவை.

இருந்தபோதிலும் "அகடமி உறுப்பினர் மொஹியுதீன் பாம்பேவாலா, அந்த வரிகள் தரமற்றதாக இருப்பதைச் சுட்டிக்காட்டியதும், அவற்றால் ஏற்படக் கூடிய விரும்பத்தகாத விளைவுகளை எண்ணிப்பார்த்து அவற்றை நீக்கிவிட்டுத்தான் புத்தகப் படிகளை விற்பனைக்கு அனுப்பினேன்," என்கிறார் அகீல்.

அகடமியின் இந்த நடவடிக்கைக்குப் பின் னால் இருப்பது மோடி பற்றிய விமர்சனம் அல்ல, வேறொரு காரணமும் இருக்கிறது என்கிறார் அவர். அக்பர் - இ - நாவ் என்ற உருது மொழிப் பத்திரிகையில் நிழற்ப்படச் செய்தியாளராகவும் பணிபுரி கிறவர் அகீல். ஒரு செய்தி தொடர்பாக அவர், அகடமியின் செயல்பாடுகள் தொடர்பான சில வினாக்களை எழுப்பி, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கடிதம் அனுப்பியிருந்தார். இத னால் ஏற்பட்ட ஆத்திரத்தால்தான், புத்தகம் வெளி யான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று வேறொரு பிரச்சனையையும் அகீல் வெளிப் படுத்துகிறார்.

முறைகேடான நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினால் என்ன நடக்கும் என் பதற்கான சான்றாக இந்த நடவடிக்கை அமைந் திருக்கிறது. அதே நேரத்தில் அதைவிட ஆழமான பிரச்சனையாக, பாஜக அரசின் முதலமைச்சரை விமர்சித்தால் அதற்கு என்ன பரிசு கிடைக்கும் என்ற எச்சரிக்கையும் மற்ற படைப்பாளிகளுக்கு இதன் மூலம் விடுக்கப்படுகிறது.

அணிந்துரையில் விமர்சிக்கப்பட்டிருந்தாலும் சரி, கவிதைகளிலேயே வெளிப்படுத்தப்பட்டிருந் தாலும் சரி அதற்கான உரிமை ஒவ்வொரு படைப் பாளிக்கும் திறனாய்வாளருக்கும் உண்டு. அந்த ஜனநாய உரிமையை மதிக்கும் பாங்கு மத வெறியர் ஆட்சிக்கும் இருக்காது, அதன் கீழ் இயங்குகிற அமைப்புகளுக்கும் இருக்காது என்பதைதான் இது காட்டுகிறது. சிறுபான்மையினரின் இலக்கியப் பங்களிப்புகளை வளர்ப்பதற்காக என ஏற்படுத்தப் பட்ட நிறுவனத்திலேயே இவ்வாறு நடக்க முடியும் என்றால், குஜராத்தில் ஒட்டுமொத்தத்தில் எவ்வ ளவு நுட்பமான வழியில் அடக்குமுறை ஆட்சி தலைவிரித்து ஆடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மோடி அரசு சிறப்பாக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக ஒரு மாயத் தோற்றத்தைப் பரப்புகிறவர்களுக்கு ஒரு கேள்வி: பண்பாட்டுத் தள உரிமைகளைச் சிதைத்துவிட்டு எதை மேம்படுத்தப் போகிறது மோடி அரசு?

இங்கே முன்பு சோவியத் யூனியனில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. பொதுவுடைமைக் கட்சி ஆட்சிக்கு வந்தால் கருத்துச் சுகந்திரம் இருக்காது என்று பூச்சாண்டி காட்டு வோருக்கு இது சமர்ப்பணம்: சோவியத் யூனியனின் குடியரசுத் தலைவ ராகப் பொறுப்பேற்று சோசலிச நடவடிக்கை களைத் தொடங்கியிருந்தார் ஸ்டாலின். எழுத்தாளர் மாயகோவ்ஸ்கி, அரசின் நிதி உதவியோடு வெளி யிட்ட ஒரு புத்தகத்தில் ஸ்டாலின் நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடியிருந்தார். அதிகாரிகள் இதனை ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுவந்த தோடு, அந்தப் புத்தகத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறினர்.

"படைப்பாளியின் கருத்துச் சுகந்திரத்தை நான் மதிக்கிறேன், புத்தகம் மக்களுக்குக் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்கக்கூடாது. அவருடைய விமர்சனத்திற்கு பதில் அளிக்கவேண்டிய அவசியம் இருக்குமானால் அதை நான் முறைப் படி செய்வேன்," என்று கூறினார் ஸ்டாலின்.

ஓவியம், திரைப்படம் என எந்த ஒரு கலையாக்கமானாலும் அதிலே கட்டாரி வீச தயாங்காதவர்களின் ஆட்சியில் இந்த அரசியல் பண் பாட்டை எதிர்பார்க்க முடியுமா? ஆயினும் இந்த விவகாரத்தால் அந்தப் புத்தகம் பற்றிய ஒரு கவனம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தோழமைக்கரங்கள் நீளும், நீக்கப்பட்ட வரிகளுடனேயே புத்தகம் மக்களுக்குக் கிடைக்கும், படைப்புச் சுதந்திரம் 'நான் உயிரோடு இருக்கிறேன்' என்று உற்சாகமாக முழங்கியபடி கம்பீரமாக நடைபோடும் என்று எதிர்பார்க்கலாம்.

(‘தீக்கதிர்’ 2.1.2011 இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வந்துள்ள கட்டுரை)

No comments: