Saturday, 18 July 2015

புண்படுத்தப்படுவதான அரசியல்

ஊ என்றால் இப்படியாகத்தான் ஆரம்பிக்கிறார்கள். தங்களுடைய மனம் புண்படுத்தப்படுவதாகக் கூறியே புதிய கருத்துகளைக் காதுகொடுத்துக் கேட்க மறுக்கிறார்கள். அவர்கள் கேட்கமாமல் போவது அவர்களுடைய விருப்பம், ஆனால் ஒட்டு மொத்த சமூகத்துக்கே அவர்களே ஏகபோக ஆணையர்களாகத் தங்களுக்குத் தாங்களே அவதரித்துக்கொண்டு, யாருமே அந்தப் புதிய கருத்துகளைக் கேட்க விடாமல் தடுக்கிறார்கள். அவர்களைச் சார்ந்துள்ள மக்களிலும் பெரும்பாலோர், "எது ஒன்றையும் நாங்கள் கேட்டு முடிவு செய்துகொள்கிறோம்" என்று சுதந்திரமாக நிற்பதற்கு மாறாக, தலைவர்கள் சொன்னால் சரிதான் என்று மாற்றுக் கருத்துகள் எதையும் கேட்டுக்கொள்ளாமல் ஒதுங்குகிறார்கள். ஒதுங்கிப்போவதோடு நிற்காமல், சில நேரங்களில் மேற்படி தலைவர்கள் சொன்னதைக் கேட்டுவிட்டு, மாற்றுச் சிந்தனைகளை முன்வைத்தவர்களைத் தாக்கவும் துணிகிறார்கள்.

எழுத்தாளர்களின் படைப்புகளை முன்வைத்து அந்த எழுத்தாளர்களையே தாக்குவது, குறிப்பிட்ட தொலைக்காட்சி விவாதத்தை முன்வைத்து அந்தத் தொலைக்காட்சி ஊழியர்களைத் தாக்குவது, ஒரு கதையின் மூலம் கேள்வி எழுப்புகிறவர்களை ஊரை விட்டே ஒதுக்குவது, ஒரு கவிதையால் ஒரு விமர்சனத்தை முன்வைப்பவர்களின் குடும்பத்தை அசிங்கப்படுத்தி வசைபாடுவது, ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சட்டப்பூர்வமற்ற தணிக்கைக்குழுவாக மாறி அந்தப் படத்தைத் திரையரங்கிற்குள் நுழைய விடாமல் முடக்குவது அல்லது சில காட்சிகளையோ, வசனங்களையோ நீக்கும்படி கெடுபிடி செய்வது, ஆய்வுகளாலும் விவாதங்களாலும் அறிவுப் பயிர் செழித்தோங்க வேண்டிய பல்கலைக்கழக வளாகத்திலேயே மாற்றுக் கருத்துடையோர் உரையாற்றவிடாமல் தடுப்பது, புதிதாக ஒரு புத்தகம் வருகிறதென்றால் அந்தப் புத்தக வெளியீட்டையே கெடுப்பது...
இது எந்த அளவுக்குப் போகிறதென்றால், ஒரு திரைப்படத்தில் ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தை விமர்சித்து ஒரு வசனம் வருகிறதென்றால், உடனே அது வழக்கறிஞர்கள் அத்தனை பேரையும் சாடுகிறது என்று கூறி அந்த வசனத்தை நீக்க வேண்டும் அல்லது கதாபாத்திரத்தையே மாற்ற வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்! வழக்கறிஞர் என்ற இடத்தில் மருத்துவர், ஆசிரியர், வர்த்தகர், சாமியார்... இன்னபிற கதாபாத்திரங்களைப் போட்டுக்கொள்ளலாம்.

இருபத்தோராம் நூற்றாண்டில் இப்படி இங்கே நடந்துகொண்டிருக்கிறது. சுயமாகக் காதுகளை அடைத்துக்கொள்கிற மனநிலையோடு  இவர்கள் நாடு வல்லரசாக மாறுவது பற்றி முழங்குவது நல்ல நகைச்சுவையான முரண்!
தங்களது நம்பிக்கை அல்லது கலாச்சாரம் இழிவுபடுத்தப்படுவதாகவும் அதனால் தங்கள் மனம் புண்பட்டுவிட்டதாகவும் கூறியே இதையெல்லாம் செய்கிறார்கள். எதற்கடா வம்பு என்று நினைத்தோ, வாக்கு வங்கி வளர்ப்புக்காகவோ அரசாங்கமும் இதற்கெல்லாம் துணைபோகிறது, அரசு அதிகாரிகளே கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள், புத்தகத்தை விலக்கிக்கொள்ள வைக்கிறார்கள், திரைப்படத்தில் கத்தரி போட வைக்கிறார்கள், உரையரங்குகளை நிறுத்தவைக்கிறார்கள்.

கருத்து - மாற்றுக் கருத்து, வாதம் - எதிர்வாதம் என்பதையெல்லாம் அனுமதிக்காத சமுதாயம் பாசிபிடித்து நஞ்சேறிய குட்டையாகவே தேங்கிப்போகும். சமூகம் அப்படி தேங்கிக்கிடப்பதுதான் நல்லது - அதாவது தங்களுக்கு நல்லது - என்று நினைக்கிறவர்கள், அதற்கு ஆதரவாகத் தங்களது ஆட்களைத் திரட்டப் பயன்படுத்துகிற சொல்லாடல்தான் எங்கள் மனம் புண்படுத்தப்படுகிறது, என்பது. குறிப்பாக இதனை சாதி அமைப்புகளும், சாதிப் பாகுபாடுகளைக் கட்டிக்காப்பதற்கென்றே கட்டமைக்கப்பட்ட மதவாத அமைப்புகளும்தான் செய்கின்றன.

குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் விளிம்புக்கு வெளியே தள்ளப்பட்ட சாதிகளையும் சேர்ந்தவர்கள் அவர்களது மரபின் பெருமையை எடுத்துக்கூறும் புத்தகத்தை எழுதினால், தங்களுடைய உணர்வு புண்படுத்தப்படுவதாகக் கூறி குறிப்பிட்ட ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கிறார்கள். புத்தகம் தடை செய்யப்படுகிறது. உண்மையிலேயே அந்தப் புத்தகம் என்ன சொல்கிறது என்று யாருமே தெரிந்துகொள்ள முடியாமல் போகிறது. அந்தப் புத்தகத்தில் உண்மையிலேயே தரக்குறைவான சொற்கள் இருக்குமானால், உண்மைக்கு மாறான தகவல்கள் எழுதப்பட்டிருக்குமானால் அதைக் கடுமையாக விமர்சிக்கிற வாய்ப்பும் பறிக்கப்படுகிறது. பெண்ணின் சுதந்திரத்தை வலியுறுத்தும் சிந்தனைகள் வெளிப்படுத்தப்படுகிறபோதும் இதே போல் தங்களுடைய பாரம்பரியப் பெருமை புண்படுத்தப்படுவதாகக் கூறி கிளம்பிவிடுகிறார்கள். அதற்கு ஆதரவாகத் தங்களுடைய வட்டத்தைச் சேர்ந்த பெண்களையும் திரட்டிக்கொள்கிறார்கள்.

உண்மையிலேயே ஒரு மாற்றுக் கருத்து புண்படுத்தி விடுமா? நிலத்தைத் துளைக்காமல் பயிர் வளருமா? கல்லைச் செதுக்காமல் சிலை வெளியே வருமா? நிலத்தை உழுவது புண்படுத்துகிற செயலா? கல்லை உதிர்ப்பது புண்படுத்துகிற நடவடிக்கையா? உண்மையில், புண்பட்டுக் குதறிப்போயிருக்கிற சமூக உடலில் மருந்திடுவதைத்தான் இவர்கள் தடுக்கிறார்கள்.

கதைகளிலோ, நாடகங்களிலோ, திரைப்படங்களிலோ, மேடைப்பேச்சுகளிலோ, தொலைக்காட்சி-வானொலி உரைகளிலோ எப்படியெல்லாம் பொதுவுடைமைக் கருத்துகளை, நாத்திகச் சிந்தனைகளை மட்டம் தட்டுகிறார்கள்! சிவப்புச் சிந்தனைகளைப் பேசுகிற கதாநாயகன் பயங்கரவாதி போல சித்தரிக்கப்பட்டு இறுதியில் மனம் திருந்துவதாகக் கதை செய்கிறார்கள்! தொழிற்சங்கத் தலைவர் தொழிலாளிகளைக் காட்டிக்கொடுப்பது போல் காட்சிப்படுத்துகிறார்கள்! நாத்திகவாதம் பேசுகிற பெண்ணைத் திமிர் பிடித்தவளாகக் காட்டி, கடைசியில் அவள் கடவுளின் சக்தியை உணர்வதாக முடிக்கிறார்கள்! சுய மரியாதைக்காக வாதாடுகிற பெண்ணை அடங்காப்பிடாரியாக சிதிதரித்து பின்னர் அவள் அடக்க ஒடுக்கமாக மாறி பெண்மையின் பெருமையைக் காக்கிற தேவதையாக்குகிறார்கள்!

இதெல்லாம் புண்படுத்துகிற வேலையில்லையா?
ஆனால், சிவப்புச் சிந்தனையாளர்களும் பகுத்தறிவாளர்களும் பெண்ணியலாளர்களும் இதற்கெல்லாம் தடை கோரவில்லை. மாறாக, தங்களது மாற்றுக் கருத்துகளையும் தாங்கள் சரியானதெனக் கருதுகிற நிலைகளையும் விளக்குவதற்கான வாய்ப்பாகவே பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இப்படி புண்படுத்துப்படுவதாகக் கூறி பயமுறுத்துகிறவர்களைப் பார்த்து சில முற்போக்காளர்கள் பயந்துவிடுகிறார்கள் என்பது இன்னும் பரிதாபம். சமுதாய மாற்றத்திற்காகப் போராடக் களம் இறங்கியவர்கள், கண் முன் நடக்கும் அநீதிகளையும், பண்பாட்டுத் திரை மறைவில் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளையும், நம்பிக்கையின் பெயரால் தொடரும் அபத்தங்களையும் கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள். கேட்டால், அதையெல்லாம் விமர்சிப்பது மக்களின் மனதைப் புண்படுத்தி விடும், பிறகு அவர்கள் போராட்டங்களுக்கு வரமாட்டார்கள் என்பார்கள். சமுதாய மாற்றம் நிகழும்போது மற்றதெல்லாம் தானாக மாறிவிடும் என்று நவீன கருத்துமுதல்வாதிகளாக இருந்துவிடுகிறார்கள்.

ஆனால் சமுதாய மாற்றத்திற்கான போராட்டம் அப்படியெல்லாம் நிகழ்ச்சி நிரல் அமைத்துக்கொண்டு வரிசைப்படி நிறைவேற்றக்கூடியதல்ல. லட்சியத்திற்காகப் பயணித்துக்கொண்டே வழியில் எதிர்ப்படுகிற முட்டுக்கட்டைகளையும் அகற்றத்தான் வேண்டும். அப்போது அந்த முட்டுக்கட்டைகளுக்குப் புண்படத்தான் செய்யும். அதற்காக அவற்றை அப்படியே விட்டுவிடுவதானால் அங்கேயே நிற்க வேண்டியதுதான், இலக்கை அடைவது மேலும் மேலும் தள்ளிப்போகும்.

அதே போல், மாற்றுக் கருத்துகளை முன்வைத்து சமூக விமர்சனத்திற்குத் துணிகிறவர்களில் சிலர், பழமைக் கருத்துகளை அப்படியே ஊறவைத்துக் கெட்டிப்படுத்திக்கொண்டிருக்கிற வர்க்கச் சுரண்டல் பற்றியோ, நவீன உலகமய தாராளமய தனியார் மய வேட்டைகள் பற்றியோ வாய் திறப்பதில்லை. இதனால், இந்த வேட்டைகளை நடத்திக்கொண்டிருக்கிற சுரண்டல் சக்திகள் எவ்விதத்திலும் புண்படாமல் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கின்றன.

இதை சரியாகப் புரிந்துகொண்டவர்களாக மார்க்சியவாதிகளும் பகுத்தறிவாளர்களும் உரிமைப் போராளிகளும் விடுதலைத் தாகம்கொண்டவர்களும் சமத்துவ லட்சியம் பூண்டவர்களும் தோள் சேர்ந்து அணிவகுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதைக் கண்டும் சிலர் புண்படுகிறார்கள், அதற்கு என்ன செய்ய முடியும்?

(‘தீக்கதிர்’ 2015 ஜூலை 12 இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வந்துள்ள எனது கட்டுரை)

1 comment:

அகஸ்டியன் ஜேம்ஸ் said...

பகுத்தறிவு சிந்தனையாளர்களின் பங்களிப்பு குறைந்து வரும் இவ்வேளையில் பகுத்தறிவு, முற்போக்கு கருத்துக்களை வலிமையாக எளிமையாக எடுத்துரைக்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.,